Thursday, January 27, 2011

தட்டினார் திறந்தேன்


காட்டிலிருந்து ஊருக்குள் ஒரு நரிக்குட்டி ஓடிக்கொண்டிருந்தது. வாலில் கால் அடிக்க பீதியுடன் தெரித்து ஓடிக்கொண்டிருந்த அந்த நரிக்குட்டியை வழிமறித்து, “ஏ நன்னாரிக் குட்டியே! ஏன் இப்படி அரண்டு ஓடுகிறாய்? காட்டில் தீப்பிடித்துக் கொண்டதா?” என்று சிலர் கேட்டார்கள். மூச்சு இரைக்க அந்த நரிக்குட்டி சொன்னது, “ஐயா, காட்டிற்குள் அரசன் தன் ஆட்களுடன் வந்திருக்கிறான். அவர்கள் சிங்கத்தைப் பிடிக்கிறார்கள். அதனால்தான் தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறேன்.” இதைக் கேட்டு அவர்கள் சிரித்தார்கள். “அட அசட்டு நரிக்குட்டியே, அரசன் சிங்கத்தைத்தானே பிடிக்கிறான். உன்னை ஏன் பிடிக்கப் போகிறான்? நீ நரிக்குட்டிதானே, ஏன் பயந்து ஓடுகிறாய்?” என்று கேட்டார்கள். அந்த நரிக்குட்டி சொன்னது, “உங்களுக்கு விஷயம் புரியவில்லை. அரசனிடம் என்னைக் காட்டி, ‘அரசே, இதுவும் சிங்கக் குட்டிதான்’ என்று யாராவது சொல்லிவிட்டால் அவன் என்னையும் பிடித்துக் கூண்டில் அடைத்துவிடுவான். எத்தனை அபத்தமான விசயம் சொல்லப்பட்டாலும் அதை நம்புவதற்கென்றே நாலு பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்!”

இமாம் சாஅதி என்ற பாரசீக சூஃபி ஞானி எழுதிய ’குலிஸ்தான்’ (ரோஜாத் தோட்டம்) என்னும் காவியத்தில் உள்ள இந்தக் கதைதான் எனக்கு ஞாபகம் வந்தது. அத்துடன் சேர்த்து, ‘கேட்கிறவன் கேணையா இருந்தா எறும்பு ஏரோப்பிளேன் ஓட்டுமாம்’ என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்களே, அதுவும் ஞாபகம் வந்தது. இதெல்லாம் ஞாபகம் வரும்படி அப்படி என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

காலை எட்டேகால் மணி. நானும் மனைவியும் பரபரப்பாக இருக்கும் நேரம். அதாவது குழந்தைகளைப் பள்ளிக்குக் கிளப்பி நான் கல்லூரிக்குக் கிளம்பும் நேரம். மனைவி சமையலறையில் தோசை சுட்டுக்கொண்டிருந்தாள். நான் குளியலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். அப்போது பார்த்து அழைப்பு மணி ஒலித்தது. கதவைத் திறந்து பார்த்தேன். வெள்ளை ஜிப்பா & கைலியில் ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். கூட யாராவது நிற்கிறார்களா என்று தேடினேன். அண்ட் கோ யாருமில்லை. ஜமாத்திற்கு அழைக்க வருபவர்கள் என்றால் இந்த நேரத்துக்கு வரமாட்டார்கள். மேலும் அவர்கள் தனியாகவும் வரமாட்டார்கள். கும்பலாகத்தான் வருவார்கள். அமீர் சாகிப் (தலைவர்), ரெஹபர் (வழிகாட்டி), முத்தகல்லிம் ( பேசுபவர். முத்தம் கொடுப்பவர் அல்ல.) மற்றும் முஹல்லா (லோக்கல் ஏரியா) பற்றி ‘பிக்ரு’ (கவலை) படுகின்ற சிலர். இதுதான் தப்லீக் சந்திப்புக் குழுவின் அமைப்பு. இப்படிச் சந்திப்பதை அரபியில் “குசூசி முலாக்காத்” என்று குறிப்பிடுவார்கள். பொதுவாக எனக்கு அது குத்தூசி முலாக்காத்தாக இருப்பதால் என் வீட்டு வாசலில் ஜமாத்தைப் பார்த்தாலே நான் ஊசிக்கு பயப்படும் குழந்தை போல் பம்மிவிடுவேன். இந்த இளைஞன் தனியாக நின்றதால் இது வேறு விசயம் என்று புரிந்துகொண்டு விசாரித்தேன். தான் பி.ஏ அரபி படித்ததாகவும் அதன் பின் இரண்டு ஆண்டுகள் வீட்டில் சும்மா இருந்ததாகவும், நான்கு வருடங்களுக்கு முன் ஹாஸ்டல் ரூமில் என் நண்பர்களுடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவனும் அங்கே இருந்ததாகவும் சொன்னான். அவன் சொல்லச் சொல்ல எனக்கு நினைவுகள் மலர்ந்தன. என் ஆன்மிகச் சகோதரர்கள் இருவருடன் ஹாஸ்டல் அறையில் இவன் தங்கி இருந்தான். அவர்கள் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்தார்கள். இவன் பி.ஏ. அரபி படித்துக் கொண்டிருந்தான். நான் என் தோழர்களிடம் சூஃபிசம் பற்றி உரையாடிக் கொண்டிருப்பேன். அதை இவனும் கேட்டிருக்கிறான். “அடடே, ஆமாம் தம்பி, ஞாபகம் இருக்கிறது. இப்போ என்ன செய்றீங்க?” என்று கேட்டேன். அவனுடைய அதிர்ச்சியான பதில்கள் தொடங்கின.

“இரண்டு வருஷம் வீட்ல சும்மாத்தான் இருந்தேன். இப்போ மதரசாவில் சேர்ந்து ஓதலாம்னு வந்திருக்கேன். எனக்குச் சில சந்தேகங்கள் இருக்கு அதை நீங்கள்தான் தீத்து வைக்கணும்.”

“மதரஸா ஹஜ்ரத்துக்கிட்டயே கேக்கலாமே நீங்க”

“இல்லை, நாலு வருஷத்துக்கு முன்னால நீங்க நவாஸ் பிலாலிட்ட ‘நூரே முஹம்மதியா’ பத்திப் பேசிட்டிருந்தீங்க.”

“ஆமாம். அது கொஞ்சம் ஆழமான கான்சப்ட் தம்பி. முஹம்மது (சல்) அகமியத்துல இறைவனின் ஒளியாக இருக்கிறாங்க அப்படீன்னு அர்த்தம்.”

“ஆங்.. அதுதான். அந்த ஒளி எனக்குள்ள குடி வந்திருச்சு! அதப் பத்திதான் உங்ககிட்ட பேசலாம்னு வந்தேன்.”

(ஆஹ்ஹா! காலைலியே கண்ணைக் கட்டுதே... என்று என் மனதிற்குள் நான் நினைத்துக் கொண்டாலும், அவன் மேலும் என்ன கூறப் போகிறான் என்ற ஆர்வமும் பிறந்துவிட்டது.)

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் தம்பி. ஆனால் இதைப் பத்தி உங்களுக்கு வழி காட்ட என்னால் முடியாது. இந்தத் துறையில மேலான நிலையில் இருக்கிற ஒரு குருநாதரைப் பார்த்துக் கேளுங்க.”

“நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. நூரே முஹம்மதி (சல்) என்கிட்ட அப்பப்ப சில விஷயங்கள சொல்றாங்க.”

“சரி. என்ன சொன்னாங்க?”

“நான்தான் ஏசு நாதர்னு சொன்னாங்க”

“அதுவும் ஒரு பார்வைல சரிதான். ஆதம் நபி தொடங்கி பூமிக்கு வந்த ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்களும் எதார்த்தத்துல ஒன்னுதான். அதனால முஹம்மதுதான் ஏசுன்னு சொல்றதுல தப்பில்ல.”

“நான் சொன்னத நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க. என்னைத்தான் ஏசு நாதர்னு நபிகள் நாயகம் சொன்னாங்க.”

(எனக்கு லேசாகத் தலையைச் சுற்றியது. வானத்துக்கு உயர்த்தப் பட்ட ஏசு நாதர் உலகம் அழியும் தருவாயில் பூமிக்கு மீண்டும் வருவார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்களுக்கு அப்போது முப்பத்து மூன்று வயதாக இருக்கும். அவர்கள் டமஸ்கஸ் நகரில் உள்ள ஒரு பள்ளிவாசலின் வெண்ணிற விதானத்தின் மீது இறங்கி வருவார்கள். அப்போது அவர்கள் மஞ்சள் நிற அங்கி அணிந்திருப்பார்கள். அவர்களின் தலைமுடி ஈரமாக இருப்பதுபோல் தெரியும் என்ற விவரங்கள் நபிமொழிகளில் கிடைக்கின்றன.
ஏசு நாதர் சொல்லாமல் கொள்ளாமல் இப்படித் திடீரென்று திருச்சியில் உள்ள காஜாமலையில் வந்து இறங்குவார் என்பதையும் அவர் ஜமால் முஹம்மது கல்லூரியில் மூன்று ஆண்டுகள் பி.ஏ. அரபி படித்தவராக இருப்பார் என்பதையும் எப்படி நம்புவது? அதுவும் இந்தப் பையனுக்கு இருபத்து இரண்டு வயசுதான் ஆகிறது. இப்படிப் பத்து வருஷங்கள் அட்வான்சாகவே ஏசு ஏன் வரவேண்டும்? இதுவே அவனுக்கு விசயத்தை விளக்கி இருக்கலாம். ஆனால் அவன் தான்தான் ஏசு நாதர் என்று மிக உறுதியாக நம்புவதாகத் தெரிந்தது.)

“தம்பி, ஈசா நபி வானத்துக்கு உயர்த்தப் பட்டு அங்கேதான் இருக்கிறார்கள் என்று நாம் நம்புகிறோம். அவங்களுக்கு வயசு முப்பத்து மூன்று. அதே வயசுலதான் இறங்குவாங்க.” என்றேன் நான். (ஹவ்வீஜிட்? பாய்ண்ட்ட புடிச்சோம்ல.)

இந்தக் கேள்விக்குக் கொஞ்சமும் அசராமல் ‘அவர்’ பதில் சொன்னார்:

“அது வேற உலகம். அங்கே அவங்க ஏசுவா இருக்காங்க. இந்த உலகத்துலதான் நான் ஏசுவா இருக்கேன்.”

மண்டையில் லேசாக மர திருகிக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். அதை முழுசாகக் கழட்டாமல் ‘இவர்’ ஓயமாட்டார் என்று தெரிந்தது. தொடர்ந்து விளக்கினார்:

“ஒரு நாள் நான் பள்ளிவாசலில் படுத்திருந்தேன். அப்போ ஈசா நபியின் (ஏசுவின்) ரூஹ் (உயிர்) என் மூளையில் இறங்கியது. அதனால நான் இந்த உலகத்துக்கு ஏசுவாயிடேன்.”

“இது கனவுதானே? இதை நீங்க நேரடியாப் புரிஞ்சுக்கக் கூடாது.”

“இல்லை, அது கனவில்லை. நான் தூக்கத்தில் பார்த்தது இல்லை”

“அப்ப நீங்க முழிச்சிருந்தீங்களா?”

“முழிச்சிக்கிட்டும் இல்லை. அது ஒருவிதமான வேறு நிலை.”

“நீங்கதான் ஈசா நபின்னு ரசூலுல்லாஹ் சொன்னதாச் சொன்னீங்க?”

“அவங்க அப்படி நேரடியாச் சொல்லல. ரசூலுல்லாஹ் என்கிட்ட பேசும்போது மர்யம் (அலை) அவர்களைத் திருமணம் செய்ய என்கிட்ட அனுமதி கேட்டாங்க. என்கிட்ட அனுமதி கேக்குறாங்கன்னா, அப்ப நான்தான் ஈசா நபின்னுதானே அர்த்தம்?”

(இந்தப் புள்ளியைக் கொஞ்சம் விளக்கிவிடுகிறேன். மறுமையில் ஏசுவின் அன்னையான மர்யம் (மேரி) அவர்கள் நபிகள் நாயகத்தின் மனைவியாக இருப்பார்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கை. ”சொர்க்கத்தில் இறைவன் என்னை இம்ரானின் மகளுக்கும் (மர்யம்), பிரௌனின் மனைவிக்கும் (ஆசியா), மூசா நபியின் சகோதரிக்கும் திருமணம் செய்து வைத்தான்.” என்பது திப்ரானியில் பதிவாகியுள்ள நபிமொழி. இப்னு கதீரின் கஸசுல் அன்பியாவிலும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.)

தொடர்ந்து ’அவர்’ என்னிடம் சொன்னார்:

“நான் மூன்று முறைகளில் நபிகள் நாயகத்துக்கு மர்யம் (அலை) அவர்களை நிக்காஹ் செய்துவைத்தேன்.”

“மூன்று முறைகளிலா? எப்படி?”

“அல்லாஹ்வின் முன்னிலையில் நானே சாட்சியாக இருந்து திருமணம் செய்துகொடுத்தேன். இன்னொரு முறை ஆன்மலோகத்தில் அவர்களின் உயிர்களை இணைத்துவைத்தேன்.”

“மூன்றாவது முறை?”

“அதை நான் வெளியே சொல்ல முடியாது. ரகசியமானது”

இதை அவன் சொல்லிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் இருந்து குரல் வந்தது. “காலேஜுக்கு நேரமாச்சு. அங்க என்ன வெட்டிப் பேச்சு?”

“தம்பி, இப்ப நேரமில்லை. நாளை சாயங்காலம் மதறஸாவுக்கு வர்ரேன். லத்தீஃப் ஹஜ்ரத் ரூமுக்கு வந்திடுங்க. விளக்கமாப் பேசலாம்.” என்று கூறி அவரை அனுப்பிவிட்டேன்.

மறுநாள் நான் மதறஸாவுக்குச் சென்று கேட்டபோது முதல் நாள் இரவே சொல்லிக்கொள்ளாமல் அவர் கம்பி நீட்டிவிட்டார் என்று சொன்னார்கள். (அவர் தன் ஊருக்குத்தான் சென்றிருக்க வேண்டும். டமஸ்கஸ் நாட்டிற்குச் சென்றிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்.)

தன்னை ஏசு என்று சொல்லிக்கொண்டு உலகில் பல கிராக்குகள் அவ்வப்பொது உலா வருவது உலகம் அறிந்த ஒன்றுதான்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜான் நிக்கோலஸ் தோம் என்பவர் தன்னை ஏசு கிறிஸ்து என்று அறிவித்துக் கொண்டார். இங்கிலாந்தில் கெண்ட் என்னும் இடத்தில் 1838-இல் ‘பாஸன்வுட்’ போரில் பிரிட்டிஷ் ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

அர்னால்ட் பாட்டர் என்பவர் தன்னுள் ஏசுவின் ஆவி புகுந்துவிட்டது என்றும் தான் இனி “பாட்டர் கிறிஸ்து” என்றும் அறிவித்துக் கொண்டார். 1872-இல், விண்ணுக்கு ஏறப்போவதாகக் கூறி ஒரு மலை முகட்டிலிருந்து காலடி எடுத்து வைத்தபோது கீழே விழுந்து இறந்தார்.


பஹாவுல்லாஹ் (1817-1892) என்பவர் ஷியா மதத்தில் பிறந்து பின்னர் பாப் மதத்தைத் தழுவினார். ஏற்கனவே 1844-இல் பாப் என்பவர் தன்னை இரண்டாம் ஏசு என்று கூறிக் கொண்டார். அவரைப் பின்பற்றிய பஹாவுல்லாஹ் பின்னர் தன்னையே இரண்டாம் ஏசு என்று அறிவித்துக் கொண்டார். அவருடைய கொள்கைகள் பஹாயி மதமாயிற்று. (கலீல் ஜிப்ரான் இவரை நேரில் கண்டிருக்கிறார். ஓவியமாகவும் வரைந்துள்ளார்.)

வில்லியம் டேவீஸ் என்பவர் தன்னை வானவர் மைக்கேல் என்று சொல்லிக்கொண்டார். 1868-இல் பிறந்த ”ஆர்த்தர்” என்ற தன் மகனை ஏசுவின் அவதாரம் என்று அறிவித்தார். 1869-ல் பிறந்த “டேவிட்” என்ற தன் இரண்டாம் மகனை ‘பரமபிதா’ என்று அறிவித்தார்.

இருபதாம் நூற்றாண்டில்தான் அதிகமான நபர்கள் தங்களை ஏசு நாதர் என்று கூறிக்கொண்டு கிளம்பினார்கள். தனியாக அல்ல, தங்களை நம்பும் ஆயிரக் கணக்கான தொண்டர்களுடன்!1941-இல் பிறந்த வெய்ன் பெண்ட் என்பவர் தன்னை ஏசு என்று அறிவித்துக் கொண்டார். ”நீயே என் தூதன்” என்று இறைவன் தன்னிடம் பேசியதாகச் சொன்ன இவர், “நான் இறைவனின் அவதாரம். தெய்வீகமும் மானிடமும் கலந்தவன்” என்று சொன்னார். ஏழு கன்னிப் பெண்களுடன் உறவு கொள்ள வேண்டும் என்று இறைவன் தனக்குக் கட்டளை இட்டதாகச் சொல்லித் தன் தொண்டர்களின் மகள்களுடன் உறவாடினார். அவர்கள் 14 அல்லது 15 வயதுள்ளவர்களாக இருந்ததால் 2008-இல் மைனர் கேசில் கைது செய்யப்பட்டார்.

1995-இல் மார்ஷல் ஆப்பிள்வைட் என்னும் அமெரிக்கர் இணையத்தில் ஒரு திடீர் செய்தியை அனுப்பினார். தானே ஏசு என்று அதில் குற்ப்பிட்டிருந்தார். 1997-இல் ”சொர்க்கக் கதவு” என்ற தன் குழுவினருடன் தற்கொலை செய்துகொண்டார். எதற்காம்? ஹேல்-பாப் என்னும் வால் நட்சத்திரத்திற்குப் பின்னால் நிறுத்தப்பட்டுள்ள, சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் விண்கலத்தைப் பிடிப்பதற்காம்!பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ரி கிறிஸ்தோ என்பவர் ஆரம்பத்தில் ஜோசியத் தொழில் செய்துவந்தார். தொழிலில் திறமை எந்த அளவு முத்திவிட்டது என்றால் 1969-இல் தன்னை இரண்டாம் ஏசு என்று ‘கண்டுபிடித்துவிட்டார்’! பிரேசில் நாடே புதிய ஜெருசலேம் என்று இவர் கூறுகிறார்.ஜப்பான் நாட்டில் 1944-இல் பிறந்த மிட்சுவோ மடயோஷி என்னும் அரசியல்வாதி உலகப் பொருளாதார கம்யூனிட்டி பார்ட்டி என்னும் கட்சியைத் தொடங்கினார். பரமபிதாவும் ஏசு கிறிஸ்துவும் அவரே என்பதுதான் கட்சியின் பிரதானக் கொள்கை! இறுதித் தீர்ப்பைத் தானே அரசியல் வழியில் வழங்கப் போவதாகக் கூறிவருகிறார்.

ஜோசே லூயி டெ மிராண்டா என்பவர் சற்றே வித்தியாசமாகக் கிறுக்கு என்றுதான் சொல்லவேண்டும். இவர் ஏசுவும் தானே என்றும் அந்திக்கிறிஸ்துவும் தானே என்றும் அறிவித்துக் கொண்டார்! எனவே சாத்தானின் எண் என்று பைபிள் கூறும் 666-ஐத் தன் முன்னங்கையில் பச்சை குத்தியுள்ளார். இவரின் தொண்டர்களும் அவ்வாறே செய்துள்ளார்கள்.

ஏசுவின் அவதாரம் என்று பலரும் சொல்லிக்கொள்வதால் அது கவர்ச்சி இழந்த ஒரு கொள்கை என்று கருதியோ என்னவோ ஜிம் ஜோன்ஸ் என்பவர் தன்னை ஏசு, புத்தர், லெனின், மஹாத்மா காந்தி மற்றும் பரமபிதா ஆகியோரின் அவதாரம் என்று 1970-களில் அறிவித்தார். ”மக்களின் ஆலயம்” என்னும் அமைப்பை ஏற்படுத்தினார். 1978-இல் குயானாவில் தன் தொள்ளாயிரம் தொண்டர்களுடன் தற்கொலை செய்துகொண்டார்.

”அயா பின்” என்று அழைக்கப்படும் ஆரிஃபீன் முஹம்மது என்னும் மலேசியர் 1975-இல் “பரலோகச் சமூகம்” என்னும் அமைப்பை உருவாக்கினார். பரலோகத்துடன் நேரடித் தொடர்புள்ள இவரே ஏசு, முஹம்மது, புத்தர், சிவன் ஆகியோரின் மறு அவதாரம் என்று இவரின் தொண்டர்கள் நம்புகிறார்கள். மிகப் பெரிய சந்தன நிறத் தேநீர் கோப்பையே இவரின் வழிபாட்டு முறையில் மையப்பொருளாகும்!தன்னை ஏசு என்று அறிவித்துக் கொண்ட இன்னொரு கிறுக்கர் லாஸ்லோ டாத். வாட்டிகன் நகரில் புனிதப் பேதுரு பெசிலிகா ஆலயத்தில் உள்ள, மைக்கல் ஏஞ்சலோ செதுக்கிய “பியெட்டா” என்ற சிலையை ஒரு சுத்தியலால் தாக்கி “நானே ஏசு. மீண்டும் உயிர்த்தெழுந்து வந்துவிட்டேன்.” என்று கூவினார்.செர்கெய் டொராப் என்னும் ருஷ்யர் தன்னை ஏசுவின் இரண்டாம் பிறவி (விஸ்ஸாரியன்) என்று அழைத்துக் கொண்டார். ருஷ்யாவின் முப்பது கிராமங்களில் அவருக்கு நாலாயிரம் தொண்டர்களும், உலகெங்கிலும் பத்தாயிரம் தொண்டர்களும் இருக்கிறார்கள்.இந்தப் பட்டியலில் இன்னும் சேர்ப்பதற்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். இஸ்லாமிய வரலாற்றில் தன்னை ஏசு என்று அழைத்துக் கொண்டவர்களின் லிஸ்டில் மிக முக்கியமானவர் மீர்சா குலாம் அஹ்மது காதியானி (1838-1908) என்பவர்தான். பாகிஸ்தானில் உள்ள காதியான் என்னும் ஊரில் பிறந்தவர். நபிகள் நாயகத்தால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட மஹ்தி (அலை) மற்றும் ஏசு நாதர் தானே என்று அவர் அறிவித்தார். ஏசு நாதர் சிலுவையில் இறக்கவில்லை என்றும், உயிர் தப்பி அவர் காஷ்மீர் பகுதிக்கு வந்து பின்னர் முதிய வயதில் இயற்கை மரணத்தைத் தழுவினார் என்றும், உலக முடிவுக் காலத்தில் ஏசு வருவார் என்று நபிகள் நாயகம் சொன்னது தன்னைத்தான் என்றும் அவர் கூறினார். மார்ச் 23, 1889-இல் அஹ்மதிய்யா இயக்கத்தைத் தோற்றுவித்தார். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்வதே தன் இயக்கத்தின் பிரதான கொள்கை என்று கூறினார்.

இந்தப் பித்தலாட்டங்கள் எல்லாம் என் ஞாபகத்தில் ஓடி மறைந்தன. என் வீட்டுக் கதவைத் தட்டி ஒருவன் தன்னை ஏசு என்று அறிமுகப் படுத்திக் கொண்டதை எண்ணி வியந்தேன். ஆனால், மேற்சொன்ன நபர்களைப் போல் அவன் ஹிப்னாட்டிசக் கவர்ச்சி கொண்ட ஆளுமை அல்ல. அவன் கண்களில் ஒரு குழப்பம் இருந்தது. அவன் மனம் பிளவுபட்டிருப்பது போல் நான் உணர்ந்தேன். ஒரு நல்ல உளவியல் மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவன் நார்மல் ஆகிவிடுவான். உளவியலை ஆழமாகக் கைவசப்படுத்திய ஒரு சூஃபி குருவிடம் சென்றால் நார்மலாவது மட்டுமல்ல, அவன் சிறந்த ஞானியாகவும் பரிணமிக்க முடியும். எங்கே சென்றானோ தெரியவில்லையே!3 comments:

 1. இமாம் கஸ்ஸாலி (றஹ்) அவர்கள் அவர்களின் மாணவர்கள் ஏதேனும் சந்தேகம் கேட்டால் ஒரு புத்தகத்தையே பதிலாக எழுதி கொடுப்பார்களாம். அதே போல் இவ்வளவு தகவல்களையும் உள்ளடக்கி ஒரு பதிவு.. உங்கள் வலை எனது பள்ளிக்கூடம்.

  ReplyDelete
 2. //அதே போல் இவ்வளவு தகவல்களையும் உள்ளடக்கி ஒரு பதிவு.. உங்கள் வலை எனது பள்ளிக்கூடம்.//
  Well said, Repeat.

  ReplyDelete
 3. //மார்ச் 23, 1889-இல் அஹ்மதிய்யா இயக்கத்தைத் தோற்றுவித்தார். இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்வதே தன் இயக்கத்தின் பிரதான கொள்கை என்று கூறினார்.///

  இந்த அஹமதீயாக்களின் நூல்களை ஆதாரமாக வைத்துத்தான் ஜாகிர் நாயக்
  இந்து நூல்களில் முஹம்மது(சல்) பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள‌து என் று எழுதுகிறார்.

  ReplyDelete