Friday, January 4, 2013

ஒரு பரப்பியல் நூல் மீதான பார்வைகள் - 4


அப்படியானால் என் பார்வையில் தர்காக்களில் அனாச்சாரங்களே இல்லையா என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விக்கு என்றுமே நம்மிடம் அஹ்லன்வ சஹ்லன் உண்டல்லவா? இந்தக் கேள்வி குறிப்பாக அஹ்லே குர் ஆன்வ சஹீஹ் ஹதீஸிகளிடமிருந்து வருவதால் என் மனமார்ந்த அஹ்லன்வ ஜாக்ஸன்–ஐத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி கேள்விக்கான விடை:

தர்காக்களில் அனாச்சாரம் என்றும் ‘புதிதாகப் புகுத்தப்பட்ட சடங்குகள்’ என்றும் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருப்பவற்றில் தர்காவில் மஜாரில் சந்தனம் பூசுவது, பூச்சதர் போடுவது, கொடி ஏற்றுவது, தாயத் அணிவது, ஓதிப்பார்ப்பது போன்ற ஹலாலான காரியங்களை எல்லாம் ஷிர்க் என்றும் பித்அத் என்றும் சொல்லப்பட்டிருப்பதை என்னால் ஏற்க முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆனால் தற்காலத்தில் தர்காக்களில் நடைபெறும் எல்லாக் காரியங்களுமே சரி என நான் ஒருபோதும் ஆதரித்துப் பேசியதில்லை. தர்காக்களில் எவை எவை ஆத்தண்டிக்கானவை என்பதிலேயே எனக்கு ஐயம் இருக்கிறது! ஏனெனில் இது ஒரு நல்ல வியாபார வாய்ப்பாக இருப்பதால் உண்டியல் கேஸ்களால் தர்காக்கள் உருவாக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகமுண்டு. தரீக்காக்களில் ஷைகுகளாக இருக்கும் இறைநேசச் செல்வர்களுக்குத்தான் அவர்கள் ’இன்திக்கால்’ ஆகி அடங்கப்பட்ட பின்னர் தர்காக்கள் எழுப்பப்படுகின்றன. அந்த சில்சிலாவின் தொடர்முறையில் உள்ளவர்களால்தான் உரூஸ் நடத்தப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலான தர்காக்களில் இந்த நடைமுறை இல்லை. பரம்பரை அறங்காவல்ர் என்று தீனுக்கே சம்பந்தம் இல்லாதவர்கள் போல் தோற்றமளிப்பவர்கள் இருக்கிறார்கள். அடங்கியிருக்கும் மகானின் ஆன்மிக நெறிக்கும் இவர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதில்லை.

இந்நிலைக்கான இன்னொரு காரணம் மஸ்தான்கள் மஜ்தூப்கள் என்பவர்களின் அடக்கத்தலம் தர்காக்கள் ஆவது. அவர்களுக்கு ஆன்மிகத் தொடர்ச்சியே இருக்காது என்னும் நிலையில், அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கு ஆகாரம் ஆடை உறைவிடம் கொடுத்துப் பராமரிக்கும் பணியை மட்டும் செய்தவர்கள் (அவரிடம் ஓதிப்பார்த்துக் கொண்டவர்களாய் இருப்பார்களே அன்றி அவரிடம் ஓதிக் கற்றவர்களாய் இருக்கமாட்டார்கள்) அவரின் வஃபாத்துக்குப் பிறகு அவருக்கு ஒரு தர்காவைக் கட்டி வருடாந்திர உரூஸை நடத்திக் கொண்டிருப்பார்கள். இவர்களிடம் முறையான காரியங்களை எல்லாம் எதிர்பார்க்க முடியாது!

நான் இசைக்கு எதிரானவன் அல்ல. எல்லா இசையும் ஹராம்தான் என்னும் மட்டையடி வஹ்ஹாபிச வாதத்தை ஒருபோதும் என்னால் ஏற்க முடியாது. இமாம் கஸ்ஸாலி (ரஹ்), மௌலானா ரூமி (ரஹ்), உஸ்மானுல் ஹுஜ்வீரி (ரஹ்) போன்றோர் மார்க்க அடிப்படையில் விளக்கித் தந்துள்ள இசை குறித்தான பார்வை எனக்கு உண்டு. சிஷ்திய்யா தரீக்காவில் இசையின் பயன்பாடு உண்டு. அதன் அடையாளமாகத்தான் உரூஸ்களில் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எனக்குப் பிரச்சினை ஆவது இசை நிகழ்ச்சி வைக்கிறார்கள் என்பதல்ல, அது எந்த அளவுக்கு ஆன்மிகமாக இருக்கிறது என்னும் அதன் தரம் சார்ந்த நிலைதான். (இன்னிசைக் கச்சேரி என்று இந்நூலில் எழுதப்பட்டுள்ளது போல் இருந்தால் என்ன செய்வது? இன்னும் கீழாக ஆர்க்கெஸ்ட்ரா என்பது போலிருப்பின்?) திண்டுக்கல் பஸ்ஸ்டாண்டில் ஒருமுறை உரூஸுக்கான போஸ்ட்டர் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு வாசகம் கண்டிருந்தது, ஏதோ வடநாட்டிலிருந்து வரும் கவ்வாலிக் குழுவினரில் ஒருபக்கம் பெண் பாடகிகளும் மறுபக்கம் ஆண் பாடகர்களுமாக உருதுவில் போட்டிக் கவ்வாலிக் கச்சேரி நடைபெறும் என்று. அப்படியான ஒரு கவ்வாலி நிகழ்ச்சியின் சி.டி ஒன்றை நண்பர் ஒருவர் வாங்கி வந்து ‘சூஃபிக் கவ்வாலி கேட்கலாம்ஜி’ என்று சொல்லி அவர் வீட்டில் வைத்துப் போட்டுவிட்டார். அது ஓட ஆரம்பித்த போது அவரும் சேர்ந்து கைகளைத் தட்டினார். ஆனால் அதில் வந்த பெண் இருந்த மேக்கப் மற்றும் ஜிகினா ஆடை ஸ்திதியைப் பார்த்தபோது நரவலை மிதித்தது போல் கூசி முகத்தைத் திருப்பிக் கொண்டேன். கவ்வாலி என்னும் பெயரைக் ’காவாளிக் கச்சேரி’ என்று மாற்றிவிடலாம் போல் இருந்தது அது. இந்த நிகழ்ச்சிகளால் தர்காவில் அடங்கியிருக்கும் இறைநேசரையே கேவலப்படுத்துகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இது தரீக்காக்கள் சொல்லும் சமாஅ ஷரத்துக்களுக்கு எதிரானது.

நான் பெரும்பாலும் உரூஸ்களுக்கெல்லாம் போய் அறியாதவன். மற்ற நாட்களில் ஜியாரத் செய்யும் பேர்வழி. சில தர்காக்களில் பூ மிதிக்கிறார்கள் என்று கேள்வி. உண்மை எனில் நாளை அவர்களை மலக்குகள் மிதிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

”தூனில்லாஹ்” (அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவை) என்பதில் தர்காக்களில் அடங்கியுள்ள அவ்லியாக்களைக் குறிப்பது பொருந்தாது என்பதை விளக்கத் தொடங்கி இத்தனை பேசிவிட்டேன். இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. ஒருவேளை, தர்காவில் அடங்கியிருப்பவரை யாராவது அறியாமையினால் வணங்குகிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம், அப்போது என்ன சொல்வீர்கள்? என்று கேட்பின், அப்போதும் அவர்களைச் சிலைகளுக்கு ஒப்பாகச் சொல்ல முடியாது என்பதுதான் என் பதில்.

சிலைவணங்கிகளுடன் சேர்ந்து அவர்கள் வணங்கி வரும் சிலைகளும் நரக நெருப்பில் வீசப்படும் என்பது திருமறை சொல்லும் சேதி:
“நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்தின் விறகுகளே! நீங்கள் யாவரும் அதற்கு வந்து சேர்பவர்களே!” (21:98)

இத்திருவசனத்திலும் ’தூனில்லாஹ்’ (அல்லாஹ்வை அன்றி வேறானவை) என்னும் சொல் சிலைகளை நோக்கியே பாவிக்கப்பட்டுள்ளது. காஃபிர்கள் வணங்கும் சிலைகளுக்கும், காஃபிரான தலைவர்களுக்கும் இது பொருந்துமே அன்றி நபிமார்களுக்கோ இறைநேசர்களுக்கோ ஒருபோதும் பொருந்தாது.

ஏனெனில், யூதர்கள் நபி உஜைர் (அலை) அவர்களையும், கிறிஸ்தவர்கள் நபி ஈசா (அலை) அவர்களையும் அவர்களின் அன்னையான மர்யம் (அலை) அவர்களையும் வணங்கி ஷிர்க் வைத்தார்கள். மேற்படி ஆயத் அவர்களுக்கும் பொருந்தும் என்று பார்ப்பது அறிவீனம். ஏனெனில் பிறகு இந்த நபிமார்களும் மர்யம் (அலை) அவர்களும் நரகம் செல்வார்கள் (நவூதுபில்லாஹ்) என்று ஆகிவிடும். ஆனால் ஈசா (அலை) அவர்களையும் மர்யம் (அலை) அவர்களையும் சிலையாக வடித்து வணங்கி வந்தார்களே அந்தச் சிலைகள் நரக நெருப்பில் வீசப்படும். மக்கத்துக் காஃபிர்கள் மலக்குகளையும் வணங்கி வந்தார்கள். ஆனால் அதன் காரணமாக அந்தப் பரிசுத்த மலக்குகள் நரகத்தில் வீசப்பட மாட்டார்கள்.

ஈசா (அலை) அவர்களிடம் அல்லாஹ் விசாரனை செய்வான் என்பது மட்டும் திருமறையில் சொல்லப்பட்டுள்ளது (இந்நூலில் இவர்களே அதை மேற்கோள் காட்டியுமிருக்கிறார்கள் (பக்கம்:28)):
“மர்யமுடைய மகன் ஈசாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும் என் தாயாரையும் கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று மக்களிடம் கூறினீரா என்று அல்லாஹ் கேட்கும்போது அவர், நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வத்ற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் உள்ளத்தில் இருப்பவற்றை நீ நிச்சயமாக அறிவாய்; திண்ணமாக மறைவான உண்மைகள் அனைத்தையும் நீ அறிபவனாக இருக்கிறாய்” (5:116)

இறைநேசர்கள் விஷயத்திலும் தீர்ப்பு இவ்வாறுதான். மக்கள் அறியாமையின் காரணமாக அவர்களை வணங்கினால் அந்த மக்கள் குற்றவாளிகள் ஆவார்களே அன்றி மண்ணறைக்குள் அடங்கியுள்ள வலிமார்களை அது பாதிக்காது. இதனைப் பின்வரும் இறைவசனங்களைக் கவனித்தால் தெளிவாகும்:
”அறிக, நிச்சயமாக அல்லாஹ்வின் அவ்லியாக்கள்
அவர்கள் மீது அச்சம் இல்லை
அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
அவர்கள் ஈமான் கொண்டு தக்வா செய்தவர்கள்;
அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும்
நன்மாராயம் உண்டு;
அல்லாஹ்வின் வார்த்தைகளில் மாற்றம் இல்லை
அதுவே மகத்தான வெற்றியாகும்”
(10:62-64)

இறைநேசர்கள் கவலைப்பட மாட்டார்கள் என்பது இவ்வுலகில் மட்டுமல்ல மறுவுலகிலும்தான் என்பதை ”அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும்
நன்மாராயம் உண்டு” என்னும் திருவசன வாசகம் காட்டும். மறுமையில் நன்மாராயம் என்பது சொர்க்கம்தான். சொர்க்கத்தில் கவலை என்பது இல்லை. எனவே இறைநேசம் (விலாயத்) என்னும் நிலையில் இவ்வுலகை நீத்துச் சென்ற வலிமார்கள் நிச்சயம் சொர்க்கவாசிகள்தான். எனவே, அறியாமையால் எவரேனும் தர்காவில் அடங்கியுள்ள இறைநேசரை வணங்கினால் அது அந்த வலிமாருக்கு எவ்வித பாதிப்பையும் உண்டாக்காது.

“தூனில்லாஹ்” என்று மேலே நாம் அலசிய திருவசனங்களில் சொல்லப்பட்டது காஃபிர்கள் வணங்குகின்ற சிலைகள் மற்றும் காஃபிரான குருமார்களுக்குப் பொருந்துமே அன்றி இஸ்லாத்தின் நபிமார்களுக்கோ இறைநேசர்களுக்கோ அல்ல. எனவே, அத்தகைய வசனங்களை தர்காக்களின் மீது பொருத்திச் சொல்வது கடைந்தெடுத்த பித்தலாட்டமே அன்றி வேறில்லை.

தர்கா பற்றிய விஷயத்தில் இந்நூலின் மீதான என்னுடைய நிலைப்பாடு என்ன என்பதற்கு ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். என் வீட்டிற்கு வரும் ஒருவன் அறை மூலையில் தேள் ஒன்று ஊர்ந்து கொண்டிருப்பதைக் காட்டி “அதோ அது கொடிய விஷ ஜந்து. அதை அடித்துக்கொல்லுங்கள்” என்று சொன்னால் அதைச் செய்யலாம். இன்னொரு பக்கம் பூரான் ஒன்று ஓடிக்கொண்டிருப்பதைக் காட்டி “அதையும் அடித்துக் கொல்லுங்கள்” என்று சொன்னால் செய்யலாம். “என்ன் உங்கள் வீட்டை இந்த லட்சணத்தில் வைத்திருக்கிறீர்கள்?” என்று அவன் கோபமாகக் கேட்டாலும்கூட அதில் உள்ள அக்கறையை வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் அவன் தரையில் தவழ்ந்து கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டி “நான்கு கால்களில் ஊர்கிறது பாருங்கள், எனவே இதுவும் விஷப் பூச்சிதான். இதையும் அடித்துக் கொல்லுங்கள்” என்று சொன்னால் ‘லாஜிக் சிகரமே. இத்தனை நாள் இது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே’ என்று அவனை மெச்சவா முடியும்? அவனுடைய அறிவு எந்த அளவுக்குப் பிரண்டு போயிருக்கிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? அவனை நம் வீட்டை விட்டே துரத்தியடிப்போமா இல்லையா? தர்கா விஷயத்தில் வஹ்ஹாபிகளின் அறிவு நிலையும் இதைப் போலத்தான் இருக்கிறது.

இதே போல் இன்னொரு தலைப்பில் “புதிதாகப் புகுத்தப்பட்ட சம்பிரதாயங்கள்” என்று சொல்லி அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத்தினர் செய்து வரும் பல காரியங்களை வழிகேடு என்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அதிலும் இரண்டு போக்கு உண்டு – சந்தனம் பூசுதல், உரூஸ் கொண்டாடுதல், தர்காக்களில் விளக்கேற்றுதல், ஃபாத்திஹா ஓதுதல், தாயத்து அணிதல், மீலாது விழா கொண்டாடுதல் என்பது போல் நேரிடையாகச் சொல்வது ஒரு போக்கு. இதனை நாம் ஒப்புக்கொள்கிறோம் – ஆம் சந்தனம் பூசுகிறோம், உரூஸ் கொண்டாடுகிறோம், தர்கக்களில் விளக்கேற்றுகிறோம் (இவ்விஷயத்தில் எனக்கு ஒரு கருத்து உண்டு, அதாவது, மின்விளக்குகள் இல்லாத காலத்தில் தர்கா பராமரிப்புக்காக இந்த நடைமுறை இருந்திருக்கும். மின்விளக்குகள் அலங்கரிக்கும் இக்காலத்தில் இது தேவையில்லாத ஒரு சடங்காகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.), ஃபாத்திஹா ஓதுகிறோம், தாயத்து அணிகிறோம், மீலாது விழா கொண்டாடுகிறோம். இன்னொரு போக்கு என்னவெனில் – நாம் ஒப்புக்கொள்ளாததை மீண்டும் மீண்டும் எம்மீது ஏற்றி இப்படித்தான் சொல்வோம் என்று அடாவடித்தனமாகச் சொல்வது. உதாரணமாக, ‘கபுர் வழிபாடு’ என்று சொல்வது. கபுரில் அடங்கியிருப்பவர் வணக்கத்திற்கு உரியவர் என்று யாரும் சொல்லவும் இல்லை, அவரை வழிபடவும் இல்லை என்னும் நிலையில் அதே மட்டையடி வாதமாக ‘நீங்கள் வழிபடுவதாகத்தான் நாங்கள் சொல்வோம்’ என்னும் போக்கில் எழுதியிருப்பது; ’நல்லடியார்களிடம் பிரார்த்தனை செய்தல்’ என்று அடாவடித்தனமாக எழுதுவது. இதை ஏன் அடாவடித்தனம் என்று சொல்கிறேன் எனில் நல்லடியார்களிடம் நாங்கள் பிரார்த்திக்கவில்லை என்று சொல்லிவிட்ட பிறகும் ‘இல்லை நீங்கள் என்ன விளக்கம் சொன்னாலும் அதைப் பிரார்த்தனை என்றுதான் நான் விளங்குகிறேன் எனவே அப்படித்தான் சொல்வேன்’ என்று சொல்லுவதை அப்படித்தான் குறிப்பிட வேண்டும் என்பதால். ’ஒருவரிடம் ஒன்றைக் கேட்டாலே அது பிரார்த்தனைதான்’ என்று சொன்னால் அது மடத்தனமான வாதமாகும். தந்தையிடம் ஒரு மகன் தனக்கு நூறு ரூபாய் தருமாறு கேட்கிறான் எனில் அதனைப் பிரார்த்தனை என்று விளங்கிக்கொண்டு ”அல்லாஹ்விடம் கேட்காமல் அத்தாவிடம் கேட்கிறான். இது ஷிர்க்” என்று சொன்னால் உன் மூளையை ஸ்கேன் செய்து என்ன குறை என்று கண்டறிய வேண்டிய நிலை இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். “ஆகா, இறந்தவர்களிடம் கேட்கிறார்கள். அவர்களால் கொடுக்க முடியாது. எனவே இது ஷிர்க்” என்று அடுத்த அனுபல்லவி சரணம் எல்லாம் தொடரும். ”அல்லாஹ் அல்லாத எவரிடமும் கேட்கக் கூடாது” என்று வந்துவிட்ட பின் உயிருள்ள மனிதர் உயிரில்லாத மனிதர் என்று அதில் பாகுபாட்டுக்கு எங்கே இடமிருக்கிறது? உயிருள்ளவரிடம் கேட்டாலும் அது ஷிர்க்தானே? ஷிர்க்கிலே உயிருள்ளவரிடம் அனுமதி இறந்தவரிடம் என்றால் கூடாது என்று நிபந்தனை இருக்கிறதா என்ன? விஷயம் என்னவெனில் இந்த மட்டையடி அகக்குருடர்களுக்கு ’கேட்பது’ என்பதற்கும் ’பிரார்த்தித்துக் கேட்பது’ என்பதற்குமான வேறுபாடு தெரியவில்லை. ”கொடுக்க முடியாதவர்களிடம் கேட்கிறார்கள். எனவே ஷிர்க்” என்று இன்னொரு சொத்தை வாதத்தை வைத்தால் அதற்கும் பதில் சொல்கிறேன். அல்லாஹ்வை அன்றி வேறு எவருமே கொடுக்க முடியாதவர்தான். எந்த மலக்கும் எந்த நபியும் எந்த ஜின்னும் எந்த அவ்லியாவும் எந்தப் படைப்பும் சுயமாக ஓர் அணு அளவும் கொடுக்க முடியாது என்பது என் கொள்கை.

”அத்தா பத்து ரூபாய் கொடுங்கள்” என்று சிறுவன் ஒருவன் தன் தந்தையிடம் கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த தந்தை பத்தாயிரம் கோடி ரூபாய் சொத்துள்ள சுல்தானாகவே இருந்தாலும் சரி, மல்டி மில்லியனைர் ஆன விளக்கெண்ணெய் ஷெய்க்காக இருந்தாலும் சரி, அந்த சிறுவன் ’கொடுக்க முடியாத’ ஒருத்தரிடம்தான் கேட்டிருக்கிறான். உயிருடன் இருக்கிறார் என்றாலும் சரி, அவரின் ஜேப்பில் எத்தனை ரூபாய் இருந்தாலும் சரி – அந்த நிலையிலும் அவர் கொடுக்க முடியாதவர்தான். கொடுக்கும் தன்மை – ஆற்றல் என்பது சுயமாக அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உண்டு. படைப்புக்களை அவன் கொடுக்க வைத்தால்தான் அவை கொடுக்க முடியும். இதற்கு விதிவிலக்கே கிடையாது. எந்தப் படைப்பும் சுயமாக இதுநாள் வரை யாருக்கும் எதையும் கொடுத்ததில்லை இனியும் கொடுக்காது. அல்லாஹ் யார் வழியாகக் கொடுக்கிறானோ அது அவர்கள் கொடுப்பது போல் தோன்றுகிறது. தாய் குழந்தைக்குப் பாலூட்டுகிறாள் என்று புழக்க பாஷையில் சொல்கிறோம். ஆனால் ராஜிக்காக இருப்பவன் அல்லாஹ் ஒருவனே, அவன்தான் தாயின் வழியே அந்தப் பாலை அக்குழந்தைக்குப் புகட்டிக் கொண்டிருக்கிறான். இங்கே தாய் ஒரு சபப் (இடைக்காரணம்). அதற்காக, குழந்தை பசியால் அழும்போது அந்த அம்மாவைப் பார்த்து “பிள்ளை அழுவுது பாரும்மா, அதுக்குப் பாலூட்டம்மா” என்று பெரியவர்கள் சொன்னால் ”அல்லாஹ்தானே ராஜிக் இவளிடம் பாலூட்டச் சொல்வது ஷிர்க் ஆயிற்றே” என்று யாரும் எண்ணுவதில்லை. அப்படி எண்ணினால் அவர் தவ்ஹீதுவாதி அல்ல கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க வேண்டிய கேஸ் என்றுதான் பொருள்.

எனவே “இறந்தவர்களால் தர முடியாது” என்று சொல்வதன் அடிப்படை “உயிருள்ளவர்களால் தர முடியும்” என்பதாக இருக்குமானால் இப்படிச் சொல்பவர்கள் உயிருள்ளவர்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கிவிட்டார்கள் என்றுதான் அர்த்தம் உயிருள்ளோராகட்டும் இறந்தவர்களாகட்டும் – அல்லாஹ் அல்லாத யாருமே சுயமாக எதையும் யாருக்கும் , ஏன் தனக்கேகூட எதையும் தந்துவிட முடியாது என்பதுதான் நான் கொண்டிருக்கும் தவ்ஹீத் விளக்கம். யார் வழியாகத் தந்தாலும் அல்லாஹ்தான் தர வேண்டும். புழக்கத்தில் மனிதர்களிடம் சாதாரணமாகக் கேட்டுப் பெறுவதை இஸ்லாமிய ஷரீஅத் அனுமதித்துள்ளது. அதைப் பிரார்த்தனை என்று சொல்லி ஷிர்க் என்று முத்திரை குத்தவில்லை. அப்படிச் செய்தால் கொடுக்கல் வாங்கல் என்பதும் இயல்பான பரிவர்த்தனைகளும் இயலாமல் போய்விடும்; வாழ்க்கையே ஷிர்க் என்று சொன்னதாக ஆகிவிடும். பிரார்த்தனை என்பது அல்லாஹ்விடம்தான் செய்ய வேண்டும்; பிரார்த்திக்காத நிலையில் பிறரிடம் கேட்பது ஆகுமானதுதான். அதில் உயிருள்ளவர் இறந்தவர் என்ற பேதம் இல்லை. உயிருள்ளவர் எனில் அவரே சுயமாகக் கொடுக்க முடியும் என்று நினைப்பது ஷிர்க்காகவும் இறந்தவர் எனில் அல்லாஹ் அவர் வழியாகக் கொடுக்க முடியாது என்று நினைப்பது குஃப்ராகவும் இருக்கிறது. அதே சமயம் இன்ன வழியாகத்தான் கொடுத்தாக வேண்டும் என்று அல்லாஹ்வை நிர்ப்பந்திக்கும் உரிமையும் அடியானாகிய மனிதனுக்கு இல்லை. அப்படி நிர்ப்பந்திப்பது அவனுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும். அதேபோல் இன்ன வழியாக நீ கொடுக்கக்கூடாது என்றும் அல்லாஹ்வை நிர்ப்பந்திக்கும் உரிமை அடியானாகிய மனிதனுக்கு இல்லை. அவ்வாறு நினைப்பதும் ஈமானைப் போக்கிவிடும். ஒரு வழியாக அல்லாஹ் ஒருவருக்குத் தந்தால் அதே வழியாக அவன் தனக்கும் தந்தே ஆக வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கும் உரிமை அடியானான மனிதனுக்கு இல்லை. “அவனுக்கு மட்டும் அந்த வழியாகத் தந்தாயே, எனக்கு ஏன் தரவில்லை?” என்று கேட்டால் ஈமான் போய்விடும். இறைநேசர்களின் வழியாக அல்லாஹ் எமக்குத் தருகிறான் என்றால் நாங்கள் பெற்றுக்கொள்வதில் எவனுக்கு என்ன வந்தது? இவ்வழியில் அல்லாஹ் அவனுக்குத் தரவில்லை என்றால் நாங்களும் வாங்கிக்கொள்ளக் கூடாது என்று சொல்வதும் அதை ஷிர்க் என்று குறிப்பிடுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் அவர்கள் தலையிடுகிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

மேலும் எழுதுகிறார்கள்: “புதிய செய்கைகளை மார்க்கத்தில் புகுத்தும்போது இஸ்லாம் முழுமை பெறவில்லை என்றாகிவிடும். அல்லாஹ் இந்த மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டேன் என்று கூறியபிறகு புதிதாக மார்க்கத்தில் எந்தவொரு காரியத்தையும் சேர்க்கும் அதிகாரம் யாருக்குமில்லை” (பக்கம்:49)

இவ்வரிகளில் சுட்டப்படும் திருவசனமாவது:
“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கிவிட்டேன். மேலும் நான் உங்கள்மீது என் அருட்கொடையை பூர்த்தியாக்கிவிட்டேன். இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல்குர்ஆன் 5:3)

இதனடியாகத்தான் பிற்காலத்தில் உமர் (ரலி) அவர்களால் ரமலான் மாத இரவில் தராவீஹ் என்பது ஜமாஅத்தாக இருபது ரக்அத்துகள் தொழப்பட வேண்டும் என்பதில் ஜமாஅத் தொழுகை என்பதை மட்டும் ஏற்று இருபது ரக்அத்துக்கள் என்பதையும் இவர்கள் மறுக்கிறார்கள். உமர் (ரலி) அவர்களின் காலத்தில் அனைவரும் இதனை ஒப்புக்கொண்டு ’இஜ்மா’ என்னும் நிலையில் அது மார்க்கத்தில் உறுதிப்பட்ட விஷயமாக இருப்பினும் இவர்கள் அதனை ஏற்க மறுக்கிறார்கள்.

இஜ்மா என்பதற்கு என்ன விளக்கம்? இதோ இவர்களுடைய நூலிலேயே சொல்கிறார்கள் பார்ப்போம்:
பெரும்பான்மையானவர்கள் ஒன்று கூடி மார்க்கத்தில் ஒரு காரியத்தை செய்தால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் என்று ஆகிவிடாது, மாறாக அந்தக் காரியம் குர்ஆனிலோ, நபி (ஸல்) அவர்களின் வழிமுறையிலோ சுட்டிக்காட்டப் பட்டிருந்தால் மட்டுமே அது அங்கீகரிக்கப்படும்” (பக்கம்: 50)

இவர்கள் சொல்லும் இதே முறையில் அதாவது குர் ஆன் மற்றும் ஹதீஸுடைய கொள்கைகளின் அடிப்படையில்தான் இவர்கள் பித்அத் என்று, புதிதாகப் புகுத்தப்பட்ட சம்பிரதாயங்கள் என்று சொல்லும் செயல்பாடுகள் – மவ்லூது ஓதுதல், மீலாது கொண்டாட்டம், தர்கா ஜியாரத், ஃபாத்திஹா ஓதுதல் போன்றவை உருவாக்கப்பட்டன. இவ்விஷயங்களின் அடிப்படை ஆதாரம் குர்ஆன் ஹதீஸில் இருக்கும் நடைமுறைப் படுத்தப்படும் அமைப்பு முறை புதிதாக இருக்கும். இதை சுன்னத் வல் ஜமாஅத் அறிஞர்கள் ‘பித்அத்தெ ஹஸனா’ என்று சொல்கின்றனர். இவ்வாறு புதிய அமைப்பில் நடைமுறைகள் தோற்றுவிக்கப்படலாகுமா என்பதற்கு உமர் (ரலி) அவர்கள் தராவீஹ் தொழுகைக்குக் கொடுத்த இருபது ரக்அத்துகள் என்னும் வடிவமைப்பே ஓர் ஆதாரம். ஏனெனில் அவர்களே இதனைப் பற்றி “இது அழகிய பித்அத்” என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் புதிதாக உண்டாக்கப்படும் அழகிய நடைமுறைக்கு (‘ஸுன்னத்தன் ஹசனத்தன்’) நற்கூலி உண்டு என்று அறிவிக்கும் ஹதீஸும் இங்கே நோக்கப்பட வேண்டும். இந்த விஷயம் தனி நூலாகவே உருக்கொள்ளக்கூடிய விளக்கங்களைக் கொண்டிருப்பதால், ஏற்கனவே கட்டுரையாக எழுதலாம் என்று தொடங்கியது ஒரு சிறு நூலளவு வந்துவிட்டதால் அந்த விளக்கங்களைப் பிறகு தனியே விரிவாக அலசலாம் என்று இத்துடன் இவ்விஷயத்தை நிறுத்துவோம்.

மேலும் இந்நூலில் ’தவ்ஹீத்’ என்னும் அத்தியாயத்தில் தவ்ஹீதின் வகைகள் என்னும் தலைப்பிட்டு மூன்று வகையான தவ்ஹீத் இருப்பதாகக் காட்டியிருக்கிறார்கள்:
1.   தவ்ஹீது அர்ருபூபிய்யா
2.   தவ்ஹீது அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்
3.   தவ்ஹீது அல் இபாதா

’இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்’ என்று சொல்லி நான்கு கொள்கைகள் என்பதாக இவர்கள் போட்டிருப்பது குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் இவர்களாக ஆய்வு செய்து அமைத்துக் கொண்டது என்பதையும் அவ்வாறு அமைத்துக்கொள்ள மார்க்கத்தில் அனுமதி உண்டு என்று இவர்கள் நம்புகின்றார்களா? என்று இக்கட்டுரையின் ஆரம்பப் பகுதியில் நாம் கேட்ட கேள்வி இதற்கும் பொருந்தும். குர்ஆனிலோ ஹதீஸிலோ இவ்வாறு மூன்று வகை தவ்ஹீது இருப்பதாக இந்தப் பெயர்கள் எங்கேயும் சுட்டிக்காட்டப் படவில்லை. இவற்றுக்குக் குர்ஆன் & ஹதீஸில் ஆதாரங்கள் உண்டு என்று இவர்கள் சொன்னாலும் இந்தப் பகுப்புக்கும் இந்தப் பெயர்களுக்கும் ஆதாரம் எங்கே இருக்கிறது என்பதுதான் கேள்வி. அதாவது, “தவ்ஹீது ருபூபிய்யாவின் அம்சத்தைப் பற்றி திருமறையில் பல்வேறு வசனங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது” (பக்கம்:56) என்று எழுதி இரண்டு ஆயத்துக்களை விளக்கத்திற்கு ஆதாரமாகக் காட்டியிருக்கிறார்களே அன்றி “தவ்ஹீது அர்ருபூபிய்யா” என்னும் சொற்றொடர் குர்ஆன் & ஹதீஸில் இருப்பதகாக ஆதாரம் காட்டவே முடியாது.

இதை ஏன் சொல்கிறேன் எனில், இதே போல் வலிமார்கள் குர்ஆன் & ஹதீஸ் அடிப்படையில் ஆய்ந்து கண்டறிந்த விளக்கங்களுக்குப் பெயர்களைப் புதிதாகச் சூட்டியிருப்பதை மார்க்கத்தில் ஆதாரமே இல்லாதவை என்று கதறியவர்கள் இவர்கள்தான். ’வஹ்தத்துல் உஜூது’ என்று சொன்னவுடன் மார்க்கத்தில் இதற்கு ஆதாரமே இல்லையே – இந்தச் சொற்றொடரைக் குர்ஆன் & ஹதீஸில் காட்ட முடியுமா? என்றெல்லாம் கத்திக் கதறுவார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் என்னும் திருக்கலிமாவை விளக்க இலாஹ் என்பதற்கு மஃபூத், மக்ஸூத், மவ்ஜூத், மஷ்ஹூத் என்னும் அடிப்படையில் சூஃபிய்யாக்கள் விளக்கம் சொன்னால் இதற்கெல்லாம் மார்க்கத்தில் ஆதாரமே இல்லை – நபி (ஸல்) இதையெல்லாம் காட்டித் தரவேயில்லை என்று கதறுவார்கள். இப்போது தவ்ஹீதின் மூன்று வகை என்று இவர்கள் கோர்வை செய்த சொற்றொடர்களுக்கு எங்கிருந்து ஆதாரம் பெற்றார்கள்?

தவ்ஹீத் என்பதற்கு இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது:
“அரபு மொழியில் தவ்ஹீத் என்பது ஒரு பெயர்ச்சொல் ஆகும். வஹ்ஹத யுவஹ்ஹிது என்னும் வினைச்சொல்லின் வேர்ச்சொல். அதற்குச் சரியான அர்த்தம் ‘ஒன்றாக்குதல்’ என்று பொருள்படும். அதாவது ஒரு பொருள் அதன் நிலையில் ஒன்றாக மட்டும் (Oneness) இருப்பது. எந்தப் பொருளுடன் இணை வைக்காமல் மற்றும் இணை சேராமல் இருப்பது; அதாவது இறைவன் ஒருவன் தான், அவனுக்கு இணை துணை இல்லை என்று உறுதி (அகீதா) கொள்வதுதான் ஏகத்துவம் (தவ்ஹீது) ஆகும்” (பக்கம்:53)

”ஒரு பொருள் அதன் நிலையில் ஒன்றாக மட்டும் (Oneness) இருப்பது” என்பதில் ’அதன் நிலையில்’ என்பதற்கு என்ன விளக்கம்? ஒன்றாக மட்டும் இருப்பது என்றால் என்ன? அதாவது, அர்ஷ் என்னும் படைப்பு இருக்கிறதே, அது ஒன்றுதான் இருக்கிறது. இரண்டு மூன்று அர்ஷுகளை அல்லாஹ் படைத்திருப்பதாகச் சொல்லவில்லை. அவ்வாறு ஜின்ஸ் என்னும் வகைமை இல்லாத ஒரு படைப்பைப் பற்றிய விளக்கம் என்ன? அதுவும் அதன் நிலையில் ஒன்றாக மட்டுமே இருக்கிறது. எனவே அல்லாஹ்வின் தவ்ஹீதை – ஏகத்துவத்தை விளக்க இந்த வரையறை போதாது. சொல்லப்போனால் இவர்கள் சொல்லும் தவ்ஹீது வரையறை அல்லாஹ் அல்லாத படைப்புக்கும் பொருந்தி வருவதாக உள்ளது (அர்ஷ் என்னும் உதாரணம் போல்) என்பதால் இவர்களின் இந்த வரையறை இவர்கள் தவ்ஹீதைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரமாகவுள்ளது.

ஒன்றாக இருப்பது என்பதற்கு அடுத்து இவர்கள் தரும் விளக்கம்: ”எந்தப் பொருளுடன் இணை வைக்காமல் மற்றும் இணை சேராமல் இருப்பது.”

இதுவும் போதுமான விளக்கமாக இல்லை. ஏனெனில், அர்ஷ் என்பதும் தன் நிலையில் ஒன்றாக இருப்பதுடன் வேறு எதனுடன் இணை சேருவதும் இல்லை இணை ஆவதும் இல்லை. அர்ஷ் என்பது ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்னும் நிலையில் அதற்கு இணை (associate) என்பது எது? எனவேதான் சொல்கிறோம், அல்லாஹ்வுக்கு மட்டுமே பொருந்திவரக் கூடியதான – வேறு எந்தப் படைப்புக்கும் பொருந்தாததான ஒரு தவ்ஹீது விளக்கத்தை இவர்கள் தரவே இல்லை.

அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் இவர்கள் போட்டிருக்கும் oneness என்பதன் விளக்கம் என்ன? Numerical Oneness எனில் அந்த நிலை அர்ஷுக்குப் பொருந்தி வருகிறது. அதாவது, படைப்புக்குச் சாத்தியமான ஒருமை நிலைதான் அது. அதுதான் அல்லாஹ்வின் ஒருமை நிலை என்று சொல்வார்கள் எனில் அல்லாஹ்வைப் படைப்பு நிலையில் வைக்கிறார்கள் என்று பொருள். இது தவ்ஹீத் அல்ல, ஷிர்க் ஆகும்.

எனவேதான் அல்லாஹ்வின் ஒருமை – ஏகத்துவம் என்பது Absolute Oneness என்று சொல்கிறோம். அதாவது உஜூது (உள்ளமை) என்பது அவனை அன்றி வேறு எதற்கும் இல்லாத நிலை. படைக்கப்பட்ட பொருள் அனைத்தும் அவனுடைய உஜூதைச் சார்ந்தே உள்ளன. எதார்த்த உள்ளமை என்பது அவனுக்கு மட்டுமே உண்டு. படைப்புக்கள் அனைத்திற்கும் சார்பு உள்ளமை மட்டுமே உண்டு.

இந்த அத்தியாயத்தில் ”தவ்ஹீத் அல் அஸ்மா வஸ்ஸிஃபாத்” என்பதில் இவர்கள் தப்பும் தவறுமாக விளங்கிக்கொண்டு மக்கு மாணவன் நோட்ஸ் எடுத்தது போல் உளறிக்கொட்டி வைத்திருப்பவற்றை அடுத்துக் காண்போம். இவ்வகை தவ்ஹீத் என்ன என்பதற்கு முதலில் ஒரு வரையறை கொடுக்கப்படுகிறது:
“அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களையும் குணாதிசியங்களையும் ஒருங்கிணைத்தல். அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள் மற்றும் குணாதிசியங்களின் ஒன்றுபடுதலே இந்தப் பிரிவின் முதல் அம்சமாகும்.” (பக்கம்:56).

இது அருமையான வரையறை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இதற்கான விளக்கம் எதுவுமே இந்நூலில் வழங்கப்படவில்லை. ”ஒருங்கிணைத்தல்” என்று சொல்கிறீர்களே அதை எப்படிச் செய்வது என்னும் கேள்விக்கு உங்கள் நூலில் ஒரு வரி கூட விளக்கம் இல்லையே? உங்களுக்கே தெரியாது என்பதுதானே உண்மை? மேற்கண்ட வரையறையைச் சொல்லிவிட்டு அவர்கள் தரும் விளக்கமெல்லாம் இதுதான்: “அல்லாஹ் புனித குர்ஆனில் எப்படியெல்லாம் தன்னை வருணித்திருக்கிறானோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு கூறியுள்ளார்களோ அவ்வாறே முஸ்லிம்களாகிய நாமும் அப்படியே பின்பற்ற வேண்டும்” (பக்கம்:56)

இதிலே ஒருங்கிணைத்தல் எங்கே இருக்கிறது? திருக்குர்ஆனில் அல்லாஹ் தனக்குச் சொல்லியிருக்கும் அழகிய திருநாமங்கள் (அஸ்மாவுல் ஹுஸ்னா) என்று சொல்லி ஒரு பட்டியல், 99 அழகிய திருநாமங்கள் என்னும் எண்ணிக்கை நபிமொழியில் சுட்டப்பட்டிருப்பதால் அந்தக் கணக்கில் வைத்து உருவாக்கப்பட்ட பட்டியல் அர்ரஹ்மான், அர்ரஹீம் என்று தொடங்கிச் செல்லும் 99 அழகிய திருநாமங்கள் முஸ்லிம்களிடையே பிரபலமான ஒன்றுதான். அந்தப் பட்டியலில் சில வேறுபாடுகளும் உண்டு. தமிழகம், மலேசியா, சவூதி போன்ற நாடுகளில் இருந்து வரும் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் சில பெயர்கள் இதில் இருப்பது அதில் இருக்காது என்பதான வேறுபாடு இருப்பது விளங்கும். (இது ஏன் என்பது வேறு சர்ச்சை). அவ்வாறு பட்டியலில் சொல்லப்பட்டுள்ள திருநாமம் ஒவ்வொன்றையும் அதன் பொருளில் முஸ்லிம்கள் அப்படியே ஏற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள்; அவை அல்லாஹ்வின் திருநாமங்கள் என்றும் அந்தப் பண்புகள் அல்லாஹ்வுக்கு உண்மையாகவே உள்ளன என்றும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அது கற்பனை என்றெல்லாம் யாரும் சொல்வதில்லை. இவர்கள் கொடுத்திருக்கும் விளக்கத்தின்படி இத்துடன் தவ்ஹீத் அல் அஸ்மா வசிஃபாத்தின் முதல் அம்சமான ’ஒருங்கிணைத்தல்’ நிறைவேறிவிடுகிறது என்கிறார்கள். ஆனால் இதில் ஒருங்கிணைத்தல் என்பது வரவேயில்லை. ”இத்தனைத் திருநாமங்களும் குணாதிசியங்களும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது என்பதுதான் ஒருங்கிணைத்தல்” என்று சொன்னால் அது தவ்ஹீதுக்குப் போதுமானதல்ல.

ருபூபிய்யத்தைக் குறிக்கும் 99 அழகிய திருநாமங்களில் அல்லாஹ் என்னும் திருநாமத்தைச் சேர்க்கப்படாதது ஏன்? அல்லாஹ் என்னும் திருநாமத்திற்கும் 99 அழகிய திருநாமங்களுக்கும் வேறுபாடு என்ன? அடிப்படியான கேள்வி என்னவெனில் “இஸ்ம்” என்பது என்ன? பொத்தாம் பொதுவாகப் பெயர் என்று சொன்னால் படைப்புக்களுக்கும் பெயர்கள் உள்ளனவே, அவற்றுக்கும் அல்லாஹ்வின் இஸ்ம் என்பதற்கும் எதார்த்த வேறுபாடு என்ன? அல்லாஹ்வின் குணங்களுக்கும் அவனின் திருநாமங்களுக்கும் உள்ள தொடர்பும் வேறுபாடும் என்ன? அதாவது அல்லாஹ்வின் இஸ்மும் சிஃபாத்தும் ஒன்றுதான் என்று சொல்ல முடியுமா? முடியாது எனில் எவ்வாறு? முடியும் எனில் எவ்வாறு? அதாவது இஸ்மையும் சிஃபத்தையும் எப்படி ஒருங்கிணைப்பது? இஸ்முகளை ஒருங்கிணைப்பது எப்படி? சிஃபாத்துக்களை ஒருங்கிணைப்பது எப்படி? – இப்படியாக இத்தலைப்பின் கீழ் எழும் எந்த வினாவிற்கும் இந்நூலில் விடையோ விளக்கமோ இல்லவே இல்லை.

ஒரு குறிப்பு: அல்லாஹ்வின் சுயமும் அதில் தரிப்பட்டிருக்கும் குணாதிசயங்களும் (தாத் வ சிஃபாத்) கால தேச வர்த்தமானங்களுக்குக் கட்டுப்பட்டவை அல்ல. (ஏனெனில் மகான் ஸமானில் கட்டுப்படுவது படைப்புக்களின் நிலை. மகான் ஸமான் ஆகியவையேகூட படைப்புக்கள்தான். எனவே அல்லாஹ் அவற்றில் கட்டுப்பட்டவனல்ல – முகய்யத் ஆனவன் அல்ல). படைப்புக்களில் அவற்றின் குணாதசியங்கள் என்பவை அவற்றிலேயேகூட இடக்குறிப்புக்களால் கட்டுண்டவையாக இருக்கும். இது படைப்புக்களின் நிலை. உதாரணமாக, கண்ணில் பார்வை என்னும் பண்பு இருக்கிறது ஆனால் பேச்சு, கேள்வி என்னும் பண்புகள் இல்லை. காதில் கேள்வி என்னும் பண்பு இருக்கிறது ஆனால் பார்வை பேச்சு போன்ற வேறு பண்புகள் இல்லை. ஆக, ஒரு பண்பு இருக்கும் இடக்குறிப்பு என்பது வேறு பண்புகளின் இன்மையாகவும் உள்ளது. அல்லாஹ்வின் குணாதிசயங்கள் இப்படியான இடக்குறிப்புக்கள் கொண்டவை அல்ல. அவனுடைய ஒரு சிஃபத் இருக்குமிடத்திலேயே அனைத்து சிஃபத்துக்களும் உண்டு. ஒரு சிஃபத் இருக்கிறது இன்னொரு சிஃபத் அங்கு இல்லை என்னும் படைப்புக்களின் நிலையை விட்டும் பரிசுத்தமானவன் அல்லாஹ். ஆனால் எந்தக் குணாதிசயத்தை அவன் வெளிப்படுத்த நாடுகிறானோ அது அங்கே வெளிப்படும் என்பதான ஜுஹூர் பற்றிய கோட்பாடு இங்கே தேவைப்படுகிறது. அவனுடைய கோபம் வெளிப்படும் இடத்திலும் அவனுடைய ரஹ்மத் – அருள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அவனுடைய நாட்டம் (இராதா) எந்த வெளிப்பாட்டை நாடுகிறதோ அதுவே வெளிப்படுகிறது.

(தொடரும்...)

1 comment:

  1. Tntj brothers please answer this intellectual questions.

    ReplyDelete