Monday, December 19, 2011

வறுகடலை வாசம்


நல்ல மனுஷன்... இப்படிப் போய்ச் சேரணும்னு ஆண்டவன் விதியில எழுதீருக்கான்என்று ஒருவர் சொல்லிப் பெருமூச்சு விட்டுக்கொண்டே நகர்ந்தார். குறிப்பாக யாரிடமும் அதை அவர் சொல்லவில்லை. தனுக்குத் தானே பேசிக்கொள்வதுபோல் அல்லது பள்ளியில் கூடியிருந்த அனைவருக்கும் பொதுவாகச் சொல்வதுபோல் ஒரு நாலு பேரின் காதில் விழும் சத்தத்தில் சொன்னார்.

அந்த நல்ல மனுஷன்சில ஆண்டுகளுக்கு முன் என் அண்டை வீட்டுக்காரராக இருந்தவர். மை நெய்பர். அண்டை வீடு என்றால் பக்கத்து வீடாக அல்ல. நாங்கள் குடியிருந்த ஃப்ளாட்ஸில் எதிர் போர்ஷனில் அவரும் குடியிருந்தார். ஊரில் அவர் ஒரு பிரபலமான தோல் வியாபாரி. ஆள் நல்ல தாட்டியான சரீரம். அவரின் இரண்டு மகன்களும்கூட அப்படித்தான் இருந்தார்கள். பார்த்தால் சலாம் சொல்லிப் புன்னகைப்பார். எப்போதாவது நாலு வார்த்தையில் குசலம். அவருடன் எனக்கிருந்த உறவு அவ்வளவுதான்.
அப்துல் சமது சாஹிபின் இம்மை வாழ்வு முடிந்துவிட்ட செய்தியை இப்போது நான் குடியிருக்கும் ஃப்ளாட்ஸின் கீழ்த்தள வீட்டினர் என் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது நான் பால்கணியில் நின்றபடி யாரிடமோ செல்பேசிக் கொண்டிருந்தேன். முடித்த்தும் செய்தியை என்னிடம் சொல்லிவிட்டு “இப்பயே கெளம்பி மவ்த் வீட்டுக்குப் போய் பாத்துட்டு வந்திருங்கஎன்றாள்.

கைலி களைந்து குழாயணிந்து நான் கிளம்பிக்கொண்டிருக்கும்போது மனதில் ஒரு வினோதபாவம் உருவாகியிருந்தது. அரைமணி நேரத்திற்கு முன்புதான் மரணம் பற்றிய ஒரு குறிப்பைப் படித்து அது என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த்து. புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய ‘மீஸான் கற்கள்நாவலின் ஆரம்பப் பகுதியில் வரும் வரிகள்:

“கூடத்தின் நடுவே போடப்பட்டிருந்த மாம்பலகைக் கட்டிலில் பாலப்புரை மம்மது ஹாஜியார் நீண்டு நிமிர்ந்து கிடந்தார். மூடியிருந்த வெள்ளைத் துணியை விலக்கி சடலத்தின் முகத்தைப் பார்த்ததும் எரமுள்ளான் பயந்து விட்டார். வாய் திறந்தபடியே இருந்தது. கதிமோட்சம் அடையாத உடலின் அடையாளம். இறந்த பிறகும்கூட ஆசையடங்காத வாய்!இந்தக் குறிப்பு என் மனதில் பயங்கரமாகக் கிலிமூட்டியிருந்தது. இது உண்மையா? உயிர் உச்சந்தலை வழியாக ஊதப்பட்டு மேலிருந்து கீழாக இறங்கிப் பாதம் வரை பரவும்னு ஒரு கிரந்த்த்தில் படித்ததுண்டு, ஆதம் நபிக்குள் ஊதப்பட்ட ரூஹ் அப்படித்தான் இறங்கியது என்று. எப்படி இறங்கியதோ அதற்கு எதிர் திசையில்தான் அது வெளியேற வேண்டும் என்னும் லாஜிக்கின்படி அது கபால உச்சியின் வழியாகத்தான் எஸ்கேப் ஆக வேண்டும். என் நினைவின் அடுக்குகளுக்குள் துழாவிப் பார்த்தபோது பலரின் சடலங்கள் லேசாக வாய் பிளந்துகொண்டு கிடந்த்தைப் பார்த்த ஞாபகங்கள் வந்தன. என் முன்னோர்கள், பெரியோர்கள், உறவினர்கள். நினைக்கவே பெரும் பீதியாக இருந்தது. ஒருவேளை எரமுள்ளான் தியரி சரியாக இருந்துவிடும் பட்சத்தில் அவர்களின் கதி?

உடனே அதற்கொரு எதிர்-தீசிஸும் ஞாபகம் வந்தது. நல்லவர்களின் உயிர் ரிலீஸ் ஆகாமல் உடலுக்குள் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது, உயிர் வாங்க ஆஜராகும் இஸ்ராயீல் மலக்கு தன் கையில் அல்லாவின் பேரை எழுதி அதை அந்த நபரிடம் காட்டுவார்கள். அல்லாவின் பேரைப் பார்த்த சந்தோஷத்தில் உடனே உயிர் அவரின் வாய் வழியாகப் பாய்ந்துகொண்டு இஸ்ராயீலின் உள்ளங்கையில் ஒட்டிக்கொள்ளும். பொம்மையிடம் தாவும் குழந்தையைப் போல!

இந்தக் கருத்து எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. ஸ்கூட்டரைக் கிளப்பும்போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். அதாவது ஒருசில நாட்களாகவே மரணச் சிந்தனை மீண்டும் மீண்டும் என் மனதில் உருண்டுகொண்டிருந்தது. இந்தப் பூமியில் நான் இல்லாத ஒரு நாள் நிச்சயம் வரப்போகிறது. எதைப் பார்த்தாலும் இந்த உணர்வே மனதில் எழுந்தது. நசிகேத்தன் ஞாபகம் வந்தான். அவன் மனதில் இதே உணர்வு எனக்கிருந்ததைப் போல ஆயிரம் மடங்கு அழுத்தமாக இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ள முடிந்தது. திருச்சுழியிலிருந்து புறப்பட்டுப் போய் திருவண்ணாமலையில் உள்ள ஒரு குகையில் ‘நான் இறந்துவிட்டேன்என்று சொல்லிக்கொண்டு கட்டையை நீட்டிப் படுத்துவிட்ட ரமணமகரிஷியின் மனதிலும் இந்த உணர்வு எத்தனை அழுத்தமாக இருந்திருக்கும் என்று வியந்தேன்.மரணம் பற்றிய பல ‘அகப்பார்வைகள்மனதில் நிழலாடின. குறிப்பாக, மரணத்தை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றிப் போட்டு ஓஷோ பேசியவை. அவற்றிலும் குறிப்பாக மரணத்திற்கும் காமத்திற்கும் உள்ள தொடர்பு! எந்த அளவு ஒருவனுக்கு மரணத்தைப் பற்றிய அறியாமை இருக்கிறதோ அந்த அளவுக்கு அதன்மீதான அச்சமும் இருக்கும். எந்த அளவு மரணபயம் இருக்கிறதோ அந்த அளவு காமத்தின் மீதான கவர்ச்சியும் இருக்கும். ஏனெனில் அது உயிர்ப்பின் அடையாளமாக இருக்கிறது, வாழ்வின் அடையாளமாக இருக்கிறது. மேலும் அது சந்ததி விருத்திக்கான உபாயமாகவும் உள்ளது. என் சந்ததியில் எனக்கான ஒரு சாஸ்வதத் தன்மையை நான் உணர்கிறேன். நான் இல்லாமல் ஆகிவிடப்போவதில்லை, இதோ என் தொடர்ச்சி என்னும் ஆறுதலை சந்ததி தருகிறது. எனவே, மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான ஒரு அடைக்கலமாக நினைவிலி மனம் காமத்தை நாடும்!

இன்னொரு கோணத்திலும் இதைப் பார்க்கலாம். மரணத்திற்கு முன்னுரையாக இருப்பது நோய். நோய்ப்படும்போது காமம் குறைந்துவிடும். (பிங்கோ: love in the time of cholera என்று கேப்ரியல் கேர்ஷியா மார்க்யுவஸ் தன் நாவலொன்றிற்குத் தலைப்பிட்டிருக்கிறாரே தலீவா?) எனவே காமத்தை நம் மனம் ஆரோக்கியத்தின் அடையாளமாகக் காண்கிறது. மரணத்தின் இன்னொரு அடையாளம் முதுமை. முதுமை அடைய அடைய காமம் குறைந்துவிடுவது இயற்கை. எனவே காமத்தை நம் மனம் இளமையின் அடையாளமாகக் காண்கிறது. (வயசாயிட்டே போவுதே, எப்ப கல்யாணம் பண்றதா உத்தேசம்? என்னும் வகையிலான வசனங்கள் சர்வ சாதாரணமாகவே புழங்குகின்றன அல்லவா?) இவ்வகையில், மனித குலத்தின் பொது மனதில் முதுமை, நோய் ஆகிய இரண்டும் மரணத்திற்கு அருகில் இருப்பவை. எனவே, இளமையும் காமமும் மரணத்திற்கு வெகு தொலைவில் இருப்பவை என்னும் எளிதாக அது கணக்குப் போட்டுவிடுகிறது. (ஒருவர் இறந்துவிட்டால் எதனால் இறந்தார் என்று விசாரிக்கிறோம். எந்த நோயின் காரணமாக என்று அறிந்துகொள்ள விரும்புகிறோம். அதை அவர் எப்படியெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்பன போல் உளறுகிறோம். அல்லது, எண்பது தொண்ணூறு வயசாளியாக இருந்தால் முதுமையில் மரணிப்பது இயற்கைதான் என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால், தோல் வியாபாரி அப்துல் சமது சாஹிபின் உயிர் பிரிந்த்து கார் விபத்தில். அவர் புதிதாக வாங்கியிருந்த கார்!)

ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைத்தே தீரும்” (3:185) என்பது இறைவாக்கு. அதைவிட்டு யாரும் எங்கும் ஓடி ஒளிய முடியாது. நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களைப் பற்றும், வலிய உயரமான கோட்டைக்குள் நீங்கள் இருந்தாலும்.” (4:78)  இதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்போம். மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான பாதுகாப்பு என்று எதை நினைக்கிறீர்களோ அதிலேயே மரணம் இருக்கும்! இளமை மரணத்திற்கு எதிரானது என்று நீங்கள் நினைத்தால் அதிலும் மரணம் இருக்கும். காமம் மரணத்திற்கு எதிரானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதிலும் மரணம் இருக்கும். சிருஷ்டிகரம் என்று நினைப்பதில் எல்லாம் மரணம் உள்ளது. ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று உருவாகிறது.
ஆச்சரியம், இன்று அந்திமாலை அப்துல் சமது சாஹிபின் அடக்கத்திற்கான ஜனாஸா தொழுகையில் நின்றேன். நேற்று அந்தித் தொழுகைக்குப் பின்னர்தான் மரணம் என்பது அழகின் வாகனம்என்னும் கோட்பாட்டை யோசித்துக்கொண்டிருந்தேன். அது மிகவும் ஆழமான ஒரு சிந்தனையாகத் தோன்றியது. ஷேக்ஸ்பியரின் முதல் சானட்டில் அதைக் கண்டேன்.


From fairest creatures we desire increase, 
That thereby beauty's rose might never die, 
But as the riper should by time decease, 
His tender heir might bear his memory:
But thou, contracted to thine own bright eyes,
Feed'st thy light's flame with self-substantial fuel,
Making a famine where abundance lies, 
Thyself thy foe, to thy sweet self too cruel.
Thou that art now the world's fresh ornament 
And only herald to the gaudy spring, 
Within thine own bud buriest thy content 
And, tender churl, makest waste in niggarding. 
    Pity the world, or else this glutton be, 
    To eat the world's due, by the grave and thee.

(அழகிய பொருட்களில் ஆசை வளர்க்கிறோம்
அழகின் ரோஜா அழியாதிருக்கும் என்று.
கனிந்து காலம் மறைந்திடும் போது
இளம்பிள்ளையில் இருக்கும் அவன் நினைவு.
நீயோ உன் கண்களுக்குள் விழுந்து
அகத்தீயில் வார்க்கிறாய் சுயநல நெய்.
வளம்தங்கும் இடத்தில் வரட்சி செய்து
நீயே உன் பகைவனாய் உன்னையே நசிக்கிறாய்.
இக்கணம் உலகின் இனிய அணிகலன் நீ,
ஒளிமிகு வசந்த்த்தின் ஒரே தூதுவன் நீ.
உன் மொட்டில் புதைந்துள்ளது உன் நிறைவு,
செல்லப் பைத்தியமே!
உன் கஞ்சத்தனத்தில் வீணடிக்காதே.
உலகின்மேல் இரக்கம் கொள், அல்லது
கல்லறையில் அமர்ந்தொரு பேராசைக்காரனாய்
உலகின் பங்கும் தன் பங்கும் தின்பாய்.”)

இந்தப் பாடலில் ஷேக்ஸ்பியர் என்னதான் சொல்கிறார்? காலா காலத்தில் கலியாணம் பண்ணிக்கொண்டு பிள்ளைகுட்டிகள் பெத்துப்போடும் வழியைப் பாரப்பாஎன்று தன் பிரம்மச்சாரி நண்பனுக்கு அவர் சொல்லும் அறிவுரை இது என்கிறார்கள். அழகைப் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தால் அது அழிந்துவிடும். அழகைப் பாதுகாக்க ஒரே வழி அதை ஒரு உருவத்தில் அழித்து அதன் சந்ததியான இன்னொரு உருவத்திற்கு மாற்றிவைப்பதுதான் என்று இதில் அவர் சொல்கிறார். இப்படியாக அழிவும் ஆக்கமும், மரணமும் வாழ்வும், அச்சமும் கவர்ச்சியும் ஒன்றுள் ஒன்று ஒளிந்துகொண்டு விளையாடுகின்றன!

அப்துல் சமது சாஹிபின் வீடு தற்போது பீம நகரில் இருக்கிறது என்று சொன்னார்கள். நான் வாகனத்தைத் துருப்புப் பள்ளிவாசல் பக்கம் செலுத்தினேன். பள்ளிவாசலில் எப்படியும் மையத் இருப்பிடம் என்று முகவரி எழுதிப் போட்டிருப்பார்கள், பார்த்துக்கொள்ளலாம் என்ற நினைப்பில் சென்றேன். ஜனாஸாவே அங்குதானாம். சந்தூக்கில் வைத்து தூக்கிக்கொண்டு வந்துவிட்டார்கள். ஒரே கூட்டமாக இருந்த்து. மக்ரிப் தொழுதுவிட்டு வெளித் திடலில் ஜனாஸாத் தொழுகை நடந்த்து. “எங்கள் அண்ணன் யார் மனமாவது புண்படும்படி எதாவது பேசியிருந்தாலோ அல்லது செய்திருந்தாலோ அல்லாஹ்வுக்காக அவரை மன்னித்துவிடுங்க. அவரின் மக்ஃபிரத்துக்காக (பாவமன்னிப்புக்காக) துஆ (பிரார்த்தனை) செய்யுங்க. அவர் யாருக்காவது பணம் கொடுக்கவேண்டியிருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கஎன்று அவரின் தம்பி சந்தூக்கின் முன் நின்றுகொண்டு வரிசையில் நின்ற மக்களைப் பார்த்துச் சொன்னார். உருக்கமாக இருந்தது. தொழுகையும் பிரார்த்தனையும் முடிந்து சந்தூக்கை வெளிச்சமுள்ள இடத்துக்கு நகர்த்திவைக்க வேண்டியிருந்தது. தலைமாட்டின் பக்கமாக நின்ற நானும் தூக்கினேன். பத்தடி தள்ளி ட்யூப் லைட்டின் வெளிச்சத்தில் இறக்கி வைத்தோம். “தீதார் பார்க்கணும். சந்தூக்கத் தெறங்கஎன்று யாரோ ஒரு மக்கள் பிரதிநிதி குரல் எழுப்பினார். யோசிக்காமல் நான் சந்தூக்கின் மீது போர்த்திக் கட்டியிருந்த பச்சைத் துணியின் உருவாஞ்சுருக்கை அவிழ்த்தேன். உள்ளே வெண்ணிறக் கஃபனுக்குள் மய்யித். உச்சந்தலைக்கு மேல் திருகி வைத்துக் கட்டப்பட்டிருந்த கஃபன் முடிச்சை அவிழ்த்துத் துணியை விலக்கினேன். அப்துல் சமது சாஹிபின் சிரித்த முகம் தெரிந்த்து. (அல்லது மனப்பிரம்மையில் எனக்கு அப்படித் தெரிந்த்தோ என்னமோ? அவரை சிரித்த முகமாகத்தான் எப்போதும் நான் பார்த்திருக்கிறேன்.)

இறப்புச் செய்தியைத் தெரிவிக்கப் பயன்படுத்தப் படும் வார்த்தைகள் பலவும் சட்டென்று உள்ளீடற்று வெறும் தக்கையாக இருப்பதை உணர்ந்தேன். அவற்றின் போதாமை வெளிப்படையாக உருத்தியது. “.... காலமாகிவிட்டார் அல்லது “..... அகால மரணமடைந்தார்என்கிறோம். காலம் என்றால் என்ன என்று தெரியாமலேயே. “நீங்காத் துயில் அடைந்தார்”, “இறைவனடி சேர்ந்தார்”, “உயிர் நீத்தார்”  “இறப்பு எய்தினார்” “மரணம் அடைந்தார்இத்தியாதி இத்தியாதி எல்லாம் நம் வாயில் வெறும் தக்கை வாசகங்கள் என்றே தோன்றுகிறது.

வீடு வந்து மனைவியிடம் ஒரு போஸ்ட்-ஜனாஸா வருணனை பேசி முடித்த பின்பும் இது போன்ற சிந்தனைகளே மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. ஏதோ மளிகைப் பொருட்கள் வேண்டும் என்று சகதர்மினி சொல்ல எட்டு மணி வாக்கில் நாடார் கடைக்குச் சென்றேன். கடையில் வாங்கிக்கொண்டு நிற்கும்போது ‘டின் டின் டின்என்று சத்தம் கேட்ட்து. கடலை வண்டி வந்து வெளிச்சம் இல்லாத ஆட்டோ ஸ்டாண்ட் பகுதியில் நின்றது. கடலை வறுக்கும் பம்ப் ஸ்டவ்வின் வெளிச்சம் மட்டும்தான் தெரிந்த்து. ஆட்டோக்காரர்கள் கடலை வாங்கினார்கள். ஐந்து ரூபாய்க்குக் கடலை கேட்டு நானும் நின்றேன். மணலில் வறுபட்டுக் கொண்டிருந்த கடலைகளின் வாசம் மூக்கில் நுழைந்து (இழைந்து) மனமெல்லாம் நிறைந்தது. ஒரு சல்லடைக் குவளையை எடுத்து அப்படியே அவ்ற்றை மணலோடு அள்ளி மணலை மட்டும் வானலியில் வடிகட்டிவிட்டுக் கடலைகளை அலக்காக மேலே புரளவிட்டுப நாலைந்து தடவை புடைத்தார். தொலிச் சருகுகள் காற்றில் பறந்து போயின. ஒரு கூம்புப் பொட்டத்தில் இட்டுக் கொடுத்தார். வாங்கிச் சட்டைப் பையில் வைத்தேன். அதன் சூடு என் நெஞ்சில் இதமாகப் பரவியதை அலாதியாக ரசித்தேன். வீட்டிற்கு வந்து மனைவி மக்களுடன் கடலைகளைப் பகிர்ந்து ருசித்த கணங்களில்...

பிறகுதான் யோசித்தேன், அந்த கடலைக் கணங்களில் மரணம் பற்றிய சிந்தனைகள் எல்லாம் மனதை விட்டு முற்றிலும் மறைந்தே போயிருந்தன. ஒரு இழை அறுபட்டுக் காணாமல் போய்விட்டதைப் போல். ஒரே சப்ஜெக்டைப் போட்டுக் குடைந்த்தில் மனம் வெறுத்துப்போய் அப்படி ஒரு ஆட்டோ ஷட்டௌன் செய்துகொண்ட்து போலும். ஆனால் அந்தக் கடலையைச்  சுவைக்கையில் மரணத்தை மறந்து திளைத்து அனுபவித்தேனே, அது என்ன?

வாழ்வின் ருசி!  

8 comments:

 1. "....சூலூரில் இருந்து மீண்டும் ஒரு வாட‌கை வ‌ண்டிபிடித்து கோவைப்புதூர் வ‌ந்து சேரும்போது உச்சிவேளை தாண்டிவிட்ட‌து. 200 பேர் முத்தண்ணா‌ வீட்டு வாச‌லில் நிற்கிறார்க‌ள்.
  அண்ண்ன் உட‌ல் அருகில் அழுதுஅழுது க‌ண்ணீர் வ‌ற்றிய‌ நிலையில் க‌ர்பிணியான‌ அண்ணி,5 வ‌ய‌து ம‌க‌ன்,3 வ‌ய‌து ம‌க‌ள்.
  நாங்க‌ள் எல்லோரும் க‌த‌றுகிறோம். அப்பா ம‌ன‌ம் த‌ளராமல்‌ க‌ல் போல‌ இருக்கிறார்."ச‌ரி ச‌ரி சீக்கிர‌ம் த‌க‌ன‌த்துக்கு ஏற்பாடு செய்யுங்க‌ள்.போன‌வ‌ன் போய்ட்டான். அழுதால் திரும்ப‌ வ‌ரப் போகிறானா?" என்கிறார்.
  கூட்ட‌த்தின‌ரைப் பார்த்து, "என் ம‌க‌னுக்காக‌ யாராவ‌து ப‌ண‌ம் காசு செல‌வு செய்திருந்தாலோ, என் ம‌க‌னுக்குக் க‌ட‌ன் கொடுத்திருந்தாலோ என்னிட‌ம் கேட்டுப்பெற்றுக் கொள்ளுங்க‌ள்.அவ‌ன் க‌ட‌னாளியாக‌ப் போக‌க்கூடாது!"என்கிறார்.
  முத்தண்ண்ணாவின் உட‌லை எரித்த‌தும், ம‌றுநாள் சாம்ப‌லை எடுத்து வந்து
  ஸ்ரீர‌ங்க‌த்தில் அம்மா மண்டபத்தில் க‌ரைத்த‌தும், க‌ர்பிணியான‌ அண்ணியுட‌ன் இர‌ண்டு குழ‌ந்தைக‌ளை த‌ஞ்சைக்கு அழைத்து வ‌ந்த‌தும், அண்ணி மேலும் ஒரு பெண்குழ‌ந்தையை பெற்று அளித்துவிட்டு 1980ல் ம‌றைந்த‌தும், அப்பா 1985ல் இற‌ந்த‌தும், முத்தண்ணாவின் குழ‌ந்தைகளுக்குத் தாயும் த‌ந்தையுமாக‌ இருந்து அம்மா தாய்க் கோழி த‌ன் குஞ்சுக‌ளை சிற‌குக‌ளால் மூடிமூடிப் பாதுகாப்பது போல் 2007 வ‌ரை ,த‌ன் 84 வ‌ய‌து வ‌ரை, காப்பாற்றிய‌தும், இன்று அனைவ‌ரும் ந‌ல்ல‌ நிலையில் இருப்ப‌துவும் சொன்னால் சீரிய‌ல் போல‌ 1000 எபிசோட் போகும்."
  http://classroom2007.blogspot.com

  21 நவம்பர் 2010 அன்று எளியான‌ "கிடைக்காமல் போன ஆங்கிலப் பேராசிரியர்'
  என்ற ஆக்கத்தைக் காணவும்.

  அதனுடன் இக்கதையில் உள்ள வாசகங்களை ஒப்பிடவும்.
  "அவர் யாருக்காவது பணம் கொடுக்கவேண்டியிருந்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்க” என்று அவரின் தம்பி சந்தூக்கின் முன் நின்றுகொண்டு வரிசையில் நின்ற மக்களைப் பார்த்துச் சொன்னார்."

  ReplyDelete
 2. //இந்தப் பூமியில் நான் இல்லாத ஒரு நாள் நிச்சயம் வரப்போகிறது. எதைப் பார்த்தாலும் இந்த உணர்வே மனதில் எழுந்தது. நசிகேத்தன் ஞாபகம் வந்தான். அவன் மனதில் இதே உணர்வு எனக்கிருந்ததைப் போல ஆயிரம் மடங்கு அழுத்தமாக இருந்திருக்கும் என்று புரிந்துகொள்ள முடிந்தது. திருச்சுழியிலிருந்து புறப்பட்டுப் போய் திருவண்ணாமலையில் உள்ள ஒரு குகையில் ‘நான் இறந்துவிட்டேன்’ என்று சொல்லிக்கொண்டு கட்டையை நீட்டிப் படுத்துவிட்ட ரமணமகரிஷியின் மனதிலும் இந்த உணர்வு எத்தனை அழுத்தமாக இருந்திருக்கும் என்று வியந்தேன்.//

  கட உபனிஷத்தை இந்துக்களில் எத்தனை பேர் அறிந்து இருப்பார்களோ தெரியவில்லை. அதைப்போலவே ரமணரைப் பற்றியும்.தங்களுடைய விரிவான படிப்பு வியக்க வைக்கிறது.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 3. மக்கள் எல்லோரும் மரணத்தை கண்டு பயந்து ஓடுகிறார்கள். ஆனால்.. ஏ மரணமே! அவர்கள் உன்னை நோக்கி தான் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். - உருது மகாகவி அல்லாமா இக்பால்

  ReplyDelete
 4. ///மக்கள் எல்லோரும் மரணத்தை கண்டு பயந்து ஓடுகிறார்கள். ஆனால்.. ஏ மரணமே! அவர்கள் உன்னை நோக்கி தான் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். - உருது மகாகவி அல்லாமா இக்பால்/// வாவ்...அருமை...அருமை...

  ReplyDelete
 5. //ஒரே சப்ஜெக்டைப் போட்டுக் குடைந்த்தில் மனம் வெறுத்துப்போய் அப்படி ஒரு ஆட்டோ ஷட்டௌன் செய்துகொண்ட்து போலும். ஆனால் அந்தக் கடலையைச் சுவைக்கையில் மரணத்தை மறந்து திளைத்து அனுபவித்தேனே, அது என்ன?

  வாழ்வின் ருசி!//

  வாழ்வின் பல தருணங்களில் செயல்அற்று இருக்கும்போது (வியாபார உலக செயல் அல்ல) ஐம்புலன்களில் ஏதோ ஒன்று சட்டென்று இப்படி ஒரு ருசியைப் பிடித்துக் கொண்டுவிடுகிறது. இசை(காது),காட்சி(கண்),காமம் (தொடுகை),உணவு (வாய் ருசி),வாசனை(மூக்கு) என்று ஏதோ ஒன்று ருசியைக் காட்டிவிடுகிறது.(அதையும் 'ருசி' என்றே அழைப்பதேன்?) இதில் வறுகடலை...நானும் நுகர்ந்திருக்கிறேன். அருமையான பதிவு. மரணமும் வறுகடலையும்...என்ன காம்பினேஷன்...

  ReplyDelete
 6. வாழ்வின் ருசி கடைசி வரிகளில் கண்கள் நிறைந்தது நீரினால் .

  ReplyDelete
 7. எனது சச்சாவின் மரணத்தை கூட
  இருந்து பார்த்தது உண்மையில்
  மிகுந்த மன வருத்தத்தை கொடுத்தது
  கொடுத்து கொண்டு இருக்கிறது

  மரணம் ஒரு புரியாத புதிர் தான்

  ReplyDelete
 8. இது தொடக்கம் இன்னும் அகத்தை முழுமையாக உணர்ந்தால் புரத்தின் உண்மை புரியும் அப்போது மரணத்தை நாம் கனமில்லாமல் கைகொள்ள முடியும் அருமையான பகிர்வு நண்பரே

  ReplyDelete