கவிதை,
நாவல், சிறுகதை, நாடகம் என்று பல வடிவங்களில் இலக்கியம் எழுதப்படுகிறது. அடுத்து
அவற்றின் மீது விமர்சனமும் மதிப்பீடும் எழுகின்றன.
விமர்சனமும்
மதிப்பீடும் காய்தல் உவத்தல் இன்றிச் செய்யப்பட வேண்டும் என்று நியதி இருந்தாலும்
அது முற்றிலும் அவ்வாறு நிகழ்வதில்லை. அதில் தவறொன்றும் இல்லை.
ஓர்
இலக்கியம் எல்லோருக்கும் ஒரே மாதிரி பிடித்திருக்கும் என்று கூற முடியாது.
ஒருவருக்கு இனிக்கும் அதே இலக்கியம் வேறொருவருக்குக் கசக்கிறது. எனவே,
விமர்சனங்களும் மதிப்பீடுகளும் வேறு படுகின்றன.
’இப்போதெல்லாம்
இலக்கியம் படைக்க நிறைய பேர் இருக்கிறார்கள். உருப்படியாக விமர்சனம் எழுதத்தான்
ஆளில்லை. நீங்கள் எழுதுங்கள் சார்’ என்று அவ்வப்போது என்னிடம் கவிஞரும் கதைஞருமான
ஜார்ஜ் ஜோசப் சொல்லி வருகிறார்.
எனக்கு
விமர்சனக் கட்டுரைகள் எழுத நினைத்தாலே அலுப்புத் தட்டுகிறது. அத்துறையில்
காத்திரமாகத் தொடர்ந்து இயங்க என்னால் இயலாது என்றே உணர்கிறேன்.
எனினும்,
தோழர்களுடன் உரையாடும்போது இலக்கியம் குறித்த விமர்சனங்களையும் மதிப்பீடுகளையும்
ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவே செய்கிறோம். மிகப் பெரிய ஆராய்ச்சியின் முடிவை
ஓரிரு வாக்கியங்களில் செறிவாகச் சொல்லிவிடுவது நிம்மதியாகவும் திருப்தியாகவும்
இருக்கிறது.
இதற்கு
முன்னோடி ‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய விடிவெள்ளி’யாய் வந்த மகாகவி பாரதி.
ஈராயிரம் ஆண்டுகளின் இலக்கிய நெடுவெளியை ஆராய்ந்து அவன் உரைத்த தீர்ப்பினைத் தமிழுலகம் ஒப்புகின்றது; அதைத் திருத்தும் தேவை இன்றி அப்படியே இதுகாறும் செப்புகின்றது. அவன் தந்த மதிப்பீடு அனைவரும் அறிந்ததுதான்:
”யாமறிந்த
புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்ஙனுமே பிறந்ததில்லை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை”
’ஊருக்கு
நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்னும் கோட்பாடு கொண்ட பாரதி,
இங்கே தனக்குத் தெரிந்த உண்மையைச் சொல்லியிருக்கிறான். ஆனால், அந்த உண்மையைத்
தெரிந்து கொள்ள அவன் நீண்ட ஆராய்ச்சியைச் செய்திருக்கிறான் என்பது ‘யாமறிந்த
புலவரிலே’ என்பதில் இருந்து தெரிய வருகிறது. அதற்காக, தான் அறிந்த மொழிகளில்
விரிவாக வாசித்து அளந்திருக்கிறான் என்பது “பூமிதனில் யாங்ஙனுமே” என்பதில்
வெளிப்படுகிறது.
இதிலிருந்தே
கவிதைக்கும் அதன் விமர்சனத்துக்குமான கோட்பாடு ஒன்றினை வரைந்து கொள்ள முடிகிறது.
’மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்று கவிதைக்கு பாரதி ஏற்கனவே கோட்பாடு
தந்திருக்கிறான். செறிவும் சுருக்கமும் மந்திர லட்சணம். இவ்வழியில், ‘சூத்திரம்
போல் வேண்டுமடா விமர்சனம்’ என்று ஒரு கோட்பாடு என் எண்ணத்தில் எழுகிறது.
வேதங்களுக்கு
விளக்கவுரை செய்வதற்கும் இந்த நியதியை அவன் சமிக்ஞை காட்டியிருக்கிறான்: “வேதத்
திருவிழியாள், அதில் மிக்க பல்லுரை எனும் கரு மை இட்டாள்.”
’வேதம் விழி
போன்றது. அதற்கான உரை கண்ணுக்குத் தீட்டும் மை போன்றது. மையை அதிகமாக அள்ளி அப்பக்
கூடாது. அது கண்ணுக்கு அழகு நல்காது. அது கண்ணுக்குக் கேடாகிவிடும். மையைக்
குறைவாகவே தீட்ட வேண்டும். அதுபோல், வேதத்துக்கு கொஞ்சமாகவே விளக்கம் உரைக்க
வேண்டும்’ என்று பாரதி கூறுவதாக இதன் உட்பொருளை தி.ந.இராமச்சந்திரன் அவர்கள் பேசிக்
கேட்டிருக்கிறேன்.
மதிப்பீடுகள் உரைத்தால் இப்படி இருக்க வேண்டும்.
சிலர் அதை வார்த்தை விளையாட்டாக மாற்றி விடுவது உண்டு. உடன் என் நினைவுக்கு வரும்
உதாரணங்கள் இரண்டு:
- “தமிழுக்கு கதி கம்பனும்
திருவள்ளுவனும்” [பாரதி சொன்ன மூவரில் இங்கே இளங்கோவுக்கு இடம் இல்லை. காரணம்
’கதி’ என்னும் சொல்லில் இகரம் இல்லை. இது ஓர் இலக்கிய மதிப்பீடா?
அப்படியானால் தமிழுக்கு விதி? என்று கேட்டால் வில்லிப்புத்தூராரும்
திருவள்ளுவரும் என்பார்களா?]
- “மேத்தா புதுக்கவிதையின் தாத்தா”
என்று முன்பெல்லாம் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். பேராசிரியன்மார் கூட
வகுப்பறைகளில் இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். பேச்சுப் போட்டிகளில் கிள்ளைகள்
இதை அப்படியே ஒப்பிக்கின்ற தொல்லைகள் உண்டு. [மு.மேத்தா ஒருவேளை பெண்ணாக
இருந்திருந்தால் ‘புதுக்கவிதையின் ஆத்தா’ என்றிருப்பார்கள்.]
பாரதி சொன்ன பாணியில் நானும் ஃபார்சி
மொழியின் மகாகவிகளுக்கு ஒரு தர வரிசை இட்டிருக்கிறேன்:
“யாமறிந்த
கவிஞரிலே ரூமியைப் போல்
அத்தார் போல் சனாயீ போல்
பூமிதனில்
யாங்ஙனுமே பிறந்ததில்லை
உண்மை
வெறும் புகழ்ச்சியில்லை.”
ஹாஃபிழ் ஷீராஜி, இமாம் சஃ’தி, நிஜாமி
என்று இந்தத் தர வரிசை தொடரும். உலகப் புகழ் பெற்ற உமர் கய்யாம் அதில் மிகவும்
பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பார். இந்த வரிசையை உருவாக்க நான் நூறு நூற்களையாவது
படித்திருக்கிறேன்.
குறிப்பிட்ட ஆளுமை ஒருவரைப் பற்றி
அவரின் சாராம்சத்தையே ஒற்றை வரியில் காட்டுவது போல் மதிப்பீடு செய்து சூத்திரம்
உரைப்பது அத்தனை எளிதல்ல. அந்த விதத்தில் என்னை வியக்க வைத்தவர் பி.டி.மெஹத்தா. இந்தியாவின்
மாபெரும் ஆன்மிக ஆளுமைகள் இருவரைப் பற்றி அவரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அரவிந்தர் பற்றி அவர் சொன்னார்: “ஒரு வலிய இருப்பு” (A mighty existence). ரமண
மகரிஷி பற்றி அவர் சொன்னார்: “ஒரு வலிய இருப்பின்மை” (A mighty non-existence).
தமிழில் இருபதாம் நூற்றாண்டில் பாரதியில்
புதுமை காட்டிய மரபுக் கவிதை என்னவெல்லாம் ஆகி வந்தது என்பது பற்றி க.நா.சு உரைத்த
மதிப்பீடு புருவம் உயர்த்த வைத்தது:
“பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை
பாரதிதாசனில் வேகம் காட்டியது. தேசிக விநாயகம் பிள்ளையின் கவிதையில் எளிமை காட்டியது;
ச.து.சு.யோகியாரின் கவிதையில் அலங்காரம் காட்டியது. நாமக்கல் ராமலிங்கம்
பிள்ளையின் கவிதையில் வசனமேயாகிவிட்டது என்று சொல்லலாம்.”
அதேபோல், சிறுகதை என்னும் இலக்கிய
வகைமை தமிழில் எப்படிப் பரிணமித்து வந்தது என்பது பற்றி பிரபஞ்சன் மதிப்பிட்டு
உரைக்கிறார் இப்படி: “பாரதி முயன்றார், ஐயர் எழுதினார், புதுமைப்பித்தன்
சாதித்தார்.”
தமிழ்ப் புதுக்கவிதையில் மூவர் பற்றிய
என் அவதானத்தை ரத்தினச் சுருக்கமாக நான் குறிப்பிடுவது உண்டு. மரபுக் கவிதையின்
தொடை உத்திகள் மூன்று, அந்த மூவரிடம் ஆளுக்கு ஒன்றாகச் சிறப்படைந்துள்ளன. அதை நான்
இப்படிச் சொல்வேன்: “முரணுக்கு அப்துல் ரகுமான்; மோனைக்கு வைரமுத்து; இயைபுக்கு
வாலி.”
மூன்றுக்கும் சான்றுகள் காட்டட்டுமா?
அ) முரணுக்கு அப்துல் ரகுமான்:
1.
“புத்தகங்களே!
சமர்த்தாய் இருங்கள். குழந்தைகளைக் கிழித்துவிடாதீர்கள்!”
2.
“அவள்
கண்ணைப் பார்க்கிறேன். வெள்ளை வானில் கறுப்பு நிலா.”
3.
”சகுந்தலை
நோக்கினாள். துஷ்யந்தனின் மனதில் மலர் தைத்தது.”
ஆ) மோனைக்கு வைரமுத்து:
1. “நிலாத் தட்டு / நட்சத்திரச் சோறு
/ கைகழுவக் கடல் / கைதுடைக்க மேகம் / கனவின் விழிப்பில் / கக்கத்தில் நீ…. //
மூங்கில் தோட்டம் / மூலிகை வாசம் / பிரம்பு நாற்காலி / பிரபஞ்ச ஞானம் / நிறைந்த
மௌனம் / நீ பாடும் கீதம்.”
2. ”உன்னோடு நானிருந்த / ஒவ்வோர்
மணித்துளியும் / மரணப் படுக்கையிலும் / மறக்காது கண்மணியே! / இன்று நினைத்தாலும் /
இதயம் கனக்கிறதே / அந்த நினைவுகளின் /
அலைவந்து அடிக்கிறதே.”
1. ”வாலில்லை என்பதனால் வாலியாகக்
கூடாதா?
காலில்லை என்பதனால் கடிகாரம் ஓடாதா?”
2.”மாண்புமிகு மழையே! / உனக்கொரு
மடல்! – நீ / எவ்வளவு பெய்தாலும் / ஏற்க வல்லது / கடல் கொண்ட குடல் / ஏற்க ஏலாதது
/ குடல் கொண்ட உடல்! / நீ பெய்யலாம் நூறு அங்குலம் / அன்னணம் நீ பெய்தால் /
என்னணம் பிழைக்கும் எங்குலம்? / … / அளவோடு பெய்தால் உன் பேர் மழை / அளவின்றிப்
பெய்தால் உன் பேர் பிழை /… / மழைக்கே தாகமா? / எமனுக்கு இன்னொரு பெயர் மேகமா?”
ஆளுமைகள் பற்றி ஆளுமைகளே அளந்து
சொல்லும் மதிப்பீடுகள் இந்த வகையில் அமைவது உண்டு. கண்ணதாசனைப் பற்றிக் கவிக்கோ
அப்துல் ரகுமான் செய்த மதிப்பீடு: “மீன் விற்கும் சந்தையில் விண்மீன்கள்
விற்றவர்.” இந்த ஒற்றை வரி கண்ணதாசனை இரவெல்லாம் உறங்க விடவில்லையாம்.
கவிக்கோ அப்துல் ரகுமான் பற்றி
க.பஞ்சாங்கம் ஒரு நூல் எழுதினார். கவிக்கோவின் ஆளுமையைக் காட்டும் சுடர்மிகு
சூத்திரம் ஒன்றை அதன் தலைப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்: “கவிதைக் கனியால் உண்ணப் பட்டவர்.”
அடடா! எவ்வளவு அழகாகச்
சொல்லிவிட்டார்! இதை விளங்க வேண்டும் எனில் “பால்வீதி” என்னும் நூலில் மெழுகுவத்தி
பற்றிக் கவிக்கோ எழுதிய இந்தக் கவிதை தெரிந்திருக்க வேண்டும்:
தீப
மரத்தின்
தீக்கனி உண்ண
விட்டில் வந்தது;
கனியோ
விட்டிலை உண்டது.
அர்த்தமற்ற சொற்கள் ஆயிரம் உரைப்பதை விட அர்த்தமுள்ள சில சொற்களால் பெரிய கருத்துக்களைப் பேசிவிடலாம். மனமே! வார்த்தை வலைகளுக்குள் சிக்காத அர்த்தங்களை நீ சிக்கனச் சொற்களால் சிக்கெனப் பிடி!
No comments:
Post a Comment