Monday, January 3, 2011

புண்ணிய மொழி

"நீங்கள் எம்.ஏ தமிழ் எடுத்துப் படித்ததற்குப் பதிலாக அரபி எடுத்துப் படித்திருக்கலாம். குரான்-ஹதீஸ் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு வார்த்தைக்கும் புண்ணியம் கிடைத்திருக்கும்" என்று ஒருவர் என்னிடம் சொன்னார். அப்போது நான் எம்.ஏ தமிழ் இலக்கிய மாணவனாக இருந்தேன். தமிழ் படித்தால் நரகத்தில்தான் இடம் கிடைக்கும் என்று ஆழமாக நம்புபவர் அவர் என்பதுபோல் தோன்றியது!

அரபி மொழி சொர்க்கத்தின் மொழி, அது இறைவனின் மொழி என்பதாகச் சொல்லிக்கொண்டு அதுவே ஒரு தன்முனைப்பைக் கட்டமைத்துவிட்ட நபர்களை நான் சந்தித்ததுண்டு. தமிழ்த் துறையை "இறைவன் டிபார்ட்மென்ட்" என்று அரபிப் பேராசிரியர் ஒருவர் கிண்டல் செய்ததாக நண்பர் ஒருவர் வருத்தப் பட்டார். அதாவது 'அல்லாஹ்' என்று சொல்லாமல் 'இறைவன்' என்று சொல்கிறோமாம். "சரி விடுங்க, நாம இறைவன் டிபார்ட்மெண்டாவே இருந்துட்டுப் போறோம், அவரே சைத்தான் டிபார்ட்மெண்டா இருந்துக்கட்டும்" என்று நான் ஆறுதல் சொன்னேன்! இது போன்ற மெண்டல் பேராசிரியர்களை வைத்துக் கொண்டு வேறு என்ன சொல்ல?ஆன்மிகத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் பேச முடியும். ஏனெனில் மொழிகள் எல்லாம் படைக்கப்பட்டவை. எனவே இறைவன் மொழிகளுக்கு அப்பாற்பட்டவன். அழகிய முகம் எந்த வடிவக் கண்ணாடியிலும் பிரதிபலிக்கும். என் முகம் சதுரக் கண்ணாடியில்தான் பிரதிபலிக்கும் என்று சொல்லமுடியாது. திருக்குரானிலே இந்தக் கருத்தை விளக்கும் ஒரு வசனம் உள்ளது:
"எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை
அவருடைய சமுதாயத்தின் மொழியைக் கொண்டே தவிர
அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக"
(14 :4 )

உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் ஏறத்தாழ ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று இஸ்லாம் கூறுகிறது. இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமுதாயமே / இனமே இல்லை என்பது திருக்குர்ஆன் சொல்லும் சேதி.
"திண்ணமாக உம்மைச் சத்தியத்துடன்
நன்மாராயம் சொல்பவராகவும்
எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம்.
தன்னில் ஒரு இறைத்தூதர் வாழ்ந்திராத
சமூகம் ஏதுமில்லை."
(35 :24 )

எனவே அந்த அந்தச்  சமூகத்திற்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அந்த அந்தச் சமூகத்தின் மொழியில்தான் ஆன்மிகத்தை விளக்கினார்கள் என்பது தெளிவு. ஆனால் இதை எவ்வளவு சவுக்காரம் அரப்புப் புளி  போட்டு விளக்கினாலும் சில அரபுப் புலிகளுக்குப் புரிவதில்லை. "அதெல்லாம் கிடையாது. ஆன்மிகத்தை அரபியில்தான் எத்த முடியும்" என்று அடம் பிடிப்பார்கள். என் ஆன்மிகத் தோழர் ஒருவரிடம் இது பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு வினோதமான கருத்தைக் கூறினார். அப்படி ஒரு விளக்கத்தை அதுவரை நான் கேட்டதே இல்லை. அதாவது, உலகில் தோன்றிய எல்லா இறைத்தூதர்களும் அவரவர் சமுதாய மொழியில்தான் இறைச் செய்தியைக் கூறினார்கள். ஆனால் திருக்கலிமா என்னும் மூல மந்திரத்தை மட்டும் 'லா இலாஹா இல்லல்லாஹ்' என்று அரபியில்தான் சொன்னார்கள்' என்று என் நண்பர் சொன்னார்! இது கேட்பதற்கு ஒரு மொழிப் புரட்சியைப் போல் இருக்கலாம். ஆனால் எதார்த்தத்திற்கு இது தோதுவாக இல்லை! உதாரணமாக, ஜப்பானியர்களிடம் ஜப்பானிய மொழியில் உரையாற்றும் ஒருவர் திடீரென்று துருக்கி மொழியில் இரண்டு வரி பேசுவாறேயானால் அது அவர்களுக்குக் குழப்பத்தையே உண்டாக்கும். தெளிவை அல்ல. "தோழரே, மூல மந்திரத்தையும் அவர்கள் தங்கள் தாய்மொழியில்தான் சொல்லியிருப்பார்கள்" என்று நான் அவரிடம் 'எத்தி'னேன்!இது போன்ற உரையாடல்கள், உண்மையில் 'அரபி' என்றால் என்ன?' என்ற கேள்வியை என் மண்டைக்குள் எழுப்பித் தேட வைத்தது. TAKEN FOR GRANTED - ஆக மதத்தைப் பின்பற்றினால் இந்தக் கேள்வியெல்லாம் தேவை இல்லைதான். ஆனால் கேள்விகள் இல்லாமல் தேடல் என்பதில்லையே?என் கண்ணில் இன்னொரு நபிமொழி பட்டது. 'சேவலைத் திட்டாதீர்கள். அது அதிகாலையில் அல்லாஹூ அக்பர் என்று கூவுகிறது' என்பது அந்த ஹதீஸின் கருத்து. 'அல்லாஹூ அக்பர்' என்பது அரபி மொழி. ஆனால் உலகில் உள்ள எல்லாச் சேவல்களும் "கொக்கரக்கோ.." என்பது போன்ற ஒலிக்குறிப்பில்தான் கூவுகின்றன. ஆனால் அந்த ஒலிக்குறிப்புக்கு சேவலின் மொழியில் 'இறைவன் மிகப் பெரியவன்' என்று அர்த்தம் என்பதைத்தான் நபிகள் நாயகம் அரபியில் 'அல்லாஹூ அக்பர்' என்று கூறுகிறார்கள். சேவலின் ஒலிக்குறிப்பு இங்கே அரபியாக இருக்கிறது என்றுதான் விளங்க முடியுமே தவிர உலகில் எந்த சேவலும் ஒலிக்குறிப்பிலேயே 'அல்லாஹூ அக்பர்' என்று 'மனிதனின்' அரபியில் கூவாது. அப்படி ஏதேனும் ஒரு சேவல் மதரசாவின் கூரைக்கு மேலேயோ அல்லது கீழேயோ ஒதுங்கி அலிஃப், பே, தே ... என்று அரபி அட்சரங்கள் ஓதிக் கற்றுக்கொண்டு அதிகாலையில் எழுந்து 'அல்லாஹூ அக்பர்' என்று அரபியிலேயே பாங்கு முழங்கிவிடுமானால் என்னாகும்? அந்தச் சேவலை தெய்வீகச் சேவல் என்றோ அற்புதச் சேவல் என்றோ சொல்லி காசு வசூலிப்பார்கள்! தவிர, அதன் கழுத்தில் ஒருபோதும் கத்தியை வைக்கமாட்டார்கள். ('அல்லாஹூ அக்பர்' என்று நாளெல்லாம் கூவிய சேவலின் கழுத்தில் அதே மந்திரத்தைக் கூறிக் கத்தி வைக்கிறார்களே, சேவலின் வாழ்வில் என்ன ஒரு ஐரணி பார்த்தீர்களா? திருக்கலிமாவைக் கூறிக்கொண்டே வந்தவர்கள்தானே நபிகளாரின் திருப்பேரர் இமாம் ஹுசைனைக் கொலை செய்தார்கள்? அல்லாவின் பெயரை ஓதிக் கொண்டிருந்தவர்கள்தானே சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜைக் கொலை செய்தார்கள்?).இன்னொரு நபிமொழியும் நினைவுக்கு வந்தது. 'ஒரு குழந்தை அதன் முதல் ஓராண்டில் அழுவது என்பது அது அல்லாஹ்வை துதிப்பதாகும். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹூ அக்பர், லா இலாஹா இல்லல்லாஹ் என்பதாக அது அல்லாஹ்வைத் துதிக்கிறது' என்பது அந்த ஹதீஸின் கருத்து. (அதற்காக ஒரு குழந்தை வீல்-வீல் என்று கதறிக்கொண்டிருந்தால் அது அல்லாஹ்வைத் துதிக்கிறது என்று நாம் சும்மா இருக்க முடியுமா? எறும்போ கொசுவோ அதைக் கடித்துக் கொண்டிருக்கலாம், அல்லது அது பசியால் கத்தலாம். என்ன விஷயம் என்று பார்ப்பதுதான் நம் பொறுப்பு.) இந்த ஹதீஸின்படியும் குழந்தை நேரடியாகவே அரபி ஒலிக்குறிப்பில் துதிபாடும் என்று பொருள் கொள்ள முடியாது. எதார்த்தத்தில் அப்படி இல்லை. மழலைகூட பேசத் தொடங்காத பச்சைப் பாலகன்/ பாலகி வசம்பு வைத்துத் தேய்த்தாலும் நம் நாக்கில் வர மறுக்கும் அரபி மொழியில் துதிபாடுவதாவது? உலகில் உள்ள எல்லாப் பாலகர்களும் 'வீல்-வீல்' 'விரா-விரா' 'ஞை-ஞை' என்று எப்படிச் சொல்வதென்றே நமக்குத் தெரியாத ஒலிக் குறிப்பில்தான் அழுகின்றன. அந்த ஒலிக்குறிப்புத்தான் அரபி இறைத்துதியாக இருக்கிறது. மாறாக, ஏதேனும் ஒரு குழந்தை பிறந்தவுடனே அட்சரம் பிசகாத அரபியில் "சுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி... " என்று மூன்றாம் கலிமா கூறிக்கொண்டு பிறக்குமானால் அதனை ஒரு தெய்வீகக் குழந்தை என்று கூறிவிடுவார்கள். வேண்டாத சிலர் அது சாத்தானின் குழந்தை என்றுகூட சொல்லக்கூடும்!

இறைவனுடைய பேச்சுக்கு வடிவம் கிடையாது என்பதுதான் உண்மையான மார்க்க அறிஞர்களின் - ஞானிகளின் கொள்கை. மனிதர்கள் பேசும் மொழிகளிலும் சரி - அது அரபியோ தமிழோ அல்லது வேறு எதுவோ - அல்லது விலங்குகள் பறவைகள் பேசும் மொழிகளாக இருந்தாலும் சரி, அந்த மொழிகளின் லட்சணங்களை விட்டும் இறைவனின் பேச்சு (கலாம்) பரிசுத்தமானது. அதாவது படைக்கப்பட்ட மொழிகளின் பண்புகள் படைக்கப் படாத - அநாதியான, பூர்விகமான இறைப்பேச்சுக்குக் கிடையாது. படைப்புக்களின் மொழிகளுக்கு சப்தம் உண்டு, அட்சரங்கள் உண்டு, அதனால் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்து வரும் தன்மை (SERIALITY ) உண்டு. இவை எதுவுமே இறைப்பேச்சுக்குக் கிடையாது. அவனது பேச்சுக்கு, அவனது மொழிக்கு, அதாவது இறைவனின் அரபிக்கு சப்தமும் இல்லை எழுத்துக்களும் இல்லை! (பிலா சவ்தின் பிலா ஹர்ஃபின்.) இதை இந்திய ஞானிகள் "நாதம்" என்று அழைத்தார்கள். மூல ஒலி - அனாஹதம் (PRIMORDIAL SOUND ) என்றும் படைக்கப்படாத ஒலி (UNCREATED SOUND ) என்றும் அது விளக்கப்பட்டது. எனவே அ,உ,ம் என்னும் மூன்று எழுத்துக்களால் மனித நாவில் மொழியப்படும் "ஓம்" என்பதுகூட அந்த நாதத்தின் தூய வடிவமல்ல என்றார்கள். "ஓம்" என்னும் பிரணவ மந்திரமும் அந்தப் படைக்கப்படாத நாதத்தின் பிரதிபலிப்புத்தான் - MANIFESTATIONதான் என்று சொன்னார்கள்.   

திருக்குர்ஆன் தெளிவான அரபி மொழியில் வெளிப்படுத்தப்பட்டது என்று திருக்குர்ஆன் வசனமே சொல்கிறது ("பிலிசானின் அரபிய்யிம் முபீன்" 26 :195 ). லிசான் என்னும் சொல்லுக்கு மொழி என்றும் நாக்கு என்றும் அர்த்தங்கள் உண்டு. சொல்லப்போனால் நாக்கு என்பதுதான் நேரடிப் பொருள். மொழி என்னும் அர்த்தம் ஆகுபெயராக அமைந்தது. அதாவது நாவால் பேசப்படுவது என்பதால் வந்தது. உருவமற்ற இறைவனுக்கு உடல் இல்லை. எனவே நாவு என்னும் உறுப்பும் இல்லை. (ஒருவேளை இறைவனுக்கு நாவு உண்டு என்பதற்கு இதை ஆதாரமாக சகோ.பி.ஜெ போன்றவர்கள் எடுத்துக் கொள்ளக்கூடும்!) எனில் 'தெளிவான அரபியில் வெளிப்படுத்தப் பட்டது' என்பதற்கு என்ன பொருள்? 'சப்தமோ எழுத்துக்களோ இல்லாத இறைவாக்கு நபிகள் நாயகத்தின் நாவின் மொழியான அரபியில் (லிசான்) வெளிப்படுத்தப்பட்டது' என்பதுதான். இதே போன்றுதான் இறைவாக்கு பிற நபிமார்களுக்கு அவர்களின் தாய்மொழிகளில் வெளிப்படுத்தப் பட்டது. திருக்குரானிலேயே அதற்கு முன்பு அருளப்பட்ட வேத வெளிப்பாடுகள் பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. தாவூத் நபிக்கு "ஜபூர்" வேதம் யுனானி மொழியிலும், மூஸா நபிக்கு "தவ்ராத்" வேதம் ஹீப்ரூ மொழியிலும், ஏசுநாதருக்கு "இன்ஜீல்" வேதம் அரமைக் என்னும் பழைய சிரியன் மொழியிலும் வெளிப்படுத்தப் பட்டதாக இஸ்லாம் கூறுகிறது. இறைவாக்கு அதன் பூர்விக நிலையிலேயே இப்படிப் பல மொழிகளில் உள்ளன என்று அர்த்தமல்ல. மொழிகளுக்கு அப்பாற்ப்பட்ட இறைவாக்கு இறைத்தூதர்களின் தாய்மொழிகளில் பிரதிபலிக்கப் பட்டது என்பதுதான் இதன் விளக்கம். அதனால்தான் திருக்குர்ஆன் அரபியாக வெளிப்படுத்தப் பட்டது என்று கூறாமல் 'அரபியில் வெளிப்படுத்தப்பட்டது' என்று மேற்படி வசனம் சொல்கிறது! இதுவே, இறைவனின் பேச்சுக்கு - இறைவனின் அரபிக்கு என்று சொன்னாலும் சரி - சப்தம் வரிவடிவம் எழுத்துவடிவம் என்ற தன்மைகள் இல்லை என்பதற்கு ஆதாரம்!

என் மனதில் அன்புணர்வு பொங்கும்போது "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தமிழில் வெளிப்படுத்தலாம், "I LOVE YOU " என்று ஆங்கிலத்தில் வெளிப்படுத்தலாம் அல்லது அவரவருக்குத் தெரிந்த/ பிடித்த எந்த மொழியில் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதற்காக அன்பு என்பது தமிழ் மொழி என்றோ ஆங்கில மொழி என்றோ அர்த்தம் அல்ல. அன்புக்கு மொழி இல்லை! அதைப் போல்தான் இறைவனின் மொழியும்.

இந்த விஷயங்கள் "அரபி" என்பதை மூன்று கோணங்களில் விளங்கிக் கொள்ளள உதவுகிறது:
1 . இறைவனின் அரபி - சப்தம் எழுத்து இல்லாதது (பிலா சவ்தின் பிலா ஹர்ஃபின்)
2 . ஒலிக் குறியீட்டு அரபி - குழந்தையின் அழுகை, சேவலின் கூவல் போன்றவை.
3 . மனிதர்களின் அரபி - அலிஃப், பே, தே ... முதலிய எழுத்துக்கள் கொண்டு அமைந்தது.

கொக்கரக்கோவில் அரபி கேட்கிறதா? குழந்தையின் அழுகையில்? சில்லென்று ஓடும் ஓடையின் ஓசையில்? காட்டின் ஊடாக வீசும் காற்றில்? பறவையின் பாடலில்? கேட்கிறது என்றால் நீங்கள் அரபி அறிந்தவர்தான் போங்கள்!
6 comments:

 1. 'அனைத்தும் என்னைத் துதிபாடுகின்றன, அவற்றின் தஸ்பீஹ்களை அறிகிறேன்' என்று கூட வசனம் இருப்பதாக ஞாபகம்.

  ReplyDelete
 2. அவன் தான் மனிதனுக்கு பேசக்கற்றுக்கொடுத்தான் (55 :4 ) என்ற வசனம் இருந்தும், ஆங்கிலம் கற்பது ஹராம்
  என்று ஃபத்வா கொடுத்தது தேவ்பந்த் மதரஸா.

  ReplyDelete
 3. அரபியாவது இறைவனின் வாக்கை வெளிப்படுத்த பயன்படுத்தப் பட்ட மொழி தான். ஆனால் மூஸா நபியோடு இறைவன் நேரடியாக பேசியிருக்கிறான். ஆகவே, சகோதரர்களே, வெளிப்படுத்த உதவிய மொழியான அரபியை விட நேரடியாக பேசிய ஹீப்ரு மொழி தான் சிறந்தது என்று ஏழரை மாத ஆய்வுக்கு பிறகு யாரேனும் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதில்லை.

  ReplyDelete
 4. கொக்கரக்கோவில் அரபி கேட்கிறதா? என்று கேட்டிருக்கிறீர்கள்..? - ஏன் கேட்க வில்லை - காஃப் சத்து வச்ச இன்னொரு காஃப் அப்புறம் ரே மறுபடியும் காஃப் இதெல்லாம் சேர்த்து ஒரு மாதிரி அரபி கேட்கிறது..

  ReplyDelete
 5. ///என் மனதில் அன்புணர்வு பொங்கும்போது "நான் உன்னை நேசிக்கிறேன்" என்று தமிழில் வெளிப்படுத்தலாம், "I LOVE YOU " என்று ஆங்கிலத்தில் வெளிப்படுத்தலாம் அல்லது அவரவருக்குத் தெரிந்த/ பிடித்த எந்த மொழியில் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அதற்காக அன்பு என்பது தமிழ் மொழி என்றோ ஆங்கில மொழி என்றோ அர்த்தம் அல்ல. அன்புக்கு மொழி இல்லை! அதைப் போல்தான் இறைவனின் மொழியும்.///

  இதை வாசித்துக் கண் கலங்கினேன்.

  குருக்குலக் கல்வி முடிந்து வந்த மகனை 'பிரம்மத்தைப் பற்றிக் கூறு'என்றார்
  தந்தை. அவனும் கையைக் காலை ஆட்டி பல சொன்னான்.

  'மீண்டும் குருகுலம் போய் அறிந்து வா' என்று திருப்பி அனுப்பினார்.

  இப்படிப் பல முறை மகன் திருப்பி அனுப்பப்பட்டான்.

  இறுதியாக ஒரு முறை 'பிரம்மம்' என்ற சொல்லைக்
  கேட்டவுடனேயே கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக மெளனமாக நின்றான்.
  தந்தை மகிழ்ந்து அவனை ஞானி என்று ஏற்றுக் கொண்டார்.

  ராமகிருஷ்ணர் சொல்லுவார்" பிரம்மம் தான் இன்னும் எச்சில் படாதது.ஏனெனில் அதனை யாராலும் நாவால் பேசி விளக்கவே முடியாது"

  ReplyDelete
 6. ’புல்லாங்குழல்’ வழியாக இங்கு நுழைந்தேன்; கொஞ்சம் படித்தேன்.. பல இணக்கங்களை உணர்ந்தேன்... நிறைய பேசவேண்டும்போல உள்ளது... இறைவன் நாடினால்..

  //இறைவனுடைய பேச்சுக்கு வடிவம் கிடையாது என்பதுதான் உண்மையான மார்க்க அறிஞர்களின் - ஞானிகளின் கொள்கை//

  உண்மை... இறைவனுக்கே வடிவம் இல்லை எனும்போது, அவன் பேச்சுக்கு மட்டும் எப்படி வடிவம் உண்டாகும்.

  “கள்ளப் புலனைந்தையும் காடாமணி விளக்காய்” எரித்த பின்னரே உணர முடிவதை, புலன்களால் படித்து, புலன்களால் நினைத்து, புலன்களால் விளக்க முடியுமா?

  மீண்டும் படிக்கிறேன்; வருகிறேன்.

  ReplyDelete