Friday, October 7, 2011

முடிவிலி ரோஜா


”காதல் ரோஜாவே, எங்கே நீயெங்கே?
கண்ணீர் வழியுதடி கண்ணில்…
கண்ணுக்குள் நீதான், கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்”ஏ.ஆர்.ரகுமானின் இசையில் இந்த வரிகள் பிரிவுத் துயரின் வலியுடன் கசிந்தபோது இப்பாடல் சூஃபித் தன்மை கொண்ட பாடல் என்று நண்பர்களிடம் சொன்னேன். அப்படி என்றால் இதை எழுதிய வைரமுத்து என்ன சூஃபியா? என்று அவர்கள் கேட்டார்கள். அவர் சூஃபி அல்ல. ஆனால் ஏ.ஆர்.ரகுமான் சூஃபி நெறியில் ஈடுபாடு கொண்டவர். முகைதீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களின் ஞான உரைகள் தன் மன இருளைப் போக்கின என்று ஒரு நேர்காணலில் அவரே குறிப்பிட்டார். அவரின் சூஃபித்துவ ஈடுபாடு ரகசியம் அல்ல. தன் மெட்டுக்களுக்குப் பாடல் எழுதுபவர்களையும் பாடுபவர்களையும் அவர் சூஃபித்துவ பாணிக்குக் கொண்டு வந்துவிடுகிறார் என்பதை பதினைந்து வருடங்களாகவே அவதானித்து வருகிறேன். வாலியை அவர் அப்படி சூஃபி பாணியில் எழுத வைத்த பாடல்களில் ஒன்று இது:

“ரோஜா ரோஜா….
கண்டபின்னே உன்னிடத்தில்
என்னை விட்டு வீடு வந்தேன்
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்
உனை வேறு கைகளில் தரமாட்டேன்
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்…”

இந்த வரிகளில் என்ன சூஃபித்துவம் இருக்கிறது? என்றார் ஒரு நண்பர். சூஃபிக் கவிதையின் குறியீடுகளை, அதன் நாயக-நாயகி பாவிப்பை அறிந்தால்தான் நான் சொல்வது உங்களுக்கு விளங்கும். இந்தித் திரைப்படங்களில் வரும் உருதுப் பாடல்களை வைத்துக்கொண்டு இதை விளக்குவது மிகவும் எளிது. ஆனால் தமிழ்ச்சூழலுக்கு இது புதிது. எனவே, யாரும் இதை உணர்ந்ததாகவே தெரியவில்லை. இளையராஜாவின் பல பாடல்களில், அவற்றின் இசையில் இந்து ஞான மரபின் வேதாந்த தாக்கம் இருப்பது போல் ஏ.ஆர்.ரகுமானின் பாடலகளில் சூஃபி மரபின் தாக்கம் உண்டு. இது பற்றிப் பிறகு விரிவாகச் சொல்கிறேன்.

நான் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களுமே ‘ரோஜா’ என்று தொடங்குகின்றன. ’ரோஜா’ என்ற வார்த்தையே சூஃபித்துவ நறுமணத்தைக் கொண்டு வருவதற்குப் போதுமான ஒரு குறியீடுதான். (தவிர, ரோஜாப்பூவின் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட பித்து உண்டு. குல்கந்த், ரோஜா ஷர்பத், ரோஜா எஸ்ஸென்ஸ் விட்ட இனிப்பு வகைகள், ரோஜா அத்தர் என்று நான் திளைக்கும் விசயங்களில் பெரும்பாலும் ரோஜாப்பூ இருக்கின்றது.)ரோஜா இந்திய நாட்டின் சொந்தப் பூ அல்ல. இங்கே மலர் வகைகளின் அரசி என்றால் அது தாமரைதான். அது ஞானத்தின் குறியீடு. உலக பந்தம் என்னும் சேற்றிலிருந்து எழுந்து நீருக்கு மேல் தலை தூக்கி நின்று ஆன்மிகம் என்னும் காற்றில் முகம் கழுவிப் பரம்பொருள் என்னும் சூரியனின் ஞான ஒளியில் குளித்து நிற்கும் ஒரு ஞானி அது.

நினைவில் பூக்கும் இன்னொரு மலர் மல்லிகை. உலகெங்கும் மல்லிகை காதலின் பூவாகப் பார்க்கப் படுகிறது. அது erotic தன்மை நிறைந்த புஷ்பமாகக் கருதப்படுகிறது. காதலின் erotic பரிமானத்திற்கான குறியீடு அது. காதலர்களின் உடல்வெளியில் பூத்து மணம் பரப்பும் மலர் அது. 13-ம் நூற்றாண்டில் தென் பாரசீகத்தின் ஷீராஸ் பகுதியில் வாழ்ந்த சூஃபி ஞானி ருஸ்பிஹான் பக்ளி (ரஹ்) காதலைப் பற்றி ஒரு நூல் எழுதினார். மனிதக் காதல் என்பது இறைக்காதலின் நிழலாகவும், இறைக்காதலுக்கு இட்டுச் செல்லும் பாதையாகவும் இருப்பதை அவர் அதில் விளக்கியுள்ளார். அந்த நூலுக்கு அவர் வைத்த பெயர் “காதலரின் மல்லிகை” (JASMINE OF THE LOVERS). டாக்டர் கார்ல் எர்ன்ஸ்ட் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

“மலர்களிலே அவள் மல்லிகை” என்று எழுதினார் கண்ணதாசன். “மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ?” என்று ஆரம்பிக்கிறது கவிஞர் வாலியின் காதல் பாடல் ஒன்று. கண்ணதாசனுக்கும் வாலிக்கும் மல்லிகை என்றால் எனக்கு எப்போதும் ரோஜாதான். ரோஜா என்பதும் காதலின் மலர்தான். ஆனால் இது காதலின் இதயத்தின் குறியீடு. இதயம் போலவே சிவந்த ரோஜா. (இங்கிலாந்து அரசியரை ஞாபகப் படுத்தும் ஊதா ரோஜா அல்ல!)ஸ்காட்லாந்துக் கவிஞன் ராபர்ட் பர்ன்ஸ் தன் காதலியை வருணிப்பதைப் பாருங்கள்:
O my Luve's like a red, red rose
That's newly sprung in June
(ஜூனில் புதிதாய் மலர்ந்த
செக்கச் சிவந்த ரோஜா அவள்)ஆங்கில மகாகவி ஷேக்ஸ்பியரை ‘சிகப்பு ரோஜாக்களின் கவிஞன்’ என்றே சொல்லலாம். அவருக்கு ரோஜா என்பது இளமை, அழகு, காதல் ஆகியவற்றின் குறியீடு. ”ரோமியோ அண்ட் ஜூலியட்” நாடகத்தில் ஜூலியட் பேசுவதாக ஒரு வசனம்:
"What's in a name? That which we call a rose
By any other name would smell as sweet.
(பெயரில் என்ன இருக்கிறது? ரோஜா என்று நாம் அழைப்பது
வேறு பெயரிலும் இனிய நறுமணம் வீசத்தான் செய்யும்.)இளமை மற்றும் அழகின் குறியீடாக ரோஜாவை வைத்து ஷேக்ஸ்பியர் பாடியுள்ள 54-ம் ‘சானட்’ (sonnet) அற்புதமானது. அவருடைய கவிதை மேதைமைக்கு சான்று சொல்ல இந்த ஒரு பாடல் போதுமானது என்று தோன்றுகிறது.

O! how much more doth beauty beauteous seem
By that sweet ornament which truth doth give.
The rose looks fair, but fairer we it deem
For that sweet odour, which doth in it live.
The canker blooms have full as deep a dye
As the perfumed tincture of the roses,
Hang on such thorns, and play as wantonly
When summer's breath their masked buds discloses:
But, for their virtue only is their show,
They live unwoo'd, and unrespected fade;
Die to themselves. Sweet roses do not so;
Of their sweet deaths are sweetest odours made:
   And so of you, beauteous and lovely youth,

(அழகு இன்னும் எத்தனை அழகாய்த் தெரிகிறது
சத்தியம் சூட்டும் அந்த இனிய அணிகலன் கொண்டு!
இனிதாய்த் தெரிகிறது ரோஜா
இன்னும் இனியதாய் உணர்கிறோம் நாம்
அதனுள் ஜீவிக்கும் சுகந்தத்தினால்.
காட்டு ரோஜாக்கள் செறிந்துள்ளன
ரோஜாக்களின் வாசமிகு நிறத்தினைப் போல்.
கோடைக் காற்று அவற்றின்
மூடிய முகைகளைத் திறக்கும்போது
அத்தகு முட்களில் தொங்கி
ஆசை மேலிட ஆடுகின்றன.
அவற்றின் நாணம் காட்சி மட்டுமே
வரைவின்றி வாழ்ந்து மதிப்பின்றித் தேய்ந்து
தன்னந் தனியே மரிக்கின்றன.
இனிய ரோஜாக்கள்… இல்லை…
அவற்றின் இனிய சாவில்
இனிய நறுமணம் துளித்து வரும்.
அது போல் உன்னால்,
அழகிய இனிய வாலிபம்
மெல்ல மறையும்போது
என் கவியில் துலங்கும் உன் உண்மை.)சூஃபிகளின் கவிதையுலகில் ரோஜா என்பது அநித்யத்தின் குறியீடல்ல, நித்யத்தின் குறியீடு; மனிதக் காதலின் குறியீடு மட்டுமல்ல, இறைக்காதலின் குறியீடு; இறைஞானத்தின் குறியீடு. சூஃபிகள் உருவாக்கிய இலக்கியங்கள் நெடுக ரோஜாக்கள் மலர்ந்து மணம் வீசிக்கொண்டுள்ளன. இமாம் சாஅதி-யின் ‘குலிஸ்தான்’ (ரோஜாத் தோட்டம்), ஷைக் மஹ்மூத் ஷபிஸ்தரி-யின் “குல்ஷன்–இ-ராஸ்” (ரகசியங்களின் ரோஜாத்தோட்டம்) போன்ற சூஃபி ஞானத் தோட்டங்கள் அவை. மலையாள இலக்கிய உலகின் சிகரங்களில் ஒருவரான வைக்கம் முகமது பஷீரின் ‘மதிலுகள்’ குறுநாவல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கட்டுரையைப் படித்துக்கொண்டிருந்தேன். (’பஷீரின் மதிலுகளும் தஸ்தாயெவ்ஸ்கியும்’ என்னும் கட்டுரை.) நாவலின் கதையைப் பொருத்தவரை பஷீர் சிறையில் இருக்கிறார். சிறைக்கூடத்தில் ஆண்கள் பகுதிக்கும் பெண்கள் பகுதிக்கும் நடுவே ஒரு பெருஞ்சுவர் உள்ளது. அப்பக்கம் உள்ள ஒரு பெண்ணுடன் தினமும் மனம் விட்டு சம்பாஷிக்கிறார் பஷீர். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலே அவர்களின் மனதில் காதல் மலர்கிறது. அவள் நோய்ப்பட்டுச் சிறையின் மருத்துவமனையில் இருக்கிறாள். அவளைச் சந்திப்பதற்காக பஷீர் தன் கையில் ஒரு ரோஜாவுடன் புறப்படும்போது, அரசு அவரை விடுதலை செய்துவிட்டதாகக் கூறி சிறையிலிருந்து வெளியேற்றப் படுகிறார். வீதிக்கு வந்து தன் கையில் உள்ள ரோஜாவைப் பார்த்தபடி நிற்கிறார். இந்தச் சூழலின் புள்ளியை விளக்கும் எஸ்.ராவின் அற்புதமான வரிகள் இதோ:

“கையில் ஒரு மலருடன் காத்து நிற்கும் பஷீரின் காட்சி வாசித்து முடிக்கையில் நம் கண்களில் தெரிகிறது. அது ஒரு படிமம். ஒரு அழியாத குறியீடு. மானுட வாழ்க்கையின் அத்தனை கனவுகளும் ஏதோ ஒரு நிமிடத்தில் அறுந்து வெளியேற்றப்பட்டுவிட, கையில் தன் ஆசையுடன் நிற்கும் மனிதனின் நிர்க்கதி அது. பெண்ணுக்காக ஆணும், ஆணுக்காகப் பெண்ணும் காலம் காலமாக இது போன்ற துயரத்தின் மலரை ஏந்தியபடியே காத்திருக்கும் முடிவற்ற காட்சி நினைவில் ஓடுகிறது. பஷீருக்கும் நாராயணிக்கும் இடையில் உருவான நேசம்தான் ரோஜா மலராகியிருக்கிறது. சூஃபி மரபில் ரோஜா மலர் நித்தியத்துவத்தின் குறியீடு.
கையில் ஒரு ரோஜா மலருடன் நிற்கும் பஷீர் ஒரு சூஃபி.” (நூல்: குறத்தி முடுக்கின் கனவுகள், ப.114)ரோஜா மலர் பிரபஞ்சத்தின் குறியீடாகவும் பேசப்படுகிறது. ‘ப்ரபஞ்சம்’ என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு ‘விரிந்து கொண்டே செல்வது’ என்று பொருள். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தன்னுடைய பொதுச் சார்பியல் கோட்பாட்டினை பிரபஞ்ச இயக்கத்தின் மீது இட்டுப்பார்த்தபோது அதன் முடிவுகள் பிரபஞ்சம் விரிந்துகொண்டிருப்பதாகக் காட்டின. அவர் மிரண்டு போனார். சார்பியல் கோட்பாட்டைத் தன் வாழ்வின் மிகப்பெரிய தவறு என்று நினைத்தார். ஆனால் 1929-ல் எட்வின் ஹப்பிள் உருவாக்கிய தொலைநோக்கியின் காட்சிகள் பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டு போவதைக் காட்டி ஐன்ஸ்டீனின் கோட்பாடு சரி என்று உறுதிப்படுத்தின.

இவ்வாறு விரிந்துகொண்டே போகும் பிரபஞ்சத்தை ஒரு மலராக உருவகித்துக் கற்பனை செய்யுங்கள். அதன் இதழ்கள் முடிவில்லாமல் மலர்ந்துகொண்டே இருப்பதாக ஒரு மனச் சித்திரம் வருகிறதா? எஸ்பஞோல் எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹே எழுதிய “LA ROSA PROFUNDA” (THE UNENDING ROSE, முடிவிலி ரோஜா) என்னும் கவிதையைப் படித்தபோது அதன் வசீகரமான தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. குணங்குடி மஸ்தான் சாகிபு இந்தப் பிரபஞ்சத்தை ’முடிவில்லாமல் விரியுமொரு பூ’வாக உருவகித்துப் பாடிய வரிகள் நினைவில் தோன்றின:
“அணைந்து உயிர்க்குயிராய் அலர் மடல் அவிழ்ந்த
அகண்டிதாகார மாமலரின் மணம் கமழ் நயினார்”

அத்தாரின் தர்கா, நைஷாபூர் 

ஜோர்ஜ் லூயி போர்ஹே தன்னுடைய கவிதையில் சூஃபி ஞானக்கவி ஃபரீதுத்தீன் அத்தார் (ரஹ்) அவர்களை வைத்து எழுதியுள்ளார். அத்தார் ஒரு அந்தகனாக இருப்பதாக இக்கவிதையில் வருகிறது. அவர் தன் கையில் ஒரு ரோஜாவை வைத்திருக்கிறார். குருடரான அத்தார் அந்த ரோஜாவைப் பார்க்கிறார்! அத்தார் பாரசீக நாட்டின் நைஷாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர். அவர் தள்ளாத முதியவராக இருந்த போது ஏப்ரில் 1221-இல் மங்கோலியப் படை நைஷாப்பூரைத் தாக்கியது. அந்தப் போரில் அத்தார் இறந்துபோனதாக ஒரு கருத்து உண்டு. இந்தச் சூழலின் பின்னணியில் போர்ஹே தன் கவிதையை எழுதுகிறார். அத்தாரை ஒரு அந்தகராக அவர் சுட்டியிருப்பதற்கு அத்தாரின் பின்வரும் கவிதை வரிகள் காரணமாக அமைந்திருக்க வேண்டும்:
”ஒருவன் கண்ணாக இருக்கவும் வேண்டும்
பார்க்கவும் கூடாது, எனவே
நான் குருடனாக இருக்கிறேன்
இருந்தும் காண்கிறேன்.”
இத்துடன், ஜோர்ஜ் லூயி போர்ஹே தன் வாழ்வின் பெரும்பகுதியும் அந்தகராகவே இருந்தார் என்பதும் காரணமாயிருக்க வேண்டும். அவரின் கவிதை இதோ:

“ஹிஜ்ரி ஐநூறாம் ஆண்டில்
தன் பாலையின் மீதான படையெடுப்பை
பாரசீகம் குனிந்து நோக்கியது ஸ்தூபிகளில் இருந்து.
நைஷாப்பூரின் அத்தார் ஒரு ரோஜாவை நோக்கினார்
சப்தமில்லா வார்த்தைகளில் அதனுடன் பேசியபடி,
தொழுபவராய் என்பதினும் சிந்திப்பவராக:
’உன் மிருதுவான தேகம் என் கையில் இருக்கிறது
காலம் நம் இருவரையும் வளைக்கிறது,
நாம் அறியாமலேயே,
இந்த மதியம், மறக்கப்பட்ட ஒரு தோட்டத்தில்.
காற்றில் உன் வடிவம் நமத்துள்ளது.
சீரான, அலைவுறும் உன் வாசம்
சரியும் என் கிழட்டு முகம் நோக்கி எழுகிறது.
கனவின் அடுக்குகளில், அல்லது,
இங்கே இந்தப் பூங்காவில், முன்பொரு காலையில்
உன்னைக் கண்ட அந்தக் குழந்தையைவிட
சாலப் பரிச்சயமாய் உன்னை அறிவேன் நான்.
சூரியனின் வெண்மை உனதாகட்டும் நன்றாய்
அல்லது, நிலவின் தங்கம்
அல்லது, வெற்றியில் ஓங்கும் கூர்வாளின்
விளிம்பில் வழியும் சிகப்பு.
நான் குருடன், ஏதும் அறியேன்
எனினும், செல்வதற்கு வழிகள் பல
இருப்பதைக் காண்கிறேன்.
ஒவ்வொரு பொருளும் பொருள்களின் முடிவிலி.
நீ, நீ இசை, நதிகள், வானங்கள்,
அரண்மனைகள் தேவதைகள்,
ஓ முடிவில்லா ரோஜாவே!
என் இறந்த கண்களுக்கு
இறுதியில் இறைவன் காட்டப்போகும்
எல்லையற்ற லயிப்பே!”


2 comments:

 1. மல்லிகை

  ரோஜா

  கவிதைகள்

  ரஹ்மானின் படம்

  அக்தாரின் தர்காவின் படம்

  - யாவும் அருமை

  ReplyDelete
 2. ரோஜாவைப் பற்றிய அனைத்து செய்திகளும் அந்த அற்புத மலரைப் போலவே மணம் வீசுகின்ற‌ன.

  ரோஜாவைப் பற்றிச் சொல்லும் போது ஜவ‌ஹர்லாலை மறந்தது எதேச்சையாக நிகழ்ந்ததுதானே?

  kmrk1949@gmail.com

  ReplyDelete