Kola-veri / …./(Tamil) [U] 1. An intense feeling : I am kolaveri over this matter ; 2.Killing rage : why this kolaveri upon an innocent boy?
யார் கண்டது? அரை லட்சம் வார்த்தைகள் கொண்ட ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் அடுத்த பதிப்பில் அறுநூற்று சொச்சமாவது பக்கத்தில் ko… என்று தொடங்கும் சொற்பட்டியலில் ‘கொலவெறி’ என்னும் வார்த்தை இப்படி இடம்பெற்றிருந்தால் ஆச்சரியமில்லை.
ஏற்கனவே இந்தியா ஆங்கிலத்திற்குப் பல சொற்களை கொலை... மன்னிக்கவும், கொடை செய்திருக்கிறது. GURU, KARMA, YOGA போன்ற சொற்கள் ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியில் உள்ளன. இவையெல்லாம் இந்தியாவின் ஆன்மிகப் பண்பாடு சார்ந்த சொற்கள். ஆனால் ‘கொலவெறி’? இந்தியாவின் அரசியல் கலாச்சாரம் சார்ந்த சொல் என்று கூறலாம்!
இப்படியெல்லாம் தோன்றும் அளவுக்கு ‘வைதிஸ் கொலவெறிடி’ பாடல் வையமெல்லாம் பரவிவிட்டது. அமித்தாபச்சன், சல்மான் ருஷ்டி, ஒபாமா போன்றோர் இந்தப் பாடல் பற்றி ட்விட்டரில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள் என்னும் செய்திகள் வந்தன. “பாருங்கள், தமிழ் தெரியாதவர்கள்கூட இந்தப் பாடலை ரசிக்கிறார்கள். இது தமிழராகிய நமக்கெல்லாம் பெருமையான விஷயம்” என்றார் ஒரு அப்பாவி ஆறுமுகம். ”இதிலென்ன ஆச்சரியம்? ஏதோ அவர்களெல்லாம் சிலப்பதிகாரத்தை ரசித்துவிட்டது போல் பேசுறீங்களே, இது ஓர் ஆங்கிலப் பாடல்தானே?” என்றேன்.
உண்மைதானே? சிலப்பதிகாரத்திற்கு ‘உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்’ என்றொரு விவரிப்பு உண்டு. அதுபோல் இந்தப் பாடல் ‘தமிழிடை இட்ட ஆங்கிலப் பாடல்’தானே? பிறகு எல்லோரும் ரசிப்பதில் என்ன சிக்கல்? “ஜெய்ஹோ” (ஸ்லம்டாக் மில்லியனெய்ர்) பாடலை உலகமே ரசித்ததே, அதை வேண்டுமானால் சொல்ல்லாம், இசைக்காகவே ரசித்தார்கள் என்று. (ஜெய்ஹோ என்னும் சொல்லும் ஆங்கில அகராதியில் இடம்பிடித்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.)
ஆனால் இந்தக் கொலவெறிப் பாட்டு இப்படி சகட்டு மேனிக்கு ஹிட் ஆகும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். லேப்டாப்பை ஆன் செய்தாலே என் மகன் இந்தப் பாடலைத்தான் போடச் சொல்கிறான். அன்று ஒருநாள் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது “வைதிஸ் கொலவெறி...டி” என்று பாடியபடி நான்கைந்து பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தன. இப்படிப் பிஞ்சுப் பிள்ளைகளை எல்லாம் தெருவில் கொலைவெறியோடு சுற்ற விட்டிருக்கிறதே இந்தப் பாடல் என்று நினைத்துக் கொண்டேன். நன்றாகப் பேசிக்கொண்டிருந்த பிள்ளைகள் ‘பப்பாப்பப்பா... பெப்பெப் பெப்பே...’ என்று ஊமைகளைப் போல் திரிகின்றன.
மிக அதிகமாக ரீமிக்ஸ் செய்யப்பட்ட தமிழ்ப்பாடல்- ஆல்ஸோ இந்தியப் பாடல் இதுவாகத்தான் இருக்கவேண்டும். செப்புமொழி பலவற்றிலும் ரீமிக்ஸ் செய்யப்பட்டாலும் ‘கொலவெறி’ என்னும் கலைச்சொல் (Technical term! நெலமடா சாமி!) மட்டும் அப்படியே தக்கவைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. (தக்கயாக பரணிங்கறது இதுதானா சார்? –கு.குசலா)
சோனு நிகமின் ச்சோட்டூ (பையன்) பாடிய மழலை இழையும் ரீமிக்ஸ், ஒரு பண்ணாடைப் பயல் பாடியிருக்கும் பாடாவதியான அரபி ரீமிக்ஸ் (”Why this color very green?” என்கிறான். கொலைச் சொல் மிஸ்ஸிங்.), மூன்று அணில்கள் – Chipmunks – பாடும் துள்ளலான ரீமிக்ஸ், பஞ்சாபி மொழியில் பெயர்த்து ஜெ.எஸ்.எல்.சிங் பாடியிருக்கும் ‘தேசி’ ரீமிக்ஸ் (பாங்க்ராவின் தனித்தன்மையான துடிப்பு!) ஆகிய மறுகலக்கல்களைச் செவி மடுத்தேன்.
ஒரு இசைப்பாடலை எப்படி அணுகுவதென்றே பலருக்கும் தெரியவில்லை என்பதற்கு இந்தப் பாடலும் ஓர் உதாரணமாகிவிட்டது. அதற்குக் காரணம் இந்தப் பாடல் பெற்றிருக்கும் அதீதமான பிரபல்யம்தான் என்று தோன்றுகிறது. அதைப் பார்த்துப் பலரும் மருண்டிருகக் கூடும். சிறுபத்திரிகை ஒன்று “தமிழ்மீது ஏனிந்தக் கொலைவெறி?” என்று தலையங்கம் தீட்டியிருந்தது (திட்டியிருந்தது). ”செம்மொழியான தமிழ்மொழியாம்...” என்று கலைஞர் எழுதியது போல் தனுஷும் எழுத வேண்டும் என்று எதிர்பார்த்தால் நியாயமா?
“கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து மாதிரியான கவிஞர்களின் பாடலெல்லாம் உலகப் புகழ் பெறல. இவன் எழுதின பாட்டு இவ்ளோ ஃபேமஸாயிடிச்சு”” என்றார் ஒரு நண்பர். இந்த ஒப்பீடே அபத்தம் என்று அவருக்குப் புரியவில்லை. தனுஷ் முதலில் தருமியைப் போன்ற ஒரு கவிஞன்கூட அல்ல. அந்தப் பாடலின் பலமே அது ஒரு கவிதையாக இல்லை என்பதுதான்! அதனுடைய கேஷுவல் ஃபீலிங்தான் அதன் உயிரோட்டம். ஒரு கல்லூரி மாணவன் காதல் தோல்வி அடைந்ததும் ஐந்திலக்கணம் கைவரப்பெற்றவன் போல் எதுகை மோனை பேணிப் புலமை செறிந்த பாடலைப் பாடுவான் என்பதுதான் செயற்கை. அந்தச் செயற்கை பழைய படங்களிலே இருந்தது. இப்போது எதார்த்தம் – காஷுவல்னெஸ் தலையெடுக்கிறது.
இந்தச் சூழலை மேலை நாட்டுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். கவிதைக்கும் இசைப்பாடலுக்கும் உள்ள வேறுபாடு அங்கே தெளிவாகப் பேணப்படுகிறது. கவிதைகளைத்தான் மேற்கோள் காட்டுவார்கள், இசைப்பாடலகளின் வரிகள் மேற்கோள் காட்டப்படுவது மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கும். மில்டன், ஷேக்ஸ்பியர், வால்ட் விட்மன், ப்ளேக், வோர்ட்ஸ்வொர்த், கீட்ஸ், ஷெல்லி, எலியட் போன்றவர்கள் கவிஞர்கள். அவரக்ள் எழுதியவை கவிதைகள். பீட்டில்ஸ், போனியம், அப்பா, பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ், பாய்ஸோன், ஸ்பைஸ் கேர்ள்ஸ் போன்றவை இசைக்குழுக்கள். அவர்கள் எழுதிப்பாடியவை இசைப்பாடல்கள். எல்விஸ் ப்ரிஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், பாப் மார்லி, மடோனா, ஷனையா ட்வெய்ன், செலீன் டியான் போன்றவர்கள் இசைக்கலைஞர்கள். அவர்கள் பாடியவை இசைப்பாடல்கள். இசைப்பாடலகள் என்பவை கவிஞர்களின் வரிகளைப் போல் அர்த்தகனம் கொண்டவையாக, அழுத்தமும் ஆழமும் கொண்டவையாக இருக்கவேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால் அப்படி இருக்கக் கூடாது என்றுகூட சொல்லலாம். அதில் பிரதிபலிக்க வேண்டியது இயல்புநவிற்சி – காஷுவல்னெஸ் மட்டுமே. தத்துவத்தையே சொன்னாலும் அது இயல்புநவிற்சியாகத்தான் வெளிப்படுத்த வேண்டும். பொழுதுபோக்கு இசைப்பாடலுக்கு அதற்கு மேல் மதிப்புக் கிடையாது. அதனால்தான் மைக்கேல் ஜாக்ஸன், மடோனா போன்றவர்களை ‘entertainers’ என்று அழைக்கிறார்கள்.
ஆனால் தமிழகச் சூழலில் விளைந்த விபரீதம், இங்கே வள்ளுவர் தொடங்கி கம்பன் வழியாக வள்ளலார், பாரதி, பாரதிதாசன் என்று வந்துகொண்டிருந்த கவிதை ரூட் மக்களின் மனத்தொகுப்பில் அப்படியே சினிமாவுக்குள் புகுந்து கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வாலி, வைரமுத்து, நா.மு, பா.வி என்று போய்க்கொண்டிருக்கிறது. இசைப்பாடலகள் தாம் இதுகாறும் அணிந்திருந்த கவிதையெனும் வேடத்தைக் களையும் தருணம் இது என்று சொல்லலாம். உலகளாவிப் பொதுமைப்பட்டு வரும் நவீன இசை இந்த நிர்ப்பந்தத்தைக் கொண்டுவந்துள்ளது.
”கொலவெறி” என்னும் சொல்லாடல் பல சிந்தனைகளை என் மனதில் தூண்டி விட்ட்து. இது ஒரு காதல் பாடல். அதில் எங்கிருந்து கொலைவெறி வந்தது? என்று நினைக்கலாம். காதல் மனிதனின் அகம்பாவத்தை, ’நான்’ என்னும் தன்முனைப்பை (ego) அழிக்கிறது. காதல் என்னும் போரில் தன் அழகென்னும் ஆயுதத்தால் காதலனின் தன்முனைப்பை வெட்டி வீழ்த்துபவளாகக் காதலி சித்தரிக்கப்படுவது அனைத்து இலக்கிய மரபுகளிலும் உள்ளது. சமய மரபுகளிலும் இந்தக் குறியீடு உண்டு. அசுரனின் தலையை வெட்டி ரத்தம் சொட்டச் சொட்டத் தன் கையில் பிடித்தபடி சிவனின் உடல் மீது ஏறி நிற்கும் காளியின் ஓவியம் ஞாபகம் வந்தது. மேற்சொன்ன கொலைவெறி இதுதான்.
நஸீர் அக்பராபாதி (1735-1830) என்னும் உருதுக் கவிஞர் எழுதிய அற்புதமான கஜல் ஒன்றும் ஞாபகம் வந்தது. “ஃகூன்-ரேஸ் கரிஷ்மா நாஸ் சிதம் கம்ஸோன் கி ஜுகாவத் வெய்சீஹி” என்னும் அந்தப் பாடல் முஸஃப்பர் அலி இசையமைத்து வெளியிட்ட ‘ஹுஸ்னே ஜானா’ (காதலியின் அழகு) என்னும் சூஃபி ஆல்பத்தில் இருக்கிறது. அப்பாடலின் தோராயமான மொழியாக்கம்:
”ரத்தக் களறி செய்யும்
அந்தப் பேரழகியின் வாள்விழிகள்
மெல்ல கவிழும்போது
எப்போதும் அப்படித்தான்.
இரக்கம் அற்றவள், கொடியவள்
கவலை அற்றவள், ஓய்வில்லாள்
அரட்டைக்காரியின் ஆடம்பரங்கள்
ஒளிமயமாய் ஜ்வலிப்பதென்ன?
உள்ளமோ கடினமானது
ஊழிக்கல் போன்று
ஆனால் அவளின் பேச்சு
கனியின் ரசம்!
அவளின் முகத்தில்
அழகின் தகிப்பில்
ஒவ்வொரும் கணமும்
ஒளிரும் முத்தாகிறது.
துளிர்க்கும் வியர்வையின்
ஒவ்வொரு துளியும்
மின்னுகின்றது
நூறு முத்துக்களின் ஒளியாய்.”
அன்றொரு நாள் இலக்கிய வகுப்பில் ’சிதம்பரம்’ பற்றிப் பேச்சு வந்தது. (ஊரைப் பற்றித்தான் ஐயா, ஆளைப் பற்றி அல்ல!) சிதம்பரத்தின் பழைய பெயர் தில்லை. தில்லைக் காடுகள் மண்டியிருந்த ஊர். தில்லை என்றதும் ருத்ர தாண்டவம் ஞாபகம் வந்துவிடும். நான் மாணவர்களிடம் சொன்னேன், “உண்மையான ருத்ர தாண்டவத்தை நீங்கள் அடர்ந்த காட்டின் நடுவேதான் உணர முடியும். புயல் போல் காற்று வீசும்போது உங்களைச் சுற்றிலும் ஐம்பதடிக்கும் உயரமான பன்னூறு மரங்கள் கிளை பரப்பி நின்றாடும் காட்சியைக் கொஞ்சம் கறபனை செய்யுங்கள். அதுதான் ருத்ர தாண்டவம். அதுதான் ஊழிக்கூத்து! சிவன் சுடுகாட்டில் இருப்பான் (அழிவு!) என்று கேட்டுக் காரைக்கால் அம்மையார் அக்காட்டில் சென்று இருந்தபோது இதனைக் கண்டிருக்க வேண்டும். ‘திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்’ என்னும் பெயரை இதற்கான குறிப்பாகக் கொள்ளலாம். காட்டு மரங்கள் அப்படி ஆடும் காட்சி எப்படி இருக்கும்? நான் சிறுவனாக இருக்கும்போது மழைக்காலத்தில் இக்காட்சியை எங்கள் வீட்டின் கொள்ளைப்புறத்தில் கண்டிருக்கிறேன். ஆனால் நான் கண்டது ’பத்து பனிரண்டு’ தென்னை மரங்கள். கிளையில்லாத தென்னை மரம் ஒன்று ஓலை மட்டைகளைக் காற்றில் வீசி ஆடும் காட்சியே வெறியேற்றத்தில் பெண்ணொருத்தி கூந்தல் விரித்தாடும் காட்சியை ஒத்திருந்தது என்றால், கானகத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் ஒவ்வொன்றும் பன்னூறு கிளைகள் விரித்தாடும் காட்சி எப்படி இருக்கும்? ஓருடலில் பல கைகள் கொண்ட ஒருவனின் நடனமாக அதனைக் கவித்துவ மனம் உருவகித்துள்ளது. இயற்கையில் இறைவனின் வல்லமை வெளிப்படும் கணம் அது. அதனை சிவனின் தாண்டவமாக, கூத்தாகக் குறியீடு தந்திருக்கிறார்கள். தில்லை என்பது இயற்கை சார்ந்த பெயர். சிதம்பரம் என்பது தத்துவம் சார்ந்த பெயர் என்பதைக் கவனியுங்கள். இயற்கையின் இயக்கத்தில் வெளிப்படும் இறையாற்றலை மனம் கிரகித்துக்கொண்டு அதை ஒரு தத்துவமாக்கிப் பின் அந்தத் தத்துவத்திற்கு ஒரு குறியீட்டைக் கொடுத்துள்ளது. இயற்கையில் நீங்கள் காண்பது இயக்கத்தை. சிலையில் காண்பது அந்த இயக்கத்தின் ஒரு பிம்பத்தை. பிம்பத்திலிருந்து இயக்கத்தை உருவகித்துக் கொள்ளவேண்டிய நிலை இப்போது ஏற்பட்டுவிட்டது. எந்தக் காட்டில் இருந்து தத்துவத்தை மனிதன் கிரகித்துக் கொண்டானோ அந்தக் காட்டையே அழித்து அந்தத் தத்துவத்திற்கு ஒரு குறியீட்டை உருவாக்கியிருப்பது ஒரு நகைமுரண். ஆனால் நாகரிக வளர்ச்சியின் போக்கு இப்படித்தான் செல்லும். அதைத் தடுக்கவியலாது. காட்டில் கண்ட நடனத்திற்கு மனிதன் தன் உருவத்தில் குறியீடு செய்திருக்கிறான். இல்லையெனில், சிவன் மரமுமல்ல மனிதனுமல்ல. இப்போது மனிதன் தன்னுள் காடு கண்விழிக்கும் கணத்தைக் கண்டடைய வேண்டும். இல்லையெனில் தாண்டவம் விளங்காது. இந்தக் குறியீட்டுச் சிற்பத்தில் கவனிக்க வேண்டியது முகபாவம். அத்தனை உக்கிரமான நடனத்தை இயற்றுபவனுக்கு அத்தனை சாந்தமான முகம்! அகத்தின் அழகு முகத்தில்! ஒரு புயலின் மையம் போன்றது அது. மௌலானா ரூமி வகுத்த சுழலும் நடனத்தில் இதைத்தான் கவனிக்கச் சொல்கிறார்கள். உடல் எத்தனை வேகமாகச் சுழன்றாலும் மனம் பேரமைதி கொண்டு அசைவற்றிருக்க வேண்டும். இறைவனின் ஆற்றல் சூறையாக மழையாக நிலநடுக்கமாக ஆழிப்பேரலையாக அழிக்கும் கோலத்தில் வெளிப்பட்டாலும் அவனுடைய நிலை பேரமைதிதான் – சலாமத். அந்த அமைதியைத் தன் ஆன்மாவில் தொட்டவனுக்கு இவற்றால் கலக்கம் இல்லை!”
சிவனின் நடனம் வெறுமனே அழிவின் நடனம் மட்டுமல்ல. ருத்ர தாண்டவம் என்று சொல்லப்படும் அதுவே ஆன்ந்தத் தாண்டவம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஒருகோணத்தில் அழிவாகத் தெரிவது வேறொரு கோணத்தில் ஆக்கமாக இருக்கும். ஆக்கத்திற்காகவே அழிக்கும் நடனம் அது. கன்னிமை அழியாமல் தாய்மை சாத்தியம் இல்லை. கல் அழிக்கப்படுவதாகத் தோன்றுவது சிற்பத்தின் ஆக்கம்தான். ஒரு கோலம் அழிந்து மறுகோலம் பிறக்கிறது. “சக்தியை ஒரு வடிவிலிருந்து வேறு வடிவிற்கு மாற்றி அமைக்க முடியும். ஆனால் அதனை ஆக்கவோ அழிக்கவோ இயலாது” (Energy can be transformed from one form to another but cannot be created or destroyed.) என்பது தெர்மோடைனமிக்ஸ்-ன் முதல் விதி. இந்த சூட்சுமம் தெரிந்தவர் ஒரு கோலத்தின் அழிவில் அமைதி இழப்பதில்லை. விதை தான் அழிந்துகொண்டிருப்பதாகப் புலம்பலாம். ஆனால் அதை விருட்சமாக வளர்த்துக் கொண்டிருக்கும் இறைக்கருணை தன் விளையாடலை நிறுத்துவதில்லை. அது ஆனந்தக் கொலைவெறி!
சூஃபிகள் இறைப்பண்புகளை இரண்டு வகைப்பட்டதாக விளக்குகிறார்கள். அவனது வல்லமை – ஆற்றல் சார்ந்த திருக்கல்யாண குணங்கள் (ஜலால்) மற்றும் அவனது கருணை – அழகு சார்ந்த திருக்கல்யாண குணங்கள் (ஜமால்). Majesty and Beauty என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகிறது. குறியீடாக, ஆற்றலுக்கு ஆணையும் அழகிற்குப் பெண்ணையும் சொல்வதுண்டு. ஆற்றல் வீரமாக வெளிப்படும். அழகு அன்பாக, காதலாக, அருளாக வெளிப்படும். இவற்றில் ஒன்று மற்றதை விட்டு விலகியதில்லை. ஒன்று மற்றொன்றினைச் சார்ந்தது, தாவோ வட்டம் குறிப்பதைப் போல.
“இறைவனின் ஆற்றல் அழகில் வெளிப்படும் கணங்கள் உண்டு. அதைக் காணும் பக்தன் அழகின்முன் பணிந்துவிட வேண்டும். உண்மையில் அது ஆற்றலுக்குப் பணிவதாக இருக்கும். இறைவனின் அழகு ஆற்றலில் வெளிப்படும் கணங்கள் உண்டு. அப்போது அந்த அழகை பக்தன் வியந்து பரவசம் அடைய வேண்டும். அப்படி இல்லை எனில் அவன் புரிந்துகொள்ளவில்லை என்றாகிவிடும்” என்று சூஃபி ஞானி இப்னுல் அரபி சொல்கிறார்.
இது ஒருவகையான Reversal Role Play. காதலில் ஆண் பெண்ணைப் போலும், பெண் ஆணைப் போலும் நடந்துகொள்ளும் தருணங்கள். இந்தத் தத்துவத்தை மௌலானா ரூமியின் கவிதை வரி ஒன்று மிக அழகாக வருணிக்கிறது: “மான் புலியை வேட்டை ஆடும் நிலை.” இதே நிலையை குணங்குடி மஸ்தானின் கண்ணி ஒன்றும் இப்படிச் சொல்கிறது:
“பல்லை இதழ் கடிக்கப்
பானை தடி ஒடிக்கக்
கல்லைத் தேங்காய் உடைக்கக்
காண்பாய் மனோன்மணியே.”
காதலில் காதலன் காதலியின் நினைவில் மூழ்கி விடுகிறான். அவள் அல்லாது அவன் உள்ளத்தின் உள்ளே வேறு எதுவும் இருப்பதில்லை. அதுவரை அவன் தன் மனதிற்குள் சேர்த்து வைத்திருந்த அனைத்தையும் காதலியின் நினைவு இரக்கம் காட்டாமல் அழித்துவிடுகிறது. தன்னை நேசிப்பவனின் இதயத்தை முழுமையாகத் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்பதே அதன் குறி. இது இறைக்காதலுக்கே மிகவும் பொருத்தம் என்று சூஃபிகள் காண்கின்றனர். ஏனெனில் ”இறைநம்பிக்கையாளனின் இதயம் இறைவனின் ஆசனம்” என்பது நபிமொழி.
திருக்குர்ஆனின் 27-வது அத்தியாயமான “அந்-நம்ல்” (எறும்பு) இறைத்தூதர்ரும் மன்னருமான சுலைமான் (அலை) அவர்களின் கதையைச் சொல்கிறது. ஷீபா நாட்டின் அரசியான பல்கீஸ் என்பவருக்கு சுலைமான் நபி கடிதம் எழுதி தற்பெருமையை அகற்றி இறைவனுக்குப் பணிந்த நிலையில் தன்னிடம் வருமாறு சொல்கிறார்கள். அந்தக் கடித்த்தைப் படித்த அரசி பஸ்கீஸ் தன் அமைச்சர்களிடம் ஆலோசனை செய்கிறார். சுலைமானுடன் போரிடலாம் என்று அவர்கள் சொல்கிறார்கள். அதற்கான படை வலிமை தங்களிடம் உள்ளதாக அவர்கள் நினைக்கிறார்கள். அதை மறுத்து பல்கீஸ் சொல்கிறார்:
“அரசர்கள் ஒரு நகரத்திற்குள் நுழைவார்களானால், நிச்சயமாக அதனை அழித்து விடுகிறார்கள்; அதிலுள்ள கண்ணியமுள்ளவர்களை, சிறுமைப் படுத்தி விடுகிறார்கள்; அவ்வாறுதான் இவர்களும் செய்வார்கள்.” (27:34)
இந்த வசனத்தின் ஆன்மிக உட்பொருளாக சூஃபி மகான் இப்னுல் அரபி அவர்கள் தரும் வியாக்யானம்: “இறைவனின் ஒளிச்சுடர்கள் பக்தனின் இதயத்திற்குள் புகும்போது அதில் இருக்கும் உலக இச்சைகளை முற்றிலுமாக அழித்து விடுகிறது.”
‘கொலவெறி’ என்னும் சொல்லாடல் என் மனதில் இன்னொரு ஞாபகத்தையும் தூண்டியது. பாரதியார் எழுதிய ”ஊழிக்கூத்து” என்னும் பாடல். அண்டங்களின் அழிவை சொற்களின் சந்தத்திலும் ஓசையிலும் தொனிக்க அவன் இதில் செய்திருக்கும் பிரயத்தனம் வியப்பூட்டுகிறது. அதன் இறுதியில் வரும் இரண்டு வரிகள் இவை:
“காலத் தொடுநிர் மூலம்படு மூவுலகும் – அங்கே
கடவுள் மோனத் தொளியே தனியாய் இலகும்”
காலத்தின் முடிவில் (கியாமத் – காலத்தின் நிற்றல்) அகில உலகங்கள் அழிந்து போக இறைவனின் ஒளி மட்டும் தனித்திருக்கும் என்பது இவ்வரிகளின் கருத்து. இக்கருத்து திருக்குர்ஆன் வசனமொன்றின் கருத்தினை அப்படியே பிரதிபலிக்கின்றது:
”அதன் மீதுள்ள அனைத்தும் அழிந்துவிடும்.
மாட்சிமையும் பேரருளும் கொண்ட
உம் ரட்சகனின் திருமுகமே
நிலைத்திருக்கும்”
(55:26,27)
:)))
ReplyDeleteபதிவின் எள்ளல் பலமுறை வாசிக்க வைக்கிறது.
நன்றி!
மிக ஆழமான விஷங்களை உள்ளடக்கிய அற்புதமான பதிவு.. தங்களின் ஆன்மீக விஷயங்கள் பிரமிக்க வைக்கின்றன.
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றி..
http://anubhudhi.blogspot.com/
Why this kolaveri? Ennai, satharanamana manushanaaha, sinthikkaamal comfort zone-il ey irukka viddamal. Miha Azhagaana pathippu.
ReplyDeleteIntha song-ai patthi Dhanush-in karutthu:
http://www.hindustantimes.com/Entertainment/RegionalFlavours/Kolaveri-Di-is-absolute-nonsense-Dhanush/Article1-774228.aspx