Sunday, January 13, 2013

சும்மா இரு”சும்மா இருப்பதே சுகம்” - மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஆன்மிக வாசகங்களுள் ஒன்று.

சோம்பேறிகளின் பொன்மொழி என்றும் திண்ணைத் தீவிட்டிகளின் சித்தாந்தம் என்றும் உழைக்காமல் வயிறு வளர்க்க நினைக்கும் சோற்றுத் தடியர்கள் ஆன்மிகம் என்னும் போர்வையில் கண்டுபிடித்து வைத்த குறுக்கு வழிகளின் இதுவும் ஒன்று என்றும் விமரிசனம் செய்யப்பட்ட வாசகம் இது.

உண்மையில் இந்த வாசகம் சோம்பேறிகளின் அரிப்புக்குச் சொறிந்து கொடுத்து சொகுசு நல்கும் நோக்கில் கூறப்பட்ட ஒன்றல்ல.

இது சோம்பேறி குரு ஒருவர் சோம்பேறிச் சீடனுக்கு உபதேசித்த ஒன்றல்ல.
இவ்வாசகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேறு கோணத்தில் இருந்து அணுகுவோம். “சும்மா இரு” என்று சொல்வது “ஓய்வு கொள்” என்று சொல்வது போன்ற அறிவுரை ஆகும்.
யார் ஓய்வெடுக்க முடியும்? களைப்பாக இருப்பவர்தான். களைப்பு எவருக்கு வரவில்லையோ அவர் ஓய்வெடுப்பது போல் நடிக்கலாமே அல்லாது உண்மையில் ஓய்வெடுக்க முடியாது.

களைப்படைய வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? உழைக்க வேண்டும். காலை முதல் மாலை வரை வியர்வை பிழியப் பிழிய உழைக்கும் உழைப்பாளியே இரவில் ஆழ்ந்த ஓய்வுடன் உறங்குவான். ”துஞ்சுவது போலும் சாக்காடு” என்கிறார் வள்ளுவர். அவன் செத்தது போல் உறங்குவான்.

எனவே உழைப்பு இல்லை எனில் களைப்பு இல்லை. களைப்பு இல்லை எனில் ஓய்வு இல்லை. ஆதலால், ”ஓய்வெடு” என்று சொல்வது சோம்பேறியைப் பார்த்துச் சொல்லப்பட்டதல்ல, உழைப்பவனைப் பார்த்துச் சொல்லப்பட்டது. உழைக்காத சோம்பேறிப் பயல்கள் அந்த வாசகத்தைப் பின்பற்றுவதற்கு எடுத்துக் கொண்டால் அது அந்த அறிவுரையைச் சொன்னவரின் குற்றம் கிடையாது.

அதுபோல், “சும்மா இரு” என்பது சோம்பேறியைப் பார்த்துச் சொல்லப்பட்ட வாசகம் அல்ல. அது மூளையைக் கசக்கிச் சிந்திப்பவனைப் பார்த்துச் சொல்லப்பட்டது. சிந்திக்கவே மறுக்கின்ற மூளைச் சோம்பேறிகள் இதனை மேற்கோள்காட்டினால் அதற்கு ஆன்மிகம் என்ன பண்ணும்?

இந்தச் சித்த வாக்கினை முழுமையாகச் சொன்னால் “சும்மா இரு சொல் அற” என்றாகும். என்வே மனத்தை சொற்கள் அற்ற நிலையில் வைப்பதையே இது குறிக்கிறது. எனவே இது சிந்தனை செய்வதில் உச்ச நிலைக்குச் செல்லும் சீடனை –சாதகனை நோக்கிச் சொல்லப்பட்டது என்பது தெளிவு.

மனதின் இயற்கை நிலை என்ன? சிந்தனைகளை உற்பத்தி செய்வது. மனம் என்பது எண்ணங்களின் அமுத சுரபியாக இருக்கிறது. சராசரி மனிதனின் மனத்தில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ அறுபதாயிரம் எண்ணங்கள் தோன்றி மறைகின்றன என்று உளவியல் கூறுகிறது. அதில் ஒரு சதவிகிதம்தான் அவனுடைய அன்றாட வாழ்க்கைக்கு அவசியமானதாக இருக்கிறதாம். 99% எண்ணங்கள் மனோசக்தியை விரயம் செய்வதாகவே முடிகின்றன. இந்த விரயத்தைத் தடுத்து உள்முகமாக ஆற்றலைத் திரட்டச் செய்யும் விரதம்தான் தியானம் என்று சொல்கிறோம்.

தேவையற்ற எண்ணங்கள் மனத்தில் உற்பத்தி ஆவதைத் தடுத்து நிறுத்துவதையே பதஞ்சலி முனிவர் யோகம் என்கிறார்: “யோகம் சித்த வ்ருத்தி நிரோத்த”.

நவீன குருமார்களின் முன்னோடிகள் என்று இந்தியாவிலிருந்து உதித்த முக்கியமான இருவர் – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியும் ஓஷோவும்கூட தியானம் என்பதை சிந்தனை இல்லாத மனநிலை என்றே முன்வைத்தார்கள். எண்ணம் என்பது இல்லாத நிலையில் மனம் என்பதே இல்லை என்பதால் தியானம் என்பது மனமற்ற நிலை என்று ஓஷோ விளக்கினார்.

நடக்கின்றபோது நமக்குக் கால்களின் இயக்கம் அவசியமாகிறது. ஆனால் சேர வேண்டிய இடத்தை அடைந்து நாற்காலியில் அமர்ந்த பின்னரும் கால்கள் அசைந்துகொண்டே இருந்தால், அதுவும் உங்கள் கட்டுப்பாட்டை மீறி!, நீங்கள் இயல்பான நிலையில் இல்லை என்று பொருள். மனம் அதேபோல் தன்னிச்சையாக சிந்தித்துக் கொண்டே இருந்தால் அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம். இந்த நிலையில் மனம் ஒன்றாக நிற்காது. தசாவதாரம் என்ன, சதாவதாரம் எடுத்துவிடும். இந்த நிலையைத்தான் ஜார்ஜ் குருஜீஃப் சொன்னார்: Man is polypsychic (மனிதன் பலமனவியல் கொண்டவன்). இன்னொரு உதாரணமும் சொன்னார்: எஜமான் இல்லாத வீட்டில் நூறு வேலைக்காரர்கள் ஒவ்வொருவரும் தானே எஜமான் என்று சொல்லிக்கொண்டு அதிகாரம் செய்வது போல் இருக்கிறது சராசரி மனிதனின் மனம்.

உலக வாழ்வும் தியானமும் எப்படி சமனமாவது என்னும் கேள்விக்கு ஒரு ஜென் கதை அற்புதமாக விடை சொல்கிறது:

“ஜோஷு என்னும் ஜென் குருவிடம் புதிய சீடன் ஒருவன் கேட்டான், ‘நான் இப்போதுதான் மடத்தில் சேர்ந்திருக்கிறேன். எனக்கு தியானம் கற்றுத் தாருங்கள்’
‘நீ உன் அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டாயா?’ என்று கேட்டார் ஜோஷு.
’ஆமாம், குடித்துவிட்டேன்’ என்றான் அவன்.
’கிண்ணத்தைக் கழுவிக் கவிழ்த்து வை’ என்று சொன்னார் ஜோஷு. இதைக் கேட்ட கணத்தில் அந்தச் சீடன் ஞானம் அடைந்தான்.”

(ஜென் கதைகளில் இப்படித்தான் சீடர்கள் சட்டென்று ஞானம் அடைந்தார்கள் என்று சொல்லப்படும். இதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஒரு புரிதல் உங்கள் வாழ்க்கைப் போக்கையே மாற்றிவிடலாம் அல்லவா? அதைத்தான் இங்கே ஞானம் என்று சொல்லப்படுவதாக விளங்கிக்கொள்ளலாம். ஞானம் என்பது சட்டென்று நிகழ்வது என்பதாகவே ஜென் நெறி சொல்கிறது. ஜென் தத்துவத்தை விளக்கும் ஓஷோவின் ஒரு நூலின் பெயர் (The Sudden Clash of Thunder”)

தியானத்தன்மை நம் அன்றாட வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்க வேண்டும் என்பதை அனைத்து ஆன்மிக நெறிகளும் அழுத்திச் சொல்கின்றன. இல்லையேல் ஆன்மிகம் என்பது வாழ்க்கைக்கு எதிரானது என்றே சொல்ல வேண்டியிருக்கும்.
ஆனால், ஒரு வேலையைச் செய்து முடித்த பின்னும் மனம் அதை முடிக்காமல் தொடர்ந்து சிந்தனையில் அதைத் தொடரும்போது மனதின் நலம் பாதிக்கப்படுகிறது. “கஞ்சியைக் குடித்தபின் கிண்ணத்தைக் கழுவிக் கவிழ்த்து வை” என்று ஜோஷு சொல்வது ஒரு வேலையை முடித்துவிட்டால் மனத்தை அதன் சிந்தனைகளை விட்டும் சுத்தமாக்கி வை என்பதைத்தான்.

அவ்வாறு உலக வேலைகளை விட்டும் திரும்பிய நிலையில் உள்முகமாக கவனத்தை நிறுத்துவதும் நம்முடன் நீங்காமல் நம்மைத் தாங்கி நிற்கும் பரம்பொருளுடன் லயித்திருப்பதும் தியானத்தின் தூய நிலையாகிறது. இந்த விஷயம் திருக்குர்ஆனில் பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது:
“எனவே நீர் ஓய்ந்ததும் முயல்வீராக
மேலும் உம் இறைவனிடம் சார்ந்துவிடுவீராக”
(94:7,8)

”சும்மா இருப்பது” என்று சொன்னால் வேலைகள் ஏதுமின்றிச் சோம்பேறியாக காலம் கடத்துவது என்று புரிந்து வைத்திருப்பது எவ்வளவு தூரம் தவறானது என்பதை இந்நேரம் நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஓய்வு என்பது மிக அற்புதமானதொரு வாய்ப்பு. அது இறைவனின் பக்கம் சார்ந்துகொள்வதற்காக நமக்கு அளிக்கப்படும் ஒரு வரம் என்னும் கோணத்தில் சிந்தித்துப் பாருங்கள், ஓய்வு எத்தனைப் பெரிய விஷயம் என்பது புரியும். ஆனால் நாம் உழைப்பு என்பதை எப்படி வீணாக்கிக் கொண்டிருக்கிறோமோ அதைவிட அதிகமாகவே ஓய்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.

”சும்மா இருப்பது” என்பது பற்றி இன்னொரு குறிப்பு. இந்தச் ’சும்மா’ என்னும் சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று அகராதியில் காணாத ஒன்றைக் கேட்டு தமிழாசிரியரை ‘ஓட்ட’ வேண்டும் என்னும் நோக்கில் சிலர் அகராதித்தனமாகக் கேட்பது உண்டு. அவர்களுக்கு நான் சொல்லும் பதில் ஒன்றுண்டு. அது எத்தனை தூரம் வேர்ச்சொல்லியல் – மொழியியல் ரீதியாகச் சரியானது என்று எனக்குத் தெரியாது, ஆனால் அந்தப் பதில் மிகவும் பொருத்தமானது. “சும்மா என்பது தமிழ் அல்ல. அது அரபி மொழிச் சொல். சும்மா / சும்மத் என்றால் செவிட்டுத்தனம் என்று பொருள். சும்மா இரு என்றால் உங்களை எதிர்வினை ஆற்றத் தூண்டும் பேச்சுக்களைக் கேட்டாலும்கூட எதிர்வினை ஆற்றாமல் இருப்பது. அதாவது ஏச்சுப் பேச்சுக்களைக் கேட்டும் கேளாதது போல் இருந்துவிடுவது. அதாவது பதில் பேசாமல் மௌனமாக இருப்பது என்று பொருள் வந்துவிடுகிறது. இதையே இன்னும் நீட்சி செய்து பார்த்தால் மனத்தில் ஒரு எண்ணம் வந்ததும் அதற்கு ஒரு தொடர்ச்சியைத் தரவேண்டும் என்னும் நமைச்சல் / தூண்டுதல் மனத்திற்கு வருகிறது. அதை வேண்டுமென்றே நிறுத்தி வைத்து மனத்தின் எண்ணம் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து பாருங்கள். எண்ணங்களின் உற்பத்தி கணிசமாகக் குறைந்து கொண்டே வந்து எண்ணமற்ற மௌன நிலை ஒருநாள் நிச்சயம் வாய்க்கும். அதன்பின் நாம் விரும்பிய போது எண்ணவும் விரும்பிய போது எண்ணமற்று இருக்கவும் கைக்கூடும்.

சும்மா இருப்பது என்பது அத்தனை எளிது அல்ல. ஏதோ ஒரு திரைப்படத்தில் வடிவேலு ’சும்மா இருக்கிறேன்’ என்று சொல்ல அதை ஒருவன் இளக்காரமாகப் பேசுவான். ஒரு நாள் முழுவதும் சும்மா இருக்க முடியுமா? என்று அவனிடம் பந்தயம் கட்டி அவனை ஒரு அரசமரத்தடியில் உட்கார வைத்துப் பாடாய்ப் படுத்துவானே, உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதுதான் எல்லோரிடமும் பொதுவாக இருக்கும் பார்வை, அதாவது சும்மா இருப்பது என்றால் வேலை செய்யாமல் இயங்காமல் இருப்பது என்பது.

இந்த நிலையிலிருந்து இன்னும் சற்றே ஆழமானது, சும்மா இருப்பது என்றால் பேசாமல் இருப்பது என்பது. இதையே பலர் மௌனமாக இருப்பது என்று சொல்லிக் கொள்கிறார்கள். ‘ஒரு நிமிட மௌன அஞ்சலி’ என்றெல்லாம் சொல்லிக்கொண்டு எழுந்து பேசாமல் நிற்கும் காமெடி ஒன்று செய்கிறார்களே, அது இந்தப் புரிதலின் அடிப்படையில்தான்.

இன்னும் ஆழமான ஒரு பார்வை என்னவெனில், சிந்தனை இன்றி இருப்பது. மனமற்ற நிலை என்று சொல்லப்படுவது. இதுவே உண்மையில் மௌனம் என்பது. இந்த நிலையே தியானம் என்றும் சொல்லப்படுகிறது. வெறும் விழிப்புணர்வு மட்டும் இருக்கும் நிலை. அதாவது ஒளி / வெளிச்சம் மட்டும் இருக்கிறது. அது வெளிச்சமிட்டுக் காட்டும் ‘பொருள்’ எதுவுமில்லை. ஒளியை மட்டும் காணும் நிலை இது.

விண்ணேற்றம் சென்று வந்த நபிகள் நாயகத்திடம் அவர்களின் தோழர்கள் மிக ஆர்வமாக ஒரு கேள்வி கேட்டார்கள், ‘அல்லாஹ்வைக் கண்டீர்களா?” என்று. அதற்கு மிகவும் அருமையானதும் தத்துவ ரீதியாகப் பூடகமானதுமான (எனவே பலர் அவரவர் மதிநிலைக்கேற்ப இப்படியும் அப்படியும் அர்த்தம் கொண்டு கருத்து வேறுபாடுகளை உண்டாக்கிக்கொள்ள வாய்ப்பளிப்பதுமான) ஒரு பதிலை நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “ஒளியைக் கண்டேன்.”

இறைவன் ஒளிமயமானவன். ஒளி என்பது அவனின் திருப்பண்புகளில் ஒன்று. எனவே நபி(ஸல்) இறைவனின் சுயத்தைக் காணவில்லை அவனின் திருப்பண்பைத்தான் கண்டு வந்தார்கள் என்று ஒரு பார்வை இருக்கிறது.

இன்னும் ஆழமான ஓர் அர்த்தமும் தொனிக்கிறது. ஒளி (நூர்) என்பதற்கு இலக்கணம் என்னவெனில் எது தன்னையும் காட்டிக்கொண்டு தான் அல்லாத பிறவற்றையும் காட்டி நிற்கிறதோ அதுவே ஒளி. அவ்வகையில் இறைவன் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கிறான். அதாவது சிருஷ்டி முழுவதையும் அவனே காட்டி நிற்கிறான். அவனை அவனைக் கொண்டேதான் காணமுடியும். அவனல்லாத வற்றையும் அவனைக் கொண்டேதான் காணமுடியும். எனவே, நபி(ஸல்) அவர்கள் மிஃறாஜ் என்னும் விண்ணேற்றத்தில் எந்தப் படைப்பும் இடையீடு அற்ற நிலையில் இறைவனைக் கண்டார்கள், அதாவது இறைவனால் காட்டப்படும் பொருள் ஒன்றுமற்ற நிலையில் அவன் தன்னையே காட்டித் தரக் கண்டார்கள்!

மனமற்ற நிலை, சிந்தனை அற்ற நிலை, இறையொளியில் மனம் லயித்து நிற்கும் நிலை, இறைவன்பால் சார்ந்திருக்கும் நிலை இதுதான். எனினும், இறைவனில் இருக்கிறேன் என்னும் உணர்வு இருக்கத்தான் செய்யும். அந்த உணர்வே ஒருவகை சிந்தனைதான் என்று ஞானிகள் சொல்கின்றனர். “சிந்தனையே இல்லாத நிலையிலும் சிந்தனையே இல்லை என்னும் சிந்தனை மட்டும் இருக்கும்” என்று ஃபைஜி ஷாஹ் (ரஹ்) அவர்கள் சொல்வது என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

1 comment:

  1. //“சிந்தனையே இல்லாத நிலையிலும் சிந்தனையே இல்லை என்னும் சிந்தனை மட்டும் இருக்கும்” //

    என்ன ஒரு அற்புதமான வாக்கியம். தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது.ஜாக்ரத் என்ற விழிப்புணர்வுடன் கூடிய தியான நிலை!

    சுமை தூக்குவதற்குப் பயன்படும் துணிச்சுருளை சும்மாடு என்கிறார்கள்.(மனச்)சுமையை இறக்கி வைத்துவிட்டால் சும்மாட்டிற்கு வேலையில்லை. துணிச்சுருள் உதறப்பட்டு வெறும் துணியாகிவிடும் துண்டுபோல அதனை வைத்தே சுமை தூக்கியதால் வந்த முக வேர்வையைத் துடைத்துக் கொள்ளலாம்.சுமை தூக்கச் சும்மாடு. சுமை போனவுடன் சும்மா!
    நல்ல பதிவிற்கு நன்றி அய்யா!

    ReplyDelete