Saturday, January 15, 2011

வாழ்க நலமுடன்!

ஒரே மந்திரம். மனதில் கவலைகள் காணாமல் போய்விட வேண்டும். நினைத்ததெல்லாம் பலிக்க வேண்டும். உண்மையிலேயே சந்தோஷம் பொங்க வேண்டும், ஆனந்த அலை வீச வேண்டும், சாந்தியும் சமாதானமும் பரவிவிட வேண்டும். அப்படி ஒரு மந்திரத்தை யாராவது கற்றுத் தந்தால் நன்றாக இருக்கும் அல்லவா? அப்படிப்பட்ட மந்திரங்களை எல்லா ஆன்மிக மரபுகளும் பேசுகின்றன. ஆனால் அவை நமக்குப் பலிக்கவில்லை!
“கடவுளில் களி கூறுங்கள்” என்றார் ஏசு நாதர். ஆனால் நம்மால் கடவுளின் பெயரால் கலி கிண்டவும் கஞ்சி காய்ச்சி ஊத்தவும்தான் முடிகிறது. “உங்களுக்கு மத்தியில் சலாத்தைப் (சாந்தியைப்) பரப்புங்கள்” என்றார் நபிகள் நாயகம். பார்ப்பவரகளிடம் எல்லாம் ‘சலாம்’ போடுகிறோம். சலாம் என்னும் வார்த்தையைப் பரப்பும் சடங்கு ஜரூராக நடக்கத்தான் செய்கிறது. ஆனால் அமைதி பரவவில்லை. சிலர் “ஸ்லாமலைக்கும்” என்று கூறும்பொதே மனதில் இருக்கும் அமைதி காணாமல் போய்விடுகிறது.

ஒரு தியானக் கூட்டத்தின் ஒலி/ஒளித் தொகுப்பைப் பார்த்தேன். புகைப்படத்திற்குப் போஸ் கொடுக்கையில் காட்டும் செயற்கையான சிரிப்பைப் போல வலிந்து வரவழைக்கப்பட்ட ‘பரவசம்’ முகத்தில் தாண்டவமாட சிலர் அசைந்து கொண்டிருந்தார்கள். அந்தச் செயற்கைப் பரவசத்திற்குப் பேச முடிந்தால் “அழைத்து வரப்படவில்லை, இழுத்து வரப்பட்டுள்ளேன்” என்று மனோகராவைப் போல் வசனம் பேசும். தியானத்தில் நடித்து யாரை ஏமாற்றப் போகிறார்கள்? தம்மையேதான்! என்ன செய்வது, தியான செஸ்ஷனுக்கு ஐயாயிரம் ரூபாய் அழுதிருக்கும்போது உண்மையான பரவசம் பிறக்காவிட்டால் அட்லீஸ்ட் வந்துவிட்ட்து மாதிரி காட்டி பிறரை வயிறெரிய வைத்தாவது ஆறுதல் அடையலாம் அல்லவா?
கு.குசலா: ”சரிங்க, உண்மையான பரவசம் பிறக்க ஏதாவது மந்திரம் இருக்கிறதா?”
நல்ல கேள்வி. குழந்தையைப் போன்ற வெள்ளை மனம் இருந்தால் பரவசம் இயல்பாகவே வந்துவிடும் என்றுதான் நினைக்கிறேன். அப்போது எந்த மந்திரமாக இருந்தாலும் வர்க்-அவுட் ஆகக்கூடும். நீங்கள் குழந்தைகள் போன்று ஆகாதவரை சொர்க்கத்திற்குள் நுழைய முடியாது என்று ஏசு நாதர் சொல்லியிருக்கிறார். வேண்டுமானால் குழந்தைகள் கூறும் மந்திரங்களையே நீங்கள் பயன்படுத்தலாம். ஹார்லிக்ஸ் விளம்பரம் ஒன்றில் சிறுவர் சிறுமிகள் கோரசாக “எபாங் ஒபாங் ஜபாங்” என்று கத்துவதைக் கேட்டபோது அது ஏதோ மந்திரம் போன்றுதான் என் காதில் ஒலித்தது. இதையெல்லாம் நீங்கள் கண்டுகொள்ளவே மாட்டீர்கள். ஏதாவது ஒரு எக்ஸான்ந்தா சுவாமிகள் வந்து உங்களிடம் ஆயிரம் ரூபாய் வசூலித்துவிட்டு இதை அருளினால் நீங்களும் பரவசத்துடன் உளறிக் கொண்டு உருளுவீர்கள். 

மந்திரம் என்பதையே நாம் தவறாகத்தான் அணுகுகிறோம் என்று நினைக்கிறேன். மேஜிக் – மாயாஜாலம் என்னும் அர்த்தத்தில் அதைப் புரிந்து வைத்திருக்கிறோம். மந்திர தந்திரம் என்றாலே அது மாயாஜாலம்தான் நமக்கு. எனவே ‘மந்திரத்தால் மாங்காய் காய்ப்பதில்லை’ என்றெல்லாம் சொல்கிறோம். மந்திரம் என்றாலே நமக்கு உடனடி விளைவுகளைத் தர வேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் மந்திரம் என்பது மெதுவாகத்தான் வேலை செய்யும், குளவியின் ரீங்காரம் போல! 



எதைச் சொல்வதற்காக இந்தக் கட்டுரையை ஆரம்பித்தேனோ அந்த விஷயத்திற்கு வருகிறேன். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் நண்பன் ஒருவன் சட்டையில் செருகி வைத்திருந்த பேனாவில்தான் அவரை முதன் முதலில் பார்த்தேன். பிரகாசமான முதியவராக இருந்தார். வெள்ளைப் பஞ்சாக தாடி. தும்பைப்பூ நிறத்தில் இருந்த இஸ்திரி போட்ட நேர்த்தியான ஜிப்பாவின்மீது சந்தன நிற அங்கவஸ்திரம் அணிந்து இரண்டு கைகளையும் தூக்கிச் சிரித்துக் கொண்டிருந்தார். யார் இவர்? என்று கேட்டதற்கு ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு “இவரைத் தெரியாதா? வேதாத்திரி மகரிஷி!” என்றான் அந்த நண்பன். (எனக்கு அப்போதெல்லாம் ரமண மகரிஷியைத்தான் தெரியும்.) இப்படித்தான் அவர் எனக்கு அறிமுகமானார். “வாழ்க வளமுடன்” என்ற மந்திரத்தை இருபத்தைந்து வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு அவர் கண்டுபிடித்தார் என்றும் அது மிகவும் சக்தி மிக்க மந்திரம் என்றும் நண்பன் சொன்னபோது எனக்குச் சிரிப்புத்தான் வந்த்து. “வாழ்க வளமுடன்! இதிலென்ன பவர் இருக்கிறது? இது ஒரு இயல்பான வாழ்த்துதானே?” என்று நான் நினைத்தேன். என் நண்பன் எனக்குச் சரியாக விளக்கவில்லை என்று இப்போது தெரிகிறது. “நிறைமொழி மாந்தர் நாவினில் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப” என்கிறார் தொல்காப்பியர். அவ்வாறு இருபத்தைந்து ஆண்டுகள் தவத்தில் நிறைமொழி ஞானியாக அவர் பக்குவமடைந்த பின் இதனை அவர் தன் மந்திரமாக உருவாக்கியிருக்கலாம். இல்லையென்றால் இதுபோல் பல வாசகங்களை நாமும் எளிதாக உருவாக்கிவிடலாம். அப்படி ஒரு மந்திரத்தை நான் உருவாக்கவும் செய்தேன்!

“வாழ்க நலமுடன்!” இதுதான் நான் உருவாக்கிய மந்திரம். வேதாத்திரி மகரிஷி போல் இருபத்தைந்து வருடமெல்லாம் கஷ்டப்பட எனக்கு அவகாசம் இல்லாததால், தியானம் என்பது கால இட வரையரை கடந்தது என்பதைப் பயன்படுத்தி யுகங்கள் குவிந்த ஒரு கணத்தில் இதை நான் சட்டென்று கண்டடைந்தேன். யோசிக்கையில் இது இன்னும் பிராக்டிகலான மந்திரமாகப் பட்ட்து. ஏனெனில் வளம் உள்ள பலரிடம் நலம் இருப்பதில்லை. அதனால்தானே அப்போலோ ஆஸ்பத்திரிக்கும் கோர்ட்டு வாசலுக்கும் அலைகிறார்கள்?  
  
கு.குசலா: அண்ணே! மந்திரம் கண்டுபுடிச்சீங்க, அப்படியே ஆசிரமம் ஆரம்பிச்சு அஞ்சாறு அல்லக்கைகள அசிஸ்டண்ட்டா வச்சிக்கிட்டு வசதி பண்ணீருக்கலாமே. ஏன் செய்யல?

என் நல்ல காலம்! மந்திரம் கண்டுபிடித்தவுடன் முதலில் அதை ‘அருளுவதற்கு’ ஒரு பிரத்தியேக போஸ் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆன்மிக நெறியாமே? அந்த ரூட்டுல நம்ம வண்டியை விட்டு யோசித்தபோது மண்டை காய்ந்தது. வேதாத்திரி மகரிஷி பாடு தேவலாம். ஞானி இல்லையா, அதனால அசால்ட்டா ரெண்டு கையையும் ஹாண்ஸ்-அப் பொசிஷனில் தூக்கி “வாழ்க வளமுடன்” என்று சிரிக்கிறார். ‘சரணடைந்துவிட்டால் வளமுடன் வாழலாம்’ என்னும் சரணாகதித் தத்துவத்தை எவ்வளவு எளிமையாகக் கூறிவிட்டார்! 

என்னால் அப்படி ஒரு போசை கண்டுபிடிக்க முடியாததால் கையை எப்படி வேண்டுமானாலும் வைத்து “வாழ்க நலமுடன்” என்னும் மந்திரத்தைக் கூறலாம் என்று முடிவு செய்தேன். காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க என்று எந்தக் கட்சி சின்னத்தைக் காட்டியும் சொல்லலாம். நாமம் போட்டுவிடுவேன் முத்திரை காட்டிக்கூட சொல்லலாம்! ஒன்றுக்கு ரெண்டுக்கு முத்திரைகளுக்கும் தடையில்லை!

(கு.குசலா: அண்ணே! அமெரிக்க அராத்துகள் பாணியில் நடுவிரலைக் காட்டிக் கூறலாமா?
மந்திரத்தை அப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. பக்கவிளைவுகள் உண்டாகிப் படாத பாடெல்லாம் பட நேரும்.)

மந்திரம், போஸ் இரண்டும் தயாராகிவிட்டது. அடுத்து அசத்தலான ஒரு பெயரைக் கண்டுபிடித்தாக வேண்டும் என்று யோசித்தபோது என் மனதில் பல சாமியார்கள் பளிச்சிட்டார்கள். அவர்களில் சிலரை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை ஆதலால் கூற வேண்டிய கடமை எனக்கிருக்கிறது.

பாரதியார் எழுதிய ஒரு சிறுகதையில் ‘மிளகாய்ச் சாமியார்’ என்று ஒருவர் வருகிறார். நாளொன்றுக்கு ஒரு கிலோ மிளகாய் மட்டும் சாப்பிட்டுவிட்டுத் தண்ணீர் அருந்தி உயிர் வாழும் அவரை மக்கள் ஒரு சித்தராகவே மதித்துக் காலில் விழுகிறார்கள். ஆன்மிக ஞானிகள் சொன்னது அஷ்டமா சித்திகள்தான் என்றாலும் நம் நாட்டில் பல இஷ்டமா சித்திகள் செய்து சாமியார் ஆகிவிடுவது எளிது. என்ன, அவை மக்களால் செய்யமுடியாத கஷ்டமா சித்திகளாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்!

உதாரணத்துக்கு வாழைத் தோல் சாமியாரைக் கூறலாம். யாரிவர் என்று குழம்ப வேண்டாம். கவுண்டமணி ஒரு படத்தில் சாமியாராகும் கதைதான் இது. கடைக்குச் சென்று வாழைப்பழங்கள் வாங்குவார். கடைக்காரன் கண் எதிரிலேயே உரித்துத் தோலை விழுங்கிவிட்டுப் பழத்தை வீசியெறிவார். இப்படி நான்கைந்து முறை செய்வார். கடைக்காரன் அதிர்ச்சியாகி ‘என்னங்க தோலைச் சாப்பிட்டு பழத்தை வீசி எறியறீங்க?’ என்று கேட்பான். “மானிடப் பதரே!” என்பதுபோல் அவனைப் பார்த்து வெடிச் சிரிப்பு சிரித்துவிட்டு அங்கிருந்து போய்விடுவார். அவ்வளவுதான், வாழைத் தோல் சாமியார் இமயமலையில் இருந்து தங்கள் ஊருக்கு எழுந்தருளியிருக்கும் செய்தி காட்டுத் தீ எனப் பரவி பதினெட்டுப் பட்டி சனமும் வந்து காலில் விழுந்து அருள்வாக்கு கேட்கும்!

இதுபோல் நகத்தால் எலுமிச்சைப் பழத்தை நறுக்கி பக்தர்களின் வாய்குள் பிழிந்துவிட்டு அருள் வாக்கு கூறும் ‘எலுமிச்சை சாமியார்’, சுருட்டுப் புகைத்து பக்தரின் முகங்களில் ஊதி ஊதித் திக்குமுக்காட வைத்து அருள்வாக்கு கூறும் ‘சுருட்டுச் சாமியார்’, பாவாடை சாமியார், கெட்ட வாடை சாமியார், அழுக்குமூட்டைச் சாமியார், ஓட்டை வடை சாமியார், ஒத்த ரூபா சாமியார், ஊத்த வாய்ச் சாமியார், ஊளைச் சாமியார், தினத்தந்திச் சாமியார், டூரிங் டாக்கீஸ் சாமியார், எழரைக்கா சாமியார், வத்திப்பெட்டிச் சாமியார், பல்புச் சாமியார், எருவாட்டிச் சாமியார், கட்டுமுடிச் சாமியார், சிலுக்குச் சாமியார், வல்லூருச் சாமியார் என்று எத்தனையோ கஷ்டமா சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்று தனியாக ஒரு என்சைக்ளோபீடியாவே உருவாக்க முடியும்!

இந்தப் பெயர்களை எல்லாம் பார்த்தால் நமக்குச் சிரிக்கத் தோன்றலாம். மகான்களின் மீது மூடியுள்ள திரைகள் இவை என்று சொல்ல முடியும். அல்லது அவர்களே போர்த்திக் கொண்ட திரை. ஞானம் அடைந்தவர்களுக்கும் ஏதேனும் எளிமையான பொருட்களுடன் நீங்காப் புழக்கம் இருந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது. அதுவே அவர்களின் அடையாளமாகிப் போனது. பல்லக்கு அவ்லியா என்று ஒரு சூஃபி மகான் இருந்தது நாம் அறிந்ததே. அதேபோல் பாக்குவெட்டி அவ்லியா, பல்லிமிட்டாய் அவ்லியா, பீடி அவ்லியா என்றும்கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அது போன்ற விகடமான பெயர்கள் அவர்கள் போலி ஞானிகள் என்பதன் ஆதாரமல்ல. நான் பள்ளி மாணவனாய் இருந்த போது கணக்கில் பெரிய மண்டையான ஒரு வாத்தியார் இருந்தார். கணக்கு அவருக்கு கைவந்த லீலை! ஆள் எப்போது பார்த்தாலும் மட்டமான பாக்குத் தூளை மென்றுகொண்டே இருப்பார். அவரை “பாக்குத் தூள் வாத்தி” என்றே அழைக்கலாம். அதற்காக அவருடைய கணித மேதமை போலியானது என்று ஆகிவிடுமா?

(தவிர்க்க முடியாமல் என் நினைவில் ஜெயமோகன் உருவாக்கிய சூஃபிப் பாத்திரமான “குலாப் தஸ்தகீர் ஜாமூன் பாபா” தோன்றுகிறார். என்ன அட்டகாசமான கேரக்டர்! அப்படியே என் நினைவு ஜீராவில் ஊறிக் கொண்டிருக்கிறார்!) 
            
கிண்டலாகத் தோன்றும் இந்தப் பெயர்களை எல்லாம் தள்ளிவிட்டு சாமியார்களுகென்று சீரியசான பெயர்கள் இல்லையா என்று யோசித்தால், இந்து ஞானிகளுக்கென்றே பொதுப் பெயராக அமைந்துள்ள ‘ஆனந்தா’ என்பதுதான் பளிச்சிடுகிறது. “ஆனந்தம்” என்பது அற்புதமான சம்ஸ்க்ருதச் சொல். இறைவனைக் குறிப்பிட இந்து மறைகள் வகுத்துக் கொண்ட மந்திரங்களுள் ஒன்று ‘சச்சிதானந்தம்’ (சத்-சித்-ஆனந்தம்). எனவே, பழுத்த இரும்பில் தீ ஏறி நிற்பதுபோல் இறைவனைத் தொட்ட உயிர்களில் ததும்பும் பரவசத்தை அது குறிக்கிறது. சுகதுக்கச் சுழற்சியில் இருந்து விடுதலை அடைந்த மனத்தில் பொங்கிப் பிறங்கும் சாத்வீகப் பேரின்பத்தைக் குறிப்பது அது. சுகத்திற்கு எதிர்ச்சொல் துக்கம் என்பது போல் எதிர் நிலை இல்லாத ஏக நிலை அது. 



ஆன்மிக வரலாற்றில் இந்தப் பெயர் புத்தரின் சகோதரனும் அணுக்கச் சீடனுமான ஆன்ந்தன் என்னும் பாத்திரமாக வருவதைக் காண்கிறோம். ஆனால் இந்தப் பெயரை ஒர் ஆன்மிக மரபாக ஆக்கியவர் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான். அவர் தன் சீடர்களுக்கெல்லாம் ‘ஆனந்தா’ என்னும் பின்னொட்டு அமைந்த பெயர்களைத் தந்தார். விவேகான்ந்தா, பிரம்மானந்தா, ப்ரேமானந்தா, யோகானந்தா, நிரஞ்சனானந்தா, சாரதானந்தா, சிவானந்தா, துரியானந்தா, அபேதானந்தா என்பவை போல. 

இன்றைக்கும் நம் காலத்தில் பல ஆனந்தாக்களைப் பார்க்கிறோம். ஆனால் ஆனந்தம் என்னும் சொல்லின் பொருளை எந்த அளவு அனர்த்தமாக்கி விட்டார்கள் என்று பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. நித்தியின் பிரச்சனை ஊடகங்களில் பட்டையைக் கிளப்பிய போது என் நண்பர் ஒருவர் உரையாடும்போது சொன்னார்: “தம்பி, சாமியாருங்க தெளிவாத்தான் பேருலயே சொல்லீருக்கானுங்க. நாமதான் சரியா புரிஞ்சுக்கல. பேரெல்லாம் பாருங்களேன். பிரேம ஆனந்தம், நித்திய ஆனந்தம், சுகம் போதை ஆனந்தம்!”

நித்தியானந்தா எழுதிய கட்டுரைத் தொகுப்பான “கதவைத் திற காற்று வரட்டும்” பற்றியும் சிலேடையாக நையாண்டி பண்ணினார்கள். “நம்மையெல்லாம் கதவைத் திறக்கச் சொல்லிட்டு அவன் கதவைச் சாத்திட்டானே தம்பி!” என்றார் ஒருவர். இன்னொருவர் இந்த நூல் தலைப்பு உருவான ’கதை’யைக் கூறினார். அதாவது நித்தியானந்தா தன் உள்முகக் கரும லீலைகளை முடித்தவுடன் வியர்த்துப் புழுங்கவே சிஷ்யையை நோக்கிக் ‘கதவைத் திற, காற்று வரட்டும்’ என்றாராம். அவரின் போதனைகளின் சாரத்தைக் கச்சிதமாக விளக்குவதால் அதுவே நூலுக்குத் தலைப்பாக வைக்கப் பட்ட்தாம்!



இதையெல்லாம் கேட்டபோது ‘சாமி காவடியானந்தர்’ என்னும் பெயர் அச்சுக் கோர்ப்பவன் செய்யும் பிழையால் ‘காமி சாவடியானந்தர்’ என்று மாறுவதாக அறிஞர் அண்ணா ஒரு சிறுகதையில் எழுதியிருப்பது ஞாபகம் வந்தது. அவரின் அருள்வாக்கு பலித்துவிட்டது போல் தெரிகிறது!

இதுபோல் பல பேரை நான் அறிவேன். பக்தர்களின் நடு மண்டையில் நச் என்று சுத்தியலால் அடித்து அவர்கள் காட்டும் ரியாக்‌ஷனை வைத்து ஆணித்தரமாக அருள்வாக்கு கூறுகிறார் ஒருவர். “சுவாமி சுத்தியானந்தா” என்பது அவரின் நாமகரணம்.



டான் பிரவ்னின் பிரபலமான மூன்று நாவல்களிலும் வரும் கேரக்டரான ஹார்வார்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ரொபர்ட் லேங்டன் தன் கையில் மிக்கி மவ்ஸ் பொம்மை உள்ள ஒரு வாட்ச் கட்டியிருப்பார். மிக்கி மவ்ஸின் கைகள்தான் அதில் முட்கள். (பனிரெண்டு மணி காட்டும்போது ஒட்டு கேட்டு வரும் உள்ளூர் அரசியல்வாதி போலவே இருக்கும்!) உலகப் புகழ் பெற்ற ஒரு பேராசிரியர் வினவுவோருக்கு அதன் பின்னணியில் உள்ள உளவியல் காரணங்களை அவர் விளக்குவார். உள்ளத்தால் இன்னும் குழந்தையாகவே இருக்க அது ஒரு ஞாபகமூட்டல் என்பார். இது எவ்வளவு பெரிய ஞானம்! எனவே நான் அவரை ரொபர்ட் லேங்டன் என்பதைவிட ‘சற்குரு மிக்கி வாசுதேவ்’ என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்! 

ஸ்ரீ என்னும் வடமொழியைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழ்ப் படுத்தித்தான் எழுதவேண்டும் என்றும் என் நண்பர் ஒருவர் கொள்கை வைத்துள்ளார். அவருடைய கைவண்ணத்தில் இரண்டு ‘ஆன்மிக குருநாதர்கள்’ உருவானதைக் கண்டு நான் சிலிர்த்திருக்கிறேன். ஒருவர் சிரிப்பதையே தியானமாக போதிப்பவர். “சிரி சிரி ரவிஷங்கர்” என்று பெயர். இன்னொருவர் முழியை உருட்டி உருட்டி வெறித்துப் பார்ப்பதையே தியானமாக போதிப்பவர். “திருதிரு ரவிஷங்கர்” என்று பெயர். எப்படியோ, ஆன்மிக நெறி தழைத்தால் சரி!

வாழ்க நலமுடன்! 
         
(பி.கு: இக்கட்டுரையில் வரும் குறுக்குச்சால் ஓட்டும் குரங்குக் குசலா நம் ஒவ்வொருவர் உள்ளும் இருப்பவ்ர்தான். நம் மனத்தின் கீழ்நிலை. திருக்குரானில் இந்த மன நிலை “நஃப்ஸுன் அம்மாரா பிஸ்சூஃ” என்று அழைக்கப் படுகிறது. அதாவது தீமையின் பக்கம் தூண்டும் மனம். மனம் ஒரு குரங்கு என்று சொல்லப்பட்டவர் இவர்தான்.)

4 comments:

  1. வாழ்க நலமுடன் நன்றாக தான் இருக்கிறது. பார்த்துக் கொள்ளுங்கள், தீன் இலாஹி மாதிரி பித்அத்தாக இருக்கப் போகிறது..

    ReplyDelete
  2. ரஞ்சித மலரின் நறுமணம் வரட்டுமென கதவைத்திறக்க சொன்னவருக்கு ,திறந்தவுடன் போலிஸ் வந்து
    நின்றதால் சித்த நாழிக்கு சுவாமிகள் ஆடித்தான் போய்ட்டா!.

    ReplyDelete
  3. 'மந்திரம் போல் வேண்டுமடா சொல் இன்பம்' என்றார் பாரதியார்.

    ஒரு சொல் வேண்டும், தேவ சக்திகளை நம்முள் இற‌க்கும் ஒரு சொல் வேண்டும் என்பார்.'ஓம்' என்று உரைத்துவிடில் போதுமோ? என்பார்.

    ராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு சன்னியாசம் முறையாக அளிக்கவில்லை. அத்வைதானந்தர் என்று பிற்காலத்தில் அறியப்பட்ட மூத்த கோபால் ராமகிருஷ்ணரை விடக் கூட‌ அதிக வயது ஆனவர். அவர் திருமணமாகி மனைவியை இழந்தவர். ராமகிருஷ்ணரையும் அவர் குடும்பஸ்தராகவே பார்த்தார். ஏனெனில் ராமகிருஷ்ணர் காவி கட்டவில்லை.மனைவியும் அருகிலேயே இருந்தார்.இருப்பினும் ராமகிருஷ்ணர் முறையாக சன்னியாசம் வாங்கியவர் தான்.

    மூத்தகோபால் ராமகிருஷ்ணரின் அந்திம காலத்தில் ராமகிருஷ்ணர் குடும்பத்தாரைப்போல சன்னியாசிகளுக்கு காவி வஸ்திரம் தானம் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.நிறைய வஸ்திரங்களை வாங்கி வந்து
    பண்டாரங்களை அழைத்து வருவதாகக் கூறிக் கிளம்பினார்.

    மூத்த கோபாலைத் தடுத்து நிறுத்தி, பிற்காலத்தில் சன்னியாசி ஆகப்போகும் விவேகானந்தர் முதலிய இளைஞர்களை அழைத்து ,'உங்களைவிட பெரிய சன்னியாசி யார் கிடைக்கப் போகிறார்கள்' என்று கூறி காவியை அவர்களுக்குத் தன் கையால் கொடுத்தார். ஆனந்தா நாமம்,பெயர், ராமகிருஷ்ணர் கொடுக்கவில்லை.அவருடைய மறைவுக்குப் பின்னர், இந்த இளைஞர்கள்
    விவேகானந்தர் தலைமையில் முறையாக விரஜ‌ ஹோமம் செய்து சன்னியாசப் பெயர்களைத் தாங்களாக வைத்துக் கொண்டார்கள்.

    ReplyDelete
  4. Aanando brahmeti vyajanaat
    Aanandadhyeva khalvamaani bhootaani jaayante
    Aanandena jaataani jeevanti
    Aanandam prayantyabhisamvishanti
    Saisha bhargavee vaarunee vidya
    Parame vyoman pratishthitaa
    Sa ya evam veda pratitishthati
    Annavaanannaado bhavati
    Mahaan bhavati prajayaa pashubhirbrahmavarchasena
    Mahaan keertyaa

    What is the potential that agitates the form of awareness? Bhrugu found that the blissful feeling of happiness causes the agitations in the form of awarenss. Bhrugu now concentrated on the subtle form of bliss. He recognized that all beings are born from bliss, are sustained by bliss and are consummated by bliss. And they keep moving in pursuit of bliss.

    That was the end of the search for Bhrugu. Bhrugu found that in the manifested universe there is nothing beyond the bliss of Brahman. There is nothing in the manifested universe that can cause a ripple in the form of the bliss of brahman. This bliss of Brahman becomes known by the transactions between the sensations and the sensibilities in the transcendental inner space within oneself. When one knows the bliss of Brahman, and gets established in the knowledge, he will not starve for inputs at any plane of his existence. And he will be able to digest all inputs in a wholesome manner that leads him to the realization of Brahman. He expands his sphere of influence through the products and processes that emanate from him. He becomes well-known because of the enhancement of his relevance.

    Thaithriya upanishad

    Ananda is not a word borrowed from BhudHism.

    ReplyDelete