Friday, October 28, 2016

ரூமியின் தோட்டம் - 5

Image result for illumination of heart
    
  ”இறைவனின் வண்ணத்தில் தோய்ந்திரு” (சிப்கதல்லாஹ்) என்கிறது குர்ஆன். இறையுணர்வில் லயித்திரு என்று பொருள். உணர்வின் ஊற்றுக்கண் வேறில்லை என்றறி. நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் வெற்றுத் தாள். ஒவ்வொரு கணமும் அந்த தெய்வீக ஓவியன் தன் வண்ணங்கள் குழைத்து நம்மை வரைகிறான். நாமவன் ஓவியம்.

உன்னுள் மறைந்திருக்கும் ஜம்ஜம் கிணற்றை மறந்த கணம் முதல் திருகு குழாய்களின் உபாசகன் ஆனாய். குழந்தை இஸ்மாயிலின் பாதம் பட்டு மூடியிருந்த ஜம்ஜம் கிணறு திறந்தது. மீண்டும் குழந்தை போல் ஆகிவிட்ட மனிதப் புனிதர் மட்டுமே உதவ முடியும் உனக்கு. சற்குருவின் பாத ஸ்பரிசத்தில் நின் உட்கிணறு திற. மீண்டும் மீண்டும் மண் சரிந்து மூடிக்கொள்ள தோண்ட வேண்டியிருக்கும் மணற்கேணிக்கு கைகள் சலித்துத் துவளாதா? வெளியிலிருந்து திறக்க நினைக்கும் கலைகள் எல்லாம். ஆன்மிகமோ நீரின் விசையில் உள்ளிருந்து திறக்கும் தருணத்திற்கான தவம்.

நாம ரூபங்களின் அலைகளில் கரையொதுங்கவும் மாட்டாது கடலுள் செல்லவும் முடியாது கிடந்துழலும் ஒரு செத்த மீன். அது, மூசா நபியின் கை தொட்டால் உயிர் பெறும். கடலுக்குள் சென்று ஜீவிக்கும். இறைவனே தன் கை என ஆகிவிட்ட ஞானியின் தீண்டலில் நீ சுறா ஆகிவிடு.

உன் பயமும் மகிழ்ச்சியும் வெறுப்பும் சினமும் என எல்லாம் நிழல்களின் அசைவுகள் கண்டு. நிஜத்தின் தரிசனம் கிடைத்துவிடின் நிழல்களின் பாதிப்பு இல்லை.

”சேவலை ஏசேல்” என்பது நபிவாக்கு. எந்த வகையில் அது இறைநேசர் ஆயிற்று? வைகறையின் முதற்கீற்றில் அது கொண்டை சிலுப்பி எழுகிறது, இறைவனின் மகத்துவத்தை வாழ்த்தியபடி. அது, பறவை இனத்தின் பிலால். ’சூஃபி என்பவன் தருணத்தின் பிள்ளை’ (சூஃபி இப்னி வக்தஸ்த்) என்பர். ’தொழுகையின் வக்த் (தருணம்) வந்தால் தொழுது விடு’. சரிதான். எப்போதும் தொழுகையில் தரித்திருக்கும் சூஃபிக்கு தருணம் என்பது என்ன? திரை விலகிய இறைக் காட்சி. மவ்லானா ரூமி சொல்கிறார்:

வண்ணங்களைப் படைத்தவனுக்காக
வெளிறிப் போ!

நிழல்களின் நிமித்தம்
முகத்தில் குங்குமம் பூசற்க

சேவலாய் இரு,
நேரத்தின்மேல் கவனமாய், தலைவனாய்
உன் சேவலைக் கோழி ஆக்கிவிடாதே

***

      ”மெய்ஞ்ஞானிகளுடன் இருங்கள்” (கூனூ ம அஸ் ஸாதிகீன்) என்கிறது குர்ஆன். இதனை சூஃபிகள் ’சுஹ்பத்’ என்பர். உடனிருத்தல் என்பதொரு ரசவாதம். இறைவனின் வற்றாக் கருணை என்னும் பெருநதிக்கும் சிருஷ்டிகள் என்னும் தோட்டத்திற்கும் இடையில் சுழலும் நீர்ச்சரங்களே சூஃபிகள். மவ்லானா ரூமி சொல்கிறார்:

இணைந்திருங்கள் தோழர்களே!
சிதறிவிட வேண்டாம்

நமது நட்பென்பது
விழித்திருப்பதால் ஆகிறது

நீர்ச்சக்கரம்
நீர் ஏற்றபடிச் சுழன்று
கொடுத்துவிடுகிறது அழுதபடி

அவ்வாறு அது தங்கியிருக்கும்
தோட்டத்தில்

***
Image result for sufi ecstasy
     
இறை தியானம் பற்றி சூஃபிகள் சொல்வதென்ன? முதலில் மூன்று சொற்களை நினைவில் வை. திக்ரு, தாக்கிர், மத்கூர் – தியானம், தியானிப்பவன்  மற்றும் தியானிக்கப்படுவோன். ’மன ஒளி’ (ஜியாவுல் குலூப்) என்றொரு சூஃபி நூல். ஹாஜி இம்தாதுல்லாஹ் (ரஹ்) என்னும் ஞானி எழுதியது. ஆரணி பாவா அவர்கள் தமிழாக்கித் தந்த சிறு மா நூல். அதில் வரும் ஆழிய வரிகளைக் கவனி:

      ”திக்ரின் நோக்கம் திக்ருக்கு உரியவனை அடையவேண்டும் என்பதுதான்”

      ”’தகல்லகூ பி அக்லாகில்லாஹ்!’ அல்லாஹ்வின் நற்குணங்களை உன்னுள் கொண்டுவா. உன்னை அழித்துவிடு. உன்னையே மறந்து விடு. திக்ரும், திக்ருச் செய்பவனும் அழிந்து திக்ரே திக்ருச் செய்யப்படும் பொருளாக மாறிவிட வேண்டும்”

      ”உன்னுடைய திக்ரை ‘மத்கூர்’ ஆக (திக்ருச் செய்யப்படுபவனாக) ஆக்கிவிட வேண்டும்”

      ”திக்ரு தானே திக்ரு செய்யப் படுபவனாக மத்கூராக ஆகிவிடுகிறது. இத்தகைய திக்ரு அல்லாஹ்வின் திக்ராகும்”

      இவ்வாறு தியானத்தில் தன்னை இழந்து மூழ்கி இருக்கும் நிலையை சூஃபிகளின் பரிபாஷையில் ”இஸ்திக்ராக்” என்பர்.

      மக்களில் பெரும்பாலோர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்றே தியானத்தில் ஈடுபடுகின்றனர். மேலோட்டமான தியானங்களால் மேல் நிலைகள் சித்திப்பதில்லை. வேர்கள் ஆழப்படாமல் கிளைகள் உயருவதில்லை. எனினும், எல்லாக் காலங்களிலும் ஒரு சில மகான்கள் மேற்சொன்ன நிலைகளில் வாழ்ந்து காட்டுகிறார்கள்.

அவர்களில் ஒருவர் சலாவுதீன் ஸர்கூபி. இவர், மவ்லானா ரூமியின் குருமார்களில் ஒருவர். ஸர்கூபி என்றால் பொற்கொல்லர் என்று பொருள். எவரின் பார்வை கேள்வி கைகள் கால்களாக இறைவனே ஆகிவிடுகிறானோ அந்த மகானின் அசைவுகள் எப்படி இருக்கும்? சலாவுதீன் தனது கடையில் ஆபரணத் தங்கத்தைத் தட்டிக் கொண்டிருக்கிறார். அவ்வழியே சென்ற ரூமியின் செவிகளின் சுத்தியின் ஒலி விழுந்தது. அதன் நாதம் ‘அல்லாஹு அல்லாஹ்’ என்று கேட்டது. ரூமிக்கு மட்டும் அது கேட்டது எப்படி? லைலாவின் அழகைக் காண மஜ்னூனின் கண்கள் வேண்டும். சலாவுதீனின் சுத்தி எழுப்பும் நாதம் கேட்க ’அந்தரங்க சுத்தி’ வேண்டும்! மவ்லானா ரூமி சொல்கிறார்:
ஈருலகும்

பெருஞ்சேவல் ஒன்றின் முன்
ஒற்றைத் தானிய மணி

நேசிப்போனும்
நேசிக்கப் படுவோனும்
ஒன்றுதான்

இறைவனை யாரறிவார்?
’இல்லை’ என்பதன்
வழிப் போன ஒருவன்

உடைந்த காதலன் அறிவான்
நான் சொல்லும் இது
”இந்த ஆடைக்குள் யாருமில்லை
இறைவனைத் தவிர”

நின் நிஜ உருவில் தோன்றுக
சலாவுத்தீன்!
நீ எனது ஆன்மா
கடவுளை நோக்கும் கண்!

***
Image result for bamboo
      
பிரபலமான ஹைகூ கவிதை: “இந்தக் காட்டில் /  எந்த மூங்கில் / புல்லாங்குழல்?”. பிள்ளைக் கூட்டம் காண நேரின் இக்கவிதை நினைவு வரும். பால் வடியும் இம்முகங்கள் வளர்ந்த பின் எவ்வுருக் கொள்ளும்? எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆகிவிடுவதில்லை. தெய்வீக இசைஞனின் கைச் சுவைக்கும் வாய்ச் சுவைக்கும் மருகியிருப்போரே புல்லாங்குழல் ஆவர்.

      இம்மையிலேயே சொல்லிவிடவும் ஏலாது, மரணித்த பின் யாரின் நிலை யாதாய் இருக்குமென்று. மவ்லானா ரூமி ஓரிடத்தில் சொல்கிறார், “சுவர்க்கத்தில் முள் உண்டா? என்று கேட்பவனே, உன்னைப் பார்!”. மலராத வரை நீயே முள். மலர்ந்து விடின் நீ சொர்க்கத்தில் இருப்பதைக் கண்டு கொள்வாய்.

      அலைகளோட நிற்கும் பசிய வயல் இவ்வுலகு. எல்லோரும் ஓர் நிறை. நாற்றாங்கால் முற்றிய பின் அறுவடை நேர்கையில் கதிரும் பதரும் தனித்தனி ஆகும். மறுமையில் ஒரு குரல் கேட்கும், “வம்தாஸுல் யவ்ம அய்யுஹல் முஜ்ரிமூன்” – ‘இந்நாளில், பிரிந்து நில்லுங்கள் குற்றவாளிகளே!’ (குர் ஆன்:36:59). மவ்லானா ரூமி இசைப்பது கேள்:

சொல்கிறார்கள் சிலர்
மானுடப் பிறவியென்பது
மண்ணிலிருந்து மண்ணுக்கு

சாலைப் புழுதியில்கூட நேர்வழி திறந்துவிடும்
மனிதப் புனிதருக்குப் பொருந்துமா இது?

இன்னும் முற்றாப் பருவத்தே களத்தில்
வேறொன்றாய்த் தெரியும் பயிர்

அறுவடைக் காலம் வருகையில் காண்கிறோம்

அதன் பாதி பதர், அதன் பாதி நெல்

***

1 comment:

  1. ரொம்ப அருமையாக உள்ளது பதிவு. ஒரு சூஃபியின் உள்ளத்தை உணர்கிறேன்.

    ReplyDelete