பெண்களுக்கு இயல்பாகவே உள்ளுணர்வு கொஞ்சம் ஜாஸ்தி என்று உளவியல்
ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களை இறைவன் introvert-களாகப் படைத்திருக்கிறான். இது உண்மை
என்பதை மீண்டும் மீண்டும் அடியேனின் பொஞ்சாதி எண்பித்துக் காட்டி வருகிறாள்.
கண்களுக்கு அவள் மை தீட்டுவதைப் பார்க்கும் போதெல்லாம் ”மை போட்ட
கண்ணழகி” என்று டீசுவேன். (உண்மையில் eve-teasing என்பது கணவன் தன் மனைவியைச் செல்லமாக
கேலி செய்வதுதான். ஏனெனில் ஆதாம்-ஏவாள் இருவரும் தம்பதிகள். எவ்வுறவும் அல்லாத,
’all Indians are my brothers and sisters (except x) என்னும் தேசிய வாக்குறுதியின்படி
சகோதரியாய் இருக்கும் வாய்ப்பமைந்த பெண்ணை டீஸ் செய்வதை எப்படி ஈவ் டீசிங் என்பது?
வேண்டுமானால் fem-teasing என்று சொல்லிக் கொள்ளலாம்.
‘மை போட்ட கண்ணழகி’ என்பது ஏதோ புஷ்பவனம் குப்புசாமியின் பாடல்
பாணியிலான வருணனை என்று மட்டும் நினைக்க வேண்டாம். சமயப் பின்னணியில் இதற்கொரு விளக்கம்
உள்ளது. ’கண்ணழகி’ என்பது குர்ஆனில் சொர்க்கக் கன்னிகளைக் குறிக்கும் பெயர் – ஹூருல்
ஈன். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்த பதிவிரதைகள் மறுமையில் சொர்க்கத்தில் நித்ய கன்னிகளாக
இருப்பார்கள் என்பதொரு ஐதிஹ்யம். (சொர்க்கக் கன்னிகள் வேறொரு தனிப் படைப்பு என்ற பார்வையும்
உண்டு.) சதிவிரதர்களாக (சதி என்றால் மனைவி என்று பொருள். சூழ்ச்சி என்று அர்த்தம் அல்ல.
ஆனால் சதி(1)விரதர்கள் சதி(2)விரதர்களாக இருப்பதும் உண்டு என்பதைத் தமிழனாய்ப் பிறக்கும்
பேறு பெற்ற எவரும் தினத்தந்தியில் ஒரு பெர்சனல் சர்வே செய்து அறிந்து கொள்ளலாம்.) தொடர்ச்சி
– சதிவிரதர்களாக இருப்பவர்கள் மறுமையில் கண்ணழகர்களாய் இருப்பார்களா என்பது தெரியவில்லை.
இயல்பாகவே, ஆண்களின் கண்களுக்கு அழகு கொஞ்சம் கம்மிதானே?
இனி மை பற்றிய இனிமையான விளக்கம். மைபோட்டுப் பார்ப்பது என்று
சொல்வார்கள் அல்லவா? நகை, வெள்ளாடு, குண்டான் கிண்டான் காணாமல் போய்விட்டால் மந்திர
திருஷ்டியால் கண்டறிந்து சொல்பவர்கள் இருக்கிறார்கள். வெற்றிலையில் மை போட்டுப் பார்ப்பார்கள்.
யுவன் சந்திரசேகர் இதை வைத்து அற்புதமான சிறுகதை ஒன்று எழுதியிருக்கிறார் (நூல்: ’ஏற்கனவே’)
அதில் ஒரு சாஹிப் வெற்றிலையில் மை போட்டுப் பார்ப்பார். அவருக்கு கஸ்டமரின் கடந்த கால
சம்பவங்கள் live telecast-ஆகத் தெரியும். காலத்தைப் பொருத்தவரை அதை ஒருவகையில் நேரடி
ஒளிபரப்பு என்று சொல்லலாம் எனினும் தன்மையைப் பொருத்தவரை அதை ஹைலைட்ஸ் என்றுதான் சொல்ல
வேண்டும். விவகாரமாகத்தானே அவரைத் தேடி வந்திருக்கிறார்கள்? எனவே அவன் செய்த தப்புக்களைக்
காட்டிக் கொடுக்கும். இப்படிக் குடிசைக்குள் அமர்ந்த படியே ஜேம்ஸ் பாண்ட் வேலையைச்
செய்து முடித்துவிடும் சில மாந்த்ரீகர்கள் மிகச் சொற்ப தட்சணையாக 007 ருபாய் மட்டும்
வைத்தால் போதும் என்பார்களாம்.
’மை போட்ட கண்ணழகி’ என்று நான் சகதர்மினியை சொன்னதற்கு இதுவும்
ஒரு காரணம். என் மனத்தில் உள்ள எதையும் நான் அவளிடமிருந்து மறைத்துவிட முடியாது. அவள்
பார்வைக்கு எக்ஸ்ரே சக்தி இருக்கிறதோ என்பது போல் ‘என்ன விஷயம்? சொல்லுங்க’ என்று ஆரம்பித்துவிடுவாள்.
ஒன்றுமில்லை என்றாலும் நம்ப மாட்டாள். ‘இன்னிக்குக் காலேஜ்ல என்ன நடந்தது?’ என்று தொடங்கி
நாலைந்து கேள்விகளில் பூனை வெளியே வரும்படிச் செய்துவிடுவாள். என் மன அலைவரிசையில்
லேசான பிசகு இருந்தாலும் கண்டுபிடித்துவிடும் டிடெக்டர் அவளின் மனம். ஆனால் இதெல்லாம்
ஓர் அபூர்வ சக்தியே கிடையாதாம். நம் முகமே சொல்லிவிடுமாம். முயல் பிடிக்கும் ராஜபாளையத்தை
மூஞ்சியைப் பார்த்தாலே தெரியுமாம்!
இத்தனையும் சொன்னதற்கு இன்னொரு நிகழ்ச்சி காரணம். என் வீட்டுக்குப்
பின்னால் உள்ள என் உறவினர் ஒருவர் பறவைப் பிரியர். சாப்பிடுவதில் அல்ல, வளர்ப்பதில்.
இரண்டாண்டுகளுக்கு முன் மொட்டை மாடியில் ஒரு சின்ன பீரோல் சைஸில் டப்பாக்கள் வைத்துப்
புறா வளர்த்து வந்தவர் இப்போது மொட்டை மாடி முழுவதையும் வளைத்துக் கட்டி லார்ஜ் ஸ்கேலில்
பலவகைப் பறவைகளை வளர்த்து வருகிறார். அவர் வீட்டு பெட்ரூமில் மின்சாரத்தில் இயங்கும்
இன்க்யுபேட்டர் ஒன்று வைத்திருந்தார். அதற்குள் நான்கு முட்டைகள் இருந்தன. கேட்டபோது
அவை புறா முட்டைகள் என்றும், குஞ்சு பொறித்து வந்ததும் ஒருமாதம் பாதுகாத்து வளர்த்தால்
சந்தையில் ஒரு புறா இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்குப் போகும் என்றும் சொன்னார். அவ்வளவு
விலை கொடுத்தா புறாவை வாங்குவார்கள்? என்று நான் வாய் பிளந்து கேட்டேன். அவையெல்லாம்
ஏதோ ஸ்பெஷல் ஜாதிப் புறாக்களாம். அதுவே குறைந்த விலை என்றும் மார்க்கெட்டில் ஏக கிராக்கி
இருப்பதாகவும் சொன்னார். புறாவிற்கு இப்படியொரு சந்தை மதிப்பு இருப்பது தெரிந்திருந்தால்,
“ஒரு புறாவுக்காகப் போரா? ஒரே அக்கப்போராக இருக்கிறதே?” என்று 23-ஆம் புலிகேசி வசனம்
பேசியிருக்க மாட்டான் என்று தோன்றிற்று.
மேற்படி பறவைப் பிரியர் / வியாபாரி வெண்கிளி ஒன்று வாங்கி வைத்தார்.
பச்சைக் கிளியின் அழகோ நளினமோ அதனிடம் இல்லை. ராட்சத சைஸில் வெள்ளை வெளேறென்று இருந்தது.
கருஞ்சாம்பல் நிறத்தில் தடித்த அலகு. தலையில் நாலைந்து இறகுகள் விசிறி போல் இருக்கின்றன.
முதலில் பார்த்தபோது அது ஓர் ஆந்தை என்றே நினைத்தேன். உற்றுப் பார்த்தபோதுதான் சர்க்கஸில்
சைக்கிள் ஓட்டும் பறவை என்று தெரிந்தது. அதன் பெயர் என்னவோ காக்கெட்டூ என்று சகதர்மினி
சொன்னாள்.
என் வீட்டின் பின் பால்கனியில் இருந்து பார்த்தால் பத்தடித்
தொலைவில் தெரிவது போல் அதற்கொரு கூண்டு அமைத்துவிட்டார் பறவைக்காரர். பார்த்து ரசிக்கலாமே,
கொஞ்சிப் பேசலாமே என்று நினைத்த ரசனையில் அந்த வெண்கிளியே மண் அள்ளிப் போட்டது. ஆமாம்,
நாள் தவறாமல் காலையில் ஏழு மணியிலிருந்து ஒன்பது மணி வரை இரண்டு மணிநேரம் கத்திக் கதறுகிறது.
‘கிளிப்பேச்சு கேட்கவா’ என்று படமெடுத்தாரே ஃபாசில். இந்தக் கிளியின் பேச்சை ஒருவாரம்
கேட்டிருந்தால்கூட அப்படி ஒரு படமே எடுத்திருக்க மாட்டார். அப்படி ஒரு அசுர சாரீரம்
அதற்கு. பன்றியைப் போலவும் சில சமயம் அடிபட்ட தெருநாயைப் போலவும் கத்துகிறது. கத்துகிறது
என்று சொல்வது கூட மரியாதையான வார்த்தை என்றே சொல்ல வேண்டும். ‘கத்தும் குயிலோசை’ என்றானே
பாரதி. அந்தக் கத்தலெல்லாம் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும். அப்படிக் கதறுகிறது. தண்ணி
அடித்துவிட்டுப் பேசும் அரசியல் தொண்டனின் குரல் கணக்காக இருக்கிறதே என்று நொந்து போனேன்.
கேட்டுக் கேட்டுத் தலையெல்லாம் வலிக்கிறது என்று சகதர்மினி சொன்னாள். பாவம், கிச்சனில்
அவள் வகையாக மாட்டிக் கொண்டாள். ட்யூட்டி நேரத்தில் காக்கட்டூவின் காட்டுக் கதறலை அவள்
கேட்டே அகவேண்டியிருக்கிறது.
நான்கு நாட்களுக்கு முன் ஒரு காட்சி. அந்த வெண்கிளியை கொண்டு
வந்து வீட்டின் முன் பால்கனியில் வைத்திருந்தார்கள். அது பாட்டுக்கு சும்மா உட்கார்ந்திருந்தது.
என் சின்னம்மா வீட்டிலிருது நாங்கள் வெளியே கிளம்பிக் கொண்டிருந்தோம். எல்லோரும் கிளியை
வேடிக்கை பார்த்தார்கள். ‘பறந்து போய்டாதா?’ என்று என் பாட்டி கேட்டார். அப்போது சகதர்மினி
சொன்னாள்: ‘வாய் கிழியக் கத்தத்தான் தெரியும். பறக்காது.’
இது ஏதோ எனக்கு அசரீரி போல் ஒலித்தது! அடியேனின் ஆன்மிக நிலையை
அல்லாஹ் அவளின் வார்த்தைகள் வழியே குறிப்புக் காட்டுகிறான் என்பது போல் தோன்றிற்று.
‘வாய் கிழியக் கத்தத்தான் தெரியும். பறக்காது.’ - வயிறு வலிக்க சிரித்தேன் போங்கள்
ReplyDeleteகத்தத்தான் தெரியுமா இல்லை கத்திக்கொண்டே பறக்கவும் தெரியுமா என்பதை இறைவனே நன்கறிவான்
ReplyDeleteஇருப்பினும்
உங்களைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளிலும்,
நீங்கள் நடத்தும் நிகழ்வுகளிலும்,
உங்களின் பார்வைகள் பதியும் இடங்களிலும்,
உங்களின் பார்வைகளில் பதிந்து, உங்களின் எண்ணங்களில் வளர்ந்து, உங்கள் ஆன்மாவில் பொதியும் பதிவுகளிலும் ,
உங்களின் செவிகள் கேட்க்கும் ஒலிகளிலும்,
உங்களின் செவிகளில் கொட்டும் ஒலிகளிலும்
உங்களின் எழுத்துக்களில் வழியும் வார்த்தைகளிலும்
உங்களின் வார்த்தைகளில் வளரும் வரிகளிலும்
‘வாய் கிழியக் கத்தத்தான் தெரியும். பறக்காது.’என்கிற உங்களின் சகதர்மிணியின் குரலிலும் கூட
விழிக்கையில், எழுகையில்
துலக்கையில், வழிக்கையில்,
கழிக்கையில், குளிக்கையில்,
உடுத்தையில், உண்ணயில்
நடக்கையில், படிக்கையில்
கற்கையில், கற்ப்பிக்கையில்
கிறங்கையில், உறங்கையில்
உறக்கத்தில் உளறயில்
என அனைத்திலும் இறைவனின் குறிப்பை, இறைவனை உணரும் உன்னத நிலையே உங்களின் ஆன்மீக நிலை என்கிறதாகப்ப்படுகிறது எனக்கு
புகழ் வேண்டா புதியவனே
வாழ்க நீவீர் பல்லாண்டு -:)
பின்குறிப்பு:
--------------
எழுத்துப்பிழைகளுக்கும், சொற்(ப)ப்பிழைகளுக்கும், கருத்துப்பிழைகளுக்கும் மன்னிக்கவும் (வழக்கம்போலவே)
பருந்துக்கு முன்னால் இந்தக்குருவிக்கு சரியாக கத்தவும் தெரியல்லே, பறக்கவும் தெரியல்லே