‘உன்னை
அறிந்ததால்
காதலித்தேனா?
காதலித்ததால்
அறிந்தேனா?’
என்றேன்
’உன்னிரு
கண்களில்
எந்தக்
கண்ணால்
என்னை
முதலில் பார்த்தாய்?’
என்றாள்
*
புலம்புவதில்லை
புல்லாங்குழல்
மௌனமாய்க்
கிடப்பதற்கு.
வருத்தப்படுவதில்லை
வாசிக்கப்
படுகின்றபோதும்.
*
என் சிறு
குடில்
உன் அரண்மனை
ஆனது
நான்
இறந்த போது
*
கவிதையை
அழித்தாய்
பேச்சையும்
அழித்தாய்
என் காதலே!
மௌனத்தையும்
அழித்துவிடு
*
உன் கிளைகள்
பூக்களைத்
தூவிக்கொண்டிருந்த சாலையில்
நடந்திருந்தேன்
கலங்கிய
கண்களுடன்
இத்தனை
நினைவூட்டல்களை
யார்தான்
தாங்கிக்கொள்ள முடியும்?
*
காட்சியைப்
பற்றிய உன் சிந்தனையே
திரையை
நெய்து கொண்டிருக்கிறது
காதலின்
தீயை
அதில்
பற்ற வைத்துப் பார்
*
அறிவின்
ஐநூறு
சிறகுகள்
எரிந்துபோகும்
எல்லைக்கு
அப்பால்
காதலின்
கால்தடம்
கண்டேன்
*
எரிவது
துன்பம்
எரிவது
இன்பம்
விட்டிலுக்கு...
விளக்கின்றி
முன்னது
விளக்கில்
பின்னது
*
வார்த்தைச்
சாளரம்
வழியே
பொருள்
எத்தனை
தொலைவில்?
அர்த்தங்களின்
சோலைக்கு
வெளியேறிச்
செல்ல
வார்த்தைகளில்
எங்கே
வாசல்?
*
No comments:
Post a Comment