Thursday, December 22, 2011

ஸ்கூல் ஆட்டோமதியம் மூன்றேகால் மணி என்பதை நம்பவே முடியவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டது போல் தோன்றியது. வானம் அவ்வளவு மப்பும் மந்தாரமுமாக இருந்தது. ஸ்கூட்டரை உதைத்துக் கிளப்பி, பின்னால் சகதர்மினியை வைத்துக்கொண்டு ஐம்பது கி.மி வேகத்திலிருந்து அறுபது கி.மியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தேன். பதறிப்போன சகதர்மினி மெதுவாகவே செல்லுமாறு மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து அள்ளிக்கொண்டு /  அழைத்துக்கொண்டு வரும் ஸ்கூல் ஆட்டோ மூனறரை மணிக்கெல்லாம் வந்துவிடும். அதற்குள் நாங்கள் வீட்டுக்குச் சென்றுவிட வேண்டும். தன்னைவிட இரண்டு மடங்கு எடை கொண்ட புத்தகப் பைகளைச் சுமந்து படியேறிவந்து வீட்டின் கதவு பூட்டியிருப்பதைப் பார்த்தால் இரண்டு பிள்ளைகளும் அழுது அரற்றித் தீர்ப்பார்கள். பெண்பிள்ளையாவது மூச்சைப் பிடித்துக்கொண்டு பையைச் சுமந்தபடி மேலே ஏறி வந்துவிடுவாள். அவளின் அண்ணனுக்கு அது ஆகவே ஆகாது. ஆட்டோவிலிருந்து இறங்கியவுடன் அவன் பையை வாங்கிக்கொள்ள நான் ஓடிவர வேண்டும். இல்லையெனில் அப்படியே தொப்பென்று தெருவில் போட்டுவிட்டு வருவான். மகள் முயற்சி திருவினையாக்கும் என்று நினைக்கிறாள் போலும். ஆனால் மகன் நிச்சயமாக தாவோ ஞானிதான்!வீட்டின் முன் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு மேலே பார்த்தபோது பிள்ளைகள் வந்திருக்கவில்லை என்று தெரிந்தது. ‘அப்பாடாஎன்று ஒரு பெருமூச்சினை அனுபவித்துவிட்டு நானும் அவளும் வீட்டினுள் சென்றோம். அவள் அடுக்களைக்குள் சென்றுவிட்டாள். நான் மடிக்கணினியை எழுப்பி இணையத்திற்குள் ப்ரவ்ஸ் செய்ய, அதாவது மேயத் தொடங்கினேன்.

“என்னங்க, மூனு நாற்பதாச்சு இன்னும் ஆட்டோ வரலியே? – அடுப்படியிலிருந்து அவள் கேட்டாள்.

“வர்ர நேரந்தானே...”  - கணினித் திரையிலிருந்து கண்ணெடுக்காமல் நான் சொன்னேன்.

மீண்டும் அதே போல் அவள் கேட்டபோது மணி நான்கு. அத்தனை தாமதமாவதற்கு நியாயம் தோன்றாததால் கணினியை அணைத்துவிட்டு எழுந்தேன். சரசரவென்று கைலியிலிருந்து பேண்ட்டுக்கு மாறி ஸ்கூட்டர் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன்.

“ஸ்கூல்ல போய் பாத்துட்டு வர்றென்...

ஸ்கூல் வாசலுக்குள் வட்டமடித்து ஸ்கூட்டரில் நான் நின்றபோது வாட்ச்மேன் சல்யூட் வைத்து மாலை வணக்கம் செய்தார்.

குடீவினிங், பிள்ளைங்க இன்னும் வரலியே?

“எல்லா ஆட்டோவும் அப்பவே போயிடிச்சே சார்

நான் குழம்பிக்கொண்டு நின்றேன். சீருடை அணிந்த நாலைந்து பிள்ளைகள் புத்தக மூட்டைகளைப் புல்லில் வைத்துவிட்டு நடைக்கட்டையில் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய க்ளாஸ் பிள்ளைகள். பள்ளி மைதானத்தில் ஒரு கும்பல் கிரிக்கட் விளையாடிக்கொண்டிருந்தது. அவர்களும் பெரிய க்ளாஸ் பசங்கள்தான். என்றாலும், பந்து பொறுக்கிப் போடும் உப்புக்குச் சப்பாணிகளாக வாண்டுகள் யாராவது இருக்கிறார்களா என்று பார்வையால் துழாவினேன்.


ஸ்கூட்டரைத் திருப்பி வீட்டிற்கு விட்டபோது மனதில் இருவிதமான உணர்வுகள் கலந்து வந்தன. பிள்ளைகளுக்கு என்னாயிற்று என்ற பயம் ஒருபக்கம். ஆட்டோ முன்பே வந்திருக்கும். வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு இந்த வாண்டுகள் என் பெரியம்மா வீட்டிற்குச் சென்றிருப்பார்கள். அதனால் பயப்படத் தேவையில்லை என்ற ஆறுதல் மறுபக்கம். இந்த ஆறுதலின் இருந்ததால் சகதர்மினியைப் பயமுறுத்திக் கொஞ்சம் விளையாட்டு காட்டலாம் என்றொரு எண்ணமும் மனதில் எழுந்து குதூகலித்தது. 

தெருவில் வரும்போதே பால்கணியில் நின்றபடி அவள் எட்டிப்பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. நான் மட்டும் தனியே வருவதைப் பார்த்துவிட்டு நெற்றிச் சுருக்கி ‘என்ன?என்று முகபாவனையால் கேட்டாள். நான் உதட்டைப் பிதுக்கிச் சிரித்தேன். மீண்டும் அதே கேள்வி. இப்போது கையும் சேர்ந்துகொண்டு கேட்ட்து.

“ஆட்டோலாம் அப்பவே போயிடிச்சாம். ஸ்கூல்ல பிள்ளைங்க இல்ல. பெரிம்மா வீட்ல இருப்பாங்கன்னு நெனக்கிறேன். கூட்டிட்டு வர்றேன்

பெரியம்மா வீட்டிலும் பிள்ளைகள் வரவில்லை என்பதைத் தெரிந்துகொண்டு திரும்பி வரும்போது மனதின் நிலை மாறிக் குழப்பமும் எரிச்சலுமாக இருந்தது. அது ஆட்டோக்காரரின் மீது கோபமாக மாறிக் கொண்டிருந்தது. தெருவில் ஃபுட்பால் விளையாடிக் கொண்டிருந்த பசங்களிடம் விசாரித்தேன். ஆட்டோ வந்த்தைப் பார்க்கவே இல்லை என்று சொன்னார்கள். போடியத்தா வீட்டிற்குள் போய் பார்க்கலாமா என்று காம்ப்பவ்ண்ட் அருகில் ஸ்கூட்டரை நிறுத்தினேன். அங்கில்லை என்று உள்மனம் சொல்லவே ஸ்கூட்டரை உருட்டிக்கொண்டு மீண்டும் வீட்டுக்கு வந்தேன். அண்டை வீட்டில் விசாரித்தபோதும் ஆட்டோ சத்தம் எதுவும் கேட்கவில்லை என்றே சொன்னார்கள். வயிற்றில் லேசாகப் பிசையத் தொடங்கியது.

ஃபோன் போட்டுப் பாருங்களேன்என்றாள் அவள்.

“பிலால் பாய் நம்பர்தான் இருக்கு. இவர் நம்பர நான் வாங்கி வைக்கலியே?என்றேன்.

பிலால் பாய்க்கு நண்பர் ஒருவர் நல்ல மனுஷன், நம்பகமானவர்என்று சான்றிதழ் தந்ததன் பேரில்தான் அந்த ஆட்டோவையே அமர்த்தினேன். மூன்று மாதங்களாக எந்தப் பிரச்சனையும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. சென்ற மாதம் பிலால் பாய் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகப் புறப்பட்டுப் போனார். அவரின் மச்சானைப் பொறுப்பில் அமர்த்தியிருந்தார். அந்த மச்சான் டிரைவர்தான் நாற்பது நாற்களாக ஓட்டிக்கொண்டிருக்கிறார். அவரின் பெயர்கூட எனக்குத் தெரியவில்லை. அவரின் நம்பரும் இல்லை.

“பிலால் பாய்க்கு மச்சான்தானே அவரு. ஃபோன் பண்ணிக் கேளுங்களேன், தெரியுமான்னு

சகதர்மினியின் உள்ளுணர்வு என் இலக்கியப் பிரக்ஞையைவிடப் பல மடங்கு துல்லியமானது என்பதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன். ஆகையால், மறு பேச்சு பேசாமல் செல்லெடுத்தேன். மறுமுனையில் செல்ஃபோன் மௌன விரதத்தில் இருந்த்து.

“எதுக்கும் திரும்பவும் போய் ஸ்கூல்லயே பாத்துட்டு வர்றேன்என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். ஒரு டேஜாவூ அனுபவம்போல் எல்லாம் மீண்டும் நடந்தேறின. (அதை நீங்கள் அனுபவிக்க ஆசைப்பட்டால் இக்கதையில் ‘மீண்டும் அதே போல் அவள் கேட்டபோதுஎன்று தொடங்கும் பத்தியில் ஆரம்பித்து ‘பார்வையால் துழாவினேன்என்பது வரை படிக்கவும்.)

இரண்டாம் முறையும் நான் தனியே வருவதைப் பார்த்த சகதர்மினியின் முகம் வெளிறிவிட்டது. அவள் கண்களில் நீர் நிறைந்து நின்றாள். என் மனதிற்குள் ஆட்டோ ஓட்டுநரின் மீது கோபம் குமுறியது. ஸ்கூட்டரை நிறுத்திக் கொண்டிருந்தபோது “ட்ர்ர்ர்..டொட்ரட்டொட்டொட்என்று ஆட்டோ வரும் ஓசை கேட்டுத் திரும்பினேன். அதன் முகத்தில் பச்சை நிறத்தில் பிலால் என்று எழுதியிருப்பது கண்ணில் பட்ட்து. மெல்ல ஊர்ந்து வரும் ஆட்டோவிற்குள் இருந்து பிள்ளைகள் கோரஸாக “யே...என்று கத்தும் சத்தம் காதில் மோதிற்று. ஆட்டோ நின்றதும் “யே...என்று மீண்டும் கத்திக்கொண்டு முக்கால் டஜன் வாண்டுகள் இரண்டு பக்கமும் வெளியே குதித்தார்கள். ஒவ்வொருவரின் கையிலும் ஒரு பலூன் இருந்தது. என் கொடுக்குகள் எல்லோருக்கும் டாட்டா சொல்லிவிட்டு மேலே ஓடினார்கள். அவர்களின் புத்தகப் பைகளையும் டிஃபன் பைகளையும் வாங்கிக்கொண்டே டிரைவரைப் பார்த்து, “என்னங்க இப்படிப் பண்ணிட்டீங்க? சொல்லாம கொள்ளாம எங்க போனீங்க?என்றேன்.

சதைப்பத்தான தன் மங்கோலிய முகத்தில் இயல்பாகப் பூத்த ஒரு சிரிப்புடன் அவர் சொன்னார், “பிலால்பாய் ஹஜ் முடிச்சு வந்துட்டார். திங்கக் கெளமைலேர்ந்து அவர் வருவார். அதுனால இன்னிக்குப் புள்ளைங்க எல்லோருக்கும் கேக், சாக்லேட், பலூன் வாங்கித் தந்தேன்.

சிரிக்கும் புத்தரைப் போல் அவர் சிரித்துக்கொண்டே இருந்தார். சட்டென்று மனதில் கவிந்துவிட்ட மௌனத்தின் ஊடே சில நொடிகள் அவரை நான் நோக்கி நின்றேன். குழந்தைகளின் நடுவே ஆட்டோவின் ஓட்டுநராக ஒரு குழந்தை அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.

3 comments:

 1. //மகன் நிச்சயமாக தாவோ ஞானிதான்!// :))

  //குழந்தைகளின் நடுவே ஆட்டோவின் ஓட்டுநராக
  ஒரு குழந்தை அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.//

  அருமை

  ReplyDelete
 2. ஒவ்வொரு நகர வாசியும் வாழ்க்கையில் ஒருமுறையாவது அனுபவித்துள்ள நரக வாதையின் வெளிப்பாடு இது. குழந்தைகள் பள்ளிக்குச் சென்று பத்திரமாக வீடு திரும்பும் வரை பெற்றொர் படும் துன்பத்தை நன்கு பதிவு செய்துள்ளீர்கள்.

  ReplyDelete