Monday, October 17, 2011

சூஃபி ஹைகூ



கவிதை வடிவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது ஹைகூ. அது தியானத்தின் கவிதை. மனம் கரைந்த மௌனத்தில் இருந்து இவ்வளவு பேசுவதே அதிகம் என்பது போல் உள்ளது அதன் வடிவம். வெறும் மூன்று வரிகள். ஓரசைச்சீர்களாக பதினேழு சீர்கள் (5-7-5). (ஜப்பானிய இலக்கணத்தில் ஈரசைச் சீர்கள் கிடையாது. ஓரசையை அவர்கள் ’ஒன்’ என்று சொல்கிறார்கள்) 

ஜப்பானியர்களுக்கே சிறிய பொருட்களின் மீது ஒரு பிரியம் உண்டு. அவர்களைப் பொருத்த வரை அழகு என்பது சிறியதாக இருப்பதே. உலக மனிதர்களில் அவர்களே மிகவும் சிறிய மனிதர்களாக இருக்கிறார்கள். (சமீப காலமாக, அதாவது 250 வருடங்களாக அவர்களின் சராசரி உயரம் அதினைந்து செ.மீக்கள் அதிகரித்திருப்பதாக மரபியல் ஆய்வுகள் சொல்கின்றன.) 


போன்சாய் என்னும் தாவரக் கலையை உருவாக்கியவர்கள் ஜப்பானியர்கள். இயற்கையில் அஜானுபாகுவாக வளரும் விருட்சங்களை எல்லாம் மேசையில் வைத்து அழகு பார்க்கும் வகையில் ட்ரேக்களில் குள்ளமாக வளர்ப்பது இந்தக் கலை. இருபது வருடங்கள் ‘வளர்ந்த’ ஒரு ஆலமரம், கனிகள் கொண்டு விழுதுகளோடு நிற்கும் ஆலமரம், வெறும் இரண்டடி உயரமே இருக்கும்படிச் செய்துவிடுவார்கள்! போன்சாய் என்பது விருட்சங்களின் வாமன வடிவம்.

நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. உலக வரைபடத்தின் வலது கோடியில் இருப்பது ஜப்பான். அவர்கள் சிறிய பொருட்களில் அழகையும் தெய்வாம்சத்தையும் காண்கிறார்கள். சிறிய பொருட்கள் அவர்களுக்கு மிகவும் மேலானவை, மதிப்பிற்குரியவை. ஜப்பானில் உருக்கொண்டு வளர்ந்த ஜென் ஞான மரபே சிறியதில் பெரிது காண கற்றுத் தருகிறது. ஹைகூ கவிதை ஜென் ஞானிகளின் கருவியாகவே சிறப்படைந்தது.

ஆனால், இந்த மனநிலைக்கு நேர் எதிராக, உலக வரைபடத்தின் இடக்கோடியில் இருக்கும் அமெரிக்காவிற்கு எல்லாமே பெரிதாக இருக்க வேண்டும். பிரம்மாண்டம் என்பது அவர்களுக்கு அடிப்படையில் அளவு சார்ந்ததுதான். மற்ற அம்சங்கள் அதன் பிறகுதான். சிறிய பொருட்கள் அற்பமானவை என்று பார்க்கும் பார்வை அவர்களுடையது. இது ஒரு ஆதிக்க மனநிலையும்கூட.


ஜேம்ஸ் கேமரூன் ‘டைடானிக்’ திரைப்படத்தில் இந்த மனப்பான்மையை விமரிசித்திருப்பார். டைடானிக் கப்பலை உலகின் மிகப் பெரிய கப்பலாகக் கட்டிய வைட் ஸ்டார் லைன் நிறுவனத்தின் சேர்மனும் மானேஜிங் டைரக்டருமான ஜோசஃப் ப்ரூஸ் இஸ்மே என்பவரும் அக்கப்பலின் முதல் பயணத்தில் (இறுதிப் பயணமும் அதுவே!) இருக்கிறார். தன் கப்பலில் வரும் தனவந்தர்களுடன் உணவு மேஜையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் தன் பிரம்மாண்டமான கப்பலின் அருமை பெருமைகளை அடுக்கிக் கொண்டு போகிறார். அதன் மாபெரிய அளவே அதன் உறுதியையும் வசதியையும் பலத்தையும் காட்டுவதாகச் சொல்கிறார். அவரின் கருத்தை நக்கலடிக்கும் கதாநாயகி ரோஸ் தெ-விட் ப்யுகாட்டர், அந்தக் கருத்து ஆணின் உளவியல் சார்ந்தது என்று சொல்கிறாள்.

Molly Brown: [to the group who are dining at the same table] Hey, uh, who thought of the name Titanic? Was it you, Bruce?
Ismay: Yes, actually. I wanted to convey sheer size, and size means stability, luxury, and above all, strength.
Rose: Do you know of Dr. Freud, Mr. Ismay? His ideas about the male preoccupation with size might be of particular interest to you.

அருந்ததி ராய் எழுதிய “GOD OF SMALL THINGS” நாவல் 1997-ல் புக்கர் பரிசு வென்ற சமயத்தில் ஹிண்டு செய்தித்தாளில் அருமையானதொரு கார்டூன் வந்தது. ஒரு கிராமியத் தாய் தன் மடியில் கைக்குழந்தையை வைத்திருக்கிறாள். அவளைச் சுற்றிக் கிலுகிலுப்பை, அஞ்சறைப் பெட்டி போன்ற சிறு சிறு பொருட்கள் இருக்கின்றன. அப்படத்தின் மேலே இப்படி எழுதியிருந்தது: SMALL THINGS OF GOD. ஹைகூ கவிதை இதைப்போலத்தான். ஜென் ஞானிகள் கூழாங்கல், மூங்கில் இலை, பட்டாம்பூச்சி, பனித்துளி போன்ற சாதாரணமான சின்னஞ்சிறிய பொருட்களில் கடவுளின் அளவற்ற கருணை நிரம்பி வழிவதைப் பார்க்கச் சொல்கிறார்கள். அதைவிட என்ன பெரிய தியானத்தை ஒருவர் செய்துவிட முடியும்?

ஜப்பானில் வாழ்ந்த ஆர்.ஹெச்.ப்ளித் ஜென் பற்றியும் ஹைகூ பற்றியும் எழுதி மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து ஹைகூ கவிதை வடிவம் மேற்கில் மிகவும் சிலாகித்து எழுதப்பட்டு வருகிறது. (1973-ல் அமெரிக்க ஹைகூ கழகம் நிறுவப்பட்டது. உலகெங்கும் பலபேர் ஹைகூவிற்கென்றே தனியாக பத்திரிகைகளும் இணைய தளங்களும் நடத்தி வருகிறார்கள். இதில் சோஜி என்பவர் வைத்திருக்கும் ஹைகூ கவிஞனின் குடிசை (www.haikupoetshut.com) என்னும் வலைமனை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.)


ஹைகூ கவிதைக்குப் பல நூற்றாண்டு கால வரலாறு இருக்கிறது. ரெங்கா என்னும் கவிதை வடிவம் ரென்கு என்று ஆனது. அதன் ஆரம்பத்தில் சிறிய தொடுப்பாக வரும் கவிவரி ஹொக்கு எனப்பட்டது. இதுதான் பின்னர் தனித்து நின்று ஹைகூ என்றாயிற்று. ஆரம்பத்தில் இது ஹொக்கு என்றே அழைக்கப்பட்டு வந்தது. 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மசாவோகா ஷீகி என்னும் கவிஞர் இதற்கு ஹைகூ என்று பெயர் வைத்தார்.
ஹைகூவில் மூன்று முக்கியமான அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது மரபு. கிரு, ஒன் மற்றும் கிகோ என்பன. 
 மசவோகா ஷீகி 

’கிரு’ (வெட்டு) என்பது ஹைகூவில் தொடுப்பு மற்றும் முடிப்பாக இரண்டு நிலைகள் இருப்பதைக் குறிக்கிறது. முடிப்பில் ஒரு அதிர்ச்சி, ஒரு பன்ச் இருக்கவேண்டும். தொடுப்பு மிகச் சாதாரணமாக இருக்கும் என்றால் முடிப்பு எதிர்பாராத திருப்பத்தைத் தந்து ஹைகூவை ஒரு புதிய தளத்தில் வைத்துவிடும். இதற்கு வழி செய்யும் வகையில் தொடுப்பின் முடிவில் கிரேஜி (வெட்டுச்சொல்) ஒன்று இருக்கும். (நம் வெண்பாவில் தனிச்சொல் இருப்பதை இதனுடன் ஒப்பிடலாமா?)

ஒன் என்பது நேரசை. மூன்று வரி ஹைகூவில் 5-7-5 என்னும் கணக்கில் மொத்தம் பதினேழு ஒன்கள் இருக்க வேண்டும்.

கிகோ என்பது காலக் குறிப்பு. கார்காலம், கோடை காலம், வசந்தம் என்பது போல் ஏதேனும் ஒரு காலத்தை நேரடியாக அல்லது மறைமுகமாகச் சுட்டுகின்ற ஒரு சொல் ஹைகூவில் இருக்கும். (சங்கப் பாடல்களில் திணை பொழுது என்னும் கோட்பாடு இருப்பது போல்)


ஹைகூ மிகவும் சிறிதாக இருப்பதாலோ என்னவோ அதை வைத்துக் கொஞ்சம் அளவில் நீளமான சில இலக்கிய வடிவங்களும் தோன்றின. ஒரு சிறு உரைநடைப் பத்தியும் அதனுடன் சேர்ந்த ஹைகூவும் ‘ஹைபுன்’. ஹைகூவை அதற்குத் தோதான ஓவியம் அல்லது படத்துடன் முன்வைப்பது ’ஹைகா’. பொதுவாக ஜென் நெறி பேணப்படும் ஜப்பானிய இல்லங்களின் வரவேற்பறைகளில் ஒரு ஹைகா இருக்கும். அதன் கீழே ’இகெபானா’ என்னும் மலர்/புல்/மர வேலைப்பாடும் இருக்கலாம். அதன் முன் உள்ள பாயில் விருந்தினரை அமர வைத்துப் பச்சைத் தேநீர் பருகக் கொடுப்பார்கள்.

ஆங்கிலத்தில் ஹைகூக்கள் எழுதப்படும் போது மேற்காணும் அம்சங்களைப் பேணுவதற்குப் பிரயத்தனப் படுவதில்லை. ஆனால், ஜென் வகை தியானத்தில் ஓரளவு அனுபவம் பெற்ற பின் அந்த அனுபவம் பிரதிபலிக்குமாறு எழுதுகிறார்கள். ஜப்பானிலேயே ஹைகூவின் மரபான அம்சங்கள் மறைந்துவிட்டன. நவீன ஹைகூ நெகிழ் தன்மையுடன் உள்ளது. ஹைடெக் என்று பெயரை மாற்றிவிட்டாலும் பொருத்தமாக இருக்கும். ஹைகூவில் இருந்து சென்றியு என்னும் வடிவம் தோன்றி சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிறது.

தமிழிலும் ஹைகூ என்னும் சொல் மிகப் பிரபலமாகிவிட்டது. தினத்தந்தி இணைப்பிலும் முத்தாரம் பாக்யா போன்ற இதழ்களிலும்கூட இடம்பெறுகிறது. ஆனால் இங்கே ஹைகூ என்னும் பெயரில் அச்சேறும் துக்கடாக்களை உண்மையான ஹைகூ பார்த்தால் மாரடைப்பில் செத்துவிடும். ’ஹைகூ மூன்று வரி’ என்னும் வரையறை மட்டும் நமக்குப் போதும்; நாம் கிறுக்கித் தள்ளுவதெல்லாம் ஹைகூ ஆகிவிடும் என்று ஒரு மனப்பான்மை நமக்கு. சில கொடும் புலவர்கள் ஹைகூ என்னும் சொல்லையே தமிழாக்க நினைத்து அதை ஐக்கூ, குக்கூ என்றெல்லாம் சொல்லி வருகிறார்கள். ’ஹைகூ ஓர் எளிய அறிமுகம்’ என்று சுஜாதா நூல் எழுதிப் பார்த்தார். அதைப் படித்துவிட்டாவது ஹைகூ எழுத முற்படலாம். யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. பேராசிரியை.கவிஞர்.மித்ரா தொடர்ந்து ஹைகூ வடிவத்திலேயே சாதகம் நிகழ்த்திக் கொண்டிருந்தார் என்பது ஆறுதலான விஷயம்.

ஹைகூ அடிப்படயில் தியானத்தின் கவிதையாக இருப்பதால் தியானத்தின் சுவையை அறிந்த எவரும் ஹைகூ எழுதினால் நன்றாக வரும் வாய்ப்புண்டு. மட்டுமல்ல, எந்த தியான மரபின் வெளிப்பாட்டிற்கும் ஹைகூவைக் கையாண்டுப் பார்க்கலாம். அவ்வகையில் ஜென் ஹைகூ போல் யோகா ஹைகூ, சூஃபி ஹைகூ என்று உருவாக முடியும். சென்னையில் வசிக்கும் பேராசிரியர் சஜ்ஜாத் புகாரி ”பேசும் விரல்கள்” என்று ஒரு ஹைகூ நூல் வெளியிட்டார். அவை இஸ்லாமிய ஹைகூ என்னும் சோதனை முயற்சி. அந்நூல் நா.காமராசனின் முன்னுரையுடன் வெளிவந்தது. ஆனால் அது எனக்குத் திருப்தியைத் தரவில்லை. புகாரியின் தாய்மொழி உருது என்பதால் அவரின் தமிழ் உருதுவின் மொழிபெயர்ப்பாகவே பதிவாகி இருப்பது போன்ற உணர்வைத் தந்தது.

சூஃபி ஹைகூ என்னும் பெயருக்கு நியாயம் சேர்க்கும் ஹைகூக்கள் எழுதியிருக்கிறார் ஒருவர். அவர் பெயர் ஹம்ஸா பீட்டர் வெய்ஸ்மில்லர் (Hamza Peter Weismiller). இவரின் சூஃபி ஹைகூக்களை அமெரிக்காவில் வசிக்கும் சூஃபி குரு ஷெரீஃப் பாபாவின் வலைத்தளத்தில் படித்தேன். (ஷெரீஃப் பாபா பற்றி அப்புறம் சொல்கிறேன்). ஹம்ஸா பீட்டர் வெய்ஸ்மில்லர் ஒரு கவிஞர் அல்ல. அவர் ஒரு ருத்ர வீணைக் கலைஞர்!


கலிஃபோர்னியாவில் க்ளேர்மாண்ட் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்த ஹம்ஸா பீ.வெ, 1969-ல் மும்பை வந்தபோது முதன்முதலாக பீன் என்று சொல்லப்படும் ருத்ர வீணை வாசிப்பைக் கேட்டார். முஹம்மது கான் ஃபரீதி தேசாய் என்பவரின் சிஷ்யரான ஸ்ரீ பி.டி.ஷாஹ் என்பவர் செய்த கச்சேரி அது. ஹம்ஸா பீ.வெ அக்கணமே இந்திய இசை மீது காதல் வயப்பட்டார். 1971-ல் கலிஃபோர்னியாவில் ஸ்ரீ பி.டி.ஷாஹ்விடம் ஒன்பது மாதங்களில் ருத்ர வீணை வாசிக்கக் கற்றார். 1972-ல் இருந்து கலிஃபோர்னியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்ட்ஸ்-ல் முதலிலும், கனெக்டிகட் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் அடுத்தும் டி.விஸ்வநாதன் மற்றும் டி.ரங்கநாதன் ஆகியோரிடம் கர்நாடக இசை பயின்றார். 1977-ல் வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் இசையில் பி.ஏ பட்டம் பெற்றார். பின்னர் 1979-ல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் இனக்குழு இசையியலில் எம்.ஏ பயின்றபோது உஸ்தாத் மொஹியுத்தீன் கான் தாகரிடம் மீண்டும் ருத்ர வீணை பயின்றார். பின்னர் சியாட்டில் நார்த்வெஸ்ட் பள்ளியில் ஹ்யூமனிடீஸ் பயிற்றுவித்தார். தற்போது சாண்டா பார்பராவில் தன் அம்மாவுடன் வசிக்கிறார். கிதார் சொல்லிக் கொடுக்கிறார். 


சூஃபித்துவத்தில் அவரின் ஈடுபாடு ஹஸ்ரத் இனாயத் கான் அவர்களின் வழியே வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 1910 முதல் 1926 வரை பயணம் செய்து சூஃபித்துவத்தைப் பரப்பிய ஹஸ்ரத் இனாயத் கான் சிஷ்தி அவர்கள் ஒரு சிறந்த ருத்ர வீணைக் கலைஞராக விளங்கினார்கள். ஆரம்பத்தில் வீணை வாசிப்பும் செய்துகொண்டே பிரசங்கமும் செய்து வந்தார்கள். பின்னர் வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டார்கள். இசையின் ஆன்மிகப் பரிமாணம் பற்றி அவர்கள் பேசியவை அவரது போதனைத் தொகுப்பின் இரண்டாம் பாகமாக “THE MYSTICISM OF SOUND AND MUSIC” என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. வீணை வாசிப்பதை ஏன் நிறுத்தி விட்டீர்கள் என்னும் கேள்விக்கு அதில் அவர்கள் சொல்லியுள்ள அருமையான பதில்: “ஒவ்வொரு பக்தனும் தன் மனதிற்கு மிகவும் பிடித்த ஒன்றை இறைவனுக்காகத் துறக்க வேண்டும். எனக்கு இசையே மிகவும் பிரியமானது. எனவே நான் இசையைத் துறந்து விட்டேன்.”

ஹம்ஸா பீட்டர் வெய்ஸ்மில்லரின் சில அழகிய சூஃபி ஹைகூக்களை அடியேனால் முடிந்த படிக்கு இங்கே தமிழில் தருகிறேன். (சில ஹைகூக்களுக்கு தோதான படம் இணைத்து அதை ஹைகா ஆக்கியிருக்கிறேன்.):

நீரின் சுவை வேறுபடலாம்
ஒவ்வொரு ஊற்றிலும்…
தாகம் ஒன்றுதான்.

என்னதான் இருக்கக்கூடும்
ஞானிக்கு உள்ளே
ஆனால் மனிதனுக்கு அப்பால்?


காற்றை மோப்பமிடும் நாய்போல்
நான் உன்னை உணரும்
ஐந்து நிமிடங்கள் தா.

ஆயிரம் முகங்களில் தேடினேன்
என் பிரதிபலிப்பை
உன் முகமே கண்டேன்.

கலங்கிய குட்டைக்குப்
பழகிய மீன் உதறுகிறது
தெளிந்த நீருக்கு வரும்போது.

உன் பழைய கிணற்றில்
இன்னமும் துக்கமே இரைக்கிறாய் எனில்
மேலும் ஆழமாக்கு.

எங்கும் நிறைந்த நுட்பம்
கனிமம் போல் ரகசியமாய்
சுடர் போல் மென்மையாய்

முத்துச் சிப்பிகள்
தேடத் தேவையில்லை
மணல் திட்டுகளை


பூங்காவை அனுபவி
பறவைகள் உனக்காகப்
பாடாமல் போனாலும்.

ஜமால் ஜலால்: ஒவ்வொன்றும்
மற்றதன் மதுவிற்கான
காலிக் கோப்பை.
(ஜலால்- வல்லமை, ஜமால்- அழகு)


வானத்தை விட்டும்
கரையே தன்னைப் பிரிப்பதாய்
நினைக்கிறது கடல்

குளத்தில் கல்லெறிகிறேன்
கடலில் சேர்கின்றன நீரலைகள்
தொழுகை



தேங்கிக் கிடக்க விரும்பினால்
அழகை மட்டுமே காட்டும்
கண்ணாடியைத் தேடு

முகந்து பார்க்காதே
ஒருபோதும்
மனம் புகைகிறது.

ஞானம் அடைதல்:
சுவர்களுக்கு அப்பால் மலரும்
ரோஜாக்களை முகர்கிறேன்…

மதுவைப் பற்றிய
உன் அறிவு
போதையைத் தருவதில்லை.

உடல் மனம் இறைவன்
மெழுகு திரி சுடர்
இடைப்பொருள் வீணா?

விளையாடும் குழந்தையைப் பார்த்து
நாம் சிரிக்கின்றோம்
வானவர்கள் நம்மைப் பார்த்து.

நாமும் சூஃபி ஹைகூ எழுதிப் பார்த்தால் என்ன என்று நினைத்தேன். இப்படித் தோன்றியது:
சூஃபி ஹைகூவின்
மூன்று வரிகள்
அனா, ஃபனா, பகா.

அனா ஃபனா பகா என்பவை சூஃபித்துவக் கலைச்சொற்கள். இவற்றின் அர்த்தம் என்ன என்று கேட்கிறீர்களா? அதைச் சொன்னால் இது ஒரு யோகா ஹைகூ ஆகிவிடும், பாருங்கள்:
யோகா ஹைகூவின்
மூன்று வரிகள்
அஹம் நிர்வாணம் சமாதி.


5 comments:

  1. http://abdulqaiyum.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/

    ReplyDelete
  2. ஹைகூ வில் இவ்வளவு விஷயம் அடங்கியிருக்கா.
    சுருங்கச் சொல்லி நச்சுன்னு விளங்க வைப்பதால்
    இக்கவிதை வடிவம் எனக்கு ரொம்ப பிடித்தது.

    ReplyDelete
  3. ///விளையாடும் குழந்தையைப் பார்த்து
    நாம் சிரிக்கின்றோம்
    வானவர்கள் நம்மைப் பார்த்து.///

    வானவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்களா? சிரிக்கிறார்கள் என்றால் குழந்தையைப் பார்த்து நாம் சிரிக்கிற அதே மன நிலையிலா? நாம் அவர்களின்
    குழந்தைகள் என்றா?

    ReplyDelete
  4. மிக அருமையான, மிகவும் ரசித்து படித்த பதிவு...
    அருமை... நண்பரே...

    ReplyDelete