Monday, December 26, 2011

என்னுள்ளே என்னுள்ளே..



ஐந்து வரிகளில் கச்சிதமாக மதிப்புரை கோரி ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்னிடம் தரப்பட்டது. ஸ்பானிய மொழியில் மூலம் கொண்ட அந்த நூல் அவிலாவின் தெரசா (St.Teresa of Avila, 1515 – 1582 A.D) எழுதிய சுயசரிதை. அதனை ஆங்கில வழி தமிழில் புனித அவிலா தெரசா – அவரது வாழ்க்கை நூல்என்னும் தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார் முனைவர்.அந்தோனி குரூஸ் (திருச்சி தூய வளனார் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்.)

தியானத்தில் ஆழ்நிலைக்குச் சென்ற ஆன்மிகவாதி ஒருவரின் அனுபவப் பதிவுகள் என்னும் வகையில் இந்த நூல் என் மனதைக் கவர்ந்தது. குறிப்பாக, தரிசன்ங்கள் பற்றிய ஆய்வுகளுக்காகவும், உடல் X ஆன்மா என்னும் முரண் விளைவிக்கும் அனுபவங்களுக்காகவும் அவிலா தெரசாவின் சுயசரிதை பலராலும் வாசிக்கப்பட்டு விமரிசனங்கள் நிகழ்ந்துள்ளன. உளவியல் அறிஞர்களால் மீண்டும் மீண்டும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் ஆன்மிக ஆளுமைகளில் அவிலா தெரசா மிக முக்கியமான ஒருவர்.



நேற்று காலை இந்த நூல் என் கையில் கிடைத்தது. அதற்கு முந்திய நாள் மாலைதான் 23.12.2011 தேதியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் 'Visions of angels could just be lucid dreams' என்னும் தலைப்பில் ஒரு செய்தியைப் படித்திருந்தேன். லாஸ் எஞ்சல்ஸில் உள்ள ‘Out –Of-Body Experience Research Center’ –ல் மைக்கேல் ராதுகா என்பவரின் தலைமையில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவாக பைபிளில் கூறப்பட்டுள்ள தேவதூதர் மற்றும் தேவதைகளின் திருக்காட்சிகள் எல்லாம் வெறும் அறிதுயில் கனவின் விளைவுகளே என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

ஆன்மிக அனுபவங்களின் மீதான இது போன்ற உளவியல் மதிப்பீடுகள் பைபிளின் பதிவுகள் மீது மட்டுமன்றி அனைத்து மதங்களின் பதிவுகள் மீதும் செய்யப்பட்டுள்ளன. இந்த விமரிசன்ங்களைத் தாண்டி ஆன்மிகம் தன்னை நிறுவிக்கொள்ள வேண்டும் என்பதுதான் நியாயமானதும் அதன் இருப்பிற்கு அர்த்தம் வழங்குவதும் ஆகும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். எனவே இது போன்ற உளவியல் சார்ந்த பகுப்பாய்வுகளை ஆன்மிக நாட்டம் கொண்ட ஒருவர் பயில வேண்டும் என்றும் கருதுகிறேன்.

 

அவிலா தெரசா தன் சுயசரிதையில் ஆன்மிகப் பயணத்தில் தான் சந்தித்த இடர்ப்பாடுகளை எல்லாம் மறைக்காமலும் மறுக்காமலும் எழுதி வைத்திருக்கிறார். உடல் மற்றும் மனம் சார்ந்து எழுகின்ற சிக்கல்களைப் பதிவு செய்திருக்கிறார். உளவியல் பகுப்பாய்வாளனுத் தேவைப்படும் தரவுகளை அவரின் சுயசரிதையே வழங்கிவிடுவதைப் பார்க்கிறோம்.

 

அவிலாவின் தெரசா என்னும் ஆளுமையின்மீது நம் கவனம் ஈர்க்கப்படுவதற்கு முதல் காரணம் அவர் ஒரு பெண் என்பதே. ஆண்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அல்லது ஆண்கள் மட்டுமே வெளிப்பட்டுத் தெரியும் ஆன்மிகத்துறையில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் ஞானிகளை நாம் வாசிக்க முடிகிறது. அவ்வகையில் மீரா, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், ராபியா, மேபல் காலின்ஸ் என்று யாரையெல்லாம் சொல்வோமோ அவர்கள் ஒவ்வொருவரின் ஆளுமைக்கூறுகளில் சிலவற்றுடன் தெரசாவை நாம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.

 

அவிலா தெரசாவின் மீது உளவியல் உலகம் கொள்ளும் கவனத்திற்கான இரண்டாம் காரணம் அவர் தன் அனுபவங்களை விவரிப்பதற்குக் காதலின் மொழியைக் கையாளுகிறார் என்பது. ஆன்மிக இலக்கிய உலகில் இது புதிதல்ல. இந்திய பக்தி மரபிலும், சூஃபி மரபிலும் நாயக- நாயகி பாவனைகொண்டு எழுதப்பட்ட உன்னதமான இலக்கியங்கள் பல உள்ளன. இறைக்காதலின் அனுபவங்கள் என்னவென்றே அறியாத மக்களுக்கு அவர்கள் அறிந்த மனிதக் காதலின் கூறுகளை வைத்துத்தான் அவற்றை விளக்க வேண்டி வந்தது. மட்டுமல்ல, அதுவே வேறு எதனையும்விடச் சிறந்த மற்றும் எளிய வழியாகவும் இருந்தது.

 

குரு நித்ய சைதன்ய யதி LOVE & DEVOTION” என்னும் தலைப்பில் இது பற்றி மிக விரிவாகப் பேசியுள்ளார். அந்த நூலை எழுதுவதற்கு அடிப்படையாக நாயக-நாயகி பாவனையில் அமைந்த நான்கு இலக்கியங்களைத் தெரிவு செய்தார். சங்கரரின் சௌந்தர்ய லஹரி’, ஜெயதேவரின் ‘கீதகோவிந்தம்’, புனித ஜானின் கவிதைகள் மற்றும் புனித அவிலா தெரசாவின் ‘THE INTERIOR CASTLE’. அந்த நூலின் முன்னுரையில் அவர் இந்தப் பொருண்மை பற்றி, அதாவது காதலும் ஆன்மிகமும் பற்றிச் சொல்வதைக் கவனிப்போம்:

“பக்தியின் ஆன்மிக அனுபவங்களைக் கூர்ந்து பார்க்கும்போது அதன் அடியாழத்தில் காமத்தின் ஈர்ப்பு இருப்பதைக் கவனிக்க முடியும். இது எதிர்பாலினருக்கிடையே இயல்பாக ஏற்படும் இச்சையையோ அல்லது ஓரினக் கவர்ச்சியில் உள்ளவர்களுக்கிடையே உள்ள இச்சையையோ போன்றதுதான். முதல்வகைக் காதலின் கம்பீரமான, மென்மையின் சாயலை கிருஷ்ணனின் மீதான ராதையின், மீராவின் பக்தியிலும், கிறிஸ்துவின்மீது மேரி மெக்தலேனாவும் புனித தெரசாவும் கொண்டிருந்த பக்தியிலும், அன்னையின்மீது சங்கரரும், ஸ்ரீராமகிருஷ்ணரும், நாராயண குருவும் கொண்டிருந்த பக்தியிலும் காண முடியும். இரண்டாம் வகையிலான காதலை புத்தரின் மீதான ஆன்ந்தனின் பக்தியிலும், ராமகிருஷ்ணரின் மீதான விவேகானந்தரின் பக்தியிலும் கிறிஸ்துவின் மீதான புனித ஜான் கொண்ட பக்தியிலும் காணலாம்.

 

“இங்கு ‘காமம் என்கிற வார்த்தை வியாபார நோக்கத்துடன் மலிவான பத்திரிகைகளில் உபயோகப்படுத்தப்படுகிற ‘உடல் சார்ந்த இச்சைஎன்கிற பொருளில் உபயோகிக்கப்படவில்லை. புனித அகஸ்டின் சொல்கிற ‘கடவுளின்பால் ஒருவன் உணர்கிற உத்வேகமும் உணர்ச்சிப் பெருக்கும் கொண்ட ஈர்ப்புஎன்னும் பொருளிலேயே அர்த்தம் காணப்படுகிறது. மனித உணர்வுகளிலேயே கண்ணியமானதும் மிகுந்த ஆன்ந்தமளிப்பதும் காதல்என்கிற உணர்வு மட்டுமே என்பதில் சந்தேகமில்லை. காதல் கண்ணியமும் தீவிரமும் கொண்ட நிலையில் காதலர்களைப் பேரான்ந்தத்திற்கு இட்டுச் செல்கிறது. அவர்களை ஒன்றிணைக்கிறது. அந்நிலை நிர்வாணத்தை, கைவல்யத்தை, மஹாலயத்தைப் போன்றதாகும். இவை கிறிஸ்தவத்தில் சொல்லப்படும் மோட்சத்தையும் விமோசனத்தையும் ஒத்ததாகும்.

(நூல்: அனுபவங்கள் அறிதல்கள், கட்டுரை: மானுட உணர்வுகள், தமிழாக்கம்: சூத்ரதாரி, பக்.146,147)

 


நித்ய சைதன்ய யதி உதாரணம் காட்டியிருக்கும் ஆன்மிக ஆளுமைகளின் பட்டியலில் நான் சேர்க்க விரும்பும் சூஃபி ஆளுமைகள் இருவருண்டு. ஷம்ஸ் தப்ரேஸும் அவரின் புகழ்மிகு சீடர் மௌலானா ரூமியும். பாரசீக மொழியின், சூஃபிக் கவிதையுலகின் சிகரமாகக் கருதப்படுவது ரூமி எழுதிய ‘மஸ்னவிஎன்னும் காவியம். அவர் எழுதிய இன்னொரு நூல் அதைவிடவும் அளவால் பெரியது. தன் குருநாதர் மீது ரூமி எழுதிய ஆழமான காதல் பாடல்களின் – கஸல்களின் தொகுப்பு அது. “தீவானெ ஷம்ஸெ தப்ரீஸ்என்று அழைக்கப்படும் அந்த நூலில் 3230 கஸல்களும், 2000 ருபாயாத்துகளும் இதர கவிதைகளுமாக நாற்பதாயிரம் கவிதை வரிகள் உள்ளன. (மஸ்னவியில் 25000 வரிகள்.)

 

“உன் ஒளியில்

காதல் செய்யக் கற்கிறேன்.

உன் அழகில்

கவிதைகள் செய்வதற்கு.

என் நெஞ்சில் நடனம் செய்கிறாய் நீ.

யாரும் உன்னைக் காணாத அவ்விடத்தில்

நான் உன்னைப் பார்க்கிறேன்.

அந்தப் பார்வையே

இந்தக் கலை ஆகிறது.

 

தீவானே ஷம்ஸெ தப்ரீஸ் என்னும் கடலிலிருந்து இது ஒரு துளி. இப்படி ஆயிரக்கணக்கான வரிகளை ஒருவர் தன் குருவின்மீது எழுதுகிறார் என்றால் அதைப் பாமரர்களின் சிற்றறிவு எந்த விதத்தில் புரிந்துகொள்ளும்? சமீப காலத்தில் கோல்மன் பார்க்ஸின் மொழிபெயர்ப்பு மூலம் ரூமியின் கவிதைகள் அமெரிக்காவில் பிரபலமானபோது இந்த குரு-சிஷ்ய உறவு ‘கேசமூகத்தினரால் எதார்த்தத்திலேயே ஓரினப் பாலுறவாக விளங்கிக் கொள்ளப்பட்ட்து. பகுத்தறிவுரீதியில் இஸ்லாத்தைப் பேசுபவர்களும் அப்படியே விளக்கம் சொல்லக்கூடும்.

 

மேற்சொன்ன கதிதான் அவிலா தெரசாவுக்கும் நேர்ந்தது. அவரின் வரிகள் குறியீட்டுத் தளத்தில் அன்றி நேரடிப் பொருளாகவே சிலரால் விளங்கவும் விளக்கவும் பட்டன. அப்படிக் காண்பவர்கள் ஃப்ராய்டிய உளவியல் ரீதியில் பகுப்பாய்வு செய்வதற்குரிய கணிசமான புள்ளிகள் அவரின் வாழ்வில் இருந்தன.

 

தன் வழிபடு தெய்வத்திற்கென்று தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்து பக்தியில் கரைந்து போகும் பெண் ஆளுமைகளைப் பொருத்த வரை அந்தக் காதலின் விதை அவர்களின் பிஞ்சு வயதிலேயே மனதில் ஊன்றப்படுவதைக் காணலாம். மீரா, ஆண்டாள், காரைக்கால் அம்மையார்... திருவரங்கத்தில் உள்ள துலுக்க நாச்சியார் கதையும் நாம் அறிந்ததே.

 

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுது வைத்தேன்...

“ஊனிடை ஆழிசங்குத்தமர்க் கென்று

உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்

மானிடவர்க் கென்று பேச்சுப்படில்

வாழகில்லேன் கண்டாய்...”

என்று ஆண்டாள் பாடுகின்ற வரிகளில் இதை நாம் தெளிவாகவே உணரலாம்.

 

இது போன்ற பாடல்கள் பாவிக மொழியின் பரிபாஷை அறிந்தவர்களுக்கானது மட்டுமே. அறிவியலின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் போன்றே இவற்றையும் கையாள வேண்டும். நாயக-நாயகி பாவனை பெண்ணுடலின் அம்சங்களை ஆன்மிகத் தளத்திற்கான பொருளுணர்த்தும் குறியீடுகளாகவே பேசுகிறது. மேற்கண்ட பாடலில் இடம்பெறும் ‘தடமுலைகள்என்பது குறியீடாக நின்று உணர்த்தும் அர்த்தம் என்ன என்று வினவலாம். பக்தி என்பதைத்தான் அது உணர்த்துகிறது.

 

முற்றிலாத பிள்ளைகளோம் முலைகள் போந்திலோமைஎன்று ஆண்டாள் பாடும்போது “பக்தி நெறியில் போதிய முதிர்ச்சி அடையாத ஆரம்ப நிலைச் சாதகர்கள்என்பதாகத்தான் விளங்கிக்கொள்கிறேன்.

 

“தழுவல் நயந்தேங்கிக்

குமையும் நின் ஸ்தனங்கள்

தீண்டிட விம்மென்னும்.

இக்கலசங்களை என் நெஞ்சில் இறக்கி வை, ராதா!

கனலும் காதலின் தீயை அணை” (12:5)

என்று ஜெயதேவர் தன் கீதகோவிந்தத்தில் பாடும் வரிகளின் உட்பொருளாக, “பக்தியும் பக்தனுக்கு ஒரு சுமையே. அது முதிரும் நிலையில் முழுமையாக இறைவனிடம் சரணடைவதன் மூலமே அதன் பாரத்தைவிட்டும் அவன் விடுதலை அடைகிறான்என்றே நான் விளங்கிக் கொள்கிறேன்.



டேவிட்.சி.ஸ்காட் (DAVID C.SCOTT) என்னும் கிறிஸ்துவ இறையியல் பேராசிரியர் எழுதிய அருமையானதொரு ஆராய்ச்சிக் கட்டுரை “RADHA IN THE EROTIC PLAY OF THE UNIVERSE. ஜெயதேவரின் கீதகோவிந்தத்தின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள இந்த ஆய்வில் அதன் ஆன்மிகத் தொனிகளை விளக்குகிறார். கிறிஸ்துவ சமய இலக்கியப் பரப்பில் இது போன்ற நாயக-நாயகி பாவனையில் அமைந்த நூல்கள் அதிகமாக இல்லை என்பதையும் இருப்பவை இத்தனை ரஸமிக்கதாக இல்லை என்பதையும் கிறிஸ்துவ மனத்தில் அதற்கான தயக்கம் இருப்பது பற்றியும் குறிப்பிடுகிறார். இறுதியாக ஜெயதேவரின் பாடல்களோடு பழைய ஏற்பாட்டில் உள்ள ‘SONG OF SONGS’ எனப்படும் சாலமோனின் பாடலை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

 

சாலமோனின் கீதம் என்றழைக்கப்படும் இந்தப் பாடலைக் கொஞ்சம் கவனிப்போம். நாயக-நாயகி பாவனையில் அமைந்த இந்தப் பாடலே கிறிஸ்துவ சமய இலக்கியப் பரப்பில் அப்பொருண்மையில் கிடைக்கின்ற முதல் பாடலாகும். அவ்வகையில், ஆன்மிக அனுபவங்களைக் காதலின் மொழியில் பேசுவதற்கு இப்பாடலே கிறிஸ்துவ ஞானிகளுக்கு முன்னோடி / முன்மாதிரி. இப்பாடலில் உள்ள காமிய வருணனகளின் குறியீட்டுப் பொருள் கிறித்துவ ஆன்மிகவாதிகளால் அவ்வப்போது விளக்கப்பட்டு வந்துள்ளது. (யூதர்களுக்கும் இப்பாடல் மிகவும் முக்கியமானது. அதனை அவர்கள் ஹீப்ரூ மொழியில் வைத்துப் பயில்கிறார்கள். இறைத்தூதர் சாலமோனுக்கும் ஷீபாவின் அரசிக்கும் இடையிலான காதல் உறவை இறைவனுக்கும் இஸ்ரேலுக்குமான உறவின் குறியீடாக அவர்கள் விளக்குகின்றார்கள். கி.பி.90-ம் ஆண்டு கூடிய யூதமத குருமார்களின் சபையில் (COUNCIL OF JAMNIA) ரப்பி அகீபா இவ்வாறு பேசினார்: “இஸ்ரவேலுக்கு இந்த மகாகீதம் (SONG OF SONGS) வழங்கப்பட்ட நாளுக்கு நிகராக முழு உலகிலும் வேறு எதுவும் இல்லை. வேதத்தின் அனைத்து எழுத்துக்களும் புனிதமானவைதாம் என்றாலும் கீதங்களின் கீதம் புனிதங்களின் புனிதமாகும். (the Song of  Songs is the Holy of  Holies)”).

 

“உன் முலைகள் மதுவினும் சிறந்தவை

கமழும் உன் நறுமணம்

அனைத்து திரவியங்களினும் மேலானது” (1:1,2)

என்னும் வரிகளுக்கு நைஸாவின் புனித க்ரிகோரி (கி.பி.335-394) தருகின்ற உட்பொருள் விளக்கம்: “என் கருத்தில் இந்த வரிகள் சுட்டுவது மேலோட்டமானதோ முக்கியத்துவமற்றதோ அல்ல. தெய்வீக ஸ்தனங்களின் பாலுடன் மதுவில் பெறப்படும் களிப்பை ஒப்பிட்டு நாம் அறிந்துகொள்வது என்ன எனில், நான் நினைக்கிறேன், அறிவியல் – கற்பனைத்திறன் – அவதான சக்தி என்று மனிதக்கல்வி அனைத்தும் தெய்வீக்கல்வியின் (ஆன்மிகக் கல்வியின்) எளிமையான ஊட்டத்திற்குக் கூட நிகராகாது. குழந்தைகளின் உணவான பால் முலைகளில் இருந்து வருகிறது. ஆனால் மது, அதன் வலுவாலும் சூடேற்றும் தன்மையாலும் வளர்ந்தவர்களுக்கானது. எனினும், இவ்வுலகின் முழுமை பெற்ற கல்வி தெய்வீக உலகின் பிள்ளைத்தனமான கல்வியைவிடத் தாழ்ந்ததே. எனவே தெய்வீக ஸ்தனங்கள் மனித மதுவினும் சிறந்தவை; தெய்வீகத்தின் நறுமணம் அனைத்து திரவியங்களினும் மேலானது.

 

இப்போது நான் எழுந்து

நகரின் அகன்ற சாலைகளில் செல்வேன்,

என் ஆன்மாவின் காதலனைத் தேடி.

நான் தேடினேன்

ஆனால் அவனைக் காணவில்லை.” (3:2)

என்னும் வரிகளுக்கு சிலுவையின் புனித ஜான் (24.06.1542-14.12.1591) தருகின்ற விளக்கம்: “என்னைப் புலம்பவிட்டு, என் காதலனே, எங்கே மறைந்தாய் நீ?காரணம் என்னவெனில், அவன் மறைந்திருக்கின்றான்; அவனைச் சந்தித்து அனுபவிக்க நீ உன்னை மறைக்கவில்லை. மறைந்திருக்கும் பொக்கிஷத்தைத் தேடும் எவரும் அது இருக்கும் மறைவிடத்திற்குள் ரகசியமாய்ப் புகவேண்டும். அதனைக் கண்டடையும் போது அந்தப் பொக்கிஷத்தைப் போன்றே அவனும் மறைக்கப்படுவான். உன் காதலனே விளைநிலத்தில் மறைந்த பொக்கிஷம். எனவே, ஞானமுள்ள வணிகன் அதனைப் பெற தன் உடைமைகள் அனைத்தையும் விற்றுவிட்டான் (மத்தேயு:13:44). உன் ஆன்மாவெ அந்த விளைநிலம். அவனைக் கண்டடைய நீ உன் உடைமைகளையும் அனைத்துப் படைப்புக்களையும் மறந்துவிட்டு உன் ஆன்மாவின் அந்தரங்க உள்ளறையில் உன்னை ஒளித்துக்கொள். அங்கே, உன் முதுகின் பின்னால் (அனைத்துப் பொருட்களுக்கும் உன் இச்சை என்னும்) கதவைச் சாத்திவிட்டு நீ உன் ஆண்டவரிடம் தனிமையில் பிரார்த்திப்பாயாக (மத்தேயு:6:6). அவனுடன் மறைந்திருந்து, மறைவில் அவனை நீ அனுபவிப்பாய், மறைவில் அவனை நீ காதலிப்பாய், அவனைச் சுகிப்பாய், மறைவில் அவனில் நீ பரவசம் கொள்வாய், அதாவது, அனைத்து மொழிகளையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் ஆவாய்.

 


சிலுவையின் புனித ஜான், அவிலா தெரசாவின் சமகாலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. (அவிலா தெரசாவைவிட ஜான் இருபத்தேழு ஆண்டுகள் இளையவர்.) அவிலாவிற்கு அருகில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்த இவர் பால்ய பருவத்தில் தந்தையை இழந்து வறுமையில் வாடி, இக்னேஷியஸ் லொயோலாவின் இயக்கத்தைச் சேர்ந்த பள்ளியில் கல்வி கற்றார். தன் இருபத்தோராம் வயதில் கார்மெலிய சபையில் சேர்ந்தார். (அவிலாவின் தெரசாவும் இந்தச் சபையைச் சேர்ந்தவரே. இச்சபை கி.பி.12-ம் நூற்றாண்டில் துவங்கப்பட்டது. ஜெருசலேத்திற்குப் பாதயாத்திரை செய்யும் துறவிகளால் கார்மெல் என்னும் மலையில் திட்டமிடப்பட்டதால் இச்சபை அந்த மலையின் பெயரால் அழைக்கப்படுகிறது. தற்போது இஸ்ரேலின் விளிம்பில் மத்தியத்திரைக்கடலின் அருகில் இருக்கும் கார்மெல் மலைக்கு ‘ஜபல் மார் இல்யாஸ்’ (எலிஜாவின் மலை) என்னும் பெயரும் உண்டு.) ஜான், பின்னர் ஃப்ரே லூயிஸ் தெ லியான் என்பவரிடம் கிறிஸ்துவ இறையியலைப் பயின்றார். (இந்த லியான் ‘சாலமோனின் கீதம்பாடலை ஸ்பானிய மொழியில் பெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) 1567-ம் ஆண்டு மதினா தெல் காம்போ என்னும் ஊரில் அவிலா தெரசாவை அவர் சந்தித்தார். அவிலா தெரசா கார்மெலிய இயக்கத்தில் பல சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டுவந்தார். ஜான் 1577 வரை அவிலா தெரசாவிற்குப் பக்கபலமாக நின்று பணியாற்றினார். இந்த இருவரின் தொண்டர்கள் மரபான கார்மெலிய சபையிலிருந்து விலகித் தங்களை “DISCALCED CARMELITES” – வெற்றுப்பாதக் கார்மெலைட்டுகள் என்று அழைத்துக் கொண்டார்கள். அவிலா தெரசாவும் புனித ஜானும் கொண்டுவந்த சீர்திருத்தங்கள் மிகவும் கடுமையானவை என்று மரபான கார்மெல் குருமார்கள் கருதினார்கள். அனால் இவர்கள் இருவரும் எழுதிய ஆன்மிக அனுபவப் பதிவுகளில்தான் நாயக-நாயகி பாவனை காணப்படுகிறது என்பது மேலோட்டமாகப் பார்க்கையில் முரண்பாடாகத் தெரியலாம். மட்டுமல்ல, அவர்களைச் சந்தேகிக்கவும் தூண்டலாம். அப்படி நடக்கவும் செயத்து. மரபான சபை இருவரையும் கலகக்காரர்களாகக் கருதியது. (ஓஷோவின் சொல்லாடலில் ‘கிளர்ச்சியாளர்கள் REBELS. கிளர்ச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதிஎன்பார் அவர்!)

 

என் ஆன்மாவை அதன் ஆழ்மையத்தில்

மென்மையாய்க் காயப்படுத்தும்

காதலின் ஜீவ சுடரே!

இப்போது நீ முரடல்ல என்பதால்

இக்கணமே இணைவாய்.

அதுவே உன் விருப்பம் எனில்

இந்த இனிய சந்திப்பின்

திரையைக் கிழித்துச் செல்

(THE LIVING FLAME OF LOVE:1)

 

அந்த இனிய இரவில் ரகசியமாய்

யாரும் என்னைப் பாராதபோது

நானும் எவரையும் பாராமல்

என் மனதில் புதைந்த ஆசை தவிர

விளக்கோ வழிகாட்டியோ இன்றி

இந்த ஒளி என்னை இட்டுச் சென்றது

நன்பகல் வெளிச்சத்தினும் நிச்சயமாய்,

எனக்காக அவன் காத்திருக்கும் இடத்திற்கு

யாரும் வராத அந்த இடத்திற்கு.

என்னை வழிநடத்திய அந்த இரவு,

விடியலினும் இனிதான அந்த இரவு,

காதலியைக் காதலியுடன் இணைத்த அந்த இரவு,

காதலி காதலனில் கரைந்தாள்.

அவனுக்கு மட்டுமென்றே வைத்த

என் மென்முலைகளின் மீது

தலை சாய்த்திருந்தான் அவன்

என் விரல்கள் அவனை வருடியிருக்க

தேவதாரு மரங்கள் காற்றில் அசைய.

(DARK NIGHT OF THE SOUL)

 

என்னைப் புலம்பவிட்டு, என் காதலனே!

எங்கே மறைந்தாய் நீ?

என்னைக் காயம் செய்துவிட்டு

அம்பு போல் பறந்துவிட்டாய்

உன் பின்னால் ஓடிவந்தேன் அழுதபடி

ஆனால் நீ சென்றுவிட்டாய்.

 

மந்தைகளுடன் மலையேறும் இடையர்களே!

நான் பெரிதும் நேசிக்கும் அவனைக் கண்டால்

சொல்லுங்கள்

நான் மருகித் தவிக்கிறேன் என்று

சாகிறேன் என்று.

(THE SPIRITUAL CANTICLE: 1,2)

 

புனித ஜானின் மீது மரபார்ந்த குருமார்கள் கோபம் கொண்டதில் வியப்பேதும் இல்லை. இறைவனுடன் இணைவது பற்றி இப்படித் தளையற்ற சுதந்திரத்துடன் எழுதினால் வேறு என்ன நடக்கும்? இஸ்லாமிய உலகில் வரட்டு அறிஞர்களிடம் சூஃபி ஞானி மன்சூர் ஹல்லாஜ் அடைந்த கதிதான் ஜானுக்கும் வாய்த்தது!

 

இடையில் மறைந்த இழை மீண்டும் கிடைத்துவிட்டது. அவரைப் பிராயம் தொடங்கி...அவிலா தெரசாவின் மனதில் கிறிஸ்துவின் மீதான ஆழமான காதல் அவரின் சிறு பிராயத்திலேயே விதைக்கப்பட்டுவிட்டது. அவருடைய பிள்ளைப் பருவத்தை, கார்மெல் சபையில் சேர்வதற்கு முன்புள்ள பருவத்தை இரண்டு காலகட்டங்களாகப் பிரிக்கலாம். அவை ஒன்றுக்கொன்று முரணான போக்குடையவை. உளவியலின் பார்வையில் மிகவும் கவனத்திற்குரியவை.

(தொடரும்...)  

 

 

 

 

4 comments:

  1. //இறைக்காதலின் அனுபவங்கள் என்னவென்றே அறியாத மக்களுக்கு அவர்கள் அறிந்த மனிதக் காதலின் கூறுகளை வைத்துத்தான் அவற்றை விளக்க வேண்டி வந்தது. மட்டுமல்ல, அதுவே வேறு எதனையும்விடச் சிறந்த மற்றும் எளிய வழியாகவும் இருந்தது.// இதை எடுத்துவிட்டால் வைணவமே இல்லை...ஆனால் இது இல்லாவிடினும் சைவம் உண்டு...அருமையாக எழுதுகிறீர்கள்...உங்கள் பார்வையில் நல்ல புத்தகங்களை தனியே பட்டியல் குடுக்கலாம். இந்த புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கு உதவும். நன்றி!

    ReplyDelete
  2. //அவரின் வரிகள் குறியீட்டுத் தளத்தில் அன்றி நேரடிப் பொருளாகவே சிலரால் விளங்கவும் விளக்கவும் பட்டன//

    இதில் கொடுமை என்னவெனில் குறியீடுகளை அந்த மதத்தினர் தவறாகப் புரிந்து கொள்வது என்பது ஒரு முக்கியமான பிரச்னை...அதே குறியீடுகளை மாற்று மதத்தினர் புரிந்துகொள்வது என்பது இன்னும் மோசம்! உங்கள் பதிவுகள் புரிந்து கொள்ள உதவுகிறது. இணையதளத்தில் முக்கியமான வலை என்றே உணர்கிறேன்.

    ReplyDelete
  3. //“பக்தியும் பக்தனுக்கு ஒரு சுமையே. அது முதிரும் நிலையில் முழுமையாக இறைவனிடம் சரணடைவதன் மூலமே அதன் பாரத்தைவிட்டும் அவன் விடுதலை அடைகிறான்” என்றே நான் விளங்கிக் கொள்கிறேன்.//

    இதுவே மிக சுலபமானதும் இதுவே மிக கடினமானதுமாய் இருப்பதுவும். உன்னதமானதை முரண்பாடுகள் கொண்டுதான் புரிந்து கொள்ளவும் விளக்கவும் முடிகிறது...

    ReplyDelete
  4. ஸ்ரீராமகிருஷ்ணர் தன் சீடர்களிடம் வைத்த அன்பை மேற்கத்திய உளவியல் என்னும் சோதனைக் குழாயில் இட்டு, ஓரினச்சேர்க்கையின் கூறுகள் என்று சொன்ன மேதாவிகள் உண்டு.நீங்கள் சொல்லும் செய்தியைப் புரிந்து கொள்பவர்கள் மிகவும் சொற்பமே!

    ReplyDelete