இதே
உட்தலைப்பில் இனி இரண்டாம் அம்சம் பற்றிப் பேசுகிறது இந்நூல்:
“இதன்
இரண்டாவது அம்சம் அல்லாஹ் தன்னைப் பற்றி எவ்வாறு விவரிக்கிறானோ அவ்வாறே அவனை நாம் கொள்ள
வேண்டும்.”
அடடே!
நல்ல கொள்கையாக இருக்கிறதே என்று அகம் மகிழ்ந்து அடுத்த வரிக்குச் சென்றால் நாம் காணும்
கருத்து இது:
“உதாரணத்திற்கு
அல்லாஹ்விற்கு அல்-காளிப் (கோபப்படுபவன்) என்று தன்னைப்பற்றி கூறியிருந்தாலும் அப்பெயரை
அவனுக்கு சூட்டக்கூடாது.” (பக்கம்:57).
இது
அல்லாஹ்வே தன்னைப் பற்றி அறிவித்திருப்பதுதான் என்னும் போது இது ஏன் அவனுடைய திருநாமம்
அல்ல என்னும் கேள்வி எழுகிறது. சூட்டக்கூடாது என்று சொல்லியிருப்பவர் அதற்கான காரணங்களை
விளக்கியிருக்க வேண்டும். ஆனால் எந்தவொரு காரணமும் இந்நூலில் விளக்கப்படவில்லை. ”அல்லாஹ் தன்னைப் பற்றி எவ்வாறு விவரிக்கிறானோ அவ்வாறே
அவனை நாம் கொள்ள வேண்டும்” என்பதும் ”அல்லாஹ்விற்கு
அல்-காளிப் (கோபப்படுபவன்) என்று தன்னைப்பற்றி கூறியிருந்தாலும் அப்பெயரை அவனுக்கு
சூட்டக்கூடாது” என்பதும் வெளிப்படையாக முரண்படுகிறதே, இதற்கு என்ன விளக்கம்? என்று
கேட்டால் இந்த நூலில் ஒரு வார்த்தைகூட இல்லை. என்ன செய்வது, சட்டியில் இல்லாதபோது ஆப்பையில்
எப்படி வரும்?
அடுத்து
மூன்றாவது அம்சம் என்று இவர்கள் எழுதியிருப்பது: “மூன்றாவது அம்சம் அல்லாஹ்விற்கு படைப்பினங்களின்
குணாதிசயங்களை குறிப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.”
இதுவும்
முழுக்க முழுக்க எனக்கு ஏற்புடையதான கருத்தே. கட்டாயமாக, நிச்சயமாக படைப்பினங்களின்
குணாதிசயங்களை அல்லாஹ்விற்குக் குறிப்பிடுவதும் ஷிர்க்தான், அதேபோல் அல்லாஹ்வின் குணாதிசயங்களைப்
படைப்புக்களுக்குச் சாற்றுவதும் ஷிர்க்தான். இக்கருத்தை சூஃபிகளிடம் அல்லவா நான் கற்றுக்கொண்டேன்.
எனவே அதே கருத்தை இவர்கள் எழுதியிருப்பதைப் பார்த்து மனதில் ஒரு மகிழ்ச்சி மின்னல்
பளிச்சிட்டாலும் அதற்கு அவர்கள் தொடர்ந்து எழுதியிருக்கும் விளக்கம் இருக்கிறதே, அதுதான்
இவர்களின் அபத்தமான சொதப்பலுக்கு முத்தாய்ப்பாக உள்ளது:
“அதாவது
அல்லாஹ் புனிதத் திருக்குர்ஆனில்,
லைச கமிஸ்லிஹி ஷைஉன் வஹுவஸ் ஸமீஉல்
பஸீர்
’அவனைப் போன்று எப்பொருளும் இல்லை;
அவன்தான் (யாவற்றையும்) செவியேற்பான், பார்ப்பவன்’ (அல்குர்ஆன்
42:11)
பார்ப்பது
கேட்பது போன்ற குணங்கள் மனிதனுக்குத்தான் உண்டு. இவை இறைவனுக்கு உண்டு என்று சொல்லக்கூடாது.”
இதைப்
படித்துவிட்டு ஒருகணம் என் கண்களை என்னால் நம்பவே முடியவில்லை. எதை வேண்டுமானாலும்
உளறிக்கொட்டுவது என்னும் நிலையில்தான் இந்த விளக்கம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இவர்கள்
மேற்கோள் காட்டியிருக்கும் அந்தத் திருவசனம், ஃபுஸூசுல் ஹிகம் என்னும் நூலில் இப்னுல்
அரபி (ரஹ்) அவர்கள் தன்ஸீஹ் தஷ்பீஹ் கோட்பாட்டை விளக்க மேற்கோள் காட்டிய திருவசனம்,
அல்லாஹ்வைத்தான் ”சமீஉன்” (கேட்பவன்) என்றும் பஸீருன் (பார்ப்பவன்) என்றும் சொல்கிறது.
அவை இரண்டும் அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் உள்ளவை என்பது சிறுவர்களுக்குக்கூட
தெரியும். அவனின் திருநாமங்கள் உணர்த்தும் பண்புகள் அவனுக்கு உரிய பண்புகளே அன்றி படைப்புக்கு
உரியவை அல்ல என்பதுதான் தவ்ஹீத் என்கிறோம் நாம். ஆனால் மேற்கோள் காட்டியிருக்கும் ஆயத்துக்கு
நேர்மாறான குஃப்ரான விளக்கத்தைத் தருகிறார்கள் இவர்கள்: ”பார்ப்பது கேட்பது போன்ற குணங்கள்
மனிதனுக்குத்தான் உண்டு. இவை இறைவனுக்கு உண்டு என்று சொல்லக்கூடாது” என்பதாக! ஆயத்தை
இவ்வாறு நேர்மாறாக விளங்குவதுதான் இவர்களின் தவ்ஹீது விளக்க லட்சணம் போலும்!
படைப்புக்களைப்
படைப்பதற்கு முன்பே அல்லாஹ் ஸமீஉல் பஸீர்-ஆக இருந்தான். அப்படியிருக்க அவை அவனுடைய
பண்புகள் அல்ல என்றும் மனிதனின் பண்புகள் என்றும் சொல்லியிருப்பது தவ்ஹீதுக்கே எதிரான
கருத்தாகும்.
“அவனே
உங்களைப் படைத்து உங்களுக்குக் கேள்வியையும் பார்வையையும் இதயங்களையும் அமைத்தான்.”
(67:23)
”மேலும்
அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்வியையும் பார்வையையும் போக்கிவிடுவான்.” (2:20)
போன்ற
திருவசனங்கள் மூலம் கேள்வி, பார்வை ஆகியன படைப்புக்களிடம் அமானத்தாக அவன் அளித்திருக்கும்
அருட்கொடைகள் என்றும் அவை அவற்றின் சுயப்பண்புகள் அல்ல என்றும் அறியலாகும். எது நம்மீது
வந்து சேர்கிறதோ மேலும் நம்மை விட்டு நீங்கிவிட இயலுமோ அது நம்முடைய சுயப்பண்புகள்
அல்ல.
ஆனால்
அஸ்ஸமீஉ என்றும் அல்பஸீரு என்றும் அல்லாஹ்வைச் சொல்லுகின்ற போது கேள்வியும் பார்வையும்
அவனுடைய சுயத்தின் சிஃபாத்துக்கள் ஆகும். அவை பூர்விகமாகவே அவனிடம் இருந்தன, அவை ஒருபோதும்
அவனை விட்டு நீங்காது, அவை என்றென்றும் நிரந்தரமாக அவனுக்கு இருக்கும், அவற்றில் கூடுதல்
குறைவு கிடையாது, அவை அவனுடைய தாத்தில் (சுயத்தில்தான்) தரிப்பட்டிருக்கும், அவனுடைய
எந்த திருப்பண்பும் அவனுடைய சுயத்திலே அன்றி வேறு ஒன்றில் தரிப்படாது.
வஹுவஸ்ஸமீஉல்
பஸீர் என்பதன் நேரடி மொழிபெயர்ப்பு “மேலும், அவனே கேட்பவன், பார்ப்பவன்” என்பதாகத்தான்
வரும். ஆனால் இவர்கள் இதனிடையே அடைப்புக்குறியிட்டு ”அவன்தான் (யாவற்றையும்) செவியேற்பான், பார்ப்பவன்” என்று மொழிபெயர்ப்புத்
தந்திருப்பதில் இவர்களின் கருத்து ஒன்று மறைந்துள்ளது. அல்லாஹ்வின் கேள்விக்கும் பார்வைக்கும்
எதுவும் மறைந்ததில்லை; அவனுக்கு மறைவு என்று ஒன்று இருக்கவே முடியாது என்பது சத்தியம்.
இதில் மாற்றமான கருத்துக்கே மார்க்கத்தில் இடமில்லை. ஆனால் இவர்கள் அடைப்புக்குறிக்குள்
‘யாவற்றையும்’ என்று போட்டிருப்பது இதனை வலியுறுத்த மட்டும் அன்று. மனிதனுக்கும் (ஜின்,
மலக்கு, விலங்குகள் முதலிய இதர படைப்புக்களுக்கும்) அவற்றுக்குரிய சுயமான கேள்வியும்
பார்வையும் இருக்கிறது என்பது இவர்களின் கொள்கையாக இருக்கின்ற காரணத்தால் இந்தத் தவறான
கொள்கையை நிலைநாட்டவே இவ்வாறு அடைப்புக்குறியில் “யாவற்றையும்” என்று போட்டு அல்லாஹ்வுக்கும்
படைப்புக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் அல்லாஹ் யாவற்றையும் கேட்கிறான் பார்க்கிறான்
ஆனால் மனிதன் உள்ளிட்ட படைப்புக்கள் எல்லைக்குட்பட்டே கேட்கின்றன பார்க்கின்றன என்று
சுட்ட முனைகிறார்கள். இதுவும் தவ்ஹீதுக்கு முரணானதுதான். ஏனெனில் இது அல்லாஹ்வுக்கும்
படைப்புக்களுக்கும் உள்ள வேறுபாடு ஒப்பீட்டு அளவிலானது (relative difference) மட்டுமே
என்பதாகக் கொண்டுவருகிறது, absolute difference இருப்பதாகக் காட்டவில்லை. இந்நிலையில்
இக்கருத்து பலதெய்வக் கொள்கையில் உள்ள பெருதெய்வம் சிறுதெய்வம் என்னும் அமைப்பில் ஆகிறது
(ஒவ்வொரு தெய்வத்துக்கும் அதற்கே உரிய வல்லமை உண்டு, ஆனால் பெருதெய்வம் என்பதன் வல்லமைகள்
எல்லையற்றவை, சிறுதெய்வங்களின் வல்லமை எல்லைக்குட்பட்டவை என்னும் கருத்து). அல்லாஹ்வின்
சுயப்பண்புகள் படைப்புக்களின் சுயப்பண்புகளாக முடியாது என்று சொல்லாமல் தவ்ஹீத் கொள்கை
என்பது சாத்தியமில்லை.
அடுத்து
தவ்ஹீது அல் அஸ்மா வசிஃபாத் என்பதன் நான்காம் அம்சம் என்பதாக இவர்கள் குறிப்பிடுவது:
“இறை அம்சங்கள் மற்றும் குணாதிசயங்கள் கொடுக்காதிருப்பதாகும்” அதாவது, அல்லாஹ்வின்
பண்புகள் படைப்புக்கும் இருப்பதாகக் கருதக்கூடாது என்பது. இது சரியான கருத்தும், இவர்கள்
இதற்கு முன் சொன்னதற்கு நேர் மாற்றமானதும் ஆகும். இதற்கு முந்திய கருத்தாக இவர்கள்
எழுதியிருப்பது என்னவெனில் ‘பார்ப்பது கேட்பது போன்ற குணங்கள் மனிதனுக்குத்தான் உண்டு.
இவை இறைவனுக்கு உண்டு என்று சொல்வது கூடாது’ என்று. இது திருக்குர்ஆனுடைய கருத்துக்கு
முரணானதாகும்.ஏனெனில் அல்லாஹ்தான் கேட்பவன் பார்ப்பவன் என்று திருமறை திட்டவட்டமாகச்
சொல்கிறது. ”ஹுவஸ்ஸமீஉல் பஸீர்” என்று இரண்டு திருநாமங்களுக்கும் முன் ’அல்’ என்னும்
அறுதிச்சொல் (definite article) பயன்படுத்தி அதற்கும் முன் ஹுவ என்றும் குறிப்பிட்டுச்
சொல்லியிருப்பதால் ”அவனே கேட்பவன் பார்ப்பவன்” என்று பொருளாகிறது. அதாவது “கேட்பவனும்
பார்ப்பவனும் அவனை அன்றி வேறு எவரும் இல்லை” என்று அர்த்தப்படுகிறது. எனவே கேள்வி மற்றும்
பார்வை ஆகியவை அவனுக்கு மட்டுமே சுயமாக உரியவை, அவனை அன்றி வேறு ஒன்றிற்கு இத்தன்மைகள்
உண்டு என்று சொல்வது ஷிர்க் ஆகும். ஆனால் நடைமுறையில் மனிதன் விலங்கு ஆகியவையும் கேட்பதையும்
பார்ப்பதையும் கண்டு குழம்பிய குறைமதியினரான வஹ்ஹாபிகள் இந்த இரண்டு பண்புகளும் மனிதனுக்குத்தான்
உண்டு என்று சொல்லி மனிதனை ’அஸ்ஸமீஉல் பஸீர்’ என்பதாகக் காட்டியிருப்பதோடு இப்பண்புகள்
அல்லாஹ்வுக்குச் சொல்வது கூடாது என்றும் கூறி அப்பட்டமாக ஷிர்க்கைப் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.
இவ்விரு தன்மைகளும் படைப்புக்களில் காணப்படுவது எவ்வாறு? என்னுக் புள்ளியிலிருந்து
ஆராய்ச்சியை முன்னகர்த்திச் சென்ற சூஃபியாக்கள்தான் தன்ஸீஹ் மற்றும் தஷ்பீஹ் என்னும்
கோட்பாடுகளுக்கு வந்து சேர்ந்தார்கள். அல்லாஹ் தனதென்று கூறியுள்ள பண்புகளை அவனுடையது
மட்டுமே என்னும் நிலையிலிருந்து ஒருபோதும் மாறுபடாமல் விளக்கம் சொன்னார்கள். அப்படிச்
சொல்வதுதான் தவ்ஹீதாக இருக்க முடியும்.
இனி,
“இறை அம்சங்கள் மற்றும் குணாதிசயங்கள் கொடுக்காதிருப்பதாகும்” என்று இவர்கள் சொல்லியுள்ள
நான்காம் அம்சத்திற்கான விளக்கம் என்ன? இதை சூஃபிகளிடம் கேட்டால் அவர்கள் தரும் பதில்
என்னவாக இருக்குமெனில், ‘அல்லாஹ்வின் திருப்பண்புகள் படைபுக்களின் சுயங்களுக்கும் உண்டு
என்று விளங்காமல் இருப்பது. அணுவளவாகினும் அல்லாஹ்வின் திருப்பண்புகள் படைப்புக்களுக்கும்
சுயமாக உண்டு என்று சொன்னால் அது ஷிர்க் ஆகிவிடும். ஆனால் அப்பண்புகளை அல்லாஹ் படைப்புக்களில்
அமானத்தாக வெளியாக்கித் தருகிறான். அஃது அவன் நாடியபடி ஒவ்வொன்றிலும் கூடுதல் குறைதலாக
வெளிப்படுத்தப்படுகின்றது. யாருக்கு எவ்வளவு நாடுகிறானோ அவ்வளவுக்கு வெளிப்படுத்தித்
தருகிறான். தான் நாடியவர்களுக்கு அளவின்றி (கைரி ஹிசாப்) வெளிப்படுத்தித் தருகிறான்.
சிலருக்கு வெளிப்படுத்தித் தராமலும் இருக்கிறான். அப்போது அவர்களின் சுயப்பண்பே அவர்களில்
எஞ்சுகிறது. உதாரணமாக, தன் பஸாரத் (பார்வை) எனபதை அல்லாஹ் ஒருவருக்கு வெளிப்படுத்தித்
தரவில்லை எனில் அவரின் சுயப்பண்பான குருடு என்பதுதான் அவரில் எஞ்சுகிறது. ஒரு பண்பை
அல்லாஹ் வெளிப்படுத்தித் தர கால தேசக் கட்டுப்பாடுகள் அவனுக்கு இல்லை. பார்வை என்னும்
திருப்பண்பினை நபி(ஸல்) அவர்களின் பிடரியில் அவன் வெளிப்படுத்தி அருளியபோது அவர்கள்
தங்களின் பின்பக்கமாகவும் தெளிவாகக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களின் உள்ளங்கையில்
ஏந்திய பொடிக்கற்களில் அல்லாஹ் தன் கலாம் என்னும் சிஃபத்தை வெளிப்படுத்தியபோது அவற்றின்
தஸ்பீஹ் என்பது சப்தமாக வெளிப்பட்டது. அல்லாஹ் தன் திருப்பண்பை வெளிப்படுத்தித் தராத
நிலையிலும் அக்கற்களில் தஸ்பீஹ் இருக்கும் ஆனால் சப்தம் வெளியாகாது.” என்கிற ரீதியில்
செல்லும்.
ஆனால்
தவ்ஹீதின் ஆலிம்களே நாங்கள்தான் என்று டமாரம் அடித்துக் கொண்டிருக்கும் இவர்களின் அறிவு
எட்ட முடிந்த விளக்கம் இது: “மனிதனை இறைவனின் அவதாரமாகக் கொண்டாடுவது. மனிதர்களுக்கு
மாலை அணிவித்து வணங்குவது போன்றதாகும்.” (பக்கம்:57)
இந்த
இரண்டுமே கூடாது என்பதில் ஐயமில்லை. இதில் முதல் உதாரணமாவது இவர்கள் சொல்லும் நான்காம்
அம்சத்திற்கு ஒத்துவருகிறது. இரண்டாம் உதாரணத்துக்கும் இந்த நான்காம் அம்சத்திற்கும்
என்ன சம்பந்தம் இருக்கிறது? ஒரு மனிதருக்கு மாலை அணிவிப்பது அல்லாஹ்வின் பண்பை அவருக்குக்
கொடுப்பதன் அடையாளமாக எப்படி ஆகும்? அதற்கான விளக்கம் எதுவும் தரப்படவில்லை. என்ன மாலை
அணிவித்தல் என்பது அல்லாஹ்வுக்கு உரியதா? அப்படிச் சொன்னால் அதுதான் ஷிர்க் ஆகும்.
ஏனெனில் அது மனிதனுக்குரிய பண்பை (மாலை சூடுதல்) அல்லாஹ்வின் மீது சொன்னதாகிவிடும்.
எனவே இக்கருத்தும் இவர்கள் சொல்லும் தவ்ஹீதின் அம்சத்திற்கு நேர் முரணாக இவர்கள் எழுதியிருப்பதுதான்.
‘மனிதர்களுக்கு
மாலை அணிவித்து வணங்குவது’ என்று இவர்கள் சொல்லியிருப்பதைப் பல வகைகளில் வாசிக்க முடியும்.
இவர்கள் எந்த வகையில் இதைச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒவ்வொன்றையும்
காண்போம்:
‘மனிதர்களுக்கு
மாலை அணிவித்து பிறகு அவர்களை வணங்குவது’ என்று எனில் இதில் இரண்டு செயல்கல் இருக்கின்றன.
மனிதர்களுக்கு மாலை அணிவித்தல் என்னும் செயல் ஷிர்க் அல்ல. ஏனெனில் மாலை சூடுதல் என்பது
அல்லாஹ்வுக்கு உரியது அல்ல, மனிதர்களுக்கு உரியதுதான். அவர்களை வணங்குதல் என்னும் இரண்டாம்
செயல் ஷிர்க் ஆகும். ஏனெனில் வணங்கப்படும் தகுதி அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உண்டு.
இவ்வாறு,
‘மனிதர்களுக்கு மாலை அணிவித்து பிறகு அவர்களை வணங்குவது’ என்னும் கருத்தில்தான் சொல்லியிருக்கிறார்கள்
எனில் அதில் இன்னொரு அபத்தமும் இருக்கிறது. அதாவது “மனிதர்களுக்கு மாலை அணிவிக்காமல்
வணங்கும்போது ஷிர்க் ஆகாது” என்னும் எதிர்க்கருத்தை இது உருவாக்கிவிடும். ஆனால், உண்மை
என்னவெனில் மனிதர்களுக்கு மாலை அணிவித்து அவர்களை வணங்கினாலும் சரி, மாலை அணிவிக்காமல்
அவர்களை வணங்கினாலும் சரி, அல்லது வணங்குபவர் தான் மாலை அணிந்துகொண்டு இன்னொருவரை வணங்கினாலும்
சரி அது ஷிர்க்தான். இன்னொரு விளக்கம்: X,Y என்று இருவர் இருக்கிறார்கள். ஒருவர் X-க்கு
மாலை அணிவிக்கிறார். பிறகு Y-ஐ வணங்குகிறார் என்றால் அவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்தது
X-ஐ அல்ல, Y-ஐத்தான். ஏனெனில் மாலை அணிவிப்பதில் ஷிர்க் இல்லை, வணங்குவதில்தான் ஷிர்க்
இருக்கிறது. (இவ்வாறே கப்ரு மீது பூச்சதர் அணிவிப்பதில் ஷிர்க் இல்லை; ஆனால் அங்கே
அடங்கியிருப்பவரை வணங்கினால் ஷிர்க்தான். மாலை அணிவிப்பது பூச்சதர் அணிவிப்பதெல்லாம்
ஷிர்க் அல்ல என்பதற்கு ஆதாரம் அக்காரியங்கள் அல்லாஹ்வுக்கு உரியது அல்ல என்பதுதான்.
மாறாக, அக்காரியங்கள் ஷிர்க்தான் என்று ஒருவர் வாதிடும்போது அவை அல்லாஹ்வுக்கு உரியவை
என்னும் கருத்தினை அவரின் வாதம் imply செய்வதால் அவர் மனிதனுக்குரியதை அல்லாஹ்வுக்கு
சாட்டும் ஷிர்க்கில் இருக்கிறார் என்றாகிறது. புரிகிறதா?)
இன்னொரு
வாசிப்புச் சாத்தியம்: “மனிதர்களுக்கு மாலை அணிவிப்பதே அவர்களை வணங்கும் காரியம்தான்”
என்பது. இதுதான் இவர்கள் சொல்ல வரும் கருத்து எனில் இது ஒரு கேணப்பயலின் உளறல் என்று
சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. ஏனெனில் ’மாலை அணிதல்’ என்பது அல்லாஹ்வுக்கு உரிய பண்பு
அல்ல. எனவே அல்லாஹ் அல்லாத ஒன்றுக்கு மாலை அணிவித்தால் அது ஷிர்க் ஆகாது. (விக்ரஹ வழிபாட்டில்
ஷிர்க் ஏற்படுவது அதற்கு மாலை அணிவிப்பதால் அல்ல, அந்த விக்ரஹம் வணக்கத்திற்குரியது
என்னும் நம்பிக்கையால்தான் ஷிர்க் ஏற்படுகிறது. ஒரு சிலை வணக்கத்திற்குரியது அல்ல என்னும்
கருத்தில் இருந்தபடி அதற்கு மாலை அணிவிப்பார்கள் எனில் அது வேண்டாத காரியம், பயனற்ற
செயல் என்றெல்லாம் சொல்லலாமே அன்றி ஷிர்க் என்று சொல்லமுடியாது. உதாரணமாக, நாத்திகர்கள்
தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை போடுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்தச் சிலையோ சிலைக்கு
உரிய மனிதரோ வணக்கத்திற்கு உரியவர் என்று சொல்வதில்லை. எனவே பெரியாரின் சிலைக்கு மாலை
போடும் காரியம் ஷிர்க் ஆகும் என்று சொல்ல முடியாது.) மாறாக, அல்லாஹ் அல்லாத ஒன்றுக்கு
(அது வணக்கத்திற்கு உரியது அல்ல என்னும் நம்பிக்கை இருக்கும் நிலையிலும்) அது வணக்கம்தான்
– எனவே ஷிர்க்தான் என்று சொல்வார்கள் எனில் இப்படிச் சொல்பவர்களின் கருத்து ’மாலை அணிதல்
அல்லாஹ்வுக்கு உரியது’ என்னும் கருத்தைத் தோற்றுவிப்பதால் அவர்களின் கருத்துத்தான்
ஷிர்க்காக இருக்கிறது.
இந்நூலில்
இருந்து இன்னொரு கருத்து:
“மேலும்
குலாம் முஹம்மது (முஹம்மது நபியின் அடிமை) அப்துல் ஹுசைன் (ஹுசைனின் அடிமை) போன்ற பெயர்கள்
தடை செய்யப்பட்டவையாகும். ஏனெனில் இறைவனுக்குத்தான் நாம் அடிமையே தவிர, நபி (ஸல்) அவர்களுக்கு
இல்லை.” (பக்கம்:58)
குலாம்
முஹம்மது, குலாம் ரசூல், அப்துர் ரசூல் என்றெல்லாம் பெயர் சூட்டப்படுவது வெறும் மூடநம்பிக்கையால்தான்
என்பது போன்ற தோரணையில் எழுதப்பட்டிருக்கிறது இந்த வரி. நானேகூட அப்படி எண்ணியிருந்த
காலம் உண்டு. என்னுடன் பயின்ற ‘அப்துர் ரசூல்’ என்பவரிடம் ‘உன் பெயரை மாற்று’ என்று
சொல்லியிருக்கிறேன். ஆனால் குலாம் ரசூல், அப்துல் ரசூல் போன்று பெயர் வைப்பது கூடும்
என்னும் கருத்து எப்படி உருவாகியிருக்கக் கூடும் என்னும் முகாந்திரத்தை ஆராய்ந்த போது
திருக்குர்ஆன் ஆயத் ஒன்றை வைத்து விளக்கம் கொடுக்கப்படுவதைக் கண்டேன்.
”நபியே
கூறுங்கள் ’தங்கள் மீது அளவு கடந்து வரம்புமீறிவிட்ட என அடியார்களே! அல்லாஹ்வுடைய அருளைவிட்டும்
நீங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவற்றையும் மன்னிப்பான்.
நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன்’” (”குல் யா இபாதியல்லதீன அஷ்ரஃபூ
அலா அன்ஃபுஸிஹிம் லா தக்னதூ மிர்ரஹ்மதில்லாஹி; இன்னல்லாஹ யக்ஃபிருத்துனூப ஜமீஆ; இன்னஹு
ஹுவல் கஃபூருர் ரஹீம்”) (அல்குர்ஆன் 39:53)
இந்த
ஆயத் அடியார்களை நோக்கி நபி கூற வேண்டிய வாசகத்தை அவர்களுக்குக் கட்டளையிடுகிறது. எனவே
அதில் ”யா இபாதீ” என்னும் விளி இரண்டு விதங்களில் பொருள் கொள்ளத்தக்கது என்று மார்க்க
அறிஞர்கள் கருதுகின்றனர். முதல் கோணத்தில் யா இபாதீ என்பது அல்லாஹ்வின் அடிமைகள் என்று
பொருள்படும். இரண்டாவது கோணத்தில், இந்த ஆயத்தின் வசனப்போக்கின்படி, இவ்வார்த்தை நபி(ஸல்)
அவர்கள் முஸ்லிம்களை நோக்கி ”என் அடியார்களே” என்று தங்களின் அடியார்களாக அவர்களை விளித்து
அழைக்கும்படி அல்லாஹ் கட்டளையிடுவதால், அல்லாஹ்வின் அடியார்களை நபி தன் அடியார்கள்
(இபாத்) என்று அழைக்கும் உரிமை அவர்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ளது என்று பொருள்படுகிறது.
இந்த அர்த்தத்தை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இவ்விடத்தில்
அப்த் என்னும் சொல் (பன்மை: இபாத்) வணக்கத்தின் அடிப்படையிலான அடிமை என்று பொருள்படாது,
ஆனால் வேலைக்காரன் பணியாளன் என்னும் அடிப்படையில் அர்த்தப்படும். ஒரு சொல்லுக்கு ஒன்றுக்கு
மேற்பட்ட அர்த்தபாவங்கள் இருப்பது என்பது அரபி போன்ற செவ்வியல் மொழிகளில் நிறைந்து
காணப்படும் ஒரு பண்பாகும். எனவே ஒரு சொல்லுக்கு எல்லா இடத்திலும் ஒற்றை அர்த்தத்தைதான்
வைத்துப் பார்ப்பேன் என்று அடம் பிடிப்பது குருட்டுபுத்தி கொண்டவர்களின் செயலாகும்.
அவ்விடத்தில் அச்சொல்லுக்கு என்ன பொருள் என்று காண்பதுதான் அறிவின் அடையாளம்.
இந்த
ஆயத்தின் அடிப்படையில், நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய உயரிய நிலையினை ஏற்கும்
அடையாளமாக சுன்னத் வல் ஜமாஅத்தினர் தம் குழந்தைகளுக்கு அப்துர் ரசூல், குலாம் ரசூல்
போன்ற பெயர்களைச் சூட்டுகின்றனர்.
அரபு
பாஷையின் புழக்கத்தில் மற்றவர்களும்கூட அப்படி இபாத் / அப்த் என்னும் சொல்லை வேலைக்காரர்கள்
பணியாளர்கள் என்னும் பொருளில் பயன்படுத்தலாம் என்பதற்கு இன்னொரு ஆயத் ஆதாரமாக இருக்கிறது:
“இன்னும்
உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வாறே உங்களுடைய ஆண் அடிமைகள், அடிமைப்
பெண்களிலிருந்து நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள்” (”வ அன்கிஹுல் அயாமா
மின்கும் வஸ்ஸாலிஹீன மின் இபாதிகும் வ இமாஇகும்”) (அல்குர்ஆன் 24:32)
இந்த
ஆயத்தில் ”மின் இபாதிகும்” (உங்கள் அடிமைகள்) என்பது வணக்க வழிபாடு என்னும் அர்த்ததில்
புழங்கப்படவில்லை என்பது தெளிவு. அப்த் என்னும் வார்த்தையை வணக்கத்தின் அடிப்படையிலான
அடிமை என்று மட்டுமே புழங்க முடியும் என்றிருக்குமேயானால் இந்த ஆயத்தில் இபாதிகும்
என்று அல்லாஹ் சொல்லியிருக்கவே மாட்டான். இங்கே அடிமைகள் என்பது நம் நிர்வாகத்தின்
கீழ் உள்ள பணியாளர்கள் என்னும் பொருளில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஹசன்(ரலி)
அவர்கள் உமர்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களின் அடிமை என்று சொன்ன சம்பவம் கவனிக்கத்தக்கது.
நபியவர்கள் இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்ட போது ஹசன்(ரலி) அவர்களின் வயது எட்டு. அதன்
பின் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் கிலாஃபத்தும் முடிந்து உமர் (ரலி) அவர்களின்
கிலாஃபத் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஒருநாள் ஹசன்(ரலி) அவர்களுக்கும் இப்னு உமர்
(ரலி) அவர்களுக்கும் விளையாட்டின் போது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஹசன் (ரலி)
அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களை நோக்கி “நாங்கள் உரிமை விட்ட அடிமையின் மகன்தானே
நீ?” என்று சொல்லவே அவர் உடனே சென்று உமர் (ரலி) அவர்களிடம் இதனைச் சொல்கிறார். கலீஃபவாக
இருந்த உமர்(ரலி) அவர்கள் தன் மகனிடம் இப்படிச் சொன்னார்கள், “நீ ஹசனிடம் சென்று அவர்
சொன்னதை எழுதித்தருமாறு கேட்டு வாங்கி வா.” ஆச்சரியமுற்ற இப்னு உமர் (ரலி) அவர்கள்
காரணம் கேட்கவே உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், “நான் இறந்து போனால் அதை என்னுடன்
வைத்துப் புதைக்க வேண்டும் என்று சொல்லி விடுவேன், அதன் காரணமாக நான் ஈடேற்றம் அடைவேன்.”
ஆக,
அப்த் என்னும் வார்த்தையை எந்தப் பொருளில் பாவிக்கிறீர்கள் என்பதை வைத்துத்தான் முடிவு
செய்ய வேண்டும். பொதுவாக அல்லாஹ்வின் திருப்பெயர்களுக்கு முன் அப்த் என்பது இணைக்கப்பட்டிருக்கும்
எனில் (அப்துல்லாஹ், அப்துர் ரஹ்மான், அப்துர் ரஹீம், அப்துல் வஹ்ஹாப், அப்துல் காதிர்
என்பதைப் போல) அவ்விடத்தில் அப்த் என்பதற்கு வணக்க வழிபாட்டின் அர்தத்தில் அடியான்
என்று பொருள் செய்ய வேண்டும்.
அப்துந்நபி,
அப்துர் ரசூல், குலாம் ரசூல், குலாம் நபி, அப்துல் ஹுசைன் என்பது போல் வருமிடங்களில்
அப்த் என்பதற்கு பணியாளர் என்னும் பொருளைத்தான் தர வேண்டும். அந்த நோக்கில்தான் அப்படிப்
பெயரிடப்படுகின்றன. இங்கேயும் வணக்கத்தின் அடிப்படையில்தான் பொருள் பாவிப்பேன் என்று
கூறுவது குருட்டுத்தனமான அராஜகம் ஆகும். அதைத்தான் வஹ்ஹாபிகளின் கருத்து உணர்த்துகிறது.
இனி,
இந்நூலில் இருந்து இன்னொரு கருத்து:
“ஆகவே
மற்றவர்களிடம் எனக்காக துஆ செய்யுங்கள் என்று முறையிடும் வழக்கத்தை விட்டொழித்து, அல்லாஹ்விடம்
நேரிடையாக துவா செய்ய வேண்டும். இடையில் தரகர்கள் வேண்டாம்” (பக்கம்:58)
மேலும்
இதே கருத்தில் எழுதுகிறார்கள்:
“மனிதனுக்கும்
இறைவனுக்கும் இடையில் எந்த இடைத்தரகரும் (Agent) தேவையில்லை. நாம் எதை வேண்டுமென்றாலும்
அல்லாஹ்விடம்தான் பிரார்த்திக்க வேண்டும். அதை விடுத்து மற்றவர்களிடம் ‘எனக்காக துஆ
செய்யுங்கள்’ என கேட்பது கூடாத செயலாகும். இறைத்தூதர் அவர்கள் ’எவன் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ
அவன் மீது அல்லாஹ் கோபப்படுகிறான்’ என்று கூறியுள்ளார்கள்.” (பக்கம்:59)
”மற்றவர்களிடம்
‘எனக்காக துஆ செய்யுங்கள்’ என கேட்பது கூடாத செயலாகும்” என்று இவர்கள் எழுதியிருப்பது
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்களே செய்ததுமான ஒரு வழிமுறையை கூடாது
(ஹராம்) என்று இவர்கள் அறிவித்திருக்கும் பித்தலாட்டமாகும்.
பின்வரும்
திருக்குர்ஆன் வசனத்தைக் கவனியுங்கள்:
“அவர்கள்
தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்துகொண்ட நேரம், (நபியே) உம்மிடம் வந்து பின்னர்
அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் மன்னிப்புக் கேட்டிருந்தால்
அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையவனாகவும் அவர்கள் கண்டிருப்பார்கள்” (4:64)
இந்தத்
திருவசனத்தில் அல்லாஹ் வலியுறுத்தும் விஷயம் என்ன என்பதை ஊன்றிக் கவனியுங்கள்:
தங்கள்
நஃப்ஸுகளின் மீது அநியாயம் செய்தவர்களான பாவிகள் அல்லாஹ்வின் மன்னிப்பை அடைய வேண்டும்
என்றால் அவர்கள் இறைத்தூதரிடம் செல்ல வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபியிடம்
சென்ற நிலையில் அவர்கள் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறான்.
இவ்வசனத்திற்கு
தஃப்ஸீர் இப்னு கஸீர் தரும் விளக்கம் என்னவெனில், நபி(ஸல்) அவர்களின் பிரன்னத்தில்
பாவ மன்னிப்புக் கோரும் போது பாவங்கள் மன்னிக்கப்பட அது விசேஷமான காரணமாக இருக்கின்றது.
அல்லாஹ்விடம்
அவர்கள் பாவமன்னிப்புக் கோருவது மட்டும் போதாது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அந்த நபர்களுக்காக
அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும் என்பதையும் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.
இந்த
வசனப்பகுதிக்கு தஃப்ஸீர் இப்னு கஸீர் தரும் விளக்கமாவது அல்லாஹ் தங்களை மன்னிக்க வேண்டுமென்பதற்காக
துஆ செய்யுமாறு நபி(ஸல்) அவர்களை அந்த நபர்கள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்பதாகும்.
தமக்காகவோ,
தம் குடும்பத்துக்காகவோ, தம் உறவினர்களுக்காகவோ, அனைத்து முஸ்லிம்களுக்காகவோ மார்க்க
மேதை ஒருவரிடமோ இறைநேசரிடமோ சென்று அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு அவர்களைக் கேட்டுக்கொள்வது
மார்க்கத்தில் ஆகுமானதுதான் என்பது மேற்கண்ட திருவசனத்திலேயே ஆதாரமான விசயமாகும். அல்லாஹ்வே
கட்டளையிட்டு அனுமதித்த ஒரு விஷயத்தை ஆகாது (ஹராம்) என்று சொல்லும் வஹ்ஹாபிகளின் கூற்று
மார்க்கத்திற்கு எதிரான ஒன்றாகும்.
அல்லாஹ்விடம்
துஆ செய்யுமாறு ஒருவரிடம் கேட்டுக்கொள்வது நபி(ஸல்) அவர்களே செய்து காட்டிய சுன்னத்தான
நடைமுறைதான் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக அமைகின்றன:
உமர்
பின் ஃகத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்
கூற நான் கேட்டிருக்கிறேன், ‘பின் தொடருவோருள் (தாபியீன்) சிறந்தவர் உவைஸ் என்னும்
பெயருடையவராக இருப்பார். அவருக்கு அவரின் தாயார் (அவர் பராமரிக்கும் நிலையில்) இருப்பார்.
அவரிடம் தொழுநோயின் சிறு அடையாளம் காணப்படும். உங்களின் பாவமன்னிப்புக்காக அவரை துஆ
செய்யச் சொல்லுங்கள்” (முஸ்லிம் ஷரீஃப்: கிதாப் எண்31, ஹதீஸ் எண்:6171)
உஸைரிப்னு
ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “கூஃபாவிலிருந்து ஒரு குழுவினர் உமர் (ரலி)
அவர்களைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள், ‘உங்களில்
கர்ன் என்னும் ஊர்க்காரர் உள்ளீர்களா?’ என்று. அவர்களில் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர்
இருந்தார். அவர் உவைஸுல் கர்னீ அவர்களைக் கேலி பேசுபவராக இருந்தார். அவர் முன்வந்து
நின்றதும் உமர்(ரலி) அவரிடம் சொன்னார்கள், ‘நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்,
“யமனிலிருந்து உவைஸ் என்று அழைக்கப்படும் ஒரு நபர் வருவார். அவர் தன் அன்னையைப் பராமரிப்பவராக
இருப்பார் ஆனால் வேறு யாரும் அவருடன் தொடர்பு கொள்ள மாட்டார்கள். அவருக்கு வெண்மை
(தொழுநோய்) இருக்கும். அவர் அல்லாஹ்விடம் துஆ செய்ததால் அது குணமடையும், தீனார் அல்லது
திர்ஹம் அளவைத் தவிர. உங்களில் யார் அவரைச் சந்திக்கின்றாரோ தன் பாவமன்னிப்புக்காக
அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு அவரிடம் கேட்கட்டும்.”’ (முஸ்லிம் ஷரீஃப், கிதாப் எண்
31; ஹதீஸ் எண் 6170)
உஸைரிப்னு
ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: யமனிலிருந்து உதவி செய்வதற்காக மக்கள் வந்தபோது அவர்களிடம்
உமர்(ரலி) கேட்டார்கள் ‘உங்களில் உவைஸ் பின் ஆமிர் இருக்கின்றாரா?’ என்று. உவைஸைக்
கண்டறியும் வரை இவ்வாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரிடம், ‘நீங்கள் உவைஸ் பின்
ஆமிரா?’ என்று கேட்டதும் அவர் ஆம் என்றார். ‘நீங்கள் கர்ன் கோத்திரத்தைச் சேர்ந்தவரா?’
என்று உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். ’நீங்கள் வெண்குஷ்டத்தால்
அவதிப்பட்டுப் பின் அது ஒரு திர்ஹம் அளவு மட்டும் எஞ்சி நிற்கும்படியாக குணமாகிவிட்டதா?’
என்று உமர்(ரலி) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். ’உம் அன்னை உயிருடன் இருக்கிறார்களா?’
என்று உமர்(ரலி) கேட்டார்கள். அவர் ஆம் என்றார். பிறகு உமர் (ரலி) கூறினார்கள், ‘அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன், “யமன் மக்களிலிருந்து உங்களிடம் உவைஸ்
பின் ஆமிர் என்று ஒருவர் வருவார். அவர் கர்ன் என்னும் ஊரைச் சேர்ந்தவராக முளர் என்னும்
கிளையினராக இருப்பார். அவர் வெண்குஷ்டத்தால் அவதிப்பட்டிருப்பார். ஒரு திர்ஹம் அளவு
எஞ்சிய நிலையில் அது குணமடைந்திருக்கும். அவர் தன் அன்னையைச் சிறந்த முறையில் பராமரித்து
வந்திருப்பார். அவர் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்வார் எனில் அவன் அதை கண்ணியம்
செய்வான். உங்களால் முடியும் எனில் உங்களின் பாவமன்னிப்புக்காக துஆ செய்யும்படி அவரிடம்
கேளுங்கள்.” எனவே உமர்(ரலி) அவர்களின் பாவமன்னிப்புக்காக அல்லாஹ்விடம் உவைஸ் துஆ செய்தார்.
”நீங்கள் எங்கே செல்ல விரும்புகிறீர்கள்?” என்று உமர்(ரலி) கேட்டார்கள். அவர் “கூஃபா”
என்றார். ”அதன் ஆளுநருக்கு நான் உங்களுக்காக ஒரு கடிதம் எழுதித் தருகிறேன்” என்று உமர்(ரலி)
சொன்னார்கள். அதற்கு உவைஸ், ‘நான் ஏழைகளுடன் வாழ்வதையே விரும்புகிறேன்’ என்று சொல்லிவிட்டார்கள்.
(முஸ்லிம் ஷரீஃப், கிதாப் எண் 31; ஹதீஸ் எண் 6172)
தனக்காக
அல்லாஹ்விடம் துஆ செய்யுமாறு சாலிஹான அடியார் என்று நாம் கருதும் ஒருவரிடம் கேட்டுக்கொள்வது
மார்க்கத்தில் ஆகுமானதும் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த ஓர் சுன்னத் என்பதும் மேற்கண்ட
ஹதீஸ்களால் உறுதியாகிறது. மேலும், அல்லாஹ்வைக் கொண்டு எதிர்காலத்தில் நடக்கும் செய்திகளையும்
நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள் என்பதை இந்த நபிமொழிகள் காட்டுகின்றன.
எனவே,
அல்லாஹ்விடம் தனக்காக துஆ செய்யுமாறு வேறு ஒருவரிடம் கேட்பது கூடாது (ஹராம்) என்று
இவர்கள் சொல்லும் கூற்று மார்க்கத்துக்கு முரணானது என்பது திண்ணம்.
(தொடரும்...)
No comments:
Post a Comment