Monday, December 24, 2012

பாண்டிய மன்னனின் டைனோசர் -part 3


இனி “யாளி” நாவல் யாளியைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களுக்கு வருவோம். தும்பிக்கை வைத்த யாளி, நாக்கு நீண்ட யாளி, இறக்கை வைத்த யாளி, நீரில் வாழும் யாளி (மீன் போன்றது) ஆகிய நான்கு வகை யாளிகளின் சிற்பங்கள் கோயில்களில் காணப்படுகின்றன. அவை நான்குமே பலகோடி ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உண்மையில் வாழ்ந்தவையே என்னும் கருத்தினடியாக எழுதப்பட்டுள்ள இந்நாவலில் கதாநாயகர்கள் அந்த யாளிகளில் முதல் இரு வகை யாளிகளை இன்றைய குற்றாலத்திற்கும் களக்காட்டுக்கும் இடையில் உள்ள திருஅழகர்குடி என்னும் ஊரில் உள்ள கோவிலின் பின்புறமுள்ள காட்டிற்குள் நேரில் காண்கிறார்கள்! (இப்படி ஓர் ஊர் உண்மையில் இருக்கிறதா? இருப்பின் அறுபது அடி உயர சுவர் கொண்ட கோயில் உண்மையில் இருக்கிறதா?)

யாளியின் சிலைகள் எல்லாம் கீழே ஒரு யானையை வைத்தே காட்டப் பட்டிருக்கின்றன என்பதை அவதானிக்கும் பெக்மன் அதற்கான காரணத்தைச் சொல்கிறான்: யாளியின் அளவை யானையின் அளவுடன் ஒப்பிட்டுக் காட்டி நாம் அனுமானித்துக் கொள்ளுமாறு விட்டிருக்கிறார்கள். யானையின் உயரம் பத்து அடிகள் எனில் யாளியின் உயரம் நாற்பது அடிகள். (சில கோயில்களில் உள்ள சிலைகளில் யாளி யானைக்குப் பக்கத்தில் நிற்காமல் அதன் முதுகின் மீது ஏறி நிற்கிறது. அதன் பாரத்தைத் தாங்காமல் யானை பின்னங்கால்களை மடித்து அமர்ந்திருக்கிறது.) இங்கே எனக்கொரு சந்தேகம்: யாளி உண்மையிலேயே இருந்தது, அதன் சைஸ் என்ன என்று காட்டுவதற்காகத்தான் இந்தச் சிற்பம் யானைக்கு அருகில் வைத்துச் செதுக்கப்பட்டுள்ளது எனில் தர்க்கத்தை வேறு சிற்பங்களுக்கும் பயன்படுத்தலாகுமா? உதாரணமாக, சில கோயில்களில் குதிரைகள் நிற்பது போன்றும் அவற்றுக்குக் கீழே மனிதர்கள் நிற்பது போன்றும் சிலைகள் உண்டு. அதாவது குதிரையுடைய வயிற்றின் அடிபாகம் மனிதனின் தலைக்கு மேலே இருக்கிறது. எனில், அத்தனை உயராமான குதிரைகள் அந்தக்காலத்தில் இருந்தன என்று சொல்லி அதன் தொல்படிவங்கள் எங்காவது சிக்குகிறதா என்று தேடலாமா?

சிலைகள் எல்லாமே எதார்த்தமாக இருந்தவைதான் என்று சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் ம.த.குமாருக்கு ஏற்பட்டுவிட்டதால், மனிதனும் யாளியும் இணைந்த வடிவிலான சிற்பமும் நிஜமாகவே வாழ்ந்த யாளி-மனிதன் என்னும் வகையினரின் சிற்பமே என்று சொல்கிறார். அவர்கள் ஒருவகைச் சித்தர்கள் என்றும் குறிப்பிடுகிறார். திருஅழகர்குடியின் கோயிலுக்குப் பின்னால் உள்ள யாளிகள் சரணாலயத்திற்குள் ரகசியமாக நுழைந்து சரவணனும் பெக்மனும் சுற்றி வரும்போது ஒரு பழைய கோயில் மண்டபத்திற்குள்ளிருந்து பிரணவ நாதம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் அங்கே ஆள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கே செல்லும் பெக்மன் அந்த மண்டபத்திற்குள் கால்பந்து சைஸில் முட்டைகள் வைக்கப் பட்டிருப்பதைக் காண்கிறான். அப்போது அவன் காணும் ஒரு காட்சி அவன் முதுகெலும்பில் மின்சாரம் பாய்ந்தது போல் உணரச்செய்கிறது: யாளி-மனிதர்! அரைக்கு மேலே மனித உடல், கீழே யாளியுடல். அவர்தான் ப்ரணவ நாதம் எழுப்பி தியானம் செய்தபடி இருக்கிறார். தான் கண்ட காட்சியை பெக்மன் அந்தக் கோயிலின் அறங்காவலர்களிடம் சொல்லும்போது அவர்கள் அதிசயிக்கிறார்கள். அவர்களே அந்த சித்தரைப் பார்த்ததில்லை என்றும் ப்ராப்தமுள்ள ஒருவருக்குத்தான் அந்த வாய்ப்புக் கிடைக்க்மென்றும் சொல்கிறார்கள். யாளியைப் பாதுகாத்து வரும் தலைமுறையினருக்குக் கிடைக்காத பேறு, வெளிநாட்டுக்காரனுக்குக் கிடைத்திருப்பது அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆனால் கதை கச்சிதமாக அமைந்துவிட்டது. மித்தாலஜிக்கலான – தொன்மமான உருவங்களெல்லாம் ப்ராப்தம் உள்ளவர்களின் கண்களுக்கு மட்டுமே காட்சி தரும் என்று அறிவாளால் கோடு போட்டுவிட்ட பின் வாயைத் திறக்க இடமே இல்லை!

சரி, அந்த முட்டைகள். ஜுராஸ்ஸிக் பார்க்கில் வரும் முட்டை போல இது ஏகப்பட்ட முட்டைகள். பறவை போன்ற யாளி ஒன்று உண்டல்லவா? அவற்றின் முட்டைகள். ஆனால் அந்த இனத்தில் இப்போது ஒன்றுகூட உயிருடன் இல்லை.

ஆரம்பத்திலிருந்தே யாளியின் உடலமைப்பை பெக்மன் அலசிக்கொண்டே வருகிறான். யாளிக்கு முன்னிரு கால்களும் / கைகளும் சின்னதாக இருக்கின்றன. எனவே அது எலி அணிலெல்லாம் நிற்பது போல் நிற்கிறது. ஆனால் அதன் பின்னங்கால்கள் நீளமாக உள்ளன. டைனோசர்களுக்கும் இப்படித்தான் இருக்கும். யாளிகள் டைனோசர் இனத்தைச் சேர்ந்தவை என்று நாவலின் பிற்பகுதியில் ஒரு கோட்பாட்டுக்கு வந்து சேர இந்த அவதானிப்புக்கள் உதவுகின்றன. ஆனால் அந்த அவதானிப்புக்கள் போதுமான அறிவியல் பார்வை இன்றி ஒரே தாவாக யூகமாகி முடிகின்றபோது நாவலின் தோல்வியாகிவிடுகிறது. அந்த இடைவெளியை அறிவியல் தரவுகளைத் திரட்டி ஆராய்ந்து பயன்படுத்தி எழுதியிருப்பாரேயானால் அருமையானதொரு நாவலாகியிருக்கும். இதனால்தான் இக்கதை டான் ப்ரவ்னின் நாவலைப் போல் உருவாகியிருக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் சொன்னேன்.

யாளியை முன்வைத்துப் பேசும் ம.த.குமார் இன்று டைனோசர் பற்றி அறிவியல் ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கும் கருத்துக்களுக்கு எதிராக இரண்டு பட்டாசுகளை டமார் டமார் என்று வெடிக்கிறார். அந்த இரண்டு கருத்துக்களை டைனோசர் ஆய்வாளர்கள் கவனிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பட்டாசு நெ.1: டைனோசரின் உருவமாக மேற்கத்திய அறிவியலாளர்கள் வரைந்து தந்திருப்பது தவறானது. டைனோசரின் உண்மையான உருவம் நம் கோயில் சிற்பங்களில் காணப்படும் தும்பிக்கை வைத்த யாளியின் உருவமே.

இதற்கு அவர் சொல்லும் ருஜு என்னவெனில், யானை இறந்த பின் புதைந்து போனால் அதன் துதிக்கையில் எலும்புகள் இல்லாத காரணத்தால் முற்றிலுமாக மக்கிவிடும். எனவே யானையையே பார்த்திராத ஒருவன் பின்னாளில் தோண்டியெடுக்கப்படும் அதன் எலும்புக்கூடுகளை மட்டும் வைத்துக்கொண்டு அதன் உருவத்தைத் தீர்மானிப்பான் எனில் யானையைத் தும்பிக்கை இல்லாத ஒரு விலங்காகத்தான் வரைவான். அப்படித்தான் டைனொசரையும் தும்பிக்கை இல்லாததாக மேற்கின் அறிவியலாளர்கள் என்னும் கேணைகள் ‘தவறாக’ வரைந்திருக்கிறார்கள். அவர்கள் நம் ஊர் யாளிச் சிற்பங்களைப் பார்த்திருப்பார்கள் எனில் இந்தத் தவறைச் செய்திருக்க மாட்டார்கள்!

அது சரி, இன்று பசுமாடு அல்லது எருமை மாட்டின் எலும்புக்கூடு கிடைத்தால், அந்த விலங்கை முன்னர் பார்த்தேயிராத ஒருவன் அதற்கு proboscis என்னும் தும்பிக்கை இருப்பதாகக் கற்பனை செய்தால்தான் சரியா? ஏனெனில் அப்போது நம் யாளியின் உருவம் சார்ந்து சரியாகக் (?) கற்பனை செய்த அறிவாளிகள் ஆகிவிடுவோம் அல்லவா?

பட்டாசு நெ.2: டைனோசர்கள் “reptiles” என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சொல்வதும் தவறு. டைனோசர்கள் எல்லாம் குட்டி ஈன்று பால் புகட்டும் பாலூட்டிகள் (mammals).

இதற்கு அவர் சொல்லும் ருஜு என்னவெனில், அத்தனை உயரமாக இருக்கும் டைனோசர் முட்டை போட்டால் அவ்வளவு உயரத்தில் இருந்து தரையில் விழும் முட்டை ஒடிந்து விடாதா? (தர்க்க நீட்சி: இப்படி எல்லா முட்டைகளும் உடைந்துவிட்டால் டைனோசர் இனமே அழிந்துவிடாதா?)

இந்த வாதத்தைப் பார்த்தவுடன் என்னையும் அறியாமல் “என்னைப் படைத்த றப்பே, நான் என்ன பாவம் செய்தேன்?” என்று அலறிவிட்டேன். ஒரு வாதத்துக்காக ம.த.குமார் சொல்வதை ஏற்றுக்கொண்டாலும் நின்றபடியே முட்டை போட டைனோசர்கள் என்ன கூமுட்டைகளா? நாமும்தான் ஓரளவு உயரமாக இருக்கிறோம். என்ன நின்றுகொண்டேவா… சரி வேண்டாம். கோழி கூட அதன் உயரத்திற்கு அப்படியே முட்டையிட்டால் உடைந்துதான் போகும். அது அமர்ந்து முட்டை ‘இடுவது’ போல் டைனோசர்கள் செய்யாதா என்ன? மேலும் அத்தனை எடையுள்ள டைனோசர் அடை காக்க அமர்ந்தாலும் முட்டை புட்டுக்குமாம். என்னே ஓர் அறிவியல் பார்வை! இதற்குச் சப்பைக்கட்டாக யானையை வேறு இழுக்கிறார். (யாளியுடன் சேர்த்து அதைத்தானே செதுக்கி வைத்திருக்கிறார்கள்.) இந்தக் காரணத்திற்காகத்தான் யானை முட்டை போடாமல் குட்டி போடுகிறதாம்! எனவே, ம.த.குமாரின் லாஜிக்படி இரண்டடிக்கு மேல் உயரம் கொண்ட எந்த உயிரினமும் முட்டை போடாது, குட்டிதான் போடும்!

ஆனால் யாளியில் அவர் இரண்டு வகை இருப்பதாகச் சொல்கிறார். சிறகுகள் வைத்திருக்கும் யாளிகள் பறவை இனத்தின்பாற் பட்டவை. அவை முட்டைதான் போடும். (பறந்துகொண்டே அவசரத்தில் போட்டுவிட்டால் முட்டை உடைந்துவிடுமே ஐயா?) துதிக்கை வைத்த யாளியும் நாக்கு நீண்ட யாளியும் குட்டிதான் போடும்.

உயிரினப் பாகுபாடுகள் பற்றிய ஆழ்ந்த அறிவு இல்லாததால் இப்படிப்பட்ட காமெடி ட்ராக்குகளை அறிவியல் ஆய்வுகள் போல் சொல்லி அதற்கெல்லாம் அத்தாரிட்டி நாங்கள்தான் என்றொரு ’பித்ருக்கள் பஜனை’ பாடியிருக்கிறார் ஆசிரியர். வெளிக்கோலத்தை வைத்து மட்டுமே இவ்விலங்கு இந்த வகையைச் சேர்ந்தது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. தும்பிக்கை வைத்த யாளி என்பது யானை வகையைச் சேர்ந்தது எனில் யானை பன்றி எலி சுண்டெலி போன்றவை எல்லாம் ஒரே வகுப்பைச் சேர்ந்தவை. நாக்கு நீண்ட யாளி என்பது சிங்கம் வகையைச் சேர்ந்தது எனில் சிங்கம் என்பது நாய் வகுப்பைச் சேர்ந்தது. (புலி சிறுத்தை போன்றவை எல்லாம் பூனை வகுப்பைச் சேர்ந்தவை) எனவே யாளி என்பது ஒரு வகையே அல்ல. சிங்கத்திற்குத் துதிக்கை இருந்தது போன்ற ஒரு கற்பனை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. நாக்கு நீண்டு அதை வைத்து இரையை (எருமை மாடுகள்!) சுழற்றியெடுத்து வாய்க்குள் போடும் யாளிகள் எனில் அவற்றை நாம் பச்சோந்தி வகுப்பில் வைத்துத்தான் பார்க்க முடியும். ஆனால், பல்லி பச்சோந்தியெல்லாம் முட்டை போடும் இனம் என்பது இங்கே ம.த.குமாரின் கோட்பாட்டில் இடிக்கும்.

டைனோசர்கள் எல்லாமே பல்லி இனத்தைச் சேர்ந்தவை என்று விஞ்ஞானிகள் முடிவு செய்திருப்பது எந்தெந்த அளவுகோல்களை வைத்து என்று அறிந்துகொள்ளாமல் அவர்கள் ஏதோ அம்புலிமாமா யூகங்களை வைத்துச் சொல்கிறார்கள் என்பது போல் நாமும் நம் பங்குக்கு ஜீபூம்பா யூகங்களை அவிழ்த்து விடக்கூடாது. டைனோசர்களின் முட்டைகள் பல இடங்களில் கிடைத்திருக்கின்றன என்பது அவை ஊர்வன வகையைச் சேர்ந்தவை என்னும் பார்வைக்கு ஒரு வலுவான ஆதாரமாகிறது. இது போல் பல விஷயங்களை மெள்ள மெள்ள அலசிப் பார்த்துத்தான் டைனோசரின் உருவத்தை யூகித்திருக்கிறார்கள். டைனோசர்களுக்குத் தும்பிக்கை இருப்பதாக யூகிக்கக்கூடாது என்பது அறிவியலில் ‘ஹராம்’ ஆக்கப்பட்ட விஷயம் அல்ல. சரியான முகாந்திரம் இருந்தால் அப்படியும் சிந்திப்பார்கள், ஏற்றுக் கொள்வார்கள்.

விலங்குகளின் வெளியுருவத்தை வைத்து மட்டுமே அது இன்ன வகையைச் சேர்ந்தது என்று சொல்ல முடியாது என்றபோது இன்னொரு பாய்ண்ட் ஞாபகம் வந்தது. டைனோசரின் உருவத்தை ஒட்டகச்சிவிங்கி மற்றும் கங்காரூ ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அலசுவார்கள் பெக்மனும் சரவணனும். கங்காரூவிற்கு பின்னங்கால் மட்டும் மிகவும் நீண்டது. அது தாவவும் அமரவும் குனியவும் இடமளிப்பது. ஆனால் யாளிக்கு அப்படியான பின்னங்கால்கள் இல்லை. எனவே அது குனிந்தால் குப்புற வீழ்ந்து மூஞ்சியில் சிராய்த்துக் கொள்ளும். (ஏனெனில் அதன் முன்னங்கால்கள் சிறியவை.) ஆனால் ஒட்டகச்சிவிங்கி அத்தனை உயரம் இருந்தாலும் அதன் நான்கு கால்களும் சம உயரமுடையவை ப்ளஸ் அதன் கழுத்து நீண்டது. எனவேதான் அவ்வளவு உயரமானதும் முன்னங்கால்கள் சிறிதானதும் கங்காரூவின் பின்னங்கால்கள் போல் அமைப்பற்றதுமான யாளிக்கு தும்பிக்கை இருக்கிறது அல்லது பல அடிகள் நீளமான நாக்கு இருக்கிறது. ஆனால் டைனோசர்களுக்கு நீண்ட கழுத்தும் கிடையாது, கங்காரூவினது போன்ற பின்னங்கால்களும் கிடையாது, முன்னங்கால்களும் சிறியன என்னும் போது அவை குப்புற விழாமல் இரை தின்னவும் நீரருந்தவும் ஒரே வழி அவற்றுக்குத் தும்பிக்கையோ நீண்ட நாவோ இருக்க வேண்டும் என்பதுதான். இவை ம.த.குமார் வைக்கும் பார்வைகள். இதனடியாகத்தான் யாளிகள் என்பவை டைனோசர்களே என்றும், அவை பாலூட்டிகள் என்றும் டைனோசர் பற்றி இன்றைய அறிவியலாளர்கள் அளிக்கும் சித்திரங்கள் தவறானவை என்றும் அவர் முடிவுக்கு வருகிறார்.

இந்தக் கங்காரூ ஒப்பீட்டைப் பார்க்கும் போது எனக்குச் சிறிய விலங்கு ஒன்று மனக்கண்ணில் தோன்றியது. அதன் பெயர் கங்காரூ எலி (kangaroo rat). வட அமெரிக்கப் பாலைவனங்களில் இவை வாழ்கின்றன. உண்மையில் இந்த எலிக்கும் கங்காரூவுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. இது எலியில் ஒரு வகைதான். ஆனால் இதன் பின்னங்கால்கள் கங்காரூவின் கால்களைப் போலவே வடிவம் கொண்டுள்ளன. அதனால் இந்த எலியால் அநாயசமாகத் தாவிச் செல்ல முடிகிறது. அனிமல் ப்ளானட்டின் கவுண்ட் டவுனில் தாவும் மிருகங்களில் இதற்கு ஐந்தாவது இடம் கிடைத்தது. தன் உடலின் அளவை விடவும் நாற்பது மடங்கு நீளத்தை ஒரே தாவில் தாவிவிடும். துரத்தும் எதிரிக்கு டிமிக்கி கொடுப்பதற்கு இதனிடம் உள்ள இன்னொரு திறன் என்னவெனில் தாவியபின் தன் வாலை அசைப்பதன்மூலம் அந்தரத்திலேயே திசையை மாற்றிக்கொண்டு வேறு இடத்தில் போய் லேண்டிங் ஆகி அங்கிருந்து மீண்டும் ஒரு தவ்வு தவ்விப் பாய்ந்துவிடும். இதன் இரண்டு கன்னங்களும் இரண்டு பைகளாக (pouches) இருக்கின்றன. பாலைவனச் செடிகளைப் பீறாய்ந்து சேகரிக்கும் ஐநூறு கதிர்மணிகள் வரை இப்பைகளில் குதப்பிக்கொண்டு போய் தன் பொந்தினுள் துப்பி மண் போட்டு மூடி வைத்துக் கொண்டு பசிக்கும் போது சாவகாசமாக எடுத்து எடுத்துச் சாப்பிடுகிறது. ஆனால் கங்காரூ போல் இதற்கு வயிற்றிலே பை கிடையாது. இதற்கு இருப்பது போல் கங்காரூவுக்கு வாயில் பை கிடையாது. இது ஒரு எலி, அவ்வளவே. வேறு வகையைச் சேர்ந்த ஏதாவது விலங்குக்கு இதற்கு இருப்பது போல் வாயில் பை இருக்கக்கூடும். பெலிக்கன் பறவைக்கு அப்படி இருக்கிறது. அதற்காக பெலிக்கன் என்பது பறவையே அல்ல, பொந்தில் வாழும் ஒருவகைப் பாலூட்டி என்று சொல்ல முடியுமா என்ன?

யாளிகள் என்பவை அந்தக் காலத்தில் வாழ்ந்த டைனோசர்கள்தான் என்று முடிவு செய்த பின் இன்னுமொரு ஜிலீர் தகவலை ஊகிக்கிறார் ம.த.குமார். அந்த டைனோசர்களான யாளிகள் லெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்தவை! அப்போது  தமிழரின் ஆதித் தாய்நிலமான லெமூரியாக் கண்டம் என்பது கீழே அண்டார்டிகா வரையும் கிழக்கே அவுஸ்திரேலியா (Australia) வரையிலும் மேற்கே மடாகாஸ்கர் (Madagascar) வரையிலும் பரந்து விரிந்து கிடந்தது. அந்நிலத்தைப் பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தனர். (நாவலில் இதற்கு ஒரு வரைபடமே தந்திருக்கிறார். அந்நிலம் பச்சை நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளதன் பொருள் அத்தனை வளமானது என்று காட்டத்தான். லெமூரியா முஸ்லிம் நாடாக இருந்தது என்று யாராவது இஸ்லாமிய ஆய்வாளர் கண்டறியாமல் இருப்பாராக!) அப்போது பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்தைக் கடல்கோள் (சுனாமி) மூழ்கடித்தபோது தன் மக்களுடன் தப்பித்து வந்த பாண்டிய மன்னன் சில யாளிகளைத் தன்னுடன் கொண்டு வந்து திருஅழகர்குடியில் சரணாலயமும் கோயிலும் கட்டி ரகசியமாக வைத்து, அவன் கட்டிய பல கோயில்களில் அதன் சிலைகளையும் செதுக்கச் செய்தான் என்று கதையை அளந்திருக்கிறார் ம.த.குமார்.

சங்க காலத்தில் இருந்த சேர சோழ பாண்டியர்களின் கட்டடக் கலை வேறு பிற்காலச் சேர சோழ பாண்டியரின் கட்டடக் கலை வேறு என்பதை வசதியாக மறந்துவிட்டு யாளிக் கனவில் மிதந்திருக்கிறார் அவர். குமரிக்கண்டம் மூழ்கிய காலத்தில் கட்டப்பட்ட எந்தக் கோயில் இந்த மண்ணில் இருக்கிறது? அப்படி ஏதேனும் இருந்து அதில் யாளி சிற்பமும் இருந்தால் அவரின் அனுமானத்திற்கு அர்த்தம் இருக்கலாம். அப்படி இல்லை என்பதால் பாண்டிய மன்னனின் டைனோசர் என்பது என் இனிய தமிழன் ஒருவன் எனக்குச் சொல்லிய நல்ல ஜோக்காகவே எஞ்சுகிறது!


ம.த.குமார் தொடாத இன்னொரு கோணமும் இருக்கிறது. சமயவியலை அடிப்படையாகக் கொண்ட நாவல் என்று சொல்லி எழுதும் அவர் அதை அவசியம் தொட்டிருக்க்க வேண்டும். தொடாமல் விட்டது பெரிய குறை என்று சொன்னால் தப்பில்லை. அந்தக் கோணம் ஆன்மிகக் கோணம்! தொன்மம் மட்டுமே ஆன்மிகம் ஆகிவிடாது. யாளி என்னும் தொன்மம் கற்பனை அல்ல வரலாறு என்று நிறுவுவதிலேயே அவரின் முழுக்கவனமும் சென்று விட்டபடியால் ஆன்மிகக் கோணத்தை அவர் தொடவே இல்லை. யாளி என்பது தியானத்தில் கண்டறியப்பட்ட ஓர் ஆழ்மனப் படிமம் என்பதாகப் பார்க்க இடம் இருக்கிறது. சமயப்பிரதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆழ்மனப் படிமங்களை உளவியல் ரீதியாக ஆய்வதிலேயே கார்ல் குஸ்தவ் யுங் தன் வாழ்வின் செம்பாகத்தைக் கழித்தார். எனினும் அவரின் உளவியல் பார்வையில் ஆழ்மனப் படிமங்கள் எல்லாம் மனிதகுலத்தின் தொகுப்பு நினைவிலியில் (collective unconsciousness) பதியப்பட்டுள்ள கற்பனையே ஆகும். தியானத்தில் ஒருவரின் பிரக்ஞை அந்தத் தொகுப்பு நினைவிலியைத் தீண்டியறியும்போது அவரின் நினைவு-மனப் பரப்பிற்கு எழுந்து வரும் ஏதேனும் ஒரு படிமத்தை அவர் காண்கிறார். அதுபோல் காணப்பட்ட ஓர் ஆழ்மனப் படிமமே யாளி என்று கொள்ளலாம்.

இவ்வாறு சொல்லும்போது ஒரு கேள்வி எழக்கூடும். யாளிச் சிலை நூற்றுக்கணக்கில் உள்ளன. அவற்றை நூற்றுக்கணக்கான சிற்பிகள் செதுக்கியிருப்பார்கள். அவர்கள் அனைவருமேவா தியானத்தில் அதனைக் கண்டிருப்பார்கள்? அதற்கு அவசியமில்லை. ஆன்மிக ஆளுமையாக மக்களால் நம்பப்படும் ஒருவர் தியானத்தில் தான் தரிசித்ததாக ஓர் உருவத்தை முன்வைப்பார் எனில் அதை மனிதர்களின் பொது நினைவு மனம் அட்டியின்றி ஏற்றுக்கொண்டுவிடும். உதாரணமாக, ஸ்வாமிஜி நித்தி தான் தியானத்தில் கண்டதாக ஓர் உருவத்தை அவரே வரைந்து காட்டுகிறார் என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை அவர் ட்ராயிங்கில் வீக்காக இருந்து அது ஹம்ப்டி டம்ப்டி போன்ற கேலியான உருவமாக இருந்தாலும்கூட பக்தகோடிகள் அதனைப் புல்லரிப்புடன் ஏற்று லட்சக்கணக்கான பிரதிகள் போட்டுப் பாரெங்கும் பரப்பிவிடுவார்கள். ஆன்மிக மறைவுலகங்கள் என்பவை சிலருக்கே அன்றி ஏறத்தாழ அனைவருக்குமே uncharted territory என்பதால் அதை ஐயுறவோ அல்லது நிராகரிக்கவோ இயலாது. அந்தப் படிமத்தைப் பொய் என்று நிராகரிப்பது அந்த ஆன்மிக ஆளுமையையே நிராகரிப்பதாக ஆகிவிடும். எனவே அந்தப் படிமம் ஒரு mass craze-உடன் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகிவிடும். அப்படித்தான் யாளியும் ஆன்மிக குருமார்கள் தங்கள் ஆழ்மனத்தில் கண்டடைந்த படிமகாக, அவர்களிடமிருந்து ஸ்தபதிகளும் மக்களும் ஏற்றுக்கொண்ட படிமமாக இருக்கக்கூடும்.

கார்ல் குஸ்தவ் யுங்கின் உளவியல் கோணம் ஆன்மிக மற்றும் புராண நூல்களில் இருந்தும் தியான ஆய்வுகளில் இருந்தும் உருவாக்கப்பட்டதுதான். ஆனால் ஆழ்மனப் படிமங்கள் எல்லாம் தமக்கென்று reality (மெய்ம்மை / ஹகீக்கத்) அற்றவை என்று அவர் கருதுகிறார். அவை வெறும் கற்பனைகளே. ஆன்மிக ரீதியாக இந்தக் கோணத்தை இன்னும் முன்னகர்த்திச் சென்றால் வேறொரு பார்வை கிடைக்கிறது. தியானத்தில் ஆழும் பிரக்ஞை இந்தப் படிமங்களைக் கண்டடையும் ’இடம்’, ஆழ்மனப் பரப்பு என்று சொல்லப்படும் அந்த இடம் தன்னளவில் ரியாலிட்டி கொண்ட வேறொரு உலகம் என்று பார்த்தால் எப்படியிருக்கும்? அதாவது மனிதனின் பிரக்ஞை தியானம் என்னும் முறைமையின் வழியே வேறொரு பரிமாணத்தில் உள்ள வேறொரு உலகிற்குச் செல்கிறது. அங்கு காணும் உருவங்கள் அந்த உலகின் பிரஜைகள். அவற்றுக்கு இந்த உலகில் காணும் உயிரினங்களின் உருவங்களுடன் தொடர்பு இருக்கலாம். சற்றே மாறியிருக்கலாம். சில சமயங்களில் இங்குள்ள மாதிரியேவும் இருக்கலாம். இப்படிச் சாத்தியக்கூறுகள் விரியும். ஆக, அந்தப் படிமங்கள் மெய்ம்மை அற்ற வெறும் கற்பனை உருவங்கள் அல்ல.

இந்தக் கோணம் ஏறத்தாழ எல்லா மதங்களிலும் உள்ளது. மேலோகம் கீழுலகம் என்றும் இம்மை மறுமை திரையுலகம் என்றும் அன்ன பிற ரீதியிலும் பேசப்படுபவை இப்போதே இவ்வுலகிற்கு அப்பாலான வேறு பரிமாணத்தில் உள்ள வேறு உலகங்களைத்தான். அவ்வுலகின் பிரஜைகள் இங்கும் இவ்வுலகின் பிரஜைகள் அங்கும் சென்று வர இயலும் என்று மதங்கள் சொல்கின்றன. தேவர்கள் என்பவர்கள் அப்படியானவர்கள்தான். இந்து மதத்தில் ஏறத்தாழ இப்பூமியில் காணலாகும் எல்லா உயிரினத்திற்குமே அப்படியான ஆழ்மனப் படிமம் (archetypes) வரைந்து வைக்கப்பட்டுள்ளன அல்லது வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் யாளியும் ஒன்று.

இதே ரீதியில், இராமன் கிருஷ்ணன் போன்ற ஆன்மிக ஆளுமைகள் இங்கே இவ்வுலகில் மற்ற மனிதர்களைப் போன்ற உருவத்தில்தான் இருந்திருப்பார்கள். ஆனால் தியானத்தின் ஆழத்தில் வேறொரு பரிமாணத்திலான உலகில் அவர்களைக் கண்டவர்கள் அவ்வுலகில் அவர்களுக்குரிய நீல நிறமுடையவர்களாகக் கண்டிருக்கக் கூடும். கிருஷ்ணனுக்குமே கூட ஒற்றை நிறம் சொல்லப்படவில்லை. சில சமயம் நீலம், சில சமயம் பச்சை, சில சமயம் கறுப்பு. இந்நிறங்களின் கலவையும் கூட அவனுக்கு உரியது. ஒருவர் தன் ஆழ்நிலை தியானத்தில் கிருஷ்ணனை மஞ்சள் நிறத்தவனாகவோ ரோஸ் நிறத்தவனாகவோ கண்டதாக அறிவித்தால் இந்து மதம் அவரின் கூற்றை நிராகரிக்காது. அதற்கான சாத்தியக்கூறு உண்டுதான் என்று ஏற்கவே செய்யும்!

இதே கோணத்தில் சிந்தித்துச் செல்லும்போது, பூமிக்கு வரும் வேற்று கிரக வாசிகள் என்று சொல்லப்படுபவர்கள் (சூரிய பகவான் குந்தி தேவியிடம் வந்தது) அவ்வாறு நாம் தியானத்தின் வழி (சில நேரங்களில் நோய்ப்பட்ட நிலையிலான மனப்பிசகு, போதையில் ஏற்படும் மனப்பிசகு – altered states of mind –களில்) எட்டும் அக உலகங்களில் இருந்து இவ்வுலகிற்கு வந்தவர்களாய் இருக்கக்கூடும். சூஃபித்துவத்தில் திரையுலகம் என்று பேசப்படும் வானவர் உலகத்தில் (ஆலமுல் மலக்கூத்) இருந்து இவ்வுலகில் வானவர்கள் தோன்றுவதுண்டு. அப்படி அவர்கள் வரும்போது இவ்வுலகிற்குரிய தோற்றம் கொண்டோ அவர்களின் உலகிற்கு உரிய தோற்றத்திலோ வருவார்கள். நபிமார்களின் முன் ஆஜராகும் ஜிப்ரயீல் இவ்வுலக மனித வடிவத்தில் வந்து சென்றுள்ளார்கள். ஏசுவின் அன்னையான மரியம் (அலை) அவர்களின் முன் ஓர் இளைஞனாகத் தோன்றினார்கள்.

இன்று அறிவியலில் parallel universes என்று ஒரு கோட்பாடு பேசப்படுவதும் கவனத்திற்குரியது. இந்த உலகம் மட்டும்தான் இருக்கிறது என்று சொல்வது மூடநம்பிக்கை. இதே கணத்தில் வேறு பரிமாணங்களில் வேறு பல உலகங்கள் இருக்கின்றன என்று சொல்ல இடமுள்ளது என்று விஞ்ஞானிகள் சிந்திக்கின்றனர். அவர்கள் அறிவியல் பேசுவதெல்லாம் ஏதோ சித்தர்கள் பேசுவது போல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது!

யாளியை இப்படியான ஓர் விலங்காகக் காணலாம். அதாவது யாளி இந்த பூமிக்கு உரிய விலங்கல்ல. அது வேறு பரிமாணத்தில் உள்ள உலகின் விலங்கு. அது இந்த உலகுக்கு அவ்வப்போது வந்து சென்றிருக்கக் கூடும். அதனை ஞானியர்கள் தம் தியான நிலைகளில் அவ்வுலகின் பரிமாணத்திற்கான திறப்பின் மூலம் அணுகிக் கண்டிருக்கவும் கூடும்.

இவ்வாறு நான் இந்தக் கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருந்த போது என் மனத்தில் இந்த இலக்கணங்களின் படியான வேறொரு விலங்கு வந்து நின்றது. அவ்விலங்கிற்குச் சிறகுகள் உண்டு. அதிவேகமாகச் செல்லும் அந்த விலங்கு நபிகள் நாயகத்தைச் சுமந்து இரவுப் பயணத்தில் மக்காவிலிருந்து பறந்து சென்று பாலஸ்தீனில் உள்ள பைத்துல் முகத்தஸ் என்னும் இடத்தில் இறக்கிவிட்டது. அவ்விலங்கு இந்த உலகைச் சேர்ந்தது இல்லை. வேறு உலகிலிருந்து அந்த இரவில் இவ்வுலகிற்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பெயர் ’புராக்’. வேறொரு தருணத்தில் புராக் பற்றிப் பேசுவோம்.

4 comments:

  1. யாளி பற்றிய இன்னொரு விளக்கமும் சாத்தியம்.நீங்களோ பக்கத்துவீட்டுக்காரரோ என் மோட்டார் பைக்கோ,இல்லை சிட்டுக்குருவியோ என் மனதில் ஒரு பிம்பம்தான்.பிம்பங்கள் அடங்கியதே மனம்.எண்ணங்கள் அதிலிருந்தே வருகின்றன.ஆக தெரிந்தவைகளின் (limitations of known) எல்லைகள் எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது.

    மனிதர்களின் ஆழ்மனதில் விலங்கு எண்ணங்கள் திடீர் திடீரென்று கிளம்பி மனவெளியை குட்டையை கலக்குவது போல கலக்கி ரத்தகளறியாக்கிவிடும்.

    கடவுளின் வாகனம் சிங்கம்,புலி,எருமை,மயில் என்று தெரிந்த விலங்கை நினைத்துக் கொள்ளும்போது அந்த விலங்கு ரகளை செய்யும் (விலங்குகளை)எண்ணங்களை கட்டுப்படுத்துகிறது.ஆனால் ஒரு பிரச்னை அந்த கட்டுப்படுத்தும் விலங்கு அல்லது பறவைகளின் வலிமையின் எல்லைகளும் நமக்கு தெரிவதால் அது சிக்கலாகும். இதற்காகவே தாந்த்ரீகம் மனிதர்கள் அறியாத ஆனால் பயப்படுகிறமாதிரியான ஒரு விலங்கை உருவாக்கியிருக்கலாம்...இதனால் ரகளை செய்யும் எண்ணங்கள் யாளிக்குப் பயப்படும்.

    எண்ணங்கள் எல்லாமே இரண்டுமுனை கூர் கொண்ட கத்தி.எதிர்வினையும் உண்டு. அப்படியானால் யாளி திடீரென்னு பிரச்னை செய்யாதா என்றால் அதனால்தான் அவை கோயில்களின் இடம் பிடித்திருக்கிறது.

    கோயிலுக்கு நுழைகையிலேயே பயபக்தியோடு,சரணாகதி மனத்துடன் நுழைகிறோம். அந்த இறைவன் என்று மனதில் இருத்தி-உருவேற்றி-'திரு'ஏறின அந்த எண்ணம் யாளியையும் அடக்கிவைத்திருக்கிறது இல்லையா...அதனால் ஒன்றும் செய்யாது...

    (ஆனால் தாந்த்ரீகத்தில் எல்லாமே மறைபொருள்தான்...இந்த விளக்கம் தெரிந்தவர்களுக்கு இது வேலை செய்யாது என்பதால் அது மறைக்கப்பட்டதாகிறது)

    இன்னொரு உதாரணம் பாருங்கள்...ராமாயணத்தில் பலசாலி அனுமன் என்ற குரங்கு...விலங்குகளை எல்லாம் விரட்டி வேலை வாங்குபவன்...எல்லா விலங்கும் அவனுக்கு கீழேதான்...இந்த நினைப்பு ஒரு வைணவனுக்கு அவனின் விலங்கு மன எண்ணங்களை கட்டுப்படுத்த உதவுகிறது....

    அப்படின்னா குரங்கு எண்ணம் பிரச்னை செய்யாதா என்றால் அந்த குரங்கு-அனுமன் ராமனின் அடிமை...தாசன்...சேவகன்...ராமநாமம் சொல்லி வாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விதைத்துவிட்டே ராமாயணம் தொடர்கிறது...இப்போது ராமபக்தனுக்கு குரங்கு எண்ணங்களால் பிரச்னை என்பதுவும் இல்லை...

    ReplyDelete
  2. ஆழ்ந்த சிந்தனை.பாரட்டுக்கள். மனிதர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என்று எப்போதும் தியானத்தில் இருந்ததால் வெளிப்பட்ட ஆழ்மனப்படிவம்தான் திருக்குர் ஆன் ஆக இருக்குமோ?

    ReplyDelete
  3. ஓர் பொறியாளர், தமிழில் இதுவரை யாருமே எழுதாத யாளியை மையமாக வைத்து எழுதிய ஆய்வு நூல் போன்ற நாவலைப் படித்ததன் விளைவாக 3 தொடர் கட்டுரைகளை எழுத வைத்துவிட்ட வகையிலேயே யாளி வெற்றி பெற்று விட்டது. மறு பதிப்பாகிக் கொண்டிருக்கின்றது. தங்கள் 3 கட்டுரைகளையும் rssairam.blogspot.com வலைப்பூவில் மீள்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ”பிரபஞ்சக் குடில்” பெயர் மிகவும் அருமையாக உள்ளது.நன்றியுடன்,

    ReplyDelete
  4. யாழி பற்றி பேச ஆரம்பித்து வேறு எங்கோ சென்று விட்டர் தமிழன் யாழி தாம் டைனோசர் என்பதை தீர்க்கமாக உணர்ந்தும் காழ்புனர்ச்சியால் அதை திசைதிருப்புகிரார்,யாழி தான் டைனோசர்,டைனோசர் தான் யாழி

    ReplyDelete