மழைக் காலம் தொடங்கியது. இதுவரை காணாமல் போயிருந்த தும்பிகள்
இருசோடி சிறகுகள் கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டுள்ளன. ஒரு வாரமாய் நடந்து வந்த
நிகழ்வு ஒன்று என் நினைவை விட்டு நீங்காமல் ஈரமாய் இருக்கிறது இன்னும்.
கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய ஒரு நாள் நண்பகல், வாசலில்
காலணியைக் கழற்றி வைக்கும் போதே சகதர்மினி சலித்தபடிச் சொன்னாள்: “ரெண்டு குருவிக வந்து
அட்டகாசம் பண்ணுதுக. இங்க பாருங்க.”
அவள் கை காட்டிய இடத்தில் புல்லின் இதழ்கள் கிடந்தன. ஸ்ப்ளிட்
ஏ.சியின் வெளிச் சாதனத்திற்குக் கீழே, முற்றத்தில். “ஏ.சி பெட்டிக்குப் பின்னாடி கூடு
கட்டப் பாக்குது. இப்படி புல்லுகளக் கொண்டு வந்து போட்டுக்கிட்டே இருக்குக. அதுல புல்லு
நிக்கவும் மாட்டேங்குது.”
சிதறிக்கிடந்த புல்லின் இதழ்களை வாரி எடுத்துக் கொண்டு போய்
கீழே போட்டுவிட்டு வந்தேன். ”சரி இனி வராது. பாத்துக்கலாம்.”
அந்தப் புல்லின் இதழ்கள் பார்க்க அழகாக இருந்தன. ’புத்துணர்ச்சி’
என்னும் சொல்லின் வடிவமாய்த் தெரிந்தன. உயிரின் ஈரம் காயாத அதன் பச்சை நிறம் இச்சை
போல் இருந்தது. அரை அடி நீளத்தில் ரிப்பன் போன்ற புல்லிதழ்கள். “I sing the body
electric” என்று பாடிய வால்ட் விடமன் தன் நூலுக்கு “Leaves of Grass” என்று பெயர் சூட்டியதை
நினைவு கூர்ந்தேன். இளமையின் நலம் இலங்கும் உடல் அந்தப் புல்லின் இதழ்கள் போன்றவைதான்!
அந்தச் சிட்டுக் குருவிகள் அந்தப் புல்லின் இதழ்களை எங்கிருந்து
எடுத்து வருகின்றன என்று சிந்தித்தேன். முன்னூறு அடிகள் தொலைவில் உள்ள ராணுவ மைதானத்தில்தான்
இந்தப் புற்கள் வளர்ந்துள்ளன. அங்கிருந்து ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டு வருகின்றன
என்று தெரிந்தது.
குருவிகள் கூடு கட்ட வருகின்றன என்ற சேதியே கேட்டவுடன் மகிழ்ச்சியாக
இருந்தது. பாட்டி வீட்டில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலங்களில் தினம்
தினம் பறவைகளின் பள்ளியெழுச்சிப் பாடல் கேட்டுப் பரவசம் அடைவேன். இப்போதெல்லாம் ஒற்றைப்
பறவையின் ஒலிகூட அரிதாகிவிட்டது. அலைபேசிக் கும்பினிகளின் கம்பிக் கோபுரங்கள் ஆங்காங்கே
எழுந்த பின்னர் குருவிக் கூட்டங்கள் காணாமல் போய்விட்டன.
’சிட்டுக் குருவிக்கு ராஜாளியின் வலிமையைத் தருவாயாக’ என்பது
அல்லாமா இக்பாலின் பிரார்த்தனைகளில் ஒன்று. அதுபோல், “அலைபேசிக் கோபுரங்களின் கம்பிகளில்
கூடு கட்டி வாழும் வலிமையை குருவிகளுக்கு அருள்வாயாக!” என்று எல்லாம் வல்ல இறைவனிடம்
நானும் வேண்டுகின்றேன். ஏர்டெல், ஏர்செல், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல் இத்தியாதிகளின்
கோபுரங்களில் எல்லாம் குருவிகளின் கூடுகள் தோன்றுவதாக! ஆமீன்!
’அவை இனி வாரா’ என்று சகதர்மினியிடம் சொன்னேன் அல்லவா? என் கணிப்புப்
பொய்த்தது. மறுபடி மறுபடி அந்தக் குருவிகள் கூடு கட்டும் நோக்கில் புல்லிதழ்களைக் கொண்டு
வந்து போட்டன. ஏ.சி க்ளாம்ப்பில் கூடு கட்டுவதற்கு வாகான அமைப்பே இல்லை. இது அந்தக்
குருவிகளுக்குப் புரியாதா? என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
மீண்டும் மீண்டும் அப்படி இரண்டு நாட்களாக நடந்த பின் ஒருநாள்
சகதர்மினி சொன்னாள்: “இப்படி அட்டகாசம் பண்ணுதுகளே. கட்டிட்டுத்தான் போகட்டும்னு விட்டுடலாம்னு
பாத்தா ஃபேன்ல அப்படியே உள்ளெ இழுத்துருமேன்னு பயமா இருக்கு. வேற எடத்துக்கும் போகாது
போலிருக்கு.”
பல மில்லியன் முறைகள் சிறகு சிவிறிக்கொண்டு பல மைல்கள் நாளெல்லாம்
சுற்றி மலர்களில் தேன் எடுக்கவும், மரங்களிலும் கட்டடங்களிலும் அடை கட்டவும் தேனீக்களின்
உள்ளத்தில் உணர்வை எழுப்பும் இறைவன் இந்தக் குருவிகளுக்கும் என் வீட்டில்தான் கூடு
கட்ட வேண்டும் என்னும் உள்ளுணர்வை எழுப்பிவிட்டான் போலும்.
“ஆண்டவன் அதுக மனசுல இங்கதான் கூடு கட்டணும்னு உத்தரவு போட்டிருந்தா
அத மீறி அதுங்க எப்படிச் செயல்பட முடியும் சொல்லு? நாம எத்தன தடவ தொறத்தி அடிச்சாலும்
அது திரும்ப திரும்ப இங்கதான் வந்துக்கிட்டிருக்கும். அதுக்கு இங்கதான் சாவணும்னு இருந்தாலும்
வேற வழி இல்ல. மனுஷன் வாழ்க்கையே அப்படித்தானே இருக்கு?” என்றேன் நான்.
“அல்லாஹ் காப்பாத்தட்டும். அதுங்க நம்ம வீட்ல வந்து சாக வேணாம்.
வேற வழி எதாச்சும் யோசிச்சுப் பாருங்க. அதுங்க வேற எடத்துக்குப் போயிடட்டும்” என்று
சொல்லிவிட்டு அவள் அடுக்களைக்குப் போனாள்.
ஒரு ஞாயிற்றுக் கிழமையின் காலை. கசப்பும் இனிமையும் இழையோடும்
லாட்டே அருந்திய பின் தியானத்தில் பொருந்தி இருந்தேன். முற்றம் சென்ற சகதர்மினி அவசரமாக
அழைத்தாள்.
“குருவிங்க வந்திருக்குப் பாருங்க”
“நீயே அத விரட்டிடேம்ப்பா”
”நீங்களே வந்து விரட்டிப் பாருங்க. நாலு நாளா நான் தொறத்திக்கிட்டுத்தான்
இருக்கேன். போக மாட்டேங்குதே”
வராந்தாவில் ஓரத்திற்குச் சென்றேன். நான் நோக்கி வருவதைக் கண்டவுடன்
பதறிக் கொண்டு இரண்டு சிட்டுக் குருவிகள் புல்லிதழ்களைப் போட்டுவிட்டு விற்றிட்டுச்
சென்று மின்கம்பியில் அமர்ந்தன. அருகில் சென்று நின்று கூர்ந்து பார்த்தேன். என் கைப்பிடியில்
அடங்கி விடும். அத்தனைச் சிறிய உடல் கொண்ட பறவை. கரிய நிறத்தில் சிறகுகள். தலையிலும்
கருமை. உடல், நனைந்த செங்கல் நிறம். மெருகேற்றிய கன்னங் கரிய நிறத்தில் சின்னஞ் சிறிய
அலகு. அதில்தான் அத்தனை நீளமான புல்லிதழைக் கவ்விக் கொண்டு வந்துள்ளது என்று எண்ணுகையில்
வியப்பாக இருந்தது. என்னவொரு உழைப்பு!
அதன் கண்கள் பளபளக்கும் கருநிறக் கண்ணாடிக் கல் போல் இருந்தது.
அதில் ஓர் ஏக்கமும் கனவும் இருந்ததாகப் பட்டது. கூர்ந்து அதன் கண்களைப் பார்த்த கணத்தில்
தோன்றிற்று அது வேறு வடிவத்தில் உள்ள ‘நான்’தான் என்று!
“குருவியே! உன்னை நான் ஏன் துறத்துகிறேன் தெரியுமா? இந்த இடம்
உனக்குப் பாதுகாப்பாய் இல்லை. எந்திர விசிறி உன்னையும் உன் மனைவியையும் அப்படியே கூட்டோடு
உள்ளே இழுத்துக் கொன்று விடும். நினைக்கவே பயமாக இல்லையா? எனவே காற்று தாலாட்டும் ஏதேனும்
மரக்கிளை தேடிச் சென்றுவிடு” – இவ்வாறு அதனுடன் மானசீகமாகப் பேசிக் கொண்டிருக்கும்
போதே அது விர்றென்று பறந்து வேறு பக்கமாக உள்ளே வர முயன்றது. நான் அப்பக்கமும் போய்
அதை துறத்தினேன். மின் கம்பியில் அமர்ந்து சில நொடிகள் பார்த்துவிட்டுப் புறப்பட்டுப்
போனது. அதுவரை அமைதியாக அமர்ந்திருந்த இணைக் குருவியும் அதன் பின்னாலேயே பறந்து போனது.
ஒருவேளை தன்னுள் அது அண்டங்கள் சுமக்கிறதோ?
திரும்பிய என்னிடம் சகதர்மினி சொன்னாள், “உங்களைப் பார்த்ததும்
இப்படிப் பயந்து ஓடிச்சே. என்னைப் பார்த்தப்ப துளிகூட பயப்படல.”
நான் என்ன அவ்வளவு கொடூரமானவனா? இல்லை, பெண்மையில் அது அளவற்ற
கருணையின் சாயலை தரிசித்துவிட்டது போலும்!
“இனி வராதுப்பா” என்று மட்டும் அவளிடம் சொன்னேன். ‘மானஸ மொழியில்
சொல்லி அனுப்பிவிட்டேன்’ என்பதை என் மனதிலேயே சென்சார் செய்துவிட்டேன்.
ஆமீன்! ததாஸ்து! என்பனவும் அன்னவை வேறு மொழி எதிலும் அந்த முகூர்த்தத்தில்
சொல்லப்படவில்லை போலும். நான் என்ன முனிவனா? தலையைப் பிய்த்துக் கொள்வது போல் தத்து
பித்தென்று எழுதிப் பட்டம் பெற்ற ’முனைவன்’தானே? நான் நினைப்பதா நடக்கும்? அன்று மாலையே
குருவிகள் மீண்டும் ஆஜர்!
என்னைக் கண்டதும் அவை அபிநயிக்கும் அச்சம் வெறும் நடிப்புப்
போல் தோன்றியது. அவை போவதும் வருவதுமாய் விளையாடத் தொடங்கிவிட்டன. அவற்றைத் தடுக்க
வழி அறியாது தவித்தபோது வீட்டிற்கு வந்திருந்த மாமா ஒரு உத்தி உரைத்தார். வேட்டுச்
சத்தம் கேட்டால் இந்தப் பக்கமே பிறகு தலை வைத்துப் பறக்காதாம்! தீபாவளியின் பட்டாசு
வெடி வகைகளை நான் கண்ணில் பார்த்து வருஷங்கள் பலவாச்சு. வேறு ஐடியா யோசிப்போம் என்று
எண்ணுகையில் என் சிந்தனையில் செல்ல மகளின் குழந்தைப் பொம்மை சிரித்தது.
படுக்க வைத்தால் கண்கள் மூடித் தூங்கும். நிமிர்த்தி வைத்தால்
அகலத் திறந்து நீல விழிகளால் நோக்கும். அந்தப் பஞ்சுப் பொதிப் பொம்மையை ஏ.சி வெளிச்
சாதனத்தின் க்ளாம்ப்பில் அமர வைத்துவிட்டால்? அதைக் காணும் குருவி ஆள் இருப்பதாக எண்ணி
அதன் பின் வராது என்ற திட்டம் தீட்டப்பட்டது. அப்போதே அமுலுக்கும் வந்தது.
இரண்டு நாட்கள் கழிந்தன. அந்த இரண்டு சிட்டுக் குருவிகள் அதன்
பின் வரவே இல்லை. பொம்மை வீட்டுக்குள் வந்துவிட்டது. நான்கைந்து நாட்கள், வெளிக் கிளம்பும்
போதெல்லாம் என் கண்கள் அவற்றைத் தேடித் துழாவின. தென்படவில்லை.
பின் ஒரு நாள் வானம் திறந்து கொண்டு நான்கு நாழிகை மழை கொட்டித்
தீர்த்தது. வானம் வெறித்த பின் கதவு திறந்து வந்து முற்றத்தில் நின்றேன். மரக் கொப்புகளில்
இருந்து மழைத் துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன.
அந்தக் குருவிகள் வேறு எங்காவது கூடு கட்டியிருக்கும். பரம்பொருளின்
அலகிலா அருளில் இருந்து வெளிப்படும் ஆனந்தக் கலவியின் அடையாளமாய் அந்த இணையின் பெண் அதில் முட்டைகள் இட்டு வைத்திருக்கவும் கூடும்.
இப்படி எண்ணிக் கொண்டிருக்கையில் ஒரு நடை அவற்றின் வீடு வரை
சென்று விசாரித்து விட்டு வர வேண்டும் போல் தோன்றியது.
குருவிக் "கூடு பேறு" பதிவை ரசித்து படித்தேன்.
ReplyDelete