Saturday, December 8, 2012

பக்கத்து அறை



அந்த அறைக்குள் இருவர் மட்டுமே இருக்கின்றனர். நாற்பத்தி சொச்சம் வயசு. ஒருவருக்கு மொழு மொழுவென்று முகம். இன்னொருவருக்கு தேன்கூடு தாடியும் சுருளையாய்க் கேசமும்
.
“யோவ் ஒத்தக்கொம்பு. நீ ஏன் இப்புடி ஆயிட்ட தெரியுமா? ரெட்டக்கொம்பா ஆக முடியலியேங்ற ஆதங்கத்துலதான். அப்படி ஆயிருந்தீன்னா கொடியா இருக்கிற நீ கோடியா ஆயிருப்பே இல்லியா?”

இது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்றேழு. ஆண்டு அல்ல. இந்த வசனத்தை துணைக்கால் என்பவர் ஒத்தக்கொம்பு என்பவரைப் பார்த்துச் சொல்வது அத்தினியாவது தடவை. சுப்ரபாதம் போல் தினமும் காலையில் அவ்வசனம் தவறாமல் ஒலிக்கும். அடுத்து நடப்பதும் அன்றாட ரீப்ளேதான். ஒத்தக்கொம்பு அவரை முறைத்துப் பார்ப்பார்.

“டேய் துணைக்காலு, ஒன்ன ஒடிச்சு ஒன்னுமில்லாம ஆக்கி மூலைல ஒக்கார வய்க்கணும்டா. அப்பத்தான் ஒன் எகத்தாளம் அடங்கும்” என்பார்.

சிறிது நேரம் இப்படியான சின்னச் சின்னச் சீண்டல்களில் இரு கெழுதகை நண்பர்களும் சிலாகிப்பார்கள். பிறகு பத்து மணி வாக்கில் காலைச் சிற்றுண்டிக்குப் பின் ஆரம்பமாகும் சீரியஸான ஆராய்ச்சிகள்.

“ஒத்தக்கொம்பண்ணே! இப்ப புதுசா ’விண்வீழ்ச்சி’ன்னு ஜேம்ஸ் பாண்ட் படம் ஒன்னு வந்திருக்காம். தந்தீல போட்டிருக்கானே பாத்தீங்களா?”

“பாத்தேன் பாத்தேன், ஆங்கிலத்துல அதோட பேரு Skyfall-ஆம். அதுக்கென்ன இப்ப? நாம அதெல்லாம் பாக்க முடியுமா? நேத்துத்தானே ரஜினி படம் ஒன்னு காட்னாங்க”

“இல்லீங்கண்ணே, எனக்கு ஒரு யோசன வந்திச்சு. இந்த ஜேம்ஸ்பாண்டு கதைக்கருவெ நம்ம தமிழ்ப்புலவங்கதான் யாராவது உருவாக்கீருக்கணும்னு”

“எப்படிறா துணைக்காலு சொல்ற?”

“ஜேம்ஸ் பாண்டுக்கு ஒரு எண் இருக்குல்ல?”

“சுழி சுழி ஏழு”

“’ன’கார எழுத்த மூனா பிரிச்சுப் பாருங்க. 0 0 7 சுழி சுழி ஏழுன்னு வருதா?”

“அட ஆமா. அப்பிடீன்னா எனக்கு இன்னொன்னு தோணுதுடா துணைக்காலு. ‘ண’கார எழுத்த பிச்சுப் பாரேன், 0 0 0 7 மூனு சுழியும் ஏழும். ஜேம்ஸ்பாண்டுக்கு அடுத்த வாரிசையும் தமிழன் கோடி காட்டியிருக்காண்டா அப்பவே”

“எனக்கும் தோனுச்சுண்ணே இது. நீங்களே சொல்லிட்டீங்க. இப்படியே எல்லா எழுத்தையும் பத்தி ராப்பூரா யோசிச்சிக்கிட்டே கெடந்தேன். தூக்கமே இல்லிண்ணே நாலு நாளா”

”ஆராய்ச்சின்னா அப்படித்தாண்டா இருக்கும். தமிழுக்கடல்ல முழுகி முத்தெடுத்தவுங்கள்லாம் பின்னே லேசாவா இம்பூட்டு விஷயங்களக் கண்டு பிடிச்சாங்க. நாலு நாலா என்ன யோசிச்ச? அதச் சொல்லு”

”அகர முதல எழுத்தெல்லாம்னு திருவள்ளுவரு சொல்றதப் பத்தி ரொம்ப யோசனை ஆயிடுச்சு. அகரத்த தமிழ் எண்கள்ள எட்டுக்குச் சொல்றோம். எட்டோட வடிவம் 8ன்னு ரெண்டு சுழியத்தை ஒன்னுமேல ஒன்னு வச்சாப்ல இருக்கு. ஆனா அகரத்துல பக்கத்துல ஒரு ஒன்னு வேற நிக்கிதே? அப்ப இது 0 0 1 –ன்னு மூனு எண்கள்ல வருது. இல்லின்னா 81ன்னு சொல்லணும். ஆழமா யோசிச்சுப் பாக்குறப்ப இந்த் எழுத்துல ஒரு கணக்கு இருக்குன்னு தோனுது. சுழிய சுழியால வகுத்து ஒன்னு வரணும். 0/0=1. கணக்கு வாத்திக்கிட்ட கேட்டா இது தப்புன்னு சொல்றார். சுழிய சுழியால வகுத்தா சுழிதான் வரும்றாரு. ஆனால் ஒன்று வரும்படியா ஒரு கணக்கு திருவள்ளுவருக்குத் தெரிஞ்சிருக்கும்னு நெனக்கிறேண்ணே”

“துணைக்காலு, இதுல ஒரு பெரீய்ய தத்துவமே இருக்குடா. குணங்குடி மஸ்தான் சாகிபுப் பாட்டெல்லாம் படிச்சிருக்கிறாயாடா நீ?”

“படிச்சிருக்கேண்ணே. சித்தர்கள்ல சேக்கலாம் அவர”

“ஆமாண்டா. அவரு பாட்டு நூல எடுத்து வாசிச்சப்ப முதல் பாட்டே எனக்குத் தலையும் புரியல வாலும் புரியல. அரபி வார்த்தைகளால ஆசிரிய விருத்த இலக்கணம் வச்சு எழுதுன பாட்டு அது. ‘வஸ்துதயத்தின் ஆனந்தம்னு அதுக்குப் பேரு. புரியாம குழம்பிப் போயி திருச்சியில கறீம் புலவர்னு ஒருத்தர் இருந்தார் அவருகிட்ட போய் வெளக்கங் கேட்டேன். சூப்பிகளோட கருத்தாம்டா அது. சூப்பித்துவம்னா நம்ம சித்தர்க மாதிரி முஸ்லிம் மதத்துல உள்ளவங்களாம். மஸ்தான் சாகிபு ஒரு சூப்பியாம். அந்தப் பாட்டு பரம்பொருளே கருணையால இறங்கி வந்து வஸ்துக்களா வெளிப்பட்டிருக்குன்ற கருத்தைச் சொல்லுதாம். அதுக்கு அரபீல தனச்சுழாத்து அப்டீன்னுட்டு ஒரு பேரு சொன்னாரு அவரு. அகர எழுத்து அந்தக் கருத்தைத்தாண்டா சொல்லுது.”

“புரிஞ்சுக்கிற ரொம்ப கஷ்டமா இருக்குண்ணே. இதுக்கும் அகரத்துக்கு என்னா தொடர்பு?”

“சுழிங்கிறது முழுமைடா. ஒரு வட்டம் இல்லியா அது? அதுனால சுழிங்கறது ’நான்’ங்கறத குறிக்கிறதா ஒரு தத்துவம். அரபில சுழிக்கு ஒரு புள்ளிதான் வக்கிறாங்க. முற்றுப்புள்ளி. அதுக்குள்ளயே எல்லாம் அடக்கம்னு. ஒன்றுங்கறது ஒரு கோடு. மேலருந்து கீழ இழுத்து ஒரு சின்னக் கோடுதான் ஒன்று. அதாவது மேல இருந்த ஒரு புள்ளி, அதாவது ஒரு சுழி, அப்படியே கிழ இறங்கி வந்து இன்னொரு புள்ளியா சுழியா நின்னுடுது. அதுதான் ஒன்னு. பரம்பொருளோட நான்ங்கறதுதான் கீழ வந்து படைப்போட நான்னு ஆயிருக்கு. இதைத்தான் தனச்சுழாத்துன்னு சொல்றாங்க அரபியில. இந்தச் சொல்லும் தமிழ்னு தோடுதுடா துணைக்காலு. தான் என்னும் சுழியின் இறக்கம்ங்கறதான் தனச்சுழாத்துன்னு சொல்றாங்க போல. இப்ப அகரம் இதத்தான் சொல்லுது. இரண்டு சுழிகள் மேலும் கீழுமா. அப்புறம் ஒரு ஒன்று”

“ஆகா ஆகா, இப்ப புரியுதுண்ணே. ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ன்னு முழுக் குறளுக்கும் இப்படி ஒரு வெளக்கம் இருக்குங்கறத இதுவரைக்கும் யாருமே சொல்லலியேண்ணே. எப்படீங்கண்ணே?”

“சரிடா தம்பீ, கண்ணைத் தொடச்சுக்க. அடுத்த எழுத்து ’ஆ’ங்கறதோட வடிவத்தைப் பாரு. உலகமெல்லாம் அழிஞ்சு மீண்டும் பரம்பொருள்தான் இருக்கும்ங்கற தத்துவத்தைச் சொல்லுது அந்த வாலும் சுழியும். வேற என்னல்லாம் உனக்குத் தோனுச்சு சொல்லு”

“அண்ணே இந்த ’இ’ய்ங்கற எழுத்தப் பாத்தா ஒரே சிரிப்பா இருக்குண்ணே. ஒரு தடிப்பய சம்மணம் போட்டுக்கிட்டுச் சாப்பாட்டுப் பந்தியில உட்காந்து தலையில நார்த்துண்ட போட்டுக்கிட்டிருக்கான்னு தோனுது”

##(@$#()$)(#%%__(U@($)(@$@@#_$(#%___*&%&**** - இருவருக்கும் ஒரே சிரிப்பாச்சியா இருக்கு.

“டேய் நீ ஆழமா சிந்திக்காம இப்படிக் கிண்டலா பண்ற. இந்த ’ஈ’ங்கற எழுத்திருக்கே அதுதாண்டா ஆங்கிலத்திலயும் Eன்னு ஆகியிருக்கு. என்ன, ஆங்கில Eயை மேஜைய கவுத்துனாப்ல கவுத்திப்போட்டு ஒரு கால ஒடிச்சு ரெண்டு வெளையாட்டுப் பிள்ளைங்க அதுக்கடீல ஒளிஞ்சிருக்காங்க. ஒன்னையும் என்னையும் மாதிரி…”

**$^*&#(&*$((%*@@&@&*(*(##$&$@(@@&$(@(# - மீண்டும் சிரிப்பாச்சி.

“இந்த ’உ’ங்கற எழுத்தப் பாருங்கண்ணே. ஒரு குதிரையோட தலையும் முதுகும் மட்டும் வரஞ்சிருக்காங்க”

“அப்ப ‘ஊ’னாவுக்கு என்ன சொல்றது. ஆங், குதிரை மேல ஜேம்ஸ் பாண்டு உட்காந்திருக்காரு!”

”அய்யோ பின்றீங்கண்ணே, அப்ப எ என்னா சொல்லுது?”

“அது நகைச்சுவை இல்லடா. தமிழுக்கே பெருமையான எழுத்து. பிரிச்சுப் பாரு புரியும். 0வும் 1ன்னும்டா அது. கணிப்பொறிக்கே ஆதாரம் எகரந்தான்”

“சரிங்க தலைவ்வ்வா. இந்த ஏகாரத்தப் பாத்தா எனக்கு எங்க பக்கத்து வீட்டு மாமா ஒருத்தர் நியாபகம் வந்து கண்ணெல்லாம் கலங்கீருதுண்ணே”

“ஏம்ப்பா கண்ணு ஏன்?”

“அவருக்கு ஒத்தக்காலு மட்டும்தான் இருந்திச்சு. அதோட ஓதம் வேற. அவரு நொண்டிக்கிட்டே போற மாதிரி இருக்குண்ணே இந்த எழுத்து”

“அப்புறம் இந்த ஐங்கற எழுத்தப் பாத்தா  இடது கண்ணு இல்லாத யாளி ஒன்னு ஒரு புள்ளையப் பாத்துச் சிரிக்கிறாப்ல இருக்கு”

“இதே மாதிரி இருக்கிற வடமொழி ஜவைப் பாருங்கண்ணே, அந்த யாளி அந்தப் புள்ளகிட்ட செருப்படி வாங்கிக்கிட்டு வாயை வச்சிருக்கிற மாதிரி இருக்கு!”

“அடேய், நல்லா ஆடுறீயேடா நீயும். ஒகரத்தப் பாத்தா அந்த ஒத்தக்கண்ணு யாளி மூஞ்சிய தொங்கப் போட்டுக்கிட்டு ஒக்காந்திருக்கிற மாதிரி இருக்கு”

“கெக்கெக்கெ… ஓகாரத்தப் பாத்தா அந்த ஒத்தக்கண்ணு யாளி ரொம்ப போரடிச்சுக் கொட்டாவி உடுற மாதிரி இரிக்கு”

“அஹ்ஹஹ்ஹஹ்ஹ… ஔகாரத்தப் பாத்தா?”

“யாளிக்குப் பக்கத்துல ஜேம்ஸ் பாண்டு!”

“’ர’ன்ற எழுத்தைப் பாக்குறப்பல்லாம வலது கால பாதி எழந்த பிச்சைக்காரன் ஒருத்தன பாக்குறாப்ல இருக்கு”

“இந்த வ இருக்குல்ல. அதப் பாத்தா குதிரை வாலை வெடச்சிக்கிட்டு நிக்கிறாப்ல இருக்கு”

“இந்த ’ஞ’ங்கற எழுத்து எப்பவுமே ரொம்ப தீவிரமான நெலயிலயே இருக்கு. வம்புக்கு வேட்டிய வரிஞ்சு கட்டுதோன்னு தோனும்”

@#@%^&*&&%%%^&#%$#$%$^%$%^%*(***^^

அப்போது அந்த அறையின் கதவில் ட்ட்ரங்ங்ங்ன்னு ஒரு சப்தம். இருவரும் அலர்ட்டாகிப் பார்க்கிறார்கள். வார்டன்  ஒரு பிரம்பால் கதவின் கம்பிகளில் ஓட்டியிருக்கிறான்.

“ஒத்தக்கொம்பு”

“உள்ளேன் ஐயா”

”துணைக்கால்”

“உள்ளேன் ஐயா”

வார்டன் தன் அருகில் நின்றிருந்தவருடன் பேசிக்கொண்டே அப்பால் நடந்து செல்கிறான்.

“ரெண்டு பேரும் மெத்தப் படிச்ச தமிழய்யாங்க. எப்பப் பாத்தாலும் ஒரே ஆராய்ச்சிதான். தந்தை பெரியார் சொன்னாராம்ல, ரெண்டு தமிழ்ப்புவர்கள் இருக்கிற இடத்துல மூனு போலீஸ்காரன் தேவைப்படும்னு. ஆனா இவுங்க அப்படி இல்லை. நாலு வருஷமா ரொம்ப நெருக்கமான ஃப்ரெண்ட்ஸா இருக்காங்க. சண்டை சச்சரவே வந்ததில்ல இதுவரைக்கும். அடுத்த செல்-ல பாருங்க. ஹிந்திப் பண்டிட் ஒருத்தர் இருக்காரு. ரெண்டு நிமிஷம் நின்னு பேசினீங்க…”

சாவ்தான்.


No comments:

Post a Comment