Friday, February 3, 2012

நான் நீ அவன் (தொடர்ச்சி-1)


சமீபத்தில் நண்பர் ஒருவரிடமிருந்து மின்னஞ்சல் வந்தது. (மாயன் அல்லது ஹரன், இந்த இருவரில் யாரோ ஒருவர் என்று நினைக்கிறேன். திடீரென்று அந்த மின்னஞ்சல் என் அக்கவுண்டிலிருந்து காணாமல் போய்விட்டது எனக்கு இன்னமும் வியப்பாக இருக்கிறது. என்னதான் நடக்கிறதோ? அவர் ஆன்மிகம் சார்ந்த ஒரு வலைமனைக்கு லின்க் கொடுத்திருந்தார். இந்த ஜனவரி 26-ம் தேதி (என் பெற்றோரின் திருமண நாள்) திருச்சிக்கு ஒரு திருமண விழாவிற்கு வருவதாகவும் என்னைச் சந்திக்க விரும்புவதாகவும் சொல்லி உலாப்பேசி எண்களையும் கொடுத்திருந்தார். எல்லாம் மின்னஞ்சலோடு போய்விட்டது. நினைத்துக்கொண்டேன், என்னை ஒருவர் வந்து சந்திக்கும் அளவுக்கெல்லாம் என் ஆன்மிகப் படித்தரம் இல்லை என்பது எனக்கே தெரியும். எல்லாம் இறைவன் செயல்!) அந்த மின்னஞ்சலில் அவர் ஓர் ஆதாரமான கேள்வியைக் கேட்டிருந்தார்:
“திருக்குர்ஆனில் இறைவனைக் குறிக்க நான் என்றும் நீ என்றும் அவன் என்றும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனில் இவை எல்லாம் இறைவனின் வாக்குகள் என்பது எப்படி?” என்பது அவரது கேள்வியின் சாரம்.

”நிச்சயமாக நானே (இன்னனீ) நான் அல்லாஹ் (அனல்லாஹ்)
என்னை அன்றி வேறு இறைவன் இல்லை (லா இலாஹ இல்லா அனா)” (20:14)
என்னும் வசனத்தில் ’நான்’ (அனா) என்பது இறைவனைக் குறிக்கிறது. இது தன்மை. ஆங்கிலத்தில் FIRST PERSON SINGULAR.

”நிச்சயமாக உன்னை அன்றி வேறு இறைவன் இல்லை
(அன் லா இலாஹ இல்லா அன்த)” (21:87)
என்னும் வசனத்தில் நீ (அன்த) என்பது இறைவனைக் குறிக்கிறது. இது முன்னிலை. ஆங்கிலத்தில் SECOND PERSON SINGULAR.

”கூறுக: அவன் அல்லாஹ் ஏகன்
(குல் ஹுவல்லாஹு அஹது)” (112:1)
என்னும் திருவசனத்தில் அவன் (ஹுவ) என்பது இறைவனைக் குறிக்கிறது. இது படர்க்கை. ஆங்கிலத்தில் THIRD PERSON SINGULAR.

இறைவனே தன்னைப் பற்றிப் பேசும்போது நான் என்கிறான். ஒரு நபி இறைவனைப் பார்த்துப் பேசும்போது இறைவனை நீ என்று விளிக்கிறார். இதிலெல்லாம் என்ன குழப்பம்? இதற்கெல்லாம் என்ன தத்துவ விளக்கம் வேண்டிக்கிடக்கு? என்று கேட்கலாம். வாஸ்த்தவம்தான்.

ஆனால் படர்க்கை எப்போது வரும் என்பதை எண்ணிப் பாருங்கள். இருவர் பேசும்போது அங்கே இல்லாத மூன்றாவது நபரைப் பற்றிப் பேசுவதுதான் படர்க்கை. ஆனால் இங்கே “கூறுக: நீயே அல்லாஹ் ஏகன்” என்று வசனம் இல்லை. “கூறுக அவனே அல்லாஹ் ஏகன்” என்று இருக்கிறது. முன்னிலையில் இருக்கும் இறைவனே தன்னை இங்கே படர்க்கையாகக் குறிப்பிடக் காரணம் என்ன?


எதார்த்தத்தில் உள்ளது ஒன்றுதான். அது இறைவனின் சுயமே. அதுவே படைப்புக்களில் நான் என்னும் சுயவுணர்வை பிரதிபலிக்கிறது என்று முன்பு சொன்னோம். அதுவே எதார்த்தத்தில் முன்னிலையாகவும் படர்க்கையாகவும் இருக்கிறது. இப்போது தட்டச்சு செய்துகொண்டிருக்கும் எனக்கு என்னைத் தன்மையில் காட்டும் இறைவன் இதே வேளை என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்னை முன்னிலையாகக் காட்டிக் கொண்டிருக்கிறான், உங்களுக்கு என்னைப் படர்க்கையாகக் காட்டிக்கொண்டிருக்கிறான். இப்படியே எல்லாப் படைப்புக்களுக்கும் பொருத்திப் பாருங்கள். தன்மை முன்னிலை படர்க்கை என்பவை எல்லா இடத்திலும் ஏக காலத்தில் இருக்கின்றன. அவை மூன்றும் எதார்த்தத்தில் ஒன்றுதான். எனவே முன்னிலையில் இங்கிருக்கும் இறைவனைப் படர்க்கையில் சொன்னாலும் அது அவனைத்தான் குறிக்கும். அவனில் மூழ்கிய நிலையில் (இஸ்திக்ராக்) தன் இரவல் பிம்பம் கலைந்த நிலையில் “நான்” (அனா) என்பதை ”அவனில்” சேர்த்து தன்மையில் சொன்னாலும் அது அவனையே குறிக்கும்! (இந்த நிலையில்தான் மன்சூர் ஹல்லாஜ் (ரஹ்) ‘அனல் ஹக்’ (நான் என்பது சத்தியம்) என்று சொன்னார்கள்.)

விஷயம் கொஞ்சம் சிக்கலானதுதான். இதுவரை ’சுயம்’ நாம் சொல்லிவந்தவற்றில் இறைவன் மட்டுமே சுயம்பு என்றும் படைப்புக்களின் சுயம் இல்லாமை (அதம்) என்றும் சொன்னது நான் சார்ந்திருக்கும் சூஃபிப் பள்ளியின் கொள்கை. அதாவது, “உள்ளமை ஒன்று; சுயங்கள் இரண்டு. இறைவனின் சுயம் பூர்விகமானது, தன்னில் தான் நிற்பது. அதுவும் உள்ளமையும் வேறல்ல. படைப்புக்களின் சுயம் புதிதாகப் படைக்கப்பட்டவை (மஃக்லூக்கே ஹாதிஸ்). அவற்றுக்குத் தனி உள்ளமை கிடையாது. அவை இறைவனின் உள்ளமையில் அவனால் தோற்றுபவை.”

இந்த விஷ்யத்தை விளக்க நெல்லிக்குப்பம் அப்துர் ரஹ்மான் ஹழ்றத் அவர்கள் தன் “முஸ்லிம் அத்வைத மூல மொழி” என்னும் நூலில் திருக்கலிமாவின் வாக்கிய அமைப்பினை (மிதாத்) விளக்க எடுத்துச் சொன்ன ஒரு உதாரண வாசகத்தைக் கவனிப்போம்: “வாள் இல்லை இரும்பை அன்றி (லா சைஃப இல்லல் ஹதீத்)”


இரும்பினால் செய்யப்பட்ட வாள் ஒன்று ஒருவனை வெட்டியது எனும்போது வெட்டியது வாளா? இரும்பா? இரும்புதான் எனில் அதே இரும்பு உருண்டைக் கோளமாக இருக்கும் போது வெட்டுமா? எனில் வெட்டுவது இரும்பின் பண்பு அல்லவே? வாள்தான் வெட்டியது எனில் அதே வாள் காகிதத்தினால் செய்யப்பட்டிருந்தால் வெட்டுமா? எனில் வெட்டுவது கத்தியின் பண்பல்லவே? இப்படிக் கேட்டுக்கொண்டே போகலாம். தர்க்கம், எல்லாம் தர்க்கம்.

வாளின் கோலத்தில் இருக்கும்போதுதான் இரும்பு வெட்டும். உருண்டைக் கோலத்தில் இரும்பு இருக்கும் போது நைக்கும். எடுத்த கோலத்திற்குத் தகுந்த வேலை. இப்படிச் சொல்லி இத்துடன் நிறுத்திக் கொண்டால் சிலருக்குப் போதும் என்றாகிவிடும். வேண்டுவோர் மேலே செல்லலாம்.

என் சிந்தனைப் பள்ளியின் கோணத்திற்கு வருகிறேன். வாள் வேறு இரும்பு வேறுதான். தனக்கு வேறான வாளினை இரும்பு தன்னில் காட்டிக் கொண்டிருக்கிறது.

வாள் இரும்பிற்கு வேறானது என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று கேளுங்கள். அதாவது, இரும்பினால் ஆன அந்த வாளை உருக்கினால் என்ன மிஞ்சும்? இரும்பா? வாளா? வாள் அழிந்துபோகும், இரும்பு மிஞ்சும்! இரும்பும் வாளும் ஒன்றுதான், வேறு வேறல்ல எனின் இரண்டுமே மிஞ்சக் கூடாது. வாள் வார்க்கப்படும் முன் இரும்பு இருந்தது. சிந்தனையில் இருந்த வாள் என்னும் கோலம் வார்க்கப்பட்டு அந்த இரும்பில் தெரிந்தது. உருக்கியபோது வாள் என்னும் கோலம் போய்விட்டது, இரும்பு பழைய நிலையில் இப்போதும் இருக்கிறது. இரும்பு இருக்கும் வரை மீண்டும் மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் வாளினை வார்க்கலாம். எத்தனைக் காலம் வேண்டுமானாலும் இரும்பில் அந்த வாளின் கோலம் இருக்கும்படி வைக்கலாம். வேண்டும்போது வாளினை அழித்தும் விடலாம்.

வாளின் தன்மை வாளுடையதுதான், இரும்பின் தன்மை இரும்புடையதுதான். வாள் நீளமாக இருக்கிறது, வளைந்திருக்கிறது, கூர்மையாக இருக்கிறது. இவை வாளின் லட்சணங்கள். இரும்பின் பண்புகள் என்ன என்று கேட்டால் யாரும் இவற்றைச் சொல்ல மாட்டார்கள். இரும்பு கறுப்பாக இருக்கும், கணமாக இருக்கும் என்று அதன் சுயப்பண்புகளைத்தான் சொல்வார்கள். இரும்பு வாள் ஒன்று கனமாக இருந்தாலும்கூட “இவ்வளவு கனக்கிறதே, எந்த இரும்பால் செய்யப்பட்டது?” என்று அறிவு அந்தப் பண்பினை இரும்பின் சுயத்திற்குத் திருப்புமே அல்லாது வாளுக்கு அல்ல.
அதுபோல், இறைப்பண்புகள் இறைவனுக்கு மட்டுமே உரியவை. படைப்புக்களின் பண்புகள் (பிறப்பு இறப்பு நோய் பலவீனம் அறிவீனம் போன்றவை) படைப்புக்களினதுதான்.

ஆனால் வாளுக்கென்று உள்ளமை இல்லை. அது இரும்பில்தான் தோற்றம் கொண்டு தெரிகிறது. அதுபோல், படைப்புக்களுக்குத் தனி உள்ளமை இல்லை. அவை இறை உள்ளமையில்தான் காட்டப்படுகின்றன.

உருக்கினால் வாள் அழிந்துவிடுகிறது; இரும்பு அழியாமல் மிஞ்சுகிறது.
படைப்புக்கள் அழிந்துவிடும்; படைத்தவனின் உள்ளமை அழியாது இருக்கும்.
“அதன் மீதுள்ள அனைத்தும் அழிந்துவிடும்.
வல்லமையும் சங்கையுமுள்ள உம் ரட்சகனின்
திருமுகம் (உள்ளமை) மட்டுமே நிலைக்கும்
(குல்லு மன் அலைஹா ஃபான்
வ யப்கா வஜ்ஹு றப்பிக துல்ஜலாலி வல் இக்ராம்)”
[55:26,27]

நெல்லிக்குப்பம் அப்துல் ரஹ்மான் ஹழ்றத்தின் உதாரண வாசகத்தில் நான் காணும் விளக்கங்களில் சிலவற்றை இங்கே சொன்னேன். (உவமையை அது முன்வைக்கப்படும் கோணத்தில் (வஜ்ஹுத் தஷ்பீஹ்) மட்டுமே விளங்க வேண்டும்; அனைத்துக் கோணங்களிலும் பொருந்தாது என்னும் இலக்கணத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.)

அகக்கண்ணால் இறைவனை தரிசிப்பது என்று நாம் பேசும்போது மேலே சொல்லப்பட்ட விளக்கங்களின் அடிப்படையில்தான் பேசுகிறோம். படைப்புக்களில்தான் படைப்பவனின் வெளிப்பாட்டைக் காண முடியும். ’திரும்பும் திசைகளில் எல்லாம்…’ என்று திருக்குர்ஆன் சொல்வதைக் கவனிக்க. இறைவனுக்கு என்று பிரத்யேகமான தனி திசையும் அதற்கு வேறாகப் படைப்புக்களுக்கு என்று தனி திசையெல்லாம் கிடையாது.

இஸ்லாமிய சிந்தனைப் பள்ளி ஒன்று தான் நடத்தும் மாநாட்டிற்கு வரைந்த சுவரழைப்பு ஒன்றைச் சமீபத்தில் கண்டேன். மாநாட்டின் மையப் பொருண்மை இதுவாம்: “படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி.” அற்புதமான வாசகம்தான்!

இறைவனை அன்றி நம் தேவைகளை நிறைவேற்றி வைப்பவன் வேறு யாரும், எதுவும் இல்லை என்னும் சிந்தனையுடன் அவனை நோக்கித் திரும்புவது என்னும் அர்த்தத்தில் விளங்கப் படுமென்றால் இது அற்புதமான வாசகம்தான்! அப்படித் திரும்புவது “தவ்பா” ஆகும். அப்படிச் சிந்தனையில் திரும்புவதுதான் சாத்தியமும்கூட!

உதாரணமாக, ஒருவருக்குத் தலைவலி என்றால் அதை நீக்கவேண்டிய தேவை அவருக்கு ஏற்படுகிறது. அந்தத் தேவையை நிறைவேற்றுவது இறைவன்தான். தலைவலி போக வேண்டும் என்று அவர் மாத்திரையை விழுங்குகிறார். மாத்திரைதான் (சுயமாகத்) தன் தேவையை நிறைவேற்றியது என்று அவர் எண்ணினால் இறைவனுக்கு இணைவைத்தவர் ஆவார். மாத்திரையின் கோலத்தில் இறைவன்தான் தன் தேவையை நிறைவேற்றினான் என்று கருதுவாராகில் அது ஏகத்துவப் பார்வையாகும். ஏனெனில் சர்வகோடி சிருஷ்டிகளில் எந்தவொரு படைப்பின்  எந்தவொரு தேவையையும் எந்தவொரு படைப்பும் நிறைவேற்றுவதில்லை. இறைவன் ஒருவன் மட்டும்தான் நிறைவேற்ற முடியும், அவன் ஒருவன் மட்டுமே நிறைவேற்றித் தருகிறான். ஆனால் ஓவ்வொரு தேவையை நிறைவேற்றும்போதும் ஒரு படைப்பைக் கருவியாக வைத்துச் செய்கிறான். தண்ணீரை வைத்துத் தாகத்தைத் தணிக்கிறான். ஆனால் தாகத்தைத் தனிப்பது தண்ணீர் அல்ல, இறைவன்தான்.


”இறைவன் எங்கோ இருக்கிறான். அவன் நம் கையில் மாத்திரையை வழங்குகிறான். மாத்திரையை அவன் தந்ததால் அவனே நம் தலைவலியைப் போக்கினான் என்று சொல்கிறோம்” என்று ஒருவர் விளங்கினால் அதுவும் சரியல்ல. ஏனெனில், அப்போதும் மாத்திரைதான் தேவையை நிறைவேற்றுகிறது என்றாகும். மாறாக வேறு ‘இடைப்பொருள்களும்’ வந்துவிடும். அதாவது, இறைவன் மாத்திரையை உங்கள் கையில் நேரடியாகவா தந்தான்? குறைந்தபட்சம், உங்கள் மனைவியோ சகோதரரோ உங்களிடம் தந்திருப்பார். அவருக்கு மெடிக்கல்காரர் தந்திருப்பார். மெடிக்கல்காரருக்கு மருந்து கம்பெனிக்காரர் தந்திருப்பார். அவர் கையிலும்கூட இறைவன் மாத்திரையாகவே கொடுத்தான் என்று சொல்ல முடியாதல்லவா? இறுதியில் என்ன ஆகும்? மாத்திரையை இறைவன் தரவில்லையப்பா, அது கம்பெனியில் தயாரிக்கப்பட்டது என்று போய் முடியும்.

அதேபோல் ”இறைவன் எங்கோ இருக்கிறான். தண்ணீரை இறைவன் தருகிறான். அவன் நமக்குத் தண்ணீரைத் தந்ததால் அவனே தாகத்தைத் தணித்தான் என்று சொல்கிறோம்” என்று விளங்கினால் அதுவும் தவறுதான். ஏனெனில், அப்போதும் தண்ணீர்தான் தாகத்தைத் தனித்தது என்றாகிவிடும்.

எங்கோ இருந்துகொண்டல்ல, மாத்திரையில் இருந்துகொண்டேதான் இறைவன் என் தலைவலியை நீக்குகிறான்; தண்ணீரில் இருந்துகொண்டேதான் இறைவன் என் தாகத்தைத் தணிக்கிறான். அதேசமயம், அவன் நீக்காவிட்டால் எத்தனை மாத்திரையும் எனக்கு நோயை நீக்காது; அவன் தணிக்காவிட்டால் எவ்வளவு தண்ணீரும் (ஜம்ஜம் நீர், கங்கா ஜலம் எதுவாக இருந்தாலும்) என் தாகத்தைத் தணிக்காது.

ஒரு தேவையை நிறைவேற்ற படைப்புக்களைக் கருவியாக்குவது அவன் செயல் வழமையே தவிர அதன் தேவையும் அவனுக்கு இல்லை. மாத்திரை இல்லாமலேயே நோயை அவனால் போக்க முடியும். தண்ணீர் இல்லாமலேயே தாகம் தணிக்க அவனுக்கு முடியும். இத்தியாதி இத்தியாதி.

எனவே ‘படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி” என்றால் தாகம் எடுத்தால் தண்ணீரை அருந்தாமல் விட்டுவிட வேண்டும் என்பதல்ல. தலைவலி வந்தால் மாத்திரை விழுங்கக் கூடாது என்பதல்ல. எந்தப் பொருளைக் கொண்டு நம் எந்தத் தேவை நிறைவேறினாலும் அதை நிறைவேற்றுவது அப்பொருள் அல்ல இறைவன்தான் என்று கவனிக்க வேண்டும் என்பதுதான்.


கணவனுக்கு மனைவியிடம் கிடைக்கும் சுகம் உண்மையில் மனைவி அவனுக்குத் தருவதல்ல. மனைவிக்குக் கணவனிடம் கிடைக்கும் சுகம் உண்மையில் கணவன் அவளுக்குத் தருவதல்ல. அது இறைவனிடமிருந்தே வருகிறது. கடல் நீரின் ஒரு துளியில் இருப்பது கடலின் சுவைதான். அதில் கடலின் ஆழமும் விசாலமும் இல்லாமல் போகலாம். ஆனால் அதன் சுவையில் கடலின் விலாசம் இருக்கிறது!

”இது என்ன மாத்திரையில் தண்ணீரில் எல்லாம் இறைவன் இருக்கிறான் என்று சொல்வது எப்படி?” என்று கேட்கலாம். அன்பரே! கட்டுரையை மீண்டும் முதலில் இருந்து வாசிப்பீராக! இவ்வளவு நேரம் அதைத்தானே வளைத்து வளைத்து விளக்கிக் கொண்டிருந்தேன்? தண்ணீரும் மாத்திரையும் அவனுடைய உள்ளமையில் அவனால் தோற்றப்படும் சிருஷ்டிகள்தானே? அந்த அர்த்தத்தில்தான் சொல்லப்பட்டது. அதாவது படைப்பில் இறைவன் இருக்கிறான் என்று சொல்வது அந்தப் படைப்பு இறைவனின் உள்ளமையில் காட்டப்படுகிறது என்னும் பொருளில்தான். கையில் இடப்பட்ட மருதாணியில் இருப்பதெல்லாம் கைதானே?

ஆனால் அனைத்துப் படைப்புக்களும் இறைவனில் கட்டுப்பட்டவை. இறைவன் (அர்ஷ் உட்பட) எந்தவொரு படைப்பிலும் கட்டுப்பட்டவன் அல்ல! (மருதாணி கைக்குக் கட்டுப்பட்டது. ஆனால் கை தன்னில் இடப்பட்ட மருதாணியின் எந்த ஒரு குறிப்பிட்ட கோலத்திலும் கட்டுப்பட்டதல்ல.) எனவே, இறைவன் ஒரு குறிப்பிட்ட படைப்பில் மட்டும்தான் இருக்கிறான் என்று சொல்வது அபத்தமாகும், ஏகத்துவத்திற்கு மாற்றமான கருத்தாகும். அந்தப் படைப்பு அர்ஷாகவே இருந்தாலும் சரிதான். இறைவன் படைப்பில் கட்டுப்படுபவன் அல்ல.

’இதில் மட்டுமே இறைவன் இருக்கிறான்’ என்னும் கருத்தில் ‘இதில் இறைவன் இருக்கிறான்’ என்று ஒரு படைப்பில் அவனை மட்டுப்படுத்திச் சொல்வது ஏகத்துவத்திற்கு மாற்றமாகும். அந்தப் படைப்பு அர்ஷாக இருந்தாலும் சரி, மாத்திரை, தண்ணீர் போன்ற சாதாரண வஸ்துக்களாக இருந்தாலும் சரி. “இதிலும் இறைவன் இருக்கிறான், ஏனெனில் இது இருப்பதே இறைவனின் உள்ளமையில்தான்” என்னும் கருத்தில் ‘இதில் இறைவன் இருக்கிறான்’ என்று மட்டுப்படுத்தாமல் ஒரு படைப்பில் அவன் இருப்பதாகச் சொல்வது ஏகத்துவமே. அந்தப் படைப்பு அர்ஷாக இருந்தாலும் சரி, மாத்திரை தண்ணீர் போன்ற சாதாரண வஸ்துக்களாக இருந்தாலும் சரி!

படைப்புக்களில் இறைவன் இல்லை என்று சொல்வது இறைநிராகரிப்பாகும். ஏனெனில் எல்லாப் படைப்புக்களுமே அவனுடைய உள்ளமையில்தான் தோற்றப் பட்டுள்ளன என்னும் அடிப்படையில் அவன் இல்லாத படைப்பே இல்லை. எந்தப் படைப்பும் அவனுடைய உள்ளமைக்கு அப்பால் இருக்க முடியாது. ஏனெனில் அவனுடைய உள்ளமைக்கு அப்பால் என்பதே கிடையாது. அவனுடைய உள்ளமை அன்றி வேறு உள்ளமை இல்லை. உள்ளமை ஒன்றே!

“இந்த வாளில் இரும்பு இல்லை” என்று இரும்பினால் ஆன வாளைப் பார்த்து ஒருவர் சொன்னால் அது தவறு. இது உங்களுக்குப் புரியும். ஆனால், “இந்த வாளில் இரும்பு இல்லை” என்று ஒருவர் சொல்வது எப்போது உண்மையாக முடியும்? அதற்கான நிபந்தனை என்ன? அவர் குறிப்பிடும் வாள் இரும்பல்லாத வேறு ஒரு பொருளால் உண்டாகியிருக்க வேண்டும் என்பதுதானே? அது மரத்தாலான வாளாகவோ காகிதக் கத்தியாகவோ இருக்கலாம். அப்போது சொல்லலாம் “இந்த வாளில் இரும்பு இல்லை” என்று.
“படைப்புக்களில் இறைவன் இல்லை” என்று சொன்னால் அவை இறைவனல்லாத வேறு உள்ளமையில் தரிப்பட்டுள்ளன என்று பொருளாகிவிடும். அவனல்லாத வேறு உள்ளமை உண்டு என்பது இணைவைப்பதாகும். எனவே படைப்புக்களில் இறைவன் இல்லை என்று சொல்வது இணைவைப்பாகும்.

”ஷிர்க்” என்றால் இணை என்று பொருள். இணை என்பதற்கு இரண்டு என்று அர்த்தம். (சமமான இன்னொன்று என்னும்படி.) ”லா ஷரீக லஹு” என்றால் அவனுக்கு இணை இல்லை என்று பொருள். அதாவது ”அவனுக்கு இரண்டு இல்லை” என்று அர்த்தம். அதாவது சத்தாக இருப்பது – உள்ளமை ஒன்றுதான். அத்விதம் – இரண்டற்றது – WITHOUT SECOND என்று சொல்லப்படுகிறது.

படைப்புக்களில் இறைவன் இல்லை என்று சொல்பவன் படைப்புக்களுக்கு இறைவனல்லாத வேறு உள்ளமையைக் கற்பனை செய்கிறான். இல்லாததைக் கற்பனை செய்கிறான். எனவேதான் திருக்குர்ஆனில் ‘ஷிர்க்’கைக் கற்பனை என்று சொல்லப்பட்டுள்ளது.) அப்போதும்கூட ஒட்டுமொத்தப் படைப்புக்களுக்கு இறையுள்ளமை அன்றி தனியே வேறு ’ஒற்றை’யான உள்ளமை இருக்கிறது என்று சொல்வானானால் அது ’ஷிர்க்’ – இணை – இரண்டு (சமமான இன்னொன்று) என்றாகும். ஆனால் ஒவ்வொரு படைப்புக்கும் தனித்தனி உள்ளமை இருக்கிறது என்று நினைப்பவனின் கொள்கை இன்னும் மோசமானது. எத்தனை படைப்புக்கள் உண்டோ அத்தனை எண்ணிக்கையில் ஷிர்க் – இணை வைத்தவன் அவன்!

எனவே இறைவனுக்கு வேறாய்ப் படைப்புக்களுக்குத் தனி உள்ளமை உண்டு என்னும் கருத்தில், படைப்புக்களில் இறைவன் இல்லை என்னும் கருத்தில் ‘படைப்புக்களை விட்டு படைத்தவனை நோக்கி’ என்று சொல்லப்படுமானால் அதைவிட அபத்தமான வாசகம் வேறு இல்லை!

அதனினும் தெளிவாய், பொருத்தமாய், நேர்த்தியாய்க் கூறவேண்டுமெனில் நான் இப்படிச் சொல்வேன்: “படைப்புக்களில், படைத்தவனை நோக்கி.” இக்கருத்துப்பட “ஹக்கை ஃகல்க்கில் ஹக்காகக் காணாத வாழ்நாள் துக்கமாம்” என்று ராத்திப் ஜலாலிய்யாவில் எப்போதோ பாடிவைத்துவிட்டார்கள். (ஹக் – சத்தியம் என்று பொருள். இவ்வாசகத்தில் இறைவனைக் குறிக்கிறது. ஃகல்க் – படைப்பு.)

(தொடரும்...)

5 comments:

  1. மின்னஞ்சல் அனுப்பியதும் தொடர்பு கொண்டதும் நான் அல்ல.

    ReplyDelete
  2. இப்போது தட்டச்சு செய்துகொண்டிருக்கும் எனக்கு என்னைத் தன்மையில் காட்டும் இறைவன் இதே வேளை என் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என்னை முன்னிலையாகக் காட்டிக் கொண்டிருக்கிறான், உங்களுக்கு என்னைப் படர்க்கையாகக் காட்டிக்கொண்டிருக்கிறான்..// அருமை! அருமை...!


    இந்த விஷ்யத்தை விளக்க நெல்லிக்குப்பம் அப்துர் ரஹ்மான் ஹழ்றத் அவர்கள் தன் “முஸ்லிம் அத்வைத மூல மொழி” என்னும் நூலில் // இப்படி எல்லாம் நூல் இருக்கிறதா என்ன?

    ReplyDelete
  3. //படைப்புக்களில் இறைவன் இல்லை என்று சொல்வது இறைநிராகரிப்பாகும். ஏனெனில் எல்லாப் படைப்புக்களுமே அவனுடைய உள்ளமையில்தான் தோற்றப் பட்டுள்ளன என்னும் அடிப்படையில் அவன் இல்லாத படைப்பே இல்லை.//

    இந்து மதத்தில் அத்வைதக் கருத்து உடையவர்கள் எல்லா உருவங்களையும் வழிபடுவர்;சிவன், விஷ்ணு பேதம் இல்லை.இரண்டு கோவில்களுக்கும் செல்வர். காரணம் இறைவன் இல்லாத படைப்புக்களே இல்லை என்ற கொள்கையால் 'இதில் இறைவன் இல்லை' என்று எதையுமே கூற முடியாத நிலைதான்.தன் மனதில் தன் இஷ்ட தெய்வத்தை இருத்திக் கொண்டு எல்லா உருவங்களிலும் அந்த இஷ்ட தெய்வமே உறைவதாகக் கொள்வது அத்வைதிகளின் மரபு.

    ReplyDelete
  4. Masha Allah Arumai Arumai bhai ... jazakallah jazakallah

    ReplyDelete
  5. Beautiful explanation Sir...i was referring to Saint Tirumoolar; your clarity of thoughts has a flow like water...the sword and iron example is simple and great; please keep writing

    ReplyDelete