Monday, January 9, 2012

ஒரு துண்டு வானம்




எப்போது பார்த்தாலும் அவன்
மண்ணைக் கிளறிக்கொண்டிருப்பான்

என்ன தேடுகிறான் என்று
ஒருவருக்கும் தெரியாது ஒன்றும்

மண் கிளறும் கிறுக்கன்
என்பதல்லால்
விமரிசனம் வேறொன்றும்
விளம்பப் படவில்லை.

மண்ணைக் கிளறிக்கொண்டிருந்தாலும்
தோட்டக்காரனோ
உழவனோ
தொழிலாளியோ
அல்ல அவன்

விதைப்பதற்கோ
புதைப்பதற்கோ
அல்ல அவன் தோண்டுவது

ஒரு கோப்பைத் தேநீர் தந்து
சிநேகம் பிடித்தேன் அவனை

மண்ணைத் தோண்டுவது
தன்னைத் தோண்டுவதே
என்றான்.

ஒருநாள் மாலை
நேயச் சிரிப்புடன் வந்தான்
மண்ணில் கிடந்ததென்று சொல்லி
ஒரு துண்டு வானம்
கையில் தந்தான்.

No comments:

Post a Comment