ஒரு சராசரி வாசகன் எப்போது இலக்கியவாதி ஆகிறான்? என்ற சர்ச்சை
கிளம்பியது வகுப்பில். நிறைய நூற்களைப் படித்துவிட்டால் இலக்கியவாதி ஆகிவிடலாம் என்பதுதான்
பலரின் கருத்தாக இருக்கிறது. எவ்வளவு நூற்கள் என்று எதாவது கணக்கு இருக்கிறதா என்ன?
‘இலக்கிய ரீதியாகச் சிந்திப்பவன்தான் இலக்கியவாதி’ என்று சொன்னேன். இலக்கிய ரீதியாகச்
சிந்திப்பது என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பபட்டது. இது என்னடா இது, கிணறு வெட்ட
பூதங்களாகக் கிளம்புகிறதே என்று ரூட்டை மாற்றினேன்.
“ஒருவன் இன்னொரு தோசை வேண்டும், இன்னொரு தோசை வேண்டும் என்று
நூறு தோசைகளை வாங்கிச் சாப்பிடுகிறான். அவனுக்கும் இலக்கியத்துக்கும் ஏதாவது சம்பந்தம்
இருக்கிற மாதிரி தெரியுதா?
“இல்லை”
“அதே இன்னொரு ஆள் இரண்டாம் தோசைக்கு ஆர்டர் கொடுக்கும் போதே
‘அம்மா தோசையின் இன்னொரு பிரதி கிடைக்குமா?’ன்னு கேட்குறான்னு வை, அவன் நவீன இலக்கிய
வட்டத்திற்குள் நுழைந்தே விட்டான்னு அர்த்தம்”
“எப்பூடி சார்?”
“அதாவது தோசை என்பது ஒரு ப்ரோட்டோடைப். வீடுகளிலும் விடுதிகளிலும்
கல்லில் ஊற்றப்படுவதெல்லாம் அதன் பிரதிகளே என்னும் பிரக்ஞை அவனிடம் இருக்கிறது.”
“அப்டீன்னா, இலக்கிய விமரிசகன் யார்?”
“தோசையே சாப்பிடாட்டியும், டைனிங் ஹாலில் இருந்தபடியே கிச்சனை
நோக்கி ‘என்னது தோசை தீய்ற வாடை வருதுன்னு?’ சொல்றான்னு வச்சுக்க, அவன்தான் இலக்கிய
விமரிசகன். Critical thinking on dosai from the desk of the connoisseur என்று அவன்
இதை
வைத்து நானூற்றி சொச்ச பக்கங்களில் ஒரு நூலே எழுதிவிடுவான்”
‘சார், நவீனத்துவத்துக்கும் பின்-நவீனத்துவத்துக்கும் என்ன சார்
வித்தியாசம்?’
‘பின்-நவீனத்துவம்கிறது நவீனத்துவத்துக்குப் பின்னாடி நிக்கிற
நவீனத்துவம். இதன்படிப் பார்த்தால் நவீனத்துவம்னா என்னங்கறதுதான் விளங்குறதுக்குக்
கொஞ்சம் கஷ்டம்னு தெரியுது”
“சார், கிண்டல் பண்ணாதீங்க. நான் சீரியஸாக் கேக்குறேன். சீரியசாவே
பதில் சொல்லுங்க”
“ஓக்கே. நவீனத்துவம்கிறது தோசைய வட்டமாச் சுடாம சதுரமாகவும்
முக்கோணமாகவும் செவ்வகமாகவும் சுடுறது. பெண்டகன் ஷேப்ல தோசை சுட்டா அது அமெரிக்க நவீனத்துவம்.
பின்–நவீனத்துவம்னா மையப்புள்ளி இல்லாம தோசை சுடுறது. இந்த விளக்கத்தின்படிப் பார்த்தால்
பின்–நவீனத்துவம்தான் ரொம்ப கஷ்டம்”
இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நினைவிலி மனத்தின் நனவோடை
(Stream of consciousness என்று வில்லியம் ஜேம்ஸ் சொன்னது) முந்திய நாள் இரவு கிச்சனுக்கு
ஓடுகிறது. சகதர்மினி தோசை ஊற்றிக் கொண்டிருக்கிறாள். நான்-ஸ்டிக் கல்லின் நடுவில் இறங்கும்
மாவு அடுத்து வளையம் வளையமாகப் பரப்பப் படுகிறது. எத்தனை கான்செண்ட்ரிக் வட்டங்கள்
என்று என் கணிதப் பிரக்ஞை எண்ணவும் திகிலாகிறேன். இலக்கியவாதி + ஆன்மிகவாதி என்னும்
அடையாளமே தாங்க முடியல. இது வேற என்ன புதுசா? என்று சுயநிந்தனைக்கு என் உள்மனம் சொன்னது,
‘இல்லப்பா, இந்தக் காட்சியை ராமாநுஜம் பார்த்தான்னா என்ன நினைப்பான்னு ஒரு சின்ன கற்பனை.
வேறொன்றுமில்லை. இலக்கியவாதின்னா நாலு தினுசா யோசிக்கத் தெரியனுமா இல்லையா? An
epic should be written by an erudite scholar-னு சொல்வாங்க. இப்ப கவனி. சகதர்மினி
தோசையின் மையப் புள்ளியிலிருந்து அதன் விளிம்பு வரை அதன் ஓர் ஆரத்தில் தோசைத் திருப்பியின்
பக்கவாட்டினைக் கொண்டு வெட்டுகிறாள். பிறகு அந்த ஆரவெட்டிலிருந்து அப்படியே தோசையை
சுருட்டிக்கொண்டு வர அது ஒரு கூம்பு வடிவம் பெறுகிறது. அதை ஒரு கூடாரம் போல் தட்டில்
எடுத்து வைத்து மேசையில் காத்திருக்கும் பிள்ளைக்கு எடுத்துச் செல்கிறாள். ராமாநுஜம்
இதைப் பார்த்தால் அந்த கான்செண்ட்ரிக் வளைவுகளின் உருவாக்கத்திற்கும், வட்டம் ஒரு கூம்பாக
மாறுவதற்குமான ஒரு கணித சூத்திரத்தை இந்நேரம் சிந்தித்திருக்க மாட்டானா? அதிலிருந்து
புதிய தியரி எதையாவது அவன் கண்டுபிடித்திருக்கக் கூடும். Mathamatical analysis of
Dosa from the master’s desk! நீயும்தான் இருக்கிறாயே, மண்டு மண்டு’
தோசைக்கும் கணிதத்திற்கும் என்ன தொடர்போ, யானறியேன். ஆனால் அடியேன்
தோசை சுட முயன்றபோது அது நான் கணக்குப் பரிட்சை எழுதிய அனுபவம் போலவே இருந்தது. அதாவது
கல்லில் ஊற்றும்போதே தோசை தாறுமாறாகப் பிய்ந்து கொண்டு வந்தது!
மணி அடிக்கவும் அத்துடன் அந்த வகுப்பு முடிவுற்றது. இலக்கியவாதி
ஆவதற்கு ஒரே வழி இனி தோசை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இட்லி பூரி ஆப்பம் என்று சாப்பிடுவதுதான்
என்ற நல்ல முடிவை நோக்கி மாணவர்களை நகர்த்திய திருப்தியுடன் ஸ்டாஃப் ரூமுக்குத் திரும்பினேன்.
இரண்டு மணிநேரத்துக்குப் பிறகு மீண்டும் வகுப்பு. “பா.விஜய்
ஒரு தத்துவ வித்தகர்” என்று சொல்கிறான் ஒரு மாணவன். ரொம்பக் கடுப்பேத்றார் மை லார்ட்!
– என்னும் ஸ்திதிக்கு நான் ஆளாகிறேன். தத்துவம் என்றால் என்ன? என்னும் கேள்வியை எழுப்பி
அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட எனக்குள் இருக்கும் இம்சை அரசன் சித்தம் கொண்டாலும்
நல்ல புத்தி சொல்லி நளினமாகப் பேசத் தொடங்குகிறேன்.
”ஜெயமோகன்
அற்புதமாக ஒரு விளக்கம் சொல்றார் தம்பி:
‘சிந்தனை
என்பது மூச்சு; தத்துவம் என்பது பிராணாயாமம்’”
“கவிதையா
சார்?”
“இதை
வைரமுத்து எழுதினாத்தான் கவிதை. ஜெயமோகன் எழுதினாக்க கவிதை இல்லை”
“ஏன்
சார் அப்படி?”
“ஏன்னா
வைரமுத்து கவிப்பேரரசு. ஆனால் ஜெயமோகன் அப்படி அல்ல”
“ஒருத்தர்
கவிஞர்னும் ஒருத்தர் கவிஞர் இல்லைன்னும் எப்படி சார் முடிவு செய்றது?”
(ரொம்பக்
கடுப்பேத்றார் மை லார்டு! – பார்ட் 2)
“பாக்குற
எல்லாத்திலயும் ஒரு கவித்துவத்தை உணரணும் தம்பி. அவன்தான் கவிஞன். உதாரணமா,
‘பல்லேலக்கா
பாளையத்தில்
வெள்ளைக்
காக்காய்
மல்லாக்கப்
பறக்குது’
என்று
சாரு நிவேதிதா எழுதும் வரிகளைப் பார். (அவர் இதை உரைநடையாகத்தான் எழுதினார். அடியேனுக்கு
இது ஒரு கவிதையாகத் தெரிந்ததால் மடக்கிப் போட்டிருக்கிறேன்.) இதில் சர்ரியலிசம் இருக்கிறது
தெரியுதா? மேல் மிச்சமாக ஸ்ட்ரக்ச்சுரலிஸமும் உனக்கு தரிசனமானால் நீ கவிதையே எழுதாவிட்டாலும்
கவிஞன்தான் தம்பி”
Bingo!
சிறிது நேர மௌனம் நிலவ ஏதோ எக்ஸானந்தா நடத்தும் யோகா க்ளாஸ் போல் தோன்ற சுதாரித்துக்
கொள்கிறேன்.
”ஜெயமோகன்
சொல்றார்: சிந்தனை என்பது மூச்சு; தத்துவம் என்பது பிராணாயாமம். அதாவது மூச்சைப் முறையாகப்
பயன்படுத்துவது. அப்படிப் பயன்படுத்தும் போது சாதாரணமாக மூச்சு விடுகையில் கிடைக்காத
பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன என்னும் விளக்கங்கள் அவரின் இந்த உதாரணத்திலிருந்து
விரிகின்றன. இன்னும் சொல்லலாம். இயல்பான மூச்சு ஆழமாக இல்லை. நுரையீரல் நிரம்பி விரியும்படி
மனிதர்கள் மூச்சு விடுவதில்லை. அரைகுறை மூச்சுத்தான் விடுறாங்க. ஆனால் பிராணாயாமம்
என்ற மூச்சுப் பயிற்சி அதை ஆழமாக்குது. அது போல் மேம்போக்கான சிந்தனைகளை ஆழமாக்குவதுதான்
தத்துவ முறைமை. எந்தச் சிந்தனையாயிருந்தாலும் அதை முறைமைக்குள் கொண்டு வந்தால் அது
ஒரு தத்துவமாகிவிடும். ஆனால், தத்துவவாதி எல்லோருமே ஞானிகள் அல்ல. அது இன்னும் ஒருபடி
மேல”
“அப்ப
தத்துவஞானிங்கறவன் யாரு சார்?”
“அத்தர்
வாசம் வீசினாலும் மல நாற்றம் அடித்தாலும் பிராணாயாமம் பிசகாமல் இருப்பவன்!”
மணி அடித்தது.
பின்
குறிப்பு: இப்பதிவில் எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லையே என்று சிறு
வருத்தம் எழவே, தலைப்பை அவர் பாணியில் இட்டு நிம்மதி அடைந்தேன்.
சாரு exileல் autofiction என்பது அரசியல் நிலைப்பாடு என்கிறாரே?
ReplyDelete