Saturday, January 26, 2013

ஒரு ரகசிய நூல்



ஒரு மாத காலம் கடந்துவிட்டது இந்தக் கட்டுரையை எழுத வேண்டும் என்று திட்டமிட்டு. விடுமுறைக்காகக் கம்பம் சென்று சேர்ந்தபோது இம்முறை அங்கே தோழர் ஃகாலித் இருந்தார். (யார் இந்தத் தோழர் ஃகாலித் என்று கட்டுரையின் முடிவில் சொல்கிறேன்.) இரண்டே நாட்கள் அவகாசத்தில் அவரைச் சந்திக்க வேண்டிய நிலை. அவரிடமிருந்த ஒரு நூல் என் கண்ணையும் கருத்தையும் கவர வேலைகளை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டு அந்த நூலை அவரிடம் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் மட்டுமே அவகாசம் இருந்ததால் நூறு பக்கங்கள் வரை படித்துவிட்டுக் கொடுத்துவிட்டேன். அவரும் அபுதாபிக்குப் புறப்பட்டுவிட்டார்.

“THE SECRET HISTORY OF THE WORLD” என்னும் அந்த நூலை மார்க் பூத் என்பவர் எழுதியிருக்கிறார். இதே நூல் ” THE SECRET HISTORY OF THE WORLD : As Laid Down By The Secret Socities” என்று அவருடைய புனைபெயரான ஜொனாதன் ப்ளாக் என்னும் பெயரில் வெளிவந்திருக்கிறது. லண்டனில் வசிக்கும் மார்க் பூத், ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள ஓரியல் கல்லூரியில் தத்துவமும் இறையியலும் சொல்லித்தந்தவர். இப்போது நூற்பதிப்புப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதுவரை நமக்குச் சொல்லப்பட்டு வரும் வரலாறு தவறான மனிதர்களால் எழுதப்பட்ட பிரதியாக இருக்கும் பட்சத்தில் ’உண்மையான’ வரலாறு என்பது என்ன? என்னும் ஆர்வத் தேடலில் இந்த நூலாக்கம் தொடங்கியதாகச் சொல்கிறார் பூத். சமயங்களுக்குள்ளாகவே இயங்கிவரும் ரகசிய இயக்கங்கள் எவ்வாறு உலக வரலாற்றுப் போக்கை வடிவமைத்தன என்று சொல்வது அவரின் நோக்கமாக இருக்கிறது. இத்ரீஸ் ஷா எழுதிய THE SUFIS என்னும் நூலின் ஜானரில் இது அமையும்போல் உள்ளுக்குள் ஒரு குரல் கேட்கவே ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினேன். டாவின்சி கோட் நாவலின் அசுர வெற்றிக்குப் பிறகும், டான் ப்ரவ்னின் இதர நாவல்களான ’ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்’ ’தி லாஸ்ட் கீ’ ஆகியவற்றிற்குப் பிறகும் ப்ரயார் டி சியான்ஸ், ஃப்ரீமேசன்ஸ், தி நைட்ஸ் டெம்ப்ளர்ஸ், இல்லுமினாட்டி, ரோஸிக்ரூசியன்ஸ் போன்ற ரகசிய இயக்கங்கள் பற்றிய ஆர்வம் உலகில் – மக்களின் பொது நினைவில் – குபீரென்று எகிரியிருப்பதாக இந்நூலின் முன்னுரையில் சொல்கிறார் பூத்.

படித்த வரையில் நூலில் இருந்து சில புள்ளிகளைக் குறித்து வைத்துக் கொண்டேன். அந்தப் புள்ளிகளுக்கு மார்க் பூத் சொல்லாத விளக்கங்கள் என் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. சிந்தனையைத் தூண்டுமொரு கருத்துரையாடலாக இந்நூலின் வாசிப்பை அது ஆக்கியது.

முதல் அத்தியாயத்தின் தலைப்பு: “In The Beginning God Peers at His Reflection. The Looking-Glass Universe”. பிரபஞ்சம் இறைவன் தன்னைத்தானே கண்டுகொள்ளுமொரு கண்ணாடி என்னுமிந்தக் கருத்து சூஃபி இலக்கியங்களில் காணக்கிடைக்கும் ஒன்றுதான். “நான் மறைந்த பொக்கிஷமாக இருந்தேன். அறியப்பட விரும்பினேன். படைப்புக்களைப் படைத்தேன்” என்னும் ஹதீஸ் குத்ஸியை விளக்க சூஃபிகள் கையாளும் குறியீடுகளில் ஒன்று முகம் பார்க்கும் கண்ணாடி. (அடடே, மூன்று தினங்களுக்கு முன்புதான் வீரவநல்லூர் பீர் முஹய்யிதீன் புலவரின் ‘மெய்ஞ்ஞானச் சிந்து’ பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதில் ஒரு பாடலில் ‘தர்ப்பணத்துள்ளும் சலத்துள்ளும் ஒளிபோல’ என்று நறுக்காக உவமை சொல்லியிருந்தார். தர்ப்பணம் என்றால் Looking-Glass!)

முதல் அத்தியாயத்தின் ஆரம்பமே மிகவும் கவித்துவமான ஒரு வரியுடன் தொடங்கியது: ONCE UPON A TIME THERE WAS NO TIME AT ALL. (முன்னொரு காலத்தில், காலம் என்பதே இல்லாதிருந்தது!)

இதனைத் தொடர்ந்து மார்க் பூத் எழுதுகிறார்: “காலம் என்பது ’வெளி’யில் உள்ள பொருட்களின் அசைவிற்கான அளவீடே அன்றி வேறில்லை. ஒவ்வொரு விஞ்ஞானிக்கும் மெய்ஞ்ஞானிக்கும் கிறுக்கனுக்கும் தெரிந்ததுதான், ஆதியில் ’வெளி’ (space)-ல் எப்பொருளும் இல்லை.”

பொறி#1:  ஆதியில் வெளி என்பதுமே இல்லை! இது சூஃபிகளின் கொள்கை. ஏனெனில் வெளி என்பதும் காலம் போலவே ஒரு படைப்புத்தான். ஆதியில் படைப்புக்கள் எதுவுமே இல்லை, பரம்பொருள் மட்டுமே இருந்தது என்பதுதான் சூஃபிகளின் புரிதல். “அல்லாஹ் இருந்தான். அவனுடன் எப்பொருளும் ஆகியிருக்கவில்லை” (கானல்லாஹ வலம் யகுன் மஅஹு ஷைஅன்) என்கிறார்கள் நபிகள் நாயகம் (நூல்: புகாரி ஷரீஃப்).

பொறி#2: பூத்தின் இந்தக் கருத்து குறிப்பிடுவது தொடர்நிலைக் காலம் (Serial Time) பற்றி. அதாவது இறந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்னும் தொடர்நிலையும் மணி நிமிடம் நொடி மைக்ரோ நொடி, நேனோ நொடி என்று பகுக்கக்கூடிய நிலைகளும் கொண்டது. இதனை அரபியில் ’ஸமான்’ என்று சொல்வர். படைக்கப்பட்ட காலம் என்பது அதுதான். ஆனால் ஆதியில் அதுவும் இல்லாதிருந்த நிலையை ஆன்மிகம் Timelessness என்றும் Eternity என்றும் சொல்வர். இதனை அரபியில் கிதம் (பூர்வீகம்) என்றும் தஹ்ரு என்றும் சொல்வர். திருக்குர்ஆனின் 76-வது அத்தியாயத்தின் தலைப்பு ’தஹ்ரு’ ஆகும். (இதனைத் தமிழில் ”காலம்” என்றே மொழிபெயர்க்கிறார்கள். ஆங்கிலத்தில் Time என்று கேப்பிட்டல் ’டீ’யுடன் எழுதி வேறுபடுத்துகிறார்கள். எனினும் காலாதீதம் என்று புரிந்துகொள்வதே சரி.) இந்த அத்தியாயத்திற்கு இன்னொரு தலைப்புமுண்டு: அல்-இன்சான் (மனிதன். The Man). இதன் முதல் திருவசனம்: “திட்டமாக நினைத்தற்குரிய பொருளாக இல்லாதிருந்த நிலையொன்று காலத்திலிருந்து மனிதன் மீது இருக்கவில்லையா?”

தஹ்ரு என்னும் காலாதீதத்திற்குள் ’காட்டப்படும்’ நிலைகளாகவே படைக்கப்பட்ட தொடர்நிலைக் காலத்தைப் பார்க்க முடியும். தஹ்ரு என்பது தொடர்நிலைக் காலம் அல்ல என்பதற்கும் ஸமான் என்னும் தொடர்நிலைக் காலம் அதனுட்பட்ட ஒன்று என்பதற்கும் பின்வரும் ஹதீஸ் குத்ஸி (இறைவாக்கு) சான்று:
“அல்லாஹ் சொன்னான்: ‘ஆதமின் மகன் காலத்தைத் திட்டுகிறான். நானே காலம். இரவும் பகலும் என் கையில்’” (”காலல்லாஹு யசுப்பு பனூ ஆதமத் தஹ்ர, வ அனத் தஹ்ரு, பியதில் லைலு வந்நஹாரு” நூல்கள்: புகாரி, முஸ்லிம்).

மேற்காட்டிய கருத்தைத் தொடர்ந்து மார்க் பூத் எழுதுகிறார்: “உதாரணமாக, ஓர் ஆண்டு என்பது சூரியனை பூமி ஒருமுறை சுற்றிவரும் காலம்; ஒரு நாள் என்பது பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றிக் கொள்ளும் கால அளவு. ஆரம்பத்தில் சூரியனோ பூமியோ இல்லை என்பதால் உலகம் ஏழுநாட்களில் படைக்கப்பட்டது என்று பைபிளின் ஆசிரியர்கள் எழுதியது நாள் என்பதன் இப்போதைய கணக்கில் அல்ல.

பருப்பொருளும் வெளியும் காலமும் இல்லாதிருந்த நிலையையும் தாண்டி இவை அனைத்தும் உண்டாகும் வண்ணம் அப்போது ஏதேனும் நடந்திருக்க வேண்டும். வேறு வகையில் சொல்வதெனில் எதுவும் இல்லாதிருந்த போது எதாவது நடந்திருக்க வேண்டும்.
அந்த ஏதோவொன்று நடந்த போது எப்பொருளும் இல்லை ஆதலால் அந்த நிகழ்வு இப்போது நாம் கண்டுகொண்டிருக்கும் நிகழ்வுகளிலிருந்து மாறுபட்ட தன்மையில், இப்போதுள்ள பௌதிக விதிகளுக்கு உட்படாததாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

அந்த நிகழ்வு ஒரு பௌதிக நிகழ்வாக இல்லாது ஒருவகையான மனோ நிகழ்வாக இருந்திருக்கும் என்று சொல்வது சாலப் பொருத்தம் அல்லவா?

மனோ நிகழ்வுகள் பௌதிக விளைவுகளை உண்டாக்குவது என்னும் கருத்து முதலில் உங்களுக்கு விந்தையாக இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட நிகழ்வுகள் அன்றாடம் நம்மைச் சுற்றி நடந்துகொண்டே இருக்கின்றன.”

இது கருத்துமுதல்வாதக் கோட்பாட்டினை முன்வைக்கும் சமயமரபுகள் அனைத்திற்கும் உடன்பாடான கருத்துதான். பிரபஞ்சம் முழுமையும் இறைவனின் ஞானத்தில் இருக்கின்றது என்பதான பார்வை சூஃபித்துவத்தில் அடிப்படையான ஒன்று.

இந்நூலில் சமயவாதிகள் சொல்லி வந்திருக்கும் கோட்பாடுகளை எல்லாம் கவிழ்த்துப் பார்க்கும் வேலையைச் செய்கிறார் பூத். உதாரணமாக, பொருள்முதல்வாதக் கொள்கை கொண்டுள்ள விஞ்ஞானிகள் கடவுட் கோட்பாடு என்பது சிறுபிள்ளைகளின் கற்பனை போன்றதே என்றும், மனிதனைப் போலவே இறைவனைப் பார்க்கும் ஒரு பிழை (Anthropomorphic Fallacy) என்றும் சொல்கின்றனர். ”கடவுள் இருக்கிறார் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக்கொண்டாலும் அவர் ஏன் நம்மைப் போல் இருக்க வேண்டும்? அவரின் மனம் ஏன் நம்முடையதைப் போல் இருக்கிறது?” என்று அவர்கள் கேட்பதை இவ்வாறு அணுகுகிறார் மார்க் பூத்: “அவர்கள் சொல்வது சரிதான். இதற்கு எந்தக் காரணமும் இல்லைதான்... விஷயம் தலைகீழாக இருக்கும்வரை. அதாவது, கடவுளின் மனம் நம்முடைய மனத்தைப் போல் இருப்பதற்கு ஒரே காரணம் நம்முடைய மனம் அவருடையதைப் போல் படைக்கப்பட்டிருப்பதுதான் – இறைவன் நம்மை அவனின் தோற்றத்தில் படைத்திருக்கிறான்.”

இந்தப் புள்ளி மனிதனுக்கும் இறைவனுக்குமான விசேஷ உறவைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கின்றது. மனிதனை இறைவன் தன் தோற்றத்தில் படைத்தான் என்னும் கருத்து பைபிளை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டுள்ளது. வெளிப்படையாக நோக்கும்போது இக்கருத்து இறைவனுக்கு உருவமிருக்கிறது என்று அனுமானிப்பதாக உள்ளது. அப்படித்தான் காலகாலமாகப் பெரும்பான்மை மக்கள் இதனை விளங்கி வந்திருக்கிறார்கள். பைபிளில் பல இடங்களில் இந்தக் கருத்து இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டில் காணலாகும் வசனங்கள்:

”So God created man in his own image, in the image of God created he him; male and female created he them” (ஜெனெசிஸ் 1:27, கிங் ஜேம்ஸ் பிரதி. வெவ்வேறு பைபிள் பிரதிகளில் சொற்களின் வேறுபாடுகள் காணப்படுகின்றன.)

இவ்வசனம் இரண்டு செயல்பாடுகளைச் சொல்கிறது என்று பைபிள் விரிவுரையாளர்கள் கருதுகின்றனர். இறைவன் மனிதனைத் தன் சுயரூபத்தில் படைத்தான் என்பது முதல் செயல்பாடு (primary act). இறைவன் மனிதர்களை ஆணும் பெண்ணுமாய்ப் படைத்தான் என்பது இரண்டாம் செயல்பாடு (secondary act). இறைவன் முதலில் ஆதாம் என்னும் ஆணைப் படைத்துப் பின் ஆணின் விலா எலும்பை எடுத்து அதிலிருந்து ஏவாள் என்னும் பெண்ணைப் படைத்தான் என்னும் கருத்திற்கு இவ்வசனம் தெளிவான சான்றாக இருப்பதாகக் கிறித்துவ அறிஞர்கள் சொல்கின்றனர். ஏனெனில், இறைவன் முதலில் ஆண்-பெண் கலவையான ஒட்டிய இரண்டு உடல்களைப் படைத்துப் பின்னர் ஆண் என்றும் பெண் என்றும் இரண்டாக அரிந்துவிட்டான் என்று யூதர்கள் சொல்கின்றனர். அதனை இவ்வசனம் மறுப்பதாக அமைகிறது.

எனினும் “இமேஜ்” (உருவம்) என்று இதில் சொல்லப்பட்டுள்ளதன் விளக்கம் இன்னமும் பூடகமாகவே இருக்கிறது. பின்வரும் பைபிள் வசனங்களைக் கவனிப்போம்:
”For a man indeed ought not to cover his head, forasmuch as he is the image and glory of God: but the woman is the glory of the man.” (1 Corinthians 11:7)
“And that ye put on the new man, which after God is created in righteousness and true holiness.” (Ephesians 4:24)
“And have put on the new man, which is renewed in knowledge after the image of him that created him.” ( Colossians 3:10)
“This is the book of the generations of Adam. In the day that God created man, in the likeness of God made he him.” (Genesis 5:1)
“Whoso sheddeth man's blood, by man shall his blood be shed: for in the image of God made he man.” (Genesis 9:6)
“For ask now of the days that are past, which were before thee, since the day that God created man upon the earth, and ask from the one side of heaven unto the other, whether there hath been any such thing as this great thing is, or hath been heard like it?” (Deuteronomy 4:32)
“Lo, this only have I found, that God hath made man upright; but they have sought out many inventions.” (Ecclesiastes 7:29)

இவ்வசனங்களில் இருந்து பெறப்படும் கருத்துக்கள்: இறைவனின் தோற்றமும் மகிமையுமாக மனிதன் (ஆண்) இருக்கிறான். நீதியிலும் மகிமையிலும் மனிதன் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டுள்ளான். இறைவனின் ஞானத்தில் விசேஷமானவனாகப் படைக்கப்பட்டுள்ளான். மனிதனைப் படைத்ததைப் போன்ற மகத்தான நிகழ்வு வேறு எதுவும் இல்லை.

மேலே கடைசியாகக் காட்டப்பட்டுள்ள வசனம் சொல்லும் செய்தி மிக முக்கியமானது என்று படுகிறது. மனிதனை நேராக நிற்பவனாக இறைவன் படைத்திருக்கிறான். ஆனால் மனிதர்கள் இவ்விஷயத்தில் பல புதிய கருத்துக்களை உண்டாக்கி விட்டார்கள் என்கிறது அது. இறைவனுக்கு உருவம் கற்பித்ததும் அத்தகைய ஒரு பிறழ்வின் விளைவு என்றே கருத வேண்டும்.

”in the likeness of God” – இறைவனின் மாதிரியில் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்வதை நேரடியாகப் பொருள் கொண்டால் அதை இஸ்லாம் திட்டவட்டமாக மறுப்பதைக் காணலாம். திருக்குர்ஆனில் இறைவனுக்குள்ள பெயர்களில் அவனின் படைப்பாற்றல் தொடர்பான பின்வரும் பெயர்களின் அர்த்தங்களைக் கவனிக்கவும்:
அல்-ஃகாலிக்: படைப்பாளன். இல்லாமையில் இருந்து படைப்புக்களை உள்ளமையில் கொண்டு வருபவன்.

அல்-பாரிஉ: படைப்புக்களை மாற்றி அமைக்கும் வல்லமை உடையவன்.
அல்-முஸவ்விர்: படைப்புக்களுக்குத் தோற்றங்களையும் அமைப்புக்களையும் வழங்குபவன்.
அல்-முப்திஉ: தோற்றுவிப்பவன். படைப்புக்களை ஆரம்பித்து வைப்பவன்.
அல்-ஃபாத்திர்: இயற்கையமைப்பில் ஆக்கிவைப்பவன்.
அல்-பதீஉ: படைப்புக்களை அவற்றுக்கு முன்மாதிரி எதுவுமின்றிப் படைத்தவன்.

இப்பெயர்களில் கடைசியாகச் சொல்லப்பட்டுள்ள திருப்பெயர் மிகவும் முக்கியமானது. மனிதன் உட்பட எந்தப் படைப்புக்கும் இறைவன் முன்மாதிரி எதுவும் இல்லாமலேயே படைத்திருக்கிறான் என்று இஸ்லாம் சொல்கிறது. மேலும் “அவனைப் போல் எதுவும் இல்லை” (லைச கமித்லிஹி ஷைஉன் 42:11) என்னும் திருவசனக் கருத்து அவனைப்போல் எதுவும் இல்லை என்பதை வலியுறுத்துகிறது. எனவேதான் இறைவனைப் படைப்புக்களைவிட்டும் பிரித்து அறிவதில் மிஸ்லிய்யத் முமாஸிலத் மற்றும் முஷாபஹத் (போலாதல் பங்காதல் ஒப்பாதல்) என்னும் மூன்று நிலைகளை விட்டும் இறைவன் பரிசுத்தமானவன் என்று சூஃபிகள் விளக்குகின்றனர்.

“Lo, this only have I found, that God hath made man upright; but they have sought out many inventions.” (Ecclesiastes 7:29) என்னும் பைபிள் வசனத்தில் உள்ள நேர்நிலை (upright) என்னும் சொல் மிக முக்கியமானதாகப் படுகிறது. குரங்காக இருந்த மனிதன் மெள்ள மெள்ள எழுந்து நடக்கத் தொடங்கி இரண்டு கால்களால் நிற்க ஆரம்பித்தான் என்று சொல்லும் டார்வினிசம் நவீன மனிதனை “ஹோமோ எரக்டஸ்” (நேராக நிற்பவன்) என்று பெயரிட்டு அழைக்கிறது. ஆனால், இறைவன் ஆதியில் மனிதனை படைத்த நிலையே அதுதான் என்று பைபிள் கூறுகிறது. திருக்குர்ஆனின் கருத்தும் அதுதான். ஆனால் பிற விஷயங்களை மனிதர்கள் புதிதாகச் சேர்த்துவிட்டார்கள் என்று பைபிளே குறிப்பிடுவது கவனிக்கவேண்டிய ஒன்று! பைபிளின் இந்த வாசகத்துக்கு திருக்குர்ஆனில் உள்ள வசனமொன்றின் கருத்து ஒத்துப்போகிறது:
“நிச்சயமாக நாம் மனிதனை அழகிய அமைப்பில் படைத்தோம்” (லகத் ஃகலக்னல் இன்சான ஃபீ அஹ்சனித் தக்வீம் 95:4)

இவ்வசனத்தில் உள்ள தக்வீம் என்னும் சொல்லைத் தமிழில் ’அமைப்பு’ என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் stature என்றே பெரும்பான்மை மொழிபெயர்ப்பாளர்கள் தந்திருக்கிறார்கள். எனினும் proportion என்னும் அர்த்தமும் இச்சொல்லுக்கு வழங்கப்படுகிறது. உடலமைப்பைக் கவனித்து இச்சொல் கூறப்படும் எனில் மனிதனின் உடலமைப்பில் proportion-இல் என்ன விஷேசத் தன்மை இருக்கிறது என்று ஆராய வேண்டும். மிகச் சுருக்கமாக ஒன்றைச் சொல்கிறேன். பிரபஞ்சமே மனித ரூபத்தில், உடலமைப்பில் பிரதிபலித்துக் கிடக்கிறது என்று ஒரு பார்வை உண்டு. மேலும் உலகெங்கும் காணப்படும் அற்புத விகிதமான (golden proportion, golden mean) phi – ஃபை எனப்ப்படும் 1.618 மனித உடலமைப்பில் ஒவ்வொரு அங்க அமைப்பிலும் காணப்படுகிறது என்பதும் அதுவே இயற்கையில் உள்ள பல பொருட்களில் அமைந்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது.

தக்வீம் என்பது மனிதனின் ஆன்மிக அமைப்பைக் கவனித்துச் சொல்லப்பட்டதாக இருக்கும் என்று நோக்கினால் அதன் அர்த்தகனம் இன்னும் அதிகமாகிறது. இறைவனின் சுயத்தின் தெய்வீகப் பண்புகளான அறிவு, ஜீவன், சக்தி, நாட்டம், கேள்வி, பார்வை மற்றும் பேச்சு ஆகியன மனிதனில் பிரதிபலிக்கும் அளவு வேறு எந்தப் படைப்பிலும் பிரதிபலிக்கவில்லை. அவற்றை உச்சகட்டமாகப் பிரதிபலிக்கும் வண்ணம் மனிதனை இறைவன் படைத்திருக்கிறான். எனவே மனிதன் ஒருவகையில் இறைவனைக் காட்டும் நேர்த்தியான கண்ணாடியாக இருக்கிறான் என்று சூஃபிகள் இதற்கு விளக்கம் தருகின்றனர்.

மேலே நாம் கண்ட பைபிள் வாசகமான “God created man in his own image” (ஜெனெசிஸ் 1:27) என்பதன் கருத்து நபி (ஸல்) அவர்கள் அருளியுள்ள ஹதீஸ் ஒன்றிலும் காணக்கிடைக்கிறது. அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்த அந்த ஹதீஸில் “நிச்சயமாக அல்லாஹ் ஆதமை அவனின் உருவத்தில் படைத்தான்” (இன்னல்லாஹ ஃகலக ஆதம அலா ஸூரத்திஹி, நூல்:முஸ்லிம் ஷரீஃப், அத்தியாயம் 40, ஹதீஸ் எண்: 6809).
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வாதாடும் கூட்டத்தினர் தங்களின் புரிதலுக்கு ஆதாரமாக இந்தவொரு ஹதீசையும் காட்டுகின்றனர்.

இந்த நபிமொழியின் மூலத்தில் வரும் ஸூரத்திஹி (அவனின் உருவத்தில்) என்பதில் உள்ள ’ஹி’ ஆண்பால் ஒருமை விகுதி அல்லாஹ்வின் பக்கமும் சேர்க்கப்பட முடியும், ஆதமின் பக்கமும் சேர்க்கப்பட முடியும். ஆதமின் பக்கம் அதனை மீட்டும் போது “அல்லாஹ் ஆதமை ஆதமின் உருவத்தில் படைத்தான்” என்று பொருள் தரும். இந்த அர்த்தத்தை “நிச்சயமாக மனிதனை நாம் அழகிய அமைப்பில் படைத்தோம்” (95:4) என்னும் திருவசனத்துடன் பொருத்திக் காண ஏதுவாகிறது. இவ்வாறு மார்க்க அறிஞர்களில் ஒரு சாரார் அர்த்தம் கொடுக்கின்றனர்.

ஆனால் சூஃபிகள், குறிப்பாக இப்னுல் அரபி (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் பக்கம் மீட்டி “அல்லாஹ் ஆதமைத் தன் தோற்றத்தில் படைத்தான்” என்று பொருள் கொள்கின்றனர். அந்நிலையில் “அவனின் தோற்றம்” (ஸூரத்திஹி) என்பதன் பொருள் என்ன என்று ஆராய வேண்டிய நிலை உண்டாகிறது. அல்லாஹ்வின் தெய்வீகப் பண்புகள் நிறைவாகப் பிரதிபலிக்கும் நிலையே அது என்னும் விளக்கத்தை அவர்கள் தருகின்றனர்.
“ஸூரத்திஹி” – ’அவனின் உருவம்’ என்பதில் உள்ள அவன் (ஹி) என்னும் விகுதியை அல்லாஹ் மற்றும் ஆதம் ஆகிய இருவரின் பக்கமும் சார்த்திப் பொருள் கொண்ட போதும் இறைவனுக்கு உருவம் இல்லை என்பது பாதிக்காத முறையில் அந்தப் பொருள் அமைய முடியும் என்று காட்டினார் ஒருவர்.

(தொடரும்) 

2 comments:

  1. Masa Allah..! Just read, very intersting, please continue, zazakallah khair

    ReplyDelete
  2. கடவுள் மனிதனைப் படைக்கவில்லை. பிரபஞ்சத்தை வேண்டுமானால் படித்திருக்கலாம். Human is a sum of function of evolution.

    ReplyDelete