Wednesday, November 9, 2011

அனாதைக் கல்




கற்களின் வசீகரம்
குறைந்ததாயில்லை
புற்களின் அழகிற்கொன்றும்

புல்
அவளின் நடனம்
கல்
தியானம்.

உயிரின் அலைவுகளை
தேகமெங்கும் கோடெழுதிக்
கிடக்கின்றன இந்தக்
கல்வனமெங்கும்

ஓடைக்கரை நெடுகில்
நீரின் கல்வெட்டு

கதிரில் கனலுமொரு
பெருங்கல்லின் நிழலில்
தண்ணென்றிருக்குமொரு
சிறிய கல்.

மனதில் மிதப்பதாய்
இருக்குமிந்தக் கற்கள்
கனப்பதாயிருக்கக்கூடும்
கைகளில்

கல்லொலி சொல்லும்
கதைகள் கேட்டபடிக்
காலாற நடந்தேன்
தொடர்வண்டிப் பாதையில்
அன்றொரு நாள்

கண்கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருக்கையில்
கருவிழிகளைக்
கண்ணீரால் கழுவியது
பிளவுக் காயத்தில்
ஊழிக் கருமை மின்ன
கிடந்ததொரு
அனாதைக் கல்.

3 comments:

  1. Thanks be to God Almighty for bringing you back on to your blog after a loooong time (oh..yes...it felt that way) but with a stunner (அனாதைக் கல்)this time...

    what a thought provoking lines:
    உயிரின் அலைவுகளை
    தேகமெங்கும் கோடெழுதிக்
    கிடக்கின்றன இந்தக்
    கல்வனமெங்கும்

    and what a finish....
    கருவிழிகளைக்
    கண்ணீரால் கழுவியது
    பிளவுக் காயத்தில்
    ஊழிக் கருமை மின்ன
    கிடந்ததொரு
    அனாதைக் கல்

    ReplyDelete
  2. என் "கருவிழிகளைக்
    கண்ணீரால் கழுவியது
    பிளவுக் காயத்தில்
    ஊழிக் கருமை மின்ன"
    கிடக்கும் இந்த மற்றுமொரு
    "அனாதைக் கல்"

    எத்தனை பேர் எனை சுற்றி இருப்பீனும்
    எத்தனை நிகழ்வுகள் எனை சுற்றி நடப்பீனும்
    "ஊழிக் கருமை மின்ன" கிடக்கும்
    எத்தனையோ அனாதை கல்களில்
    நானுமொரு அனாதை கல் என்பதை
    இங்கே, இன்று கண்டுகொண்டேன்


    என் உடலின் அதிர்வுகளையும்,
    என் உயிரின் அலைவுகளையும்
    தங்கள் தேகமெங்கும்
    கோடாய் எழுதிக் கிடக்கின்றன
    நான் கடந்து வந்த பாதையெங்கும்
    பல நூறு அனாதை கல்கள்

    இன்னும் எத்தனை தூரம் நான் நடக்க வேண்டுமோ
    இன்னும் எத்தனை நடந்து
    எத்தனை கோடுகள்
    எத்தனை கல்களில் வரைய வேண்டுமோ

    இந்த கேள்வியில் பிறக்குது ஒரு சோதனை
    அந்த சோதனை தருகுது இனம் புரியா வேதனை

    "ஊழிக் கருமை மின்ன கிடக்கும் இந்த அனாதை கல்லையும்"
    ஒரு புயல் வெள்ளம் அடித்து கொண்டு போய்
    அதிர்வுகளும் இல்லாது
    அலைவுகளும் இல்லாது
    ஆறுக்கு நான்காய் என இருக்கும்
    ஆழ்கடலில் அமைதியாய் அமுக்காதோ

    --- இப்படி எல்லாம் எண்ண வைத்த அற்புத கவிதை உங்களின் இந்த "அனாதை கல்".
    என்னத்தை படித்தேனோ,
    எப்படித்தான் புரிந்து கொண்டேனோ?
    என் படித்தமையிலும், என் புரிதலிலும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
    என் எண்ணத்திலும், என் எண்ணத்தை என்னத்தையோ எழுதியமையிலும்
    எழுதியதில் ஏதேனும் எழுத்துக்கள் பிழையாய் இருப்பின் அதற்க்கும் மன்னிக்கவும்

    ReplyDelete
  3. செள‌ந்தர்ய லஹரி ஸ்லோகத்துக்கு இருக்கும் சக்தி இதில் இருக்கு

    'புல்
    அவளின் நடனம்
    கல்
    தியானம்.'

    ReplyDelete