மனங்களில் மயிலிறகால் மருந்து தடவிய மந்திரக் குரல் மௌனமாகி மறைந்துவிட்டது.
இனி, நூல்களிலும் இசைப் பேழைகளிலும் இதர குறிப்புக்களிலும் ‘ஜக்தீத் சிங் 8.2.1941 – 10.10.2011’ என்று எழுதப்படும். ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் என்னும் ஊரில் பிறந்த, பஞ்சாபியைத் தாய் மொழியாகக் கொண்ட இந்த உருது கஸல் பாடகரின் ஐம்பதாண்டு காலக் கலை வாழ்வு அந்த ஒற்றைவரிக் குறிப்பாக ஒடுங்கிப் போகும். வரலாற்றில் தனிமனித வாழ்வின் தடங்கள்தான் எவ்வளவு சுருங்கி விடுகின்றன.
நான் கஸல் ரசிகன். கஸல் பாடல்களால் என்னைக் கவர்ந்த கலைஞர்கள் பலர். அவர்களின் பட்டியலில் நான் முதலிடத்தில் வைத்திருக்கும் பெயர் ஜக்ஜீத் சிங். மெஹ்தி ஹசன், குலாம் அலி, ஹரிஹரன், தலத் அஸீஸ், அனூப் ஜலோத்தா போன்றவர்களின் பெயர்கள் அவருக்குப் பின்னேதான்.
ஜக்ஜீத் சிங் இறந்த செய்தியை நேற்றைய (11.10.11) தினத்தந்தியைப் பார்த்துத்தான் அறிந்துகொண்டேன். அதுவே ஒரு ஐரணி. ஒரு சராசரி தினத்தந்தி வாசகனுக்கு ஜக்ஜீத் சிங் யார் என்று என்ன தெரியும்? பிரபல கஜல் பாடகர் என்று வேறு செய்தித் தலைப்பில் போட்டிருந்தார்கள். கஸல் என்றால் என்ன என்று, தினத்தந்தி வாசகன் அறிவானா? தினத்தந்தி பட்டி தொட்டியில் எல்லாம் தமிழ் பரப்பும் ஒரே நாளிதழாமே? அதை கிராமங்களின் டீக்கடை பெஞ்சுகளில் அமர்ந்து பாமரத் தமிழர்கள் படித்துப் படித்து உலகறிவார்களாமே? அந்த டீக்கடைகளின் ரேடியோ பெட்டிகளில் எம்ஜியார்- சிவாஜி – ரஜினி – கமல் பாடல்கள் ஒலித்திருக்கக் கூடும். ஜக்ஜீத் சிங்கின் கஸல் என்றைக்காவது ஒலித்திருக்குமா? வாய்ப்பே இல்லை. (ஒலிக்க வேண்டும் என்பது நியாயமும் அல்லவே?). எனில் தினத்தந்தியால் உலகறியும் வாசகனுக்கு இந்த ஜக்ஜீத் சிங் என்பவர்தான் யார்? ‘பிரபல கஜல் பாடகர்’! அதற்கு ஆதாரம், பிரதமர் மன்மோகன் சிங் சென்று அஞ்சலி செலுத்தி அவரைப் பற்றி நாலு நல்ல வார்த்தை கூறியிருக்கிறார் என்பது. சரி, ‘கஜல்’ என்பதென்ன? செய்தியைப் பார்த்தால் தெரியவில்லையா, அது மன்மோகன் சிங் ரசிக்கும் ஒருவித இசை! வாழ்க பாரத மணித்திருநாடு!
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் தஞ்சாவூரின் பர்மா பஜாரில் உள்ள இசைக் கடைகளில் ஜக்ஜீத் சிங்கின் ஆல்பங்களைத் தேடியலைந்தேன். ஒரு கடைக்காரருக்கு நான் என்ன கேட்கிறேன் என்றே தெரியவில்லை. ஜக்ஜீத் சிங் என்னும் பெயரே அவரின் வாயில் படியவில்லை. “என்ன ஜக்ஜீ-ஜிங்கா?” என்று ஏதோ சீன மொழிப் பெயரைக் கேட்பது போல கேட்டார். கடையில் வேலை செய்யும் ஒரு சிறுவனை அழைத்து அப்படியே சொன்னார். அவன் சட்டென்று, “ஒரு பாலைவனத்துக்கு முன்னால ஒக்காந்து கைய நீட்டிப் பாடிக்கிட்டிருப்பானே கண்ணாடி போட்டுக்கிட்டு, அவன்தான்” என்றான். பாடிக்கிட்டிருப்பானேவாம்..அவன்தானாம். ஒரு கஸல் கலைஞனின் கற்பூர வாசனையை நான் அங்கெல்லாம் எதிர்பார்த்தது தப்புதான்.
ஆனால் எனக்கு ஜக்ஜீத் சிங் என்பவர் வெறும் ஒருவரிச் செய்தி அல்ல. அவர் மறைந்து போன செய்தியைப் பார்த்ததிலிருந்து, என் மனம் மீண்டும் மீண்டும் இறந்த கால நினைவுகளின் அடுக்குகளுக்குள் தாவித் தாவி அவரைப் பல சந்தர்ப்பங்களில் முகத்தோடு முகம் பார்க்க முனைந்து கொண்டிருந்தது. முகத்தோடு முகம் என்றா சொல்கிறேன்? என்ன சொல்வது நான், இப்படி வார்த்தைகள் வந்து விழுவதை? “FACE TO FACE” – ஜக்ஜீத் சிங்கின் எண்பது ஆல்பங்களில் எனக்கு மிகவும் பிடித்த கஸல் ஆல்பத்தின் பெயர். ஜக்ஜீத் சிங்கின் முகத்தோற்றத்தை நான் கவிக்கோ அப்துல் ரகுமானின் முகத்துடன் ஒப்பிடுவதுண்டு. இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் போல் எனக்குத் தெரிகிறார்கள். நான் முதுகலை படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் கல்லூரிக்கு அப்துல் ரகுமான் வந்தார். அவருடன் ‘சங்கம்’ ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறையில் பேசிக்கொண்டிருக்க வாய்ப்புக் கிடைத்தது. அவருக்கு ஏதாவதொரு அன்பளிப்பு தரவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு இந்த “FACE TO FACE” ஆல்பத்தைதான் தெரிவு செய்தேன். ஸ்டார்டஸ்ட்டோ ஃப்ளிம்ஃபேரோ ஏதோ ஒரு பத்திரிகையில் இருந்து எடுத்த, ஜக்ஜீத் சிங் தன் கையில் ஒரு வெண்புறாவை வைத்திருக்கும் புகைப்படத்தை அந்த ஆல்பக் கூட்டின் உள்பக்கத்தில் ஒட்டி அப்துல் ரகுமானுக்குக் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவர், ‘அட நம்மாளு’ என்று சொல்லி சூட்கேஸில் வைத்துக்கொண்டார்.
ஜக்ஜீத் சிங்கை எனக்கு அறிமுகம் செய்தவன் என நண்பன் அஸ்லம். அப்போது நான் நுஸ்ரத் ஃபதேஹ் அலி ஃகானின் சூஃபிக் கவ்வாலி இசையில் மூழ்கியிருந்த நேரம். ’கவ்வாலி கேட்கும் நீ கஸலும் கேட்கக்கடவது’ என்று அவன் ஒருநாள் தன் வீட்டில் ஜக்ஜீத் சிங்கின் ”SOMEONE SOMEWHERE” (1990-ல் வெளிவந்தது) என்னும் ஆல்பத்தைக் கேட்கச் செய்தான். நான் ரசிக்கும் இசைகளில் கஸல் வடிவம் இடம்பெற்றது இப்படித்தான்.
இந்த ஆல்பம் ஜக்ஜீத் சிங்கின் வாழ்விலும் முக்கியமான ஒன்று. 28.07.1990-ல் அவருடைய ஒரே மகனான விவேக் சிங் (வயது 21) சாலை விபத்தில் இறந்து போனான். அந்தத் தருணத்தில் வெளியிடப்பட்டதுதான் ”SOMEONE SOMEWHERE”. உண்மையில் ஜக்ஜீத் சிங் புகழடைந்தது தனிப்பாடகராக அல்ல. 1967-ல் அவர் சித்ரா என்னும் கஸல் பாடகியைச் சந்தித்தார். டிசம்பர் 1969-ல் அவர்களின் காதல் திருமணம். 1976-ல் அவருடைய முதல் இசைப்பேழை “THE UNFORGETABLES” வெளிவந்தது. அதன்பின் அவர் வெளியிட்ட இசைப்பேழைகளில் எல்லாம் அவரும் சித்ரா சிங்கும் கஸல்களை ‘டூயட்’டாகத்தான் பாடியிருந்தார்கள். விவேக் சிங் இறந்தபின் சித்ரா பாடுவதை நிறுத்திவிட்டார். இப்போது ஜக்ஜித் சிங் மறைந்துவிட்ட நிலையில் அவர் ‘உயிரோடு’ இருக்கிறார். ஜக்ஜீத்தாவது தொடர்ந்து பாடினார். இருபத்தோரு வருடங்கள் பாடாமலேயே இருந்துவிட்ட ஒரு பாடகி இனித் தனிமையின் துயரையும் சுமந்துகொண்டு மௌனமாக இருக்க வேண்டும்! (இந்த வேதனையை ஆஷா போஸ்லே தன் இரங்கல் செய்தியில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.)
1991-ல் வெளியான “HOPE” என்னும் கஸல் ஆல்பத்தை அவர் தன் மகனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். உண்மையில், தன் ஒரே மகனின் பிரிவுக்குப் பிறகு அவருடைய இசை ஆளுமையில் ஒரு மாற்றம் நிகழ்ந்துவிட்டதை அதற்குப் பின் அவர் வெளியிட்ட ஆல்பங்கள் காட்டுகின்றன. அவை வாழ்வின் புதிர்-முடிச்சுக்களை அவிழ்க்க முனையும் நிதானமான விரல்களாக இயங்கின. அவற்றில் தத்துவத்தின் ஒளி-நிழல் விழுந்திருந்தது. இயற்கையிலேயே மென்மையான அவரின் குரலில் இப்போது ஞானத்தின் சாயை தெரிந்தது. அது இதயங்களை இன்னும் ஆழமாக ஊடுறுவும் தன்மை கொண்டுவிட்டது.
ஜக்ஜீத் சிங்கின் கண்களில் அதிகாலையின் நிற்சலனம் போன்ற ஒரு மௌனத் தெளிவு இருப்பதை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். அது ஞானியின் கண்கள் அல்ல. ஆனால், வாழ்வின் பாதையில் ஞானத்தை எதிர்நோக்கிச் செல்லும் ஒரு கலைஞனின் கண்கள். நிச்சயமாக அது ஒரு வணிகக் கலைஞனுக்கு வாய்க்காது. (அவர் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தார் என்பது வேறு விஷயம். பொதுவாகப் பஞ்சாபிப் பாடகர்களின் குரல் மூக்கொலி தன்மை கொண்டதாக இருக்கும். ஆனால் ஜக்ஜீத்தின் குரல் கழுத்தில் ஆன்மாவை வைத்திருந்த ஒன்று. தலேர் மெஹந்தியின் ‘பாங்க்ரா’ குரல் போல் கலவரம் செய்வதல்ல அது. ஹன்ஸ் ராஜ் ஹன்ஸின் குரல் போல் கொண்டாட்டம் செய்வதல்ல. குருதாஸ் மன், சுக்விந்தர் சிங் போன்றோரின் குரல் போல் விளையாட்டு காட்டுவதல்ல. ஜக்ஜீத் சிங்கின் குரல் தியானம்.)
அவருடைய கண்களின் நிற்சலனத் தன்மையை என் நெருங்கிய நண்பன் அஸ்லமின் கண்களிலும் கண்டிருக்கிறேன். அவனுடைய மனம் அவரின் குரல் போன்றுதான் இருக்கும் என்று நான் எண்ணிக்கொள்வதுண்டு. என் கல்லூரி காலத்தில் இறைவன் தந்த அந்த அர்த்தமுள்ள நட்பின் அடையாளங்களுள் ஜக்ஜீத் சிங்கின் கஸல்களும் ஒன்று. நானும் அஸ்லமும் பிறந்தது 1976-ல், ஜக்ஜீத் சிங் தன் முதல் ஆல்பத்தை வெளியிட்ட வருடம். அஸ்லம் பிறந்தது பாக்தாதில். அவனது தந்தை அப்போது இராக்கில் பணியாற்றினார். பிறகு துபையிலும் பணியாற்றியிருக்கிறார். துபையில் வெளியிடப்பட்ட ஜக்ஜீத் சிங் ஆல்பங்களின் ஒரு செட் அவரிடம் இருந்தது. (அவரே உருதுவில் பல பைத்துகள் சொந்தமாக எழுதி வைத்திருந்தார். பாடவும் செய்வார்.) அதைத்தான் நான் அஸ்லம் வீட்டில் அவ்வப்போது கேட்டிருக்கிறேன்.
ஜக்ஜீத் சிங்கின் சாதனை என்று இரண்டைச் சொல்கிறார்கள். இந்தியாவில் கஸல் பாடல்களைப் பாமரனும் – அதாவது இந்தி அறிந்த சராசரி மனிதனும் – ரசிக்கும்படிச் செய்தது ஒரு சாதனை. ஹிந்துஸ்தானி மரபிசை அடிப்படையில் ராகங்களின் மோஸ்தரில் இருந்த கஸலை அவர் ஒரு மெல்லிசைப் பாடலாக ஒலிக்கச் செய்ததன் மூலம் கஸலுக்கு ஒரு புதிய வடிவத்தைக் கொடுத்துவிட்டார் என்பது மற்றொன்று. ஆரம்ப காலங்களில் இவை இரண்டுமே விமரிசகர்களால் நிராகரிக்கப்பட்ட போதும் காலத்தின் அங்கீகாரம் பெற்று அவை தமக்குரிய இடத்தை அடைந்துகொண்டன. நதி ஒன்று தன் பாதையைத் தானே உருவாக்கிக் கொள்வது போல் இது நடந்துவிட்டது. இனி அதை திசை திருப்ப முடியாது.
முதல் சாதனைக்காக – சராசரி மனிதன் ரசிக்கும்படி கஸலை மாற்ற – ஜக்ஜீத் சிங் மிக எளிமையான சொல்லாடலும் பாடுபொருளும் கொண்ட கஸல்களையே தேர்ந்தெடுத்துப் பாடினார். செவ்வியல் கவிஞர்களின் கஸல்களை மிக அரிதாகவே தொட்டார். இரண்டாம் சாதனைக்காக – கஸலின் சங்கீதாம்ச மாற்றத்திற்காக – கிதார் கருவியை தன் கஸல்களின் முக்கியமான ஒரு வாத்தியமாகக் கொண்டுவந்தார். அத்துடன் பிற மேற்கிசைக் கருவிகள் சிலவற்றையும் அவ்வப்போது பயன்படுத்தினார்.
ஜக்ஜீத் சிங் பாடிய கஸல்களின் சொல்லாடல்கள் எளிமையானவையே தவிர அவற்றின் கருத்துக்களின் மேன்மையில், கவித்துவத்தில் அவர் ஒருபோதும் ரசனைக் குறைவை அனுமதித்ததில்லை. அவற்றின் பாடுபொருள் எப்போதும் வாழ்வின் வெளிச்சத்தில் தம்மை வெளிப்படுத்துபவையாகவே இருந்தன. அதன் மூலமே சராசரி மனிதனைச் சென்றடைந்தன.
ஜக்ஜீத் சிங்கின் குரல் ப்ரார்த்தனைத் தன்மை கொண்ட மென்மையான குரலாக இருந்தது. அவர் ஆரம்ப நாட்களில், தன் சிறு வயது முதலே ஆலயங்களில் ப்ரார்த்தனைகள் பாடுபவராகத்தான் இருந்தார். ஒருமுறை அவர் சஹ்வா என்னும் ஊரில் இருந்த தன் அக்கா வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே சீக்கிய மதத்தின் நாம்தாரிப் பிரிவைச் சேர்ந்த மகான் ஒருவர் இருந்தார். (நாம்தாரிப் பிரிவைச் சேர்ந்தவர்கள் குருநானக் எழுதிய ’குரு கிரந்தசாஹிப்’ மட்டுமல்லாது பத்தாவது சீக்கிய குருவான குரு கோபிந்த் சிங் எழுதிய ’தசம் கிரந்த்’ என்பதையும் தங்களின் புனித நூலாகக் கருதுகின்றனர். இப்போது சீக்கியர்கள் கிரந்த்சாஹிப் நூலைத்தான் தங்களின் குருவாகக் கருதுகின்றனர். ஆனால் நாம்தாரிப் பிரிவினர் தங்களின் வாழும் குருவாக ’ஜக்ஜீத் சிங்’ என்பவரை ஏற்றுள்ளனர்.) அந்த மகான் ஜக்ஜித் சிங் பஜனை பாடுவதைக் கேட்டுவிட்டு அவருக்கு முறையான சங்கீதப் பயிற்சிகள் தரும்படி அவரின் மச்சானிடம் யோசனை சொன்னார். அப்போது ஜக்ஜீத் சிங்கின் இயற்பெயர் ஜக்ப்ரீத் சிங் என்பதாக இருந்தது. அதை அந்த மகான் ஜக்ஜீத் சிங் என்று மாற்றி வைத்தார். தன் குரலால் இவன் உலகை வெல்வான் என்று ஆசியும் வழங்கினார். (ஜக்ஜீத் என்பதன் அர்த்தம் உலகை வென்றவன்.)
அதன்பின் ஜக்ஜீத் சிங் பண்டிட் ஷகன்லால் ஷர்மா என்பவரிடம் இரண்டு வருடங்கள் இசை பயின்றார். பின்னர், சைனியா கரானாவைச் சேர்ந்த உஸ்தாத் ஜமால் கானிடம் ஆறு வருடங்கள் ஹிந்துஸ்தானி மரபிசை வடிவங்களான ஃகயால், தும்ரி மற்றும் த்ருபத் ஆகியவற்றில் சாதகங்கள் செய்தார். இந்த உஸ்தாத் கஸல் மேதையான மெஹ்தி ஹசனின் உறவினர்.
ஜக்ஜீத் சிங் தன்னை ஒரு கஸல் பாடகராக உருவாக்கிக் கொண்டாலும் இந்து மற்றும் சீக்கிய சமயங்களின் பஜனைப் பாடல்களையும் குருபாணிப் பாடல்களையும் அவர் ஆல்பங்களாக வெளியிட்டிருக்கிறார். அல்லாமா இக்பாலின் ‘லப் பெ ஆத்தி ஹே துவா…” என்று தொடங்கும் குழந்தைகளின் பிரார்த்தனை என்னும் பாடலுக்கு அவர் அமைத்துள்ள மெட்டில் உள்ள உருக்கம் எப்போது கேட்டாலும் கண்களைப் பணிக்கச் செய்கின்றன. நபிகள் நாயகத்தைப் புகழும் ‘நஃத்’ பாடல் ஒன்றையும் அவர் பாடியிருக்கிறார்.
கலைஞர்கள் இன மத தேசப் பிரிவினை வாதங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்னும் கருத்தில் அவர் இறுதி வரை உறுதியாக வாழ்ந்தார். பாகிஸ்தானிலிருந்து பல இசைக்கலைஞர்கள் இந்தியா வந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஆரோக்கியமான சூழல் இருப்பதை வரவேற்ற அவர், அதே போல் இந்தியக் கலைஞர்கள் பாகிஸ்தான் சென்று நிகழ்ச்சிகள் நடத்த அந்நாட்டில் அனுமதி இல்லாத சூழலைக் கண்டித்தார். அடுத்த மாதம் அவர் பாகிஸ்தானின் கஸல் மேதையான குலாம் அலீயுடன் இணைந்து பாட ஒரு நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது. அதை அறிந்து மிகவும் மகிழ்ந்து குலாம் அலீயுடன் பாடுவது தான் பெற்ற பேறு என்று சொல்லியிருந்தார். அதற்குள் அவரின் ஆயுள் முடிந்துவிட்டது.
ஊதுவத்தியின் நறுமணம் போல் அவரின் குரல் காற்றில் கலந்துவிட்டது. அவரின் உடல் சாம்பலாய் உதிர்ந்துவிட்டது. ஜக்ஜீத் சிங்கிற்கு உலகெங்கும் உள்ள ரசிகர்கள் அஞ்சலி செலுத்திக் கொண்டிருப்பார்கள். பொதுவாக இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலிதான் செலுத்தப்படும். ஆனால் ஜக்ஜீத் சிங்கிற்கு அவரின் ரசிகர்கள் அவரின் பாடல்களைக் கேட்டே அஞ்சலி செலுத்துவார்கள். நானும் அவரின் உருக்கமான ஒரு கஸலைக் கேட்டேன். அது எனக்கு மிகவும் பிடித்த கஸல்களில் ஒன்று. லதா மங்கேஷ்கருடன் அவர் டூயட்டாகப் பாடியது. ’சஜ்தா’ என்னும் ஆல்பத்தில் உள்ள “அல்லாஹ் ஜான் தா ஹே” (அல்லாஹ் அறிவான்) என்னும் கஸல். அதன் உடலை இங்கே உங்கள் முன் வைக்கிறேன். அதன் உயிரை நீங்கள் உணர வேண்டுமெனில் அதற்கு ஜக்ஜீத் சிங்கின் இசையும் குரலும் வேண்டுமே?
நன்மை தீமை என்பன எதுவோ?
அல்லாஹ் அறிவான்.
அடியார்களின் மனதில் இருப்பதென்ன?
அல்லாஹ் அறிவான்.
இந்த இடமும் காலமும் என்ன?
அல்லாஹ் அறிவான்.
திரைகளில் மறைந்திருப்பது என்ன?
அல்லாஹ் அறிவான்.
உலகை நீங்கிச் சென்றவர் எவரும்
மீண்டு இங்கு வராத அந்த இடம்
என்னவான இடமோ அது?
அல்லாஹ் அறிவான்.
உன் நன்மை தீமைகளை
எத்தனைதான் நீ மறைத்த போதும்
அல்லாஹ்வுக்குத் தெரியும்
அல்லாஹ் அறிவான்.
இந்த வெயில் நிழலைப் பார்
இந்தக் காலை மாலையைப் பார்
இவையெல்லாம் ஏன் ஆகிக்கொண்டுள்ளன?
அல்லாஹ் அறிவான்.
விதியின் பெயரை என்னவோ
அனைவரும் அறிந்துள்ளார்கள்
விதியில் எழுதியிருப்பது என்ன?
அல்லாஹ் அறிவான்.
எனக்கு மிகவும் பிடித்த ஜக்ஜித் சிங்கின் பாடல்:
ReplyDeleteஅர்த் படத்தில் ‘தும் இத்னா ஜோ முஸ்குரா ரஹே ஹோ
தர்த கே ஃபூல் பி கில்தே ஹெய்ன் - அபிமான் குல்ஜார் சாப் எழுதிய பாடல்
- தற்போது அல்லாஹ் ஜான் தா ஹே யின் உயிரை கேட்டு கொண்டிருக்கிறேன்
http://www.muskurahat.com/music/ghazals/jagjit-singh_chitra-singh.asp
ReplyDeleteஇந்த வலை தளத்தில் நிறையக் கிடைக்கிறது அவருடைய கஜல்கள்.
கேட்டு மகிழுங்கள் அனைவரும்.நன்றி!