Wednesday, February 2, 2011

ஈரிதழ் ரோஜா



முன்பு எழுதிய ஒரு கட்டுரையில் ஏசு நாதரின் வாயைப் பற்றி கலீல் ஜிப்ரான் வருணித்து எழுதிய ஒரு வரியை மிகவும் சிலாகித்துக் கூறி அதற்கு இணையான ஒரு வரியை வாயை வருணிக்க எந்தக் கவிஞனும் எழுதியதில்லை என்று சொல்லியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஒருவர் ஆச்சரியமாக ‘உண்மையாகவே இதற்கு இணையாக அல்லது இதைவிட அற்புதமாக வேறு எந்தக் கவிஞனும் கற்பனை செய்து பாடவே இல்லையா?” என்று கேட்டார். நான் அறிந்த வரையில் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது என்று சொன்னேன்.




’HE WHOSE MOUTH WAS A RED PAIN MADE SWEET’ என்னும் அந்த ஒற்றை வரிதான் இலக்கியப் பரப்பிலேயே ஒரு வாயைப் பற்றிய மிக உன்னதமான வருணனை என்பது என் கருத்து. இது ஒரு அருவ உருவகம். அல்லது அருவகம் என்று கூறலாம்! நண்பரின் கேள்விக்குப் பிறகு இலக்கியங்களில் இடம் பெற்ற வாய் வருணனைகளை ஒவ்வொன்றாக ஞாபகம் செய்தேன்.




“செவ்விதழ்” என்பது தமிழில் ஒரு ஹால்மார்க் சொற்றொடர். கிட்டத்தட்ட அது ஒரு கெட்ட வார்த்தையாகவே ஆகிவிட்டது! பல கவிஞர்கள் வாய் வைத்தால், அது பாவம் வேறு என்னவாகித் தொலைக்கும்? ‘கொவ்வை இதழ்’ என்னும் வருணனையும் அதே கேஸ்தான்! ‘கோவப் பழம் போன்ற உன் உதடுகளை மறைத்துக்கொள். கிளிகள் கொத்திக் குதறிவிடப் போகின்றன’ என்றெல்லாம் காதலியைப் பார்த்து அசட்டுத்தனமாகப் பாடும் புலவர்களுக்குத் தமிழில் பஞ்சமே வந்ததில்லை. ஆனால் புதிதாகச் சிந்திக்கத் தெரியாத டுபாக்கூர் கவிஞர்கள்தான் இப்படியெல்லாம் பாடுவார்கள்.


சங்கத் தமிழின் சாயல் கொண்டு வடுகபட்டி வைரமுத்து எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.


”நறுமுகையே! நறுமுகையே!


நீ ஒரு நாழிகை நில்லாய்.


செங்கனி ஊறிய வாய் திறந்து


நீ ஒரு திருமொழி சொல்லாய்”


என்று தொடங்கும் அந்தப் பாடல் தமிழில் வந்த அற்புதமான இசைப் பாடல்களில் ஒன்று.


இவ்வாறு செவ்விதழ், கனியிதழ் என்றெல்லாம் தமிழ்ப் புலவர்கள் வருணிக்கும் வார்த்தைகளைக் கசடறக் கற்றதாலோ என்னவோ புதுக்கவிதை எழுதப் பழுகுகிறேன் என்று டைரியில் மடக்கி மடக்கி எழுதிக் கொண்டு வரும் மாணவர்கள் இடம் பொருள் ஏவல் இங்கிதம் இன்றி இந்த உவமைகளைப் போட்டு வருணித்து வைப்பார்கள். அது கிழவியின் உதடாக இருந்தாலும் சரி! ஆனால் உண்மையான கவித்துவம் பொருத்தமான ஆழமான உவமையைத் தேடுகிறது.




நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் பாடிய பிரபலமான ஒரு பாடலில் திருமாலின் வாயை வருணித்துத் “திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ” என்று வருகிறது. அது ஏன் பவளம்? திருமால் பாற்கடலுக்குள் பள்ளி கொண்டவன். கடலுக்குள் இருப்பது பவளம். எனவே திருமாலின் வாய்க்கு அது உவமையாகக் கூறப்பட்டது. இது பொருத்தமான உவமை.


 இராவணனால் கடத்தப்பட்டு இலங்கையில் அசோகவனத்தில் கைதியாக அமர்ந்திருக்கிறாள் சீதை. தன் தகா இச்சைக்கு இணங்கும்படி அவளிடம் இரப்பதற்கு இராவணன் வருகிறான். அந்தக் காட்சியை வருணிக்கும் கம்பன் அப்போது சீதையின் உதடுகளுக்கு ஓர் உவமை சொல்கிறான். ‘சீதையின் உதடுகள் இந்திரக் கோபப் பூச்சிகளைப் போல் இருந்தன!’ என்பது அந்த உவமை. இரத்தத்துளிகளைப் போல் வட்டமாக இருக்கும் அந்தப் பூச்சிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். என் பால்ய வயதில் திருச்சியிலேயே பார்த்திருக்கிறேன். ‘வெல்வெட்டுப் பூச்சி’ என்று பிடித்து டப்பாக்களில் அடைத்து வைப்போம். குறுந்தொகையில் அதற்குச் ‘செம்மூதாய்ப் பூச்சி’ என்று பெயர். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான அந்தப் பூச்சி இப்போதெல்லாம் திருச்சிக்கு வருவதே இல்லை. கம்பன் தன் காப்பியத்தில் அதற்கு ‘இந்திர கோபம்’ என்னும் புராணப் பெயரைத் தருகிறான். இராவணன் மீது சீதை கொண்டிருந்த கோபத்தை அந்தப் பெயரிலேயே பிரதிபலித்துவிடுகிறான்! அதுவும் உதட்டுக்குச் சொல்லும் உவமையில்!


தவறாகச் சொல்லப்படும் உவமை கொலைத் திட்டத்திற்கே வழி வகுக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது ஒரு வரலாற்று உண்மை! “ஜிலேபி வாயன்” என்று கவுண்டமணி செந்திலைத் திட்டுவது போல் திட்டினால் சில ஊர்களில் அரிவாளை உருவிக்கொண்டு துரத்துவார்கள். நான் அதைச் சொல்லவரவில்லை. இது வேறு விசயம். கண்ணுக்கு உவமையாக முன்னுக்குப் பின்னான ஒரு வாயை உவமையாக ஒருவர் கூற அது தவறு என்று சொன்னவன் மீது அவர் கொலை வெறி கொண்ட கதை அது.


விசிட்டாத்துவைதம் என்னும் தத்துவத்தை உருவாக்கி வைணவ சமயத்தைப் பரப்பிய இராமானுஜரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி அது. அப்போது அவர் காளைப் பருவத்தை எட்டாத கன்று. யாதவப் பிரகாசரின் சீடனாக அவர் வேதபாடம் கற்று வந்த காலம். ஒரு நாள் இராமானுஜர் தன் குருவின் பணிவிடையில் இருக்கும்போது இன்னொரு சீடன் அங்கு வந்து சாந்தோக்கிய உபநிஷத்தில் உள்ள “கப்யாஸம் புண்டரீகம்” என்னும் சொற்றொடருக்குப் பொருள் கேட்கிறான். “திருமாலின் சிவந்த கண்கள் குரங்கின் குதம் போல் இருந்தன” என்று சொல்கிறார் யாதவப் பிரகாசர். (கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று பிரித்து அவர் பொருள் சொன்னார். ”குரங்கின் ஆசனவாய்” என்று அதற்கு அர்த்தம்.)


தன் குருநாதர் இப்படித் திருமாலின் முக அழகுடன், அதுவும் கண்களுடன் குரங்கின் புட்டத்தைப் பொருத்திப் பார்க்கின்றாரே என்று இராமானுஜரின் உள்ளம் வெந்துவிட்டது. அது மிகவும் அபத்தமான விளக்கம் என்று குருவிடம் மறுத்துக் கூறிய இராமானுஜர் அதற்குச் சரியான, பொருத்தமான பொருளைச் சொல்கிறார். கப்யாஸம் என்பதை கம்+பீபதி+ஆஸம் என்று பிரிக்கவேண்டும். அப்போது கபி என்பது குளிர்ந்த நீரைப் பருகும் சூரியன் என்றும் ஆஸம் என்பது தாமரை என்றும் பொருள் தரும் என்று கூறுகிறார். இதனால் இராமானுஜர் மீது கோபம் கொண்ட யாதவப் பிரகாசர் அவரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டித் தன் சீடர்களுடன் காசிக்கு அழைத்துச் சென்றார் என்பதும் இராமானுஜர் தப்பித்து வந்ததும் வரலாறு.




சூஃபி இலக்கியங்கள் செழித்து வளர்ந்த பாரசீக மொழிக்குள் போய்ப் பார்த்தால் அங்கே உதடுகளுக்கு உவமையாக இருப்பது எப்போதுமே ரோஜாதான். பாரசீக இலக்கிய உலகமே ஒரு ரோஜாத் தோட்டமாகத்தான் காட்சி அளிக்கிறது. இமாம் சாஅதி தன் காவியத்தை மிகச் சரியாகவே ‘குலிஸ்தான்’ (ரோஜாத் தோட்டம்) என்று அழைத்தார். அந்த அளவுக்கு ரோஜாப்பூவின் மீது பாரசீகக் கவிஞர்களுக்கு ஒரு காதல். ரோஜாவின் இதழ்களைத்தான் காதலியின் உதடுகளுக்கு மிகவும் பொருத்தமான உவமை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதன் நிறத்திற்காக, அதன் மென்மைக்காக, அதன் நறுமணத்திற்காக!


உதாரணத்துக்கு ஒரு கவிதையைச் சொல்கிறேன்.


”ரோஜாவைப்


பறிப்பதா வேண்டாமா என்று


தயங்கி நிற்கிறான் தோட்டக்காரன்”


என்று பாடுகிறான் ஒரு கவிஞன். அதாவது அவன் காதலியின் வாய்க்கு அருகே ஒரு மச்சம் இருக்கிறதாம். அதைத்தான் இப்படி வருணிக்கிறானாம்!

ஆங்கிலக் கவிஞன் பென் ஜான்சன் தன் காதலியின் உதடுகளை வருணித்த விதம் கொஞ்சம் வித்தியாசமானது. ஆனால் படு பரவசமானது! நேரடியாகச் சொல்லாமல் அறிவாளிகளுக்கு மட்டும் புரியுமாறு பாடியிருக்கிறான். நீங்கள் அறிவாளியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பாடல் வரியைப் பாருங்கள்:


“கோப்பையில்


ஒரு முத்தம் மட்டும்


இட்டுச் செல்.


நான்


மதுவைத் தேடமாட்டேன்.”


(“Or leave a kiss but in the cup, And I’ll not look for wine”)


ம்ஹூம், இதெல்லாம் உருப்படுவதற்கான வழியாகத் தெரியவில்லை என்று நீங்கள் நினைத்தால் நான் என்ன செய்ய? இன்னும் சற்றே ஆழமான ஒரு கவிதை வரியைச் சொல்கிறேன். இது உங்களுகுப் புரிந்துவிட்டால் உங்களை ஞானி என்றே அழைக்கலாம். டீலா? நோ டீலா? (ஒரு ஹிண்ட் கொடுக்கிறேன். இது புரியவேண்டும் என்றால் உங்களுக்கு விசிஷ்டாத்துவைத தத்துவம் தெரிந்திருக்க வேண்டும். காதலியின் உதடுகளில் மறைந்திருக்கும் ரகசியம் அப்போதுதான் உங்களுக்குப் புரியும்! கவிஞர் வாலி இயற்றிய ஒரு திரைப்பாடலின் வரிகள் இவை.)


“கேளாத வேணு கானம்


கிளிப் பேச்சில் கேட்கக் கூடும்”


(மக்குகளுக்கு ஓர் உபரி சேதி. கிளி என்பது இங்கே காதலியைக் குறிக்கும். கிளி ஜோசியத்தை அல்ல!)




பதினைந்தாம் நூற்றாண்டில் அஃப்கானிஸ்தான் நாட்டில் குராசான் பகுதியில் ஜாம் என்னும் ஊரில் பிறந்து சமர்கந்தில் வாழ்ந்த சூஃபி ஞானக் கவிஞர் நூருத்தீன் அப்துர் ரஹ்மான் ஜாமி. நபிகள் நாயகத்தின் மீது அளப்பரிய காதல் கொண்ட அவர் இயற்றிய கஜல்கள் இன்றளவும் சூஃபிகளால் பரவசத்துடன் பாடப்படுகின்றன. அதில் ஒரு கஜல் பாடலில் நபிகள் நாயகத்தின் உதடுகளை இவ்வாறு அவர் வருணிக்கிறார்:


“உங்கள் சிவந்த உதடுகளைக் காணுந்தோறும்


என் இதயம் சொல்கிறது:


எத்தனைப் பேரின்பம் கொண்டதாக


ஆக்கிவிட்டான் இறைவன்


இந்த யமன் தேசத்துக் கனிகளை!”


(யமன் என்பது அரேபியாவில் உள்ள ஒரு பகுதி. அந்த தேசத்தின் தோட்டங்கள் மிகவும் செழிப்பாக இருக்குமாம். எந்த அளவு என்றால், ஒரு வெற்றுக் கூடையைத் தலைமீது வைத்துக் கொண்டு ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து நடந்தால் மறுபக்கம் வெளியேறும்போது உதிர்ந்த கனிகளால் அது நிறைந்திருக்குமாம்!)


இந்த உவமைகளை எல்லாம் எண்ணிப் பார்த்த என் மனம் மீண்டும் கலீல் ஜிப்ரான் வருணித்து எழுதிய வரிகளுக்கே வந்து நின்றது. ஆனால் இது வேறு வருணனை. ஜிப்ரான் எழுதிய ‘மர்த்தா’ என்னும் சிறுகதையில் வரும் ஒரு வரி. கதையைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.




”அவள் பெயர் மர்த்தா. தன் தொட்டில் பருவத்தில் தந்தையையும் பத்தாம் வயதில் அன்னையையும் இழந்தவள். வட லெபனானின் அழகிய மலைச் சாரல்களில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வீட்டில் பணிப்பெண்ணாக வாழ்ந்து வந்தாள். மாடுகளை மேய்த்து வருவதே அவளின் தினசரி வேளையாக இருந்தது. இயர்கையின் மடியில் அவள் ஒரு பூச்செடி போல் வளர்ந்தாள். அறிவின் விதைகள் தூவப்படாத கன்னி நிலமாக இருந்தாள். பதினாறு வயதில் அவள் அந்த லெபனான் மலைச் சாரலைப் போல் அழகாக இருந்தாள். அப்போது ஒரு நாள் குதிரையின் மீது வந்த ஒரு வழிப்போக்கனின் கண்கள் அவளைக் கண்டன. அவன் பேச்சில் இருந்த ஆறுதல் தொனி அவளை மயக்கியது. தன் எசமானன் மற்றும் எசமானியின் கொடுமைகளில் இருந்து தன்னை மீட்க வந்த வாழ்வின் தூதனாக அவனைக் கண்டாள். அன்று மாலை மாடுகள் மட்டும் வீடு திரும்பின.




ஆறு ஆண்டுகள் கழிந்து போயின. கி.பி.1900 இலையுதிர்காலத்தில் நான் பெய்ரூத் நகருக்குத் திரும்பினேன். அங்கே மக்கள் நெரிசலில் ஒரு சிறுவனைக் கண்டேன். அவனுக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு தட்டில் பூக்களை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும், ‘ஐயா, பூக்கள் வேண்டுமா?’ என்று கேட்டான். பாதி திறந்திருந்த அவனின் வாய் அவனது ஆன்மாவின் ஆழமான காயத்தைக் காட்டுவதுபோல் இருந்தது. (His mouth was half-open, resembling and echoing a deep wound in the soul.) விபச்சாரத்தால் உடலும் மனமும் நைந்து மரணப் படுக்கையில் கிடக்கும் தன் அன்னையைக் காப்பாற்றவே அவன் அந்தப் பூக்களை விற்கிறான் என்று அறிந்தேன். தன் அம்மாவின் பெயர் ‘மர்த்தா’ என்றும் தன் தந்தை யாரென்று தெரியாது என்றும் அந்தச் சிறுவன் சொன்னான். நான் அவனுடன் மர்த்தாவைப் பார்க்கச் சென்றேன். என்னைக் காமுகன் என்று நினைத்து நொந்தாள். நான் அவளது ஊரிலிருந்து வருபவன் என்றும் அவளை நலம் விசாரிக்க வந்தவன் என்றும் அறிமுகம் செய்து கொண்ட பிறகு ஒரு சகோதரனாக என்னை ஏற்றுக் கொண்டு ஆறுதல் அடைந்தாள். குற்றவுணர்ச்சி அவளை உருக்குலைத்திருப்பதைக் கண்டேன். அவளிடம் சொன்னேன், “மர்த்தா, உடலின் அசிங்கம் ஒரு தூய ஆன்மாவைத் தொடமுடியாது.” (The filth of the body cannot reach a pure soul.) என் சொற்களால் நிம்மதி அடைந்தவளாக அவளின் உயிர் பிரிந்தது.”


ஏசுவின் வாயை ‘இனிப்பாக்கப்பட்ட சிவந்த வேதனை’ என்று வருணித்த கலீல் ஜிப்ரான், வாழ்வின் சுமையைச் சுமக்கும் ஒரு ஐந்து வயதுச் சிறுவனின் வாயை ‘ஆழமான வெட்டுக் காயம்’ என்று வருணித்திருப்பதை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை. தன் கதை மாந்தர்களை எல்லாம் ஏசுவைக் காட்டும் கண்ணாடியாகவே அவர் வார்த்துள்ளார். இன்றும், பிச்சை எடுக்கின்ற அல்லது சிறு பொருட்களைக் கூவி விற்கின்ற சிறுவர்களைக் காணும்போது அவர்களின் வாய் அவர்களின் ஆன்மாவில் விழுந்துள்ள வெட்டுக் காயமாகத்தான் எனக்குத் தெரிகிறது.







3 comments:

  1. எங்களுக்காக தகவல் தேனைச் சேகரிக்க ரோஜாத் தோட்டங்களில்
    சுற்றியலைந்து திரியும் நீங்கள் ஒரு ஞானித்தேனீ :)
    குர் ஆன் எனும் அற்புதப் புதையலுக்குள் சென்றால் இன்னும் என்னவெல்லாம்
    அள்ளித் தருவீர்கள் என்ற ஆவல் எழாமலில்லை.

    ReplyDelete
  2. ரஹ்மான் பாபா என்றொரு சூஃபிக் கவிஞர் பற்றி அறிவீர்கள் என நினைக்கிறேன்.
    ஆப்கானிய,பாகிஸ்தானிய பட்டான்களால் மிகவும் மதிக்கப்படும் ஒரு கவிஞர்.

    த ஷராபோ கும் உல்டக்கா (மதுப் பானையைக் கவிழ்த்தி )
    khum becomes mukh

    பயாயோ ஸாஸ்கே தரே ரவாகலா (அதிலுள்ள புள்ளியை நீக்கி)
    From mukh in arabic kh becomes ha

    மத் ஹோஷ் ந ஹோஷ் கடா லரே (போதை நீங்கிய பொழுதிலே)

    there is no hosh in mad

    ஹம்தகா நூம் மேத ஜானான் தே (என் காதலனின் நாமம் கண்டேன்)

    now it becomes 'Muhammad' (Sal) :)

    இதை எழுதியதின் நோக்கம், இந்தக் கவிஞரும் உங்களுக்கு சூஃபித் தோட்டத்தில் கை பிடித்துச் செல்லலாம் என்று நினைத்ததால். தமிழாக்கம் எனதுதான்.
    சரியான கருத்தைத் தங்களுடைய எழுத்தில் காண விழைகிறேன்.

    ReplyDelete
  3. ஸ்ரீ வல்லபாச்சாரியார் எழுதிய மதுராஷ்டகம் கண்ணனின் இனிமைகள் பற்றிப்பேசுகிறது. முதலில் குறிப்பிடப்படுவது அதரம் தான்.

    அதுரம் மதுரம்(உதடு இனிமை) ஹசிதம் மதுரம்(புன்னகை இனிமை)

    நல்ல பதிவினை ரசித்தேன்.

    ReplyDelete