Tuesday, February 21, 2012

பேர் மறந்த பாடல்




திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் நடக்கும் அரசுப் பொருட்காட்சிக்கு உறவினர்களோடு நேற்று சென்றிருந்தேன். ஸ்பீக்கரில் ஏதோவொரு திரைப்பாடல் அலறியபடி வரவேற்றது. கேளிக்கை என்பதைத் தாரக மந்திரமாக வைத்து மக்களை ஈக்கூட்டம் போல் ஈர்க்கும் இது போன்ற நிகழ்ச்சிகளில் நேரப் படுகொலைதான் நேர்கிறது என்பது என் அனுபவம்.

கப் அன் சாசரில் அமர்ந்து சுற்றோ சுற்றென்று சுற்றிவிட்டு, பக்கவாட்டிலும் மேலும் கீழுமாகவும் ஓடுகின்ற படகில் ’பணயம்’ செய்துவிட்டு, பிள்ளைகளை ட்ராகன் ரயிலில் வழியனுப்பிப் பின்னர் வரவேற்று அழைத்துவந்து பஞ்சு மிட்டாய், பாப்கான், பானிபூரி போன்றவை வாங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தபோது ஸ்பீக்கரில் ஆரம்பித்த ஒரு பாடலின் வரிகள் என் கவனத்தைக் கவர்ந்தது. பாடலின் இசையம்சங்களைப் பற்றி எழுதுவதற்கு இங்கே இடமில்லை.

வழக்கமான காதல் பாடலாகத்தான் இதுவும் இருக்க வேண்டும். நாயகனின் மீதான காதலால் உருகும் ஒரு நாயகியின் அவஸ்த்தைகளைக் கூறும் இன்னொரு பாடல்தான் இதுவும் என்பதைத் தவிர புதிதான விஷயம் ஏதுமில்லை. ஆனால் நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது, உலகிலேயே மிகப் பழமையான ஒரு விஷயம்தான் எத்தனைப் புதுமையாக இருக்கிறது! மனிதக் காதலின் நிலையில் அமைந்த பாடலாக இருந்தாலும் கேட்கும்போது என் மனம் தானாக இறைக்காதலை நோக்கி நழுவிச் சென்றுவிடும். நாயக நாயகி பாவனை (BRIDAL MYSTICISM) அமைந்த இலக்கியங்களில் உள்ள பயிற்சியால் இது என்னில் இயல்பாகவே நிகழ்ந்துவிடும். பாடல் காட்சிகள் ஆன்மிகப் பயிற்சிக்குப் பெரிய தடையாக அமைந்துவிடும் என்பதால் பல வருடங்களாகவே பாடலின் காட்சிகளைப் பார்ப்பதைத் தவிர்த்து வருகிறேன். பொதுவாகவே இசையை ரசிப்பவர்கள் அதை முழுமையாக உள்வாங்குவதற்காகக் கண்களை மூடிக்கொள்வார்கள் அல்லவா?


காதலின் அர்த்த பாவங்கள்தான் எத்தனை வினோதமானவைகளாகவும் நுட்பமானவைகளாகவும் இருக்கின்றன என்று எண்ணி வியப்பாக இருந்தது.
‘இது காதலின் பாதை…
ஒவ்வொரு காலடி வைப்பிலும்
ஆயிரம் கண்ணிகள் உள்ளன’
என்று யாரோ ஒரு சூஃபிக் கவிஞர் பாடியிருப்பதாக நினைவு வந்தது. இறைவனின் மீதான காதல் பற்றி அவர் இப்படிச் சொல்லியிருந்தாலும் லௌகீகத்தையும் சேர்த்துப் பொதுவான நிலைக்கும் பொருந்துவதாகவே இருக்கிறது. அப்படிப் பொருந்துவதால்தான் மனிதக் காதலை வைத்து இறைக்காதலைப் பேச முடிகிறது. மனிதக் காதல் என்பதே இறைக்காதலின் நிழல்தான் என்று சூஃபிகள் கூறுகின்றனர். இதை எண்ணிப் பார்த்தாலும் மிகவும் ஆச்சரியமாகவே உணர்கிறேன்.

”அழகுதான் எவ்வளவு அதிகமாகி விட்டது
அவள் இன்னும் எளிமையானதில் இருந்து”
என்கிறார் உருதுக் கவிஞர் ஹசன் அப்பாஸி.

இந்தக் காதல் இருக்கிறதே
என்ன சொல்வது?
மலிந்து பொதுவாகும்
அபூர்வப் பொருள் அது
என்கிறார் உருதுக் கவிஞர் ஃபக்ரா பதூல்.

லைலா-மஜ்னூன் போன்ற காதல் காவியங்களால் மனித மனத்தின் ஆழங்களைத் துழாவித் துழாவி ஆதார உணர்வு என்று கண்டறிந்து சொன்ன கவிஞர்கள் தங்கள் காதலர்களைச் சித்தரித்துள்ள விதத்தில் ஓர் ஒற்றுமை இருப்பதைக் காணலாம். அதாவது சமூக அளவீடுகளில் உள்ள ஏற்றத் தாழ்வில் அவர்கள் இருப்பார்கள். காதலி இளவரசி என்றால் காதலன் சாதாரணமான பிரஜையாக இருப்பான். இப்படி ஏதாவது ஒரு வேறுபாடு இருந்தால் அது காதலின் தீவிரத்தை உணர்த்துவதற்கான கருவாகிவிடும் என்பது ஓர் உத்தி. ஏனெனில் அந்த வேறுபாடு பல எதிர்ப்புக்களையும் சிக்கல்களையும் தடைகளையும் உருவாக்கும். அதை மீறிக் காதல் செயல்படுவதாகக் காட்டப்படும். இதுபோன்ற கதைகளில் பெரும்பாலும் காதலர்கள் தம் காதலுக்காகச் செத்துப் போவார்கள். அதாவது அமர காதலர்கள் ஆகிவிடுவார்கள்!


நான்கு வருடங்களுக்கு முன் TWILIGHT என்று ஓர் ஆங்கிலப் படம் வந்தது. வந்து நான்கு வருடங்கள் கழித்துத்தான் அதை நான் பார்த்தேன். அதில் இந்த வேறுபாடு மிக வித்தியாசமாகக் காட்டப்பட்டிருந்தது. அதாவது, மனித இனத்து யுவதிக்கும் ரத்தக் காட்டேரி (vampire) இனத்து யுவனுக்கும் காதல்! இதில் ஓநாய் இனத்து யுவன் ஒருவன் உள்ளே புகுந்து முக்கோணம் போடுகிறான். இப்படி ஒரு கற்பனைக் கதை அது. மனிதர்களின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை ஊடுறுவிப் பார்க்கும் ஆற்றல் கொண்ட அந்தக் காட்டேரி இளைஞன் தன் கல்லூரிக்குப் பயில வரும் பெல்லா என்பவள் மீது காதல் வயப்படுகிறான். அவளுடைய உள்ளத்தில் களங்கமான எந்தச் சிந்தனையும் இல்லாத காரணத்தால்! ரத்தக் காட்டேரிகளுக்கு மனித ரத்தம் என்றால் கோடையில் தாகம் தணிக்கக் கிடைத்த குளிர் இளநீர் போல! குருதி குடிக்க அவனுள் எழும் மிருக இச்சையை அவள் மீது அவன் கொண்ட தூய காதல் கட்டுப்படுத்திச் செல்கிறது என்பது உளவியல் ரீதியாக எவ்வளவு அருமையான விஷயம்!  

இதில் நான் சிந்தித்துக் கொண்டது வேறு விஷயம். ’வேறுபாடுகள் காதலை மிகவும் தீவிரமாக்கும் என்றால் இறைக்காதல் எத்தனைத் தீவிரமாக இருக்கவேண்டும்’ என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். மனிதன் இறைவனைக் காதலிப்பது என்பது சாத்தியம்தானா? சாத்தியம் எனறால் எப்படி? இது பற்றி சூஃபிகள் சொன்ன பல கருத்துக்கள் என் மனத்திரையில் ஓடிக்கொண்டிருந்தன. படம் அது போக்கில் டி.வி.யில் ஓடிக்கொண்டிருந்தது.

என் மனத்தின் சிந்தனைப் போக்கு இப்படித்தான். மெகா சீரியலாகவே இருந்தாலும் இதுதான் அதன் நிலை. லௌகீகத்தின் ஏதோ ஒரு கீற்றில் தெய்விகத்திற்கான சன்னல் இருப்பது தெரிந்தாலும் அதைத் திறந்து வேறு உலகை வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுவேன். சட்டென்று மனம் உள்ளே திரும்பிக்கொள்ளும். அதன்பின் கண்ணின் பாவையில் வெளியே இருந்து விழும் பிம்பங்கள் வெறுமனே சுவரில் விழும் வெய்யில்தான்.மேற்படி அரசுப் பொருட்காட்சியில் கேட்ட பாடலும் அப்படித்தான் மனதை உள்முகமாகத் திருப்பிவிட்டது.


காதலனுக்காக மருகிக் கரையும் ஒரு பெண் என்னும் குறிப்பே இறைவனுக்காகக் காதலில் கரையும் உள்ளம் என்பதை நினைத்துக்கொள்ளப் போதுமானதாக இருக்கிறது. முதலில் அந்தப் பாடலில் இருந்த பக்தி இலக்கியச் சாயல்தான் என்னைக் கவர்ந்தது. சட்டென்று சில வரிகளையும் அடையாளம் காணமுடிந்தது. தாமரைதான் இப்படியெல்லாம் எழுதுவார் என்று நான் நினைத்த அந்தப் பாடலை யாரோ விவேகா என்ற கவிஞர் எழுதியிருக்கிறார்.

“மாயம் செய்தாயோ – நெஞ்சைக்
காயம் செய்தாயோ    
கொல்ல வந்தாயோ – பதில்
சொல்ல வந்தாயோ?
வாரிச் சென்றாய் பெண்ணை
பார்த்து நின்றேன் கண்ணை
ஏது செய்தாய் என்னை
கேட்டு நின்றேன் உன்னை”
என்பது பாடலின் பல்லவி. காதில் விழுந்தவுடனே ஆண்டாளின் பாசுர வரிகள்தான் ஞாபகம் வந்தன:
“பெய்யும் மாமுகில் போல் வண்ணா
      உன்றன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி மயக்க உன்முகம்
      மாய மந்திரம்தான் கொலோ”

தொடர்ந்து பெரியாழ்வாரின் வரிகள் நினைவு வந்தன:
“கொத்தார் பூங்குழல் கன்னி ஒருத்தியைச்
சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தாரக் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
      மூவேழு சென்றபின் வந்தாய்”

இந்த வரிகள் என்ன சொல்லவருகிறது என்பது பலருக்கும் புரிவதில்லை. இவ்வரிகள்  வளர்ந்தவர்களுக்கானது, ஆன்மிகத்தில்! ஆழ்நிலை தியானத்தில் தன்னிலை இழந்து கிடப்பதை இவ்வரிகள் உணர்த்துவதாகவே நான் விளங்கிக் கொள்கிறேன். இத்தகைய நிலையை யோகிகள் ‘சமாதி’ என்றும் சூஃபிகள் ‘இஸ்திக்ராக்’ அல்லது ‘ஃபனா’ என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையை நாமாக உண்டாக்கிக் கொள்ள முடியாது. பயிற்சிகள் ஒருபக்கம் உள்ளன என்றாலும் இறை நாட்டம் யார்மீது அருள்கிறதோ அவர்களுக்குத்தான் இந்த நிலை லபிக்கும். இதுதான் இவ்வரிகள் நாயக நாயகிப் பாவிகம் கொண்டு உணர்த்தும் செய்தி. சோலை என்று சொல்லப்படுவது அகவுலகைக் குறிக்கும். இத்தியாதி விளக்கங்கள் இங்கு தேவை இல்லை, இத்தனை போதும்.

பல்லவியைத் தொடர்ந்து வந்த முதலாம் சரணத்திலும் இந்தக் கருத்துக்களே இருந்தன. அந்தச் சரணம் இது:
“நானே செடி வளரும் தோட்டம் ஆனேன்
யானை வந்து போன சோலை ஆனேன்
காதல் கரை புரண்டு ஓடப் பார்த்தேன்
தூண்டில் முள் நுனியில் உயிரைக் கோர்த்தேன்
மின்விசிறிக் கண்விசிறி வெகு தூரம் விழுந்தேன்
என் பேரை நான் மறந்து கல் போலக் கிடந்தேன்”

ஒட்டுமொத்த சரணமும் காதலில் ’நான்’ என்னும் அகம்பாவம் அழிதல் பற்றிய உணர்வுகளையே வெளிப்படுத்துகிறது. நான் என்னும் சுயாதீனம் வளர்ந்து முற்றிய நிலையை முதல் வரி சொல்கிறது. காதலில் அது அழிந்து முடிந்த நிலையை இரண்டாம் வரி சொல்கிறது. ‘யானை வந்து போன சோலை’ என்னும் உவமை எவ்வளவு அழகாகக் காதலின் வலிமையையும் அதனிடம் அகப்பட்ட அகத்தின் மெலிவையும் சொல்லிவிடுகிறது! தன்னிடம் எள்ளளவும் சக்தி இல்லை என்றுணரும் இந்த மெலிவே பக்தியின் ஆதார சுருதி எனலாம். அப்படி உணராமல் சரணாகதி சாத்தியமில்லை. காதலில் அது மிக எளிதாக நிகழ்ந்துவிடுகிறது.

சுயபாவம் காதலில் அழிவதைச் சொல்லும் இன்னும் இரண்டு வரிகளும் நினைவு வந்தன. இரண்டுமே ’கண்சிவந்த கவிஞன்’ வைரமுத்து எழுதியவை.
”பனித்துளிதான் என்ன செய்யுமோ
மூங்கில் காட்டில் தீ விழும் பொழுது
மூங்கில் காடென்று ஆயினள் மாது”
என்பதும்,
“சூரியன் வந்து வா எனும்போது
என்ன செய்யும் பனியின் துளி?”
என்பதும் காதலின்முன் தான் சக்தி ஏதுமற்று சரணடையும் நிலையைச் சொல்பவையே அல்லவா?

”தூண்டில் முள் நுனியில் உயிரைக் கோர்த்தேன்” என்னும் வரிகூட கேட்டவுடன் பாரதியைத்தான் ஞாபகமூட்டியது. ‘கண்ணன் என் காதலன்’ என்னும் தலைப்பில் ஒரு பெண்ணின் காதல் அவஸ்த்தைகளை அவன் பாடுகிறான்:
“தூண்டிற் புழுவினைப் போல் – வெளியே
      சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக – எனது
      நெஞ்சம் துடித்ததடி
கூண்டுக் கிளியினைப் போல் – தனிமை
      கொண்டு மிகவும் நொந்தேன்
வேண்டும் பொருளை எல்லாம் – மனது
      வெறுத்து விட்டதடீ”

’என் பேரை நான் மறந்து கல் போலக் கிடந்தேன்’ என்னும் வரிகளைக் கேட்டதும் முதலில் வாலி எழுதிய வரிகள்தான் ஞாபகம் வந்தன:
“மீன் விழுந்த கண்ணில்
நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன்
பேர் மறந்தேன் அன்பே”
பிறகு சட்டென்று இந்த வரிகளுக்கும் மூலமாக இருக்கக்கூடுமாய் நான் விளங்கி வைத்திருக்கும் அப்பரின் தேவாரப் பாசுர வரிகள் நினைவில் எழுந்தன:
“தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே”

”தன்னை மறந்தாள்” என்பது சரி. அது என்ன ‘தன் நாமம் கெட்டாள்’? என்று கேட்டுப் பார்ப்போம். தன்னை மறந்திருக்கும் ஒருவரிடம் ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டால் அவர் தன் பெயரைச் சொல்ல முடியுமா? ஒருவர் தன் பெயரைச் சொல்கிறார் என்றாலே அவர் தன்னை மறக்கவில்லை என்றுதானே அர்த்தம்? தன்னை மறந்த ஒருவர் தன் பெயரைச் சொல்லமாட்டார். எதன் நினைவில் மூழ்கித் தன்னை மறந்தாரோ அதன் பெயரை அவர் சொல்லக்கூடும் அல்லவா?


லைலா-மஜ்னூன் காவியத்தில் வரும் ஒரு காட்சி: சூரியன் சுட்டெரித்துக் கிடக்கும் பாலைவனத்தில் அலங்கோலமான மஜ்னூன் கால்கள் பின்னப் பின்ன நடந்து வருகிறான், ‘லைலா லைலா’ என்று தன் காதலியின் பெயரைப் புலம்பிக்கொண்டே. அப்போது தொழுகைப் பாயை விரித்து அதில் தொழுது கொண்டு நிற்கும் ஒருவரின் குறுக்கே சென்றுவிடுகிறான். இதனால் தன் கவனம் சிதறிப்போன அவர் மஜ்னூனைப் பிடித்து நிற்கவைத்துத் திட்டுகிறார். அவரைப் பார்த்து மஜ்னூன் சொல்கிறான், “மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, நான் என் காதலியின் நினைவில் என்னையே மறந்திருந்தேன். இறைவனின் நினைவில் உங்களையே மறந்திருக்க வேண்டிய நீங்கள் என்னை எப்படிக் கவனித்தீர்கள்?”

இந்தக் காட்சியை வைத்து கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு உரையாடலைத் தீட்டினார். ரத்தினச் சுருக்கமான அந்த உரையாடல் ‘தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள்’ என்று அப்பர் பாடிய நிலையைக் காட்டுகிறது. அது இது:
மஜ்னூனைப் பார்த்து ஒருவன் கேட்கிறான், ‘உன் பெயர் என்ன?’
மஜ்னூன் சொல்கிறான், “லைலா!”

சூஃபி ஞானி மன்சூர் அல்-ஹல்லாஜ் எந்த இறைக்காதல் நிலையில் ‘அனல் ஹக்’ என்று சொன்னாரோ அந்த நிலையை இந்தக் காட்சி மனிதக் காதலை வைத்து உணர்த்திவிடுகிறது.

3 comments:

  1. “மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, நான் என் காதலியின் நினைவில் என்னையே மறந்திருந்தேன். இறைவனின் நினைவில் உங்களையே மறந்திருக்க வேண்டிய நீங்கள் என்னை எப்படிக் கவனித்தீர்கள்?”// வாவ்! அருமை...

    //மஜ்னூனைப் பார்த்து ஒருவன் கேட்கிறான், ‘உன் பெயர் என்ன?’
    மஜ்னூன் சொல்கிறான், “லைலா!”// :))))

    //காதலில் ’நான்’ என்னும் அகம்பாவம் அழிதல் பற்றிய உணர்வுகளையே வெளிப்படுத்துகிறது.//
    நான் என்ற அகம்பாவம் அழிதல் உணர்வுப் பெருக்கில் கொண்டுபோய்விடும் இல்லையா?

    ஆனால் இந்த material world ஏராளமான 'நான்' என்ற அகம்பாவம்களாலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது தான் இல்லையா?

    ReplyDelete
  2. //மனிதர்களின் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை ஊடுறுவிப் பார்க்கும் ஆற்றல் கொண்ட //

    இந்த நிலையை அடைய என்ன
    பயிற்சி செய்ய வேண்டும்
    கற்று தாருங்கள் அண்ணா

    ReplyDelete
  3. //அவரைப் பார்த்து மஜ்னூன் சொல்கிறான், “மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, நான் என் காதலியின் நினைவில் என்னையே மறந்திருந்தேன். இறைவனின் நினைவில் உங்களையே மறந்திருக்க வேண்டிய நீங்கள் என்னை எப்படிக் கவனித்தீர்கள்?”//

    தன்னை மறத்தல் என்பது என்ன அவ்வளவு சுலபமா? சுகப்பிரம்ம ரிஷிக்கு அது வாய்த்தது. அவர் தந்தைக்கே கிடைக்காத பாக்கியமது.

    அபிராமி பட்டர் திருக்கடையூரில் அமாவாசையைப் பெள்ர்ணமி என்று கூறவில்லையா? தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடவில்லையா?
    நல்ல ஆக்கம் ஐயா!

    ReplyDelete