Wednesday, September 28, 2011

உள்முகக் காலம் (தொடர்ச்சி #1)



கப்பாலா மரபு யூத மதத்தில் உள்ள ஆன்மிக நெறி எனலாம். இஸ்லாத்தில் சூஃபித்துவம், பௌத்தத்தில் ஜென், இந்து மதத்தில் யோகம் போல. இந்த ஒப்பீடுகள் துல்லியமானவை அல்ல என்றாலும் ஒரு பொதுப்பார்வைக்கு இப்படிச் சொல்லலாம். எல்லா ஆன்மிக நெறிகளையும் போலவே கப்பாலாவிற்கும் அதன் சாதகர்களுக்கே உரியதும் பிறர் அறியாமல் மூடலாகப் பேணப்படுவதுமான ரகசியங்கள் உண்டு. கப்பாலா நெறியிலும் காலப்போக்கில் பல கிளைகள் தோன்றின. அதில் ஒன்றான ’ஹஸ்ஸித்’ என்னும் வழிமுறை பற்றி ஓஷோ மிகவும் சிலாகித்துப் பேசியுள்ளார்.

கப்பாலா நெறி ஹீப்ரு மொழியில் அமைந்த மந்திரங்களையே பயன்படுத்துகிறது. இறைத்தூதர் மூஸா (அலை) (MOSES) பேசிய ஹீப்ரு மொழி, ஈசா (அலை) (JESUS) பேசிய அரமைக் மொழியுடனும் நபிகள் நாயகம் (ஸல்) பேசிய அரபி மொழியுடனும் நெருங்கிய தொடர்புடையது. இம்மூன்று மொழிகளும் சகோதரிகள்தான். மலையாளத்தில் எப்படி பல சொற்கள் தமிழாகவே இருக்கின்றனவோ அதைப் போல் இம்மொழிகளுக்குப் பொதுவான சொற்கள் பல உண்டு.


ஹீப்ரு மொழியின் முதல் எழுத்தும் அலிஃப்தான். ஆங்கிலத்தில் எழுதும்போது அது ALEPH என்று எழுதப் படுகிறது. போர்ஹேயின் நாவல் பதிப்புகள் சிலவற்றில் இது EL ALEPH என்பதாக உள்ளது. ’எல்’ என்பது ஆங்கிலத்தில் THE என்பதாக வரும் definite article ஆகும். அரபி மொழியில் இது ’அல்’ என்று வருகிறது. இவ்வளவுதான் வேறுபாடு. 



இதைச் சொல்லும்போது பாப் இசைக்கலைஞி மடோனாவின் CONFESSIONS ON THE DANCE FLOOR என்னும் இசைக்கோப்பில் உள்ள ‘ஐசாக்’ (ISAAC) என்னும் பாடல் ஞாபகம் வந்தது. அது ஓர் ஆன்மிகப் பாடல். அதன் ஆரம்பத்திலும் இடையிலும் ஹீப்ரு மொழியில் அமைந்த மந்திர வரிகள் இடம்பெறுகின்றன. (டிசம்பர் 1997-இல் மடோனா ‘கப்பாலா’ நெறியில் இணைந்துவிட்டதாகச் செய்திகள் வந்தன. CONFESSIONS ON THE DANCE FLOOR ஆல்பம் நவம்பர் 2005-இல் வெளிவந்தது.) ”இம் நிஃனாலு” (கதவுகள் தாழிட்டிருந்தால்…) என்று தொடங்கும் இந்த ஹீப்ரு வரிகள் யமன் தேசத்து ரப்பி ஷலோம் ஷாபாஸி என்பவரின் பாடலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. அப்பாடலை ஏற்கனவே ஹீப்ரு பாடகி ஒஃப்ரா ஹாஸா (OFRAH HAZA) முழுமையாகப் பாடியிருக்கிறார். பாடலின் இடையே வரும் ஹீப்ரு மந்திர வரிகள் இறைவனைப் புகழ்வதாக அமைந்துள்ளன.
“எல்-ஹய்ய் மருமம் அல் கெருவிம்
குல்லம் ப-ரூஹோ யஃஅலு”
’இறைவன் உயிருள்ளவன், வானவர்கள் மீது உயர்ந்திருப்பவன்
ஒவ்வொன்றும் அவனது ஆத்மாவில் உயரும்”
என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

இந்த ஹீப்ரு மந்திரத்தில் உள்ள சில வார்த்தைகள் அப்படியே அரபியிலும் வருவதைக் காணலாம். இறைவனை ‘எல்-ஹய்ய்’ என்று ஹீப்ருவில் சொல்வதுதான் அரபியில் ‘அல்-ஹய்யு’ என்று வருகிறது. அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் என்று திருக்குர்ஆன் குறிப்பிடும் நாமங்களுள் இதுவும் ஒன்று. மீது என்பது ஹீப்ருவில் ‘அல்’ என்று வந்திருப்பதுதான் அரபியில் ’அலா’ என்று வரும். ஹீப்ருவில் குல்லம் என்பது அரபியில் குல் என்று வரும். ஆத்மா என்பதற்கு ஹீப்ருவிலும் அரபியிலும் ‘ரூஹ்’ என்றே சொல்லப்படுகிறது. ‘வானவர்கள் மீது உயர்ந்திருப்பவன்’ என்பது வானவர்கள் பற்றிய பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை நினைவூட்டுகின்றது:

“அர்ஷை சுமந்து கொண்டிருப்பவர்களும், அதைச் சுற்றியுள்ளவர்களும் தங்கள் இறைவனின் புகழைக் கொண்டு அவனை தியானிக்கின்றார்கள்” (40:7)
“இன்னும் வானவர்கள் அதன் (வானம்) கோடியில் இருப்பார்கள். அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை எட்டுப்பேர் (வானவர்) சுமந்து கொண்டிருப்பார்கள்” (69:17)

“ஒவ்வொன்றும் அவனது ஆத்மாவில் உயரும்” என்னும் வரி பின்வரும் திருக்குர்ஆன் வசனக் கருத்தியலைப் பிரதிபலிக்கிறது என்று காணலாம்:
“நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது” (5:48)
“ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும்.” (32:5)



இப்போது நம் கவனத்தை இக்கட்டுரையின் தொடக்கத்தில் நாம் குறிப்பிட்டுள்ள, காலம் பற்றிய போர்ஹேயின் மூன்று அவதானங்களின் பக்கம் திருப்புவோம். அதில் முதல் அவதானம்: “மனிதக் கால அளவும், கடவுளின் கால அளவும் மாறுபட்டவை.”
இந்த விஷயமே மனித மொழியில் விளக்குவதற்கு மிகவும் சிரமமான ஒன்றுதான். நாம் அனுபவிக்கும் தொடர்நிலைக் காலத்தைதான் (SERIAL TIME) நாம் அறிவோம். இறைவனின் காலக் கணக்கை நாம் எப்படி அறியமுடியும்? எனவே அவனது காலக் கணக்கை நாம் நம் காலக் கணக்கின்படியேதான் அறிய வேண்டியிருக்கிறது. இது பற்றிக் கோடி காட்டும் திருக்குர்ஆன் வசனங்கள் நம் முன் நிற்கின்றன.

“ஒருநாள் வானவர்களும் அந்த ஆன்மாவும் இறைவனிடம் ஏறிச் செல்வார்கள். அந்த நாளின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இருக்கும்.” (70:4)
அதாவது இறைவனின் ஒருநாள் = 50000 பூமி ஆண்டுகள்.

”உம்முடைய இறைவனின் ஓர் ஆண்டு என்பது நீங்கள் கணக்கிடுகின்ற ஆயிரம் ஆண்டுகள் போன்றது” (22:47)
“ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த நாளின் அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்” (32:5)
அதாவது இறைவனின் ஒருநாள் = 1000 பூமி ஆண்டுகள்.

இவ்வசனங்களின் படி 1000 பூமி ஆண்டுகள் என்பதும் 50000 பூமி ஆண்டுகள் என்பதும் இறைவனின் பார்வையில் சமம்தான் என்றாகிறது. ஏனெனில் மனிதன் உணரும் காலக் கணக்கிற்கு அப்பாற்பட்டவன் இறைவன். அவனுடைய காலக் கணக்கு என்ன என்பதை நாம் இப்படித்தான் குருடர்கள் யானையைப் பார்த்ததுபோல் மட்டுமே யூகிக்க முடியும்.

இனி, போர்ஹேயின் இரண்டாம் அவதானத்தைப் பார்ப்போம்:
”காலத்தின் ஒரு துளிக்குள் ஒரு வாரம், ஒரு வருடம், முடிவற்ற ஆண்டுகள் எல்லாமும் ஒளிந்துள்ளன.”

(to be continued...)

1 comment:

  1. //“நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது” (5:48)
    “ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும்.” (32:5)//

    சத்தியமான வார்த்தை.
    நன்றி!

    ReplyDelete