Friday, January 28, 2011

நீயே என் தேவை





"நீயே என் தேவை"


உன் உள்ளம்
உருகி உருகி
உச்சரித்ததுண்டா
எப்போதேனும் இப்படி?


பிரபஞ்சத் திரையின்
ஒவ்வொரு இழையும்
ஊடும் பாவுமாய்
உச்சரிக்கின்றது இதை!


சூரியனைச்
சுற்றி வரும் பூமி
சூரியனிடம்...


பூமியைச்
சுற்றி வரும் நிலா
பூமியிடம்...


விரையும் விட்டில்
விளக்கிடம்...


வேர் விரல்களால்
பற்றிப் பிடித்து ஏறிப்
படரும் கொடி
மரத்திடம்...


தாகித்த வாய்
தண்ணீர்க் குவளையிடம்.


கால்களின்
கவசங்களுக்குள்
உயிர் கசியும் இரையிடம்
வேட்டை மிருகம்
வேறென்ன சொல்கிறது?


நிலா எரியும் இரவில்
நினைவு சரியும் உறவில்
காதலர்களின்
முத்தங்கள் பேசும்
முகவுரை ?
முடிவுரை ?


"நீயே என் தேவை"


உயிர் எடுப்பதும்
உயிர் கொடுப்பதும்
நாளும் இப்படியே

தேவைகளின் போர்வையில்
உன்னிடம் வருகிறான்
தேவைகள் எதுவும்
இல்லாதவன்.


அந்த
மேலான நண்பனிடம்
சொல்:
"நீயே என் தேவை"


அந்த வாக்கியத்தின் சுவையைத்
துளித் துளியாய்
அனுபவித்திரு.




2 comments:

  1. புரிகிறது தேவையில்லாதவனிடம் அழுகிறது

    ReplyDelete
  2. //தேவைகளின் போர்வையில்
    உன்னிடம் வருகிறான்
    தேவைகள் எதுவும்
    இல்லாதவன்.//


    தேவை அற்றவந்தான் அந்த தேவன்!

    அவன் வந்தால் அவனை 'சிக்'கெனெப் பிடித்துக் கட்டி விடுவோம்.அப்புறம் தேவைக்காக அவன் எங்கும் அலையாதபடி!

    ReplyDelete