Wednesday, February 1, 2012

நான் நீ அவன்அவ்வப்போது நண்பர்கள் அன்பர்கள் யாராவது ஏதாவது சுவாரஸ்யமான செய்தியை அனுப்பி வைப்பதோ அல்லது மூளையைக் கிண்டுவது போன்ற கேள்வியைக் கேட்பதோ உண்டு. சமீபத்தில் உத்தமப்பாளையம் அப்துல் காதிர் சாஹிப் அவர்கள் பயில்வான் சாகிபின் ஒரு நூலில் இருந்து தன் மனதைக் கவர்ந்த ஒரு பகுதியை ஸ்கான் செய்து மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அனுப்பியிருப்பதை உலாப்பேசியில் அழைத்தும் சொன்னார். (செல்ஃபோனை செல்பேசி என்றோ அலைபேசி என்றோ சொல்வதை விட உலாப்பேசி என்று சொல்வது இன்னும் பொருத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறது என்று தமிழாசான் திருமாவளவன் என்ற அப்துல் ரஹ்மான் (இவரின் மகன் என் மாணவர். பெயர் ’அண்ணல் முகம்மது’!) சொன்னார். பயில்வான் சாகிபின் புத்தகப் பத்தி இது:“இப்போது சிந்தனை செய்து பார். ஒருவன் பணக்காரனாக, உயர் பதவியுடையவனாக அல்லது எவ்வகையிலேனும் நம்மைவிட அவன் மேம்பட்டவுனாக இருக்கிறான் என்று நாம் கண்டால் பொறாமை ஏற்படுவது ஏன்? நான் வேறு அவன் வேறு என்ற உணர்வு நம்மிடையே இருப்பதனால்தான், உலகிலுள்ள ஒவ்வோர் பொருளையும் தனித்தனிப் பொருட்களாய் காண்பதாலும், அப்பொருட்களை அனுபவிக்கும் நான் அவற்றைவிட்டும் என்னை வேறாய்க் காண்பதாலும் ஆசை, கோபம், அன்பு, வெறுப்பு, பொறாமை, இரக்கம் முதலிய அத்தனை பண்புகளும் வெளியாகின்றன. நானும் எனது பண்புகள் வெளியாகக் காரணமாய் இருந்த அத்தனை பொருள்களும் ஒரே பொருளின் பிரதிவிம்பங்களே என்று காணுகிற ஒருவர் எதை ஆசை கொள்வார்? எதைப் பொறாமைப்படுவர்? திரும்பும் திசையெல்லாம் இறைவனையே காணுகிற அல்லது இறைவனே பார்க்கிறான் என்று நம்புகிற ஒருவர் எப்படி களவு செய்வார்? எப்படி விபசாரம் செய்வார்? இவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்தாலே ஒழிய எவ்விதப் பாவச் செயல்களிலும் ஈடுபடவே மாட்டார்.”

இந்த மின்னஞ்சல் எனக்கு அனுப்பப்பட்ட அதே நேரத்தில் நான் மறைமலை அடிகள் எழுதிய ‘பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்’ என்னும் நூலினைப் படித்துக் கொண்டிருந்தேன். (நூலின் தலைப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அது ‘சைவ சமயமே பழந்தமிழ்க் கொள்கை’ என்று சொல்லவில்லை. மாறாக, பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்று சொல்கிறது. சைவத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட ‘ஆரியப் புதுமைகளை’ நீக்க வேண்டும் என்னும் நோக்கில் இதனைத் தான் உரையாற்றியதாக மறைமலை அடிகள் விளக்குகிறார்.) அந்நூலில், ‘பண்டைத் தவவாழ்க்கை’ என்னும் பகுதியில் அவர் சொல்கிறார்:

“’அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்’
என்னுந் திருக்குறளால் துறவுநிலை புகுதல் பயன் இன்றாமென்றுந் தொல்லாசிரியர் வழியே கடைப்பிடித்து ஓதியதோடு, துறவு என்பது நெஞ்சினாற்றுறத்தலே யாமெனவும், ‘யான் செய்தேன்’ என இறுமாந்துரைக்கும் அகப்பற்றும், ‘எனது பொருள்’ எனச் சொல்லும் புறப்பற்றும் ஒருங்கறுதலே யாமெனவும் வற்புறுத்துவாராய்,
‘நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்’
என்றும்,
‘யான்எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்’
என்றும் அருளிச் செய்வாராயினர்”

இந்தத் திருக்குறளை இதற்குமுன் நான் ஊன்றிக் கவனித்தது இல்லை. மேற்கண்ட பகுதியைப் படித்தபோதுதான் அதன் ஆழம் என்னை வியக்க வைத்தது. ’யான் எனது என்னும் செருக்கறுப்பான்…’ என்று வள்ளுவர் எத்தனை எளிமையாகச் சொல்லிப் போகிறார் என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டேன். அதற்கு மறைமலை அடிகள் கொடுத்திருக்கும் விளக்கமும் சிந்திக்க வைத்தது: ‘யான் செய்தேன்’ என இறுமாந்துரைக்கும் அகப்பற்றும், ‘எனது பொருள்’ எனச் சொல்லும் புறப்பற்றும்…

எனக்குச் சட்டென்று சூஃபித்துவப் பாடங்கள் ஞாபகம் வந்தன.
தெய்விகத்தின் (உலூஹிய்யத்) நான்கு அவதானங்கள் என்று சொல்லப்படுவன: ஜாத் (சுயம்), சிஃபாத் (குணங்கள்), அஃப்ஆல் (செயல்கள்) மற்றும் ஆஸார் (உடைமைகள்).
‘யான் செய்தேன்’ என இறுமாந்துரைக்கும் அகப்பற்று என்பதில் சுயம், குணங்கள், செயல்கள் ஆகிய மூன்றையும் தனதாகக் கருதும் அஞ்ஞானம் சுட்டப்படுகிறது.
‘எனது பொருள்’ எனச் சொல்லும் புறப்பற்று என்பதில் உடைமைகள் தனது என்று கருதும் அஞ்ஞானம் சுட்டப்படுகிறது.
சுயம், (நிறை) குணங்கள், செயல்கள் மற்றும் உடைமைகள் ஆகிய நான்கும் இறைவனுக்கே உரியவை என்று சூஃபித்துவம் சொல்கிறது.

அப்படியானால் இவை நான்கும் படைப்புக்களுக்கும் இருப்பதாகப் படுகிறதே? அதற்கு என்ன விளக்கம்? என்னும் கேள்வி எழுகிறது. அதற்கு சூஃபித்துவம் தரும் விளக்கமாவது:
1.இறைவனின் சுயம் பூர்விகமானது; படைப்புக்களின் சுயம் புதிதானதும் இரவலானதும், தனக்கென்று உள்ளமை இல்லாது இறைவனின் உள்ளமையில் அவனால் தோற்றப்படுவதும் ஆகும்.

2.இறைவனின் குணங்கள் நிறைவானவை, பூரணமானவை; படைப்புக்களின் குணங்கள் அவற்றிற்கு எதிர்ப்பதமானவை, குறையுள்ளவை. இறைவனின் குணங்கள் படைப்புக்களில் பிரதிபலித்து அவற்றின் குறைகளை மறைக்கின்றன.

3.இறைவனின் செயல்கள் சுயமானவை; படைப்புக்களின் செயல்கள் இறைவனின் சக்தியைச் சார்ந்து கட்டுப்பட்டவை. (அவனன்றி ஓரணுவும் அசையாது!)

4.அனைத்துப் பொருட்களும் இறைவனால் படைக்கப்பட்டவை என்பதால் அவை எல்லாம் அவனது உடைமைகளே; படைப்புக்களுக்கு உடைமைத் தன்மை என்பது அடைக்கலத் தன்மையாக அதாவது பொறுப்புத் தன்மையாக (அமானத்) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

இந்த விளக்கங்களில் இருந்து மேலும் பல கேள்விகள் கிளைக்கத்தான் செய்யும். ஏனெனில் நான் மிகச் சுருக்கமாகவும் பொதுவாகவும் மட்டுமே சொல்லியிருக்கிறேன். அதுமட்டுமல்ல, புலன்களுக்குச் சிக்காத அரூப விஷயத்தின் மீதான பேச்சு இது என்பதும் ஒரு முக்கியமான காரணம்.


மேலே சொன்ன நான்கு விஷயங்களுக்கும் விளக்கமாக / ஆதாரமாகத் திருக்குர் ஆனின் வசனங்கள் பல மேற்கோள் காட்டப்படுவதுண்டு. நான்கு அவதானங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு திருவசனத்தைக் குறிப்பிடுகிறேன்:
சுயம்: ”எப்பக்கம் நீங்கள் திரும்பினும் அல்லாஹ்வின் திருமுகம் (உள்ளமை) இருக்கிறது” (2:115)
குணங்கள்: ”அவனைப் போன்று எதுவுமே இல்லை. அவனே பார்ப்பவனாகவும் கேட்பவனாகவும் இருக்கிறான்.” (42:11)
செயல்கள்: “அல்லாஹ் உங்களையும் உங்கள் செயல்களையும் படைத்தான்” (37:96)
உடைமைகள்: ”வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுக்கே உரியவை” (3:109)

நான் மேலே சொல்லியிருக்கும் விளக்கங்களும் அதற்கான திருவசனங்களாக மேற்கோள் காட்டியிருப்பதன் விளக்கமும் நான் சார்ந்திருக்கும் சூஃபித்துவ சிந்தனைப் பள்ளியின் அடிப்படையிலாகும். சூஃபித்துவத்தில் வேறு சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கும் சூஃபித்துவமே தவறு என்று சொல்லும் வஹ்ஹாபிஸச் சிந்தனைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களுக்கும் அவை ஒவ்வாமல் இருக்கலாம். “என்ன இது? இதற்கு இதுவா விளக்கம்? இதற்கு இதுவா ஆதாரம்?” என்று அவர்கள் புரிந்து கொண்டுள்ள கோணத்தில் எதிர்வினைகள் எழுவது இயல்புதான். சிந்தனைக் கோணங்கள் மாறுபடும்போது இந்நிலை தோன்றுவது இயல்பே. அதையெல்லாம் விளக்கிக்கொண்டிருக்க இது இடமில்லை. நான் விளங்கிக் கொண்ட கோணத்தில், நான் சொல்ல வருவதைச் சொல்லிச் செல்கிறேன். இதைத்தான் நம்பியாக வேண்டும் என்று யார் மீதும் கட்டாயம் இல்லை.

கட்டுரையின் ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள பயில்வான் சாகிபின் கருத்தில் அவர் சொல்லும் மையமான விஷயத்தைப் பாருங்கள்: ”நானும் எனது பண்புகள் வெளியாகக் காரணமாய் இருந்த அத்தனை பொருள்களும் ஒரே பொருளின் பிரதிவிம்பங்களே என்று காணுகிற ஒருவர் எதை ஆசை கொள்வார்? எதைப் பொறாமைப்படுவர்? திரும்பும் திசையெல்லாம் இறைவனையே காணுகிற அல்லது இறைவனே பார்க்கிறான் என்று நம்புகிற ஒருவர் எப்படி களவு செய்வார்?”

இந்த வரிகளில் பயில்வான் சாகிபு அவர்கள் மேலே நாம் விளக்கிய நான்கு அவதானங்களில் முதலாவதாகிய சுயம் (ஜாத்) என்பதைப் பற்றியே பேசுகிறார். இறைவனைப் பொருத்தவரை அவனின் உள்ளமை (உஜூது) என்பதும் சுயம் (ஜாத்) என்பதும் ஒன்றுதான். படைப்புக்களின் சுயங்கள் (ஜவாத்) அனைத்தும் தனி உள்ளமை இல்லாதவை, இறைவனின் உள்ளமையில் தோற்றுபவை. எனவே உள்ளமை ஒன்றே ஒன்றுதான். இக்கருத்தியலுக்கு ’வஹ்தத்துல் உஜூது’ என்று பெயர். நான் சார்ந்துள்ள சிந்தனைப் பள்ளி உட்பட அனைத்து சூஃபித்துவப் பள்ளிகளும் இக்கொள்கையை ஏற்றுள்ளன. ”அத்தனை பொருள்களும் ஒரே பொருளின் பிரதிவிம்பங்களே” என்று பயில்வான் சாகிபு சொல்வதை இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன். ”உள்ளமை ஒன்று; சுயம் இரண்டு (இறைவனின் பூர்வீக சுயம் -  ஜாத்தே கிதம் மற்றும் படைப்புக்களின் இல்லாமையான சுயம் – ஜாத்தே அதம்.)” என்று நான் ’விளங்கி’ ஏற்றிருக்கும் கொள்கைக்கு இவ்வரிகள் பொருந்துவதாகவும் காண்கிறேன்.

”திரும்பும் திசையெல்லாம் இறைவனையே காணுகிற அல்லது இறைவனே பார்க்கிறான் என்று நம்புகிற ஒருவர் எப்படி களவு செய்வார்?” என்று பயில்வான் சாகிபு கூறும் சொற்றொடர் பின்வரும் இறைவசனம் மற்றும் நபிமொழியின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ளது:
1.இறைவசனம்:
”எப்பக்கம் நீங்கள் திரும்பினும்
அல்லாஹ்வின் திருமுகம் (உள்ளமை) இருக்கிறது” (2:115)

2. நபிமொழி:
(இஹ்சான் என்றால் என்ன? என்று ’வானவர் கோன்’ ஜிப்ரீல் அவர்கள் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள் அருளினார்கள்) “அல்லாஹ்வைப் பார்ப்பது போல் அவனை வணங்குங்கள். அவ்வாறு நீங்கள் அவனைப் பார்க்காவிடினும் அவன் நிச்சயமாக உங்களைப் பார்க்கிறான் (என்பதை உணர்ந்து வணங்குங்கள்)” (புகாரி: கிதாபுல் ஈமான் ஹதீஸ் #50, முஸ்லிம்: கிதாபுல் ஈமான் ஹதீஸ் #1-7)

மேற்கண்ட திருவசனம் ஆழ்ந்த கவனத்திற்கு உரியது. ’நீங்கள் எப்பக்கம் திரும்பினும் அல்லாஹ்வின் திருமுகத்தையே (உள்ளமை) காண்கிறீர்கள்’ என்று அவ்வசனம் கூறவில்லை என்பதைக் கவனியுங்கள்! மாறாக, “நீங்கள் எப்பக்கம் திரும்பினும் அல்லாஹ்வின் திருமுகம் (உள்ளமை) இருக்கிறது” என்றுதான் அவ்வசனம் சொல்கிறது. என்ன இருக்கிறது என்பதைச் சொல்கிறது. அதை நாம் காண்கிறோம் என்று சொல்லவில்லை. ஏனெனில் நம் அனுபவப் பிரகாரம் நாம் யாரும் கண்களால் எப்பக்கமும் இறைவனைக் காணவில்லை. நம் அனுபவப் பிரகாரம் அனைத்து திசைகளிலும் நாம் காண்பது படைப்புக்களைத்தான். அதாவது வானம், பூமி, தாது வர்க்கம், தாவர வர்க்கம், விலங்கு வர்க்கம், மனித வர்க்கம் முதலிய படைப்புக்களை – இறைவனின் உடைமைகளைத்தான் நாம் பார்க்கிறோம். அவைதான் இருப்பதாகப் படுகிறது. ஆனால் மேற்கண்ட திருவசனம் ‘இருப்பது இறைவனின் உள்ளமையே’ என்று சொல்கிறது. எவை இருப்பதாக நீ காண்கிறாயோ அவை அனைத்தும் இல்லாத சுயம்தான்; உண்மையில் அவற்றை உன் கண்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும் இறை உள்ளமையே (உஜூது) எதார்த்தத்தில் இருக்கிறது.

இருக்கின்ற ஒரே பொருளான அந்த இறை உள்ளமையை அவனால் காட்டப்படும் எந்தப் படைப்பும் அதன் எதார்த்தத் தன்மையில் அறிந்துவிடவோ கண்டுவிடவோ இயலாது. இதைத்தான் சூஃபி ஞானி இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள் “எந்தப் படைப்பும் எப்போதும் உள்ளமையின் நறுமணத்தை நுகர்ந்ததே இல்லை” (அல்-ஃகல்கு மா ஷம்மத் ராயீஹத்தல் உஜூது அபதா) என்று சொன்னார்கள்.


மேலும் அவர்களே, “எத்தனைதான் இறங்கினும் இறைவன் இறைவன்தான். எத்தனைதான் உயரினும் அடிமை அடிமைதான்” (அர்-றப்பு றப்புன் வலௌ தனஸ்ஸல், அல்-அப்து அப்துன் வலௌ தரக்கா) என்றும் சொன்னார்கள். எனவேதான், படைப்புக்களில் சிரேஷ்டரான நபி(ஸல்) அவர்கள் இறைவனின் படைப்புத்தான்; அவர்கள் இறைவன் அல்ல என்று கொள்கை கொண்டுள்ளோம்.

நபி(ஸல்) அவர்கள் மிஃறாஜ் என்னும் விண்ணேற்றம் சென்ற நிகழ்வில், அர்ஷின் மீது அவர்கள் அல்லாஹ்வை சந்தித்தது பற்றிய நபிமொழிப் பதிவும் உண்டு. அப்போது அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா என்பது பற்றி நபித் தோழர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. விண்ணேற்றம் பற்றி விவரிக்கின்ற, திருக்குர்ஆனின் 53-வது அத்தியாய (’நஜ்ம்’ – விண்மீன்) வசனங்கள் பூடகமாகவே உள்ளன. அதனால் அவ்வசனங்கள் பற்றிய புரிதல்களில் நபித்தோழரிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.

“(நபியின்) உள்ளம் அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்ல” (53:11) என்னும் திருவசனத்தை, நபி(ஸல்) அவர்கள் கண்டது வானவர் கோன் ஜிப்ரீலைத்தான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) விளக்குகிறார்கள். (முஸ்லிம்: கிதாபுல் ஈமான்: ஹதீஸ் #281)

“நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவரைக் கண்டார்” (53:13) என்னும் திருவசனத்தை, நபி(ஸல்) அவர்கள் வானவர் கோன் ஜிப்ரீலைப் பார்த்ததையே குறிக்கிறது என்று அபூஹுரைரா (ரலி) விளக்குகிறார்கள். (முஸ்லிம்: கிதாபுல் ஈமான்: ஹதீஸ் #283)

நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்க்கவில்லை, ஜிப்ரீலைத்தான் பார்த்தார்கள் என்பதே அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் விளக்கமும். “யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப் பெரும் பொய்யை  இட்டுகட்டிவிட்டார்” என்று அவர்கள் சொல்லி, இவ்விளக்கத்தை நபி(ஸல்) அவர்கள் தனக்குச் சொன்னதாகவும் அறிவிக்கிறார்கள். மேலும் தன் விளக்கத்திற்கு ஆதாரமாக, “கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவன், நன்கறிந்தவன்” (6:103) என்னும் திருவசனத்தை ஓதினார்கள் என்று மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார். (முஸ்லிம்: கிதாபுல் ஈமான்: ஹதீஸ் #287)

ஆனால், திருமறை வசனங்களின் உட்பொருள் விளக்கத்திற்கு நபி(ஸல்) அவர்களின் இறைவேட்டலை (துஆ) தனிப்பட்ட முறையில் அடைந்துகொண்ட சிறப்பினைப் பெற்றவரும், நபிக்கு அடுத்த நிலையில் முதல் திருமறை விரிவுரையாளர் (முஃபஸ்ஸிர்) என்று போற்றப்படுபவருமான ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மேற்கண்ட இரு திருவசனங்களுக்கும் (53:11 & 53:13) “நபி(ஸல்) தம் இறைவனை இரண்டு முறை தமது அகத்தால் பார்த்தார்கள்.” என்று விளக்கம் தருகிறார்கள். (முஸ்லிம்: கிதாபுல் ஈமான்: ஹதீஸ் #284 – 286)

விண்ணேற்றத்தில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை அகத்தால் பார்த்தார்கள் என்பதே அபூபக்கர்(ரலி), உமர்(ரலி), உஸ்மான்(ரலி) மற்றும் அலீ(ரலி) ஆகிய நேர்வழி பெற்ற நான்கு பிரதிநிதிகளின் கொள்கை.

இப்படியாக, பார்த்தார்கள் என்றும் பார்க்கவில்லை என்றும் சொல்லும் இரண்டு தரப்பு நபித்தோழர்களில் உள்ளது. இது பற்றிய தெளிவைப் பெற மேலும் இரண்டு நபிமொழிகள் துணை செய்யும். “நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா?” என்று வினவியதற்கு நபி(ஸல்) அவர்கள் அருளிய விடைகளாக அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளவை:
”ஒளியாயிற்றே! நான் எப்படி அவனைக் காண்பேன்?” (நூருன் அன்னீ அராஹு)
“ஒளியைக் கண்டேன்” (ரஅய்து நூரா)
(முஸ்லிம்: கிதாபுல் ஈமான்: ஹதீஸ் #291,292)

ஒளி (நூர்) என்பது இறைவனின் திருக்கல்யாண குணங்களில் ஒன்று. இந்த அடிப்படையில் பார்க்கும்போது நபி(ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா என்பதில் நபித்தோழர்கள் கொண்டிருக்கும் இருவேறு கருத்துக்கள் இருவேறு கோணங்களில் சொல்லப்படுபவை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

 நபி(ஸல்) இறைவனைப் பார்க்கவில்லை என்னும் கருத்து உள்ளமையின் கோணத்தில் சொல்லப்பட்டதாகும். இறை உள்ளமையின் எதார்த்தத்தை இறைவன் மட்டுமே அறிவான். படைப்புக்கள் படைக்கப்படுவதற்கு முன் அவன் இருந்த நிலை அது. அந்நிலைக்கு எந்தப் படைப்பும் எட்ட முடியாது.

நபி(ஸல்) அவர்கள் தம் அகத்தால் இறைவனைக் கண்டார்கள் என்னும் கருத்தும் இறைவனின் ஒளியைக் கண்டார்கள் என்னும் கருத்தும் இறைவனின் திருப்பண்புகள் (சிஃபாத்) என்னும் கோணத்தில் சொல்லப்பட்டதாகும். உலகில் இறையுடைமைகளான (ஆஸார்) படைப்புக்களின் கோலங்களில் இறைவனின் செயல்களும் பண்புகளும் வெளிப்பட்டாலும் (ஜுஹூர்) படைப்புக்கள் அகன்ற நிலையில் இறைப்பண்பை இங்கே காண இயலாது. விண்ணேற்றத்தில் அந்நிலையில் நபி(ஸல்) அவர்கள் இறையொளியைக் கண்டார்கள்.

இறைப்பண்புகளின் படிநிலையை (மர்த்தபா-வை)த் தாண்டி அவனின் உள்ளமை வரை படைப்பெதுவும் எட்ட இயலாது. இதனை நபிமொழி ஒன்று தெளிவுபடுத்துகிறது:
”ஒளியே அவனது திரையாகும் (ஹிஜாபுஹுன் நூர்)
அவன் அதனை விலக்கினால் (லௌ கஷஃபஹு)
அவனது திருமுகத்தின் (உள்ளமையின்) மாட்சிமை
நிச்சயமாகப் பொசுக்கிவிடும் (லஅஹ்ரகத் சுபுஹாத்தி வஜ்ஹிஹி)
அவனுடைய பார்வை அவனின் படைப்புக்களில் எட்டுகின்ற வரை
(மன்தஹா இலைஹி பஸருஹு மின் ஃகல்க்கிஹி).”
[முஸ்லிம்: கிதாபுல் ஈமான்: ஹதீஸ் #293]

ஒளியே அவனது திரையாகும் என்று சொல்லப்பட்டதில் ஒளி என்பது அவனுடைய திருப்பண்பேதான். அல்லாது அது படைக்கப்பட்ட ஒளியாக இருக்குமேயானால் இறைவனை மறைக்கும் ஆற்றல் ஒரு படைப்புக்கு வந்துவிட்டது என்று ஆகிவிடும். இறைவனின் மீது ஒரு படைப்புக்கு வல்லமை ஏற்பட்டுவிட்டது என்று ஆகிவிடும். அத்தகைய நிலைகளை விட்டும் இறைவன் பரிசுத்தமானவன், மேலானவன். எனவே, இதில் ஒளி என்பது அவனுடைய திருக்கல்யாண குணத்தையே குறிக்கும். அதைத்தான் நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள்.

இறைவனுடைய உள்ளமை வரை எந்தப் பார்வையும் எட்டாது என்பதால்தான் இஹ்சான் பற்றிய விளக்கத்தில் “இறைவனைப் பார்த்து வணங்கு” என்று சொல்லாமல் “இறைவனைப் பார்ப்பது போல் வணங்கு” என்று சொல்லப்பட்டது.

மீண்டும் பயில்வான் சாகிபை கவனிப்போம். ”திரும்பும் திசையெல்லாம் இறைவனையே காணுகிற…” என்று அவர் சொல்லும்போது இறைவனின் உடைமைகளை அவனின் உடைமைகள் என்னும் சிந்தனையுடன் காண்பது என்றும், படைப்புக்கள் செய்வதாகத் தோன்றும் செயல்களில் இறைவனின் சக்தியைக் கவனிப்பது என்றும், அச்செயல்களை இறைவன் எவ்வாறு படைக்கிறான் என்று காண்பது என்றும், இறைவனுடைய திருக்கல்யாண குணங்களின் சுடர்கள் (தஜல்லியாத்) படைப்புக்களில் வெளிப்படுவதைக் காண்பது என்றும், சர்வ கோடி சிருஷ்டிகளின் சுயம் எல்லாம் இல்லாமையே (அதம்); அவை இறைவனின் உள்ளமையில் தோற்றுகின்றன என்று அகத்தால் பாவிப்பது என்றும் பொருள் கொள்கிறேன்.

”எப்பக்கம் நீங்கள் திரும்பினும்
அல்லாஹ்வின் திருமுகம் (உள்ளமை) இருக்கிறது” (2:115)
உள்ளது ஒன்று, மற்றது அன்று.

இந்த இறைவசனத்தை (அதாவது 2:115) தெய்வீகத்தின் நான்கு அவதானங்களில் (இஃதிபார்) முதலாவதான சுயம் (ஜாத்) என்பதற்கு எடுத்துக்காட்டினேன். அதற்கு உரியதாகவே “யான்” அல்லது “நான்” (அனா) என்பது சொல்லப்பட்டது. அதாவது “நான்” என்பது சுயவுணர்வு.


எதார்த்தத்தில் இறைவனின் சுயம் மட்டுமே இருப்பதால் “நான்” என்பது இறைவனுக்கே உரியது. படைப்புக்களின் சுயம் இரவல் சுயமாதலால் படைப்புக்களின் “நான்” என்பது வெறும் பிரதிபலிப்பே. தெளிந்த தடாகத்தில் நிலா தெரிவது போல். தடாகம் வானமும் அல்ல, அதில் சுடர்வது உண்மை நிலவும் அல்ல. தடாக நீர் கலங்கி அலைபாயக் கூடும். அப்போது பிம்ப நிலவு சிதறிப் போகும். தண்ணீர் மீண்டும் ஸ்தம்பித்துத் தெளியும்போது நிலாப்பிம்பம் மீண்டும் நேர்த்தியாகும். ஆனால் ஒருமுறை நீர் கலங்குவதைக் கண்டால் கூட நம் பார்வை வானில் இருக்கும் நிலவின் பக்கம் திரும்பிவிடும். அதுவே உண்மை, இது அதன் பிம்பம் என்னும் அறிவுணர்வு இருக்கும். நம் தன்னுணர்வு கலங்கும், கலையும் தருணங்கள் இறைவனை அறிவதற்கு மிகவும் முக்கியமானவை. அந்நிலைகளை அடைவதற்கான பயிற்சிகள் அவசியமானவை. அத்தகைய அகநிலைகளை அனுபவிக்காதவன் தன் சுயவுணர்வை நிஜம் என்று நினைத்துக் கொண்டிருப்பான்.

படைப்புக்களுக்கு “நான்” என்னும் சுயவுணர்வைத் தருபவன் இறைவன்தான். எனவே “யான் எனது என்னும் செருக்கறுக்க” வேண்டும் எனில் அதை எந்தப் படைப்பும் சுயமாகச் செய்து கொள்ள இயலாது. அதை அவனேதான் அருள வேண்டும். தன் மேல் விழும் பிம்பத்தைக் கண்ணாடி தானே எப்படி விலக்கிக்கொள்ள முடியும்?
இறைவனைப் பற்றித் தாயுமானவர் சொல்லும் வரியொன்று நினைவு வருகிறது:
யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான்”!

(தொடரும்...)

6 comments:

 1. கண்காணி இல் என்று கள்ளம பல செய்வர்;
  கண்காணி இல்லா இடம் இல்லை, காணுங்கால்;
  கண்காணியாகக் கலந்து எங்கும் நின்றானைக்
  கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே---
  திருமந்திரம்
  -alhaj m.i.mansur ali

  ReplyDelete
 2. எழுதியிருப்பது அருமையானவை தான். எதில் வேண்டுமானாலும் கையெழுத்து போட்டு ஏற்றுக் கொள்ளலாம்.

  எனக்கு ஒரு சந்தேகம்... கீழே வரும் குரான் ஷரீஃபின் வசனத்தில்....

  "நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்;
  அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார்.
  அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான்.
  ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார்.
  அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார்."
  - குரான் ஷரீஃப் 7:143

  மூஸா நபியவர்கள் ஏன் மூர்ச்சையாகினார்கள்?
  அப்படி அவர்கள் எதை கண்டார்கள்?

  ReplyDelete
 3. தொடர்புடைய இன்னொன்று.. இது உயிரினும் மேலானவர்களிடமிருந்து...

  பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள், ‘யார் என்னை பார்த்தாரோ அவர் உண்மையை (ஹக்கை) கண்டார்’ என்று

  ReplyDelete
 4. //ஒருமுறை நீர் கலங்குவதைக் கண்டால் கூட நம் பார்வை வானில் இருக்கும் நிலவின் பக்கம் திரும்பிவிடும். அதுவே உண்மை, இது அதன் பிம்பம் என்னும் அறிவுணர்வு இருக்கும். நம் தன்னுணர்வு கலங்கும், கலையும் தருணங்கள் இறைவனை அறிவதற்கு மிகவும் முக்கியமானவை. அந்நிலைகளை அடைவதற்கான பயிற்சிகள் அவசியமானவை. அத்தகைய அகநிலைகளை அனுபவிக்காதவன் தன் சுயவுணர்வை நிஜம் என்று நினைத்துக் கொண்டிருப்பான்.// அருமையான வரிகள் இவை.இந்து மதத்தில் குருவே சிஷ்யனின் அகங்காரத்தை கலைத்து கலைத்து விளையாடுவார்.கலைக்காவிடில் அவர் குரு இல்லை...

  ReplyDelete
 5. //இறைவனைப் பற்றித் தாயுமானவர் சொல்லும் வரியொன்று நினைவு வருகிறது:
  “யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டுவான்”!//


  'பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறகின்ற பரிபூரண ஆனந்தமே!'இதுவும் தாயுமானவரேதான்.
  கட்டுரை படிக்கச் சுகமாக இருக்கிறது.நன்றி

  ReplyDelete
 6. jazakallah jazakallah ungal pani thodara vendum

  ReplyDelete