Sunday, October 2, 2011

4 உறிஞ் தேநீர்


(இக்கவிதையில் உள்ள நான்கு காட்சிகளும் ஒரு மழைக்கால அதிகாலை என் மனதில் தூவிய காட்சிகள். 'உறிஞ்' என்பது உறிஞ்சு என்று நாம் இன்று புழங்கும் சொல்தான். இது தொல்காப்பியர் காலத்து வடிவம். சொல்ல அழகாக இருப்பதாய் உணர்கிறேன்.) 



இலைகள் இல்லாக்
கிளையொன்றைச் சுற்றிக்
கவிந்த விண்ணில்
அமர்ந்ததொரு குருவியின்
ஒலிக் குறிப்புக்களும்

கூரையோட்டின்
விளிம்பில் நகர்ந்து
தேங்கும் நீரில் சொட்டும்
துளிக் குறிப்புக்களும்

நுழைந்து அப்பால்
சென்றபடியுள்ளன
மௌனமாய் மலர்ந்துள்ள
மனதில்.
~~~


தேங்கிய மழைநீரில்
படிக்கற்கள் அமைக்கும்
சிறுவனின் கண்களில்
பிரதிபலிக்கின்றது
தேங்கிய மழைநீரில்
ததும்பி அசையும்
வானம்.
~~~


காற்றில் அசைகின்றன
ஈர இலைகள்
சூரியனைக் காட்டுகையில்
தம்மை மறைத்தும்
காட்டாதபோது
தம்மைக் காட்டியும்.
~~~


பெருமரக் கொப்புகளில்
இரவின் துளிகள் கனிந்தன்ன
நாவற்பழங்கள்
காற்றசைவில் உதிர்ந்து
மண்ணில் சிதைவுறும்
ஏழைமைப் பட்ட கனவுகளாய்.

~~~~~~~~~~~









No comments:

Post a Comment