Wednesday, October 26, 2011

மடியில் சாய்ந்த கணினி

இரண்டு நாட்களாக எதுவுமே எழுதவில்லை. அதாவது எழுத முடியாத இக்கட்டான நிலை.
என் மடிக்கணினி சீரியஸாக உள்ளது.
உறங்கச் செல்லும் முன் கவிதை ஒன்றின் சில வரிகளைத் தட்டிவிட்டு நார்மலாகத்தான் ஷட்டவுன் செய்தேன். கணினியும் எப்பவும் போலத்தான் கண் மூடிற்று.
காலையில் அதன் பக்கமே நான் செல்லவில்லை. கட்டுரை ஒன்று பாதியில் இருந்தது. மதியம் வந்து தொடரலாம் என்று கல்லூரிக்குச் சென்று விட்டேன்.
கல்லூரியில் இருக்கும்போது மனைவி செல்பேசியில் அழைத்தாள். கணினியை எழுப்பிப் பார்த்திருக்கிறாள். அதில் பேச்சு மூச்சைக் காணவில்லை என்றதும் பதறிப்போய் எனக்கு போன் போட்டு விஷயத்தைக் கூறினாள். 
மதியம் வந்து நானும் எழுப்பிப் பார்த்தேன். எந்தத் துடிப்பும் இல்லை. கண்கள் மூடி அப்படியே கிடந்தது. மடியில் கிடத்தி அதன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். சலனமற்று இருந்தது.  மைக்கேல் ஏஞ்சலோவின் 'PIETA' சிற்பம் ஞாபகம் வந்தது.
நேற்று மாலை அதனை முதுகில் சுமந்துகொண்டு 'டாக்டரிடம்' ஓடினேன். என் டெல்லுக்குட்டி கோமாவில் இருப்பதாகச் சொன்னார். "எப்படியாவது மீட்டுக் கொடுங்கள்" என்றேன். அதன் தாய்ப் பலகை பழுதாகி இருக்கக்கூடும் என்று பயமுறுத்தினார். பதினாலாயிரம் செலவாகும் என்றார். "எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..." என்றெல்லாம் வசனம் பேசும் நிலையில் நான் இல்லை. அப்படியே தூக்கிக் கொண்டு வந்து விட்டேன். தீபாவளி முடிந்ததும் பார்த்துக் கொள்ளலாம்  என்று என்னுடன் வந்த மச்சானும் சொல்லிவிட்டான். நாளை என் டெல்லுக்குட்டி பிறந்த ஆஸ்பத்திரிக்கே கொண்டுபோய் அட்மிட் செய்யலாம் என்றிருக்கிறேன். விரைவில் அவன் எழுந்து வந்து உங்களுடன் விளையாடுவான் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. அது வரை பிரபஞ்சக்குடிலில் மௌன விரதம் மட்டும்தான் செய்யமுடியும். விரைவில் சந்திப்போம்.
(இந்தத் தகவலை என் அக்காள் மகனின் கணிப்பொறியில் இருந்து அனுப்புகிறேன். அவன் நிலையம் கொஞ்சம் கையைக் கடிக்கிறது. எண்பது ஜீபிதான் பாக்கி உள்ளது மாமா என்று சொல்லித்தான் கொடுத்தான். அதனால் நிறைய பேச முடியவில்லை. )

3 comments:

  1. ஆக கணினியை கூட ஒரு மனிதராகவே பாவிக்கிறீர்கள் :)

    ReplyDelete
  2. இறை நேசர்கள்தாம் இறப்பதில்லை
    இறை நேசர்கள்
    நேசித்த அல்லது வாசித்த‌
    டெல்லுக்குட்டிக்கும் செல்லுப்பெட்டிக்கும்
    இறப்பில்லாமல் இருக்குமா

    புதுசா ஒண்ணு வாங்குங்க வாத்யாரே :)

    ReplyDelete
  3. அடடா! ஒரு கணினி பழுதானதை எழுதியதை படிக்கும் போது கூட மழைகால அதிகாலை தேநீர் (கிரீன் டீ) போல் இவ்வளவு சுவையான அனுபவத்தை தருகிறதே...

    சாதாரணமா பார்த்தா, கர்மம் புடிச்ச கணினி கழுதையா படுத்துடுச்சு என்று கழுதையையே உதைக்க தோணும்... ஆனால்.. இங்கே பழுதான கணினிக்கு கூட நன்றி சொல்ல தோன்றுகிறது கொஞ்சம் ஓவர் தான்.

    மௌனம் கூட அழகானது தான்

    மச்சானுக்கு நன்றி...

    பாதி தூரம் கடந்த கட்டுரைக்கும்
    சில வரிகளில் உறங்கும் கவிதைக்கும்
    காத்திருக்கிறேன்...

    ReplyDelete