’பாடபேத
பூதங்கள்’ என்று ஒரு சொற்றொடர் சொல்வார் டி.என்.ஆர். அது போல் ‘பாடநூல் பூதங்கள்’ என்று
சொல்லலாம் போல் தோன்றுகிறது. அவ்வப்போது பாடநூலில் அபத்தம் அரசியல் பாகுபாடு பாரபட்சம்
போன்ற பூதங்கள் தலைவிரித்துத் தாண்டவம் ஆடுவதைக் கண்டு வருகிறோம். இப்போதும் இரண்டு
பாடநூல் பூதங்கள் கிளம்பி வந்து களேபரம் செய்து கொண்டுள்ளன.
ஒரு பூதத்தை விரட்டும் பணியில் தமிழகத் தலைவர்கள் அனைவரும் ஏகோபித்து
என்னென்னவோ செய்து வருகிறார்கள். அப்பிரச்சனை செய்தித்தாள்களில் விரிவாக முதல் பக்கத்திலேயே
எழுதப்பட்டது. இன்னொரு பூதம் குட்டிப் பூதம் என்பதைப் போல் அதற்கு அவ்வளவு பெரிய கவரேஜ்
கிடைக்காமல் நான்காம் பக்கத்தில் ஒரு பத்தியின் நடுவில் ஒரு ஜாண் அளவில் மட்டும் போடப்பட்டது.
ஆனால் அந்தக் குட்டிப் பூதத்தின் ஸ்கோப்தான் உலகளாவிய ஒன்றாக எனக்குப் படுகிறது. ஏனெனில்
அது உணவை அடிப்படையாகக் கொண்டது. எந்தத் தேசம், மதம், மொழி, இனம், ஜாதி ஆனாலும் மனிதர்களுக்கு
உணவு அடிப்படைத் தேவை அல்லவா?
சிபிஎஸ்சி பாடநூலில் உள்ள அந்தப் பாடபூதம் இப்படிச் சொல்கிறதாம்:
புலால் உண்பவர்கள் பொய் சொல்வார்கள், களவு செய்வார்கள், வாக்குறுதிக்கு மாறு செய்வார்கள்
இத்தியாதி. அதாவது நான்வெஜ்கள் எல்லாம் தீயவர்களாக இருப்பார்கள். இதை எந்த ஆய்வுக்கூடத்தில்
எந்த விஞ்ஞானி கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. நோபல் பரிசுக்குத் தகுதியான கண்டுபிடிப்பு
அல்லவா இது? இப்படிப்பட்ட அறிவு வளர்க்கும் பாடங்கள்தான் ஒளிமயமான எதிர்கால இந்தியாவை
உருவாக்கும். (அப்புறாணி கேட்கிறான்: இந்தப்
பாடத்தை எழுதியவர் புத்தரின் கொள்கையைச் சேர்ந்தவராக இருப்பாராட்ருக்கு, இல்லீங்களா?)
எவனோ ஒரு கூமுட்டை எழுதிய ஓர் அசட்டுக் கருத்துக்கு அலட்டிக்
கொள்ள வேண்டியதில்லை. அதுவும் பாடநூலில்தானே எழுதினான்? அது குழந்தைகளின் பிரக்ஞையில்
தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு ஒரு விழுக்காட்டிற்கும் கம்மியாகத்தான் இருக்கவேண்டும்.
என் ஆளுமையில் தாக்கம் செலுத்திய பாடம் என்று நான் முதுகலை பட்டப்படிப்புப் படித்தது
வரையிலான எந்தப் பாடத்தையும் என்னால் சொல்ல முடியவில்லை. இந்தியக் கல்வியமைப்பின் நிலை
இப்படியாகத்தான் உள்ளது. இதில் நம் அறிவுக்கு எட்டாத நன்மைகள் உள்ளன என்பதே என் உள்ளுணர்வால்
நான் கொண்டிருக்கும் நம்பிக்கை.
.
இப்படியொரு பாடத்தை அதை எழுதியவர் எப்படி எழுதினார் என்பதை என்னால்
புரிந்துகொள்ள முடிகிறது. ‘சைவ உணவுமுறை நன்று’ என்பது அவரின் அடிப்படை நம்பிக்கையாக
இருக்கும். அந்த நம்பிக்கை காலப்போக்கில் ‘அசைவ உணவு முறை தீது’ என்னும் குட்டியைப்
போடும். இன்னும் சில காலம் சென்று ‘வெஜ்ஜுகள் நல்லவர்கள்’ என்னும் பார்வையை ஈனும்.
அதற்கு அடிப்படையாக அமையும் தர்க்கம்: ‘நல்ல உணவை உண்பவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்.
ஏனெனில் நன்மை நன்மையையே உருவாக்கும். சைவ உணவு நல்லது. எனவே சைவ உணவு மட்டுமே உண்பவர்கள்
நல்லவர்களாவர்’
இப்படியொரு பார்வை அந்த பிரகஸ்பதியின் மனதில் வேரூன்றிய பின்
இன்னொரு கருத்து மெல்ல உருவாகி வரும்: ‘நான்வெஜ்ஜுகள் தீயவர்கள்’. அதற்கான தர்க்கத்தை
நீங்கள் மேற்படி தர்க்கத்தில் இருந்து எளிதாக ஊகித்துக் கொள்ளலாம்.
அதன்பின் நிகழ்வது மிகைப்பாடு. நெறி வெறியாகும் நிலை அது. அதன்
வெளிப்பாடுதான் இந்தப் பாடம்.
இதைச் சொல்லும்போது ’இஸ்லாமியப் பெண்ணியம்’ என்னும் நூலில் ஹெச்.ஜி.ரசூல்,
‘பர்தா அணியாத பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று சொல்வது அராஜகம் ஆகும்’
என்று எழுதியிருந்தது நியாபகம் வருகிறது. நியாயமான கருத்துத்தான். உலகம் கறுப்பு வெள்ளையாக
இல்லை. ஆனால் கறுப்பு வெள்ளையாகச் சிந்திக்கும்படி மனங்கள் கண்டிஷன் செய்யப்பட்டுள்ளன.
அப்படிச் சிந்திக்கும் மனங்களுக்கு உண்மை புலப்படாது என்பதே உண்மை!
‘பர்தா அணியாத பெண்கள் அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள்’ என்று
சொல்வது எவ்வளவு அபத்தமோ, அப்படியேதான் ‘பர்தா அணிந்தவர்கள் அனைவரும் ஒழுக்கமானவர்களாகத்தான்
இருப்பார்கள்’ என்னும் கருத்தும். அது ஒரு நல்ல நம்பிக்கை ஆகலாம். ஆனால் பர்தா அணியாதவரகள்
அனைவரும் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று நம்புவதில் நல்லெண்ணம் எதுவும் இல்லை; நிச்சயமாக
அது கெட்ட நம்பிக்கைதான்.
உண்மையில் பர்தா அணியாதவர்களில் ஒழுக்கமானவர்களும் உண்டு, ஒழுக்கமற்றவர்களும்
உண்டு. அதேபோல், பர்தா அணிந்தவர்களில் ஒழுக்கம் உள்ளவர்களும் உண்டு, ஒழுக்கமற்றவர்களும்
உண்டு. (இலக்கிய சாட்சியத்திற்கு டாக்டர் கதீஜா மும்தாஜின் ‘பர்ஸா’ நாவலைப் பாருங்கள்.
ஒழுக்க வரையறைகளை மீறுவோரின் கைகளில் பர்தாவும் ஒரு கருவியாகும் நிலையை அதில் சுட்டியுள்ளார்.
ஒரு நோக்கத்திற்காக உருவாக்கப்படும் சட்டம் அந்நோக்கத்திற்கு எதிரான நிலைக்கு ஒரு கேடயமாக
மாற்றிக்கொள்ளப்படும் நிலை மனித குலம் முழுக்கவும் உண்டு.)
பர்தாவிலும் கூட ஒற்றை அளவுகோல் எதுவும் முஸ்லிம் அறிஞர்களிடையே
இல்லை. முஸ்லிம் நாடுகளில் பர்தாவின் அளவுகோல்கள் வேறுபட்டுக் கிடக்கின்றன. உள்ளூரிலேயே
இங்கே வேறு வேறு விதங்களில் பர்தா அனுஷ்டிக்கப்படுவதைக் காண முடிகிறது. என் மனைவி முகம்
தெரியுமாறான பர்தா அணிகிறாள். அவளின் சகோதரி ஒருவர் முகம் தெரியாமல் கண்கள் மட்டும்
தெரியுமாறு பர்தா அணிகிறார். இன்னும் சிலர் அந்தக் கண் பகுதிக்கும் வலை வைத்து அணிகிறார்கள்.
சிலர் கைப்பகுதியும் அன்னிய ஆடவரின் பார்வையில் பட்டுவிடக் கூடாது என்று வெண்ணிற உறைகள்
அணிந்து கொள்கிறார்கள். என் அம்மாவும் சின்னம்மாக்களும் தலையில் கறுப்புத் துப்பட்டா
ஒன்றைச் சுற்றிக் கொள்கிறார்கள். இன்னமும், புதுக்கோட்டை பக்கம் உள்ள பெண்கள் பலர்
தமிழகத்தில் மட்டுமே காணலாகும் வெள்ளை நிற துப்பட்டி அணிகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை
அதுதான் பர்தா / கோஷா எல்லாம். இந்த வெள்ளை துப்பட்டி பர்தாவே கிடையாது என்றும், சேலை
மீது கட்டப்படும் இன்னொரு சேலை மட்டுமே என்றும் ஒரு வாதமுண்டு. இப்படி அளவுகோல்கள்
பல. என்ன, ஒழுக்கத்தில் விழுக்காடுகள் இருக்கின்றதோ? முகம் தெரிவது ஆபாசம், ஒழுக்கக்கேடு
ஒருவர் கருதுகிறார் எனில், என் மனைவியை அவர் அப்படிக் கருதுவதை நான் எப்படி ஏற்றுக்
கொள்ள முடியும்? எவ்வளவு பேசினாலும் அவர்களுக்குப் புரியாது. பார்வை வேறுபாடுகள் அத்தனை
உறுதியாக உள்ளபோது என்ன செய்ய முடியும்? ‘அடப் போங்க, பெரிசா ஒழுக்கத்தைக் கண்டுபுடிச்சிட்டீங்க’
என்பதாகத்தான் சொல்ல முடியும்.
உண்மையில் இந்த ஒழுக்கம் X ஒழுக்கமின்மை என்னும் முரணியக்கத்தில்
தீர்ப்புக்கள் (ஃபத்வா) வழங்குவது மிகவும் சிக்கலாகத்தான் உள்ளது. மனிதர்களைக் கூர்ந்து
அவதானித்தால் முழுமையாகக் கெட்டவர்கள் என்று யாரையும் முடிவு செய்ய முடியாது.
”தீயவர்கள்தான் கெட்ட வார்த்தை பேசுவார்கள்” என்பது ஏறத்தாழ
எல்லாப் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்குப் பாலபாடம் போல் கற்றுக் கொடுப்பதுதான்.
நான் சிறுவனாக இருந்தபோது ‘கம்னாட்டி’ என்பது மகா கெட்ட வார்த்தை என்று எனக்குச் சொல்லப்பட்டது.
ஏனெனில், அண்டை வீட்டுப் பையன் அதை நிமிஷத்துக் கொருதரம் செப்புவான். அவன் பெற்றொரும்
சகோதரிகளும் அப்படியே. கெட்ட வார்த்தைகள் பேசக்கூடாது என்னும் விதி அவர்களின் வீட்டிலும்
உண்டு. ஆனால் ‘கம்னாட்டி’ என்பது அவர்கள் வீட்டில் கெட்ட வார்த்தை அல்ல, அவ்வளவுதான்.
யோசித்துப் பார்த்தால் இது ஒவ்வொரு நாடும் வரையறுத்துக் கொள்ளும் சட்டத்தைப் போல்தான்
உள்ளது. “தீயவர்கள்தான் கெட்ட வார்த்தை பேசுவார்கள்” என்னும் எளிய விதியை என் அண்டை
வீடே முதலில் குழப்பி விட்டது.
கல்லூரியில் ஒரு நண்பன் இருந்தான். ஐந்து வேளை நேமமாகத் தொழுவான்.
மேல் அமலாக மிஸ்வாக் என்னும் தூரிகைக்குச்சி கொண்டு ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் பல்
துலக்குவான். அவ்வாறு செய்வது நபிவழி. எனவே, என் வாயை விட அவனின் வாய் தூய்மையாகவும்
வாசமாகவும் இருக்கத்தான் வேண்டும். ஆனால், கோபத்தில் அவன் பேசும்போது கெட்ட வார்த்தைகள்
சும்மா அருவி மாதிரி கொட்டும். அரை மணிநேரம் அவன் பேசியதை சென்ஸார் செய்தால் எஞ்சும்
விஷயம் இரண்டு நிமிஷத்துக்குத் தேராது! ரமலான் மாதத்தைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்கான
அந்த ஒரு மாதத்தில் மட்டும் கெட்ட வார்த்தையே பேசாமல் மிகப் பிரயத்தனப்பட்டு அடக்கிக்
கொள்வான். “நோம்பு முடியட்டுண்டா…அஹ்ஹ்.. வச்சிக்கிறேன் கச்சேரிய” என்று சொல்லிக் கொண்டிருப்பான்.
அணைக்கட்டில் நீர் தேங்குவது போல் dirty words அவனுக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கும்
போலும். ரமலான் முடிந்து பிறை தெரிந்ததுதான் தாமதம், அணைக்கட்டின் அடைப்புத் திறந்தது
போல் இன்னாச் சொற்களின் வெள்ளம் நுரை ததும்பப் பாய்ந்தோடும். (கலீல் ஜிப்ரானின் ஒரு
கதையில் நாய்கள் ஒரு சபதம் எடுத்துக் கொள்ளும். இனி குரைப்பதில்லை என்று. பத்து நாட்கள்
விரதம் பேணிய பின், பௌர்ணமி இரவில் நிலாவைக் கண்டதும் கட்டுங்கடங்காத ஆவல் மீற அதுவரை
அடக்கி வைத்திருந்ததை எல்லாம் சேர்த்துக் குரைத்துத் தள்ளும்.) இப்படிப்பட்டவன் அவன்.
அதற்காக அவனை நான் ஒழுக்கம் கெட்டவன் என்று சொல்ல முடியாது. மாஞ்சு மாஞ்சு தன் நண்பர்களுக்கு
அவன் உதவி செய்வது போல் என்னால் முடியாது என்பது எனக்குத் தெரியும். அவனை நான் கெட்டவன்
என்று சொன்னால் அது அராஜகம். அது மட்டுமல்ல, இன்று நான் அறிந்திருக்கும் நிலையில்,
கெட்ட வார்த்தைகள் என்று முத்திரை குத்தப்பட்ட வார்த்தைகளுக்கு விரிவான மானுடவியல்
பின்புலம் இருப்பதை என் மனம் கவனிக்கின்றது. அவை ஃபிராய்டிய ரீதியான உளவியல் ஆய்வுக்குரிய
ஸ்பெசிமன்கள் ஆகின்றன.
ஒழுக்கம் என்பதன் வெளி அடையாளங்கள் வெறும் வேஷங்களாக மாறிப்
போகக்கூடும் என்பதை நினைக்கையில் ஒரு சம்பவம் நியாபகம் வருகிறது. மிகப்பெரிய ‘இபாதத்தாளி’
என்று பொது மக்கள் பார்வைக்கு உயர்வாகத் தெரிந்த ஒருவர், மதறாவில் ஒரு மாணவச் சிறுவனை
பின்(வன்)புணர்ச்சி செய்தார் என்ற சேதி சில வருடங்களுக்கு முன் செய்தித்தாள்களில் வந்தது.
அந்த தாடியுருவியை நான் நேரில் கண்டிருக்கிறேன். ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கி தீனை
எத்த வேண்டியவர் இப்படித் தகாத வழியில் ஊனை எத்தும் எத்தனாய் இருந்தது ஏன்? இத்தனைக்கும்
மித்த விஷயங்களில் அவர் மீது யாரும் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை. இன்சொல்லர்,
அறிவாளி, திறமையானவர் என்றே சொன்னார்கள்.
“மதுவே பாவங்களின் ஆணிவேர்” என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு.
ஆனால் ஆணிவேர்களில் சல்லி வேர்கள் கட்டாயம் முளைத்தே ஆகவேண்டும் என்று சில்லியாக எண்ண
முடியாது. சில செடிகளில் ஆணி வேர் மட்டுமே இருக்கும் என்பது போல் சிலரிடம் குடிப்பழக்கம்
மட்டுமே இருப்பதுண்டு. அருகம்புல்லில் சல்லி வேர்கள் மட்டுமே கொத்தாக இருப்பது போல்
சில புல்லர்களிடம் குடிப்பழக்கம் இல்லை எனினும் மற்ற எல்லா அக்கிர்மங்களும் இருப்பதும்
உண்டு. என் உறவினர் ஒருவர், என் தந்தை வயது அவருக்கு, வாழ்வில் என்ன கசப்போ, மொடாக்
குடியராக இருந்தார். எந்த மனக்கவலைக்கும் மது ஒரு தீர்வு அல்ல என்பதை நான் அறிவேன்.
எந்த லாகிரி மெட்டீரியலில் அடைக்கலம் தேடுவதும் மனிதன் என்னும் தகுதிக்கே கேவலம் என்று
எண்ணுபவன் நான். வாழ்வின் பிரச்சனைகளைக் களையும் தீர்வு நம் உள்ளத்தில் ஊற்றெடுக்கும்
பேரமைதியான ஆனந்தம் மட்டுமே என்பது என் கொள்கை. அந்த வகையில் என்னுடைய அந்த உறவினர்
மீது எனக்குப் பரிதாபம் இருந்தது. கவனிக்கவும், பரிதாபம் மட்டுமே இருந்தது. ஏனெனில்
அவர் நல்லவர். அடுத்தவன் சொத்துப் பங்கை அபகரிப்பதற்காக அல்லும் பகலும் சிந்திப்பவர்
அல்ல. அவர் பாட்டுக்குத் தானுண்டு தன் குடி உண்டு என்றிருந்தார், கடைசி வரை. குடித்துவிட்டு
யாரையும் வாய்க்கு வந்தபடித் திட்டியதில்லை அல்லது தெருவில் போகும் பெண்களை வம்பிழுத்ததில்லை.
எனவே, “குடி போதையில் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த காமக்
கொடூரன்” என்று தினத்தந்தியில் வரும் செய்தியை வைத்துக்கொண்டு குடிப்பவன் எல்லாம் கட்டாயம்
கற்பழிப்பான் என்ற ஒரு கருத்தை உருவாக்கி, மேலே நான் சொன்னவர் கற்பழிப்பார் என்று நான்
நினைக்க முடியுமா? அல்லது கற்பழிப்பவன் எல்லாம் குடிகாரனாகத்தான் இருந்தாக வேண்டும்
என்று எண்ண முடியுமா? அல்லது, குடிப்பழக்கம் இல்லாதவன் காமுகனாக இருக்கவே மாட்டான்
என்று சொல்ல முடியுமா?
இதையெல்லாம் சொல்வது எதற்கெனில், வெளிக் கோலத்தை வைத்து எதையும்
முடிவு செய்ய முடியாது என்பதற்குத்தான். மோசமானவர்கள் என்று நாம் நினைக்கும் நபர்களுக்குள்
உன்னதங்கள் ஒளிந்து கிடக்கலாம். உன்னதமானவர்கள் என்று நாம் வியக்கும் நபர்களுக்குள்
வக்கிரங்களும் மனப் பிறழ்வுகளும் குடியிருக்கக் கூடும். ழீன் ழெனெ சொல்வது இங்கே நியாபகம்
வருகிறது: “I recognize in thieves, traitors and murderers, in the ruthless and
the cunning, a deep beauty – a sunken beauty”
மீண்டும் சிபிஎஸ்சி பாடநூல் சர்ச்சைக்கு வருவோம்.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இதில் நிறைய உட்சிக்கல்கள் இருப்பதும்
விளங்கும். ஒரு பொருளை சைவம் என்றோ அசைவம் என்றோ தரம் பிரிப்பதில் மொத்த இந்தியாவிலும்
ஒரே அளவுகோல் இல்லை. இதர மாநிலங்களில் மீன் அசைவம் என்றால் மேற்கு வங்கத்தில் சைவம்.
அங்கே பிராமணர்களே மீன் சாப்பிடுவார்கள். ராமகிருஷ்ண பரமஹம்ஸரே மீன் சாப்பிட்டிருக்கிறார்.
அவர் பிராமணர்தான்.
சிபிஎஸ்சி பாடநூலின் படிக்கு மீன் சைவமா அசைவமா என்று தெரியவில்லை.
அசைவம் எனில் ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு போலிச் சாமியார் என்று சொல்லலாமா? M பதிவுசெய்துள்ள
பாரநூலான ‘The Gospel of Sri Ramakrishna’ வெறும் குப்பை என்று தள்ளிவிட முடியுமா?
மட்டுமல்ல. வேதகால ரிஷிகள் மாம்ச உணவு சுவைத்தவர்கள்தான். சைவ
உணவு முறை என்பதே புத்தரின் போதனைகளுக்குப் பின்னர்தான் இந்து மதத்தில் வரித்துக் கொள்ளப்பட்டது.
எனில், ஞானம் இலங்கும் மகா வாக்கியங்களைத் தன்னுள் கொண்ட வேதங்களையும் வேதமுடிவுகளான
உபநிஷத்துக்களையும் புளுகு மூட்டைகள் என்று சொல்லிக் கொளுத்தி விடலாமா?
விஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான ராமரும் கிருஷ்ணரும் சத்திரியர்கள்
என்பதும் அவர்கள் புலால் உண்பவர்கள் என்பதும் உண்மை அல்லவா? (ராமன் மாம்சமும் மதுவும்
உண்டதாக வால்மீகி ராமாயணம் சொல்வதன் அடிப்படையில்.) எனில், வேதசாரம் என்றழைக்கப்படும்
கண்ணனின் வாய்மொழியான ‘பகவத் கீதை’ பொய்நூல் என்று சொல்வதா?
இப்படியெல்லாம்
பல சிந்தனைகள் வந்தாலும், சிறுவர்கள் சொல்லும் ஒரு தர்க்க விளையாட்டும் நியாபகம் வந்தது:
”ஔவையார்
சொல்கிறார் ‘கிழவிகளை நம்பாதே’”
புரிகிறதா?
ஔவையார்
ஒரு கிழவி. எனவே அவரை நம்பக்கூடாது. எனவே ‘கிழவிகளை நம்பாதே’ என்பது பொய்; ‘கிழவிகளை
நம்பு’ என்பது உண்மை. எனில் ஔவையாரை நம்பவேண்டும். அவர் சொல்கிறார் ‘கிழவிகளை நம்பாதே’...
இப்படியே சுத்திக் கொண்டிருக்கும்.
சிபிஎஸ்சியில்
புலால் உணவு பற்றி எழுதப்பட்டிருக்கும் பாடமும், அதை நான் ஏற்றுக்கொள்ளும் கணமே இப்படித்
தன்னிலேயே இறந்துபடும் தர்க்கத்தைக் கொண்ட ஒரு தற்கொலை வாக்கியம் ஆகிவிடும்.
நான்
Non-Vegetarian. ‘புலால் உண்பவன் பொய் சொல்வான்’ என்று நானே சொன்னால் அது ஒரு முரண்
ஆகிறது. அதன்படி நான் சொல்வது பொய். எனவே, ‘புலால் உண்பவன் உண்மையே சொல்வான்’ என்றாகிறது.
அதன்படி நான் சொல்வது உண்மை. அப்படியானால் ‘புலால் உண்பவன் பொய் சொல்வான்’. அதன்படி
Non-vegatarian ஆகிய நான் சொல்வது பொய். எனவே ’புலால் உண்பவன் உண்மையே சொல்வான்’ இப்படிச்
சுற்றிக் கொண்டே இருக்கலாம்.
எனவே
இந்த புல்ஷிட் பாடநூலை அப்படியே விட்டுவிட்டாலும் பாதகமில்லை. ஏனெனில் பாடநூல்தான்
நம் வாழ்க்கையை உருவாக்குகிறது என்னும் நிலை இங்கே இல்லை. இருக்கவும் முடியாது. வாழ்க்கை
என்னும் பாடநூல் என்ன பாடத்தைக் கற்றுத் தருகிறதோ அதைத்தான் நாம் நம்புகிறோம்.
என் கண்
எதிரில் நான் எத்தனையோ பேரை நாளும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். எல்லா அயோக்கியத்தனமும்
அராத்தும் செய்பவர்கள் எல்லா வகையறாக்களிலும் இருக்கிறார்கள். அதேபோல், நன்மக்களும்
எல்லா வகையறாக்களிலும் இருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட பொது அடையாளத்தைச் சுட்டி,
‘இவர்களே இப்படித்தான்’ என்று நன்மையாகவோ தீமையாகவோ சான்றளிப்பதெல்லாம் ஒரு பேச்சு
சுவாரஸ்யத்திற்காகப் பிதற்றப் படுவனவே அன்றி நிஜமல்ல.
எல்லாத்
துலுக்கனும் தின்னு கெட்டவன் என்பது உண்மை அல்ல. தின்னு கெட்டவர்கள் எல்லா மதத்திலும்,
சாதியிலும் உண்டு.
எல்லாப்
பாப்பானும் கணக்கிலே சூரப்புலி என்பதோ கற்பூர புத்தி கொண்டவன் என்பதோ உண்மை அல்ல. தர்ப்பையைக்
கொளுத்திப் போட்டாலும் பற்றிக்கொள்ளாத மூளைகள், எல்லா மத்திலும் இருப்பது போலவே, அங்கும்
உண்டு.
எல்லா
நாயக்கனும் முட்டாள் அல்ல. இது என்ன லாஜிக் என்றே எனக்குப் புரியவில்லை. ஏனெனில் முட்டாள்கள்
எல்லா வகையறாக்களிலும் உண்டு.
எல்லாச்
செட்டியாரும் கஞ்சனாகத்தான் இருந்தாக வேண்டும் என்று விதி அல்ல. கஞ்சப் பிசுநாறிகள்
எல்லா வகைகளிலும் உண்டு.
இதைத்தான்
நடைமுறை வழங்கும் பாடம் என்று சொல்கிறேன். இன மத தேசிய சாதிய அடையாளங்களாகச் சொல்லப்படுவதை
வைத்துத் தனி மனிதர்களை எடை போடக் கூடாது என்னும் பாடத்தை நம் பிள்ளைகளுக்குச் சொல்லித்
தருவோம். அதுவே அவர்களுக்கு நாம் உடனடியாக வழங்க வேண்டிய மாற்றுப் பாடம் ஆகும்.
மிக,மிக,மிக அருமையான பதிவு....
ReplyDeleteசொல்வதை செய்ததாலும் சொல்கிறேன்.
ஔவையார் - கிழவி செய்தி அருமை
ReplyDeleteதனி மனிதனை அவனது பெயர், குடும்பம், சாதி, மதம் இவற்றை வைத்து எடை போடக் கூடாது - லட்சத்துல ஒரு வார்த்தை.
ReplyDeleteநடிகர் ரஜினி ஒரு முறை நடிகர் விவேக்கை பாராட்டி பேசும் போது இப்படி சொன்னார், ‘நான் விவேக்கை பிராமின்னு நினைச்சேன்...’ என்பது போல் பேசினார். எனக்கு இது ஞாபகம் வந்துடுச்சு..