Sunday, January 22, 2012

சகலருக்கும் விளம்புகிறேன்



(எழுதி முடித்துப் பார்க்கையில் இது ஒரு திரிவக்ரக் கட்டுரையாக இருக்கக் கண்டேன். தன்னியல்பில் சென்று மூன்று பொருண்மைகள் பற்றிப் பேசும் கட்டுரையாக அமைந்துவிட்டது.)

உனக்கென்று ஒரு எழுத்து நடை இருக்கிறது. ஆங்கில வார்த்தைகளை அதிகமாகக் கலந்து எழுதி அதை நாசமாக்கிக் கொள்ளாதேஎன்று என் மீது அக்கறை உள்ள பேராசிரியர் வ.மு.யூனுஸ் சில தினங்களுக்கு முன் சொன்னார். வலைப்பூவில் நான் மலர்த்திவரும் பல வண்ண மலர்களில் சில பற்றி அவர் அடைந்த வாசிப்பனுபவத்தின் அடியாகப் பிறந்த அறிவுரை அது.




நான் விதவிதமான நடைகளின் ரசிகன். அதாவது எழுத்தில்! இரு துருவங்களாகக் கருதப்படும் எழுத்து நடைகளையும் அவற்றுக்கு இடையே உள்ள பாணிகளையும்கூட ரசிப்பவன். தனித்தமிழையும் ரசிப்பேன், மணிப்பிரவாளத்தையும் ரசிப்பேன். ஆங்கிலம் கலந்து எழுதினால் அதையும் ரசிப்பேன். மறைமலை அடிகள், வ.சுப.மாணிக்கம் போன்றோர் தம் கட்டுரையில் கையாண்டுள்ள நடையும் பிடிக்கும், சுஜாதாவின் எழுத்தும் பிடிக்கும். வட்டார வழக்கு அல்லது சமூகங்களின் பேச்சுநடை என்று வந்தால் எழுதுவார் எழுதினால் அவை எல்லாம் பிடிக்கும். இத்தனை ‘ரிச்னஸ்தமிழுக்கு வாய்த்த பேறு என்றே நான் கொண்டாடுகிறேன்.

ஆனால் வ.சுப.மாவுக்கு ஒரே நடைதான். அது என்னதான் செம்மாந்த தமிழ் நடையாக இருந்தாலும் மனுஷன் ‘வள்ளுவம்எழுதிய அதே நடையில் ‘நெல்லிக்கனிஎன்று நாடகம் எழுதும்போது எள்ளளவும் அதை என்னால் ரசிக்க முடியவில்லை. தமிழ் பழுத்த மூதறிஞர் நல்ல உரைநடைக்காரர், ஆனால் மோசமான புனைவிலக்கியவாதி. சொல்லப்போனால் அவருக்குப் புனைவிலக்கியமே கைவரவில்லை. அதைப் பற்றிய அடிப்படைகள் கூட அறியாதவர் என்பதே என் கருத்து.” என்று ஒருமுறை மாணவர்களிடம் சொன்னேன். ஆனால் அவர் காலத்திலேயே எழுதிய தி.ஜா எனக்கு அக்கார அடிசில், புதுமைப்பித்தன் எனக்கு இருட்டுக்கடை அல்வா!




ஒரு எழுத்தாளனுக்குப் பல மொழிநடைகள் கைவருவது ஒரு கூட்டல்புள்ளி என்றே கருதுகிறேன். அவனது இலக்கியப் படைப்பு இயல்பாக இருப்பதற்கே அது தேவைப்படும். ஏனெனில், உலகம் அப்படித்தான் இருக்கிறது. தற்போது யுவன் சந்திரசேகரின் ‘வெளியேற்றம்படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரே நாவலுக்குள் எத்தனை வட்டார வழக்குகள் வந்து வசீகரிக்கின்றன! இதை சத்தியமாக மு.வ, அகிலன் போன்றோரிடம் காணவே முடியாது. இப்போது பார்க்க அவர்களின் ஒற்றைத் தன்மையான (Monotonous) மொழிநடை வெளிறித் தெரிகின்றது.




ஆமாம், கிரிக்கட்டில் மட்டையடிக்காரனுக்கு (Batsman) பலவிதமான ஷாட்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதைப் போல்தான் இது. நேரோட்டமும் (Strait drive) தெரிந்திருக்க வேண்டும், அப்புறம் வெளக்கமாத்த வச்சு வழிச்சுக் கூட்டுறாப்ல ஒரு ஷாட் இருக்குமே Sweepபுன்னுட்டு, அதுவும் தெரிஞ்சிருக்கணும். வர்ற பந்தை சைலண்ட்டா உள்ள வாங்கி பின்னால தள்ளிவிடற Pull ஷாட்டும் தெரியணும். எல்லா பந்தையும் ஒரே மாதிரி சகட்டுமேனிக்குச் சவட்டிக்கிட்டிருக்கிறவன் நல்ல மட்டையடிக்காரன் அல்லவே? இது எழுத்துக்கும் பொருந்துமில்லியா?

நிற்க.

எழுத்து நடை பற்றிய இந்தப் பேச்சை நான் சொல்ல வந்த வேறு விஷயத்துடன் இப்போது கோர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்.

சில வாரங்களுக்கு முன் நாகூர் ரூமி ‘பில்லி சூனியம்என்று ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்கள் செய்யும் மூளைச் சலவை குறித்த கட்டுரை அது. அதனைப் படித்த போது என் மனதில் சில விளம்பரங்களை அசை போட்டுக் கொண்டிருந்தேன்.  சிறு வயதில் என்னைக் கவர்ந்த விளம்பரம் எது என்று மண்டையைக் குடைந்து பார்த்ததில் ஒன்றுமே தட்டுப்படவில்லை. ஆனால் விவேக்கும் மயில்சாமியும் விளம்பரங்களை அநியாயத்துக்குப் பகடி செய்த்தைக் கேட்டு வயிறு புண்ணாகும்படிச் சிரித்துத் தீர்த்தது மட்டும் ஞாபகம் வந்தது.




சிறுவர்களுக்கான ஷூ விளம்பரம் ஒன்று. அந்த ப்ராண்ட் ஷூவை அணிந்து கொண்டு சிறார்கள் சுவரில் சாய்வாகவும் மேற்சுவரில் தலைகீழாகவும் ஓடி விளையாடுவார்கள். என் தம்பி ஒருவன் ஒத்தக் காலில் நின்று அந்த ப்ராண்டில் ரெட்டை ஷூ வாங்கினான். முதல் முறை அணிந்த வேகத்தில் ஆவலாக சுவரில் ஏற எத்தனித்து மல்லாந்து விழுந்து தவறான ஷூவைத் தந்துவிட்டார்கள் என்று கதறி அழுதது ஞாபகம் வந்தது. மற்றபடி சொல்லிக் கொள்ளும்படியாக வேறு எதுவும் நினைவில் உதிக்கவில்லை.

இன்றைய விளம்பரங்கள் மூளைச் சலவை செய்கின்றன என்பது உண்மைதான். மிளகாய் காரமாக இருப்பது போல் விளம்பரத்தின் இயல்பே அதுதானே? அது வேறு என்ன செய்யும்? ஆனால் கவித்துவமான, இரைச்சல் போடாத அற்புதமான விளம்பரங்களும் இப்போது வரத்தான் செய்கின்றன. சிமிழுக்குள் ஒரு நதியை அடைத்தது போன்ற விளம்பரங்கள். ஓரிரு நிமிடங்களே ஓடும் ஒரு விளம்பரத்தில் ஒரு சிறுகதையைச் சொல்லிவிட முடியுமா?



சில மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு சேனலில் “NO ONE KILLED JESSICA” பார்த்துக் கொண்டிருந்தபோது இடையே அப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அது எந்தப் பொருளுக்குமான விளம்பரம் அல்ல. வாங்கச் சொல்லும் விளம்பரம் அல்ல. கொடுக்கச் சொல்லும் விளம்பரம். பாருங்கள்:
ஒரு உணவுவிடுதியில் பலரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மேசையில் இளைஞன் ஒருவன் தனியே ஏதோ பருகிக் கொண்டிருக்கிறான். அவனருகே ஐந்து வயதினள் போன்ற ஒரு சிறுமி வந்து நிற்கிறாள். “தேங்க்யூ அன்க்கிள்என்று அவனுக்கு நன்றி சொல்கிறாள். முன்னபின்ன பார்த்திராத ஒரு சிறுமி தன்னிடம் வந்து நன்றி சொல்வதைப் பார்த்து அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “எனக்கு எதற்கு நன்றி சொல்கிறாய்?” என்று கேட்கிறான். “நான் கொஞ்ச நாட்களுக்கு முன்பு ரொம்ப சீரியஸான நெலமையில் ஆஸ்பத்திரியில் இருந்தேன். என் ஆபரேஷனுக்கு யாரோ ரத்தம் கொடுத்திருக்காங்க. அது யாருன்னு எனக்குத் தெரியல. உங்க வயசுல உள்ள ஒரு அன்க்கிள்னு அப்பா சொன்னாங்க. அதுனால உங்க வயசுல யாரப் பாத்தாலும் நன்றி சொல்றேன்என்கிறாள் அந்தச் சிறுமி. அவன் குழம்பியவனாக, “ஆனால் நான் இதுவரைக்கும் யாருக்கும் ரத்ததானம் கொடுத்ததில்லைஎன்கிறான். “இனிமேல் கொடுங்க அன்க்கிள்என்று சொல்லிவிட்டு அந்தச் சிறுமி நகர்கிறாள். அவள் அப்படி இயல்பாக சொல்லிய வார்த்தைகள் அவனின் மனநிலையில் மாற்றத்தைச் செய்வது அவன் முகபாவனையில் தெரிகிறது.

ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த இந்த விளம்பரம் இன்னமும் ஞாபகம் இருக்கிறது. ஏனெனில் இதில் ஒரு கவித்துவமான வெளிப்பாடு இருக்கிறது. உள்மனத்திற்கான ஒரு செய்தி இருக்கிறது.


விளம்பரங்களின் மொழிநடை பற்றித்தான் நான் பேச வந்தது. இலக்கியத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிப்படுகின்ற மொழிநடைகள் அந்த அந்த காலகட்டங்களின் விளம்பரங்களிலும் பிரதிபலிக்கும் போலும். தூசி தட்டி எடுத்து நான் படித்துக்கொண்டிருந்த சில பழைய நூற்களில் கண்ட விளம்பரங்கள் இப்படி ஒரு எண்ணத்தை ஏற்படுத்தின. அவை அரை நூற்றாண்டு காலத்திற்கு முந்திய இஸ்லாமிய நூற்கள். அண்ணாவின் அடுக்கு மொழிநடையும் கலைஞரின் மிடுக்கு மொழிநடையும் தமிழ் மக்களை மகுடிநாதமாகக் கட்டிப் போட்டிருந்த காலகட்டம். அந்த நடையை அக்கால முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புக்களிலும் காண முடியும். (அதேபோல் அக்கால முஸ்லிம் கவிஞர்களின் கவிதைகளில் அப்படியே பாரதிதாசனின் பாணியைப் பார்க்கலாம்.) உதாரணமாக, திருச்சி மதனீ சாகிபு எழுதிய ஒரு கவிதையின் நடையைப் பாருங்கள், அண்ணாதுரை பேசுவது போலவே இருக்கிறது:
“முஸ்லிம் விஞ்ஞானிகள் இலரோ அண்ணே – உண்டு,
    மூடி மறைத்துவிட்டார் வஞ்சகர் தம்பி
ஆதாரம் காட்ட முடியுமா அண்ணே – ஆஹா,
      ஆயிரம் காட்டும் வரலாறு தம்பி
அமெரிக்கா கண்டவர் கொலம்பசா அண்ணே – இல்லை
      அராபிய வீரர்கள் கண்டது தம்பி
கடிகாரம் கண்ட்து எவரோ அண்ணே – அரபி
      கத்தாபி என்பவர் அறிந்திடு தம்பி
‘போட்டோதொழிலுக்கு மூலவர் அண்ணே – அவரா?
      புவிபுகழ் இப்னு ஹாஷீம் தம்பி
‘பேப்பர்சிருஷ்டித்த சீலர் யார் அண்ணே – தீன்குலப்
      பெரியார் யூசுப் பின் உமர் தம்பி
‘டெலஸ்கோப்கர்த்தா சொல்லுவாய் அண்ணே – கேள்!
      திகழ்ஞானி அபுல்ஹஸன் என்றிடு தம்பி
‘பெண்டுலம்கண்டு பிடித்தது அண்ணே - வையப்
      பெருமகன் இப்னு யூனுஸ் தம்பி
துப்பாக்கி தந்த் விஞ்ஞானி அண்ணே – உணர்வாய்
      சுடர்மேதை மீர்வதுல் லாகான் தம்பி
கப்பலைக் கட்டிக் காட்டியவர் அண்ணே – இதோ
      கலைமதி அபுல் காசிம் தம்பி

1957-ம் ஆண்டு சீதக்காதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மதனீ கவிதை மலர்என்னும் சிறு நூலில் (விலை 12 ந.பைசா) மேற்கண்ட கவிதை இருக்கிறது. நூலின் உள் அட்டையில் எவரெஸ்ட் பிரிண்டர்ஸ் என்னும் ஸ்தாபனத்திற்கு ஒரு விளம்பரம் உள்ளது. விளம்பர நடையைப் பாருங்கள்:
“தமிழ்கூறு நல்லுலகப் பெருமக்களுக்கோர் தேன்சொட்டும் சேதி!
கண்ணையும் கருத்தையும் கவரத்தக்க அச்சு வேலைச் சித்திரங்களைக் காணவேண்டுமா?
இங்கே வாருங்கள்! இதயம் மகிழுங்கள்!
கைதேர்ந்த அச்சுத்தொழில் மேதைகளைக் கொண்டு நிர்வகிக்கப்படும் அச்சகம் இது ஒன்றே!
கலியாணப் பத்திரிகைகள், கடைகளுக்கு வேண்டிய பில், கவர், லெட்டர் பேபர் போன்ற சகலவிதமான வேலைகளும் நயமாக, நாகரிக முறையில், குறித்த நேரத்துக்குள் செய்து தரப்படும்.
(குறள்)
அச்சுத் தொழிலுக்கு ஆக்கம் தருவோர்கள்
இச்சகத்தில் வாழ்வர் இனிது

1957-ல் தாஜ்மகால் பதிப்பகம் சார்பில் வெளிவந்த குணங்குடி மஸ்தான் யார்?” (விலை ஆறு அணா. எழுத்தரசர் மணவை.ரெ.திருமலைசாமி சிறப்புரை கொண்டது.) என்னும் நூலில் இருந்து மதனீ சாகிபின் உரைநடைக்கு உதாரணமாக ஒரு பகுதியைப் படித்துப் பாருங்கள் (பழைய தமிழ்ப் படத்தில் கலைஞர் எழுதிய வசனத்தை சிவாஜி கணேசன் பேசுவது போலவே தொனிக்கின்றது அல்லவா?):
“காட்சிக்கு அவர் ஓர் கானகவாசிதான். கடமையிலோ, சீர்திருத்தக் காரராகவே காணப்பட்டார். ஆச்சரியப்படுவீர்கள், அவரின் முழக்கம் எதற்காகப் பயன்பட்டது என்று புரிந்து கொண்ட பிறகு.

நாடகமே உலகம்! அதை நம்பாதே நெஞ்சே! என்பதற்கா? அல்ல! மாயப் பிரபஞ்சத்தில் வாடாதே மனமே! என்ற சிந்து பாடவா? அல்ல! அன்பு மனைவி, ஆசைக் குழந்தை, சொத்து சுகம், வீடுவாசல் அனைத்தையும் விட்டொழித்து, சன்யாச வாசம் கொள்ளவா? அல்ல! மனிதன், ஓர் பாப மூட்டை! உலக வாழ்வு, அதைச் சுமக்கும் கழுதை! என்று பழித்துக் காட்டவா? அல்ல! அல்லவே அல்ல! பின் எதற்கு?

மதச் செருக்கை ஒழி என்றார் -  குலப்பித்துக் கூடாது என்றார் – பல கடவுள் பற்றைக் கண்டித்தார் – கண்சிமிட்டிக் காரிகளின் கனி மொழியில் மயங்கிக் காசையும் கருத்தையும் இழக்கும் காமுகரை எச்சரித்தார் – ஐஸ்வரிய மிகுந்த ஆணவக்காரர்களின் அக்ரமங்கள் அடுக்காது என்றார் – ஒழுக்கத்துடன் வாழும் உள்ளமும், உறுதியும் தேவை என்றார் – ஒரே கடவுள் நம்பிக்கை கொள்! என்றார் – நற்குணங்குடி கொண்ட மனிதனாக மாறு! என வற்புறுத்தினார் – மனிதகுலம் மாசிலாமல் விளங்க, மனிதப் பற்று மிக முக்கியம் என்றார் – அகத்தூய்மை பெறவும், அழிவில்லா இன்பம் காணவும் ஏகாந்தத் தொழுகையைக் கடைப்பிடிக்கத் தூண்டினார் – உபதேசிகள் உதடுகளின் அசைவைக் கவனிக்காதே! உள்ளத்தைக் கவனி!என்று இடித்துக் காட்டினார் – மதியோடு, நேர்மையோடு நட! மறிப்போரை நிர்மூலமாக்கு! எனத் தூண்டினார் – தீவினைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்க முயலுங்கள்! என மன்றாடினார் – முத்திநிலைபெற சத்தியத்தை நம்பியிரு! என்றார்

இப்படிப்பட்ட ஒரு நூலின் பின்னட்டையில் ஒரு விளம்பரம் இருக்கிறது. டைமன் பீடிகள்பற்றிய விளம்பரம்! அதற்கான காரணம் நூலின் முன்னட்டையிலேயே தெரிகிறது:
“சமூக ஊழியரும், ஏழைத் தொழிலாளர் இரட்சகரும், நற்குணங்குடி கொண்டவரும், திருச்சி டைமன் பீடி கம்பெனி உரிமையாளருமான K.அப்துல் அஜீம் சாஹிப் அண்ணல் அவர்கள் பொருளுதவியால் இந்நூல் வெளியிடப் பெற்றது.” 
நூலின் பின்னட்டையில் உள்ள விளம்பரம் இதோ:
“பீடி உலகிலே புரட்சி. புதுமை அற்புதம் புரிவது டைமன் பீடிகள்.
டைமன் பீடி புகை மணத்தை அனுபவிக்காதவர்கள்தான் மல்லிகை மணக்கும்! ரோஜா மணக்கும்! என்பார்கள்.
வேலை செய்து களைத்தோரே, களைப்புத் தீர வேண்டுமா?
ஆபீஸ் வேலை செய்வோரே, அல்லல் போக வேண்டுமா?
அறிவு வளர ஆசைப்படுவோரே, அறிவு பெறுக வேண்டுமா?
வியாபாரத் தொழில் புரிவோரே, சுறுசுறுப்புப் பெற விருப்பமா?
இதோ இங்கு வாருங்கள்! இந்த மருந்தைப் பாருங்கள்
நாடித் தளர்ச்சி நீக்கும் மருந்து, நல்ல இரத்தம் தரும் மருந்து,
நாணயம் நல்கும் சுடர் மருந்து, நல்லவராக்கும் அருள் மருந்து,
சுகாதார அமைப்பு கொண்ட மருந்து, சுகானந்தம் தரும் ஜீவ மருந்து.
டைமன் பீடி, பாலக்கரை திருச்சி. ஸ்தாபிதம் 1925.
இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ஸ்தாபனம் அல்ல!
ஏழையர் வாழ்வில் இன்பம் பொங்க வழி வகை காட்டி, குடிசைத் தொழில் வளர்க்கும் ஸ்தாபனமாகும்.
ஊரில் உயர்ந்தது உறையூர் – கோபுரத்தில் சிறந்தது குத்துப்மினார் – கட்டடத்தில் அற்புதம் தாஜ்மஹால் – பட்டினங்களின் தாய் மக்கா! அதுபோல், பீடி உலகில் பெருமையும், சிறப்பும், பெரும் புகழும் கொண்டது டைமன் பீடி ஒன்றே!
உடலுறுதி பெறவும், உள்ளம் மகிழவும், நற்குணங் குடி கொள்ளவும் டைமன் பீடிகளையே உபயோகித்து வாருங்கள்!

மேற்படி விளம்பரத்தின் மீது ஒரு ‘விவேகவிமரிசனம்:
அடப்பாவிகளா! ஒரு நாத்தம்புடிச்ச பீடிக்கு இவ்ளோ பெரிய பில்ட்டப்பாடா? ஒங்க நான்சென்சுக்கு ஒரு அளவே இல்லியாடா? பீடி உலகிலே புரட்சிங்கிறிங்களே, அது என்ன ஃப்ரெஞ்சுப் புரட்சியாடா? புதுமை அற்புதம் புரியிறதுக்கு பீடி என்ன அவ்லியாவாடா? புத்து நோய கொண்டு வர்ற சனியனப் போயி மருந்து மருந்துன்னு சொல்லி விக்கிறது ஞாயமாடா? இதுதான் சுடர் மருந்து அருள் மருந்துன்னா அப்புறம் எதுக்குடா பக்தி தியானம் தொழுகை நோம்பெல்லாம்? அளவற்ற அருளாளன் வேதத்துக்குப் பதிலா பீடிக்கட்டு அனுப்புனாங்கிற மாதிரி இப்படி வெளம்பரம் பண்றீங்களே, அடுக்குமாடா? இறைவனின் திருக்கல்யாண குணங்கள் இதயத்தில் குடிகொள்ள வேண்டும்னு சொன்ன குணங்குடி மஸ்தான் சாகிபு வரலாற எழுதின புத்தகத்திலயே ‘நற்குணங் குடி கொள்ள டைமன் பீடிகளையே உபயோகித்து வாருங்கள்னு சொல்லி அவருக்கே ஆப்பு வச்சிட்டீங்களேடா!



பீடித் தொழில் என்பது முஸ்லிம் சமுதாயத்தோடு அடையாளமாகிவிட்ட ஒரு குடிசைத் தொழில் என்றுதான் சொல்ல வேண்டும். 1963-ஆம் ஆண்டு மேலைப்பாளையம் எம்.என்.முஹையிதீன் என்பவர் வெளியிட்ட “முஹியித்தீன் அப்துல் காதிர் ஜீலானி மலர்என்னும் நூலினுள் திருச்சி மெஸர்ஸ்.என்.பி.அப்துல் கபூரின் ‘903 கபூர் அன் ஸ்டீம் பீடிகள், மேலைப்பாளையம் வி.டி.எஸ்.அப்துல் ஹமீது ராவுத்தரின் 5-ம் நிர். பீடிகள், ‘இலங்கை – இந்தியாவில் மிகப் புகழ்பெற்ற காமா பெஸ்ட் இந்தியன் பெஸ்ட் பஹதூர் பீடிகள், சாங்கிலி – நிப்பாணி – அக்கூள் – மிர்ஜ் பண்டர்பூரி பீடி புகையிலைகள் முதல்தரமான சரக்குகளாகவும், கியாரண்டியுடன் விலை சகாயமாய் மொத்தமாக விற்பனை செய்து வருகிறோம்என்று சொல்லும் ஏஜெண்டு வி.அப்துல் ரஷீது, எம்.எஸ்,பி பீடிகளையே எப்போதும் பயன்படுத்தச் சொல்லும் எம்.சுல்தான் பிள்ளை அன் சன்ஸ் என்னும் வியாபாரியின் மாலிக் மஹால் (தொ.பே.எண்: 102, திருநெல்வேலி), புகைக்கச் சிறந்தது என்னும் சான்றுடன் திருநெல்வேலி ‘ஹுசேன் பீடிகள்’, புகைக்குச் சிறந்தது என்னும் சான்றுடன் திருநெல்வேலி ‘காஜா பீடிகள் ஆகிய பீடிகளின் விளம்பரங்கள் காணப்படுகின்றன.



என் மனதில் புகைப்பதிவுகள் பால்ய வயதில் முதன்முதலாக ஏற்பட்ட்து திருவையாற்றில் நாங்கள் குடியிருந்த வீட்டின் ஓனர் மூலமாக. அப்போதே அவருக்கு எண்பது வயதைக் கடந்திருந்தது. வீட்டின் பின்னே பரந்து கிடந்த கொள்ளையில் வளர்க்கப்பட்ட பத்துப் பதினைந்து தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்களுக்குத் தண்ணீர் விடுவதற்காகத் தினமும் அதிகாலையிலேயே தலைப்பாக் கட்டுடன் வந்து வேட்டியை டப்பாக்கட்டு கட்டிக்கொண்டு ஒரு சுருட்டைப் பற்ற வைப்பார். குபுகுபுவன்று புகை கிளம்புவதை நாங்கள் வேடிக்கை பார்த்து ஆச்சரியப் படுவோம். ‘இத்தே பெரிய சிகரெட்டுப் புடிக்கிறாரே தாத்தாஎன்று தோன்றியது. அதன் பெயர் சுருட்டு என்பது பின்னால் தெரியவந்தது. கிராமத்தில்தான் அந்த முரட்டு வஸ்துவைப் புகைப்பார்கள் என்று எண்ணியிருந்தேன். இங்கிலாந்தின் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் வாயில் அதைப் பார்த்தபோது அந்த எண்ணம் மாறியது. அவரே எம்ஜியாரின் ரெண்டுக்கு சிம்பலுக்குச் சொந்தக்காரர் என்பதும் புதிய தகவலாகக் கிடைத்தது. இப்போது தோன்றுகிறது, ‘சுருட்ட இப்படிப் பிடிக்கணும்என்று சர்ச்சில் காட்டிய சுருட்டுக் குறியைத்தான் விக்டரிக் குறி என்று விளங்கிக் கொண்டார்களோ என்னவோ?

என் தாய்வழிப் பாட்டனார், இங்கிலாந்து ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் படித்தவர், தன் கடைசிக் காலம் வரை சிகரெட்டு புகைத்துக் கொண்டிருந்தார். சிகரெட்டை அதன் பெட்டியிலிருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டு அந்த டப்பாவின் மீதே மெதுவாகத் தட்டிக்கொண்டிருபார். அப்படி ஐந்து நிமிடங்கள் தட்டிய பிறகுதான் பற்ற வைப்பார். என் தந்தைவழிப் பாட்டனார் பீடி புகைப்பார். ஜிப்பாவில் எப்போதும் ஏதாவது ஒரு பிராண்ட் கட்டு இருக்கும். ஊரூருக்கு தனிச்சிறப்பு சேர்க்கும் பிராண்டுகள் பீடியில் உண்டு என்று ஒருமுறை ஒரு பட்டியலே சொல்லி எங்களை அசத்தினார். ‘பாவட்டா பீடிஎன்று அவர் சொன்ன பெயர் வினோதமாகத் தோன்ற நாங்கள் சிரித்தோம்.



புகைத்து முடித்த பீடித் துண்டுகள் பீங்கானுக்குள் விழுந்து மிதக்காத ஒரு கழிப்பறையைப் பள்ளிவாசல்களில் பார்ப்பது அரிது. சில நேரங்களில் புகை சுற்றிக்கொண்டிருக்கும் நிலையில் உள்ளே சென்று அவதிப்பட்டிருக்கிறேன். தொழுகைக்குத் தயாராகிறவர்கள் கழிப்பறையில் பீடி புகைப்பதை ஒரு ஐதிகமாகவே வகுத்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்லலாம் போல. ஓர்மையாகத் தொழுவதற்கு மனத்தை அது தயார் செய்கிறதோ என்னவோ? அல்லது பீடி புகைக்கையில் இருக்கும் மனவோர்மை தொழும்போது இருக்கிறதா என்பதை அவர்கள் பரிசீலனை செய்துகொள்ள வேண்டும். அல்லது காஃபியைப் போல் பீடியும் ஒரு நல்ல மலமிளக்கியோ என்னவோ? புகைப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.

எதையோ சொல்ல ஆரம்பித்து எதையோ சொல்லி... இந்தக் கட்டுரை கட்டில்லாத உரையாக ரோலர் கோஸ்டர் போல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓர் உளவியல் சோதனையைச் சொல்லி முடித்துக் கொள்ளலாம். அப்போது பி.எஸ்சி இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தேன். என் நண்பன் ஒருவனுக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. அதை விட்டுத் தொலைக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தச் சின்ன வயசிலேயே அவனுக்கு வந்துவிட்டது! நான் தத்துவம் உளவியல் ஆன்மிகம் என்றெல்லாம் படித்துக் குவிக்கிறேன் என்பதை அறிந்து என்னிடம் ஆலோசனை கேட்டான். சிகரெட் குடிப்பதில் கிடைக்கும் இன்பம் என்பது தாயின் மார்பில் பால் குடிப்பதின் இன்பத்தை ஒத்திருப்பதாக ஆழ்மனம் உணர்வதால்தான் புகைப்பழக்கத்தை அவ்வளவு உறுதியாக நிறுவிக்கொள்கிறது என்று ஓஷோ சொல்கிறார். வெதுவெதுப்பான பால தாயின் முலைக்காம்பில் இருந்து வாய்க்குள் இறங்குவது போன்ற உணர்வை அது தருகிறது; குழந்தைப் பருவத்தில் போதுமான அளவு தாயிடம் பாலருந்தியிராத ஆசாமிகள்தான் புகைப்பழக்கத்திற்கு எளிதில் ஆட்படுவார்கள்; அவர்களின் ஆழ்மனதில் குழந்தைப் பருவத்தில் பதிந்து போன ஆற்றாமையை இதன் மூலம் தீர்த்துக்கொள்ள அவர்களின் மனம் யத்தனிக்கிறது. திருமணம் ஆகிவிட்டால் இந்தப் பழக்கத்தை விட்டுவிடுவது கொஞ்சம் எளிதாகலாம் என்றெல்லாம் ஓஷோ சொல்கிறார்என்றேன். திகிலுடன் கேட்டுக் கொண்டிருந்தான். என்னப்பா அவரு என்னென்னமோ சொல்றாருஎன்றான். “நிறுத்துறதுக்கு ஒரு பயிற்சியும் சொல்றாரு, ட்ரை பண்றியா?என்று கேட்டுவிட்டு அதைச் சொன்னேன்.

அந்தப் பயிற்சியாவது: இரவு தனிமையும் அமைதியும் உள்ள ஒரு சூழலை ஏற்படுத்திக் கொள்வது. கட்டிலறையாக இருந்தால் நலம். விளக்கை அணைத்துவிட வேண்டும். மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். குழந்தைகள் பாலருந்தும் புட்டியில் வெதுவெதுப்பாகப் பாலருந்த வேண்டும்!

சொன்ன கருத்துக்களை அந்த நண்பன் எப்படிப் புரிந்து கொண்டான் என்றும் இந்த உளவியல் பயிற்சியைச் செய்தானா இல்லையா என்பதை யான் அறியேன். ஆறேழு வருடங்கள் கழித்து அவனைச் சந்தித்த போது ஐரோப்பாவில் இருப்பதாகச் சொன்னான். ‘இன்னமும் ஸ்மோக் பண்றியா?என்று கேட்டேன். நிறுத்திவிட்டதாகச் சொன்னான். திருமணமாகி விட்டதென்றும் சொன்னான்.


6 comments:

  1. //காஃபியைப் போல் பீடியும் ஒரு நல்ல மலமிளக்கியோ என்னவோ? புகைப்பவர்கள்தான் சொல்ல வேண்டும்.// புகைப்பிடிக்கும் நண்பன் சொல்லியிருக்கிறான். காலையில் சிகரெட் பிடித்தால்தான் ஷிட் வருமென்று.

    ReplyDelete
  2. உடலுறுதி பெறவும், உள்ளம் மகிழவும், நற்குணங் குடி கொள்ளவும் டைமன் பீடிகளையே உபயோகித்து வாருங்கள்!”// சூப்பர்! இதுல இருக்குற 'நற்குணம் குடி கொள்ள' என்பதுதான் வெடிச் சிரிப்பை வரவழைக்கிறது!!!!

    ReplyDelete
  3. பீடித் தொழில் என்பது திருநெல்வேலியில் 'அடுத்த நாளை உணவுக்காக' இன்று பீடி சுருட்டியே ஆகணும் என்ற நிலையில் பெண்கள் வேலை செய்வார்கள். சின்ன வயசில் நானும் இதை செய்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. ஜெயகாந்தன் பீடி பிடிப்பதை நல்ல விஷயம் என்பார். உடம்புக்கு கெடுதல் என்றால் அட போடா என்றுவிடுவார். சேரிப் பகுதியில் வாழ்பவனுக்கு அது ஒரு வித சக்தி தருகிறது என்கிறார் ஒரு கட்டுரையில்...

    ReplyDelete
  5. நான் பழைய 'பைண்ட்' செய்யப்பட்ட விகடன்,குமுதம் பார்த்தேன். அதில் உள்ள விளம்பரமே புன்னகைக்க வைக்கும். அதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்று இருந்தேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள்!

    ReplyDelete
  6. விளம்பிய சகலமும், ‘விவேக’
    விமரிசனமும் கலந்த
    விருந்து வெரிகுட்டாக இருந்தது.

    வேர்டு வெரிஃபிகேஸன இதுவரை எடுக்காதது
    மட்டுமல்ல இப்ப அதை மேலும் கோணலாக்கி
    'ஏனிந்த கொலவெரிஃபிகேஸன்' :)

    ReplyDelete