Friday, January 4, 2013

ஒரு பரப்பியல் நூல் மீதான பார்வைகள் - 2


இனி இதன் உட்பிரிவுகளை (இதை நூலாசிரியர் ’விதிகள்’ என்கிறார். அதாவது கொள்கையை மெய்ப்பிப்பதற்கான வழிமுறைகளாம்.) இணைத்து இதன் அமைப்பை அவதானிப்போம். விரிவான ஸ்கெலிட்டன் இப்படி இருக்கிறது:

அடிப்படைக் கொள்கைகள் (Fundamental Principles)
முதலாவது அடிப்படைக் கொள்கை:- படைப்பாளனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
{அச்சம், நம்பிக்கை, இறைவனையே சார்ந்திருத்தல், உள்ளச்சம், மன்னிப்பு கோருதல், பாதுகாப்பு தேடுதல், உதவி தேடுதல், அறுத்துப் பலியிடுதல் (குர்பானி)}
இரண்டாவது அடிப்படைக் கொள்கை:- இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்
ஒருவனுக்கே முழுமையாக அடிபணிவது மற்றும் அவனுக்கு இணைவைக்காமல் இருப்பது ஆகியன முக்கிய அம்சங்களாகும்.
      இஸ்லாமிய மார்க்கம் ஐந்து தூண்களால் தாங்கப்பட்டுள்ளது.
1.   இறைவன் ஒருவனே மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித்தூதர் ஆவார்கள்.
2.   நேரம் குறிப்பிடப்பட்ட ஐங்காலத் தொழுகையை நிலைநாட்டுதல்.
3.   ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றல்
4.   ஜகாத் என்னும் கடமையை நிறைவேற்றுதல்
5.   புனிதத் தலமான கஃபத்துல்லாஹ்விற்கு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றல்.
மூன்றாவது அடிப்படைக் கொள்கை:- இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
நான்காவது அடிப்படைக் கொள்கை:- இணைவைத்தல் என்ற பாவத்திலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை அறிய வேண்டியது மிக முக்கியமானதாகும்.

இந்தக் கட்டமைப்பை கவனமாகப் பாருங்கள். “இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள்” என்று சொல்லப்பட்டு, இவர்களாக நான்கு அடிப்படைக் கொள்கைகள் என்று வரையறுத்துச் சொல்லியுள்ளதில் நபி (ஸல்) அவர்கள் ஹதீஸே ஜிப்ரயீலில் இஸ்லாம் என்பதற்கு விளக்கமாக நமக்குச் சொல்லித் தந்த ஐந்து அம்சங்கள் இவர்களின் கட்டமைப்பில் இரண்டாவது கொள்கைக்குள் விளக்கத்திற்கான மேற்கோளாக வருகிறது!

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் நான்கு என்று எழுதியிருக்கிறார்கள். அதிலும்கூட ஒரு வரியாகவோ அல்லது சொல்லாகவோ சொல்லத் தெரியாமல் ‘நான்காவது அடிப்படைக் கொள்கை’ என்பதாக ஒரு பத்தியையே முன்வைக்கிறார்கள். அதிலிருந்து முடிவான வரியை எடுத்துத்தான் இங்கே சுருக்கம் கருதி நான் மேலே தந்திருக்கிறேன்.

நபி (ஸல்) அவர்கள் எத்தனைத் தெளிவாக விடை சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள்: ”புனியல் இஸ்லாமு அலா ஃகம்ஸின் ஷஹாதத்தி அன் லா இலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி, வ அகிமுஸ்ஸலாத்தி வ ஈத்தாஅஸ்ஸகாத்தி வ ஸவ்மி ரமலான வ ஹஜ்ஜில் பைத்தி
”இஸ்லாம் ஐந்தின் மீது நிறுவப்பட்டுள்ளது:
அல்லாஹ்வை அன்றி வேறு இலாஹ் இல்லை என்றும் முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வது (இதைத்தான் ஷஹாதத் என்றும் கலிமா என்றும் சுட்டுகிறோம்)
தொழுகையை நிலை நிறுத்துதல்
ஜகாத் வழங்குதல்
ரமலானின் நோன்பு
கஃபத்துலாஹ்விற்கு ஹஜ்”

இந்த ஐந்தையும்தான் குழந்தைகள் மனனம் செய்யத் தோதுவாகச் சுருக்கி “கலிமா/ ஷஹாதத், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்” என்று சொல்லித் தருகிறோம்.

இவர்கள் இந்நூலில் இஸ்லாம் பற்றிய இந்த விவரத்தை இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் இரண்டாவது கொள்கைக்குள் கொண்டு வந்து சொல்லியிருப்பது எப்படி இருக்கிறது என்றால் – ’இஸ்லாம் என்பது கலிமா இஸ்லாம் தொழுகை நோன்பு ஜகாத் ஹஜ்’ என்று கூறுவது போல் இருக்கிறது. அதாவது இஸ்லாத்தின் கொள்கைகள் என்பதன் ஒரு பிரிவுக்குள் இஸ்லாம் என்பதும் வருகிறது! இது என்ன விந்தை? ஒருவேளை இது வஹ்ஹாபிச ஹோலோக்ராஃபிக் பார்வை போலும்!

இன்னொன்றையும் கவனியுங்கள்: நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் முதல் அம்சமாகச் சொல்லித் தந்திருப்பதை இவர்கள் சற்றே திரித்து எழுதியுள்ளார்கள். அது என்ன என்பதை விளக்குகிறேன். நபி (ஸல்) அவர்கள் சொல்லித் தந்தது ஷஹாதத் என்னும் சாட்சி பகர்தலாகும். அதாவது அன் லா இலாஹ இல்லல்லாஹ் - நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி வேறு இலாஹ் இல்லை என்றும் வ அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹி – நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் என்றும் சான்று பகர்வது.
இவர்களுடைய பிரதியில் இந்த ஷஹாதத் இப்படி ஆகியுள்ளது:
”இறைவன் ஒருவனே மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் இறுதித்தூதர் ஆவார்கள்.”

அதாவது லா இலாஹ இல்லல்லாஹ் என்பதை “அல்லாஹ்வை அன்றி வேறு இலாஹ் இல்லை” என்று எழுதாமல் அல்லாஹு அஹதுன் – இறைவன் ஒருவனே என்பதாக எழுதியிருக்கிறார்கள். லா இலாஹ இல்லல்லாஹ் என்பதுதான் திருக்கலிமா. அதற்கு உள்ள பல விளக்கங்களில் ஹுவல்லாஹு அஹத் – அல்லாஹ் ஏகன் என்பதும் ஒன்று. ஆனால் திருக்கலிமாவின் இடத்தில் அதற்குரிய பல விளக்கங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வைத்துவிட முடியாது. லா இலாஹ இல்லல்லாஹ் என்று சாட்சி பகர்ந்துதான் ஒருவர் இஸ்லாத்தில் இணைய முடியுமே தவிர அல்லாஹு அஹத் – இறைவன் ஒருவனே என்று சொல்லி இணைய முடியாது, அது கலிமாவின் விளக்கங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட! எனவேதான் இதில் இவர்கள் ஹதீஸைத் திரித்து எழுதியிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டியுள்ளது. இரண்டுமே அல்லாஹ்வைதான் குறிக்கின்றன என்றாலும் இலாஹ் என்னும் சொல்லுக்குரிய ஸ்தானம் வேறு அஹத் என்னும் பெயருக்குரிய ஸ்தானம் வேறு என்பதன் விளக்கம் இல்லாத மடமையின் காரணமாகத்தான் இப்படி எழுதியிருக்கிறார்கள்.

முதலாவது அடிப்படைக் கொள்கை என்று இவர்கள் எழுதியிருப்பது ‘படைப்பாளனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்’ என்பதாகும். அல்லாஹ்வைப் பற்றி அறிந்து கொள்ளுதல் என்று ஏன் எழுதவில்லை என்னும் கேள்வி இங்கே எழுகிறது. படைத்தல் என்பது அல்லாஹ்வின் பல்வேறு சிஃபத்துகளில் தன்மைகளில் ஒன்று. அதை ஏன் இங்கே முதன்மைப் படுத்தியிருக்கிறார்கள்? அதற்கான விளக்கம் எதுவும் இந்நூலி இல்லை.

இதனைத் தொடர்ந்து சூறா ஃபாத்திஹாவின் முதலிரண்டு வசனங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்கள். எனில், அதற்குத் தோதுவாக “ரட்சகனைப் பற்றி அறிந்து கொள்ளுதல்” என்று இருந்திருக்க வேண்டும். (படைப்பாளன் – ஃகாலிக்; ரட்சகன், புரவலன் – றப்).

இனி தொடர்வதுதான் இவர்களின் சொந்தக் கட்டளை:
“அல்லாஹ்வைப் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள் என்று வினவப்பட்டால், ஏழு வானங்களையும், ஏழு பூமியின் தட்டுகளையும் இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவற்றையும் அவைகளுக்கு இடையில் உள்ள அனைத்தையும் படைத்தவனை அறிகிறேன் என்று கூற வேண்டும்.”

அல்லாஹ்வைப் பற்றி இதில் கூறப்பட்டிருக்கும் கருத்து குர் ஆனில் ஆதாரமுள்ளதுதான் என்பதில் சந்தேகமே இல்லை. இது சத்தியமான கருத்துதான். ஆனால், அல்லாஹ்வைப் பற்றி எப்படி அறிந்து கொண்டீர்கள் என்று வினவப்பட்டால் இந்த விடையைத்தான் கூற வேண்டும் என்பது இவர்களாக உருவாக்கும் சொந்த ஷரீஅத் சட்டம். நபி (ஸல்) நமக்கு அப்படிக் கட்டளை இடவில்லையே, இந்த விடையைத்தான் கூற வேண்டும் என்று சொல்லித்தர இவர்கள் யார்? குர் ஆனில் ஆதாரம் உள்ள வேறு விடையை நான் ஏன் சொல்லக்கூடாது? அல்லாஹ்வை எப்படி அறிந்து கொண்டீர்கள்? என்று கேட்டால் பின்வருமாறு பதில்கள் சொல்லலாம் அல்லாவா?:
அல்லாஹ்வை அவனைக் கொண்டே அறிந்து கொண்டேன்.
அல்லாஹ் என் பிடரி நரம்பை விட என்னருகில் இருக்கிறான் என்று அறிந்து கொண்டேன்.
அல்லாஹ் எனக்கு நெருக்கமாக இருக்கிறான் என்று அறிந்து கொண்டேன்.
அல்லாஹ் நான் எங்கிருந்தாலும் என்னுடன் இருக்கிறான் என்று அறிந்து கொண்டேன்.

இப்படியெல்லாம் பதில் சொன்னால் தப்பா? இவர்கள் சொல்லித்தரும் பதிலைத்தான் கூற வேண்டுமா? வஹ்ஹாபிச வாத்தியார்களே! அறிவுக்கு அரை நிஜார் போட்டிருக்கும் உங்கள் மாணவர்களுக்கு இதையெல்லாம் சொல்லிக் கொடுங்கள்.

இந்நூலில் இருந்து இன்னொரு சொதப்பல்:
“இக்ர - ஓதுவிராக! (அல்குர்ஆன் 96:1)
என்ற இறைவசனத்துடன் அவர்களின் நபிப்பட்டம் துவங்கியது.”

நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆனிலிருந்து முதலில் அருளப்பட்டது சூரத்துல் அலக் அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள் என்பது சிறு பிள்ளைகளும் அறிந்த செய்தி. நபிமொழியில் (புகாரி) இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கிறது. முதல் வெளிப்பாடு இக்ர என்னும் சொல்லில் ஆரம்பித்தது என்று சொன்னால் அது சரியாக இருக்கும். அல்லது முதல் வசனத்தையாவது முழுமையாக எழுதி “உம்மைப் படைத்த ரட்சகனின் பெயரால் ஓதுவீராக” (இக்ர பிஸ்மி றப்பிகல்லதீ ஃகலக்) என்ற இறைவசனத்துடன் துவங்கியதாக எழுதியிருந்தால் சரியாக இருக்கும். ஆனால், இவர்கள் இக்ர என்பதையே முதல் வசனமாக்கி விட்டார்கள்! இது ஒரு கருத்தியல் புரட்சி என்று எண்ணுகிறார்களா? நபிமொழியின்படி, ஜிப்ரயீல் (அலை) மூன்று முறை இக்ர என்று மட்டும் சொன்னதாக வருகிறது. அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று சப்பைக்கட்டு கட்ட முடியாது. ஏனெனில் இக்ர (ஓதுவீராக) என்னும் சொல் வசனத்தின் முதல் சொல்தான் என்பதால், முதல் ஆயத்தை ஓதும்படி அதன் முதல் சொல்லை எடுத்துத் தந்தார்கள் என்றுதான் சொல்ல முடியும்.

இந்நூலில் பக்கம் பக்கமாக எந்தத் தலைப்பை எடுத்தாலும் அதற்குள் இணைவைத்தல் – ஷிர்க் என்பது கூடாது என்று மீண்டும் மீண்டும் இவர்கள் சொல்லி வருவது ஏன் என்பதை 47-ஆம் பக்கத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. ஃபாத்திஹா ஓதுவது, தாயத் அணிவது, தர்ஹா ஜியாரத் போன்றவை எல்லாமே பித்அத்தும் ஷிர்க்கும் ஆகும் என்று கூறுவதற்காகத்தான் இத்தனை பீடிகை. திருக்குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டிவிட்டு அவற்றுக்கு முன்னும் பின்னுமாக விளக்கங்கள் என்னும் பேரில் வஹ்ஹாபிசக் குறைப் பார்வையிலான (short sighted) BLAH BLAH பிலாக்கணங்கள் அவர்களின் மாமூலான கோயபல்ஸ் பாணியில் கிறுக்கித் தள்ளப்பட்டுள்ளன.

உதாரணத்திற்கு ஓரிடம்:
“இக்காலத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்துவிட்டு தீய வழியில் உழன்று கொண்டிருக்கின்றனர். இருளில் மூழ்கியுள்ளனர். மேலும் அல்லாஹ்வைத் தவிர மற்றவைகளை வணங்குகின்றனர். இவர்கள் மிகவும் வழிகேட்டிலேயே உள்ளனர்.” (பக்கம்:35)

இந்தப் பிலாக்கணம் சொல்ல வருவது என்னவெனில் தர்ஹாவுக்குப் போகிறவர்கள் அங்கே அடங்கியிருக்கும் இறைநேசரை வணங்குகிறார்கள் என்பதாகும். தர்ஹாவிற்குச் செல்லும் எவரும் அங்கே அடங்கியிருக்கும் இறைநேசரை இலாஹ் என்று சொல்வதோ அவரை வணங்கவேண்டும் என்று நாடுவதோ செல்படுவதோ கிடையாது என்று சொன்னால் வஹ்ஹாபிகள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் முடிவு செய்துவிட்டால் அது வணக்கம்தான் என்னும் அராஜக அணுகுமுறைதான் அவர்களிடம் வெளிப்படும்.

காரில் வந்து இறங்கும் ஒருவனைப் பார்த்து “நீ ஏன் காரை வணங்கி அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறாய்?” என்று கேட்டானாம் ஒருத்தன். அந்த ஆள் பதறிப்போய், “என்னய்யா உளறுகிறாய், நான் கார் ஓட்டிக் கொண்டுதானே வந்தேன். இது எப்படி வணக்கமாகும்?” என்று கேட்க, அதற்கு அவன், “நான் அப்படித்தான் சொல்வேன். நீ காரை வணங்குகிறாய் என்றுதான் நான் பார்ப்பேன். அதனால் இனிமேல் நீ காரே ஓட்டாதே. நானும் ஓட்டுவதில்லை. ஏனென்றால் கார் ஓட்டுவது என்பது ஷிர்க்தான்” என்று சொன்னானாம். இதே டைப் அராஜகம்தான் மேற்படிக் கருத்திலும் இருக்கிறது!

வஹ்ஹாபிய மட்டையடி அணுகுமுறைக்கு என் வாழ்வில் நடந்த ஓர் அனுபவத்தைச் சொல்கிறேன். என் சின்ன மாமியின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். பஸ் கண்டக்டராகவும் ஹோமியோபதி மருத்துவராகவும் இருக்கும் தூரத்து உறவினர் ஒருவர் வந்திருந்தார். அப்போது நான் என் மடிக்கணினியில் எங்கள் சிஷ்திய்யா ஷைகு ஒருவரின் உருது பயானைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த நபர் சைடிலிருந்து எட்டிப்பார்த்தார். “தம்பீ இந்த ஆளுவ பயானெல்லாம் கேட்காதீங்க. இவங்க ஷிர்க்கெல்லாம் கூடும்னு சொல்வாங்க” என்றார். அவர் வஹ்ஹாபிய சித்தாந்தி என்பது அப்புறம்தான் எனக்குத் தெரிய வந்தது. அவரின் வார்த்தைகளை கவனித்தீர்களா? ’ஷிர்கெல்லாம் கூடும்’ என்று சொல்வார்களாம். இப்படி ஒரு வரியை – வழிகெட்டுப் போன எழுபத்து மூன்று கூட்டங்களின் ஒரு நூலில் கூட எவரும் காட்ட முடியாது. அப்படியொரு பயங்கரமான குற்றச்சாட்டை வைக்கிறார் அவர். விஷயம் என்னவெனில் தர்காவுக்குச் செல்லலாம் மௌலூது ஓதலாம் போன்று நாங்கள் சொல்லும் பல விஷயங்களை மேற்படி வஹ்ஹாபீஸ் ஷிர்க் என்று காண்கிறார்கள். இம்மி அளவாவது நியாய உணர்வு உள்ளவனின் ஸ்டேட்மெண்ட் எப்படி இருக்கும்? ”தம்பீ, தர்காவுக்குப் போவது மவ்லூது ஓதுவதெல்லாம் கூடும்னு இவங்க சொல்றாங்க.ஆனால் அதெல்லாம் ஷிர்க்” என்றோ “ஷிர்க்கான காரியங்களை இவர்கள் ஷிர்க்னு விளங்காம ஆகும்னு விளங்கியிருக்காங்க” என்றோதான் இருக்கும். ஆனால் அவரின் வாசகம் எப்படி இருக்கிறது என்றால் ஷிர்க் என்னும் விஷயமே ஹலால் என்று கூறுகிறார்கள் என்பதைப் போல் தொனிக்கிறது. இதைத்தான் வஹ்ஹாபிச மட்டையடி அராஜக அணுகுமுறை என்று சொல்கிறேன்.

இன்னொரு உதாரணத்தையும் அனுபவத்திலிருந்து தருகிறேன். சென்னையில் என் பெரிய தந்தை முறையில் உள்ள உறவினரின் வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அடுத்த நாளும் அவர்கள் வீட்டில் உணவருந்த வரவேண்டும் என்று சொன்னார். மகிழ்ச்சி. ஆனால் அந்த மறுநாளில் நான் என் ஆன்மிக குருவைச் சந்திக்கச் செல்வதை அவரிடம் தெரிவித்தேன். அவர் நாவிலிருந்து சட்டென்று வெளிவந்த வாசகம் என் மென்னியைத் திருகியது போல் இருந்தது. அந்த வாசகம் இது: “அல்லாஹ்வுக்கு இணை வைக்கக் கூடாதுத்தா”. இதை மட்டையடி அராஜக அணுகுமுறை என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? ஒரு முரீது தன் ஷைகைப் பார்க்கப் போகிறான் என்றால் அவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கத்தான் போகிறான் என்பது இவர்களின் பார்வை. அதனால் ஷிர்க் ஃபத்வாவை இவர்கள் கொஞ்சமும் தயங்காமல் சகட்டு மேனிக்கு உங்கள் முகத்தில் விட்டெறிவார்கள். அவர் பொதுவாகச் சொல்லியிருப்பார் என்றெல்லாம் சாக்குச் சொல்லித் தப்பிக்க முடியாது. இடம் பொருள் ஏவல் என்று ஒன்று இருக்கிறது. மனைவியைச் சந்திக்கப் போகிறேன் என்று விடுமுறையில் கிளம்பும் ஒருவனிடம் சட்டென்று “விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்” என்னும் ஆயத்தை ஓதிக்காட்டிவிட்டு குர்ஆனின் வசனத்தைதானே ஓதினேன் இதை அராஜகம் என்று சொல்வதா? என்று வாதாட முடியுமா?

இன்னொரு உதாரணமும் தருகிறேன். (ஆமாம், பலமுறை இவர்களால் பட்டிருக்கிறேன் ஐயா). பெங்களூரிலிருந்து திருச்சி வந்து இறங்கிய ஒரு கேங்கில் அவர் இருந்தார். வாஸ்த்தவத்திலேயே ஒரு வழிப்பறிக் கொள்ளையனைப் போல் என்னை மறித்துக் கொண்டு தாவாப் பணி செய்ய ஆரம்பித்தார். அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களே இருக்கக் கூடாது என்னும் பிலாக்கணம். அப்படிச் சொல்பவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது என்று நான் சொன்னேன். அல்லாஹ்வுக்கும் எனக்கும் இடையில் ரசூலுல்லாஹ் இருக்கிறார்கள் என்பது திருக்கலிமா எனக்குத் தரும் பால பாடம். ”லா இலாஹ இல்லா அன” என்பது அல்லாஹ்வின் ஈமான். “லா இலாஹ இல்லல்லாஹ் அனா ரசூலுல்லாஹ்” என்பது நபி (ஸல்) அவர்களின் ஈமான். நான் அல்லாஹ்வின் அடியான் என்று என்னை அழைத்துக்கொள்ள வேண்டும் பட்சத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் அனா அப்துல்லாஹ் என்று சொல்லி முஸ்லிமாக இருக்க முடியாது. அதாவது அல்லாஹ்வுக்கும் எனக்கும் இடையில் ரசூலுல்லாஹ்வை வைத்தேதான் ஆகவேண்டும். லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்பதோடு கலிமா முழுமை ஆகிவிட்டது. அங்கே ”அனா அப்துல்லா” என்று என்னைச் சுட்டிக் கொள்வதற்குக்கூட அல்லாஹ் இடமே வைக்கவில்லை. எனவே அல்லாஹ்வுக்கும் எனக்குமிடையில் எவரும் தேவையில்லை என்று ஒருவன் சொன்னால் நபியின் ஸ்தானத்தைக் கோருகிறான் என்று பொருள்! அல்லாஹ் என் பிடரி நரம்பை விடவும் நெருக்கமாக இருக்கிறான் என்ற நிலையிலும் அல்லாஹ்வுக்கும் எனக்கும் இடையில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் இருக்கிறார்கள். இந்தப் பாய்ண்ட்டை அந்த டகாய்ட்டிடம் எடுத்துச் சொன்னேன். விளங்கிற்றா என்று தெரியவில்லை.

’தவ்ஹீது அல் இபாதா’ என்னும் தலைப்பின் கீழ் இந்நூலில் இப்படி எழுதியிருக்கிறார்கள் “மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையில் எந்த இடைத்தரகரும் (Agent) தேவையில்லை.” (பக்கம்:59). நபிமார்களில் மேனிலை பெற்றவர்களில் ஒருவரான மூசா (அலை) அவர்களுக்கே அல்லாஹ் கட்டளை இட்டான், மஃரிஃபா (மறைஞானம்) வேண்டுமெனில் கிள்று என்னும் இறைநேசரைத் தேடிச் சென்று அவரிடம் பயிலுங்கள் என்று. அந்த கிள்று அவர்களாவது அல்லாஹ்விடமிருந்து நேரடியாக இல்மு – அறிவு கொடுக்கப்பட்டவர் என்று அல்லாஹ்வே சான்று பகர்ந்துவிட்டான். ”உனக்கும் எனக்கும் இடையில் இப்போது இந்த இடைத்தரகர் ஏன்?” என்று மூசா (அலை) அல்லாஹ்விடம் சொல்லவில்லை. சொல்வது தவ்ஹீதுக் கொள்கை அல்ல. ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வஹீ தந்து அனுப்பினான் அல்லாஹ். தவ்ஹீதை உலகில் போதிக்கவே அனுப்பப்பட்ட எந்த நபியும் “உனக்கும் எனக்கும் இடையில் வஹீ கொண்டு வர இடைத்தரகர் எதற்கு?” என்று குதர்க்கம் பேசவில்லை. அவர்களுக்குத் தெரியும், அப்படிப் பேசுவது தவ்ஹீதுக்கு எதிரானது. இந்நூலை எழுதிய கூமுட்டை அலிஃப் பே தே என்று ஓதிப்படிக்க உஸ்தாத் முன் அமரவில்லையா? உஸ்தாதைப் பார்த்து “அல்லாஹ்வுக்கும் எனக்கும் இடையில் தரகராக நீங்கள் எதற்கு? அல்லாஹ்தான் அறிவை அருள்பவன்” என்று கேட்டிருந்தால் அவரின் கதி என்ன? “இபாதத்துகளில்தான் நாங்கள் இடைத்தரகர் கூடாது என்கிறோம்” என்று சொல்வார்கள் எனில், மேலே நான் குறிப்பிட்ட காரியங்கள் இபாதத்தில் சேராதவையா? இறைநம்பிக்கையாளனின் ஒவ்வொரு அசைவுமே இபாதத் ஆகும்.

இந்த இடத்தில் இன்னொரு சம்பவத்தையும் நினைவு கூர்கிறேன். ’தர்காவிற்கு ஜியாரத் செல்பவர்கள் எல்லாம் அங்கே அடங்கியிருக்கும் இறைநேசரை வணங்கி அல்லாஹ்விற்கு இணை வைக்கிறார்கள்’ என்று மட்டையடியாகப் பேசுவதைப் போலவே தர்காவிற்குச் செல்பவர்களுக்கு மார்க்க அறிவும் இல்லை உலகியலின் படிப்பறிவும் இல்லை என்னும் சிந்தனையும் நான் சந்தித்த வஹ்ஹாபிகளிடம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். மௌலவி ஸனது வாங்கியவர்கள் தர்காவிற்குப் போனாலும் அவர்களை மடையர்கள் என்பார்கள், டாக்டர்கள் பொறியாளர்கள் பேராசிரியர்கள் போன்றவர்கள் தர்ஹாவுக்குப் போனாலும் மடையர்கள் என்பார்கள். மார்க்கம் என்பதே குர்ஆன் – ஹதீஸுக்கு இவர்கள் தரும் விளக்கங்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது என்ற நிலையின் வெளிப்பாடுதான் அது. வேதியல் பேராசிரியராக இருந்து ரிடையரான ஒருத்தர் வேறு ஒரு கல்லூரியில் நிர்வாகப் பொறுப்பில் இருந்தார். அந்தக் கல்லூரிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக இளம் பேராசிரியர்களான ஐந்து பேர் சென்றோம். எங்களின் படிப்புக்கள் என்ன என்பதைக் கேட்டறிந்து கொண்டு இவ்வாறு சொன்னார், “நீங்களெல்லாம் science படித்தவர்கள். உங்களைப் போன்றவர்கள் மார்க்க சேவைக்கு வரவேண்டும். தர்காக்களில் எத்தனையோ அனாச்சாரங்கள் ஷிர்க்கான காரியங்களெல்லாம் நடக்கின்றன. முஸ்லிம்கள் அவ்வளவு அறியாமையில் இருக்குறாங்க. நீங்கள்லாம் போய் அவங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.”

நாங்கள்லாம் சயின்ஸ் படித்தவர்கள் என்று அவர் சொல்லக் காரணம் நான் கணினி அறிவியலும் இரு நண்பர்கள் இயற்பியலும் படித்திருந்தோம் என்பதே. மார்க்க சேவைக்கு நாங்கள் வந்து தர்காவுக்குப் போகும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதில் எனக்கும் முழுச்சம்மதமே. அதாவது, முறையாக எப்படி ஜியாரத் செய்வது என்னும் விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்த வேண்டும். தர்காவிற்குப் போகாமல் இருக்கும் முஸ்லிம்களிடமும் அதற்காக ஆர்வமூட்ட வேண்டும்.

“நானே தர்காவிற்குப் போறவன்தான்” என்று அவரிடம் சொன்னேன். அவர் சற்றே ஆச்சரியமாகப் பார்த்தார். ”போய் என்ன செய்வீங்க?” என்றார். அங்கு அடங்கியிருக்கும் இறைநேசருக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன், அவர்களை வஸீலாவாக வைத்து (தவஸ்ஸுல்) செய்து எனக்காகவும் என் குடும்பத்திற்காகவும் பொதுவாக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன்; ஃபாத்திஹாவும் யாசீனும் ஓதி அதன் பலன்களை அந்த இறைநேசருக்கு ஈஸால் சவாப் செய்ய அல்லாஹ்விடம் பிரார்த்திப்பேன்; கப்றை முத்தமிடும் நபிவழியை நிறைவேற்றுவேன் (நபி இவ்வாறு செய்தார்கள் என்பதற்கான ஆதரம் எதையும் நான் இதுவரை கண்டதில்லை. அப்படிச் செய்ய நபியால் அனுமதிக்கப்பட்ட முறை என்னும் அடிப்படையில் நபிவழி என்று குறிப்பிடுகிறேன். மேதாவித்தனமாகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு நபி செய்திருக்கிறார்களா? என்றெல்லாம் டார்ச்சர் கொடுக்காதீர்கள். நபி அனுமதித்ததும் சுன்னத் என்னும் வகையில் அடங்கும்.) இவையெல்லாம் மார்க்கத்தில் ஆகுமனவை என்னும் தெளிவும் உறுதியும் இருப்பதால் வஹ்ஹாபிசத்தின் பிதாமகனே வந்தாலும் குழப்ப முடியாது. இந்தப் பேராசிரியர் என்ன பிஸாத்து. ஆனால் நான் அவருக்கு மிகச் சுருக்கமாக வேறு ஒரு பதிலைச் சொன்னேன்: “அவ்லியாவை வணங்கவெல்லாம் மாட்டேன். பதறாதீர்கள். அவரைச் சந்தித்துவிட்டு வருவேன்” என்றேன். ஜியாரத் என்றால் சந்திப்பது என்றுதானே பொருள். அதற்கு அவர் ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டார். என்ன இருந்தாலும் சைன்ஸ் படித்த பேராசிரியர் அல்லவா?

அதைச் சொல்லும் முன் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். தர்ஹாவில் ஷிர்க் நடக்கிறது என்று முழங்கப்படும் குற்றச்சாட்டில் ஆதாரமாகக் கூறப்படுவதில் ஒன்று கப்ருக்கு சஜ்தா செய்கிறார்கள் என்பது. கப்றை முத்தமிடுவது என்பது நபி அனுமதித்த வகையிலான சுன்னத் என்று மேலே சொன்னேன். மாலைக்கண் நோய் வந்தவனுக்குப் பார்ப்பதெல்லாம் மஞ்சளாகத் தெரிவது போல் குனிந்து கப்றை முத்தமிடுவதையும் சஜ்தா என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மாறாக சொல்பவரின் மனநோயின் வெளிப்பாடு அது என்றுதான் கருதுவேன். இப்படித்தான், ஒரு இணையதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டு கப்றுக்கு ருகூ செய்கிறார் பாருங்கள் என்று அலறியிருந்தது (உளறியிருந்தது என்றும் வாசிக்கலாம்). பார்த்தால், மஜார் மீது பூச்சதர் போர்த்தும் ஒருவர் அதனை அடுத்தப் பக்கத்தில் நிற்பவரிடம் தருவதற்காகக் குனிந்திருந்தார். இவர்கள் அது ருகூ என்றும் (எனவே ஷிர்க் என்றும்) ஃபத்வா கொடுத்துவிட்டார்கள்.

என்னங்கய்யா கூத்து இது? ஒரு தந்தை தன் குழந்தையைத் தூக்குவதற்காகக் குனிந்தால் அது ருகூ என்றும் அவர் தன் பிள்ளையை வைத்து ஷிர்க் செய்கிறார் என்றும் சொல்வீர்கள் போலிருக்கிறதே? சஜ்தா போன்ற பொசிஷனில் நடக்கும் வேறு வேலைக்கு என்ன உதாரணம் தருவது? எனக்குச் சட்டென்று ஒன்றும் தோன்றவில்லை, எனவே உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். சஜ்தா பொசிஷனை ஒத்திருப்பதாலேயே அதெல்லாம் ஷிர்க் என்று கூறுவீர்களா? உங்கள் காப்ராக்களுக்கு ஓர் எல்லையே இல்லையா என்ன?

பேராசிரியர் என்ன கேட்டார் என்றால், “கப்றிலே உள்ளவரை எப்படிச் சந்திக்க முடியும்? அவர்தான் இறந்து போய்விட்டாரே? செத்தவரை எப்படிச் சந்திப்பீத்ர்கள்?” இதைத்தான் நியாயமான கேள்வி என்று சொன்னேன். ஏனெனில் இதில் மேற்கொண்டு அறிதலுக்கான ஒரு எத்தனிப்பும் வாய்ப்பும் இருக்கிறது. “இதைப் பேச வேண்டுமெனில் நீங்கள் இன்னும் நிறைய வளரவேண்டும்” என்னும் உண்மையை விளம்பிவிடலாமா என்று நினைத்தேன். நொந்து மூட் அவுட் ஆகிவிட்டார் என்றால் நிகழ்ச்சியில் சுரத்து குறைந்துவிடும் என்பதால் அவ்வாறு சொல்லாமல், “சிந்திக்க வேண்டிய விஷயம்தான் சார்” என்று மட்டும் சொல்லி லேசாகச் சிரித்தேன். அவரும் புன்னகைத்தார். அது ஒரு win-win strategy போல் இருந்தது. அதாவது நான் இனிமேல்தான் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று சொல்வதாக நினைத்து என் மனத்தில் சிந்தனைப் பொறியைப் போட்டுவிட்ட திருப்தி அவருக்கு. (இதை வெளியே எத்தனைப் பேரிடம் சொன்னாரோ, அல்லாஹு அஃலம்.) நான் அப்படிச் சொன்னதன் அர்த்தமோ இது அவர் சிந்தித்து அறிய வேண்டிய விஷயம் என்பதாக.

கப்றில் உள்ளவர் செத்துப்போய்விட்டாரே, மண்ணாகி விட்டாரே, அவருக்கும் இந்த உலகத்துக்கும் இனி எந்தப் பரிவர்த்தனையும் கிடையாதே என்றெல்லாம் ஏதோ அறிவுபூர்வமாகக் கேட்பதாக எண்ணும் அரைவேக்காடுகள் இங்கே நிறைய பேர் உண்டு. மண்ணறையில் நபி (ஸல்) ஜீவிதமாக இருக்கிறார்கள், இந்த மண்ணின் மீது எப்படி உயிருடன் இருந்தார்களோ அப்படியே இருக்கிறார்கள், எந்த இறைத்தூதரின் உடலையும் மண் அரிப்பதில்லை, இறைநேசர்களின் உடல்களை மண் அரிப்பதில்லை என்றெல்லாம் பேசும்போது இவையெல்லாம் அவர்களுக்கு ஷிர்க் என்பதாகத்தான் விளங்குகிறது.

ஒரு ஹதீஸ்: சஹாபா ஒருவர் கப்று ஒன்றின் மீது தான் அறியாத நிலையில் கூடாரம் விரித்துவிட்டார். அவர் அந்தக் கூடாரத்திற்குள் தங்கியிருந்த போது சூறத்துல் முல்க் ஓதப்படுவதைச் செவியுற்றார். அவ்வாறு தான் கேட்டதை அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தெரிவித்தார். சூறத்துல் முல்க் என்பது கப்றின் வேதனையை விட்டும் பாதுகாக்கும் என்றும் அவ்வாறு அந்தக் கப்றின் மனிதரை அது பாதுகாத்து வருகிறது என்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். (திர்மிதி, நஸாயீ, ஹாகிம்) இந்த ஹதீஸுக்கு விளக்கம் தரும் ஹதீஸ் அறிஞர்கள் அந்த மனிதர் வாழும் காலத்தில் சூறத்துல் முல்க் ஓதுவதை விரும்பியிருந்ததால் அவர் மரணித்த பின்னரும் கப்றில் அந்த சூறாவை ஓதும் பாக்கியத்தை அல்லாஹ் அவருக்கு அருளியிருக்கிறான் என்று சொல்கிறார்கள்.
                                             
அந்த சஹாபி சொன்னதை நபி ஏற்றுக்கொண்டார்கள். அது சாத்தியமில்லை என்றெல்லாம் மறுக்கவில்லை. நபியவர்கள் ஏற்றுக்கொண்டதால் இவ்வாறு நடப்பது சாத்தியம்தான் என்பது தெளிவு. “இறந்தவர் எப்படி ஓதுவார்?” என்று மேதாவிகள் என்று தம்மைத் தாமே கருதிக் கொண்டிருப்பவர்கள் தலை முடியைப் பிய்த்துக் கொள்ளட்டும். இப்போதெல்லாம் அப்படி நடப்பதே இல்லையே என்று குழம்பட்டும். 

மரணம் என்றால் என்ன? ஜீவிதம் என்றால் என்ன? திரையுலகம் என்பது என்ன? மண்ணறையில் வைத்த பின் உடல்தான் அழிகிறது, ஆனால் அந்த ’நபர்’ அங்கேதான் இருக்கிறார் என்னும்போது அவரின் எதார்த்தம் எது? – இப்படியெல்லாம் சிந்திக்கும் மனம் இருந்தால் விடைகளின் வாசல்களை அல்லாஹ்வின் கருணை திறந்து தரும்.

இந்த வஹ்ஹாபிகளின் பார்வைக்கு இன்னொரு சம்பவத்தையும் சான்றாகச் சொல்லலாம். ஜாகிர் நாயக் கிறித்துவர்களுடன் விவாதிக்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசத்தொடங்கும்போது ஒன்று சொல்வார், விவாதம் அறிவியல் ரீதியாக நடக்கவிருப்பதால் முன் கூட்டியே ஒரு எச்சரிக்கை வளையத்தை வரைவது போல் சொல்வார், “Established Science” அடிப்படையில் மட்டுமே அவர் பேசுவாராம். இது ஒருவகையில் பித்தலாட்டம்தான். ஏனெனில் அறிவியல் உலகில் நிலையான எஸ்டாப்ளிஷ்மண்ட் எதுவும் கிடையாது. இன்றைய தேதிக்கு Established-ஆக இருக்கும் ஒன்று நாளை பொய்யென்று நிரூபிக்கப்பட்டுவிடும். (நிரூபனம் என்னும் சொல்லை அறிவியல் முற்றான முடிவாகப் பயன்படுத்துவதில்லை. அது தற்காலிகமான ஒன்று என்றே பாவிக்கப்படும்.) நேற்று எஸ்டாப்ளிஷ்மெண்ட் என்று சொல்லப்பட்ட எத்தனையோ அறிவியல் பார்வைகள் இன்று வெகுவாக மாறிவிட்டன. நியூட்டனின் விதிகள் ஐன்ஸ்டீன் வந்த பிறகு காலாவதி ஆகிவிட்டது. அவற்றுக்கு பிரபஞ்சத் தன்மை இல்லை என்று விஞ்ஞானம் சொல்லிவிட்டது. பூமியில் மட்டுமே செல்லுபடியாகும் லோக்கல் சயின்ஸுக்கு இன்று மதிப்பில்லை. பிரபஞ்ச முழுமைக்குமான தேடலில் இன்று அறிவியல் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் மார்க்கத்தை அறிவியல் ரீதியாக விளக்குகிறோம் என்று மார்தட்டும் அரைவேக்காடுகள் லோக்கல் சயின்ஸ் மட்டுமே பேசுவோம், நிரூபனமான அறிவியலை மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என்று சலாம் வரிசை வைத்துவிட்டுத்தான் பேசுகிறார்கள். ஜாகிர் நாயக் போன்ற பித்தலாட்டக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும், குவாண்டம் ஃபிசிக்ஸ் போன்ற துறைகளுக்குள் இறங்கி வந்தால் என்ன கதி ஆகும் என்று. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் காலமும் இடமும் நாம் காணும்படியாக எதார்த்தத்தில் இல்லை – பேசிக்கொண்டிருக்கும் ஜாகிர் நாயக்கே எதார்த்தமற்ற ஒரு பிம்பம்தான் என்று கொண்டு வந்துவிடுவார்கள். நவீன அறிவியல் சூஃபித்துவத்திற்கும் கிழக்கத்திய இருண்மைக் கோட்பாடுகளுக்கும் நெருங்கி வருகின்றது. நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் சூஃபித்துவத்துடன், குறிப்பாக இப்னுல் அரபி (ரஹ்) அவர்களுடன் ஒத்திசைய முடியும். ஆனால் முஹம்மதிப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி, இப்னு தைமியா போன்றவர்களை நவீன அறிவியல் கோமாளிகளாகவே பார்க்கும்.

கணினி அறிவியலின் அசுர வளர்ச்சிக்குப் பிறகு இன்று இப்பிரபஞ்சமே ஏன் வெறுமனே ஒரு தோற்ற மெய்ம்மையாக (virtual reality) இருக்கக்கூடாது என்னும் விசாரனைகள் விஞ்ஞானிகளிடையே கிளம்பியுள்ளன. கணினியில் ப்ரோக்ராம் செய்யப்பட்டு இயங்குமொரு simulated environment போல நம் உலகையும் அதில் உள்ள நம்மையும் யாராவது ஏன் சிமுலேட் செய்திருக்கக் கூடாது என்று விஞ்ஞானிகள் சிந்திக்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்று பதில் விஞ்ஞான ரீதியாக அறுதியிட்டு விடை கூறமுடியாது. ஏனெனில் நாம் ‘உள்ளே’ இருக்கிறோம். புரிகிறதா? அதாவது கனவுக்குள் இருந்தபடி இது கனவா நினைவா என்று இருவர் வாதாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆமால் இல்லை என்பதான இரண்டு சாத்தியங்களுக்குமே கனவுக்குள் இருந்தபடி நிரூபனம் தர முடியாது. எனவே இரண்டு தரப்பும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். (இதே போல் இன்னொரு சிக்கல்: பிரபஞ்சம் நேற்று இருந்ததை விட இன்று சுருங்கிவிட்டது அல்லது விரிந்துவிட்டது என்று சொன்னால் அதை மறுக்க முடியாது. ஏனெனில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பொருட்களுமே ஏக காலத்தில் ஒரே விகிதத்தில் மாற்றம் அடையும்போது அந்த மாற்றத்தை நம்மால் உணர முடியாது. புரிகிறதா?)

பிரபஞ்சம் என்பதன் எதார்த்தம் என்ன? அதற்குப் பிரத்யேக உள்ளமை இருக்கிறதா இல்லையா? பிரபஞ்சத்தின் அடிப்படைப் பொருள் (material prima) எது? இப்பிரபஞ்சம் ஒன்றுதான் இருக்கிறதா? வேறு பிரபஞ்சங்கள் ஏன் இருக்கக்கூடாது? பௌதிக விதிகளை மீறும் நிகழ்வுகள் இவ்வுலகிலேயே அவ்வப்போது நிகழ்வது ஏன்? பௌதிகத்துக்கும் ஆத்மிகத்துக்கும் உள்ள உறவு நிலைகள் என்ன? உண்மையை சிந்தனைவழி அறிய இயலுமா? உளவியல் என்பதும் அறிவியலின் ஓர் துறை என்னும் பட்சத்தில் ஆன்மிக நெறிகளின் உளவியல் பயிற்சிகள் வழி அடையப்படும் மீப்புலன் அனுபவங்களும் அதி-மன நிலைகளும் கண்டறிந்து சொல்லும் செய்திகளை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? அவற்றை மறுப்பதும் விஞ்ஞானத்திற்கு எதிரான மூடத்தனம் அல்லவா? –இவையெல்லாம் இன்று விஞ்ஞானிகளை இயக்கிக் கொண்டிருக்கும் கேள்விகள்.

இஸ்லாத்தை அறிவியல் ரீதியாக விளக்கும் புண்ணாக்கு என்று போற்றப்படுபவர் இந்தப் பக்கமெல்லாம் தலை வைத்தே படுக்க மாட்டார். (அதனால்தான் சொல்கிறேன், இதுவரை ஜாகிர் நாயக் அண்ட் சகோஸ் பேசிய எந்த அறிவியல் BLAH BLAH-வும் ஹாரூன் யஹ்யாவின் “THE ETERNITY HAS ALREADY BEGUN” என்னும் ஒற்றை நூலின் ஆழத்தை தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. போலித் தவ்ஹீதில் உழன்று கொண்டிருக்கும் கோமாளிகளால் அது ஒருபோதும் முடியாது.) இருத்தலின் மர்மங்களை சதா உணர்ந்துகொண்டிருக்கும் சுரணை உள்ள, அவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் தனியா தாகம் கொண்ட மனங்களில்தான் மேற்சொன்னது போன்ற கேள்விகள் எழும். அவர்களுக்குத்தான் அறிவியல் ரீதியாகவும் புதிய புதிய எல்லைகளை அடைகின்ற பாதைகள் திறந்துகொண்டே போகும். (”நம்மில் யார் முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு நம் பாதைகளைத் திறந்துவிடுவோம்” (29:69) என்பது அல்லாஹ்வின் வாக்கு). நியூட்டனின் மூன்றாம் விதியிலேயே முட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் மூஞ்சூறு மூளைகளுக்கெல்லாம் இதன் அலிஃப் பே கூட புரிய வாய்ப்பில்லை.

(தொடரும்...)

No comments:

Post a Comment