Saturday, February 25, 2012

கானலில் கண்டதெல்லாம்…




”இறைவனைப் போல் நம்மால் சிந்திக்க முடியுமா?”
“முடியாது, நிச்சயமாக முடியாது”
“ஏன்?”
“ஏனெனில் நாம் இறைத்தன்மை கொண்டவர்கள் அல்ல. நாம் படைப்புக்கள்.”
“இறைவனால் நம்மைப் போல் சிந்திக்க முடியுமா?”
“?????”
“நீங்கள் முன்பு சொன்ன விடையின் தர்க்கத்தின்படி இக்கேள்விக்கு ‘முடியாது’ என்றுதான் பதில் வரும். அதாவது இறைவன் படைப்பின் தன்மை கொண்டவன் அல்ல என்பதால். அதே தர்க்கத்தின்படி, இக்கேள்விக்கு ‘முடியும்’ என்று பதில் சொன்னால் இறைவனிடம் படைப்பின் தன்மை உள்ளது என்றாகிவிடும், நவூதுபில்லாஹி. எனவே பதில் சொல்லும் முன் யோசித்துச் சொல்லுங்கள்.”
”சரிங்க.”
“சரியெல்லாம் இருக்கட்டும். இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லுங்க. இறைவன் எப்படிச் சிந்திக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியாதபோது நீங்கள் அவனைப் போல் சிந்திக்கவில்லை என்று உங்களால் எப்படிக் கூற முடியும்?”
“எ…?”

தர்க்கம் இருமுனை கூறான கத்தி என்று சொல்லப்படுவதுண்டு. தாக்குபவனையும் சேர்த்து அது காயப்படுத்தலாம். தர்க்கம் என்பது நம்முடைய வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்ட சிந்தனை அமைப்புத்தான். அதுவே அறுதியான உண்மையை அறிவதற்கான வழி என்று நினைப்பது சுத்த முட்டாள்தனம். இதை மீண்டும் மீண்டும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன், என் மாணவர்களுக்கு உணர்த்தும்போது.


“1-க்கு அடுத்து என்ன வரும்?”
“2”
“நீங்கள் சொல்வது தவறாகவும் இருக்கலாம். 1-க்கு அடுத்து 1.1 வரும் என்று சொல்லலாம் அல்லவா? அதனை அடுத்து 1.3, 1.4 … இப்படியே போய் 1.9-க்குப் பிறகுதான் 2 வரும்.”
“ஆமாம் சார்”
“என்ன நோமாம் சார். இதையும் சிந்திக்காமலே சொல்வதா? நான் சொல்வதும் ஒரு லெவலில்தான் சரி. இன்னும் நுணுக்கமான லெவலில் இறங்கிப் பார்த்தால் 1-க்கு அடுத்து 1.01 வரும். இன்னும் ஒரு லெவல் ’உள்ளே’ சென்றால் 1-க்கு அடுத்து 1.001 வரும். இன்னும் ஒரு லெவல் உள்ளே 1-க்கு அடுத்து 1.0001 வரும். இப்படியே எத்தனை லெவல் வரை நுணுக்கமாகப் போக முடியும்னு சொல்லுங்க.”
“அதுக்கு முடிவே இல்லை சார். போய்க்கிட்டே இருக்கும்.”
“இன்ஃபினிட். அப்படீன்னா என்ன அர்த்தம்? 1-க்கு அடுத்து என்ன வரும்கிறதுக்கு தர்க்க ரீதியா ஒரு விடையே இல்லை. இன்னொரு விதத்தில் சொல்வதென்றால் 1-க்கு அடுத்து எதுவுமே வராது. 1 மட்டும்தான் இருக்கும் என்று சொல்லலாம் அல்லவா?”
“ஆமாம் சார்”
“ஆமாம்னு சொல்லித் தப்பிக்கப் பாக்காதீங்க. யோசிங்க. அப்படீன்னா இந்த 2,3,4-ங்கற எண்கள்லாம் எங்கிருந்து வந்திச்சு?”
******  ******  ******


”அறிவாளிகள்னு யாரைச் சொல்றோம்?”
“சிந்தனையாளர்களை சார்”
“சிந்தனையாளர்ங்கறவங்க என்ன செய்வாங்க?”
“சிந்திப்பாங்க”
“நாமளும்தானே சிந்திக்கிறோம். அப்ப நாமும் சிந்தனையாளர்களா?”
“இல்லே சார். சிந்தனையாளர்ங்றவங்க நிறைய சிந்திப்பாங்க. எப்பவும் சிந்திச்சிக்கிட்டே இருப்பாங்க”
“பணக்காரங்றவன் நெறயா பணம் வச்சிருப்பாங்ற மாதிரி சிந்தனையாளர்னா நெறயா சிந்திக்கிறவர்னு நீ நெனக்கிற.”
“ஆமாம் சார்”
“அப்ப முட்டாள்ங்றவன் கொஞ்சமா சிந்திக்கிறவன், அல்லது சிந்தனையே செய்யாதவன். அப்படித்தானே?”
“ஆமாம் சார்”
”அப்படீன்னா ஒரு முட்டாள் எப்ப அறிவாளியா ஆவான்?”
“சிந்திக்க ஆரம்பிக்கும்போது. சிந்திக்க சிந்திக்க அறிவாளியா ஆவான்”
“ஒரு முட்டாள் எப்படிச் சிந்திப்பான்?”
“சார், நீங்க கேக்குறது புரியல”
“முட்டாள்தனமான சிந்தனைன்னு நாம சில சமயம் சொல்றோமில்லியா?”
“ஆமாம் சார். முட்டாள் முட்டாள்தனமாத்தான் சிந்திப்பான்”
“அப்படீன்னா முட்டாள்தனமாச் சிந்திக்க சிந்திக்க அவன் இன்னும் பெரிய முட்டாளாத்தான் ஆவான். அவன் அறிவாளியாவுறதுக்கு வாய்ப்பு கொறஞ்சுக்கிட்டே போயிடும்”
“அ…? அப்ப அவன் அறிவாளியா ஆவறது எப்ப?”

“அறிவாளியா ஆவுறதுக்கு முதல் படி சிந்திப்பது அல்ல. சிந்திக்காமல் இருக்கப் பழகுவது. சிந்தனைகளின் எண்ணிக்கையை வைத்து ஒருத்தன் சிந்தனையாளனா ஆவுறது இல்லை. சிந்தனையின் தன்மையை வைத்துத்தான். ஒருத்தன் பை நிறைய கூழாங்கல் வச்சிருக்கான். இன்னொருத்தன் பையில் ஒரே ஒரு வைரம் இருக்கு. இந்த ரெண்டு பேர்ல யாரு பணக்காரன்?”

“வைரம் வச்சிருக்கிறவன்”

“நல்லது. திருக்குர்ஆன்ல பல இடங்கள்ல ஆண்டவன் சொல்றான், சிந்திச்சுப் பாருங்கன்னு. எவன் சிந்திக்காம குர்ஆனுக்கு பூஜை போட்டுக்கிட்டிருக்கானோ அவன் அதைக்கொண்டு பயன் அடைய முடியாது. ஆனால் இதவிட இன்னும் ஆபத்தான நெலம ஒன்னு இருக்கு. அதாவது முட்டாள்தனமாச் சிந்திக்கிறவன் தன் கையில் குர்ஆனை எடுத்து வச்சிக்கிட்டு சிந்திக்க ஆரம்பிக்கிறது. அவன் அதை வைத்து மேலும் பெரிய இருள்லத்தான் போய் விழுவான். பெரிய பாவியாப் போவான். சிந்திக்காம இருக்கிற முட்டாளாவது தான் ஒரு முட்டாள்ங்கறத ஒத்துக்குவான். அது அவனுக்குத் தெரியும். அந்த ஒரு அறிவாவது அவனிடம் இருக்கு. அந்த வகையில, தான் ஒரு முட்டாள்ங்கற உண்மை தெரிஞ்சவனும் அறிவாளிதான்! ஆனால், சிந்திக்கிற முட்டாள் தான் அறிவாளின்னு நெனச்சிக்கிட்டு இருப்பான். தான் முட்டாள் என்பது தெரியாத ஒரு முட்டாளாக அவன் இருப்பான்.”
***************   **************   **************

”இந்த ரூம்ல இப்ப நாம எத்தனை பேர் இருக்கிறோம்?”
“ஐம்பது பேர் இருக்கோம் ஐயா”
“வேற என்னன்ன இந்த ரூம்ல இருக்கு?”
“பெஞ்சி, டேபிள், நாற்காலி, காத்தாடி, ட்யூப் லைட்டு, போர்டு… இதெல்லாம் இருக்கு ஐயா”
“நம்மளோட புஸ்தகங்கள், நோட்டுக்கள், டப்பா, பேனா, இந்த சாக்பீஸு, டஸ்டரு இதெல்லாமும் இருக்கில்லியா? இதுகள்ல அசைவு எதுல இருக்கு, எதுல இல்லை?”
“நம்மகிட்ட அசைவுகள் இருக்கு. உயிர் இல்லாத மித்த எல்லாப் பொருள்கள்லையும் அசைவு இல்லை”
“இந்த சாக்பீஸ்ல அசைவு இருக்கா?”
“இல்லை”
“இந்த மேசையில அசைவு இருக்கா?”
“இல்லை”
”இது நம்ம கண்ணுக்குப் புலப்படுற விஷயம். நாம பாக்குற லெவல்ல இருந்து பாக்கும்போது இப்படித் தெரியுது. ஆனால் பருப்பொருளின் உண்மை என்னன்னு ஆராய்ஞ்சு பாத்தவங்க வேற மாதிரி சொல்றாங்க. அதாவது இந்த சாக்பீஸ்ல இப்ப வேகமான அசைவு, இயக்கம் நடந்துகிட்டிருக்கு.”
“ஆ.. அது எப்படி சார்?”
“நீங்கள்லாம் அறிவியல் படிக்கிற பசங்கதானே? உங்களுக்குத் தெரிஞ்ச விஷயம்தான் இது. இந்த சாக்பீஸோட மெட்டீரியல் என்னன்னு சொல்லுங்க”
“சுண்ணாம்பு. அதாவது கேல்சியம்”
“கேல்சியம்ங்கறது ஒரு ATOM - அணுதானே?
“ஆமாம் சார்”
“இந்த சின்ன சாக்பீஸ் துண்டு பல கோடானு கோடி அணுக்களால் ஆனது இல்லியா? இது ஒரு தனிப்பொருள் இல்ல, கோடானு கோடி அணுக்களின் தொகுப்பு. இந்த இரும்பு மேஜையும் அப்படித்தான், கோடானு கோடி இரும்பணுக்களின் தொகுப்பு”
“ஆமாம் சார்”


“அணுவுக்குன்னு ஒரு கட்டமைப்பு இருக்கில்லியா? ATOMIC STRUCTURE. மத்தியில ஒரு கரு – ந்யூக்ளியஸ். அதுல ப்ரோட்டானும் ந்யூட்ரானும் இருக்கு. அதைச் சுத்தி வட்டப் பாதையில பல எலெக்ட்ரான்கள் சுழன்றுகொண்டு வட்டமிட்டுக்கிட்டிருக்கு. கேல்சியம் அணுவுக்கும், இரும்பு அணுவுக்கும் இந்த அணுத்துகள்களோட எண்ணிக்கையில வித்தியாசம் இருக்கலாம். ஆனால் அணு-அமைப்பு இதுதான் இல்லியா? சூரியனைச் சுத்தி வட்டமிடுகிற கோளங்கள் தானும் சுழன்று கொண்டிருக்கிற மாதிரி எலெக்ட்ரான்கள் அணுக்கருவைச் சுத்திக்கிட்டிருக்கு. இந்த இயக்கம் ஒவ்வொரு அணுவிலும் இருக்கு. அப்படீனா இந்த சாக்பீஸ்ல இடையறாத ஒரு தீவிர இயக்கம் இருக்குல்ல.”
“சார்!”
“அதாவது, இந்த சாக்பீஸ் அசையல, ஆனாலும் அதில் அசைவுகள் இருக்கு. ‘அது அசைகிறது, அது அசைவதில்லை’”

”இப்ப இன்னொரு விஷயத்தைக் கவனிங்க. அணு அமைப்பில் மத்தியில ஒரு கருவும் அதைச் சுத்தி எலெக்ட்ரான்களின் வட்டப்பாதைகளும் (ORBITS) இருக்கு. இதுல அணுக்கருவும் எலெக்ட்ரான்களும்தான் பருப்பொருட்கள். எலெக்ட்ரான் இந்த விஷயத்தில் ஒரு புதிர். அது முழுசான பருப்பொருளும் இல்ல. அதை பருப்பொருள்னு பாத்தா அது பருப்பொருளாத் தெரியும், அலை-ன்னு பாத்தா அலையாத் தெரியும். பருப்பொருள் இலக்கணத்தை மீறிய புதுக்கவிதை அது! ஆக ஒருவிதத்தில் அணுவின் பருப்பொருள் என்பது கரு மட்டும்தான்னும் சொல்லலாம். எலெக்ட்ரான்களின் வட்டப்பாதைகள் பரவிக்கிடக்கு. அதன் வெளிவட்டத்தை பாவித்து அந்த அணுவின் அளவு அதுவரைக்கும்னு நெனக்கிறோம். ஆனால் உண்மையில் ஓர் அணுவில் கருவுக்கும் எலெக்ட்ரான்களுக்கும் இடையிலும் எலெக்ட்ரான்களுக்கு இடையிலும் என்ன இருக்கு? அதாவது சூரியனுக்கும் கோளங்களுக்கும் இடையிலும், கோளங்களுக்கு இடையிலும் என்ன இருக்கு?”
“ஒன்னும் இல்ல சார்.”
“அதாவது வெற்றிடம் இருக்கு”
“ஆமாம் சார்”
“இந்த வெற்றிடங்களை எல்லாம் நீக்கிட்டா, அதாவது பக்கத்துக்கு நாலு வரின்னு அச்சடிச்சு சில புதுக்கவிதை புத்தகங்கள் வருதே, அதுல உள்ள கவிதைகள தொடர்ந்து உரைநடை மாதிரி இடம் விடாம அச்சடிச்சா நூறு பக்க புத்தகம் ஒன்னேகால் பக்கத்துல முடிஞ்சிரும் இல்லியா?, அது மாதிரி இந்த அணுக்கருவையும் எலெக்ட்ரான்களையும் சேத்து ஒரு பிடி பிடிச்சா எத்துனூண்டா ஆயிரும்னு யோசிங்க. அப்படிப் பிடிச்சு வச்சா – ஒரு யானையோட அளவு ஒரு கடலைப் பருப்போட அளவுதான் இருக்கும்! அதாவது பிடிச்சு வச்சப் பிள்ளையாரோட அளவு அவ்வளவுதான்!”

“நெஜமாவா சார். ஒரு யானைய அவ்வளவு குட்டியா அக்க முடியுமா? இவ்வளவு பெரிய யானை உண்மையிலயே இவ்வளவு சின்ன விஷயமா?”

“யானையோட உடம்பை அவ்வளவு சின்னதா ஆக்கிறலாம். ஆனால் அது யானையா இருக்காது. ஏன்னா யானைங்கறது அதோட உடம்பு இல்லை. இது வேற விஷயம். திசை திரும்ப வேண்டாம். தம்பி, நீ குட்டீன்னு நெனக்கிறது உண்மையிலயே ரொம்ப பெரிய விஷயம். அதுலாம் உனக்கு இப்ப சொன்னா வெளங்காது.”
“ஹிஹ்ஹிஹ்ஹி...”

“ஆக, ஒரு அணுவுல பருப்பொருள் ரொம்ப சொற்பமாவும் வெற்றிடமே மிகவும் அதிகமாவும் இருக்கு. அப்படீன்னா அணு இருக்குன்னு சொல்றதை விட அது இல்லைன்னு சொல்றதுதான் வாஸ்தவம் இல்லியா?”

“எப்படி சார்? கொஞ்சமானாலும் அது இருக்கில்லியா?”
“ஆனால் அது மட்டும் இல்லியே? பிரச்சினை இதுதான். அதோட ஃப்ரேம்ல அது கொஞ்சமாவும் அது இல்லாதது – வெற்றிடம் (VACCUM SPACE) அதிகமாவும் இருக்கு. இப்ப சதவிகிதம் போட்டாகணும், எது எவ்வளவுன்னு.”
”?????”
“ஒரு உதாரணம் சொல்றேன். ஒரு டம்ளர்ல ஒரு சதவிகிதம் பாலும் தொண்ணூற்றொன்பது சதவிகிதம் தண்ணீரும் இருக்குன்னு வையுங்க. அப்ப அதைப் பால்னு சொல்றது பொருத்தமா, இல்லை தண்ணீர்னு சொல்றது பொருத்தமா?”
“தண்ணீர்னு சொல்றதுதான் பொருத்தம். அதைப் பால்னு யாரும் ஒத்துக்க மாட்டாங்க”
“அதாவது ஒரு சதவிகிதம் என்பது நெக்லிஜிபிள் – தள்ளக்கூடிய அளவு இல்லியா? இதையே அணுவுக்கு வச்சுப் பாருங்க. அணுவின் பருப்பொருளைவிட அதனூடாக உள்ள வெற்றிடம் ரொம்ப ரொம்ப அதிகம். அதனால அணு இருக்குன்னு சொல்றதை விட வெற்றிடம் இருக்குன்னு சொல்றதுதான் உசித்தம். அதாவது, ஒன்றும் இல்லைன்னு சொல்றதுதான் பொருத்தமானது. இந்த சாக்பீஸ் அப்படிப்பட்ட அணுக்களோட தொகுப்புத்தான்ங்கறதால இது இருக்குன்னு சொல்றத விட இது இல்லைன்னு சொல்றதுதான் பொருத்தமானது. இந்த மேசையும் அப்படித்தான். நானும் நீங்களும்கூட அப்படித்தான். இந்த முழுப் பிரபஞ்சமும் அப்படித்தான்.”
“இதை நெனச்சாலே பயமாயிருக்கே சார்!”

“இதுல பயப்படுறதுக்கு என்ன இருக்கு? இருக்கிறதை இருக்குன்னு ஒத்துக்கணும், இல்லாததை இல்லைன்னு ஒத்துக்கணும். அதுதானே நேர்மை. ஆனால் அந்த நேர்மையைச் செயல்ல காட்டுறது அவ்வளவு லேசுபட்ட காரியமில்லை.”

“அதாவது எனக்குத் தெரியலைன்னா தெரியாதுன்னு சொல்லீறணும். என்கிட்ட ஒரு பொருள் இல்லைன்னா அது இல்லைன்னு ஒத்துக்கிறணும்; அது எங்கிட்ட இருக்கிற மாதிரி பாவ்லா காட்டக் கூடாது. இதுதான் நேர்மைன்னு சொல்றீங்க, இல்லியா சார்?”

“நீங்க சொல்றது அறவியல் நேர்மை – ETHICAL SINCERITY. நான் சொல்லிக்கிட்டிருந்தது ஆன்மிக நேர்மை – SPIRITUAL SINCERITY. எதிக்கல் நேர்மை உள்ளவங்களும்கூட இந்த ஸ்பிரிச்சுவல் நேர்மைல கோட்டை விட்டுடுவாங்க. இது அவ்வளவு நுட்பமான விஷயம். நாம இதுவரை பேசிவந்த விஷயங்களோட அறிவு இல்லைன்னா ஸ்பிரிச்சுவல் நேர்மையை அடைய முடியாது. எது சுயமாக இருக்கிறதோ அதுவே இருக்கிறது என்றும் எது சுயமாக இல்லையோ அது சுயமாக இருப்பதைச் சார்ந்து இருக்கிறது என்றும் பார்ப்பதுதான் ஆன்மிக நேர்மை.”

”இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் சார்”


”உதாரணமாக, சினிமாவில் திரையில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அதனைப் பார்க்கும் ஒருவனிடம் ’அங்கே என்ன இருக்கிறது?’ என்று கேட்டால் படம் இருக்கிறது என்று சொல்வான். அதாவது வண்ணமயமான சலன உருவங்கள் அங்கே இருக்கின்றன என்பது அவன் கண்ணால் காணும் காட்சியை வைத்து அவன் சொல்வது. ஆனால் உண்மையில் அங்கே இருப்பது வெள்ளை நிறத் திரை மட்டுமே. அவன் காணும் சகல கோலங்களும் அந்தத் திரையில்தான் தெரிகின்றன. திரை இல்லையென்றால் அவை இல்லை. ஆனால் அவையெல்லாம் மறைந்த பின்பும் திரை இருக்கும். வெள்ளைத் திரை அவற்றைச் சார்ந்து இல்லை. ஆனால் அவை
வெள்ளைத் திரையைச் சார்ந்து இருக்கின்றன. அல்லாஹ் சுயமாக இருக்கிறான். சிருஷ்டிகள் அவனைச் சார்ந்து இருக்கின்றன. சிருஷ்டிகள் எல்லாம் மறைந்து போன பிறகு அவன் மட்டுமே இருப்பான்.
“அதன் மீதுள்ள அனைத்தும் அழிந்துவிடும்.
வல்லமையும் சங்கையுமுள்ள உம் ரட்சகனின்
திருமுகம் (உள்ளமை) மட்டுமே நிலைக்கும்
(குல்லு மன் அலைஹா ஃபான்
வ யப்கா வஜ்ஹு றப்பிக துல்ஜலாலி வல் இக்ராம்)”
[55:26,27]

வண்ணக் கோலங்கள் காட்டும் படம் தெரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் உண்மையில் இருப்பது திரைதான். சர்வகோடி சிருஷ்டிகள் தெரிந்து கொண்டிருக்கும் நிலையிலும் உண்மையில் இருப்பது இறைவன் மட்டும்தான். ‘படம் தெரிகிறது. திரை இருக்கிறது. திரையில்தான் படம் தெரிகிறது’ என்று ஒருவன் சொன்னால் அதில் தவறில்லை அல்லவா? ‘சிருஷ்டி தெரிகிறது. அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ்வில்தான் சிருஷ்டிகள் தெரிகின்றன’ என்று ஒருவன் சொன்னால் அதுதான் ஆன்மிக நேர்மை. (பிலா தஷ்பீஹ).

“இறைநிராகரிப்பாளர்களின் செயல்கள்
பாலையின் கானல் நீரைப் போன்றதாகும்.
தண்ணீர் என்று அதனை
எண்ணிக்கொள்கின்றான்.
இறுதியில் அவன் அங்கு வரும்போது
எந்தப் பொருளையும் பெற்றுக்கொள்ள மாட்டான்
அங்கு அல்லாஹ்வைப் பெற்றுக்கொள்வான்.”
(அல்லதீன கஃபரூ அஃமாலுஹும் கசராபின் பிகீஅத்தின் யஹ்சபுஹுழ் ழம்ஆனு மாஅன். ஹத்தா இதா ஜாஅஹு லம் யஜித்ஹு ஷைஅன் வ வஜதல்லாஹ இந்தஹு – 24:39)

அஞ்ஞானிகள் திரையில் பிரதிபலிக்கும் சலனப்படங்களில் மனதைப் பரிகொடுத்து உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிரிக்கிறார்கள், அழுகிறார்கள், கோபப்படுகிறார்கள், துக்கப்படுகிறார்கள் இன்னும் என்னென்னவோ ஆகிறார்கள். மெய்ஞ்ஞானிகள் தங்கள் அகக்கண்ணால் திரையைக் காண்கிறார்கள். அதில் பிரதிபலிக்கும் படத்தின் சலனங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை. திரை என்றும் மாறாமல் அப்படியே இருப்பதை அவர்கள் அறிகின்றார்கள். தன் ரூபமே ஒரு படம்தான் என்றும் அது பிரதிபலித்துக்கொண்டிருப்பதே இறைவன் என்னும் திரையில்தான் என்றும் அவர்கள் காண்கிறார்கள். உள்ளமையைப் பொருத்து, படத்தில் திரையைத் தவிர வேறு எதுவும் இல்லை. உள்ளமையைப் பொருத்து, சிருஷ்டிகளில் இறைவனைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை அவர்கள் தெளிவாக அறிகின்றார்கள்.


சூஃபி மகான் ஹழ்றத் ஆமிர் கலீமி ஷாஹ் நூரி அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்:
“அல்லாஹ் மறுமையில் என்னைப் பார்த்து
‘எனக்கு என்ன கொண்டு வந்தாய்?’
என்று கேட்டால் நான் சொல்வேன்,
‘என் இறைவனே!
என்னில் நீயன்றி ஏதுமில்லை!’”

6 comments:

  1. தர்க்கம் இருமுனை கூறான கத்தி என்று சொல்லப்படுவதுண்டு. தாக்குபவனையும் சேர்த்து அது காயப்படுத்தலாம். தர்க்கம் என்பது நம்முடைய வசதிக்காக நாம் ஏற்படுத்திக் கொண்ட சிந்தனை அமைப்புத்தான். அதுவே அறுதியான உண்மையை அறிவதற்கான வழி என்று நினைப்பது சுத்த முட்டாள்தனம்.// தர்க்கம் ஒரு முடிவுக்கு கொண்டுவராது என்பது உண்மைதான். அது ஒரு சமாதானம் மட்டுமே.சமாதானம் தற்காலிகம்தான்.it helps to keep going. ஆனாலும் அது தேவையாயிருக்கிறது. தேவையாயிருப்பது கண்டிப்பாக உண்மை என்று இல்லைதான்.சரியாத்தேன் பேசறேனா?

    ReplyDelete
  2. ‘எனக்கு என்ன கொண்டு வந்தாய்?’
    என்று கேட்டால் நான் சொல்வேன்,
    ‘என் இறைவனே!
    என்னில் நீயன்றி ஏதுமில்லை!’”// class.

    ReplyDelete
  3. திரையை நீக்கி இறையை
    காணும் தவமும் எமக்கு வாய்க்குமோ ?

    ReplyDelete
  4. ”அதில் பிரதிபலிக்கும் படத்தின் சலனங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை.”

    - எங்க ஹஜ்ரத் எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி மௌலவி அவர்கள் சொல்வார்கள், “..மல்லாக் கொட்டை மாதிரி இருக்கணும்..” என்று. இது தான் என் நினைவிற்கு வருகிறது.

    ரூமி (றஹ்) அவர்களின் கவிதையும் நினைவிற்கு வருகிறது

    All is the Beloved and the lover is a veil
    The Beloved is alive and the lover is dead .

    - ரூமி (றஹ்)

    ReplyDelete
  5. சினிமா கட்டம் வரும் வரை அணு, கரு... பௌதிக பாட வகுப்பு!

    சினிமா ஜோர் ! ரசித்தேன் !
    தொடர்ந்து இயக்குங்கள் !

    ReplyDelete
  6. //சூஃபி மகான் ஹழ்றத் ஆமிர் கலீமி ஷாஹ் நூரி அவர்கள் சொல்வதைக் கவனியுங்கள்:
    “அல்லாஹ் மறுமையில் என்னைப் பார்த்து
    ‘எனக்கு என்ன கொண்டு வந்தாய்?’
    என்று கேட்டால் நான் சொல்வேன்,
    ‘என் இறைவனே!
    என்னில் நீயன்றி ஏதுமில்லை!’”//

    "தந்தது எந்தன்னை கொண்டது உன்தன்னை
    சங்கரா! யார்கொலோ சதுரர்?"

    ReplyDelete