Saturday, February 4, 2012

நான் நீ அவன் (தொடர்ச்சி-2)


”எப்பக்கம் நீங்கள் திரும்பினும்
அல்லாஹ்வின் திருமுகம் (உள்ளமை) இருக்கிறது” (2:115)

நடைமுறையில், நாம் திரும்பும் திசையெல்லாம் படைப்புக்கள்தான் தெரிகின்றன; அவற்றைத் தன்னில் இறைவனே காட்டிக் கொண்டிருக்கிறான் என்று சொன்னேன். படைத்தவனில் படைப்புக்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். படைப்புக்களில் படைத்தவனைப் பார்க்கும் பார்வைதான் பெறப்பட வேண்டும்.

இவ்விடத்தில், படைப்புக்கள் படைத்தவனை மறைக்கும் ஆற்றல் உடையவை அல்ல என்னும் கருத்தின்பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்துவோம். ஏனெனில் படைப்புக்கள்தான் தெரிகின்றன, படைத்தவன் காட்சியாகவில்லை என்பதால் ”படைப்புக்கள் இறைவனை மறைக்கின்றன” என்று சொல்வது தர்க்க சாத்தியமான ஒன்றுதானே?

இதற்கான விளக்கத்தை நோக்கிச் செல்ல ஒரு பழமொழியை முதலில் பார்ப்போம்: ‘கல்லைக் கண்டால் நாயைக் காணாம், நாயைக் கண்டால் கல்லைக் காணாம்’! இதற்கு என்ன பொருள்? கல்லிலே செதுக்கப்பட்ட நாயுருவம் ஒன்றுள்ளது. அந்தச் சிலையைப் பார்க்கும் ஒருவன் அது கல்தான் என்று காணும்போது நாய் அவன் சிந்தனையில் தெரிவதில்லை. அது நாய் என்று பார்க்கும்போது கல் அவனின் சிந்தனையில் தெரிவதில்லை. இறைவனும் உலகமும் இப்படித்தான் என்பது கருத்து.


இதே கருத்தைத் திருமூலர் மரத்தால் செய்த யானைச் சிலையை உவமையாக வைத்து விளக்குகிறார்”
“மரத்தை மறைத்தது பார்மத யானை
மரத்தில் மறைந்தது பார்மத யானை
பரத்தை மறைத்தது பார்மத பூதம்
பரத்தில் மறைந்தது பார்மத பூதம்”

யானை என்னும் உருவம் மரத்தை மறைத்தது. பின்பு அது மரத்தில் மறைந்தது. அதுபோல் நீர், நிலம், தீ, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐம்பூதங்கள் இறைவனை மறைத்தன. பின்பு அவை எல்லாம் இறைவனில் மறைந்தன என்பது இப்பாடலின் கருத்து.


ஐம்பூதங்களால் ஆன பிரபஞ்சம் இறைவனை மறைத்தன என்பது நம் சிந்தனையில் மட்டுமே. எதார்த்தத்தில் ஐம்பூதங்கள் என்னும் படைப்புக்களுக்கு இறைவனை மறைக்கும் ஆற்றல் கிடையாது. ஆனால் தன்னை மறைத்துக் கொண்டு படைப்பைக் காட்டும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு. எனவே சூஃபிகள் ‘இறைவனை உலகம் மறைத்தது’ என்று சொல்லமாட்டார்கள்; ‘உலகைக் கொண்டு அவன் தன்னை மறைத்துக்கொண்டான்’ என்றே சொல்வார்கள். அதாவது, இறைவனை மறைக்கும் ஆற்றல் எந்தவொரு சிருஷ்டிக்கும் இல்லை. ஆனால் சிருஷ்டிகளை வெளிக்காட்டித் தன்னை மறைத்துக்கொள்ளும் ஆற்றல் இறைவனுக்கு உண்டு.

சத்தியப் பொருளாய், ஏகமாய் இருக்கும் இறைவனுக்கும், இல்லாமை என்னும் தன்மை பெற்ற சுயமாய் அவனின் சிந்தனையில் – ஞானப் பூங்காவில் – இருக்கும் சிருஷ்டிகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நிறையவே பேசிவிட்டோம். ‘இறைவன் மட்டுமே இருக்கிறான். உள்ளமை அவனுடையது மட்டுமே’ என்ற அளவில் பேசிவிடுவதுகூட இலகுவானதுதான். சிருஷ்டிகளின் நிலை என்ன என்பது பற்றி விளங்குவதுதான் சிக்கலானது. சிருஷ்டிகள் இருக்கின்றன என்பது திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் காட்டுகின்ற உண்மை. ஆனால் அவற்றின் எதார்த்தம் (ஹகீகத்) என்ன? அவை எங்கே என்னவாக இருக்கின்றன? என்பன போன்ற விஷயங்களை அறிவதில்தான் பூட்டுக்கள் திறக்கின்றன.

”உள்ளமை ஒன்று; சுயம் இரண்டு” என்பது நான் சார்ந்திருக்கும் சிந்தனைப் பள்ளியின் கொள்கை என்பதாக முன்பே விளக்கினேன். என் சிறிய தந்தையின் மகனான என் தம்பி ஒருவன் சார்ந்திருக்கும் ஒரு சிந்தனைப் பள்ளியின் கொள்கை “உள்ளமை ஒன்று; சுயம் ஒன்று” என்பதாகும். படைப்புக்களின் சுயம் என்பதெல்லாம் எதுவுமில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். அதாவது “இறைவன் மட்டுமே இருக்கிறான், சிருஷ்டிகள் இல்லை” என்பது அவரகளின் விளக்கம்.

ஒரு நாள் அந்தத் தம்பி என்னை உலாப்பேசியில் அழைத்தான். நான் சார்ந்திருக்கும் சிந்தனைப் பள்ளி போலியானது என்று அவர்களின் சிந்தனைப்பள்ளியைச் சேர்ந்த ஒருவர் நூலெழுதியிருப்பதாகவும் அது இணையத்தில்கூட வெளியிடப்பட்டுள்ளது என்றும் சொன்னான். நான் அதனை இணையத்தில் படித்தேன். என் குருநாதரையும், என் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்த வேறு குருமகான்கள் சிலரையும் தாக்கி எழுதப்பட்ட அந்தச் சிறு நூலில் ‘உள்ளமை ஒன்று சுயம் இரண்டு’ என்னும் கொள்கையும் தவறானது என்று தாக்கப்பட்டிருந்தது. இதைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்று என் தம்பி வினவினான். முக்கால் மணிநேரமாவது உரையாடியிருப்போம்.


பொதுவாக இந்த விஷயங்களில் நான் தர்க்கவாதங்களில் இறங்குவதில்லை. அவரவருக்கு இறைவனின் கருணை என்ன விளக்குகிறதோ அதை அவரவர் விளங்கிக் கொள்வார்கள். இதில் நாம் விளக்குவதால் ஒன்றும் துலங்கிவிடப் போவதில்லை என்று மௌனமாக இருந்துவிடுவேன். என் சிந்தனைப்பள்ளியில் உள்ள சக தோழர்களிடமே பல விஷயங்களில் கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பேசுந்தோறும் அவை வெளிப்பட்டுத் தெரிய வருகின்றன. இது இயல்பே. ஏனேனில் ஒவ்வொருவரையும் இறைவன் தனித்தன்மையுடன் படைத்திருக்கிறான்.

என் தம்பியின் கொள்கையைச் சார்ந்தவர்களுடன், அதாவது ‘உள்ளமை ஒன்று சுயம் ஒன்று’ என்ற கொள்கையில் இருக்கும் சிலருடன் எனக்கு நட்பு இருக்கிறது. அவர்களில் ஒருவரான அரபிப் பேராசிரியர் ஒருவருடன் இது பற்றிப் ஒருமுறை பேசிக் கொண்டிருந்தபோது, ‘படைப்புக்களின் சுயம் என்பதை எப்படி அழைக்கிறீர்கள்?’ என்றார். ‘ஜாத்தே அதம் (இல்லாமைச் சுயம்)’ என்றேன். ‘நீங்களே அதை அதம் (இல்லை) என்று சொல்லிவிட்டீர்களே, இல்லாததைப் பற்றி ஏன் பேச வேண்டும்?’ என்று சொல்லிவிட்டார். நானும் அத்துடன் சிரித்துக்கொண்டே விட்டுவிட்டேன். ‘பேசப்பேசத்தான் ஞானம் நாசமாகும்’ என்று ஒருமுறை அவர் சொன்னார். ‘உனக்குத் தரப்பட்டுள்ள ஞானத்தை மௌனமாக அனுபவி’ என்று அவரின் சக சீடர்களும் என்னிடம் சொன்னதுண்டு. அவர்களின் போக்கினை நான் மதிக்கிறேன். அவர்களுடன் நட்பும் நல்லபடித் தொடர்கிறது.

ஞானம் எங்கிருந்தாலும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது என் புரிதல். ‘அறிவு என்பது இறைநம்பிக்கையாளனின் காணாமல் போன ஒட்டகம். அதை அவன் எங்கே கண்டாலும் பிடித்துக் கொள்ளட்டும்’ என்று நபிகள் நாயகம் சொன்னதற்கேற்ப, பல்சமய ஞானப் பனுவலகளைப் படிக்கும் பழக்கம் எனக்குண்டு. நண்பர் அப்துல் காதிர் பிலாலியும் அப்படிப் பட்டவர்தான். அதனால்தான் பயில்வான் சாகிபின் பல கருத்துக்களில் எமக்கு முரண்பாடு இருந்தும் அவரின் நூலைப் படித்துவிட்டு அதன் மீது சிந்தனையும் செய்து என் போன்றோருடன் கலந்துரையாடவும் செய்கிறார். ‘நாம்தான் இறைவன் என்று அறிந்துகொள்வதுதான் உண்மையான ஈமான் (இறைநம்பிக்கை). நாம் இறைவன் அல்ல என்று என்னுவது அஞ்ஞானம். அது மாயையின் விளைவு. நாம் நம்மை இறைவன் என்று அறிந்த மாத்திரத்தில் அஞ்ஞானம் அகன்றுவிடுகிறது’ என்று பயில்வான் சாகிப் சொல்வது பற்றியும் பேசியிருக்கிறோம்.

என் தம்பியுடன் நடந்த உரையாடலிலும் இந்த விஷயம்தான் அடிப்படையாக அமைந்தது. ’நான் இறைவன் அல்ல, நான் படைப்பு என்று நினைப்பது மாயையால் விளைவது. நானே இறைவன் என்று எண்ணுவதுதான் ஞானம்’ என்று சொல்லப்படுவது பற்றி உரையாடினோம். ஒரு கட்டத்தில் உரையாடல் பின்வருமாறு நகர்ந்தது.

“நான் படைப்புத்தான் என்று எண்ணுவது ஏன் மாயை ஆகிறது?”
“ஏனெனில், இறைவன் மட்டுமே இருக்கிறான், சிருஷ்டிகள் இல்லை. மாயையால் நான் சிருஷ்டி என்று ஒருவன் உணர்கிறான். மாயை அகன்றால், ஞானம் பிறந்தால் தன்னை இறைவன் என்று அவன் உணர்வான்.”
“இந்த மாயை யாரில் ஏற்பட்டுள்ளது?”
“மனிதனில்”
“அதாவது தான் படைப்பு என்று மனிதன் நினைத்துக்கொண்டிருப்பது மாயை”
“ஆம். தன்னை இறைவன் என்று அவன் அறிவதே ஞானம்”
“அதாவது அவன் எப்போதும் இறைவனாகவே இருந்திருக்கிறான், இப்போது மாயையால் தான் இறைவன் அல்ல என்று, இறைவனுக்கு வேறானவன் (கைருல்லாஹ்) என்று நினைக்கிறான்”
“ஆமாம்”
“அப்படியெனில், உங்கள் கொள்கை படிக்கு, மாயை ஏற்பட்டிருப்பது யாருக்கு?”
”மனிதனுக்குத்தான்”
“ஓர் உதாரணம் சொல்கிறேன். ஓர் இளவரசன் தான் ஒரு கோழி என்று நினைக்கிறான். ‘நான் கோழி ஆவேன், நான் இளவரசன் அல்ல’ என்கிறான்.  மந்திரி அவனிடம், ’தம்பி, நீ உண்மையில் கோழி அல்ல, இளவரசன்தான். நீயே இளவரசன் என்று அறி. அதுவே ஞானம். நீ உன்னைக் கோழியாக எண்ணுவது மாயை’ என்று சொல்கிறார். இங்கே, மாயை ஏற்பட்டிருப்பது கோழிக்கா? இளவரசனுக்கா?”
“இளவரசனுக்குத்தான். இல்லாத கோழிக்கு மாயை எப்படி ஏற்படும்”
“தான் கோழி அல்ல இளவரசன்தான் என்று நினைக்க வேண்டியது யார்? கோழியா? இளவரசனா?”
“இளவரசன்தான். கோழிதான் இல்லையே?”
“தான் படைப்பு அல்ல, தான் இறைவனே என்று நினைக்கவேண்டியது யார்? இறைவன்தான். ஏனெனில் படைப்பு என்பதுதான் இல்லையே?”
”அப்படியெனில், உங்கள் கொள்கை படிக்கு, மாயை ஏற்பட்டிருப்பது இறைவனுக்குத்தான் என்றாகிறது! தான் இறைவன் என்று மனிதன் அறிவதே ஞானம் என்றால், இப்போது தான் மனிதன் என்று இறைவனே எண்ணிக் கொண்டிருப்பதாகத்தானே பொருள்படுகிறது? அப்படியானால் இறைவனுக்கு அஞ்ஞானம் சாத்தியம் என்றல்லவா ஆகிவிடும்? அப்படியானால் அவன் பரிபூரணமான அறிவு கொண்டவன் என்பது பொய்யாகிவிடுமே? அஞ்ஞானம் அவனுக்குச் சாத்தியமில்லை என்பது உண்மை எனில், அவன் ஒருபோதும் தன்னை மனிதன் என்றோ படைப்பு என்றோ நினைக்க மாட்டான். எனவே தன்னை மனிதன் என்றும் படைப்பு என்றும் ஒருவன் எண்ணும்போது அவன் நிச்சயமாக இறைவன் அல்ல என்பது உறுதியாகிறது. அவன் தன்னை இறைவன் என்று கருதுவானாகில் அது இணைவைப்பாகும். அது ஞானமல்ல, இறைவனையும் தன்னையும் அறியாத சுத்த அஞ்ஞானமாகும்”

அதற்கு மேல் அந்த விவாதத்தை வளர்க்கவில்லை. என் சிறியதந்தை, சிறியதாயார் ஆகியோரைப் பற்றிய குசல விசாரிப்புக்களுக்குத் திரும்பிவிட்டேன். இதற்கெல்லாம் ஒரு முடிவு இருக்கப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். தர்க்கப் போக்கு நீண்ட தூரம் நம்மைக் கொண்டு சேர்க்காது. தியான அனுபவங்களில் தான் கண்டு அனுபவிக்க வேண்டியவை இவை. பேசிக்கொண்டிருந்த நேரத்திற்கு உருப்படியாகத் தன்னுள் மூழ்கிப் பார்த்திருக்கலாம். அது சால உத்தமம்.

6 comments:

  1. //“மரத்தை மறைத்தது பார்மத யானை
    மரத்தில் மறைந்தது பார்மத யானை//

    'பார்மத யானை' அல்ல என்று நினைக்கிறேன்; 'மாமத யானை' என்று இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. //இப்போது தான் மனிதன் என்று இறைவனே எண்ணிக் கொண்டிருப்பதாகத்தானே பொருள்படுகிறது? அப்படியானால் இறைவனுக்கு அஞ்ஞானம் சாத்தியம் என்றல்லவா ஆகிவிடும்?//

    இறைவன் அஞ்ஞானம் அடைவதில்லை.இறைக்கருணையால் பஞ்சபூத சேர்க்கையால் படைப்புக்கள் உண்டாகின்றன;அஞ்ஞானததைப் பெறுகின்றன.

    பயத்தை உண்டாக்குபவனும் அவனே;பயத்தை நாசமாக்குபவனும் அவனே.
    பயமாகவும்,தைரியமாகவும் அவனே இருக்கிறான். ஞானமும், அஞ்ஞானமும் அவனே.புலியும் இறைவன்தான்;அதற்காகப் புலியைகட்டிக் கொள்ள முடியுமா?
    புலியால் நமக்கு இருக்கும் ஆபத்தை எடுத்துச் சொல்பவரும் இறைவனே.

    யானையும் இறைவனே;'யானைக்கு மதம் பிடித்துள்ளது விலகு' என்று சொல்லும் பாகனும் இறைவனே!
    தர்கத்திற்கு முடிவில்லை.

    ReplyDelete
  3. திருமந்திரப் பாடலின் வடிவம் இப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்

    மரத்தில் மறைந்தது மாமத யானை
    மரத்தை மறைத்தது மாமத யானை
    பரத்தில் மறைந்தது பார்முதற் பூதம்
    பரத்தை மறைத்தது பார்முதற் பூதம்

    ReplyDelete
  4. திருத்தம் சொன்னதற்கு மிக்க நன்றி கிருஷ்ணன் அவர்களே. கருத்தை மட்டும் கவனத்தில் வைத்து எழுதிக்கொண்டு போனதில் இந்தப் பிசகை நான் கவனிக்கவில்லை.

    ReplyDelete
  5. சஹோதரர் ரமீஸ் பிலாலி அவர்களுக்கும் மற்றும் இந்த பதிவை வாசிக்கும் அனைவருக்கும் என்னுடைய சலாம்

    அஸ்ஸலாமு அலைக்கும் (வ)

    உங்கள் பதிவை படித்தவுடன் எனக்கு ஒரு சிறு சம்பவம் நினைவுக்கு வந்தது அது தாங்களும் அறிந்த ஒன்றாக கூட இருக்கலாம் என்ற போதிலும் அதை இங்கு சற்று நினைவு கூறுகிறேன்.ஒரு முறை என்னுடைய குருமகான் அவர்களுடைய குரு ஹைதராபாத் சர்கார் என்று சொல்லக்கூடிய நூரி நாயகம் அவர்கள் சென்னை மாநகருக்கு வருகை தந்த பொழுது அவர்களை சந்தித்து கொள்கை அடிப்படையில் சில விவாதங்கள் செய்ய சிலர் வந்தார்கள் (அதாவது உள்ளமை ஒன்று சுயம் ஒன்று என்ற கொள்கை உள்ளவர்கள் ) அப்பொழுது சர்கார் நூரி நாயகம் அவர்களிடம் "படைப்பினம் அனைத்தும் "மா' லும்" இறைவனின் சிந்தனை என்னும் ஞான பூங்காவில் உள்ள வெற்று தோற்றங்கள் தான் ஆகையால் அவைகளும் இறைவன் தான் என்று வாதித்தார்கள்" பின்பு அதற்க்கு பதில் அளித்த சர்க்கார் நூரி நாயகம் அவர்கள் அவர்களுடைய வாழ்நாளில் மறக்காத அளவிற்கு அவர்களுக்கு விளங்க வைத்தார்கள்

    சர்கார் : "முதலில் உங்கள் சிந்தனையில் ஒரு "மாடு" தோற்றத்தை கொண்டு வாருங்கள் ,கொண்டு வந்து விட்டீர்களா ?
    வந்தவர் : "ஆம் கொண்டுவந்துவிட்டேன் "
    சர்கார் : "மாடு இப்பொழுது எங்கு உள்ளது ?"
    வந்தவர் : "என் சிந்தனையில் உள்ளது "
    சர்கார் : "அப்படியானால் உங்கள் கூற்று படி நீங்களும் மாடும் ஒன்று ,எனவே இப்பொழுது இப்பொழுது மாடஹி விட்டீர்கள் "
    சர்கார் : "இப்பொழுது உங்கள் சிந்தனையில் ஒரு "நாய்" தோற்றத்தை கொண்டு வாருங்கள் ,கொண்டு வந்து விட்டீர்களா ?
    வந்தவர் : "ஆம் கொண்டுவந்துவிட்டேன் "
    சர்கார் : "நாய் இப்பொழுது எங்கு உள்ளது ?"
    வந்தவர் : "என் சிந்தனையில் உள்ளது "
    சர்கார் : "அப்படியானால் உங்கள் கூற்று படி நீங்களும் நாயும் ஒன்று ,எனவே இப்பொழுது இப்பொழுது நாயாகி விட்டீர்கள் "
    சர்கார் : "இப்பொழுது உங்கள் சிந்தனையில் ஒரு "குரங்கு" தோற்றத்தை கொண்டு வாருங்கள் ,கொண்டு வந்து விட்டீர்களா ?
    வந்தவர் : "ஆம் கொண்டுவந்துவிட்டேன் "
    சர்கார் : "குரங்கு இப்பொழுது எங்கு உள்ளது ?"
    வந்தவர் : "என் சிந்தனையில் உள்ளது "
    சர்கார் : "அப்படியானால் உங்கள் கூற்று படி நீங்களும் குரங்கும் ஒன்று ,எனவே இப்பொழுது இப்பொழுது குரங்காகி விட்டீர்கள் ,என்னிடம் பேசுவதற்கு உங்களுக்கு தகுதி இல்லை இங்கிருந்து சென்றுவிடுங்கள் "என்று சொன்னவுடன் அவர் தன தவற்றை உணர்ந்து சர்கார் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுகொண்டார் .

    "அல்லாஹ் எவ்வளவுதான் இறங்கி வந்து தாழ்ந்த தேவையை பூர்த்தி செய்தாலும் "அல்லாஹ்" அல்லாஹ் தான் ,அது போன்று அடியான் எவ்வளவுதான் உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும் அடிமை அடிமை தான்" என்று என் குருமகான் சொல்லுவார்கள்
    -இந்த பதிவில் அதாவது தவறு நிகழ்ந்திருந்தால் தெரிவிக்கவும் ரமீஸ் பிலாலி
    -முஹம்மத் யாஸீன் பைஜி

    ReplyDelete
  6. jazakallah br but innum ithai patri villakkam vedum and jazakallah br முஹம்மத் யாஸீன் பைஜி

    ReplyDelete