Friday, January 6, 2012

என்னுள்ளே என்னுள்ளே... (தொடர்ச்சி)
 அவிலா தெரசாவின் இளம்பிராயத்தின் முதற்கட்டத்தை அவரின் ஏழாம் அகவையிலிருந்து சில வருடங்கள் வரை என்று கூறலாம். அக்கால கட்டத்தில் அவர் தன் அண்ணனான ரொட்ரிகோவுடன் சேர்ந்து மூர் இனத்தினர் வாழும் பகுதிக்குச் சென்று கிறிஸ்துவுக்காக உயிரை அர்ப்பணிக்க வேண்டும் என்று முயல்வதைக் காண்கிறோம். ஆனால் அந்த முயற்சி நிறைவேறவில்லை. தன் வீட்டின் தோட்டத்தில் சக வயதுப் பிள்ளைகளுடன் அவர் விளையாடும்போது கிறித்துவ நாடோடி ஞானிகள் போல் தம்மை பாவித்துக் கொண்டு குகைகள் அமைத்து அதில் தியானத்தில் ஈடுபடுவது போல் விளையாடியிருக்கிறார்.

 

ஆனால் அவர் டீனேஜ் என்று சொல்லப்படும் விடலைப் பருவத்திற்குள் நுழையும்போது அவரது மனோபாவத்தில் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதுபற்றி “புனித அவிலா தெரசாவின் வாழ்க்கைநூலின் முன்னுரையில் சொல்லப்பட்டிருப்பதாவது:

“ஏறத்தாழ இக்காலத்தில்தான் இளம்பெண்ணாக இருந்த தெரசாவின் பக்தி குறைந்தது. பல்வேறு சாகச்ச் செயல்களைப் புரிந்த வீர்ர்களைப் பற்றியும் அவர்களின் சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைக்கும் அற்புத நவிற்சிக் கதைகளை விரும்பி வாசிக்க ஆரம்பித்தார். மேலும் தனது பெண்மையின் பொலிவை மெருகூட்டவும் திருமணம் செய்யவும் வேண்டுமென்ற திட்டமும் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சாகசச் செயல்களைப் பற்றியும், சாதனை பற்றியும் இரசித்துக் கற்பனையில் மிதந்த தெரசா, தானும் தன் சகோதரனோடு சேர்ந்து இந்த வீரதீரச் செயல்களை மையமாக வைத்துக் கதை ஒன்று எழுதினார். தெரசாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இயேசு சபையைச் சேர்ந்த ரிபேரா அந்தக் கதை சிறப்பாக அமைந்திருந்தது எனக் கூறுகிறார்.

“தெரசாவின் தாய் 1528-ம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்தார். அதன் பின்னர் தெரசா தன் அத்தை டோனா எல்வீராதே செப்பீதா என்பவரின் மகன்களுடன் அதிக அன்புடன் பழகிய காரணத்தாலும், தன்னைப் பக்தி வழியிலிருந்து பிரித்துக் கொண்டிருந்த வேறொரு முன்பின் தெரியாத உறவினரோடு நட்புறவு கொண்டிருந்ததாலும் வீட்டிலிருந்து எதிர்ப்புக்கு உள்ளானார். பிந்திய காலத்தில் தெரசா தனது வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது இதற்காக வருத்தப்பட்டது மட்டுமல்ல; தனது ஆரம்பகால ஆர்வங்களைத் திசைதிருப்பிய விருப்பமற்ற சூழ்நிலைகள் இவை என்று கூறுகின்றார். .... தெரசாவுக்கு அப்போது பதினாறு வயது.” (பக்.3,4)


 

முதற்கால கட்டம் அவருடைய ஆன்மிக வாழ்வின் விதைப்பருவம் என்பதாகவும் இரண்டாம் காலகட்டம், அவிலா தெரசாவே வருத்தப்பட்ட்து போல் ஆன்மிகத்திற்கு எதிரான போக்கு கொண்ட காலகட்டமாகவும் தெரியலாம். ஆனால் உளவியல் பகுப்பாய்வு மூலம் அணுகும்போது இந்தக் காலகட்டமும் அவரின் ஆன்மிக ஆளுமை உருவானதற்குரிய முக்கியமான கூறுகளைக் கொண்டிருப்பதை விளங்க இயலும்.

 

எந்த ஒரு நபருக்கும் நிகழ்வதைப் போலவே அவர் தன் டீனேஜில் அதற்குரிய உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களை அடைந்திருக்கிறார். இந்த இடத்தில் ஒரு விஷயம் சொன்னால் பொருத்தமாக இருக்கும். பல வருடங்களுக்கு முன் ஒரு சிறுவன், வீட்டை விட்டு விலகி வந்து, தன்னை ஒரு துறவியாக அறிவித்துக்கொண்டு குட்டிச் சாமியார்என்னும் பெயரில் பிரபலமாகித் தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டார். தொலைக்காட்சியில் அவரின்பேட்டியை நான் பார்த்திருக்கிறேன். பல மந்திரங்களை, ஞான வாசகங்களை எல்லாம் மனனம் செய்து வைத்துக்கொண்டு பேச்சுத் திறமையால் சக்கை போடு போட்டார். அப்போது நான் என் நண்பர்களிடம் சொன்னேன், “இவர் இன்னும் சோதனைக் கட்டத்திற்கே வரவில்லை. அதற்குள் இவரை சித்தி அடைந்த ஒரு ஞானியாக மக்கள் கொண்டாடுகிறார்கள். இப்போதுதான் பத்து வயதோ என்னவோ ஆகிறது. இன்னும் நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் சோதனை கட்டமே ஆரம்பமாகும். அதற்கப்புறம் குறைந்தது இருபது வருடங்களாவது சாமியார் தன் ஆன்மிக வளர்ச்சியை நிரூபித்தாக வேண்டும். அப்போதும் அவர் குட்டிச் சாமியாராகவே இருப்பாரானால் ஆன்மிகத்தில் அவர் வளரவில்லை என்று தெரிந்துவிடும்!

 

அவிலா தெரசா தன் டீன் பருவத்தில் ஒரு சாகசவீரனைத் தன் வாழ்வின் கதாநாயகனாகக் கற்பனை செய்தது, தன் பெண்மையின் பொலிவை மெருகூட்டிக் கொண்டது ஆகிய செயல்கள் மிகவும் இயற்கையானவை என்றே கருதுகிறேன். அவருடைய கற்பனைப் புலன் வலுப்பெற்று வளர்ந்த காலகட்டம் இது என்னும் கோணத்தில் இக்கட்டம் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றது. அவர் தனக்கு அவ்வயதில் ஆண் நண்பர்களைத் தேடிக்கொண்டதை அவருடைய நாட்டின் கலாச்சாரச் சூழல் சார்ந்து பார்க்கவேண்டும். இந்த இடத்தில் கண்ட கற்பனைகளையும் செய்து அவரின் வாழ்க்கைக்குள் துழாவ வேண்டிய அவசியம் இல்லை. தன் ஆன்மிக வாழ்விற்கு எதிரான விருப்பமற்ற சூழ்நிலைகள் என்று இவற்றை அவிலா தெரசாவே சொல்கிறார். என்றாலும், அப்படி நடக்கவேண்டி இருந்தது. எனவே கீதை சொல்வது போல், எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 

இத்தருணத்தில் அவிலா தெரசா அவரின் ஊரில் இருந்த அருள்மரி கன்னியர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கே டோனா மரியா பிரிசேனோ என்னும் கன்னிகாஸ்திரியிடம் இருந்து ஆன்மிகம் பற்றித் தெரிந்து கொண்டார். துறவு வாழ்வின் மீது அவருக்கு ஈர்ப்பு தோன்றிற்று. துறவியாக வாழ்ந்த அவருடைய மாமா டோன் பெதுரோ தே செப்பேதா என்பவரின் வாயிலாக ‘தூய ஜெரொமின்  கடிதங்கள்என்னும் நூலை வாசித்தார். (இவர்தான் பைபிளை ஹீப்ரூ மொழியிலிருந்து லத்தீன் மொழிக்குப் பெயர்த்தவர்.) இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் இடையில் ஊசாடிக்கொண்டிருந்த அவருடைய மனநிலைக்கு அந்நூல் ஒரு தெளிவை நல்கிற்று. அதன்படி, 02.11.1535-ல் தன் இருபதாம் வயதில் கார்மெல் சபைக் கன்னியர் மடாலயத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

அந்த மடாலயத்தில் தியானம் பிரார்த்தனை புகழ்ப்பாடல்கள் மௌனம் ஆகியவை பொதுவாக நடைமுறையில் இருந்தது. ஆனால் ஆழ்நிலை தியானத்திற்கான சூழல் இல்லை. இது பற்றி புனித அவிலா தெரசாவின் வாழ்க்கைநூலின் முன்னுரையில் சொல்லப்பட்டுள்ளது கவனத்திற்குரியது: “நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று உண்டு. கார்மெல் சபை ஒழுங்குத் தொடர் செபத்தை வலியுறுத்தினாலும், தெரசா தனது வாழ்வில் தன் மாமா ஒசுனா என்பவரின் ‘மூன்றாம் ஆன்மிக அகரவரிசை’ (Third Spiritual Alphabet)  என்னும் புத்தகத்தை வாசிப்பதுவரை செபிப்பது பற்றியோ, தியானத்தில் இருப்பது பற்றியோ தெரிந்துகொள்ளவில்லை என்பதே! அவர் கூறும் ஆன்மிக புத்தகங்கள் கார்மெல் சபையினரால் எழுதப்பட்டவை அல்ல; அவை பிரான்சிஸ்கன் சபையினரால் எழுதப்பட்டவை. மேலும் தனது நவதுறவு வாழ்வில் தியான செபத்தைப் பற்றிய பயிற்சி பெறவும் இல்லை” (ப.6)

 


இந்த முன்னுரைப் பத்தியில் “பிரான்சிஸ்கன் சபைஎன்னும் சொல்தான் எனக்கு மூளையில் மணி அடிக்கிறது. பிரான்சிஸ்கன் சபை என்பது அஸிஸ்சியின் தூய ஃப்ரான்சிஸ் (St.Francis of Assissi) என்பவரின் பெயரால் அமைந்தது. இத்தாலியில் உள்ள அஸிஸ்சி என்னும் ஊரில் கி.பி.1182-ல் பிறந்த ப்ரான்சிஸ் கிறித்துவத்தில் முக்கியமான ஓர் ஆன்மிக ஆளுமை. சூஃபித்துவத்தின் தாக்கம் அவரின் ஆளுமையில் உண்டு என்கிறார் இத்ரீஸ் ஷாஹ். தன் பிரபலமான “THE SUFIS” என்னும் நூலில் மேற்குலக ஆன்மிக ரகசியங்கள் என்னும் பகுதியில் ப்ரான்சிஸ் பற்றி ஒரு தனி அத்தியாயமே எழுதியிருக்கிறார் (“MYSTERIES IN THE WEST / IV. St.FRANCIS OF ASSISSI.)

 


ஃப்ரான்சிஸ் ஆரம்ப காலத்தில் ஒரு கவிஞராக இருந்தார். 11-ம் நூற்றாண்டில் இத்தாலி, ஸ்பெய்ன், கிரீஸ் முதலிய நாடுகளில் பரவியிருந்த த்ரூபதூர்’ (TROUBADOUR) என்னும் கவிதை இயக்கத்தைச் சேர்ந்தவராக இருந்தார். த்ரூபதூர்கள் வீரம் மற்றும் காதலைப் பொருண்மையாகக் கொண்ட இசைப்பாடல்களைப் பாடி வந்தார்கள். இந்த இயக்கம் 14-ம் நூற்றாண்டில் மறைந்து போயிற்று.

 

 ஃப்ரான்சிஸின் ஆளுமையில் முக்கியமாக மூன்று சூஃபி ஞானியரின் தாக்கம் பற்றி இத்ரீஸ் ஷாஹ் பேசுகிறார் : நஜ்முத்தீன் குப்ரா, ஃபரீதுத்தீன் அத்தார் மற்றும் மௌலானா ரூமி.

 

நஜ்முத்தீன் குப்ரா (மார்க்கத்தின் மகா நட்சத்திரம்) என்று அழைக்கப்பட்ட ஷைக் அபுல் ஜன்னாப் அஹ்மதிப்னு உமர் அவர்கள் 13-ம் நூற்றாண்டில் ஃகாரிஸ்ம் என்னும் நகரில் வாழ்ந்தவர். இவரின் சூஃபி ஆன்மிகப் பள்ளி குப்ரவிய்யா தரீக்காஎன்று அழைக்கப்படுகிறது. சில ஆன்மிகப் பள்ளிகள் குறிப்பிட்ட காலகட்டம் மட்டுமே செயலாற்றிவிட்டுப் பிற ஆன்மிகப் பள்ளிகளினுள் கலந்து போய் மறைந்துவிடுவதுண்டு. குப்ரவிய்யா பள்ளி அவ்வாறு நக்‌ஷ்பந்தியா மற்றும் சுஹ்ரவர்தியா பள்ளிகளினுள் கலந்து மறைந்த ஒன்று எனப்படுகிறது. நஜ்முத்தீன் குப்ரா அவர்களின் சூஃபி குருநாதர் எகிப்து நாட்டில் வாழ்ந்த ருஸ்பிஹான் பக்லி அல்-ஷிராஸி அவர்களாவார். ருஸ்பிஹான் பக்லி அவர்களின் நாட்குறிப்புக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சூஃபி வட்டங்களில் பயிலப்படும் அந்த நூல் கனவிலும் நனவிலும் ருஸ்பிஹான் அடைந்த திருக்காட்சிகள் பற்றிக் கூறுகின்றது. நஜ்முத்தீன் குப்ரா அவர்களின் ஆன்மிகப் பள்ளியிலும் திருக்காட்சிகள் (VISIONS) என்னும் பொருண்மை முக்கியமான இடத்தைப் பெறுகின்றது.

 

இவ்விடத்தில், நஜ்முத்தீன் குப்ராவின் தாக்கம் அஸிஸ்சியின் ஃப்ரான்சிஸ் மீது இருந்தது பற்றி இத்ரீஸ் ஷாஹ் சொல்லியிருப்பது கவனத்திற்குரியது: “13-ம் நூற்றாண்டின் ஆரம்பக் கடட்த்தில், ஃப்ரான்சிஸின் செயல்பாடுகள் பற்றித் திருப்தி அடைந்த மூன்றாம் போப் இன்னசெண்ட் ப்ரான்சிஸ்கன்ஸ் (FRANCISCANS) என்றழைக்கப்பட்ட “இளைய சகோதரகள்” (MINOR BROTHERS / LESSER BRETHREN)  என்னும் அமைப்பைத் தொடங்க அனுமதி அளித்தார். பணிவு அடக்கம் ஆகியவற்றின் அடையாளமாகக் கூறப்பட்ட LESSER BRETHREN என்னும் அடைமொழியைக் காணும் ஒருவர் அப்படியெனில் ‘மூத்த சகோதரர்கள்’ (GREATER BRETHREN) என்று ஒரு கூட்டம் இருந்ததா? என்று கேட்கலாம். தூய ப்ரான்சிஸின் சமகாலத்தில் அவ்வகையில் அழைக்கப்பட்டவர்கள் நஜ்முத்தீன் குப்ராவின் சூஃபிப் பள்ளியைச் சேர்ந்தவர்களே! (குப்ரா = மாபெரிய, GREATER.) இந்தத் தொடர்பு மிகவும் சுவையானது. ஏனெனில், இந்த சூஃபி குருவின் முக்கியமான பண்புகளில் ஒன்று விலங்குகள் மீது அவருக்கு இருந்த தனித்தன்மையான தாக்கம். பறவைகளால் சூழப்பட்டவராகவே பழைய ஓவியங்கள் அவரைச் சித்தரிக்கின்றன. வெறுமனே தன் ஒரு பார்வையாலேயே வெறிநாய் ஒன்றை அவர் அடக்கினார். தூய ஃப்ரான்சிஸ் அவ்வாறே ஓநாய் ஒன்றை அடக்கிய கதை மிகப் பிரசித்தம். தூய ஃப்ரான்சிஸ் பிறப்பதற்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பே நஜ்முத்தீன் குப்ராவின் அற்புதங்கள் பற்றிய செய்திகள் கிழக்குலகில் பரவியிருந்தன.

 

தூய ஃப்ரான்சிஸ் எப்போதும் பறவைகள் சூழ இருப்பார் என்பது ஸுப்ரசித்தம். அவருடைய படங்கள் பெரும்பாலும் அப்படியே வரையப்படுகின்றன. இந்தப் படிமம்

இன்னொரு ஒப்புமையை எழுப்புகிறது, “மன்திக்குத் தைர் - பறவைகளின் மாநாடுஎன்னும் ஞான காவியம் தந்த ஃபரீதுத்தீன் அத்தார் அவர்களுடன். “சூஃபி குருவான அத்தாரைப் போலவே தூய ஃப்ரான்சிஸ் தன் அங்கியை பிச்சைக்காரன் ஒருவனுடன் மாற்றிக்கொண்டார்என்கிறார் இத்ரீஸ் ஷாஹ்.

 

நஜ்முத்தீன் குப்ராவின் முக்கியமான சீடர்களில் ஒருவர் பஹாவுத்தீன் வலத். இவர் மௌலானா ரூமியின் தந்தை என்பது குறிப்பிட்த்தக்கது. இவருடைய வாழ்விலும் ஆன்மிக நிலைகளிலும் கனவிலும் கண்ட திருக்காட்சிகள் முக்கிய இடம் பெறுகின்றன. அவற்றை அவர் ‘மஆரிஃப்என்னும் நூலாக எழுதியிருக்கிறார். மௌலானா ரூமி தன் குருவான ஷம்சுத்தீன் தப்ரேஸியைச் சந்திக்கும் முன் அவருக்கு ஞான பாடமாக இருந்தது அந்த நூல்தான். இவ்வாறு, தூய ஃப்ரான்சிஸ் மீது தாக்கம் உள்ள நஜ்முத்தீன் குப்ராவின் தாக்கம் மௌலானா ரூமியின் ஆளுமையிலும் உண்டென்பது ஒருபக்கம் இருக்க மௌலானா ரூமியின் தாக்கமும் தூய ஃப்ரான்சிஸ் மீது உண்டு! இது பற்றி இத்ரீஸ் ஷாஹ் தரும் விளக்கங்களைக் கவனியுங்கள்:

“1224-ல் அல்லது அதன் பக்கத்தில், தூய ஃப்ரான்சிஸின் அதி முக்கியமான பாடல் இயற்றி முடிக்கப்பட்ட்து: CANTICO DEL SOLE – சூரியனின் பாடல். சுழலும் தர்வேஷ்களின் தலைவரும் ஃபார்சி மொழியின் உன்னதக் கவியுமான மௌலானா ஜலாலுத்தீன் ரூமி தப்ரேஸின் சூரியன் – ஷம்சுத்தீன் தப்ரேஸி என்று பெயர் கொண்ட தன் குருவின் மீது ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தார். அவருடைய பாடல்களின் தொகுப்பை ‘தீவானே ஷம்ஸி தப்ரேஸ்’  என்றே அழைத்தார். அக்கவிதைகளில் ஷம்ஸ் – சூரியன் என்றே தன் குருவை அவர் மீண்டும் மீண்டும் அழைக்கக் காண்கிறோம்.

 


மௌலானா ரூமியின் ஆன்மிகப் பள்ளி ‘மௌலவியா தரீக்காஎன்று அழைக்கப்பட்டது. அதன் ஆன்மிகப் பயிற்சிகளில் இசையுடன் இயைந்து சுற்றிச் சுழலும் தியானம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. (இந்தியாவில் அது தற்போது ஓஷோவின் ஆஸ்ரமத்தில்தான் கற்றுத்தரப்படுகிறது, அதனுடன் ரூமி கட்டமைத்த அரபிப் பிரார்த்தனைகள் நீங்கலாக.) எனவே ரூமியின் பள்ளியைச் சேர்ந்தவர்கள் ‘சுழலும் தர்வேஷ்கள்’ (THE WHIRLING DERVISHES) என்று அழைக்கப் படுகின்றனர். தூய ஃப்ரான்சிஸ் மீது மௌலானா ரூமியின் தாக்கம் பற்றிப் பேசும் இத்ரீஸ் ஷாஹ் அதற்கு இன்னொரு சான்றாக ஃப்ரான்சிஸின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறார்:

“அவரின் (ஃப்ரான்சிஸ்) கவிதைகள் நாம் வியக்கும் வண்ணம் ரூமியின் காதல் கவிதைகளை ஒத்திருக்கின்றன. எனவே, அவற்றைக் காணும் ஒருவர் தூய ஃப்ரான்சிஸ் எவ்வகையிலாவது சுழலும் தர்வேஷ்களுடன் தொடர்புடையவரா என்று நினைப்பது இயல்பே. தூய ஃப்ரான்சிஸின் வாழ்காலத்தில் சுழலும் தர்வேஷ்கள் இயக்கம் ஆசியா மைனர் முழுக்கப் பரவியிருந்த்து, அதன் ஸ்தாபகரான மௌலானா ரூமியும் உயிருடன் இருந்தார். புதிரான அந்த சுழலும் கதை இதோ:

டஸ்கானி நகரில் ஒருநாள் ஃப்ரான்சிஸ் தன் சீடரான சகோ.மஸ்ஸேயோவுடன் நடந்திருந்தார். பாதைகள் பிரியும் ஒரு முனைக்கு அவர்கள் வந்தடைந்தார்கள். ஃப்ளாரன்ஸ், அரெஸ்ஸோ மற்றும் சியெனா ஆகிய ஊர்களுக்குப் பாதைகள் பிரிந்திருந்தன. எந்தப் பாதையில் போவது என்று மஸ்ஸேயோ கேட்டார்.

இறைவன் காட்டும் பாதையில்

‘அது எது?

அதை நாம் குறிப்பால் அறியலாம். உனக்குக் கட்டளையிடுகிறேன், நான் நிறுத்தச் சொல்லும்வரை குழந்தைகள் சுழல்வதுபோல் நீ சுழலவேண்டும்

எனவே, பரிதாபத்திற்குரிய மஸ்ஸேயோ சுற்றிச் சுழன்றார். கிறுகிறென்று மயக்கம் வந்து கீழே விழுந்தார். சுதாரிப்பு வந்ததும் எழுந்து தன் குருவைப் பார்த்தார். அவர் மௌனமாக இருக்கவே மீண்டும் சுழலத் தொடங்கினார். தன் வாழ்நாள் முழுவதும் சுழன்றிருந்தது போன்று அவருக்குத் தோன்றிய கணத்தில் தன் குருவிடமிருந்து ‘நிறுத்து, உன் முகம் காணும் பாதை எது?என்னும் வார்த்தைகளைக் கேட்டார். வாயைத் திறந்து மூச்சிரைத்தபடி ‘சியெனாஎன்றார்.

எனில் சியெனாவிற்கு நாம் செல்ல வேண்டும்என்று சொன்ன ஃப்ரான்சிஸ் அதன் பாதையில் சென்றார்.

 

இவை மட்டுமல்ல, போப்பிடம் அரபிக் குறியீடு கொண்ட ஒரு கதையைச் சொன்னது, போப் தன் கனவில் பேரீச்சை மரத்தைக் கண்டது, தர்வேஷ்களின் தியான முறை போல் அவர் வடிவமைத்துக் கொண்ட பிரார்த்தனை, மொரொக்கோ மற்றும் ஸ்பெய்ன் நாட்டின் தர்வேஷ்களினது போல் தன் இயக்கத்திற்கு அவர் வடிவமைத்த அங்கி, பிஸ்மில்லாஹ் என்னும் மந்திரத்தின் குறியீடாக சூஃபிகள் கூறும் ஆறு சிறகுகள் கொண்ட வானவரை அவர் தியானக் காட்சியாகக் கண்டது, சிலுவைப் போரின் போது அவர் நைல் நதியைக் கடந்து ஏகி சுல்தான் மாலிகல் காமில்-ஐச் சந்தித்துப் பேசியதும், கிறித்துவப் படையிடம் மீண்டு வந்து அவர்கள் போர் புரியாமல் திரும்பிவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட்தும், கிறித்துவப் பாதிரியாக அவர் மறுத்துத் தன் போதனைகளை சமூகத்தின் எளிய மக்கள் வரை எடுத்துச் சென்றது, தன் பிரசங்கத்தை ஆரம்பிக்கும்போது – தனக்குக் கடவுளால் அருளப்பட்ட வாசகம் என்று அவர் சொல்லும் – ‘இறைவனின் அமைதி உங்கள் மீது நிலவட்டும் என்னும் வாசகம் இஸ்லாமிய முகமனான ‘அஸ்ஸலாமு அலைக்கும் என்பதன் நேரடியான மொழிபெயர்ப்பாக இருப்பது என்று பல ஒப்புமைகளை இத்ரீஸ் ஷாஹ் சுட்டிக்காட்டுகிறார்.

 

ஃபிரான்சிஸ்கன் ஆன்மிகப் பள்ளியின் சூழலும் அமைவும் வேறு எதனை விடவும் தர்வேஷ் அமைப்பிற்கு மிகவும் நெருக்கமானது. சூஃபி குருமார்களுடன் தூய ஃப்ரான்சிஸை ஒப்பிட்டுக் கூறப்படும் பிரபலமான கதைகளைத் தாண்டி, அனைத்துப் புள்ளிகளும் ஒத்திசைகின்றன(The atmosphere and setting of the Franciscan Order is closer to a dervish organization than anything else. Apart from the tales about St.Francis which are held in common with Sufi teachers, all kinds of points coincide.) என்று இப்பொருண்மை நோக்கில் இத்ரீஸ் ஷாஹ் சொல்வது முத்தாய்ப்பான பார்வை.

 

ஃப்ரான்சிஸின் ஆளுமையின் மீதான இஸ்லாமியத் தாக்கம் என்பது பரவலானதொரு ஆய்வுக்களமாக உள்ளது. அமெரிக்காவின் பழங்குடியினரைக் கிறித்துவ சமயத்திற்குக் கொண்டு வந்ததில் ஃப்ரான்சிஸ்கன் சபையினர் ஆற்றிய பங்களிப்பைப் பற்றிய The Evangelization of the Americas:St. Francis as Conquistadorஎன்னும் கட்டுரையில் வில்லியம்.ஜெ.கார்க் (William.J.Cork) இக்கோணத்தில் இரண்டு முக்கியமான புள்ளிகளைத் தருகிறார்:

1.     தன் இயக்கத்தினர் கிறித்துவப் பிரச்சாரம் செய்யும்போது இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் பற்றிக் குறை பேசக்கூடாது என்று அவர் விதித்திருந்தார். இது அக்கால மிஷனரி போக்கிற்கு மாற்றமானது.

2.     இஸ்லாம் பரவியிருந்த மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வந்த அவர் அங்கே மசூதிகளின் மினாராக்களில் தொழுகைக்கான அழைப்பாளர் – முஅத்தின் – ஏறி நின்று பாங்கு ஒலிப்பதைப் போல் கிறித்துவ தேவாலயங்களின் கோபுரங்களில் இருந்தும் மக்களை தினமும் ஜெபத்திற்கு அழைக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்குக் கடிதம் எழுதினார்.

 

அவிலா தெரசாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த கட்டுரையில் இடையே இவ்வளவு நீளத்திற்கு அஸிஸ்ஸியின் ஃப்ரான்சிஸ் பற்றிப் பேசக் காரணம், அவிலா தெரசாவின் ஆழ்நிலை தியானத்திற்கான வேர் ஃப்ரான்சிஸ்கன் பள்ளியைச் சேர்ந்த நூற்களால் வந்தவை என்னும் குறிப்பை விளங்கிக் கொள்ளத்தான். அதுவோ, சூஃபித்துவத் தாக்கம் (ரூமி, அத்தார், நஜ்முத்தீன் குப்ரா) - த்ரூபதூர்கள் - தூய ஃப்ரான்சிஸ் - அவிலா தெரசா என்று ஒரு நீட்சியை நமக்குத் தருகிறது. இந்த நீட்சி ஆழ்நிலை தியானம், காட்சிகள், குறியீட்டுக் கவிதைகள் ஆகிய கோணங்களில் மிகவும் அர்த்தமுள்ளது. 


(தொடரும்...)

2 comments:

  1. //அவ்வயதில் ஆண் நண்பர்களைத் தேடிக்கொண்டதை அவருடைய நாட்டின் கலாச்சாரச் சூழல் சார்ந்து பார்க்கவேண்டும். இந்த இடத்தில் கண்ட கற்பனைகளையும் செய்து அவரின் வாழ்க்கைக்குள் துழாவ வேண்டிய அவசியம் இல்லை// வேதத்தின் சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் சக்கையை நாய்களுக்குப் பொடுங்கள் என்று முன்னொரு பதிவில் படித்தது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  2. machan.. i thought you will be writing about "Ennulle Ennulle" song too... :)

    ReplyDelete