Sunday, November 25, 2012

ச்சோட்டா பீமின் பிரதியாக்கம்

’படிக்கவே மாட்டேங்குறான். எப்பப் பாத்தாலும் சோட்டா பீம் சோட்டா பீம்னு அதுதான் மண்டையில இருக்கு. கிறுக்குப் பிடிச்சாப்ல நாள் பூராவும் அதையே பாத்துக்கிட்டிருக்கான்’
மேற்படி வசனம் என் வீட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பது நமக்குத் தெரிந்ததுதான். கிட்டத்தட்ட தமிழ் கூறு நல்லுலகின் அனைத்து இல்லத்திலும் இதுதான் ட்ரெண்ட் ந்யூஸ்.


இன்றைய குழந்தைகளின் ஆதர்ச நாயகன் ச்சோட்டா பீம் என்னும் கார்டூன் பாத்திரம். இதுபோல் ஒவ்வொரு மூன்றாண்டுக்கு ஒருமுறை ஏதாவது ஓர் அலை குழந்தைகளின் பொழுபொக்கு உலகிலும் அடிக்கிறது. இதற்கு முன் டோரா புஜி அலை வீசிற்று. எங்கும் எதிலும் டோரா என்னும் சிறுமியும் அவள் வளர்க்கும் புஜி என்னும் குரங்கும் தென்பட்டன. (புஜியை எனக்கு மிகவும் பிடிக்கும். அதன் திருமுகம் எனக்குப் பிடிக்காத ஒரு பேராசிரியரின் முகத்தை ஒத்திருந்த போதும். இந்த உளவியலுக்கு என்ன பெயர் என்று தெரியவில்லை!)  பென்சில் டப்பா, வாட்டர் பாட்டில், டிஃபன் பாக்ஸ், பனியன், நிக்கர், ஃப்ராக், தொப்பி, ஸ்கூல் பேக், லேபில்கள் என்று எதில் பார்த்தாலும் டோரா புஜி. பல்லவன் ரயிலில் பயணம் செய்யும் போது பத்து நிமிடத்திற்கு ஒருமுறை காமிக்ஸ் புக் விற்பவர்கள் டோரா புஜி டோரா புஜி என்று மந்திரம் ஜெபித்துக் கொண்டே இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார்கள்.

குழந்தைகள் உலகம் முதலாளிகளுக்கு ரொம்பவும் பிடித்த ஒன்று. அதிக லாபகரமான உலகம் அது! வீட்டில் ஏற்கனவே ஐந்தாறு வாட்டர் பாடில்கள் இருந்தாலும் டோரா புஜியோ ஷின் ச்சானோ போக்கேமானோ ச்சோட்டா பீமோ படம் போட்ட வாட்டர் பாட்டிலைப் பார்த்துவிட்டு அதை வாங்கித் தந்தால்தான் ஆச்சு என்று வாண்டுகள் தரையில் கிடந்து புரண்டு அழிச்சாட்டியம் பண்ணிக் குடும்ப மானத்தை வாங்கும்போது பெற்றோர்கள் வேறு வழியின்றி ஐந்து ரூபாய் பெறாத அந்த டப்பாவை ஐம்பது ரூபாய்க்கு வாங்கத்தானே செய்வார்கள்? (விதிவிலக்கான பிள்ளைகளும் உண்டு. பெற்றோர்களே வாங்கித் தருகிறேன் என்று சொன்னாலும் ஒரு பட்ஜெட் அறிக்கையே கொடுத்து வேண்டாம் என்று சொல்லிவிடும் சாதுரியம் கொண்ட பிள்ளைகள்!)

என் வாரிசு ச்சோட்டா பீம் மீது மாலாகியுள்ளான் என்பதறிந்து அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று அடியேனும் சில வாரங்கள் தொடர்ந்து அதை அவதானிக்கலானேன். (அது சரி, ஐயா இலக்கியவாதி அல்லவா? அதிலும் கொஞ்சம் ஸ்பிரிச்சுவல் பெண்ட் உள்ள ஆளாச்சே. ’பார்த்தேன்’ என்னும் சாதாரண வார்த்தையெல்லாம் உமக்கு இழுக்கு ஐயா. எதுவாக இருந்தாலும் நீங்கள் தரிசிப்பீர்கள் அல்லது அவதானிப்பீர்கள்! –உள்குத்து உலகநாதன்).

ச்சோட்டா பீமை எனக்கும் பிடித்துப் போனது! மகனுடன் நானும் சேர்ந்து வாயை அங்காந்து இருப்பதைப் பார்த்து சகதர்மினி தலையில் அடித்துக் கொண்டாள். ‘அவனைத் திருத்துங்கன்னா நீங்களும் சேந்துக்கிட்டு (கெட்டுப் போறீங்க)’. நானோ ச்சோட்டா பீம் ப்ரோக்ராமின் கதை வசன கர்த்தாக்களின் படைப்பாக்க உளவியலை ஆராய்ந்து கொண்டிருந்தேன்.

ச்சோட்டா பீம் என்பது பஞ்ச பாண்டவர்களில் வரும் பீமனின் பால்ய காலச் சித்திரமாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் இதில் பஞ்ச பாண்டவர்களோ குந்தி தேவியோ இல்லை. ச்சோட்டா பீம் தனியாள். பீமன் என்றால் அவன்தான் பாண்டவர்கள் கௌரவர்கள் அனைவரிலும் அஜானுபாகு. ஆனால் ச்சோட்டா பீம் நார்மலான உடலமைப்புள்ள சிறுவன்தான். அவனுடைய நண்பனான காலியாதான் பீமசேனன் மாதிரி இருக்கிறான். மகாபாரத பீமன் என்றால் அவன் அரண்மனையில் இருக்க வேண்டும். ஆனால் ச்சோட்டா பீம் ‘டோலக்பூர்’ என்னும் ராஜ்யத்தில் ஒரு (அ)சாதாரண பிரஜை. ஆக, பீம் என்பது ஒரு பெயர், அவ்வளவுதான். மகாபாரதத்துடன் இதற்கு ஒரேயொரு தொடர்பு என்றால் அவ்வப்போது கிருஷ்ணன் (சிறுவனாக) விடுமுறையில் வந்து பீமுடன் சாகசங்களில் கலந்துகொண்டு போகிறான் என்பதைத்தான் சொல்ல முடியும்.

சமீபத்தில் ஒரு ரியல் எஸ்டேட் போஸ்டரைக் கண்டேன். (ஐயா உள்குத்து உலகநாதன் அவர்களே! கண்டேன் என்றுதான் சொல்கிறேன் என்பதைக் கவனியுங்கள். தரிசிக்கவெல்லாம் இல்லை). ஒரு ப்ளாட் வாங்கும் பட்சத்தில், மூவாயிரம் மரங்களுடன் கூடிய இயற்கை எழில் கொஞ்சும் வனச் சூழலை வாழ்க்கை முழுவதும் ’இலவசமாக’ நாம் அனுபவிக்கலாம் என்று சொன்னது அந்தச் சுவரொட்டி. பாரதிக்கே வந்த ஆசை அல்லவா? காணி நிலத்தில் பத்துப் பன்னிரண்டு தென்னை மரங்களுடன் கூடிய தனி வீடு, மொட்டை மாடியில் நிலா வெளிச்சம் விழ, கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் விழும் சூழலில் – பாட்டுக் கலந்திடப் பக்கத்திலே ஒரு பத்தினிப் பெண் (ஆமாம், ஒன்றுக்கு மேற்பட்ட பத்தினிகள் இருந்தால் அங்கே சக்களத்திச் சண்டைதானே நடக்கும்? பாட்டா படிக்க முடியும்? பாரதி இஸ் வெரி ப்ராக்டிக்கல்!) மேலும் மொட்டை மாடியிலேயே கூட்டுக் களி! எனில், பக்கத்து வீட்டு மொட்டை மாடியிலிருந்து யாரும் பார்த்துவிடுவார்களோ என்ற பயம் இல்லாதபடிக்கான தனி வீடு. பாரதி கேட்பது சரியான ஹாட் ப்ராப்பர்ட்டி ஐயா! சென்னையில் இதுமாதிரி எனில் இப்போது பல கோடிகள் தேறும். பாரதி இந்த வசதிகளைப் பராசக்தியிடம் கேட்டது பாட்டுத் திறத்தாலே வையத்தைப் பாலித்திடும் பணியை செய்வதற்காக. அகாதமிகளும் பீடங்களும் வழங்கும் சான்றிதழும் மெடலும் தொகையும் வெறும் பிஸாத்து.  வில்லாஸ் என்று சொல்கிறார்களே – கொரியன் க்ராஸ் lawn கொண்ட தோட்டத்தின் நடுவே சகல வசதிகளும் கொண்ட வீடு – அப்படியொன்றை இலக்கிய கர்த்தாக்களுக்குத் தந்தால் என்ன என்று ஒருகணம் தோன்றிற்று. பாரதி கேட்டது போல் பராசக்தியிடமே கேட்டுக்கொள் என்று சொல்லி விடுவார்கள். கொடுப்பதை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னையின் புறப்பகுதியில் இயற்கைச் சூழலில் ஓரகடம் என்னும் அடுக்குமாடிப் பகுதி உருவாக்கப்பட்டு வீடுகள் விற்பனைக்கு என்று மாதவனை வைத்து விளம்பரம் செய்தார்கள். (மிடில் க்ளாஸ் மாதவன் அல்ல.) இன்றைக்கு ரியல் எஸ்டேட்டின் டிரெண்ட் என்னவெனில் சுவையும் தூய்மையும் கொண்ட தண்ணீர் வசதி, தூய காற்றும் பசுமையும் கொண்ட சுற்றுப்புறச் சூழல் என்னும் இரண்டு விஷயங்கள்தான் டாப் கவர்ச்சி! இதற்கான உத்தரவாதம்தான் கஸ்டமர்களைக் கவர்ந்திழுக்கும் glow worm நெளியும் தூண்டில் முள்!

ஏன், உங்களுக்கு அப்படியொரு ஆசை இல்லையா? என்று கேட்காதீர்கள். இது மாதிரி சின்ன சின்ன ஆசையெல்லாம் கிடையாது. எனக்கு இருப்பதெல்லாம் பேராசைகள். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சொந்தமாக அட்லீஸ்ட் பாரதி கேட்டது போன்ற ஒரு வீடு ப்ராப்தமாக வேண்டும். (Interlude #1: Mu.Metha’s poetry in Bharathiraja’s voice – “அவன் பட்டுவேட்டி பற்றிய ஒரு கனவில் இருந்தபோது கட்டியிருந்த வேட்டியும் களவாடப் பட்டது.” Interlude #2: இந்த அடுக்கு மாடி வீடுகளைக் கண்டாலே எரிச்சல் எரிச்சலாக வருகிறது yaar. அதில் இருப்பவைகள் வீடுகள் அல்ல, செல்கள் என்று தோன்றுகிறது. பின் வரும் உரையாடலை கவனிக்கவும்:
What’s your address?
25-C, 11th floor, Golden Eagle Nest, Pannikkuppam.
O.K, Your cell number please...
25-C.
அவ்வப்போது இப்படி அடைப்புக் குறிகளுக்குள் அடியேன் செய்யும் உபத்திரவங்களை தயை கூர்ந்து உபப்பிரதியாக எடுத்துக் கொள்ளவும்.)

ச்சோட்டா பீம் ரிட்டன்ஸ். சிக்மண்ட் ஃப்ராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங் ஆகிய சைக்கோ மேதைகள் மனிதனின் மனம் தனியாக இல்லை என்னும் கருத்தை முன்வைத்தார்கள். கூட்டு நினைவு மனம் (collective consciousness) கூட்டு உபநினைவு மனம் (collective subconscoiousness) என்றெல்லாம் பேசினார்கள். அதன்படிக்குக் கால காலமாக ஆசைகள் நிராசைகள் எல்லாம் நம் அனைவரின் மன அடுக்குகளில் சேகரமாகிக் கொண்டே வருகின்றன. நம் மனங்களின் பின்னலான ஒரு நெட்வொர்க்கில் அவை செயல்படவும் செய்கின்றன. ஒரு போக்கான ஃபேஷன் அலை, ரசனை, லட்சியம் எல்லாம் உருவாவது இப்படித்தான் என்று அவர்களின் உளவியல் கோட்பாடு கூறுகிறது.

ச்சோட்டா பீமின் கதைக் களத்தைப் பார்க்கும் போது என்னை முதலில் ஈர்த்த விஷயம் அவன் வாழும் டோலக்பூர்தான். மக்கள் நெரிசல் இல்லாத கிராமம் அது. குடிசைகள், வயல்கள், தோப்புக்கள், சுற்றிலும் காடுகள். ஊர் நடுவே ஒரு பஞ்சாயத்து மரம். அது ஓர் அமைதியான சிற்றூர். ஆனால் அதுதான் அவர்கள் நாட்டின் தலைநகர்! சொல்லப்போனால் அந்த டோலக்பூர் ஒரு குறுநில மன்னன் ஆளும் நாடு! அரண்மனை இருப்பது அந்த ஊரில் உள்ள ஒரு மலை மீது. இன்றைய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வாக்குறுதியளிக்கும் ஹாட் ப்ராப்பர்ட்டி களம்தான் டோலக்பூர் – ஷாப்பிங் மால், மல்டிப்ளெக்ஸ், ஸ்கூல், காலேஜ், ஹெல்த் செண்ட்டர், நெட்காஃபே போன்ற நவீன வசிதகளை உருவாக்கிக் கொண்டால். அமைதியான தூய்மையான பசுமையான வாழ்விடம் என்று நம் அனைவரின் மன வலைப் பின்னலில் கிடக்கும் ஆசையின், மூதாதையர்களின் இயற்கை சார்ந்த கிராமிய வாழ்வை இழந்து விட்ட ஏக்கத்தின் வெளிப்பாடுதான் ச்சோட்டா பீமிடம் நமக்குத் தோன்றும் ஈர்ப்பு. நம் பிள்ளைகளுக்குத் தெரியாமலே அவர்களின் கூட்டு உபநினைவு மனம் அதற்கு ஆட்படுகிறது எனலாம்.

ச்சோட்டா பீம் கதையில் நான் அவதானித்த இன்னொரு அம்சம் அது நம் காலப் பிரக்ஞையை அசைத்துப் பார்க்கிறது என்பது. ஒரு குறிப்பிட்டக் காலத்தில் நிகழ்வது என்னும் தன்மையை அது மீறுகிறது. பல்வேறு காலகட்டங்கள் ஒரு புள்ளியில் குவிவது போன்ற உணர்வை அது ஏற்படுத்துகிறது. இதைச் சாத்தியமாக்க அது பல்வேறு காலகட்டங்களின் அடையாளங்களைத் தன் கதைக்குள் கொண்டு வருகிறது. உதாரணமாக, டோலக்பூரில் திடீரென்று ஒரு ராட்சதக் கூடாரம் தோன்றுகிறது. ஊர் மக்கள் அதற்குள் என்ன இருக்கிறது என்று பரபரப்பாகப் பேசிக் கொள்கிறார்கள். ஒரே மர்மமாக இருக்கிறது. அதை அறிவதற்காக காலியா முயற்சி செய்து நொக்குப் படுகிறான். நையாண்டியை கவனியுங்கள்: அணு உலை சைஸில் இருக்கும் அந்தக் கூடாரத்திற்குள் என்னதான் நடக்கிறது என்பது டோலக்பூர் அரசருக்கே தெரியாது! (எல்லாக் கதையிலுமே இப்படித்தான். நாட்டுக்கே வரும் ஆபத்து பற்றி அரசருக்கு ஒன்றுமே தெரியாது. அத்தகைய சூழ்நிலையில், ஆபத்தைக் கண்டுபிடித்து பகையை வென்று நாட்டைக் காக்கும் பொறுப்பை அவர் ச்சோட்டா பீமிடம் ஒப்படைப்பார். விஜயகாந்துக்கும் அர்ஜுனுக்கும் சொல்லப்படும் புரட்சிக் கலைஞர், ஆக்‌ஷன் கிங் ஆகிய பட்டங்களை ச்சோட்டா பீமுக்குக் கொடுக்கலாம். ஹி ரியல்லி டிசர்வ்ஸ்.) கடைசியில் பார்த்தால் அந்தக் கூடாரத்திற்குள் அதுநாள்வரை ஒரு ராட்சத ரோலர் கோஸ்டர் கட்டப்பட்டு வந்திருக்கிறது. இன்றைய தீம்பார்க் கான்செப்ட். அல்லது டோலக்பூரில் அன்னிய முதலீடு என்னும் கோணத்திலும் இதைப் பார்க்கலாம். சிஅல் நாட்கள் கழித்து மக்கள் அதன் மீதான ஈர்ப்பை இழக்கவும் வியாபாரம் தொய்கிறது. அதன் வேகத்தை அநியாயத்துக்கு அதிகரித்து மக்களுக்கு ஒரு த்ரில்லை ஏற்படுத்த முதலாளி முடிவு செய்கிறான். அழைப்பின் பேரில் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்து மீண்டும் தொடங்கி வைக்க அரசரே வருகிறார். அதாவது, அன்னிய முதலீட்டுக்கு அரசின் ஆதரவு. “இது நாட்டிற்கு நன்மை பயக்கும் விஷயம்தானே மக்களே!” ஆனால் அது ஓடும் அசுர வேகத்தில் நட்டுகள் பிடுங்கிக் கொண்டு தெறிக்கின்றன. அதை இயக்குபவனால் கட்டுப்படுத்த முடியாமல் போக, அரசரையும் நண்பர்களையும் காப்பாற்றும் கடமை உணர்வு பீறிட ச்சோட்டா பீம் அதன் மீது பாய்ந்து பின்னால் இருந்து இழுத்து நிறுத்துகிறான். ச்சோட்டா பீம் கதையின் களம் திரேதா யுகமோ துவாபர யுகமோ போல் இருந்தாலும் அதில் நீங்கள் அமெரிக்க பாணியிலான ரோலர் கோஸ்டரைப் பார்க்கிறீர்கள்! இதைத்தான் கால போதத்தில் ஓர் அசைவு என்று குறிப்பிட்டேன்.

இன்னொரு எபிஸோட். ச்சோட்டா பீமின் தோழி ஒருத்தி. பெயர் ச்சுட்கி. அவளின் அம்மா லட்டு செய்து விற்பவர். அந்தக் காலகட்டத்தில் ஸ்வீட் ஸ்டால் என்றால் லட்டு என்னும் ஒரேயொரு ஐட்டம் மட்டும் விற்கப்படும் ச்சுட்கியின் வீடுதான். அங்கே ஒருநாள் இரண்டு நபர்கள் வருகிறார்கள். தலையில் பாகை, சுருளும் தாடி, போர்வாள் எல்லாம் இருக்கிறது. அரேபியாவில் இருந்து வந்தவர்கள் போல் தெரிகிறது. ஒரு லட்டுவை எடுத்துச் சாப்பிட்டுவிட்டு ‘ஆகா அருமையான ருசி’ என்கிறார்கள். ச்சுட்கியின் அம்மா சந்தோசப்பட்டு அவர்கள் யாரென விசாரிக்கிறாள். அவர்கள் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதை தெரியுமா என்று அவளைக் கேட்கிறார்கள். அப்போது அவர்கள் பேசிக்கொள்வதைப் பாருங்கள்:
“அடடே, நீங்கள் அலிபாபாவின் ஆட்களா?” (இதைத்தான் மேனேஜ்மண்ட் ஸ்டடீசில் positive thinking என்கிறார்கள். உங்களைக் கொத்த வரும் பாம்பு நல்ல பாம்பாகத்தான் இருக்கும், நம்புங்கள்!)
“இல்லை, நாங்கள் அந்த நாற்பது திருடர்களின் வாரிசுகள்!”
இதைக் கேட்டதும் ச்சுட்கியின் தாய் திகிலில் வெளிறிப் போகிறாள். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், தினமும் பத்துக் கூடை லட்டுக்களைக் கொண்டு வந்து ஊருக்கு வெளியே உள்ள கோயிலின் வாசலில் வைக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் அவளைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிச் செல்கிறார்கள் அவர்கள்.

அவளும் விதியே என்று பத்துக் கூடை லட்டுக்களை ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு கஷ்டப்பட்டுத் தள்ளுகிறாள். அதைப் பார்க்கும் காலியா அவளுக்குத் தான் உதவுவதாகச் சொல்லி வண்டியை அவன் தள்ளிக்கொண்டு போய் கோவிலின் வாசலில் வைக்கிறான். “கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்னும் மன அரிப்பு மேலிட ஒரு கூடையை லவட்டிக் கொண்டு வந்து காட்டில் தன் சிஷ்யப் பொடியன்களான டோலு போலுவுடன் அமர்ந்து சாப்பிடுகிறான்.

அப்போது அங்கே வரும் திருடர்கள் அந்த வண்டியை எடுத்துக் கொண்டு போகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று Kaalia & Co. மறைந்திருந்து பார்க்கிறார்கள். அந்தத் திருடர்கள் மலையருவியின் முன்னால் நின்று, ”அண்டா கா கஸம் திறந்திடு சீசேம்” என்று கூவ அருவி உடனே மறைந்து ”உத்தரவு எஜமானே” என்ற குரலுடன் பாறைகள் கதவுகளாகத் திறக்கின்றன. உள்ளே ஒரு குகை. அதற்குள் அவர்கள் போய் நின்றுகொண்டு “அண்டா கா கஸம் மூடிடு சீசேம்” என்றதும் குகை மூடிக்கொள்ள மீண்டும் அருவி கொட்டுகிறது. இங்கே அலிபாபாவின் அண்ணன் கேரக்டர் இந்தக் கதையின் பிரதியில் காலியாவின் மீது நிகழ்த்தப்படுகிறது. “கண்ணா, மீண்டும் லட்டு தின்ன ஆசையா?” அலிபாபாவின் காலத்திலிருந்து திருடர்கள் பரம்பரை பரம்பரையாகச் சேர்த்து/ சேமித்து வைத்திருக்கும் (ஒரு பங்களா கூட கட்டாம இப்படிக் குகைல கொசுக்கடியில் லோல் பட்டுக்கிட்டு என்ன எழவுக்கு இந்தச் சேமிப்பு? என்று வினவுகிறார் ஆண்பாவம் கொள்ளங்குடிக் கருப்பாயி) பொக்கிஷ்ங்களை அள்ளி வர ஆசைப்பட்டுக் காலியா அதே மந்திரத்தைக் கூறிக் குகைக்குள் போய் திருடர்களிடம் மாட்டிக் கொள்கிறான். கூடை ஒன்று குறைந்ததால் கடுப்பாகிப் போன திருடர்கள் ச்சுட்கியின் அம்மாவையும் கடத்திச் செல்கிறார்கள்.

நடந்ததை எல்லாம் அறிந்த ச்சோட்டா பீமுக்குக் கடமை உணர்வு கண்டமேனிக்கு எகிற ச்சுட்கி, டோலு-போலு, ராஜு மற்றுக் ஜக்குக் குரங்கு ஆகியோருடன் அந்தக் குகைக்குப் போகிறான். டோலு அந்த மந்திரத்தைச் சொல்லிக் குகையைத் திறக்கிறான். உள்ளே போய் பார்த்தால் அங்கே தடியன் காலியா திருடர் தலைவனுக்குக் கால் அமுக்கிக் கொண்டிருக்கிறான். “நமக்கொரு அடிமை சிக்கிட்டான்யா சிக்கிட்டான்” என்று அவனை அப்படி வேலை வாங்குகிறார்கள். ச்சுட்கியின் அம்மா லட்டு சுட்டுக்கொண்டிருக்கிறாள். (அடக் கருமமே! லட்டுவை மட்டுமே உண்டு வாழும் பிராணிகளா அவர்கள்? அவர்களுக்கெல்லாம் ஷுகரே வராதா? சுகர் முனிவரிடம் அப்படியேதும் வரம் வாங்கியவர்களா?. அது சரி, நாற்பது திருடர்களின் வாரிசுகள் என்று சொல்லிக்கொண்டு இது என்ன இரண்டு பேர்தான் இருக்கிறார்கள்? நோட் தி பாய்ண்ட்: திருடர்களுக்கு சந்தான விருத்தி நஹி. அல்லது பிராக்டிகலான ரீசன் என்னவெனில் குகையில் வாழும் திருடர்களுக்குப் பெண்டாட்டிகள் அமைவது சாத்தியமில்லை. மேலும் அவர்களுக்கு மாசிலா உண்மைக் காதலெல்லாம் வராது. இல்லையெனில் பானுமதியைக் கடத்திக்கொண்டு போக பி.எஸ்.வீரப்பா ஏன் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? நாற்பது திருடர்கள் அவர்களுக்குள்ளேயே ஸ்த்ரீ பார்ட் போட்டுக் கொள்வார்கள் போலும்.)

ச்சோட்டா பீம் அந்தத் திருடர்களுடன் சண்டை போட்டு அவர்களைக் கொன்றொழித்துத் தன் தோழியின் தாயையும் நண்பனையும் மீட்கிறான். அவர்கள் இனிதே வீடு திரும்புகிறார்கள். குகையை விட்டு வெளியே வரும்போது அவன் ஒரு காரியம் செய்கிறான். மிகவும் முக்கியமானது அது. “குகையே! உன் மந்திரத்தைப் பலபேரும் அறிந்துவிட்டார்கள். அதனால் பல பிரச்சனைகள் உண்டாகும். எனவே மந்திரத்தை நான் மாற்றி விடுகிறேன். இனிமேல் இந்த மந்திரத்தைச் சொன்னால்தான் நீ திறக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு அதன் காதில் ஏதோ கிசுகிசுக்கிறான். இனி யாராவது போய் அந்தக் குகை முன்னால் நின்றுகொண்டு “அண்டா கா கஸம் திறந்திடு சீசேம்” என்று சொன்னால் ‘wrong password’ என்ற கமெண்ட்தான் வரும். கதவு திறக்காது. புதிய கடவு மந்திரத்தை ச்சோட்டா பீம் மட்டுமே அறிவான். எத்தனை லாவகமாகக் குகையுடன் அத்தனைப் பொக்கிஷங்களையும் சுருட்டிவிட்டான் பாருங்கள்! இவ்வாறு ஒரு கதையின் பிரதியில் இன்னொரு கதையின் பிரதியைத் திருத்தி அமைக்கும் ‘inter-textuality’-ஐ நோக்க ச்சோட்டா பீம் கதையைக் குழந்தைகளுக்கான பின்–நவீனத்துவப் பிரதி என்று சொல்லத் தோன்றுகிறது.

எல்லாக் கதைகளிலும் இப்படி ஏதாவது அரிய சாகசம் நிகழ்த்திய பின் ச்சோட்டா பீம் அதற்காகப் பெறும் சன்மானம் என்ன தெரியுமா? அவனாகக் கேட்பதெல்லாம் ச்சுட்கியின் அம்மாவிடமிருந்து லட்டுக்களை மட்டும்தான்! “அம்மா! ஒங்க கையால ரெந்து லத்து தாங்க” என்று சொல்லும் ச்சோட்டா பீமை ’மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரின் கலை வாரிசு எனப் பகரலாம்! (’அம்புக்கு நான் அதிமை –தமிழ்ப் பம்புக்கு நான் அதிமை’ என்னும் அடக்கம் கருதி.)
இதுபோல் ஒவ்வொரு எபிஸோடிலும் சுவாரஸ்யமான கதைகள். ஆமிர் கான் நடித்த லகான் படம் தெரியும்தானே? பிரிட்டிஷ் காரர்களை விரட்ட லோக்கல் ஃபெல்லோசுக்குப் பயிற்சி அளித்து வெள்ளையர்களுடன் கிரிக்கட் விளையாடி ஜெயிப்பார். அந்தக் கதையையும் ‘Independence day’ கதையையும் ஒரு செம்புக்குள் போட்டுக் கலக்கிக் கமுத்தினால் வெளிவந்து விழுவது ச்சோட்டா பீமின் கதை. படையெடுத்து வந்த ஏலியன்ஸுகளை விரட்டுவதற்காக டீல் போட்டு ச்சோட்டா பீம் தலைமையிலான டோலக்பூர் அணி ஏலியன்ஸ் அணியுடன் மோதுகிறது!

இன்னொரு கதையில் சீனாவிலிருந்து வந்து வம்பிழுக்கும் குங்ஃபூ வீரனை ச்சோட்டா பீம் வீழ்த்துகிறார். ச்சக் நாரிஸுடன் ஜெய்சங்கர் கராத்தே போட்டு ஜெயிப்பதாகத் தமிழில் ஒரு படம் வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அப்படியொரு எஃப்பெக்டைக் கொடுத்தது.

இன்னொரு கதையில் வில்லனுடன் சேர்ந்து தங்கப் புதையலைத் தேடிக்கொண்டு பாலைவனமெங்கும் பயணம் செய்கிறது ச்சோட்டா பீம் குழு. Indiana Jones படங்கள் மற்றும் மெக்கனாஸ் கோல்ட் ஆகியவற்றின் பிரதிகளின் மறு ஆக்கம்.

பகடியும் நவீன / பின் நவீன உத்திகளும் கலந்து இப்படியெல்லாம் ரகளையுடன் உருவாக்கப்படும் உழைப்புக்கு நாம் கொஞ்சமாவது மதிப்புக் காட்ட வேண்டாமா? ச்சோட்டா பீம் பார்க்கவே கூடாது என்று நான் எப்படி என் பிள்ளைகளிடம் சொல்வது?

1 comment:

  1. உண்மை நாம் கற்று கொடுக்காத பல நல்ல செய்திகளை குழந்தைகள் அறிந்து கொள்கின்றனர்.

    ReplyDelete