Wednesday, October 27, 2010

உருவெளிக் களங்கள் -1

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும்" என்னும் அறிவுரையை நானும் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன செய்வது, பாழாப் போன மனசு எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டேங்குது. சில உருவங்கள் அநியாயத்துக்கு கிச்சு கிச்சு மூட்டும்போது ரெண்டு வார்த்தை சொல்லாமல் இருக்க முடிவதில்லை! "இப்படியெல்லாம் ஒருத்தவங்க உருவத்தப் பாத்து கிண்டலடிக்கிறது தப்புமா... ஆண்டவன் படச்ச உருவமில்லையா அது... கண்ணியமா பாக்கணும்." என்று மனதிற்கு ஆயிரத்தெட்டு தடவை படிச்சு படிச்சு சொல்லியாச்சு. கேக்குற பாடில்லை.

"காணும் பொருள் யாவிலுமே கர்த்தன் தோற்றமே!" என்று என் குருநாதரும் பாடியிருக்கிறார்கள். "அவனே அனைத்து வஸ்துக்களிலும் பிரசன்னமாகியிருக்கிறான்" (34 :47 ) என்னும் திருக்குர்ஆன் வசனமும் என் ஞாபகத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சில நேரங்களில் நிலைமை இதையெல்லாம் மீறிப் போய்விடுகிறது. இப்படி வேதாந்தம் பேசினால் மனம் அதற்கு எதிர் வேதாந்தம் பேசி ஜெயித்துவிடுகிறது!

அதாவது, காணும் பொருள் யாவிலும் இறைவனை 'நோட்டமிடுவது' ஒரு சூபித்துவப் பயிற்சி என்றால், காணும் பொருள் யாவிலும் அவனது வல்லமையைக் காண்பது இன்னொரு விதமான பயிற்சி. இந்தப் பயிற்சியை அப்பியாசம் செய்யும்போதுதான் சில நேரங்களில் மனம் குறளி குதி போடுகிறது. "ஒரு சிறந்த ஓவியன் அழகான ஓவியம் வரைந்தால் பாராட்டுகிறோம், கொடூரமான உருவம் ஒன்றை அவன் வரைந்தால் அதைப் பார்த்து அருவருக்கிறோம் அல்லது பயப்படுகிறோம். இரண்டுமே அவனது ஓவியத்திறமைக்குச் சான்று. சத்தானும்கூட இறைவன் வரைந்த கோரமான ஓவியம்தான். எனவே அவனும் இறைவனின் வல்லமைக்குச் சான்று!" என்று மவ்லானா ரூமி கூறியுள்ளார். என் மனம் இத்தத்துவத்தைக் கொஞ்சம் நீட்டித்துக் கொண்டது. "அதே ஓவியன் ஒரு கார்டூன் சித்திரம் போட்டால் அதைப் பார்த்து நாம் சிரித்து ரசிப்பதில்லையா? இறைவனுக்கு அந்த வல்லமை இல்லை என்று சொன்னால் 'எல்லாம் வல்லவன்' என்று எப்படிக் கூற முடியும்? கார்டூனைப் பார்த்து சிரிப்பது என்பது அதை வரைந்தவனின் திறமையைப் புகழ்வதுதானே? டா வின்சியின் திறமையும் மரியோ மிராண்டாவின் திறமையும் ஒரே ஆளிடம் இருந்தால் அவன் அந்த இருவரைவிடவும் சிறந்த ஓவியன் என்றுதானே சொல்வோம்?" என்ற ரீதியில் என் மனம் வாதங்களை அடுக்கிக் கொண்டே செல்லும்போது என்னால் ஒன்றுமே பேசமுடிவதில்லை.



 மூத்த தமிழறிஞர் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வருகை தந்தார். அவரைப் பார்த்ததும் ஏற்பட்ட முதல் இம்ப்ரஷன், "அடடே! மூக்குப் பொடி விக்கிறவன மாதிரி இருக்கார்!" என்பதுதான். First impression is the best impression என்று வேறு கூறுவார்கள். அவர் எத்தனை சீரியசாகப் பேசினாலும் எனக்குச் சிரிப்பு முட்டிக்கொண்டு வந்தது. 

"ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது" என்பார்கள். பேசிய வாயும் அப்படித்தான். என் நண்பர் ஒருவர் அதை 'நாப் பொழப்பு' என்று அழகான சிலேடையில் கூறுவார். 'பட்டி மன்றம்' என்பதைக் கூட நான் சில நேரங்களில் அப்படி அவதானிப்பேன். இரு அணிகளாகப் பட்டிகள் மாறி மாறிக் குரைக்க கடைசியாக ஒரு பட்டி ஊளையிட்டுத் தீர்ப்பு கூறும் நிகழ்ச்சி! பேசிய வாய்கள் பல ஒய்வு பெற மறுத்து இறுதி மூச்சு வரை இலக்கிய சேவை செய்வேன் என்று மைக்கைக் கைப்பற்றுவதுண்டு. அப்படிப் பற்றிய ஒருவர் மைக்கைப் பிடித்துப் புளிய மரக் கிளையை உலுக்குவது போல் உலுக்கிக் கொண்டிருந்தார். இந்தக் காட்சி என்னை மிகவும் பரவசப் படுத்த, 'சொற்பொழிவு ஆட்டுகிறார்!" என்று சொன்னேன்.



இந்த உளவியல் எப்போது என்னுள் உருவானது என்பதைச் சிந்தித்துப் பார்த்தபோது, எல்லாக் குழந்தைகளுமே தமாஷான உருவங்களைத்தான் முதலில் ரசிக்கப் பழகுகின்றன என்பதைக் கண்டேன். 'தொந்தி மாமா', 'மூக்கு மாமா' என்பன போன்ற பட்டப்பெயர்களைத்தான் குழந்தைகள் மிகவும் எளிதாக நினைவில் வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, அவர்களின் முதல் நண்பர்களான பொம்மைகள்கூட கேலித்தனமான உருவங்கள் கொண்டிருக்கின்றன.டெட்டி  பேர் (TEDDY BEAR ) என்பதே அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் உருவத்தைக் கரடியாக சித்தரித்ததில் இருந்து பிறந்ததே. அந்த உளவியல் கூறுதான் கார்டூன்களை நாம் ரசிப்பதிலும் செயல்படுகிறது. அதுதான் உருவு கண்டும் எள்ளுகிறது! 



சமீபத்தில் ஒரு போஸ்டரில் நடிகர் திலகம் சிவாஜியின் ஒரு படத்தைப் பார்த்தேன். தேங்காய்க் குடுமியைக் கவிழ்த்தது போன்ற தாடியும் கோழி இறகுகளைச் சாய்த்து வைத்தது போன்ற மீசையுடனும் இருந்தார். அதைப் பார்த்த கணத்தில் சிவாஜி, DON QUIXOTE DE LA MANCHA வேடம் போட்டிருக்கிறார் என்று தோன்றியது! அவ்வளவு கச்சிதமாக இருந்தது.  


சில மனிதர்களைப் பார்க்கும்போது அவர்கள் வேற்று கிரகவாசிகளாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது. வேற்று கிரக மனிதர்கள் நம் பூமிக்கு வந்து அவர்களின் வாரிசுகளை உருவாக்கி வளர்த்து ஆட்டு மந்தை போன்ற நம்மை ஆட்டிவைத்து ஆள்கிறார்கள் என்று ஒரு கோட்பாடு உள்ளது. இக்கோட்பாட்டை உலகப் புகழ் பெறச் செய்தவர் ஜெர்மன் நாட்டு நாத்திக அறிஞர் எரிக் வான் டானிகன் (ERIC VON DANIKEN ) என்பவர்.


பிரமிடுகள், CROP CIRCLES என்னும் பயிர் வட்டங்கள், புராணக் குறியீடுகள், தொன்மங்கள், சிலைகள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு அவர் தன் கருத்துக்களை நிறுவ முயன்றுள்ளார். அவருடைய "THE CHARIOTS OF THE GODS " என்னும் நூல் வெளியானபோது பல சர்ச்சைகளை உருவாக்கியது. ஏசு நாதர் வேற்று கிரக ஆணுக்கும் யூதப் பெண்ணுக்கும் பிறந்தவர் என்று அதில் குறிப்பிட்டிருந்தார். வானவர்கள், தேவர்கள் என்றெல்லாம் மதங்கள் குறிப்பிடுபவை வேற்றுகிரக 'மனிதர்'களைத்தான் என்பது அவர் வாதம். இக்கருத்து கிருத்துவ மற்றும் இஸ்லாமிய வட்டங்களில் காட்டமான எதிர்ப்புகளைப் பெற்றது. இந்து மதத்தின் அவதாரங்கள்கூட செமி-ஏலியன்கள் என்பது அவர் பார்வை. ரிஷி கற்றுத்தந்த மந்திரத்தைக் குந்திதேவி ஓதியவுடன் வானிலிருந்து தேரில் இறங்கி வந்த சூரியதேவன் ஒரு வேற்றுகிரக வாசியே என்று அவர் கூறினார். அவனுடைய ஜீன் வேறுமாதிரி இருந்ததால்தான் கர்ணன் உபரி ஸ்கெலிடன் - கவசத்துடன் பிறந்தான் என்று கூறினார்!

வேற்று கிரக வாசிகள் - ஆண்கள் - பூமிக்கு வந்து தனிமையில் இருக்கும் அழகான இளம்பெண்களை வசியம் செய்து அவர்களிடம் தங்கள் பீஜங்களை விதைத்துவிட்டுப் போகும் கதைகள் உலகின் எல்லா இனங்களிலும் காணப்படுவதாக டானிகன் சொல்கிறார். அப்படிப்பட்ட ஒரு கதை மணிமேகலையில் வருகிறது. 'மலர்வனம் புக்க காதை' என்பதற்குள் உள்ள உபகதை அது. சுதமதி என்னும் கன்னி ஒருத்தி அடர்ந்த காட்டுப்பகுதியில் தனியாகச் சென்றுகொண்டிருந்தாள். அது இந்திர விழா காலம். தானிகனின் பாஷையில் சொல்வதென்றால் வேற்று கிரகவாசிகள் அதிகமாக வந்துபோகும் காலம். சுதமதியைக் கண்டு மையல் கொண்ட 'விஞ்சையன்' ஒருவன் விண்கலம் ஒன்றில் விண்ணைத் தாண்டி வருகிறான்! அலேக்! அப்படியே அவளை அள்ளிச் சென்று அந்தரத்தில் வைத்துக் கலவியபின் மீண்டும் மண்ணில் இறக்கிவிட்டுச் சென்று மறைகிறான்.(என்ன கொடும சார் இது?) இந்தக் கதையை வைத்துக்கூட சாத்தனார் 'மலர்வனம் புக்க காதை' என்று தலைப்பிட்டிருப்பார் என்று மறுவாசிப்பு செய்யலாம்.

இப்படி வேற்று கிரக ஆண்கள் வந்து பூமியின் பெண்களுடன் உறவாடுவதுபோல், வேற்று கிரகப் பெண்கள் வந்து பூமியின் ஆண்களுடன் உறவாடுவது உண்டா? என்ற ஐயம் இங்கே எழலாம். அப்படி வருவதாகத் தெரியவில்லை. முதலில் வேற்றுகிரக வாசிகள் என்று இருந்தால் அவர்களில் ஆண் - பெண் பகுப்பு உள்ளதா என்பதே தெரியவில்லை. மேலும் அவர்களின் வாரிசு இங்கே உருவாக வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். நம் வாரிசு 'அங்கே' வேண்டும் என்பதல்ல. ஆனால் வேற்றுகிரக வாசிகள் நம் ஆண்களின் பீஜங்களை எடுத்துக் கொண்ட பதிவுகள் அமெரிக்காவில் நிறைய உண்டு. ஆனால் அது முழுக்க முழுக்க அறிவியல் ஆய்வு போல நடந்துள்ளது. பசுமாட்டில் பால் கறக்கும் கருவியைப்போல் ஒன்றை வைத்துச் சேகரித்துக் கொண்டார்களாம்! ஆறுதலுக்காக வேண்டுமானால் இந்த மோகினிப் பிசாசு போன்ற விஷயங்களை வேற்றுகிரக யுவதிகள் வந்து நம் யுவன்களை மாயம் செய்வதாக எண்ணிக்கொள்ளலாம். பௌர்ணமி அல்லது அமாவாசை இரவு, தென்றல், அடர்ந்த காடு, தனிமை, பூக்களின் மணம் என்று அதற்கென்று தனிச் சூழலும் இருக்கிறது!  



'கறுப்பாடை மனிதர்கள்' என்று ஒரு ஆங்கிலப் படம். MEN IN BLACK . பூமியில் மனித வேடத்தில் திரியும் வேற்றுகிரக வாசிகளைக் கண்டுபிடித்து இரண்டு ரகசிய போலீஸ்காரர்கள் போட்டுத்தள்ளுவதுதான் படத்தின் கதை. அந்தப் போலீச்காரகளின் அலுவலகத்தில் ஒரு நவீன கணிப்பொறியின் திரையில் மனித உருக்கொண்டு உலவும் ஏலியன்களின் வான்டட் லிஸ்ட் இருக்கும். அதில் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலனும் இருப்பார்!



இதையெல்லாம் படித்தும் பார்த்தும் சில  மனிதர்கள் என் கண்களில் ஏலியன்களாகவே  தெரிகிறார்கள். உதாரணமாக, தி.மு.க பேச்சாளர் வெற்றிகொண்டானின் முகத்தை க்ளோஸ்-அப்பில் கண்டபோது அவர் இந்த பூமியில் பிறந்தவர் என்று நம்பவே முடியவில்லை. மென் இன் ப்ளாக்கில் வரும் ஒரு வேற்று கிரகக் குழந்தையைப் போல் தெரிந்தார்! அல்லது, ஆலிஸின் அற்புத உலகத்தில் வரும் பாதாளத்திலிருந்து வெளிவந்துவிட்டவரைப்போல! ஆள் உருவம்தான் அப்படியே தவிர, மனுஷன் பேசுவதற்கு வாயைத் திறந்துவிட்டால் அவர் ஒரு 'பச்சை'த் தமிழர் என்பது தெரிந்துவிடும்!

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களின் தமிழ்ப்பணி மீது எனக்கு எவ்வளவோ மரியாதை இருந்தாலும் புகைப்படத்தில் அவரைக் காணும்போதெல்லாம் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய E.T. THE EXTRA TERRESTRIAL என்னும் படத்தில் வரும் ஏலியன்தான் ஞாபகம் வருகிறது!


(தொடரும்...)



  

1 comment:

  1. வல்லிக்கண்ணனை ஈ டி யுடன் ஒப்பீட்டதுதான் சூப்பர்!

    ReplyDelete