Monday, January 30, 2012

மூன்று கவிதைகள்


(of Bridal Mysticism)

கிணற்று வெள்ளம்




நீயே இனிய
நீராய்த் ததும்பும்
ஆழ்கிணறு நான்

எனினும் ஏனிந்தக்
கொல்லும் தாகம்?

காதல் தாம்பில்
கட்டிய இதயத்தை
என்னுள் இறக்குகிறேன்
நாளும் கைநோக

கருணையின் நீர்
கணக்கற்றுப் பொங்கிக்
கிணற்றின் விளிம்புக்கு
மேலெழுந்து வழியும்
நாளும் எந்நாளோ?

என் தோட்டம் முழுவதும்
உன் ஈரம் பெருகும்
தேதியும் எதுவோ?


  

காட்சி மாற்றம்


மறைந்து கொண்டிருக்கும்
உன் கோபத்திலேயே
தெரிகிறது
உன் காதலின் கனிவு

இல்லை இல்லை.
உன் காதலின் கனிவை
எனக்கு நீ
நாடிய கணத்தில்
மறையத் தொடங்கியது
உன் கோபம்

நீயே உன்னைக்
காட்டித் தராவிடில்
உன்னைக் காண்பது யார்?


  
கனிகளில் இல்லாக் கனிவு



தினமும் நான்
கனிபறித்துக் கொண்டிருந்த
தோட்டம்தான் எனினும்
அன்றொரு நாள்
நீ பறிப்பதைக் கண்டதிலிருந்து
ஓய்ந்துவிட்டன
என் கைகள்

பறித்துச் செல்கையில்
திரும்பிப் பார்த்து
நீ செய்த புன்னகையில்
இருந்தது
உன் தோட்டத்தின் கனிகளில்
இல்லாததொரு கனிவு

உனக்கென வழிந்த
கண்ணீர்த் துளிகளில்
எங்கிருந்து வந்தது
வலியின் தித்திப்பு?

நீயேன் இப்படிக்
கண்ணீருக்கு இனிமையும்
கனிகளுக்குக் கைப்பும்
செய்தாய்?

மெல்லிய கிளைகளை
அளைத்துக் கொண்டிருக்கும்
காற்றின் லயத்தில்
அலைந்து கொண்டிருக்கிறேன்
கனிகள் பறிக்காமல்

உயிரில்
மீண்டும் எப்போது
சுவைக்கக் கிடைக்கும்
கனிகளில் இல்லாக் கனிவு.





1 comment:

  1. ஒரு முறைதான் படித்தேன் சகோ..மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுகிறது.கண்டிப்பாக இன்னும் சில முறைகள் படிப்பேன்.அவ்வளவு சிறப்பான வரிகள் ஒவ்வொன்றும் மனதை ஈர்க்கின்றன.நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete