Monday, December 3, 2012

நஸ்மா


நான்கு தினங்களுக்கு முன் செல்லில் அழைத்தார் சையத். சூஃபித் தத்துவங்கள் மீது மிகுந்த க்ரேஸ் ஆகியிருக்கிறார். இது வெறும் க்ரஷ் அல்ல என்றும் ஜென்யூன் லவ் என்றும் நம்புகிறேன். ’சிவாஜி’ திரைப்படம் ரிலீசாகும் தருணத்தில் அப்போது அதன் ஒரு விளம்பரத்தில் ‘செல்ஃபோன் அடிச்சா; ரிங்கு சிவாஜி அடிச்சா சங்கு’ என்று ஒரு குத்து வசனம் –அதாங்க பன்ச் டயலாக் – போட்டிருந்தார்கள். சமீபத்தில் நடந்த ஒரு புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாணவன் ஒருவன் பிடித்திருந்த அட்டையில் ‘செல்ஃபோன் அடிச்சா ரிங்கு; சிகரெட் அடிச்சா சங்கு’ என்று அதை மிகவும் க்ரியேட்டிவாக மாற்றி எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தேன். (சிவாஜியே சிகரெட் அடிச்சாலும் அவருக்கு சங்குதானாம். இதில் ஒரு நயம் பாருங்கள்: சங்கு எனப்படுவது குரல்வளை. சிகரெட் புகைப்பதால் அந்த இடத்தில்தான் கான்சர் வரும்!) சையத் என்னை செல்ஃபோனில் அழைத்ததை எழுதிக் கொண்டிருக்கும்போது இது ஏன் இப்போது நினைவு வருகிறது? மனித மனம் மிகவும் விசித்திரமானது!

இந்த மன விசித்திரம் என்ன என்று அறிய வேண்டுமெனில் எனக்குத் தோன்றிய இந்த அனுபவத்தைக் கவிக்கோ அப்துல் ரகுமான் ஒரு கட்டுரையாக எழுதினால்தான் உண்டு. சும்மாவெல்லாம் எழுத மாட்டார். இதை ஒரு கவிதையாக்கி அது அவர் கண்ணில் பட்டால் எழுதலாம்.
“கைப்பேசியில் அழைத்தாய் - நான்
சிகரெட்டை நினைத்தேன்”
என்று எழுதினால் ஏதோ அம்ரிதா ப்ரீத்தம் எழுதிய கவிதை போல் இருக்கிறது. இது கவிக்கோவின் கண்ணில் பட்டால் ’கைப்பேசிக் கண்ணீர்’ என்பது போல் தலைப்பு வைத்துக் கட்டுரை எழுதுவார் என்று தோன்றுகிறது.

சூஃபித்துவத்தில் உள்ள ஒரு கோட்பாடு பற்றிக் கேட்கவே சையத் என்னை அழைத்திருந்தார். என் செல்ஃபோனில்தான் ’ஆன்’ செய்தால் செவ்வாய் கிரகவாசிகள் பேசுவதெல்லாம் க்ராஸ் ஆகிக் கேட்கிறதே. சையத் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை.

“#*@*%#@ என்றால் என்ன ரமீஸ்?” என்று என் காதில் விழுகிறது. சரியாகக் கேட்கவில்லை என்று சொன்னேன்
.
“என்ன நீங்க கேள்விப்பட்டதே இல்லையா, @#$!%$#$**” என்கிறது மீண்டும். காதில் குறும்பி அடைத்திருக்கிறதோ என்று மறுபக்கம் வைத்துப் பார்க்கிறேன். அதே பழைய ரேடியோவில் ஆஸ்த்ரேலியா அலைவரிசையைப் பிடிப்பது போன்ற ஓசைகள்.

“ஸ்பெல்லிங் சொல்லுங்கண்ணே” என்றேன். சொன்னார். என் காதில் விழுந்ததை வைத்து “மெஸ்மாவா?” என்றேன். இல்லை, என்று திருத்திச் சொன்னார்.

இப்போது அது என் காதில் ‘நஜ்மா’ என்ற நாமரூபத்தில் விழுந்தது. ஐயோ, இது விவகாரமான ஒரு நாவலை எழுதியவரின் பெயராச்சே. இதற்கும் சூஃபித்துவத்துக்கும் என்ன சம்பந்தம் என்று குழம்பினேன்.The Almond” என்னும் அந்த நாவல் ‘The Sexual Awakening of a Muslim Woman’ என்ற விவரிப்பு வாசகத்துடன் அடையாளம் தெரியாத வட ஆஃப்ரிக்கப் பெண் (?) எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்டு 2004-ல் ஐரோப்பாவில் வெளியிட்ப்பட்டது. ஆசிரியர் இந்நாவலுக்காக வைத்துக்கொண்ட புனைப்பெயர் நஜ்மா (Nedjma – நெஜ்மா என்று நூலில் போட்டிருக்கிறார்கள். துருக்கிய உச்சரிப்பு அப்படி இருக்கும். ஆஃப்ரிக்காவிலும் அப்படியான ஸ்லாங் இருக்கும் போல.) 


மீண்டும் அது அல்ல என்று சொல்லித் திருத்தி உரைத்தார். இப்போது அது எனக்கு ‘நக்மா’ என்று கேட்டது. ‘நக்மா’. இது ஒரு சூஃபிக் கலைச்சொல் என்று சொல்ல முடியாது. ஃபார்ஸி மொழியில் இதற்கு இன்னிசை / இனிய ராகம் என்று பொருள். உருதுவிலும் பயன்படுத்துகிறார்கள். கஸல் பாடல்களிலெல்லாம் அடிக்கடி வருகின்ற ஒர் சொல். பெயராகவும் வைத்துக் கொள்வார்கள் என்பதைத் தமிழர்கள் நன்கறிவார்கள். ஆனால் சூஃபித்துவத்தில் இச்சொல் முக்கியமான எந்தக் கோட்பாட்டிலும் வருவதாகத் தெரியவில்லை. சமாஃ – இசை கேட்டல் என்னும் கோட்பாடு உண்டு. அதற்குள் இது வரக்கூடும் என்று நினைத்தேன்.

பிறகு மீண்டும் சையத் திருத்திச் சொல்லச் சொல்ல ஒருவாராக அவர் சொல்ல வந்த சொல் என் செவித்துளையின் வழி புகுந்து நரம்பின் வழி நடந்து மூளையை முத்தமிட்டது: நஸ்மா!

இனி யாராவது தங்கள் குழந்தைக்குப் பெயர் சொல்லச் சொன்னால் இதைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். முதலில் ‘அஸ்மா’ என்று சொல்ல வேண்டும். ‘இல்லிங்க தம்பி, அதெல்லாம் எங்க ஊட்ல நிறைய பேருக்கு வச்சாச்சு. மாடர்னா சொல்லுங்க” என்று நிச்சயமாகக் கேட்பார்கள். யோசிப்பது போல் பாவ்லா காட்டிவிட்டு ‘நஸ்மா’ என்று சொல்ல வேண்டும். ஆண் பிள்ளையாக இருந்தால் “சையத் நஸ்மா” என்று வைக்கச் சொல்வேன். (’நன்றி மறப்பது நன்றன்று’ என்பது குறள்)

’நஸ்மா’ என்பது சூக்கும உடலைக் குறிப்பதற்கு சூஃபித்துவத்தில் பயன்படுத்தப்படும் சொல். கோவான் அரபி – ஆங்கில அகராதியை எடுத்துப் பீராய்ந்து பார்த்ததில் ந-ச-ம என்னும் வேரில் இச்சொல் உள்ளது தெரிந்தது. மூச்சு, இளங்காற்று ஆகிய அர்த்தங்களுடன் உயிர்வகை, ஆன்மா ஆகிய அர்த்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. நஸ்மா என்னும் சொல்லை முதன் முதலில் கேட்ட போதே “நசீம்” என்னும் சொல்லும் நினைவுக்கு வந்தது. அதன் வேரும் ந-ச-ம என்னும் மூன்றெழுத்துக்கள்தான். நசீம் என்றால் தென்றல் / இளங்காற்று என்று பொருள். நறுமணமான இளங்காற்று என்று சொன்னால் இன்னும் துல்லியம். இதையும் பெயராகச் சூட்டுகிறார்கள், குறிப்பாகப் பெண்களுக்கு. மென்மை, குளுமை மற்றும் நறுமணம் ஆகிய பண்புகள் பெண்மைக்கு உரியவை அல்லவா?
நஸ்மா என்பதற்கு மூச்சு என்னும் அர்த்தத்தை அவதானித்தால் மனிதனின் உடலுக்குள் இறைவன் ஊதிய உயிர்மூச்சு என்னும் குர்ஆனிய செய்தி நினைவுக்கு வருகிறது. ஆன்மா என்னும் அர்த்தமும் இதனுடன் தொடர்புடையதுதான்.

ஆனால் நஸ்மா என்பது உயிரும் (ரூஹ்) அல்ல, மனமும் (நஃப்ஸ்) அல்ல, உடலும் (ஜிஸ்ம்) அல்ல. இது ஒரு தனிப்பட்ட தத்துவம். அதாவது, இது உடல்தான் ஆனால் ஸ்தூலமானது அல்ல. சூக்கும உடல் என்று யோகம் மற்றும் சித்தர் நெறியிலும், Astral Body என்று மீ-உளவியல் (Parapsychology) துறையிலும் சொல்லப் படுவதைத்தான் சூஃபி நெறியில் நஸ்மா என்று சொல்கிறார்கள்.

இந்தச் சூக்கும உடல் ஒளியால் ஆனது. எனவே இது ஒளிதேகம் என்று சொல்லப்படுகிறது. வள்ளலார் இந்த ஒளிதேக நிலையை அடைந்ததாகவும் அவருக்கு நிழல் விழாது என்றும் சொல்லப்படுகிறது. நபிகள் நாயகத்திற்கும் உடல் நிழற்றாது என்று சூஃபிகள் சொல்கின்றனர். ஸ்தூல உடலைச் சூக்கும உடல் மிகைத்துவிடும் போது இந்த நிலை ஏற்படும் என்று விளக்குகின்றனர். இந்த நிலையைத்தான் ’மலக்கானிய்யத்’ என்று பெரும்பாலான சூஃபி நெறிகள் குறிப்பிடுகின்றன எனலாம். அதாவது ஒளியால் படைக்கப்பட்ட மலக்குகள் என்னும் வானவர்களின் தன்மை. ஆனால், நஸ்மா என்னும் சொல் எனக்குப் புதிதாக இருந்தது.

இணையத்தில் தேடித் துழாவிய போது ஷைக் நிஜாம் அல்-ஹக்கானி மற்றும் ஷைக் ஹிஷாம் கப்பானி ஆகிய சூஃபி குருமார்களின் சீடர்களால் நடத்தப்படும் ’நக்‌ஷ்பந்தி முஹிப்பீன்’ என்னும் தளத்தின் கட்டுரைதான் முன்னின்றது. அதில் நஸ்மா என்பது AURA என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் ஔரா என்பது நம் உடலைச் சுற்றிலும் விளிம்புக் கட்டியது போல் தோன்றும் ஒளி. ஒரு மனிதன் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக, உயிர்ப்புடன் இருப்பானோ அந்த அளவுக்கு இந்த ஔராவின் அளவும் அதிகமாகத் தெரியும். இதைப் பார்த்ததும் நஸ்மா பற்றி சையத் சொன்னபோது அது இதுதான் என்று நான் நினைத்தது சரியாகத்தான் இருக்கிறது என்று பட்டது. எனவேதான் நான் சையதிடம் கிர்லியன் ஃபோட்டோகிராஃபி பற்றி கூகிள் செய்து பாருங்கள் என்று சொன்னேன்.
கிர்லியன் ஃபோட்டோகிராஃபி என்பது நிழற்படம் எடுப்பதற்கான ஒரு தொழில்நுட்பம். ருஷ்யாவைச் சேர்ந்த கிர்லியன் என்பவரால் உருவாக்கப்பட்ட இம்முறையில் மின்காந்தப் புலத்தில் ஒரு பொருளை வைத்து நிழற்படம் எடுக்கப்படும். எனவே இதனை   என்றெல்லாம் அழைக்கிறார்கள். இம்முறையில் சூக்கும உடலைப் புகைப்படம் எடுக்க முடியும் என்று கிர்லியன் நம்பினார். ஸ்தூல உடல் போய்விட்ட சில கணங்களுக்கு சூக்கும உடல் அங்கேதான் இருக்கும் என்பதை இம்முறையில் எடுக்கப்படும் புகைப்படங்கள் காட்டுவதாக அவர் சொன்னார். இதற்காக அவர் என்று அழைக்கப்படும் சோதனையைச் செய்துகாட்டினார். ஒரு இலையைக் காம்பிலிருந்து நறுக்கிய உடன் அந்த இடத்தைக் கிர்லியன் முறையில் ஃபோட்டோ எடுத்துக் கழுவிப் பார்க்கும் போது அதில் அந்த இலையின் வடிவத்தில் அதன் ஒளியுடல் தெரிந்தது! பல விஞ்ஞானிகள் இதனை நம்ப மறுத்தாலும் மீ-உளவியல் அறிஞர்களும் ஆன்மிகவாதிகளும் இதனைத் தங்களுக்கான ஆதாரங்களில் ஒன்றாகக் கருதி வருகின்றனர்.

ஹக்கானி சூஃபிகள் HSP – High Sensory Perception என்று ஒரு கோட்பாடு சொல்கிறார்கள். மீப்புலன் அனுபவம் ESP – Extra Sensory Perception என்பதைப் போன்றது அல்லது அதேதான் இது. சாதாரணமாக சராசரி மனிதர்களுக்குப் புலப்படாதவை ஆன்மிக மேனிலை அடைந்தவர்களுக்குப் புலப்படுவதுதான் இப்பெயரால் குறிக்கப்படுகிறது. இது நஸ்மாவைக் கொண்டுதான் அடையப்படுகிறது என்று ஹக்கானி சூஃபிகள் சொல்கின்றனர்.

சூக்கும உடலுக்கு நஸ்மா என்னும் பெயரை கலந்தர் பாபா அவ்லியா என்னும் சூஃபி மகான் சூட்டியதாக அஜீமிய்யா என்னும் சூஃபிப் பள்ளியினர் சொல்கின்றனர். இந்த பாபாவின் இயற்பெயர் சையத் முஹம்மத் அஜீம் பர்ஃகிய்யா. உத்தரப் பிரதேசத்தில் பிறந்த இவருடைய தர்கா தற்போதைய பாகிஸ்தானில் கராச்சி நகரில் உள்ளது. அவரின் வழிவரும் சூஃபிகளும் அங்கிருந்தே செயல்படுகிறார்கள்.

சரியாகச் சொல்வதெனில் சூக்குமவுடல் என்னும் ஒளியுடலின் பிரகாசத்திற்குத்தான் நஸ்மா என்னும் பெயரை கலந்தர் பாபா குறிப்பிடுகிறார். ஸ்தூல உடலுக்கும் ஆன்மாவுக்கும் இடையில் இருக்கும் இந்த நஸ்மா என்னும் ஒளியுடலை விளக்க பாபா தரும் உதாரணம் சினிமா ப்ரொஜக்டர்! திரையரங்கம் ஒன்றைக் கற்பனை செய்து பாருங்கள். ப்ரொஜக்டரிலிருந்து ஒளிக்கற்றைகள் புறப்பட்டுப் பாய்கின்றன. அவை வெள்ளைத் திரையில் மோதும்போதுதான் நம் கண்களுக்குப் புலப்படும் பிம்பங்கள் ஆகின்றன. அதுவரை அவை வெறும் ஒளிக்கற்றையாகத் தென்படுகிறதே அன்றி அதில் உருவங்கள் தெரிவதில்லை. ப்ரொஜக்டரோ உள்ளே மறைந்திருக்கிறது. அது நம் பார்வைக்குத் தெரிவதில்லை. இறைவனின் அறிவுதான் ப்ரொஜக்டர். அதிலிருந்து பாயும் அவனின் அறிவுமயமான ஒளிக்கற்றைதான் நஸ்மா. அது ஸ்தூல தத்துவத்தில் வெளிப்படும்போது பிண்ட உடலாகத் தோற்றம் தருகிறது. இவ்வாறு சொல்லும் பாபா இன்னொரு முக்கியமான குறிப்பையும் தருகிறார். அந்த ஒளிக்கற்றையில் வெவ்வேறு உருவங்களின் தத்துவங்கள் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்ததாகவும் இல்லை, ஒன்றில் ஒன்று கலந்ததாகவும் இல்லை!

கலந்தர் பாபாவின் அற்புதமான விளக்கத்தைப் படிக்கும்போது எனக்கு அதில் மேலும் ஒரு குறிப்பைச் சொல்லத் தோன்றுகிறது. இந்த உவமையின்படி ப்ரொஜக்டரும் ஒளிக்கற்றையும் திரையும் வெவேறு இடத்தில் உள்ளன, அல்லது வெளியின் மூன்று இடங்களில் உள்ளன (3 places in the space). ஆனால் சூஃபிக் கொள்கையின்படி இறைவனும் சூக்குமமும் ஸ்தூலமும் வெவ்வேறு இடங்களில் இல்லை, அதாவது பிரிந்தில்லை. மாறாக இடவெளி என்பதும் ஸ்தூலமும் சூக்குமமும் இறைவனிலேயே இருக்கின்றன.

ஆன்மாவுக்கு இந்த சூக்கும உடலும் ஸ்தூல உடலும் இரண்டு வாகனங்களாக இருக்கின்றன. தேவைப்படும் போது ஸ்தூல உடலை விட்டுவிட்டு ஆன்மா இந்த சூக்கும உடல் என்னும் வாகனத்தில் ஏறிச் செல்ல முடியும் என்பது பொதுவாக ஆன்மிக நெறிகள் அனைத்திலும் உள்ள கருத்து. அப்படிச் செல்லும் ஆன்மா இன்னொரு ஸ்தூல உடலுக்குள் நுழையவும் முடியும். அதாவது, ஒரு ஸ்தூல உடலுக்குள் எத்தனை சூக்கும உடல்கள் வேண்டுமானாலும் குடிகொள்ள முடியும். எனில் பேய் பிடித்துக் கொண்டது, ஜின் பிடித்துக் கொண்டது, ரூஹானீ பிடித்திருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுவது இந்த வகையில் சாத்தியம்தான்.

இந்த இடத்தில் மூன்று உலகங்களை நாம் நினைவில் நிறுத்த வேண்டும். ஒன்று உயிர்களின் உலகம். இதனை சூஃபித்துவம் ஆலமுல் அர்வாஹ் என்று சொல்லும். அடுத்தது பருவுலகம். இதனை சூஃபித்துவம் ‘ஆலமுல் அஜ்ஸாம்’ (உடல்களின் உலகம்) என்றும் ஆலமுல் ஷஹாதத் (காட்சியுலகம்) என்றும் சொல்லும். இந்த இரண்டுக்கும் இடையில் இருக்கும் உலகம் ஆலமுல் பர்ஸக் (திரையுலகம்) என்றும் ஆலமுல் அம்ஸால் (மாதிரிகளின் உலகம்) என்றும் சொல்லப்படும். இந்த இடைப்பட்ட உலகம்தான் கனவில் நாம் செல்லும் உலகம். மரணத்திற்குப் பின் மறுமை நாள் வரை உயிர்கள் உலவும் உலகமும் இதுவே.

உயிருலகில் அனைத்து ஜீவன்களின் உயிர்களும் உள்ளன. குறிப்பாக, மனிதன் ஜின் மலக்கு (வானவர்) ஆகிய மூன்று ஜீவராசிகளின் உயிர்கள் ஆதியில் படைக்கப்பட்டு இருக்கும் இடம் இதுவே. பின் அந்த உயிர்கள் வெளிப்படுகின்றன. இடைப்பட்ட உலகிற்கு உரியவை ஜின்களும் மலக்குகளும். எனவே அவற்றுக்கு திடவுருவங்கள் இல்லை. அதனால்தான் அவை நம் கண்ணுக்குப் புலப்படுவதில்லை. அதாவது அவற்றின் உடல்கள் பருப்பொருட்களால் ஆனவை அல்ல. சூக்கும உடல்கள் கொண்டவை அவை. மலக்கு முழுவதும் ஒளியால் ஆனது. ஜின் என்பது நெருப்பால் ஆனது. (இது நம் கண்ணுக்குத் தெரியும் நெருப்பு அல்ல. ஒருவகை உஷ்ண தத்துவம். அதேபோல் மலக்குகளின் ஒளியும் நம் கண்ணுக்குத் தெரியும் இவ்வுலக ஒளி அல்ல.)

மனிதனின் வெளிப்பாடு இவ்விரண்டையும் தாண்டியது. மனித ஆன்மா சூக்கும உடலை எடுத்துக்கொண்டு வந்து ஸ்தூல உடலையும் வரித்துக்கொண்டது.

ஒரே ஸ்தூல உடலில் பல சூக்கும உடல்கள் வசிக்க முடியும் என்று நான் சொன்னது ஒன்றும் புதுமையான விஷயம் அல்ல. நபிகள் நாயகம் சொன்ன செய்திதான். அதாவது ஒவ்வொரு மனிதனின் தோள்களிலும் இரண்டு வானவர்கள் இருக்கிறார்கள். இதையாவது தோள்களின் ’மீது’ என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் ஒரு வானவர் இருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் ரத்த நாளங்களிலும் ஷைத்தான் ஓடிக்கொண்டிருக்கிறான். கருவறையில் விந்தணுவைச் செலுத்தி அதை முட்டையுடன் இணைய வைப்பதே வானவர்கள்தான். பிரசவத்தின் போதும் குழந்தையை வெளித்தள்ள அங்கே வானவர்கள் இருக்கின்றார்கள். இப்படிப்பட்ட நபிமொழிக் கருத்துக்களை அவதானிக்குங்கால் நான் சொல்வதன் சாத்தியம் விளங்கும்.

என் வாழ்வில் நான் பார்த்த ஒரு பெண்ணின் கதை (கதி) என்னால் மறக்க முடியாதது. எனக்குச் சிற்றன்னை முறை வேண்டும். அவர் பள்ளி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்த சமயம் திடீரென்று ஒருநாள் அவரி ஆளுமையே மாறிவிட்டது. அழகாக இருப்பார். நன்றாகப் படிக்கும் பெண். தோழிகளுடன் சேர்ந்து பக்கத்துத் தெருவில் ட்யூஷனுக்கும் போய்க் கொண்டிருந்தார். வரும்போது இரவு ஒன்பது மணி ஆகிவிடும். கப்றுஸ்தான் (இடுகாடு) காம்பவுண்டை ஒட்டிய சந்தில் நடந்து வரவேண்டியிருந்தது. ஒரு நாள் ட்யூஷன் விட்டு வீட்டுக்கு வந்தது முதல் அளே மாறியிருந்தார். படிப்பு சமையல் என்று எல்லாம் வழக்கம் போல் சாதாரணமாக இருந்தது. ஆனால் திடீரென்று பார்வை உறைந்துவிடும். தூக்கம் இராது. பேச்சு நின்றுவிடும். நாட்கணக்கில் இந்த நிலை நீடிப்பதுண்டு. பிறகு மீண்டும் நார்மல் நிலைக்கு வந்துவிடுவார். மீண்டும் எப்போது அப்படி ஆவார் என்பது அவருக்கே தெரியாது. திருமணம் ஆனால் சரியாகும் என்றார்கள். அந்தப் பேச்சை எடுத்தாலே ஆக்ரோஷம் பொத்துக் கொள்ளும். கேள்விப்படும் மருத்துவர்களிடம் எல்லாம் காட்டியாகிவிட்டது. மாத்திரை மருந்துகளுக்கு லட்சங்கள் செலவாயிற்று. மாற்றமே இல்லை. அப்புறம்தான் மந்திர சிகிச்சைக்கு வந்தார்கள். அவரை ஆண் ரூஹானீ (ஆன்மா) ஒன்று பிடித்துக் கொண்டுள்ளது என்று ஒரு மௌலவி கூறினார். அவராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த நிலையிலேயே அவர் சில ஆண்டுகள் இருந்து மரணித்துவிட்டார்.

இதைச் சொல்லும்போது எனக்கு ஹதீஸ் ஒன்றும் நியாபகம் வருகிறது. ஒரு சிறுவனுக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. தவிர மனநிலையும் பிறழ்ந்தது போல் காணப்பட்டிருக்கிறான். கதறுவதும் அழுவதுமாக இருந்திருக்கிறான். அவனை நபிகள் நாயகத்திடம் கொண்டு வந்தார்கள். நபி அவனைப் பார்த்தார்கள். ‘இவனுக்குள் ஒரு ஷைத்தான் (தீய ஜின்) புகுந்திருக்கிறது’ என்று சொல்லி நபி அவன் மீது ஓதி ஊதினார்கள். அவன் பாதாளம் போல் வாயைப் பிளந்தான். உள்ளே இருந்து கறுப்பு நாய்க்குட்டி போல் ஒன்று வெளியே குதித்து வேகமாக ஓடிவிட்டது! அதுதான் அந்த ஷைத்தான் என்று நபி சொன்னார்கள்.

இது எனக்கு மிகவும் சுவாரஸ்யமான ஹதீஸ் என்பது மட்டுமல்ல இதில் நான் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் இருக்கின்றன என்றே உணர்கிறேன். அதாவது, உருவமற்ற ஜின்னான ஷைத்தான் அதே நிலையில் வெளியேறவில்லை. கறுப்பு நிற நாய்க்குட்டி போன்ற ஸ்தூல உடல் எடுத்து வெளியேறுகிறது. இது நபி (ஸல்) நிகழ்த்திய அற்புதமாகத்தான் இருக்க வேண்டும். அவர்களின் அகக் கோரிக்கைதான் அந்த ஜின்னுக்கு அப்போது அந்த ஸ்தூல உடலை உள்ளமையிலிருந்து பெற்றுத் தந்திருக்க வேண்டும். அல்லது, ஜின்னே அப்படியொரு உருவை நாடி உடல் பெற்று ஓடிற்றா? எனில், ஜின்களுக்குத் தாம் விரும்பும் ஸ்தூல உடலைத் தற்காலிகமாக எடுத்துக் கொள்ளும் சக்தி தரப்பட்டுள்ளதா?

ஜின்னோ, வானவரோ இவ்வுலகில் தோன்றும் போது ஸ்தூல உடல் கொண்டுதான் தோன்றுகிறார்கள் என்பதையும் பார்க்கிறோம். ஏசுநாதரின் அன்னையாம் மரியம் (அலை) அவர்களின் முன் வானவர் தோன்றிய போது மனித இளைஞனின் உடலெடுத்துத்தான் தோன்றினார். திஹ்யத்துல் கல்பி என்னும் நபித்தோழரின் உருவமெடுத்து வந்து வானவர் ஜிப்ரயீல் அவர்கள் நபியைச் சந்தித்துச் செல்வார்கள். இப்படிப் பல செய்திகள் இதைக் காட்டுகின்றன.

கூடு விட்டுக் கூடு பாய்வது என்று சொல்கிறார்களே, அதுவும் இந்த அடிப்படைகளில் ஆன சமாச்சாரம்தான் என்று தோன்றுகிறது. திருமூலரின் கதையில் இந்தக் கோட்பாடு வருகிறது. அவரின் ஆன்மா ஒரு கீதாரியின் உடலுக்குள் ஏறிக்கொள்வதாக அந்தக் கதை சொல்கிறது. சமஸ்க்ருதப் புலவன் அமருசாதகனின் கதையிலும் இந்தக் கூடு விட்டுக் கூடு பாயும் நிகழ்ச்சி வருகிறது. இது பற்றிப் பிறகு எழுதுகிறேன்.

ஆக, நஸ்மா அல்லது சூக்கும உடலானது ஸ்தூல உடலின்றியும் இந்த உலகத்தில் உலா வரும் என்பதும் ஆன்மிக நெறிகளில் நம்பப்படும் ஒன்றாக இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் ASTRAL PROJECTION என்று கூறுகிறார்கள். OBE எனப்படும் OUT of BODY EXPERIENCE என்னும் அனுபவ வகையில் இது ஒரு வகைமையாகக் கருத்ப்படுகிறது. இது சித்தர்கள் பேசும் அட்டமா சித்திகளில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. பரமஹம்ஸ யோகானந்தா, ஓஷோ, மெஹர் பாபா போன்றவர்கள் இந்த ஆஸ்ட்ரல் ப்ரொஜக்‌ஷன் அனுபவத்தைத் தாமாகவே செய்ய வல்லவர்களாய் இருந்தார்கள் என்று பதிவுகள் காட்டுகின்றன. ஓஷோ இதற்காக வகுத்த தியான முறை ஒன்றை செய்துபார்க்கப்போய் ஒரு வாரம் மண்டை ரணமாக வலித்தது. சூக்கும உடல் எழுந்து உறங்கிக் கொண்டிருக்கும் ஸ்தூல உடலைப் பார்க்கும் என்று அவர் அதில் சொல்லியிருந்தார். (மண்டை வலியை வாங்குறதுக்குப் பேசாம கண்ணாடியில பாத்துக்கலாமேப்பா! என்கிறார் அருள்மிகு கடப்போச்சே) தானாக அது நிகழ்வதை விடவும், நினைவிலி நிலையில் (கனவில், மயக்கத்தில் அல்லது போதையில்) நிகழ்வதை விடவும் இது விழிப்பு நிலையில் பிரக்ஞயுடன் நிகழ்வதுதான் ஆன்மிகத்தில் பயன் தரும் என்று மெஹர் பாபா சொல்கிறார்.

கனவு என்பது ஸ்தூல உடலின் உலகிற்கும் சூக்கும உடலின் உலகிற்கும் இடையிலான ஒரு கதவாக உள்ளது. உடலில் இருக்கும் உயிர் / ஆன்மா அந்தக் கதவைத் திறந்துகொண்டுதான் கனவுலகிற்குள் பிரவேசிக்கிறது. அப்படி அது செல்லும்போது சூக்கும உடலான நஸ்மாவில் ஏறித்தான் செல்கிறது. பொதுவாக என் ஸ்தூல உடல் என்ன நிலையில் இருக்கிறதோ அதே நிலையில்தான் என் சூக்கும உடலை நான் கனவில் காண்கிறேன். அதே வயதில் அதே லட்சணத்தில். சில நேரங்களில் மாற்றமாகவும் காண்பதுண்டு. சிறகுகள் உள்ளது போல், கொம்பு வைத்தது போல் அல்லது ஏதேனும் ஒரு பாகம் மட்டும் அளவுகளால் மாறியது போல். (இத்தகைய சூக்கும வடிவங்களைத்தான் தொல் சமயப் புராணங்களில் காண்கிறோம்.) எனவே, ஸ்தூல உடல் எப்படியோ அப்படியேதான் சூக்கும உடல் என்றோ வைஸிவெர்சாவாகவோ சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது. ஸ்தூல உடலில் உண்டாகும் பாதிப்பு சூக்கும உடலையும் பாதித்தாக வேண்டும் என்பதில்லை. எனில் இம்மையில் முடமாக இருப்பவன் மறுமையிலும் முடமாகத்தான் இருப்பான் என்று சொல்ல வேண்டிவரும். அப்படி அல்ல. அதேபோல் சூக்கும உடலில் உண்டாகும் மாற்றங்கள் ஸ்தூல் உடலிலும் பிரதிபலித்துவிடும் என்பதும் நியதி அல்ல. எனில், நான் இப்போது சிறகுகளுடன் இருந்திருப்பேன்!

இவ்விரு உலகங்களுக்கான கதவு பற்றிப் பேசுகையில், அண்மையில் திண்டுக்கல்லில் நடந்த ஒரு பயானில் என் குருநாதர் இந்த சூக்கும உடல் பற்றிச் சொன்ன ஒரு ஹதீஸ் விளக்கம் நினைவுக்கு வருகிறது. ‘தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது ஒருவரைச் சந்திக்கிறோம். பல வருடங்கள் பார்த்திராத அவருடன் உணர்வுப் பூர்வமாக நீங்கள் உரையாடிக் கொண்டே வருகிறீர்கள். அப்போது உங்கள் வீடு வந்துவிட ‘நான் வருகிறேன். பிறகு பார்க்கலாம்’ என்று நீங்கள் சொல்லிவிட்டு உங்கள் வீட்டுக்குள் நுழையும்போது ‘அடடே, நானும் உங்களுடன் வருகிறேன்’ என்று சொல்லி அவரும் நுழைந்துவிட்டால்? அதுபோல், கனவில் நீங்கள் பார்க்கும் ஒருவர், இறந்து போய்விட்டவர்களின் உயிர்கள் சூக்கும உருவத்துடன் அந்த உலகில்தான் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றன, அவரும் உங்களுடன் சேர்ந்து உங்கள் உடலுக்குள் வர எத்தனிக்கிறார்கள். அப்படி வந்துவிட்டால் உங்கள் உடலுக்குள் இரண்டு பேரின் உயிர்கள் இருப்பதாகிவிடும். அப்படி வந்துவிடாமல் கனவுக் கதவின் வாசலில் அல்லாஹ் காவலுக்கு மலக்குகளை (வானவர்களை) வைத்திருக்கிறான். அவர்கள் அந்த உடலுக்கு உரிய சூக்கும உடலை மட்டுமே அனுமதிப்பார்கள். உள்ளே வர எத்தனிக்கும் பிற ஆன்மாக்களைப் பிடித்து மீண்டும் சூக்கும உலகிற்குள் தள்ளிவிடுகிறார்கள்!”

நஸ்மா என்னும் ஒரு சொல் இத்தனைச் சிந்தனைகளைத் தூண்டிவிட்டது. இன்னும் வந்துகொண்டே இருக்கும் போல் தெரிகிறது. கேள்விகளும் பிறந்து கொண்டே இருக்கின்றன. ஒரே நேரத்தில் ஒருவரைப் பலரும் தங்கள் கனவில் காண்கிறார்களே? அப்படியானால் அந்த ஒருவர் ஒரே நேரத்தில் பல சூக்கும உடல்கள் கொண்டு பலருடனும் உறவாடுகிறாரா? இதற்கும் கண்ணன் ஐந்து லட்சம் கோபியர்களுடன் நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ’ராஸலீலா’வுக்கும் தொடர்பு உள்ளதா? திபெத்திய பௌத்தத் துறவிகளிடம் கூட்டுக் கனவு காணும் முறைகள் உள்ளதாமே, அதுவும் இந்த விஷயத்தில் அடங்குமா? என்பது போல் பல வினாக்கள். சுவையான தேடல்களைத் தூண்டும் வினாக்கள்!

4 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
 2. தம்பி ரமீஸ் பிலாலி அவர்களே.......நஜ்மாவில் ஆரம்பித்து ......அடச்சே உங்ககூட சேர்ந்து எனக்கும் நஜ்மா, நாசமா, நக்மா, சிம்ரன்னு என்னவெல்லாமோ எழுத வருது ......உடனடியா ஒரு தம் போட்டாதான் தொடர்ந்து இந்த பின்னூட்டம் எழுதமுடியும் போல ....அட இது எதுக்கு வம்பு? அப்புறம் "செல்போன் அடிச்சா ரிங்கு ...சிகரெட் அடிச்சா சங்குன்னு" மறைமுகமாக குத்து டயலாக் ல குத்துவீங்க..... சரி...விசயத்துக்கு வர்றேன் .....நஷ்மாவில் ஆரம்பித்து, கிர்லியன் போட்டோகிராபி, aura போட்டோகிராபி, astral body, mental body, casual body என்று பயணித்து, பிரம்ம நாடி, முலாதர் சக்கரா, ஸ்வதிச்தான் சக்கரா, மணிப்பூர் சக்கரா, அனஹத் சக்கரா, விஷுத்த சக்கரா, ஆக்ய சக்கரா, சஹாச்த்ரா சக்கரா, கிரிய யோகா, பிராணயாமா, குண்டலினி என எங்கெல்லாமோ ஏறி, இறங்கி இப்போது "pineal gland or pineal body" என்னும் இடத்தில் நிற்க்கிறேன் ......அதென்ன pineal body என்கிறீர்களா? அதென்னவோ நம்ம புத்தி எனும் மாநிலத்தில் stria medullaris என்னும் மலைப்பாங்கான ஒரு பகுதியின் பின்புறம், அதன் அடிவாரத்தில், thalamic bodies என்னும் இரண்டு ஊருகளுக்கு நடுவில் ஒரு அரிசியின் அளவிற்கு சின்னதாக இருக்கிறதாம்....அட எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா? "மேலும் நாம் அவனுடைய பிடரி நரம்பை விட அவனுக்கு வெகு அருகாமையில் இருக்கிறோம்" என்று அல்லாஹ் சொல்வதும் [“And We are nearer to him than his jugular vein (by Our Knowledge)” [Qaaf 50:16], third eye (related to the அஜ்னா சக்கரா) or Eye of God or நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நம்ம பாஸ் என்கிற பாஸ்கிரன் .....ச்சே ....நம்ம பாஸ் என்கிற நக்கீரனை நடிகர் திலகம் ஒரு கண்ணை வைத்து சுட்டெரிக்கிறாரே அதே நெற்றிக்கண்தான் இந்த pineal gland என்கிறார்கள் ....இந்த pineal gland என்கிற அந்த அகக்கண் மூலமாகவே நாம் இறைவனை காண்பதும், ஞானம் பெறுவதும், அவனுடன் நேரடி தொடர்பில் எந்நேரமும் இருக்கவும் கூடும் எனவும், இந்த அகக்கண்ணை திறப்பதற்க்காகவே புத்தனும், நபிகள் பெருமானும் தனிமையில் தியானித்தார்கள் எனவும் சொல்கிறார்கள்....அப்பேர்ப்பட்ட அந்த ஊரில்தான் இப்போது நிற்க்கிறேன் உங்களை போலவே பல கேள்விகளுடன், சில குழப்பங்களுடன், பெரும் ஆச்சர்யங்களுடன்......எல்லாம் வல்ல இறைவன் நாடியிருந்தால் வியப்பு நீங்கி, கேள்விகளுக்கு பதில் கிடைத்து குறுக்கு வழி ஏதும் தெரிந்தால் சுருக்க ஊருக்கு திரும்பி வந்ததும் விரிக்க பேசுகிறேன் (வருவேனா?.....அல்லாஹ் ஒருவனே அறிவான்)

  பின்குறிப்பு:
  -------------
  Unfortunately சூஃபித் தத்துவங்கள் மீது மிகுந்த க்ரேஸ் எல்லாம் இன்னும் வரவில்லை .....நிதானமாக அனுகிக்கொண்டிருக்கிறேன் .....மொட்டு என்று மலர்ந்து, காயாகி, கனிந்து, காதல் வருமோ தெரியலியே....மொட்டு பொட்டுனும் போகலாம் .....மலர்ந்து மரணிக்கவும் செய்யலாம் ....இறைவனே அறிவான்

  ReplyDelete
 3. ஒளியுடல் ஆக்கும் இரகசியம் பாகம் -1
  http://www.google.co.in/intl/ta/inputtools/cloud/try/

  அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
  இவண்

  சாரம் அடிகள்
  94430 87944

  ReplyDelete
 4. மிகவும் தாமதம்தான். இப்போதுதான் படிக்கக் கிடைத்தது. கூட்டுக் கனவு காணும் முறை - இமாம் பூஸிரி (ரலி) அவர்கள் புர்தா பாடிய மறுநாள் தொழுகையின் போது ஒரு நபர் பாடச் சொல்லி கேட்பாரே அதுதானே?

  ReplyDelete