Friday, October 1, 2010

லாடு லபக்குதாஸ்கள்!

ஒரு பதிப்புப் பணிக்காக அச்சகம் ஒன்றில் அமர்ந்திருந்தேன். கணிப்பொறியில் வேறு ஒருவருடைய வடிவமைப்பு வேலை நடந்துகொண்டிருந்தது. ஒரு சேவை சங்கத்தின் சொவநீர் தயாரிப்பு அது. ஒரு குறிப்பிட்ட நபருடைய புகைப்படத்திற்குக் கீழே அவருடைய பெயரைப் போட்டுவிட்டு "முடுக்குநர்" என்று போடும்படி அந்த ஆண்டுமலரை உருவாக்குபவர் கூறினார். அதனைத் தொடர்ந்து அவ்விருவரும் பேசிக்கொண்ட உரையாடலை நான் ரசித்தேன்:
"முடுக்குநரா? அப்படீன்னா என்ன?"
"சும்மாக்  கிடக்கிறவங்கள குத்தி விடறது!"


MOTIVATOR என்னும் ஆங்கிலச் சொல்லைத்தான் தமிழில் முடுக்குநர் என்று போட்டிருக்கிறார்கள். இந்த முடுக்குநர்கள் பொதுவாக மேலாண்மைத் துறையைச் சார்ந்து இயங்குகிறார்கள். மனித வள மேம்பாட்டுத் துறையில் பங்காற்றுகிறார்கள். தொழில் நிறுவனங்களில் அமைப்பு நடத்தை சார்ந்த மன ஊக்கத்தைப் பணியாளர்களிடம் உருவாக்குவதற்காக பணிமனைகள் பயிற்சிகள் என்று உரையாற்றுகிறார்கள். இதில் எனக்கு நேரடி அனுபவம் உண்டு. 


உலகின் முன்னணி முடுக்குநர்கள் என்றும் இந்தியாவின் முன்னணி முடுக்குநர்கள் என்றும் கூறப்படுபவர்களின் நூல்களையும் வீடியோக்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால் முடுக்கப் படுவதற்குப் பதிலாகச் சிடுக்கப்பட்டேன் என்பதை இந்தக் கட்டுரையைப் படித்த பின் நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். அதற்கான காரணங்களைத்தான் இதில் கூறப்போகிறேன்.


உலகப் புகழ் பெற்ற நம் முடுக்குநர்கள், அதாவது இவர்களெல்லாம் 'கார்ப்பரேட் முடுக்குநர்கள்' (காபரே முடுக்குநர்கள் என்று வாசிக்க வேண்டாம்.), பொதுவாக இலக்கியங்களில் இருந்தும் மத நூல்களில் இருந்தும் மேற்கோள்களை எடுத்துக் கோர்த்தபடிதான் பேசுவார்கள். ஆனால் அவற்றின் நோக்கம் இலக்கியப் பிரக்ஞை தேடும் வாழ்வின் அர்த்தமாகவோ மதங்கள் தேடும் ஞானமாகவோ இருக்காது. அந்தக் கருவிகளை இவர்கள் பயன்படுத்துவது பணம் பண்ணும்போதும் பணம் எண்ணும்போதும் டென்ஷன் ஆகாமல் இருப்பது எப்படி என்று முதலாளிகளுக்குக் கற்றுக்கொடுக்கத்தான்!


உதாரணமாக, உங்கள் மேலதிகாரியைப் பார்க்க அவரால் அழைக்கப்பட்டு அவரின் அறைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள், நீங்கள் டென்ஷன் ஆகக்கூடாது. பதட்டப்படக் கூடாது. உங்கள் நெற்றியில் வியர்க்கக் கூடாது. அந்த ஐந்து நிமிடம் நீங்கள் உங்கள் மேலதிகாரியிடம் ஊக்கத்துடன் பேசவேண்டும். இதுவெல்லாம் சரிதான். ஆனால் இதற்கு உங்கள் முடுக்குநர் உங்களுக்குக் கற்றுத்தரும் வழிமுறை என்னவாக இருக்கும் தெரியுமா? 'ஒரு நிமிட க்ராஷ் பிராணாயாமம்'! நம்புங்கள், புகழ் பெற்ற அந்த முடுக்குநர் இதை விவரித்து லட்சம் பிரதிகள் விற்கும் ஒரு நூலை எழுதிவிடுவார். எம்.பி.ஏ படித்தவர்கள் (எம்பியே படித்தவர்கள் அல்ல!) ஏ.சி அறைகளில் க்ராஷ் பிராணாயாமம் செய்துவிட்டால் போதும், பதஞ்சலி முனிவரின் ஆத்மா சாந்தி அடைந்துவிடும்!


மேலாண்மைத்துறை மாணவர்களால் சிலாகித்துப் படிக்கப்படும் இந்த முடுக்குனர்களின் நூல்களை வாசித்தபோது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அவை அத்தனைச் சல்லித்தனமாக இருந்தன! எனவே அவர்களை 'மேலாண்மையின் லாடு லபக்குதாஸ்கள்' என்று அழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தேன்! சில லபக்குதாஸ்களைப் பற்றிய கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.


லபக்குதாஸ் #1: ஷிவ் கேரா. இவருடைய புகழ் பெற்ற நூலின் தலைப்பு "YOU CAN WIN" - நீங்கள் ஜெயிக்க முடியும் என்பதாகும். எல்லோருக்குமே வெற்றி பெற ஆசைதான். ஆனால் இயற்கையின் நியதி என்னவென்றால், எல்லோருமே ஜெயிக்க முடியாது என்பதுதான்! நான் ஏன் ஜெயிக்கவேண்டும்? எதை ஜெயிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்கத் தெரியாத சராசரி மனிதனை இந்தத் தலைப்பே மெஸ்மரிசம் செய்துவிடும். இந்தத் தலைப்பைப் படித்தவுடனே உங்கள் உள்ளத்தில் முதல் ஊக்க ஊசியை ஷிவ் கேரா செலுத்திவிட்டார். அடுத்த மாத்திரை நூலின் கேப்ஷன் வாசகத்தில் இருக்கிறது. 



"வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை, அவர்கள் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறார்கள்!" (WINNERS DON'T DO DIFFERENT THINGS, THEY DO THINGS DIFFERENTLY) என்னும் அந்த கேப்ஷன் வாசகத்தின் முடிவில் வட்டமிட்ட ரெஜிஸ்டர் முத்திரையைக் குத்தியிருப்பார். இந்த அதி அற்புத சிந்தனையை யாரும் காப்பி அடித்துவிடக் கூடாதாம்! சொல்லப்போனால் இது ஒரு ரஜினி படத்தின் பன்ச் வசனம் தரத்தில் உள்ள ஒரு ஜிலுஜிலு வாசகம்தான். இதில் விஸ்டம் எதுவுமில்லை. இது ஒரு ஆரம்பநிலைக் கவிஞனுக்குத் தோன்றக் கூடிய வித்தியாசமான சிந்தனை. அவ்வளவுதான். ஆனால் லபக்குதாஸ் இதை ரெஜிஸ்டர் செய்து தன் மனைவியைப் போல பாதுகாக்கிறார்! இதை விடத் தரமான ஆயிரமாயிரம் வரிகள் உலக இலக்கியங்களில் விரவிக் கிடக்கின்றன. இப்படியெல்லாம் ரெஜிஸ்டர் முத்திரை போடுவதென்றால் திருக்குறளில் வரிக்கு வரி போடவேண்டும்.  இத்தனைக்கும் இதற்குள் இருக்கும் ஜென் கதைகள், சூபி கதைகள் போன்றவை வெற்றிபெறும் ஆசை என்பதை எல்லாம் ஒரு மடத்தனம் என்று கூறி விழிப்பைத் தருபவையே! ஓஷோ ஓரிடத்தில் கூறுகிறார், "என்னை யாரும் வெல்ல முடியாது, ஏனெனில் நான் ஏற்கனவே தோற்றுவிட்டேன்!" இதுதான் உண்மையில் இந்த நூலின் கேப்ஷன் வாசகமாக இருக்கவேண்டும்!

"அது என்ன, செயல்களை வித்தியாசமாகச் செய்வது?" என்று நீங்கள் கேட்டால் சூப்பர் மேனைப் பாருங்கள். அவர் எப்படி வித்தியாசமாகக் கால்சட்டைக்குமேல் ஜட்டி அணிந்திருக்கிறார்! ஒருவேளை இதைப் பார்த்துத்தான் ஷிவ் கேரா இன்ஸ்பயர் ஆகியிருப்பார் போலும்!


லபக்குதாஸ் #2: ராபின் ஷர்மா. இவருடைய நூல்களில் மிகவும் புகழ் பெற்றது "THE MONK WHO SOLD HIS FERRARI" (தன் பெர்ராரி காரை விற்ற துறவி ) என்பதாகும். அமெரிக்காவிலிருந்து வாழ்வையே வெறுத்து இந்தியாவிற்கு ஒடி வரும் ஒருவன் மனிதர்கள் நுழைவதே அரிதான இமயமலைச் சாரல்களில் ஏறிச் சென்று அதன் அடர்ந்த வனங்களுக்குள் ஒரு மகா ஞானியை சந்திக்கிறான். அவரிடம் வாழ்வின் சூட்சுமங்களையும் அர்த்தத்தையும் தெரிந்துகொள்கிறான். பிறகு அந்த ஞானத்தைப் பிறருக்கு வழங்க அமெரிக்காவிற்குத் திரும்புகிறான். இமய மலையில் தியானம் செய்யும் ஞானிகளின் அமைதி பொங்கும் வாழ்வு பன்னாட்டு நிறுவன முதலாளிகளுக்கும் அவர்களின் தளபதிகளுக்கும் கிடைக்கவேண்டாமா? கவலைப் படாதீர்கள். அதற்குத்தான் ராபின் ஷர்மா அவதரித்துள்ளார்! இந்த நூலையும் எழுதியுள்ளார். (ஆனால் படத்தில் அவரைப் பார்த்தால் 'A PUNK WHO BOUGHT MANY FERRARI' என்பதைப் போல் இருக்கிறார்!)


 இந்த நாட்டில் பல விசித்திரங்கள் நடக்கின்றன. மகாத்மா காந்தியின் நினைவுப் பொருட்களைச் சாராய முதலாளி விஜய் மல்லய்யா ஏலத்தில் எடுக்கிறார். பணம் ஒன்றுதான் எதையும் முடிவு செய்யும் விஷயம் என்பதை இதன்மூலம் காட்டுகிறார். ராபின் ஷர்மா ஒரு தீவிர காந்தியவாதியாம். ஆள் காந்தியைப் போலவே மொட்டையடித்திருக்கிறார். காந்தியின் ஆன்மீகச் சாராம்சத்தை இவர்தான் விஜய் மல்லய்யா, அம்பானி வகையறாக்களுக்கு எடுத்துச் செல்லும் பணியைச் செய்கிறார். வாழ்க அவர் பணி! 


லபக்குதாஸ் #3: அஜீம் ஜமால். இவருடைய புகழ் பெற்ற நூல்கள்: 'THE CORPORATE SUFI" மற்றும் "ONE MINUTE SUFI" மிகவும் ஆழமான ஆன்மிக வழிமுறையான சூபித்துவத்தில் தோன்றிய ஞானிகளின் பொன்மொழிகளை மேற்கோள்காட்டி ஒரே நிமிடத்தில் பொரித்தேடுக்கப்பட்ட பாப்கான் சூபிகளை இவர் உருவாக்கி வருகிறார். 

ரூமி, அத்தார், கஜ்ஜாலி, இப்னுல் அரபி போன்ற சூபிகளின் கருத்துக்களை ஒரு அம்பானியோ கொம்பானியோ புரிந்துகொள்ளும் வகையில் மாற்றிவிடுகிறார். அதனால் இவருடைய நூல்களில் இந்த சூபி ஞானிகளெல்லாம் ஏதோ பதின்மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோடீஸ்வர  'அந்தரபுரூணர்கள்' (ENTREPRENEUR- தொழில் முனைவோர்) போல் காட்சி தருகிறார்கள்!


லபக்குதாஸ் #4 : சுகபோதானந்தா: கார்ப்பரேட் சாமியார்கள் என்று ஒரு புது இனம் உருவாகியிருப்பதாகச் செய்திகள் வருகிறதே, அதில் ஒரு நபரை இப்போது தொட்டிருக்கிறோம். சுவாமி ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் ஈடு இணையற்றவர் என்று இவருடைய அடிப்பொடி ஒருவன் மிகவும் புகழ்ந்து தள்ளியதன் பேரில் நான் ஒரு வீடியோவைப் பார்த்தேன். சாதாரணமாகத்தான் பேசினார். ஆனால் கல்கி பகவானைப் போல் ரணமாகப் பேசவில்லை. (நித்தியானந்தா ஆங்கிலத்தைக் கொத்துக்கறி போடுவார். அதையே ஜக்கி வாசுதேவ் தமிழுக்குச் செய்வார்!) 


ஆனால் போதானந்தாவிடம் அப்படி என்ன எனக்குப் போதாத குறை என்றால் ஸ்வாமியின் நூல்களைப் படித்து மனம் நொந்ததுதான். அவருடைய "OH LIFE, RELAX PLEASE", "OH MIND, RELAX PLEASE" போன்ற புத்தகங்களைப் படித்தேன். இப்படி ஓ போட்டு ஓ போட்டு கெஞ்சிக்கொண்டிருப்பது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. சுவாமி ஏன் கெஞ்சுகிறார் என்றும் புரியவில்லை. ஒரு நூலின் பின் அட்டையில் அவருடைய நூலை அமிதாப் பச்சன் வெளியிடும் படத்தை தனக்குக் கிடைத்த ஒரு பெருமையாக எண்ணிப் போட்டுள்ளார்.


இது ஒரு ஆன்மீகவாதியின் இலட்சணமாகத் தெரியவில்லை. இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்த வினோத் குமார் தன்னிடம் சீடனாகச் சேர வந்தபோது ஓஷோ அவனிடம் தன் கக்கூசை முதலில் கழுவச் சொன்னாராம். உண்மையான ஞானி ஒருபோதும் ஒரு சினிமா நடிகனைக் கொண்டு  தனக்கு விளம்பரம் தேடமாட்டார்.

ஏன் இப்படி இவர்களையெல்லாம் கிண்டல் செய்கிறேன் என்று நீங்கள் என்னலாம். இவர்களின் சிந்தனைகள் ஒன்று மேம்போக்காக உள்ளன. அல்லது வேறிடத்திலிருந்து சுட்டவையாக உள்ளன. ஓஷோவையும் ஜே.கிருஷ்ணமூர்த்தியையும் படித்துப்பாருங்கள் தெரியும், எந்த அளவு சுடுகிறார்கள் என்று.(ஓஷோ, ஜே.கே போன்றவர்களுக்கு முன் இவர்கள் சர்க்கஸ் பப்பூன்களைப்போல் தெரிகிறார்கள்.) ஆனால் ஒரு இடத்தில்கூட அவர்களைப் பற்றிய ரெபரன்ஸ் இருக்காது. இதற்கு நல்லதொரு உதாரணமாக அடுத்த ஆளைச் சொல்கிறேன்.

லபக்குதாஸ் #5 : PAULO COELHO : இவருடைய பெயரை எப்படி உச்சரிப்பது? நான் பாலோ கோயலோ என்றேன். என் நண்பர் ஒருவர் 'பாவ்லோ சீலோ' என்றார். பத்துப் பேரிடம் கேட்டதில் பல வடிவங்கள் கிடைத்தன. பாலோ சீலோ, பாலு கோலு, பாவ்லா கூல்ஹூ இப்படியாக. எனவே இப்போதைக்கு நாம் இவரை பானாசீனா என்று கண்ணியமாக அழைப்போம்! இவருடைய சிகரச் சாதனை என்று கூறப்படும் நூல் "THE ALCHIMIST" என்பதாகும்.


பிரேசில் நாட்டு எழுத்தாளரான இவரின் நூல்கள் பல மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. நல்ல கதாசிரியர்தான். அவருடைய "THE ALCHEMIST" (ரசவாதி) நாவலைப் படித்தேன். அந்த கதை அப்படியே மவ்லானா ரூமி பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதிய சூபிக் காவியமான 'மஸ்னவி' என்பதிலிருந்து எடுக்கப்பட்டது. இந்தக் கதையை மஸ்னவி ஆங்கில மொழிபெயர்ப்பில் "IN BAGHDAD, DREAMING OF CAIRO: IN CAIRO, DREAMING OF BAGHDAD" என்பதாகப் படித்துள்ளேன்.(Coleman Barks, 'The Essential Rumi', chapter#20, Harper Collins Publishers)
ரூமியின் மஸ்னவி காவியத்தில் வரும் பாக்தாத்- கைரோ என்னும் நகரக் களம் பானாசீனாவின் நாவலில் எகிப்து-ஸ்பெய்ன் என்று மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி கதையின் தீம் அதேதான்! ஆனால் ரூமி பற்றியோ மஸ்னவி பற்றியோ மனுஷன் மூச்சு விடவில்லை. பிராணாயாமத்தின் கும்பக நிலையில் உள்ளேயே இழுத்து வைத்துள்ளார் போலும்!

இத்துடன் லாடு லபக்குதாஸ்களின் பட்டியலை முடித்துக்கொள்வோம். பொதுவாக இன்னொரு விஷயமும் உள்ளது. சில லபக்குதாஸ்கள் உரையாற்றும்போது பின்னணியில் தம்பூராவின் சுருதியை 'ஜொய்ங்ங்...' என்று இழையவிட்டபடியே பேசுகிறார்கள். மனதில் தான் பெரிய சங்கீத வித்துவான் என்று நினைப்போ என்னவோ? ஆனால் இது ஒரு அருமையான உளவியல் உத்தி. அந்த ஜொய்ங்ங்... என்ற ரீங்காரம் பார்வையாளர்களின் மண்டைக்குள் புகுந்து போதையேற்றி அவர்களைக் கட்டிப்போட்டுவிடும். பிறகு லபக்குதாஸ் எதையெல்லாம் ஏற்ற விரும்புகிறாரோ அதையெல்லாம் எளிதாக ஏற்றிவிடுவார்!

7 comments:

  1. நக்கலாக இருந்தாலும் நல்ல பதிவு!

    ReplyDelete
  2. ஜே.கிருஸ்ன மூர்த்தியின் ரேஞ்சில் ஓசோவை சேர்க்கின்றீர்களே. உங்கள் பாஷையில் சொன்னால் ஓசோ தான் லபக்தாஸ்களின் தலைவர் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
  3. ரமீஸ் பிலாலி சார், நீங்க ரொம்ப ரொம்ப படிச்சவங்க போல தெரியுது. ஆங்கிலத்தில் Oozing Brain என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். நக்கல் அல்ல.

    ReplyDelete
  4. Rameez,

    Your control over the language to express your point of views is damn good. But that does not surprise me. What surprises me is your sense of humor which makes your blogs very interesting to read and less offensive. I would say a very different perspective (probably a positive one) about these motivators is very much possible. But, I could not resist agreeing to the most part of it and admit that it is thought provoking. Thanks a lot.

    ReplyDelete
  5. Yes its very simple about these "Motivators". There is a vadivelu joke on this. "How to become a billionair?" -- the answer is you too tell the same to others. Everybody wants to win (against every other) But, we all are listening to them. Thats what we are already doing. Then why to listen to these people?

    ReplyDelete
  6. உங்கள மாதிரி படிச்சவங்களாலதான்,
    இந்த மாதிரி (பணத்தை)'லபக்'(கும்)தாஸ்களை
    அடையாளம் காண முடியும். இன்னும் கண்டு பிடித்து எழுதவும்.

    ReplyDelete
  7. ///ஓஷோ ஓரிடத்தில் கூறுகிறார், "என்னை யாரும் வெல்ல முடியாது, ஏனெனில் நான் ஏற்கனவே தோற்றுவிட்டேன்!" இதுதான் உண்மையில் இந்த நூலின் கேப்ஷன் வாசகமாக இருக்கவேண்டும்!///

    தமிழில் கேட்டது போல் இல்லை? எங்கே?

    பாரதியாரின் 'கண்ணன் என் சீடனில்'

    "போய் வா மகனே!
    தோற்றுவிட்டேனடா!" == குருவான பாரதி!

    சென்ற கண்ணன் கணப்போழ்தில் மனதில் தோன்றினான்.

    குருவை 'மகனே' என்று அழைத்தான். கூறினான்:

    "தோற்றேன் என்ற போதிலே நீ வென்றாய்!"

    ReplyDelete