சிறு வயதிலிருந்தே அடர்ந்த, நீண்ட தாடி வைத்திருப்பவர்கள் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது. ஒரு கிழவனின் நீண்ட தாடியில் பறவைகள் கூடு கட்டிய கதையைப் புத்தகத்தில் படங்களாகவே பார்த்த பால்ய வயதில் அந்தக் கிழவன் என் கனவுகளில் அசையும் பிம்பமாகத் தோன்றியிருக்கிறார். அப்போது தாடியின்மீது தோன்றிய ஈர்ப்பு சாமியார்கள் வரை கொண்டு வந்து விட்டிருக்கவேண்டும். நீண்ட தாடிக்காரர்களைப் பார்ப்பது இப்போதும் பரவசமான ஒரு விஷயம்தான். அதிலும் அந்த தாடி நரைத்துப்போயிருந்தால் அதில் ஒரு கூடுதல் எஃபெக்ட் இருக்கும். நீர்வீழ்ச்சி என்பதைப்போல் அதை 'மயிர்வீழ்ச்சி'... செ! வேண்டாம், 'முடிவீழ்ச்சி' என்று சொல்லலாம்!
ஆன்மீகவாதிகள் எல்லோரும் ஏன் தாடி வைத்திருக்கிறார்கள்? என்று பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ஆன்மீகவாதிகள் மட்டுமல்ல, நாத்திகர்களான கார்ல் மார்க்சும், எங்கல்சும், தந்தை பெரியாரும்கூட நீளமான தாடி வைத்திருந்தார்கள். பொதுவாக சிந்தனையாளர்கள் பல பேர் தாடி வைத்துள்ளார்கள். சோம்பேறிகளும் தாடி வைத்திருப்பார்கள். சோம்பேறித்தனம் எது நிஷ்டை நிலை எது என்று கண்டுபிடிப்பதுதான் சிரமமான காரியமாயிற்றே!
தாடி என்பது ஏதோ ஒரு விதத்தில் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாகவே மக்களின் மனதில் பதிந்துவிட்டது. தாடி வைக்காத ஞானிகளும் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். உதாரணமாக ஜே.கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தர் போன்றவர்கள். ஆனால் தாடியோ மீசையோ இல்லாமல் மொழு மொழுவென்று இருப்பவர்களைக் கண்டால் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அப்புறம் ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னதான் வித்தியாசம்? (அதாவது வெளித் தோற்றத்தில்!).எனவே, குறைந்தபட்சம் ஒரு மீசையாவது இருக்கவேண்டும் என்று தோன்றும். அதனாலேயே சில பாலிவுட் ஹாலிவுட் நடிகர்களைப் பார்க்கும்போது அர்த்தநாரீஸ்வர முகங்களாகத் தெரியும். அதிலும் சில சாமியார்கள் நீண்ட கூந்தலை வேறு வளர்த்துக் கொள்கிறார்கள்!
ஒரு ஆண் நீண்ட கூந்தல் வைத்திருப்பதை முதன் முதலில் அரவிந்தரிடம்தான் ரசித்தேன். ஆனால் மீசையோ தாடியோ வைக்காத ஆண் ஒருவன் கூந்தல் மட்டும் வளர்த்தால் அதை என்னால் ரசிக்கவே முடியவில்லை.
சுவாமி பரமஹம்ச யோகானந்தாவின் புகைப்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவர் ஒரு பெண்ணாகவே எனக்குக் காட்சி தருகிறார்!
சுவாமி நித்யானந்தாவை நான் யோகானந்தாவின் சாயல் உடையவராகவே காண்கிறேன். அவர் பிரபலமாகி வந்துகொண்டிருந்த காலத்திலேயே அவரை நான் 'சுவாமி ஃபெமினானந்தா' (SWAMI FEMINANANDA ) என்றுதான் அழைத்தேன். அவருடைய உருவத்தை வைத்துத்தான் அப்படிக் குறிப்பிட்டேன். வேறு விதத்திலும் அந்தப் பெயர் அவருக்குப் பொருந்திப் போகும் என்று நான் அப்போது நினைத்துப்பார்க்கவில்லை!
தாடி வைப்பது இஸ்லாத்தில் இரண்டாம் நிலைக் கடமையாக, 'சுன்னத்' என்னும் நபிவழியாக உள்ளது. அதனால் பெரும்பாலான முஸ்லிம்கள் தாடி வைக்கிறார்கள். ஃபிரெஞ்சு தாடி, ரமண மகரிஷி டைப் தாடி என்று தொடங்கி ஓஷோ வகை தாடி வரை பல விதங்களில் வைக்கிறார்கள். ரப்பானி தரீக்கா என்னும் சூபி வழியைச் சேர்ந்தவர்கள் கூந்தலும் வளர்த்துக் கொள்கிறார்கள். உலகில் தோன்றிய அனைத்து இறைத்தூதர்களும் தாடி வைத்திருந்தார்கள் என்று நபிகள் நாயகம் கூறியிருப்பதும், அவர்களே தாடி வைத்திருந்ததும் தானும் தாடி வைப்பதற்கு ஒரு முஸ்லிமைத் தூண்டப் போதுமானது. தாடி பற்றிய வேறு நபிமொழிகளும் உள்ளன. தாடியில்தான் சொர்க்கக் கன்னிகள் ஊஞ்சலாடுகிறார்கள் என்று ஒரு ஹதீஸ் கருத்தை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நூற்களில் இன்னும் இதை நான் பார்க்கவில்லை. இது ஒரு குறியீடான கருத்துத்தான். என் மகள் என் தாடியைப் பிடித்து இழுத்தாலே வலி தாங்கமுடியவில்லை. கன்னிகள் பிடித்துத் தொங்கினால் என்னாவது? இதன் உட்கருத்து என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்தேன். தாடியைப் பிடித்துத் தொங்கினாலும் நமக்குத் தெரியாத அளவுக்குச் சொர்க்கக் கன்னிகள் 'லைட்'டானவர்கள் என்பதை அது உணர்த்துவதாக இருக்கலாம். (சிலேடையை கவனிக்க: சொர்க்கக் கன்னிகள் தேஜோமயமானவர்கள் என்பதும் தொனிக்கிறது!)
பள்ளிவாசல்களில் நடைபெறும் பிரசங்கங்களுக்கு நண்பர்களுடன் நான் எப்போதாவது போவதுண்டு. சில பேர் தாடியைக் காட்டமாகக் கோதிக் கொண்டிருப்பார்கள். உள்ளே சிக்கிக் கொண்ட சொர்க்கக் கன்னிகளை உருவி வெளியே வீசுகிறார்கள் என்பது போல் இருக்கும். அழகிய பெண்களை இப்படியா வெறுப்பது? சிலபேர் தங்கள் தாடியை மெதுவாகத் தடவியபடி மெய்மறந்து அமர்ந்திருப்பார்கள். ஒரு முறை என் நண்பன் ஒருவன் சொன்னான், "அவர் சொர்க்கக் கன்னிகளைத் தடவுகிறார்!" என்று. இதற்கு இப்படி ஒரு உளவியல் கோணம் இருக்கும் என்று அதுவரை நான் சிந்தித்ததில்லை! சங்கத் தமிழிடம் வார்த்தையைக் கடன் வாங்கி இதை நாம் 'தாடி தைவரல் SYNDROME' என்று கூறலாம்.
(தொடரும்...)
Subscribe to:
Post Comments (Atom)
///பள்ளிவாசல்களில் நடைபெறும் பிரசங்கங்களுக்கு நண்பர்களுடன் நான் எப்போதாவது போவதுண்டு. சில பேர் தாடியைக் காட்டமாகக் கோதிக் கொண்டிருப்பார்கள். உள்ளே சிக்கிக் கொண்ட சொர்க்கக் கன்னிகளை உருவி வெளியே வீசுகிறார்கள் என்பது போல் இருக்கும். அழகிய பெண்களை இப்படியா வெறுப்பது? சிலபேர் தங்கள் தாடியை மெதுவாகத் தடவியபடி மெய்மறந்து அமர்ந்திருப்பார்கள். ஒரு முறை என் நண்பன் ஒருவன் சொன்னான், "அவர் சொர்க்கக் கன்னிகளைத் தடவுகிறார்!" என்று.///
ReplyDeleteஎன்ன பகடி!என்ன கிண்டல்! என்ன எகத்தாளம்!
இப்படிப்பட்ட நம்பிக்கைகள் எல்லாம் இஸ்லாத்தில் உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.