Tuesday, January 18, 2011

மலரும் ரோஜா



ஒரு ரோஜா என்பது
ஒரு ரோஜா என்பது
ஒரு ரோஜா
என்றாள் ஒரு கவி.

அதுவரை தெரியவில்லை
அந்த ரகசியம் பலருக்கு

ஒரு ரோஜா என்பது
ஒரு ரோஜா மட்டுமல்ல
இதுவரை தெரியவில்லை
இந்த ரகசியம் பலருக்கு.

ஒரு ஊரில் ஒரு ராஜா
அவனுக்கொரு ஆசை ரோஜா
என்று நான் கதை சொன்னாலும்
புரியாமலா போகும்?

ரோஜா மலரினும் மெல்லிது
அதன் வாசம்.
இதயத்திற்கு நல்லது
அதன் வாசம்.

காதல் அதன் அர்த்தம்
ஞானம் அதன் உட்பொருள்
காலத்தின் புன்னகையாய்
மலரும் புதிர் அது.

கஸ்தூரி மானின்
நாபியூற்று போல்
காட்டுக்குள் மலரும்
ரகசிய ரோஜா
இரவுக் காவலனின்
இதயத்தைப் போல்.

சுவாசங்களின்
மணி மாலையில்
நடக்கும் என் தியானம்
ரோஜாத் தோட்டத்தில்
ஒரு முதிய ஞானி போல்.

காலமும் இடமும்
குறுக்கிடும் புள்ளியில்
சட்டென்று மலரும்
சிகப்பு ரோஜா
என் காதலியின்
அடையாளமாய்.

லைலா என்னும்
கறுப்பு ரோஜா
பிரியம் கொண்டவனைப்
பித்தனாக்கும்.

ஒளியில் சுடரும்
வெள்ளை ரோஜா
கன்னி மர்யம்.

மண்ணக மார்பில்
மலர்ந்த நபியை
பச்சை ரோஜா என்றார்
தத்துவக் கவிஞர்.

வண்ணங்கள் வேறு
வாசம் ஒன்று.
எண்ணங்கள் வேறு
ஞானம் ஒன்று.

2 comments:

  1. சார், ரோஜா மலர்ந்து ரொம்ப‌ நாளாச்சு,
    எங்கே அடுத்த பதிவு.
    இன்னும் word verificationஐ எடுக்கவில்லையா

    ReplyDelete
  2. //வண்ணங்கள் வேறு
    வாசம் ஒன்று.
    எண்ணங்கள் வேறு
    ஞானம் ஒன்று.//

    ஆம்! உண்மை!

    ReplyDelete