Friday, July 14, 2017

சாளரப் பறவை
என் பெற்றோர் வசிக்கும் என் சகோதரரின் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் மாடியில் உள்ளதோர் அறையில் தங்குவோம். அந்த அறை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. காரணம், அந்த அறையில் உள்ள பே விண்டோ என்னும் குடவுச் சாளரம். எனது வீட்டிலும் அதே போல் ஆறடி உயரமும் ஐந்தடி அகலமும் உள்ள  ஃப்ரெஞ்ச் ஜன்னல் தரைத்தளத்திலும் முதற் தளத்திலும் உண்டு என்றாலும் குடவுச் சாளரத்தின் துருத்திய பகுதிக்குத் தனி அழகு உள்ளது. உண்மையில் அந்த வகை ஜன்னல் என்னை ஈர்ப்பதற்குக் காரணமே அதன் வெளியே உள்ள மரக்கிளைகள்தான். வெளியே மரம் எதுவும் இல்லாது போனால அந்த ஜன்னல் இருப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும், எனக்கு.
      
கீழ்த்தளத்தில் அதே அமைப்பில் இருக்கின்ற அறையிலும் அதே அளவிலான குடவுச் சாளரம் இருக்கின்றது என்றபோதும் மாடியறை தரும் உணர்வைக் கீழ்த்தள அறை தராது. மாடியறை கூடுதலாக உயரம் என்னும் பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது. அதன் மாயத்தன்மைக்கு அதுதான் காரணம். உலகை உதறி உயர்ந்துவிட்டது போன்றதொரு உணர்வை அது மிக ஆழமாகக் கிளர்த்துகின்றது. இந்த உளவியற்கூறு எப்போதிருந்து வளர்ந்து வந்தது என்று சிந்தித்துப் பார்த்தால் அது என் பால்ய காலத்திற்கு இட்டுச் செல்கிறது.

      எனது பால பருவத்தில், எமது பூர்வீக வீட்டின் முற்றத்தில் இருந்த மகிழ மரமும் கொள்ளைப்புறத்தில் இருந்த கொய்யா மரமும் எம் விளையாட்டுக்களுடன் பிரிக்க முடியாத தோழர்களாய் இருந்துள்ளன. அவற்றுடன் நாவல், பவழமல்லி, சரக்கொன்றை, கொடுக்காப்புளி ஆகிய மரங்களும் இருந்தன. ஆனால் மகிழம் மற்றும் கொய்யா ஆகிய மரங்களின் கிளைகளில்தான் எங்கள் மனப்பறவைகளின் கற்பனைக் கூடுகள் இருந்தன. முடிந்தவரை அக்கொய்யா மரத்தின் உச்சிக்கு ஏறிச் சென்று நாங்கள் சகோதரர்கள் மூவரும் அமர்ந்து கொண்டு நேரம் போவது தெரியாமல் கதைத்துக்கொண்டிருப்போம். காற்றில் கிளைகள் அசைவது ஒருவித அச்சத்தை அடிவயிற்றில் கிளப்பினாலும் அந்த அச்சத்தின் மையத்தில் ஓர் ஆனந்த ஊற்று பொங்கி வருவதை உணரலாம். கொய்யா மரத்தில் இலைகளின் அடர்த்தி இருக்காது. அதை நாங்கள் நேசித்தது அதன் உயரத்திற்காகத்தான்.

Related image
Mimusops elengi - Magizhampoo

ஆனால் மகிழ மரத்தின் இலைகள் மிகச் செறிவானவை. மறைந்துறைவதற்காகவே அதை நாங்கள் தேர்ந்தோம். நாவற்கனியை ஒத்த பளபளக்கும் கருநிறம் கொண்ட கட்டெறும்புகள் அதன் கிளைகள்தோறும் ஓடிக்கொண்டிருக்கும். கடித்தால் தாங்க முடியாத வலியுடன் கடுத்து வீங்கச் செய்யும் சுளுக்கி எறும்புகளும் அவற்றுடன் வருவதுண்டு. அந்த அபாயங்களை எல்லாம் சவால்களாக ஏற்றுக் கிளையேறி பல மணிநேரங்கள் மறைந்திருப்போம். இப்போது அந்தக் கொய்யா மரம் இல்லை. முற்றத்து மகிழ மரம் தானேயொரு பெருங்காடு போல் விரிந்துயர்ந்து இன்றும் நிற்கிறது. வெய்யிற் காலங்களில், பிய்ந்திராத தண்ணிழல் சாய்க்கிறது. பெயல் கண்டால் சட்டென்று நட்சத்திரங்களாகப் பூக்களை மண்ணில் சொரிகிறது.

கொள்ளைப்புறத்தில் இருந்த ஏவலரில்லத்தை இடித்துவிட்டுத் தனி வீடாக எடுத்துக் கட்டியபோது, புத்தாயிரம் பிறந்த ஜனவரியில், எனது பாட்டியுடன் குடியேறியபோது மாடியில் இரண்டு அறைகளைப் பிடித்துக்கொண்டேன். ஒன்றில் எனது சிறிய நூலகத்தை வைத்துக்கொண்டேன். அது மேற்குப் பக்கம் சாளரமுள்ள அறை. நண்பகலுக்குப் பின் எதிர் வெய்யில் உக்கிரமாகத் தாக்கி அறையை ஓர் அடுப்பாக்கிச் சமைக்கும். அமர்ந்திருந்தால் உடலெல்லாம் சூடேறித் தகிக்கும். பக்கத்து அறை சயனத்திற்கு. முதுகலைத் தமிழ் பயிலும் மாணவனாக இருந்த அன்று தொட்டு பேராசிரியராகிப் பின்னர் திருமணமாகிச் சில மாதங்கள் வரை என நான்காண்டுகள் அவ்வறைகளில் தங்கியிருந்தேன். சயன அறையில் ஜன்னலுக்கு வெளியே நாவல் மரம் இருந்தது. சாம்பல் நிறக் கொப்புகளில் வடிவான பசிய இலைகள், குழவியின் விழிப்பாவை போன்ற கனிகளுடன் ஜன்னலின் கண்ணாடியில் துடைத்தசையும் காட்சியே அக்காலகட்டத்தில் என் வைகறை விழிப்பின் முதல் தரிசனமாக இருந்தது. உறக்கம் பிடிக்காத நிலாக்கால இரவுகளில்கூட வெகுநேரம் அந்தக் கிளைகளை ரசித்தபடி படுத்துக்கிடந்ததுண்டு. அந்த அறை அப்போது சட்டென வீட்டிலிருந்து பிரிந்து கொள்ளும். ஏதோ மரக்கிளைகளில் வைத்துக் கட்டப்பட்ட குடில் ஒன்றனுள் நான் வசித்துக்கொண்டிருப்பதான உணர்வைத் தரும். பால்ய பருவத்தில், கொய்யா மரத்தின் உச்சங்கிளைகளில் அமர்ந்திருந்தபோது இருந்த போதம் அத்தருணத்தில் மீண்டும் கூடிவிடும். உலகை உதறி உயர்ந்துவிட்டதான உணர்வு உள்ளத்தில் உவகையை ஊறச்செய்யும்.

மனிதன் பொறாமைப் படத்தக்க இன்னொரு ஜீவராசியின் வீடொன்று உண்டெனில் அது பறவையின் கூடாகத்தான் இருக்கும். மனித ஆன்மாவை ’தெய்வீக உலகின் பறவை’ என்கிறார் மகாகவி இக்பால். அதற்கு ஒளியினாலான சிறகுகள் உண்டு. எனவே, மண்ணில் ஊன்றி நிற்கும் வீடு என்பது அதற்குக் கூண்டாகவே இருக்க முடியும். ஆனால் மண்ணிலிருந்து மேலே உயரத்தில் தனித்து நிற்கும் பறவைக்கூடுதான் அதற்கேற்ற ஆத்மார்த்தமான வீடு. அது காற்றில் அசைகின்றது. பறவையின் கூடு போல் அசையும் வீடு வேறு எது இருக்கிறது?

Related image
Rennes de chateau - France.

மாடியறையின் ஜன்னல் மந்த வெய்யிலும் மழை மேகங்களும் கொண்ட மதிய வேளைகளில் எல்லாம் வேறொரு உணர்வின் தளத்தைத் திறந்து தரும். வரலாற்றில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதைப் போலவும், ஊருக்கு வெளியே, மலை முகடு ஒன்றில் கட்டப்பட்ட, ஆயிரம் அடிகளுயர்ந்த சாரலில் துருத்திக்கொண்டு நிற்குமாறு கட்டப்பட்ட, அதன் அறையிலிருந்து ஜன்னல் வழியே கண்டால் வெகு கீழே தூரத்தில் நெளியும் ஆறும் அதன் மருங்குகளில் கிடக்கும் சிற்றூர்களும் காட்சியில் விரிகின்ற பழங்கோட்டை ஒன்றனுள் நாம் வசிப்பது போல் தோன்றச் செய்யும். பின்னால், டா வின்சி கோட் புதினத்தையும். மைக்கெல் பெஜண்ட் எழுதிய ‘ஹோலி ப்ளட் ஹோலி க்ரெய்ல்’ நூலையும் வாசித்தபோது அதில் சுட்டப்பட்ட, தென் ஃப்ரான்ஸில் உள்ள ரென்னெஸ் தெ சாத்யூ என்னும் கோட்டை எனது கற்பனையுடன் கச்சிதமாகப் பொருந்தி வரக்கண்டு பெரிதும் வியந்தேன்.

      ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களில் என் பெற்றோருடன் சென்று வசிப்போம். இவ்வாண்டும் அப்படியே ஆயிற்று. கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவ்வீட்டிற்கு அதிகாலையில் வந்துவிடும் ஒரு நண்பரை இம்முறையும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். அதனாலேயே எனது காலை நடையைத் தவறவிட்டேன்.

      எப்போதும் காலை ஆறரை மணி வாக்கில் அவர் வந்துவிடுவார். ஜன்னல் கட்டையில் அவர் பண்ணும் டொக் டொக் சப்தம் இப்போது பழகிவிட்டிருந்தது. முன்பெல்லாம் அந்த சப்தத்தைத் தாள முடியாது எழுந்து போய் சட்டென்று திரையை விலக்கி ஜன்னல் கண்ணாடியில் ஓர் அடி வைத்து அவரின் அடிவயிற்றைக் கலக்கி அச்சமூட்டித் துரத்துவதுண்டு. பீதியுடன் அவர் சிறகடித்தபடி விரைந்து சென்று எதிர்வீட்டு மரத்தில் அமர்ந்து மூச்சு வாங்குவார். பின் அந்த நாளில் இப்பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டார். ஆம், ’அவர்’ ஒரு மரங்கொத்திப் பறவை!

      ஆறரை மணி வாக்கில் இன்று அவர் வந்தார். ஜன்னல் சட்டத்தில் தனது திறமையைக் காட்டிக்கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியம்தான், இதனால் இப்பறவைக்கு என்ன கிடைக்கிறது என்று எண்ணியபடியே மெதுவாகத் திரையை விலக்கி நோக்கினேன். உள்ளுக்குள் எனது அசைவு அதற்கொரு அபாய அலாரம் அடித்திருக்க வேண்டும். அடுத்த நொடியே ஓரடி தூரம் விலகி மரக்கிளையில் அமர்ந்தது. ஒரு மரங்கொத்தியை அன்றுதான் அவ்வளவு அருகில் பார்க்கும் வாய்ப்புப் பெற்றேன். பலமான மூச்சில் அதன் நெஞ்சு ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. அதன் கூர்மையான, இரும்பாலானது போன்ற அலகில் அது கொத்தியதால் உண்டான மரத்தூசு ஒட்டியிருந்தது. அகரம் ஒலிக்க எத்தனிப்பது போன்று அதன் அலகு சற்றே அங்காந்திருந்தது. அதன் கண்களில் மிரட்சி மின்னிற்று. அந்நிலையில் அதன் முகபாவனை ஓர் கிராமத்தானைப் போலிருந்தது. அதன் கால்களின் முன் விரல்கள் இரண்டிலும் கதிரரிவாள் போன்று நீண்ட கூர் நகங்கள் வளைந்திருந்தன. அதே போன்றே பின் விரல்கல் இரண்டிலும் இருக்குமென்று என்று எண்ணினேன்.

Related image

நான் பார்த்தது ஒரு பொன்முதுகு மரங்கொத்தி. ஆங்கிலத்தில் அதனை Black-rumped flameback அல்லது lesser golden-back என்று அழைக்கிறார்கள். Dinopium benghalense என்பது அதற்கு வைக்கப்பட்டுள்ள விலங்கியற் பெயர். இச்சொற்களை இட்டு இணையத்தில் தேடினால் அப்பறவையினத்தின் மிக அழகான நிழற்படங்கள் கிடைக்கின்றன. சதைப்பற்றுள்ள, நிறத்துலக்கம் கொண்ட, பொன்முதுகு என்னும் பெயருக்கேற்ப மெருகு கொண்ட, உச்சந்தலையில் செந்நிறத் தொப்பியொன்றை அணிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றமுள்ள கவர்ச்சியான பறவைகள். பறவையுலகிலும் மாடல் அழகிகள் உண்டு போலும். அவை அப்படி ’போஸிங்’ நல்கி நடிக்கும் போலும். ஆனால் நான் பார்த்த மரங்கொத்தி கோடையின் உக்கிரத்தில் காய்ந்து பொலிவிழந்து நாலைந்து நாட்கள் சோறு கிடைக்காமல் அலையும் ஒரு பரதேசியைப் போல் இருந்தது. பார்க்கவே மிகவும் பாவமாய் இருந்தது. அதன் தலையில் சிலுப்பியிருந்த சில மயிர்களின் செந்நிறம் ப்ளீச்சிங் செய்ததைப் போல் வெளிறிப்போயிருந்தது. பொன்முதுகு என்பது அதனைப் பகடி செய்யும் பெயரெனக் கொள்ளலாமா அல்லது அப்பறவைதான் அப்பெயருக்கு அமைந்த பகடியா என்று முடிவு செய்வது அத்தனை எளிதல்ல.

வெகு நேரம் அக்கிளையில் அமர்ந்து இளைப்பாறிய பின் விருட்டென்று பறந்து போயிற்று. அது ஏன் அப்படி தினம் தினம் காலையில் வந்து ஜன்னலின் சட்டகத்தைக் கொத்துகிறது என்று சிந்தித்தேன். மரங்கொத்தி மரத்தைக் கொத்துவது உணவுக்காகவும் உறைவிடம் செய்யவும்தான். மரப்பட்டைகளின் அடியில் இருக்கும் புழுக்களும் பூச்சிகளும் அதற்கு உணவாகின்றன. மரத்தில் வட்டமாகத் துளை போட்டு அதைத் தனக்கொரு வீடாக்கிக்கொள்ளவும் செய்கிறது. எனவே மரத்தைக்  கொத்தினால் அதில் அர்த்தமுள்ளது. ஒரு கட்டடத்தின் ஜன்னல் சட்டத்தை அன்றாடம் பத்து நிமிடம் கொத்துவது எதற்காக என்று எனக்குப் புரியவில்லை.

வேறு எந்தப் பறவைக்கும் இல்லாத தலையமைப்பும், அத்தனை வேகமும், இரும்பு உளி போன்ற வலிமையான மூக்கும், நீண்ட நாக்கும், மூளையைச் சுற்றிலும் அதிர்வுகளை திசைதிருப்பும் தசையமைப்பும் என்று ஓர் அற்புதப் படைப்பாக விளங்கும் இந்தப் பறவைக்கு, எங்கே கொத்தினால் தனக்கு பயன் உண்டு, எங்கே கொத்தினால் தனக்குப் பயனில்லை என்பதை எடை போடும் அறிவு இல்லாமல் போய்விட்டதோ? அறிவில்லாத திறமை என்பது கால விரயத்திற்கே இட்டுச் செல்லும் என்பதைத்தான், தேவையற்ற வேலைகளில் உன் ஆற்றல்களை வீணடிக்காதே என்னும் செய்தியைத்தான் இந்த மரங்கொத்தியை வைத்து இறைவன் எனக்கு உணர்த்த விரும்புகின்றானோ? என்றெல்லாம் யோசித்தேன்.

நாளொன்றுக்கு எட்டாயிரம் முதல் பன்னிரண்டாயிரம் தடவை அது மரங்கொத்துமாம். அப்படியெனில் அது மரத்தைக் கொத்துவதற்கென்றே படைக்கப்பட்ட ஜீவன்தான். உணவுக்காகவும் பொந்திற்காகவுமே அது மரத்தைக் கொத்துகிறது என்பதெல்லாம் பிரதான காரணங்கள் அல்ல. மரங்கொத்துதல் அதன் உயிரியக்கம். அதைச் செய்யாமல் அதனால் இருக்க முடியாது. அந்த மரத்தில் அதற்கு உணவு கிடைக்கிறதா அல்லது அது வீடாகிறதா என்பதெல்லாம் பொருட்டல்ல. அவ்விரண்டும் கிடைக்காத மரத்தையும்கூட அப்பறவை கொத்தவே செய்யும். அப்படித்தான் ஜன்னலில் அது கொத்திற்று. கொத்துதலே அதன் வழிபாடு, இறைத்துதி, தியானம் எல்லாம். கொத்துதலே அதற்கு மூச்சைப் போல.

இப்படி யோசித்தபோது எனக்கு மலைப்பாக இருந்தது. அதன் தியானம் எனதினும் மிகப் பெரிது. நாளொன்றுக்கு மூவாயிரம் மூச்சுக்களையாவது தியானப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்று நியதி சொல்வார்கள் மகான் ஃபைஜி ஷாஹ் நூரி (ரஹ்...). அந்நோக்கில், மரங்கொத்தி நாளொன்றுக்கு சராசரியாகப் பத்தாயிரம் என்ற எண்ணிக்கையில் மூச்சுப் பயிற்சி செய்கிறது. நான் அவதானித்த மரங்கொத்தி ஒரு மாபெரும் சூஃபிதான் போலும். ஒழுங்காகப் பயிற்சி செய், தியானத்தில் ஆழ்ந்திரு என்று எனக்கு அதன் மொழியில் நாளும் சொன்ன நண்பன் போலும்.


No comments:

Post a Comment