Saturday, November 24, 2012

ஆல்ஃபா ஆசான்




நவம்பர் 20-ம் தேதி நாகூர் ரூமியிடமிருந்து இப்படி ஒரு மின்னஞ்சல் வந்தது:

அன்பு ரமீஸ்

கட்டுரையை ஒரு பத்து நாட்களுக்கு முன் எழுதி பாதி முடித்தேன்.

எதிர்பாராத விதமாக, கடந்த 14ம் தேதி அன்று, எனக்கு தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டு, சென்னையில் ஆன் ஜியோக்ரா செய்து, ஆன் ஜியோப்ளாஸ்டி செய்து நேற்றுத்தான் சென்னை வீடு திரும்பினேன்.

இப்போது கட்டுரையை முடிந்த வரை முழுமைப்படுத்தி அனுப்புகிறேன்.

அலைபேசியில் கொஞ்ச நாளைக்குப் பேசமாட்டேன். என் மகள் எடுப்பாள். விபரம்சொல்லுவாள்.

அன்புடன்
ரூமி

படித்துவிட்டு ஒரு நிமிடம் சிந்தனையே ஓடவில்லை. பாடத்திட்டத்தில் வைக்க ஒரு கட்டுரை கேட்டிருந்தேன். பதினைந்து நாட்களில் எழுதி அனுப்புமாறும் சொல்லியிருந்தேன். அதை எதிர்பார்த்துத்தான் மின்னஞ்சலைத் திறந்தேன். இப்படி வந்திருந்தது. இணைப்பில் கட்டுரையும் இருந்தது. உடனே இப்படி பதிலனுப்பினேன்.
அன்புள்ள ரூமி,
தங்களின் உடல் நலம் சீர் பெற பிரார்த்தனைகள்.
கட்டுரை கிடைத்தது. நன்றி,
வஸ்ஸலாம்.

மறுநாள் ரூமியின் மகள் அலைபேசியில் அழைத்துக் கட்டுரை வந்ததா என்று விசாரித்தார். மின்னஞ்சலில் நான் அனுப்பிய பதிலை அவர் பார்த்திருக்கவில்லை. தந்தையின் உடல்நலத்துக்காகப் பிரார்த்தனை செய்யுமாறு சொன்னார்.

வைத்தபின் பல சிந்தனைகள் – மருத்துவம், தியானம், உடல் நலம், மூப்பு, பிணி, மரணம் என்கின்ற சுழற்சியில் வந்தன.

நாகூர் ரூமியிடம் நன் வியக்கும் விஷயங்கள் பல உண்டு. அவற்றில் ஒன்று, ‘இந்த விநாடி’ நூலில் அவர் சொல்வது போல், முப்பதாண்டு காலமாக ஒரு மாத்திரை கூட உட்கொள்ளாமல் வாழ்ந்து வந்திருப்பது.

’நோய்களுக்கான எல்லா மருந்துகளும் நம் உடலிலேயே இருக்கின்றன. மாத்திரை உள்ளே போய் அதைத் தூண்டி விடுகின்ற வேலையை மட்டுமே செய்கிறது. என்ன, தூங்கிக் கொண்டிருக்கும் வேறு ஆட்களையும் எழுப்பி விட்டுவிட அவர்கள் சள்ளுபுள்ளுன்னு எரிந்து விழுகிறார்கள். அதை நாம் சைடு எஃப்பக்ட்ஸ் என்கிறோம். நம்முள் இருக்கும் மருந்தைத் தூண்டிவிட நம் சிந்தனையே போதுமானது. அதற்கான ஒரு தியான முறை உள்ளது” என்னும் சித்தாந்தத்தை முன் வைத்து தீபக் சோப்ரா, டாக்டர் ப்ரூஸ் லிப்டன் போன்ற ஹோலிஸ்டிக் மருத்துவர்கள் தரும் விளக்கங்களையும் சொல்லி ‘அடுத்த விநாடி’ நூலை அவர் எழுதியிருந்தார்.

இப்படியெல்லாம் வாழ்ந்துவரும் ஒருவருக்கு இருதயத்தில் அடைப்பா? என்று நான் கொஞ்சம் மலைப்பாகவே இருந்தது. சரி, தர்க்கத்துக்கு அப்பால் உள்ள எத்தனையோ புதிர்களில் இதுவும் ஒன்று. தக்தீர் – விதியில் எழுதி வைக்கப்பட்டது.

“ஜீன்ஸ் அணிந்த இந்த மனிதர் உங்களுக்கு ஓய்வெடுப்பது எப்படி என்று கற்றுத் தருகிறார்” (This man in jeans teaches you how to relax) என்றுதான் அவரைப் பற்றி சென்னையில் ஒரு நாளேடு அறிமுகப் படுத்தியிருந்தது. ‘ஆல்ஃபா தியானம்’ என்னும் நூலில் அவர் விவரித்திருந்த அந்த தியானத்தைச் செய்முறைப் பயிற்சி தரும் வகுப்புக்கான விளம்பரம் அது.

ஜமால் முகமது கல்லூரிக்கு அவரை நாங்கள் அழைத்திருந்த போதும் அப்படித்தான் வந்திறங்கினார் – ஜீன்ஸ் அணிந்த ஐம்பது வயது இளைஞராக. அதற்குக் காரணம் அவருடைய உள்ளத்தில் அடைப்புக்கள் ஏதுமில்லை என்பதுதான்! (பலருக்கும் வாழ்க்கையில் ப்ராப்ளம் வரக் காரணமே உள்ளத்தில் ’கொழுப்பு’ அடைப்பதுதானே?) ’அடுத்த விநாடி’, ‘ஆல்ஃபா தியானம்’, ‘இந்த விநாடி’ ஆகிய ட்ரிலாஜியில் அவர் விளக்கும் தியான முறையாகட்டும், அல்லது வேறு தியான முறைகளாகட்டும் எல்லாமே மனத்தடைகளை நீக்குவதற்குத்தான்.

கல்லூரியில் எங்கள் மாணவர்களுக்கு ஓர் உரையாற்ற வேண்டி அவரையே தலைப்புச் சொல்லச் சொன்னேன். இரண்டு அற்புதமான தலைப்புக்கள் கொடுத்து எங்களையே தேர்ந்தெடுக்குமாறு சொன்னார்:
“நூராவது டிகிரி”
“நானே சிற்பி! நானே சிலை!”

என் தேர்வு “நூராவது டிகிரி”. ஆனால் அதில் ஒரு பேராசிரியருக்கு மிகுந்த ஆட்சேபனை தோன்றவே (ஒன்னுமே புரியல ஒலகத்துல, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது!) அதை விட்டுவிட்டு அடுத்த தலைப்பைத் தெரிவு செய்தோம்.

“இது என்ன சிலைன்னெல்லாம் வருது. மிஸ்லீடிங்கா ஆயிடப் போவுது. தலைப்பை மாத்துங்க” என்று அரபிப் பேராசிரியர் ஒருவர் ஃபத்வா வழங்கினார். இது குறியீடு என்று சொல்லி அதை எவ்வளவு விளக்கியும் அவருக்கு கன்வின்ஸ் ஆகவில்லை. இது என்னடா இவருக்கு இப்படி சிலையோஃபோபியா வந்திருக்கே என்று நொந்து கொண்டு சமாளித்தோம்.

நாகூர் ரூமி அந்த உரைக்காக தனது மடிக்கணினியில் பவர்பாய்ண்ட் தயாரிப்புடன் வந்திருந்தார். அதை அடியேன்தான் இயக்க வேண்டும் என்று ஏற்பாடு. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பமாகி ஐந்து நிமிடத்தில் பவர்பாய்ண்ட்டை இயக்குவதில் சொதப்பினேன். யூட்யூபில் எடுத்த இரண்டே காட்சிகளை மட்டுமே காண்பிக்க முடிந்தது. அந்த உரையிலும்கூட தனக்கே உரிய ஹாஸ்ய பாணியில் மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சியையும் சொல்லிக் கொடுத்துவிட்டார்.

அன்று மாலை அவருடைய ரசிகரான நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டில் வாசகர்களுக்கு ஆல்ஃபா தியானம் செஷன் நடத்தினார். என் வீட்டிற்கும் சிறிது நேரம் வந்து சென்றார். அப்போது என்னிடம் சொன்னார், “உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கு. நல்லா வருவீங்க”

லட்சக்கணக்கான மனங்களில் நம்பிக்கை விதையை முளைவிடச் செய்த நாகூர் ரூமி அவர்களே! நீங்களும் நன்றாகி வந்து இன்னும் பல்லாண்டுகள் உற்சாகமாய் உலா வந்து உலகில் தியானத்தைப் பரப்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு, இன்ஷா அல்லாஹ்!

4 comments:

  1. அல்லாஹ்வே.. என்னா இது... அல்லாஹ்ட உதவியினால பெரியோர்களுடைய துஆ பரக்கத்துனால நல்லா போயி ஒரு கொறை வராம இருக்கும்..

    ReplyDelete
  2. இறைவனருளால் ரூமி அவர்கள் நலமுடன் மீண்டு வருவார்

    ReplyDelete
  3. இவருடைய இந்த விநாடி நூலைப் படித்திருக்கிறேன்.மரபில் ஆழ்ந்த புலமை அதேசமயம் சுயஅனுபவத்திற்காக முயற்சி செய்கிற பாசிடிவ் தன்மையானவராகவே படித்து முடித்ததும் தோன்றியது எனக்கு.

    மாரடைப்பு என்பது கவலைக்குரியது என்றாலும் நவீன மருத்தவத்தில் பெரும்பங்கு அதன் வியாபார நோக்கம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்...இது அவர் நினைவில் அழுந்தப் பதிவாகாதவரை அவரை பாதிக்க வாய்ப்பே இல்லை...நலம் பெற வேண்டுகிறேன்...

    ReplyDelete
  4. சகோதரர் ரூமி பரிபூரண சுகமும் நீண்ட ஆயுளுடன் கூடிய நல்வாழ்வும் பெற இறைவனை இறைஞ்சுகின்றேன்.ஆமீன்!

    ReplyDelete