Friday, January 4, 2013

ஒரு பரப்பியல் நூல் மீதான பார்வைகள் - 1

(இஸ்லாமியக்  கருத்தியல் அலசல்கள்)

 விடுமுறைக்காகக் கம்பம் வந்து இரண்டு நாட்களாகின்றன. மாமி வழக்கமாக அமர்ந்து ஓதும் இடத்தில் ஜன்னல் மாட்டில் ’மன்ஜில்’, அவ்ராதுகள், மஸ்னூன் துஆக்கள் போன்ற நூல்கள் இருக்கும். இம்முறை புதிதாக ஒரு நூல் நின்றபடி அலங்கரித்துக் கொண்டிருந்தது என் கண்ணைக் கவர்ந்தது. அது என்ன நூல் என்று வாங்கிப் பார்த்தபோதே நிச்சயமாக அது என் மனதைக் கவராது என்று தெரிந்தது. ஆனால் தங்கள் கூட்டத்திற்கு முஸ்லிம்களின் மனங்களைக் கவர்ந்திழுக்க வேண்டும் என்னும் நோக்கில்தான் அந்த சிறு நூல் எழுதப்பட்டிருக்கிறது. நூலின் தலைப்பு “இஸ்லாத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகள்”. அல்-மதீனா மீடியா என்னும் பதிப்பகத்தால் இலவச வெளியீடாக ஆகஸ்டு 2012-ல் வெளிவந்துள்ள இந்நூலின் தொகுப்பாசிரியர் பணவை.S.H.யூசுஃப் மியா என்பவர்.

வஹ்ஹாபிய சித்தாந்தக் கருத்துக்களை “இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படைக் கொள்கைகள்” என்று தலைப்பிட்டு முன்வைக்கப்பட்டுள்ள இந்த நூற்பிரதியை ஆக்கியவர் யார் என்று தேடியபோது P.ஷாஜஹான் எழுதியுள்ள பதிப்புரை விடை பகர்ந்தது: “இந்நூலில் மூல ஆசிரியர்களான ஷேக் அப்துல் அஜீஸ் பின் பாஸ் மற்றும் ஷேக் முஹம்மது சுலைமான் அத்தமிமி அவர்களின் சீரிய பணியை தமிழ் பேசும் முஸ்லிம்கள் படித்து பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நூலை இலவசமாக வெளியிடுகிறோம்”

முதலின் இந்த நூலின் தலைப்பை முன்னிட்டு ஒருசில கருத்துக்கள். இந்நூலை முழுமையாகப் படித்துவிட்டு ‘இதை யார் உங்களுக்குக் கொடுத்தது? இது மாதிரியான நூல்களைப் படித்து உங்கள் இறைநம்பிக்கையை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னபோது ‘இதில் ஆயத்துக்களைப் போட்டுத்தானே எழுதியிருக்காங்க’ என்று மாமி மிக அப்பாவியாகச் சொன்னார். பிரச்சனையே அதுதான். ஆயத்துக்களைப் போட்டு எதைச் சொன்னாலும் நம்பிவிடுவார்கள். ஆயத்துக்களின் மீதுதான் அவர்களுக்கு எவ்வளவு அபாரமான நம்பிக்கை! நான் அவர்களிடம் சொன்னேன், “எழுபத்து மூன்று கூட்டத்தினரும் தங்களின் பிரச்சார நூல்களில் குர்ஆன் ஆயத்துக்களாக அள்ளிக் கொட்டி ஆதாரம் காட்டித்தான் கொண்டு வருவார்கள். பிறகு உங்களைப் போன்றவர்கள் எழுபத்து மூன்று கூட்டங்களையும் சரி என்று ஏற்று பின்பற்ற வேண்டி வரும்”. இன்று நடந்துகொண்டிருப்பதும் அதுதான். இதே தலைப்பில் ஒவ்வொரு கூட்டமும் நூல் வெளியிட முடியும். செய்துகொண்டும் இருக்கிறார்கள். ‘இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படைக் கொள்கைகள்” என்று தலைப்பிட்டிருப்பதன் அப்பட்டமான அரசியல் என்னவென்றால் ”நாங்கள்தான் உண்மையான இஸ்லாம். மற்றவர்கள் எல்லாம் போலிகள்” என்று காட்டுவதாகும். சொன்னது போல் இதே தலைப்பில் ஒவ்வொரு குழுவும் நூல் வெளியிட முடியும்.

நாம் என்ன செய்வது? இந்தத் தலைப்பையே கட்டுடைத்து மாற்றி அமைக்க வேண்டியதுதான். அதாவது, “இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படைக் கொள்கைகள் – ஓர் வஹ்ஹாபியப் பார்வை / விளக்கம்” என்றோ “வஹ்ஹாபிஸம் வலியுறுத்தும் அடிப்படைக் கொள்கைகள்” என்றோ இந்நூலின் தலைப்பு இருப்பதே நியாயம். இந்நூலாசிரியர்கள் வாசகரின் காதில் சுற்ற நினைப்பது போல் வஹ்ஹாபிஸம் = இஸ்லாம் என்னும் சூத்திரமெல்லாம் அடியேனிடம் செல்லுபடி ஆகாது அல்லவா?

இந்நூலுக்கு இருவர் அணிந்துரை வழங்கியுள்ளனர். ஒருவர் சென்னை மக்கா மஸ்ஜிதின் தலைமை இமாமும் அழகிய கடன் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமானா மௌலானா ஷம்சுத்தீன் காஸிமி. இன்னொருவரின் பெயர் ‘Dr. அப்துல்லாஹ் பெரியார் தாசன்’ என்று அச்சாகியுள்ளது. இந்தப் பெயரைப் பார்த்துவிட்டு எனக்கோ ஒரே குழப்பம். அவர் அப்துல்லாஹ் என்றால் பெரியார் தாசனாக இருக்க முடியாது. பெரியார் தாசன் என்றால் அப்துல்லாஹ்வாக இருக்க முடியாது. (இருவருமே டாக்டராக இருக்கலாம். அதில் குழப்பம் ஏதுமில்லை!)

இவ்விருவர் வழங்கியுள்ள அணிந்துரைகளை உடைத்து எழுதப் புகின் அதுவே ஒரு நூலாகிவிடும். எனவே முன்னவர் அளித்திருக்கும் அணியான உரையிலிருந்து ஒரு புள்ளி மட்டும்:
“அறியாத பாமர மக்கள் இதுபோன்ற வழிகேட்டில் விழுவதற்கு, அவர்களுக்கு அல்லாஹ்வைப் பற்றியும் அவனது நபிமார்கள் பற்றியும் நல்லடியார்கள் பற்றியும் கொள்கை (அகீதா) அடிப்படையிலான அறியாமையே காரணமாகும். அகீதாவில் குழப்பம் ஏற்பட்டுவிட்டால் அது ஈமானின் அஸ்திவாரத்தையே குழப்பியதாகும். அதன்பிறகு எத்தனை தொழுகைகள், எத்தனை நோன்புகள், ஏராளமான ஜகாத்துகள், தாராளமான ஸதக்காக்கள், இபாதத்துகள் செய்தாலும் அதனால் எந்த பலனும் இல்லை. ஏனெனில் அகீதா சீர்கெட்டுவிட்டால் மேலே சொன்ன வணக்கங்களும் கூட வழக்கங்களாக மாறிவிடும்”

இந்தக் கருத்து என்னை வெகுவாகக் கவர்ந்தது. நான் பலபேரிடம் பலமுறை சொல்லி வந்திருப்பது அச்சுபிசகாமல் அப்படியே உள்ளது. இக்கருத்துடன் என் மனம் முழுவதும் ஒத்துப்போகிறது. ஆனால் இதனைத் தொடர்ந்து அவர் எழுதியுள்ள வரியுடன் நான் முற்றிலும் முரண்படுகிறேன். அவர் எழுதியிருக்கிறார்: “எனவே பொதுமக்கள் இதுபோன்ற நூல்களைப் படித்து முதலில் தங்களுடைய அகீதாக்களை சீர்செய்து கொள்ள வேண்டும்”. Very bad. இதன்மீது என்னுடைய கருத்து என்னவெனில் “எனவே பொதுமக்கள் இதுபோன்ற குழப்பவாதிகளின் தவறான விளக்கங்கள் உள்ள நூல்களைப் படித்துத் தங்களுடைய அகீதாக்களைப் பாழாக்கிக் கொள்ளக் கூடாது” என்பதுதான்.

என்னுடைய நிலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஓர் உதாரணம் சொல்கிறேன்: நியாபக சக்திக்குத் தேவாங்கு லேகியம் என்று விற்றுக் கொண்டிருப்பவனை நான் எதிர்க்கிறேன் என்றால் நியாபக சக்திக்கு நான் எதிரானவன் என்றோ அல்லது மக்கள் நியாபக சக்தி பெற்றுவிடக் கூடாது என்று கருதுபவன் என்றோ பொருள் அல்ல. மாறாக, நான் அந்த தே.லேகியத்திற்கு எதிரானவன் என்றுதான் பொருள். அதை ஏன் நான் எதிர்க்கிறேன் என்பதற்குத்தான் நான் விள்க்கம் தரவேண்டும். “நேற்று என் நண்பர் ஒருத்தர் இந்த லேகியத்தை வாங்கி ஒரு ஸ்பூன் சாப்பிட்டார் ஐயா. விடிந்ததும் அவருக்குத் தான் யார் என்ற மெமரியே பறிபோய் கைப்புள்ள கணக்காகப் பேந்த பேந்த முழிச்சார்” என்பது போல் விளக்கம் தரலாம் அல்லவா?

நூலின் உள்ளே போனோமெனில் முதல் அத்தியாயத்தின் தலைப்பு “இஸ்லாத்தில் வலியுறுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் விதிகள்” என்றுள்ளது. அதன் ஆரம்பம் சூரத்துல் அஸ்ரு (அல்குர் ஆன் -103:1-3) முழுமையாகத் தரப்பட்டு அதன் கீழ் இப்படி ஒரு மேற்கோள் தரப்படுகிறது:
“இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :-
குர்ஆனில் வேறு அத்தியாயங்கள் அருளப்படாவிடினும், இந்த ஓர் அத்தியாயத்தை மட்டும் சிந்தித்துப் பார்த்தாலே மனிதன் நேர்வழி பெற போதுமானதாகும்.”

இந்தக் கருத்தைப் பற்றி வெகு நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். இதை இந்நூலில் இவர்கள் எடுத்துப் போட்டிருப்பது பற்றியும் ஆச்சரியம் தோன்றியது. இமாம் ஷாஃபி (ரஹ்) என்று போட்டிருக்கிறார்கள். இறைநேசர் என்று நான் கருதும் ஒருவருக்குத்தான் இப்படி ‘ரஹ்மத்துல்லாஹி அலைஹி’ என்னும் வாழ்த்தை நான் சொல்வேன். இறைநேசராக நான் கருதாத முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்திக்கோ அபுல் அலா மௌதூதிக்கோ இப்படி நான் சொல்லவே மாட்டேன். இந்நூலின் ஆசிரியர்கள் என்ன கருத்தில் போட்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இரண்டு வாய்ப்புகள் உள்ளன:
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களை இறைநேசர் என்று இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் அல்லது இறைநேசர் அல்லாதாருக்கும் இப்படிப் போடலாம் என்று ஏற்றுக் கொள்கிறார்கள்.

மேலும் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் கருத்து சூறத்துல் அஸ்ரு பற்றி அவர்கள் சொன்னது. இறைநேசர்களின் கருத்துக்கள் நிச்சயமாக குர் ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில்தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. இதே நம்பிக்கை இந்த நூலாசிரியர்களுக்கும் இருப்பதால்தான் போட்டிருக்கிறார்களா?

’இறைவனுக்கு இணை வைக்காதீர்கள். அவனுக்குத் துணையைத் தேடாதீர்கள்’ என்று கூறி அதற்கு (78:18)-ஆம் திருவசனத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். அதன் தமிழாக்கம் மிக அழகாக இருக்கிறது:
“மேலும் மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்கே உரியன. ஆகவே அல்லாஹ்வுடன் மற்றெவரையும் நீங்கள் பிரார்த்தித்து அழைக்க வேண்டாம்” (78:18).

மூலத்தில் ”ஃபலா தத்ஊ” என்றுள்ளதை “பிரார்த்தித்து அழைக்க வேண்டாம்” என்று மொழிபெயர்த்திருப்பது சரியானதாகும். ஏனெனில் சில அரைவேக்காடுகள் அதைப் பொதுவாக “அழைக்காதீர்” என்று மட்டும் மொழிபெயர்த்துக் கொண்டு ‘பள்ளிவாசலுக்குள் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அழைக்கக்கூடாது’ என்று வாதாடுகிறார்கள். அப்படிப் பொருள் கொண்டால் ‘மோதீனாரே’ என்றோ ‘யா ஹஜ்ரத்’ என்றோ நீங்கள் அழைப்பது ஷிர்க் ஆகிவிடும். ஃபேன் ஸ்விட்சைப் போடுவதற்காக நாம் மோதீனாரைத்தான் அழைக்க முடியும். அதற்கு அல்லாஹ்வை எப்படி அழைக்க முடியும்? அந்தச் சிறு உதவியையும் அல்லாஹ்தான் நிறைவேற்றித் தருகிறான் எனபதுதான் தவ்ஹீது கொள்கை. அதற்காக, “மோதீனாரே! அந்த ஃபேன் ஸ்விட்சை ஆன் செய்யுங்க” என்று கேட்பது ‘பிரார்த்தித்து அழைப்பது’ ஆகாது, ஷிர்க் ஆகாது! ‘உன்னிடமே உதவி தேடுகிறோம்’ என்னும் கொள்கைக்கு இது முரணும் ஆகாது. அது எப்படி என்பதைப் புரிந்துகொள்வதற்குத்தான் தவ்ஹீது என்னும் ஏகத்துவத்தின் அறிவு அவசியமாகிறது. இல்லையெனில் ’மோதீனாரே ஃபேன் ஸ்விட்சை ஆன் செய்யுங்கள்’ என்று கேட்பது ஷிர்க் என்று விளங்கிக்கொண்டு ‘அல்லாஹ்வே ஃபேன் ஸ்விட்சை ஆன் செய்வாயாக’ என்று ’அவனிடமே உதவி தேடுவதாக’ மனப்பால் குடித்துக் கொண்டிருந்தால் மார்க்கம் என்பது நடைமுறைச் சாத்தியம் அற்றது என்றாகிவிடும். இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள்.

தேவைக்குக் கடனாக ஐநூறு ரூபாய் வேண்டும் என்று என்னிடம் ஒருமுறை நண்பர் ஒருவர் கேட்டார். அவர் வஹ்ஹாபிசச் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர். அவரிடம் நான் வேறு என்ன சொல்ல முடியும், “நண்பரே! உங்களுக்குத் தேவைப்படுவதால் கேட்கிறீர்களா இல்லை சும்மனாச்சிக்கும் கேட்கிறீர்களா?” என்றேன். சற்று கோபமாகப் பார்த்தார். ’அர்ஜென்ட்டா ஐநூறு ரூபாய் வேண்டும் என்று கேட்டால் அது தேவை இல்லாமல் வேறு என்ன? உனக்குக் கூறு கழண்டு விட்டதா?’ என்று அவர் நினைத்திருக்க வேண்டும். ‘தேவைன்னுதானேங்க கேக்குறேன்’ என்றார். “நம் சகல தேவைகளையும் நிறைவேற்றித் தரும் இலாஹ் அந்த அல்லாஹ் ஒருவனே என்பதுதான் என்னுடைய கொள்கை. உங்களுக்கு எப்படி?” என்றேன். “எனக்கும் அதுதான் கொள்கை” என்றார். “நம் தேவைகளை நாம் அல்லாஹ்விடம்தான் கேட்க வேண்டும். வேறு யாரிடமும் கேட்கக் கூடாது என்பதில் உங்களுக்குக் கருத்து வேறுபாடு இருக்கிறதா?” என்று கேட்டேன். “இல்லை” என்றார். “தேவையை நிறைவேற்றும்படிக் கேட்பது உதவி கேட்பதுதானே? ’உன்னிடமே உதவி தேடுகிறோம்’ என்று அல்லாஹ்வை நோக்கிச் சொல்கிறோம் அல்லவா? அப்படியெனில் அவனிடம்தானே நீங்கள் உதவி கேட்க வேண்டும்? என்னிடம் ஏன் கேட்கிறீர்கள். இது ஷிர்க் ஆகாதா?” என்றேன். அவருக்கோ அவசரமாக ஐநூறு ரூபாய் தேவை! வேறு ஆளைப் பார்ப்போம் என்று கிளம்ப எத்தனித்தார். “நியாபகம் இருக்கட்டும். நீங்கள் வேறு எவரிடம் போய் இந்த உதவியைக் கேட்டாலும் சரிதான். உங்கள் கொள்கை படி அது ஷிர்க்தான். போங்கள்.” அவருக்கே நன்றாகத் தெரியும், பள்ளிவாசலில் அமர்ந்து கையேந்தி அல்லாஹ்விடம் அழுது கேட்டாலும் அந்த உதவியை அவன் ஒரு மனிதரின் மூலமாகத்தான் நிறைவேற்றுவானே தவிர அவனே நேரிட்டு வந்து கொடுக்க மாட்டான். அதிலும் அவனின் பெரும்பான்மையான வழிமுறை என்னவெனில் அந்தத் தேவையை நீங்கள் ஒரு மனிதரிடம் வாய்விட்டுக் கேட்டால்தான் அவர் வழியாக அல்லாஹ் உதவி செய்வான். அப்படித்தான் இதுநாள் வரை உலகில் நடந்து வருகிறது. இனியும் அப்படித்தான் நடக்கும். ஏனெனில் இது அல்லாஹ்வே உண்டாக்கியிருக்கும் நடைமுறை.

ஒரு சகோதரர்  பாதாளச் சாக்கடையில் விழுந்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். “ஐயா என்னைத் தூக்கி விடுங்க” என்று அவர் கதறுகிறார். இப்போது அவருக்கு அல்லாஹ்தான் அந்தத் தேவையை நிறைவேற்றித் தர வேண்டும். அவன்தான் அந்த உதவியைச் செய்ய முடியும். அவனை அன்றி வேறு யாரும் எவருக்கும் எந்தச் சின்ன உதவியையும்கூட நிறைவேற்ற முடியாது என்பது நான் விளங்கியிருக்கும் தவ்ஹீது (ஏகத்துவம்) சார்ந்த பார்வை. “உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்னும் சூறா ஃபாத்திஹா வசனக் கருத்து அந்தப் பார்வையை வலியுறுத்துகிறது. ஆனால், இறைவனின் உதவி சக உயிர்களின் வழியாகத்தான் நிறைவேறும் என்பதும் சக உயிர்களிடம் உதவி கேட்பது திருவசனத்திற்கு முரணாகாது என்பதும் அது எவ்வாறு என்னும் விளக்கமும் இருந்துவிட்டால் சிக்கல் இல்லை. ‘அதெல்லாம் கிடையாது அல்லாஹ் அல்லாத வேறு யாரிடம் உதவி கோரினாலும் அது ஃபாத்திஹா வசனத்திற்கு மாற்றமானது; அது ஷிர்க்’ என்று விளங்கி வைத்திருக்கும் மேற்படி சகோதரர் என்ன செய்வார். சாக்கடையில் விழுந்திருப்பவரிடம் போய், “சகோதரரே! நீங்கள் ஏன் மனிதர்களிடம் உதவி தேடுகிறீர்கள்? இது ஷிர்க் என்பது உங்களுக்குத் தெரியாதா? கையேந்தி அல்லாஹ்வை அழைத்து உதவி தேடுங்கள். மனிதர்கள் உதவி செய்ய வந்தால் உதறித் தள்ளிவிடுங்கள். தவ்ஹீதுக் கொள்கையில் உறுதியாக நில்லுங்கள்” என்றுதான் சொல்வார். அவர் கொள்கையின்படிக்கு அப்படித்தான் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் ஒருவன் மனிதாபிமானமே இல்லாதவன் என்றுதான் பொருள்படுமே தவிர ’ஆகா என்னே இவரின் தவ்ஹீதுக் கொள்கைப் பற்று’ என்று பாராட்ட முடியாது. ஏனெனில் அவர் கொண்டுள்ள விளக்கம் போலித் தவ்ஹீது ஆகும். மனத்தளவில் தவ்ஹீது கொள்கையில் நின்றாலும் இப்போது அந்த அப்பாவி மனிதர் உடலளவில் நின்று கொண்டிருப்பது சாக்கடையில் ஆயிற்றே? அவருக்குக் கைக் கொடுத்துத் தூக்கி விடாமல் ‘உதவி’ செய்யாமல் ‘அல்லாஹ்விடம் கேள் அவன் உதவுவான்’ என்று சொன்னால் அது மார்க்கம் அல்ல, மூர்க்கம்! ஆக, போலித் தவ்ஹீதைப் பின்பற்றினால் அந்தச் சகோதரர் சாக்கடையிலேயே நின்று கொண்டிருக்க வேண்டியதுதான். கியாமத்தில் அல்லாஹ்விடம் சொல்ல முடியுமா, ‘அல்லாஹ்! நான் உன்னிடமே உதவி தேடினேன். நீ ஏன் வரவில்லை. உன்னைக் கூப்பிட்டால் எவனோ குப்பன் சுப்பனெல்லாம் உதவி செய்ய வருகிறான். நீ ஏன் வரவில்லை?’ என்று. ‘கபோதிப் பயலே, தவ்ஹீதைத் தவறாக விளங்கிக் கொண்டு இப்போது என்மீதே குற்றம் சொல்கிறாயா? நீ சொன்ன குப்பன் சுப்பனெல்லாம் சுயமாகவா உனக்கு உதவி செய்ய வந்தான். அவனின் வழியாக உன்னிடம் வந்ததே என்னுடைய உதவிதானே? அதை மறுத்ததால் நீ என்னையே நிராகரித்துவிட்டாய்” என்றுதான் அவனிடம் சொல்லப்படும்.

“பிரார்த்தித்து அழைப்பது” என்பது எது ”பிரார்த்திக்காமல் அழைப்பது” எது என்பதை விளக்குவதற்காக இவ்வளவும் சொன்னேன். உதவிக்காக அழைப்பது என்பதை மட்டுமே வைத்து ஒருவர் பிரார்த்தித்து அழைக்கிறார் என்று குற்றம் சுமத்திவிட முடியாது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவும். “மகனே அந்த செல்ஃபோனை எடுத்து வா” என்று ஒரு தந்தை சிறிய உதவிக்காகத் தன் மகனை அழைக்கும்போது அதை நாம் ’பிரார்த்தித்து அழைத்தல்’ என்று விளங்குவதில்லை. அவர் தன் மகனை உதவிக்காகத்தான் அழைக்கிறார், ஆனால் மகனை இலாஹ் என்று பாவித்து அழைக்கவில்லை. அப்படி பாவித்தால் அது ஷிர்க் ஆகிவிடும். மகனை அவர் மகன் என்றே பாவித்து, அந்த உதவியை அவன் அவருக்குச் செய்வது ’ஃகித்மத்’ (பணிவிடை) ஆகும், அதனால் அவனுக்கு நன்மைகள் சேரும் என்ற அடிப்படையில்தான் அழைக்கிறார். எனவே, உதவிக்கு அழைப்பது என்பதை வைத்து முடிவு செய்யக்கூடாது. அல்லாஹ்வை அழைக்கும்போது அவனை இலாஹ் என்று விளங்கி அழைப்பதும், அவனல்லாதவர்களை உதவிக்கு அழைக்கும் போது அவர்களின் ஸ்தானத்தில் மட்டுமே கண்டு அவர்களை இலாஹ் என்று கருதாத நிலையில் ஷிர்க் என்பது உண்டாகாது.

இனி, இந்நூலாசிரியர்கள் அடிப்படைக் கொள்கைகள் (FUNDAMENTAL PRINCIPLES)
என்னும் தலைப்பின்கீழ் கொடுத்திருக்கும் விஷயங்களுக்கான ஸ்கெலிட்டனைப் பார்ப்போம்:
முதலாவது அடிப்படைக் கொள்கை:- படைப்பாளனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
இரண்டாவது அடிப்படைக் கொள்கை:- இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ் ஒருவனுக்கே முழுமையாக அடிபணிவது மற்றும் அவனுக்கு இணைவைக்காமல் இருப்பது ஆகியன முக்கிய அம்சங்களாகும்.
மூன்றாவது அடிப்படைக் கொள்கை:- இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
நான்காவது அடிப்படைக் கொள்கை:- இணைவைத்தல் என்ற பாவத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை அறிய வேண்டியது மிக முக்கியமானதாகும்.

ஆக, இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படைக் கொள்கைகளாக இந்நான்கையும் குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது புரிகிறது, இந்நூலுக்கான தலைப்பை “இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்” என்று வைக்காமல் ஏன் இடையே “வலியுறுத்தப்படும்” என்று போட்டிருக்கிறார்கள் என்பது. ஏனெனில் இந்த நான்கு கொள்கைகள் குர்ஆன் ஹதீஸில் ஆராய்ச்சி செய்து இவர்களாக வரையறுத்துக் கொண்டதே அன்றி குர்ஆன் ஹதீஸில் இப்படியொரு வரையறை கொடுக்கப்படவில்லை!

இதே போல் எவர் வேண்டுமானாலும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ’அடிப்படைக் கொள்கைகள்’ என்னும் பேரில் வரையறுத்துக் கொள்ள முடியும். அதன் உள்ளடக்கம் குர்ஆன் ஹதீஸில் சொல்லப்பட்டதாக இருக்குமே அல்லாது அந்த நிரல் – வடிவம் குர்ஆன் ஹதீஸில் உள்ளதாக இருக்காது என்பது திண்ணம்.

உதாரணமாக, தப்லீக் ஜமாத்தில் ”தீனின் ஆறு நம்பர்” என்று ஒரு கோட்பாடு இருக்கிறது. அந்த ஆறு நம்பர்கள் ஆவன:  இவைதான் தீனின் கூறுகள் என்று போதிக்கப் படுகின்றன. இந்த ஆறு அம்சங்களும் மார்க்கத்தில் உள்ளவைதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. இல்ம் என்பதும் திக்ரு என்பதும் மார்க்கத்தின் அம்சங்கள்தான். தஃவத் என்பது மார்க்கத்தின் அம்சம்தான். ஆனால் ’தீனின் ஆறு அம்சங்கள் இவைதான்’ என்ற ’வரையறை’ குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப் படவில்லை. எந்த ஹதீஸ் கிரந்தத்திலும் இதை அவர்கள் எடுத்துக் காட்ட முடியாது. இது குர்ஆன் ஹதீஸை ஆராய்ந்து மௌலவி இல்யாஸ் வகுத்துக்கொண்டதே தவிர நபி (ஸல்) அவர்கள் தந்த வரையறை அல்ல! (ஐயம்: அதை ஏன் ஆறு நம்பர் என்று அழைக்கிறார்கள்? நம்பர் என்பதற்கு அரபி வார்த்தையோ உருது வார்த்தையோ கிடைக்கவில்லையா? தீன் கொஞ்சம் பெப்பியாக இருக்கட்டும் என்று இப்படிச் சொல்லும் வழக்கம் வந்ததா என்ன?)

நான் சார்ந்திருக்கும் சில்சிலாவில் தீனின் அடிப்படைகள் (FUNDAMENTALS OF DEEN) என்று ஐந்து விஷயங்கள் சொல்லப்படுகின்றன: இஸ்லாம், ஈமான், இஹ்சான், தக்வா மற்றும் தவ்ஹீது. இந்த ஐந்து அம்ச வரையறை குர்ஆன் ஹதீஸில் இவ்வாறே நேரடியாகச் சொல்லப்பட்டுள்ளதா என்று ஆராய்ந்தேன். புகாரி ஷரீஃபிலும் முஸ்லிம் ஷரீஃபிலும் காணக்கிடைக்கும் முத்தஃபக்குன் அலைஹியான ஸஹீஹான நபிமொழி ஒன்றில் (ஹதீஸே ஜிப்ரயீல் என்றழைக்கப்படும் நபிமொழியில்), இவற்றில் முதல் மூன்று அம்சங்களும் வருகின்றன. அதாவது இஸ்லாம், ஈமான், இஹ்சான் – இந்த மூன்றும் இதே வரிசையில் சுட்டப்பட்டு விளக்கமும் சொல்லப்பட்டு இது “தீன்” (மார்க்கம்) என்று நபி(ஸல்) அவர்களாலேயே சுட்டப்பட்டுவிட்டது. ”தீனின் மூன்று நம்பர்” என்று ஆதாரபூர்வமாக இதைத்தான் ஒருவர் சொல்ல முடியும். தக்வா என்பதும் தவ்ஹீது என்பதும் சிஷ்தியா ஆன்மிக நெறியைச் சேர்ந்தவர்களால், குர்ஆன்-ஹதீஸ் ஆராய்ச்சியில் அவர்கள் கண்டடைந்த முடிவுகளின் படிச் சேர்க்கப்பட்டு வரையறை செய்யப்பட்டவைதான். நான் அவர்களின் ஆராய்ச்சியை மதிக்கிறேன் என்ற அடிப்படையில், நான் ஒரு தக்லீத்வாதி என்பதால் மேற்கொண்டு கேள்வி கேட்காமல் அந்த வரையறையை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இஸ்லாம் ஈமான் இஹ்சான் என்று மூன்று மட்டும் கொண்ட வரையறை ஏன் வைத்துக் கொள்ளக்கூடாது – சஹீஹான ஹதீஸின் படியான ஆதாரபூர்வமான வரையறையாக அது இருக்குமே? அதனுடன் இரண்டு விஷயங்கள் ஏன் சேர்க்கப்பட வேண்டும்? என்று நான் நினைக்கவில்லை என்பதற்கு தக்லீத் மனப்பான்மைதான் காரணம். என் அறிவுக்கெட்டிய அளவில் ஃகாஜா மொய்னுத்தீன் சிஷ்தி (ரஹ்) அவர்களின் நிழல் பட்ட தூசிக்குக்கூட நான் சமமாக மாட்டேன் என்பதை நானறிவேன். எனவே அவர்கள் வரையறுத்துத் தந்ததை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தக்வா தவ்ஹீத் ஆகியவை குர்ஆன் ஹதீஸில் வலியுறுத்தப்படும் அடிப்படைக் கொள்கைகள் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இவ்விரண்டையும் அவர்கள் சேர்த்திருக்கிறார்கள். (ஹதீஸே ஜிப்ரயீலில் சொல்லப்படும் தீனின் மூன்றாம் அம்சமான இஹ்சான் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தரும் விளக்கத்தைக் குர்ஆன் – ஹதீஸ் அடிப்படையில் ஆராய்வதில் –தஹ்கீக் செய்து- சிந்தனை முன்னகரும்போது தக்வா மற்றும் தவ்ஹீத் ஆகிய இரண்டு அம்சங்காள் பிரதானப்படுகின்றன என்பதே என் புரிதல்.)

இதே போல் யாரேனுமொருவர் இஸ்லாம் ஈமான் இஹ்சான் தவ்பா தக்வா தவ்ஹீத் என்று வரையறுத்து ”தீனின் ஆறு நம்பர்” என்று வெளியிடுவாரெனில் அது அவரின் ஆராய்ச்சியின் விளைவில் அவர் செய்த வரையறையாகத்தான் இருக்கும். அந்த ஆறு அம்சங்களுமே மார்க்கத்தில் உள்ளவைதான் என்பதாகவும் ஆனால் இந்த அமைப்பு (structure) இவர் செய்தது என்பதாகவும்.

இன்னும் யாராவது மௌலவிX ஒருவர் தஃவத் தக்வா இல்மு ஷஹாதத் அமல் என்று வரையறுத்து “தீனின் ஐந்து நம்பர்” என்று சொன்னால் இவை தீனின் அம்சங்கள் அல்ல என்று மறுத்துவிட முடியாது. ஏனெனில் இந்த ஐந்தும் குர்ஆன் – ஹதீஸில் உள்ளவைதான். அது தீனில் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? ஆனால் இவைதான் தீனின் ஐந்து அம்சங்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கும் இந்த நிரலின் மீதும் அமைப்பின் மீதும் (அது ஏன் தஃவத்துக்குப் பிறகு தக்வா? ஏன் முன்பின்னாக வைக்கக்கூடாது? என்பது போல்) விவாதிக்க முடியும்.

பிரச்சனை என்னவெனில், இந்த ”அமைப்பு முறை” நபியின் காலத்தில் இல்லை என்று சொன்னால், “என்ன நீங்கள், தஃவத் என்பது நபி(ஸல்) காலத்தில் இல்லை என்று மறுக்கிறீர்களா? திக்ரு என்பதையே மறுக்கிறீர்களா? ஃகித்மத் என்பதற்கு ஹதீஸில் ஆயிரமாயிரம் ஆதாரங்கள் உள்ளனவே, அதையெல்லாம் மறுக்கிறீர்களா?” என்று எதிர்வினை ஆற்றுவார்கள். இந்த அம்சங்களை நான் நிராகரிக்கவில்லை என்பதும் இந்த அம்சங்களை வைத்து இவர்கள் நிரல்படுத்தியுள்ள அமைப்பு முறையைப் புதிது என்று சொல்கிறேன் என்பதும் இவர்களுக்குப் புரிவதில்லை. அந்த அளவுக்குத்தான் இங்கே பலரின் ஐக்யூ இருக்கிறது என்னும்போது உரையாடல் என்பதே சாத்தியமில்லை என்றாகிவிடுகிறது.

குர்ஆன் ஹதீஸில் சுட்டப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களில் தங்களின் ஆராய்ச்சிப்படி சிலதை வலியுறுத்தி முன்னணிப்படுத்தி, நிரல்படுத்திப் புதிதாக ஒரு கட்டமைப்பை உண்டாக்கி அதன்படிச் செயல்பட ஒருவருக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? என்பதுதான் கேள்வி.

நான் தக்லீதில் நம்பிக்கை உள்ளவன். இப்படிப் புதிய அமைப்பு முறையை – அது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருக்கும் பட்சத்தில் – உண்டாக்கிக் கொள்ளலாம் என்பது எனது கொள்கை. இத்தகைய புதுமைகளை பித்அத்தே ஹசனா என்று நான் ஏற்றுக்கொள்வேன். அதாவது மேலே நாம் சுட்டிக்காட்டிய பல்வேறு அமைப்பு மாதிரிகளில் அவற்றின் உள்ளடக்கமாகச் சொல்லப்பட்ட அம்சங்கள் குர்ஆன் – ஹதீஸில் உள்ளவையாகவும் ஆனால் அவற்றை நிரல்படுத்திய வரையறை என்பது பித்அத்தே ஹசனாவாகவும் இருக்கின்றன. பித்அத்தே ஹசனா (அழகிய புதுமைகள்) என்பதற்கு மார்க்கத்தில் இடமுண்டு என்னும் கொள்கையில் நான் இருக்கிறேன். அதனால் இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.

ஆனால் பித்அத்தெ ஹசனா என்பதெல்லாம் மார்க்கத்தில் அனுமதிக்கப் படவில்லை. அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்று கொள்கை கொண்டுள்ளவர்கள் எழுதியுள்ள நூலில், அதுவும் எதையெல்லாம் சுன்னத் வல் ஜமாத்தினர் குர்ஆன் மற்றும் ஹதீஸில் ஆதாரமுள்ளதும் அமைப்பில் மட்டும் புதுமையானதுமான செயல்கள் என்று சொல்லிச் செய்து வருகிறார்களோ அவற்றையெல்லாம் பித்அத் என்றும் ஷிர்க் என்றும் சொல்லி நிராகரிக்கும் இந்நூலில் இவர்களே ”அடிப்படைக் கொள்கைகள்” என்று போட்டு முதலாவது இரண்டாவது மூன்றாவது நான்காவது என்று வரிசைப்படுத்தி இவர்களாக ஒரு வரையறையை உருவாக்கி எழுதியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது பின்வரும் கேள்விகள் எழுகின்றன:

குர்ஆன் – ஹதீஸில் சொல்லப்பட்டுள்ள அம்சங்களை நாமே அலசி ஆராய்ந்து அவற்றில் சிலவற்றை எடுத்து வரையறுத்து ஓர் வடிவமைப்பில் முன்வைப்பது கூடுமா? இது நாமாகப் புதுமையாக வரையறுத்து முன்வைப்பது என்பதால் (குர்ஆன் – ஹதீஸில் இவ்வமைப்பு இருந்திருந்தால்தான் அதையே மேற்கோளாகக் காட்டியிருப்பார்களே!) இந்தப் புதுமை மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றா? (இக்கேள்விக்கு தப்லீக் தரீக்கா ஆகியவற்றைச் சேர்ந்தோர் தரும் பதில் என்ன? இந்நூலை யாத்திருக்கும் வஹ்ஹாபிகள் தரும் பதில் என்ன?)

(தொடரும்... )

No comments:

Post a Comment