Saturday, November 17, 2012

அத்ராவெர்ஸியாமோ
இனியும் இந்த விஷயத்தை எழுதாமல் தள்ளிப்போடக் கூடாது. நேரம் வந்துவிட்டது. சரியான உச்சரிப்பு பற்றிய சிந்தனை கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கிறது.

தமிழர்களே தமிழை ஆங்கிலத் தொனியில் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். மதுரைத் தமிழ், கோவைத் தமிழ், நெல்லைத் தமிழ், நாஞ்சில் தமிழ் என்றெல்லாம் வட்டார வழக்குகள் – ஸ்லாங்ஸ் – இருப்பதுபோல் இந்த இங்கிலிஷ்டு தமிழ் என்பது தமிழகம் முழுவதிலும் பரவிக் கொண்டிருக்கிறது. சிலருக்கோ தமிழே பேச வருவதில்லை.

ஏதோ ஒரு தொ.கா.ச்சேனலில் கல்லூரி மாணாக்கருக்கான விவாத நிகழ்ச்சி. அன்றொரு நாள் ஏதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. கிராமிய வாழ்வு X நகர வாழ்வு என்பதை விவாதித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு மாணவி பேசினாள். வரிக்குப் பத்து ஆங்கில வார்த்தைகள். தமிழைத் தடவிப் பார்த்துத்தான் கண்டுபிடிக்க வேண்டும். மிகுந்த எரிச்சலாக இருந்தது. அப்படியொரு செயற்கைப் பேச்சு. ஆனால் அந்த மாணவி அவ்வாறு வேண்டுமென்றே பேசவில்லை, சில தொ.கா.தொகுப்பாளினிகள் பேசுவதைப் போல். அவளுக்கு அப்படித்தான் பேசவே வருகிறது. பொதுவாக மாணவ சமுதாயமே இப்படித்தான் ஆகிக்கொண்டு வருகிறது. தாய்மொழி அறியாத ஒரு தற்குறித் தலைமுறை!

“நீயா நானா” என்று ஒரு நிகழ்ச்சி. தூங்குவதற்கு முன் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்றுதான்! என் சகதர்மினி அதைப் பழியே என்று பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல வேளையாகப் பொற்கால ஆட்சியின் தயவில் இப்போது அந்த நேரமாகப் பார்த்து மின்வெட்டு நிகழ்வதால் தூங்கப் போய் விடுகிறோம். அந்த நிகழ்ச்சியில் நான் சில விவாதங்களை மட்டும் பார்ப்பதுண்டு. தமிழர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிதானா என்று சந்தேகத்தைக் கிளப்பும் வண்ணம் அதிலும் நீயா நானா என்று போட்டிப் போட்டுக் கொண்டு தமிழைக் கொலை செய்கிறார்கள்.

ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். அல்லது தமிழை ஆங்கிலத் தொனியில் பேசுகிறார்கள். பண்ணிப் பண்ணிப் பேசுகிறார்கள். செம்மொழித் தகுதி பெற்ற ஒரு மொழியை அதன் மக்களே பண்ணித்தமிழ் ஆக்கிவிட்டார்கள்.

கொடுமை என்னவென்றால், இங்லிஷைத் தமிழ்த் தொனியில் பேசினால் பாமரப்பயல் என்பது போல் பார்த்துச் சிரிப்பார்கள். உண்மையில் தாங்களே கூமுட்டைகளாக இருக்கிறோம் என்பது இவர்களுக்குத் தெரிவதில்லை.

ஒருவன் தன் தாய்மொழியின் தொனியில் பிற மொழிகளை உச்சரிப்பது இயல்பான ஒன்று. பிறமொழியைத் தன் தாய்மொழித் தொனியில்தான் ஒருவனால் பேசமுடிகிறது என்றால் அதில் தவறில்லை. ஆனால் தன் தாய்மொழியை ஒருவன் வேற்று மொழித் தொனியில் பேசுவதுதான் அருவருப்பானதும் சிறுமையும் ஆகும்.

தமிழன் ஆங்கிலத்தைத் தமிழ் போல் பேசுவது இயல்பானது. ஆனால் தமிழை ஆங்கிலத் தொனியில் பேசுவது அசிங்கமானது. ஃபிரென்ச் மொழிக்காரன் ஆங்கிலத்தை ஃப்ரென்ச் தொனியில்தான் பேசுவான். எஸ்பஞோல் மொழிக்காரன் ஆங்கிலத்தை எஸ்பஞோலின் தொனியில்தான் பேசுவான். ஜெர்மன்காரன் ஆங்கிலத்தை ஜெர்மன் தொனியில்தான் பேசுவான். ஹிந்தி, பஞ்சாபி, வங்காளிக்கார்கள் எல்லாம் ஆங்கிலத்தை அவர்கள் மொழித் தொனியில் பேசும்போது தமிழன் ஏன் ஆங்கிலத்தை ஆங்கிலேயனைப் போலவே பேசுவதுதான் அறிவின் அடையாளம் என்று மடத்தனமாக நம்புகிறான் என்று தெரியவில்லை. இந்த மனக்கூறின் காரணமாகத்தான் தமிழையும் ஆங்கிலத் தொனியில் பேசும் நிலை வந்திருக்கிறது.

உலகின் சிறந்த பேச்சாளர் என்று நான் கருதும் ஓஷோ ஆங்கிலத்தை ஹிந்தித் தொனியில் பேசுவார். இஸ்கூல், இஸ்டுப்பிடிட்டி, கான்சஸ்னெஸ் என்றெல்லாம் அவர் உச்சரிக்கும் போது பாம்பு சத்தமிடுவது போல் இருக்கும். கம்ப்பூட்டர் என்றுதான் கணினியைக் குறிப்பிடுவார். அவர் பேசுவதைப் பார்த்து, அந்தக் காலத்தில் க்வீன் மேரீஸில் படித்த என் பாட்டி ஒருமுறை சிரித்தார்கள். ’இவருக்குப் பேசவே தெரியவில்லையே’ என்றார்கள். ஓஷோவின் பேச்சினைக் கேட்க அந்த அவையில் நூற்றுக் கணக்கான ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் அமர்ந்திருந்ததை நான் அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன். ”அவர் பேசுவது ஓஷியானிக் இங்லிஷ். ப்ரிட்டிஷ் இங்லிஷ் அல்ல” என்றேன்.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். எந்த மொழியானாலும் அதனதன் சரியான தொனியில்தான் உச்சரிக்க வேண்டும் என்பது என் கொள்கை. அதுதான் அந்தந்த மொழிக்கு நாம் செய்யும் நியாயம் என்பேன். என்றாலும் இது ஒரு வன்விதி அல்ல, மென்விதிதான். (hard rule என்பதைத் தமிழில் வன்விதி என்றுதானே சொல்ல வேண்டும்? வன்கொடுமை, வன்புணர்ச்சி, வன்பொருள் என்றெல்லாம் பயன்படுத்துகிறார்களே?) 

பிறமொழிச் சொல்லாக இருந்தால் அதைத் தமிழ்ப்படுத்தி உச்சரியுங்கள் என்று தொல்காப்பியரே நமக்கு லைசன்ஸ் தந்திருக்கிறார், சரிதான். ஆனால் சில பெயர்களை நாம் தமிழ்ப்படுத்தும் விதத்தைப் பார்த்தால் பயங்கரமாக இருக்கிறது.

இவ்விஷயம் பற்றி ஒருமுறை நாகூர் ரூமியுடன் பேசிக் கொண்டிருந்தபோது ”கம்பன்கூட ஜானகியை சானகி என்றுதான் சொல்கிறான். ஆனால் ஜப்பானியர்களை சப்பானியர்கள் ஆக்குவது சரின்னு படல” என்று சொன்னேன். உடனே அவர், “ஆமாம். குஷ்வந்த் சிங் என்பதைச் சில தமிழய்யாக்கள் குசுவந்த சிங்கு என்று உச்சரிப்பார்கள்” என்றார். 
அதேபோல், ஒரு தனித்தமிழ் ஆசிரியப் பெருமகனார் தன் கட்டுரை ஒன்றில் ‘செகசுப்பிரியர் யாத்த ஆம்லெட்டு என்னும் நாடகம்’ என்று எழுதி பீதியைக் கிளப்பியிருந்தார்.

காலம் மாறிவிட்டது. தமிழில் வடமொழியின் ஓசைகளை எழுதியே உச்சரித்து வருகிறோம். கம்பன் இன்று காவியம் செய்தால் ஜானகி, ராமன், ஹனுமன் என்று எழுதுவதில் அவனுக்கு எந்தச் சிக்கலும் இருந்திருக்காது. ஒற்றெழுத்தில் ஆரம்பிக்கிறோம். ’இளைய தளபதி ஸ்டாலின்’ என்றுதான் எழுதப்படுகிறது. ருஷ்யப் பெயராச்சே, இதைத் தமிழ்ப்படுத்துவோம் என்று எந்த உடன்பிறப்பும் தேவையில்லாத தமிழ்ப் பணியில் ஈடுபடுவதில்லை. ஓசை வளம் என்பது ஒரு மொழியில் புதிதாக இணைக்கப்படுதல் தவறல்ல என்று கருத மனம் இடம் தருகிறது. அதற்கான புதிய இலக்கண விதிகளை நாம் தமிழில் உருவாக்கிக் கொள்ளலாம். தொல்காப்பியரோ பவணந்தியோ கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.

ஒரு மொழியை அதன் ஒலித்தொனிகளின் அழகுகளைப் பேணி உச்சரிக்க வேண்டும் எனில் அம்மொழி மீது நமக்கு நேசம் இருக்கவேண்டும் என்பதே முதல் விதி. உதடுகளில் உட்காரும் சொற்களும் உதடுகள் போன்றவையே. பிரியமில்லாத உதடுகளை முத்தமிடத் தோன்றாது. (காதலன் ஒருவன் காதலியை வருணித்து எழுதுவதான கவிதை ஒன்றில் “தீப்பெட்டி வாய்க்காரி/ நீயொரு மொழித் தீவிரவாதி” என்னும் வரிகள் இருந்தன. அவள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தீக்குச்சியைக் கிழித்துப் போடுவது போல் இருக்கிறதாம்! மொழி நேசத்தை அப்படியெல்லாம் தீவிரப்படுத்த வேண்டியதில்லை.)

“உங்கள் மதப் பெயர்கள் மட்டும் ஏன் வாயில் நுழைய மாட்டேங்குது?” என்று மாணவன் ஒருவன் கேட்ட கேள்விக்கு மேற்சொன்ன விதியைத்தான் விடையாகத் தந்து விளக்கினேன். ”நேசம் வேண்டும் தம்பி. மொழியை நேசிப்பதற்கு உனக்குத் தடையாக இருப்பது அன்னியத்தன்மை என்று நீ உணர்வதுதான். அந்த உணர்வை மாற்று. மதத்தின் மீதான காழ்ப்பும் ஒரு காரணமாகும். அப்படி இருந்தால் அதையும் மாற்றிக் கொள். நான் பிரவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரின் மணிப்ரவாள நடையில் அமைந்த உரைகளை மிகவும் சிலாகித்துப் படிப்பேன். சமஸ்கிருதம் இந்து மொழி, எனவே வெறுப்புகுரியது என்று நான் நினைத்தாலோ அல்லது குறைந்தபட்சம் அது நமக்குத் தேவையில்லாத மொழி என்று நான் கருதினாலோ எனக்கு சமஸ்கிருதச் சொற்களின் உச்சரிப்பு எரிச்சலைத்தான் உண்டாக்கும். வாய்க்குள் நுழையாது. உன்னையே எடுத்துக்கொள். நீ சொல்வதில் நேர்மை இருக்கிறதா? ஹனுமான் நுழையறது, ராஜா நுழையறது, விஷம், கஷ்டம் நஷ்டம் எல்லாம் பேஷா நுழையறதுகள். ஷாஜஹான் மட்டும் நுழைய மாட்டேங்கறதுன்னா எப்படி? முஸ்லிம் பெயர்கள் வாயில் நுழையவில்லை என்கிறாய். உண்மையில் நீ வாய் என்று சொல்வது உன் மனத்தின் பருவடிவைத்தான். வாயை விரிவு செய்! அகண்டமாக்கு! பிறகு பார் தம்பீ, எந்த மதத்தின் எந்த மொழியின் சொல்லானாலும் எளிதாக நுழையும்.” என்று சொன்னேன். தம்பியின் பல்பு எரிய இது போதுமானதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

சாதாரண மனிதர்களின் நிலை இது என்றால் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ’பெரீய்ய்ய்ய இலக்கியவாதிகள்’ என்று பேனர் கட்டிக் கொண்டவர்களின் நிலையும் இதேதான் என்பதை அறியும் போதுதான் பேரவஸ்தையாக இருக்கிறது. ’கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்ற சொலவடைக்கு ஒரு உட்பொருள் இருப்பதாக இப்போது படுகிறது. அதாவது எனக்குத் தெரியாத ஒரு துறையின் செய்தியை நான் எழுதப் புகின், அந்தத் துறையில் அறிஞராக இருக்கக்கூடிய ஒருவரைக் ‘காமுற்று’ (அதாவது பிரியமுடன் ‘சந்தித்து’) ஐயம் திரிபற விஷயத்தை அறிந்துகொண்டு அதற்குப் பின் எழுத வேண்டும். எழுத்தில் அதுதான் நேர்மை. அப்படி அல்லாமல் என் வாய்க்கு/ கைக்கு வந்தபடியெல்லாம் ஜல்லியடிக்கக் கூடாது. இதில் ஒரு மொழியின் சொற்களின் உச்சரிப்பும் அடங்கும்.

பிறமொழிச் சொற்கள் பெரும்பாலும் ஆங்கில வழியாகவே நமக்கு அறிமுகம் ஆகின்றன. ஆங்கிலமோ உச்சரிப்பில் ஒரு குழப்பம் புடிச்ச மொழி. எழுதியிருப்பதை வைத்தே சரியாக உச்சரித்துவிடும் ப்ராபபிலிட்டி அதில் 0.5-க்கும் கம்மியாகவே இருக்கும். கவிஞர் பாலா என்ற பாலச்சந்திரன் ஒருமுறை சொன்னார், வெளிநாட்டுக் கருத்தரங்குகளில் அவரின் பெயரை (Balachandran என்று ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு) அழைக்கையில் பாலாச்சாந்திரான், பலச்சாந்திரான், பாலாச்சந்திரான், பலச்சந்திரான், பலாச்சாந்திரான், பலாச்சந்திரான் என்று இப்படியே அனைத்துப் பெர்ம்யூடேஷன்ஸ் அண்ட் காம்பினேஷன்சில் போட்டு நெம்பியெடுப்பார்களாம். கேட்டு கேட்டு மண்டை காய்ந்து போகுமாம். நம் பெயரை மேடையில் அழைக்கும் முன் அவர்கள் நம்மைக் காமுற்றிருக்க வேண்டாமோ? இந்த அவை நாகரிகம் கூடவா தெரியாமல் இருப்பார்கள்?

இதையெல்லாம் இங்கே தமிழில், எனக்குத் தெரிய, ஆரம்பித்து வைத்தது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைதான். நல்ல கவிஞர், ஆராய்ச்சியாளர். ஆனால் “உமார் கய்யாம்” என்று அவர் எழுதியிருப்பது எனக்குப் பல வருடங்களாக உறுத்திக் கொண்டே இருக்கிறது. நாஞ்சில் பகுதியில் உள்ள முஸ்லிம்களில் ஒரு பெட்டிக் கடைக்காரனைக் கேட்டிருந்தால்கூட சொல்லியிருப்பான் ‘உமர்’ என்று உச்சரிக்க வேண்டும், உமார் என்பது தவறு என்று. இதையெல்லாம் கேட்க வேண்டுமா? Omar என்று தரித்திரம் பிடித்த ஆங்கிலக்காரன் போட்டால் அதை நமக்கு அட்சர சுத்தமாக ஒமார் அல்லது உமார் என்று வாசிக்கத் தெரியாதா என்ன? உலக இலக்கியத்தை இறக்குமதி செய்யும் நமக்கு ஆங்கில மதி இருந்தால் போதுமே? இதையெல்லாம் ஒரு மௌலவியிடம் போயா கேட்டுக்கொண்டு நிற்க வேண்டும்?

உமர் என்பது இத்தனைக்கும் முஸ்லிம்களிடையே புழக்கத்தில் உள்ள பெயர். நபிகள் நாயகத்தின் இரண்டாம் கலீஃபா அவர்களின் பெயர். அப்பெயரில் உமர் இப்னு அப்துல் அஜீஸ் பின்னாளில் இரண்டாம் உமர் என்று புகழ் பெற்றார். உமர் முக்தார் லிபியா நாட்டின் தேசப்பிதா. உமர் கய்யாம் பாரசீக மொழிக் கவிஞன். என் தம்பி ஒருவனின் பெயர் உமர். தமிழக முஸ்லிம் சமூகத்தில் அடிக்கடி வைக்கப்படும் பெயர்தான்.
Orham Pamuk என்னும் துருக்கிப் பெயரைச் சொல்லுங்கள். இங்கே யாருக்குமே தெரியாது. இது முஸ்லிம் பெயரே அல்ல என்று அடித்துச் சொல்லி விடுவார்கள். அதை வேண்டுமானால் ஓர்ஹாம் பாமுக் என்றோ ஒர்ஹாம் பாமுக் என்றோ, ஒருகாம் பமுக்கு என்று தமிழ்ப்படுத்தியோ எழுதுங்கள். குற்றமில்லை. ஆனால் உமர் என்பதை உமார் என்று எழுதுவது? ஒருவகை அலட்சியமும் இளக்காரமும் ஐயா.

இக்காலத் திரைப்படப் பாடலாசிரியன் எவனோ எழுதுகிறான், ‘உருதுக் கவிஞர் உமர் கய்யாம்’ என்று. ஏதேச்சையாகக் கேட்க நேர்ந்தது. திரைப்படத்தில் எந்த மண்டூகம் வேண்டுமானாலும் பாட்டு என்ற பெயரில் எதையும் கிறுக்கலாம் போலும். உமர் கய்யாம் ஃபார்சி மொழிக் கவிஞன் என்பதும் ஃபார்சியும் உருதுவும் வேறு வேறு மொழிகள் என்பதும் திரைப் பாடலாசிரியனுக்கு முக்கியமல்ல.

Spanish என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தேன், இங்லிஷ் என்பதைப் போல், சாரு நிவேதிதாவைப் படிக்கும் முன்பு வரை. அவர் வழி, அது ’எஸ்பஞோல்’ என்றறிந்தேன். பர்மா பஜார் எலெக்ட்ரிக் சாமான்கள் சிலவற்றின் பெட்டிகளிலும் உள்ளே இருக்கும் வாரண்ட்டி அட்டைகளிலும் espanol என்று போட்டிருப்பதை முன்பெல்லாம் எஸ்பனோல் என்றுதான் படித்துக் கொண்டிருந்தேன். அதன் சரியான ஒலிப்பு எஸ்பஞோல் என்பதாம். கேட்டதுமே பிடித்துவிட்டது. ‘ஞோ’ என்று ஓர் ஓசை வருகிறது பாருங்கள். இந்த எழுத்து இப்போது தமிழில் நோ. அதாவது ஞ் என்பதற்குப் பல இடங்களில் ந் என்பதை பயன்படுத்தி வருகிறோம். ஞண்டு நண்டு ஆகிவிட்டது. ஞமலி ஓடியே போச்சு. மஞ்ஞை என்றால் மயில். என் அண்ணன் ஒருவனுக்கு ஞவே வராது. ‘கலைநர் என்னப்பா சொல்றாரு?’ என்பான். ஞ ந ஆவது மரபாகிவிட்டது என்பதால் அது எனக்குத் தவறாகப் படவில்லை. அனுப்புநர் பெறுநர் ஓட்டுநர் நடத்துநர் இயக்குநர் என்பது போல் இது கலைநர். அவ்வளவுதான். சரி, மலையாளத்தில்தான் பல வார்த்தைகளில் ஞவை அப்படியே ஒலிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி. ஞான், பறஞ்ஞு, குஞ்ஞுண்ணி, குஞ்ஞுமோன், குஞ்ஞாக்கோ போபன்!

ஒரு மொழியைச் சரியாக உச்சரிக்கும் போது அதை அறிந்தவர்களிடம் நம் மீது ஒரு பிரியத்தை உண்டாக்கும் என்பது உண்மைதான் போலும். எஸ்பஞோல் என்று நான் சொன்னபோது ஃப்ரெஞ்ச் பேராசிரியர் பரவசம் அடைந்து “ஆங்… எஸ்பஞோல் எஸ்பஞோல்” என்று கூவினார். அரிதாக எப்போதாவது ஃப்ரெஞ்ச் உச்சரிப்புக்களை அவரிடம்தான் சரிபார்த்துக் கொள்வேன். ஜெனராலே, பாஞ்சோர், சேலாந்யூ என்றெல்லாம் சொல்லும்போது அவரின் வாய் போகும் போக்கு அழகாக இருக்கும்.

எத்தனையோ லத்தீன் அமெரிக்கப் பெயர்களை ஆங்கில வழியில் தப்புத் தப்பாக உச்சரித்து வந்திருக்கிறேன் என்று தெரிகிறது. சாரு நிவேதித்தாவின் நூல்களில் அவற்றின் சரியான உச்சரிப்பை அறிந்து திருத்திக் கொள்கிறேன். இனி நான் எழுதினாலும் சரியாக எழுதலாம். பாருங்கள், முன்பொரு கட்டுரையில் Louis Borges என்னும் பெயரை லூயி போர்ஹே என்று எழுதியிருந்தேன். விட்டால் அதையும்கூட லூயி போர்ஜஸ் என்று கொலை செய்திருப்பேன். எஸ்.ராமகிருஷ்ணனின் “என்றார் போர்ஹே” நூலைப் படித்துவிட்டு எழுதியதால் அந்த உச்சரிப்பை வரித்து எழுதினேன். ஆனால் அதுவும் தப்பாம். ‘லூயிஸ் போர்ஹேஸ்’ என்று சொல்ல வேண்டும் என்கிறார் சாரு. எஸ்பஞோல் மொழியில் ஆங்கிலத்தில் உள்ளது போல் சைலண்ட் எழுத்துக்களெல்லாம் கிடையாதாம். சொல்லின் ஒவ்வொரு எழுத்தையும் வெளிப்படுத்தி உச்சரிக்க வேண்டும். எனவே Louis என்பதை ஆங்கிலத்தில் லூயி என்றால் எஸ்பஞோலில் லூயிஸ் என்றுதான் சொல்ல வேண்டுமாம். இவ்விஷயத்தில் எஸ்பஞோல் மொழி செவ்வியல் மொழிகளான தமிழ், அரபி போன்றவற்றின் தன்மை கொண்டதாக இருக்கிறது (ஆத்தி! அப்படியெல்லாம் சொன்னதுக்குத்தான் எங்க இங்லிஷ் வாத்தியார் பிரம்பெடுத்துக் கும்மால பட்டை பட்டையா சாத்தினாரு. சரியான ஆங்கில அராஜகமாவ்ல இருக்கு!)

ஆனால் எஸ்பஞோலின் இன்னொரு தன்மை என்னவெனில் ஆங்கில எழுத்துக்களான g, j ஆகியவற்றைப் யகரமாகவும் ஹகரமாகவும் உச்சரிப்பது. பொதுவாகவே அதில் வல்லின உச்சரிப்புக்கள் அதிகம் கிடையாதாம். க,ட,ப ஆகிய ஒலிகளை மெல்லினமாகவே உச்சரிக்க வேண்டுமாம். உதாரணமாக, வேண்டுமாம் என்பதை ‘வேந்துமாம்’ என்று உச்சரிக்க வேண்டுமாம்!

ஃபிடெல் காஸ்ட்ரோ என்று ஏதோ ஆயில் கம்பெனி பெயரைப் போல் நான் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். ஃபிதெல் காஸ்த்ரோ என்பதே சரியாம். எர்னெஸ்டோ ச்சே குவாரா என்பதை எர்னெஸ்தோ சே கெபாரா என்று சொல்ல வேண்டுமாம்.

இதைச் சொல்லும்போது, இந்திய விடுதலைப் போரின் வரலாற்றில் நீங்காச் சுவடாக இடம் பெற்றுவிட்ட Jallianwalabag நிகழ்வு நியாபகம் வருகிறது. அதனை ஜாலியன்வாலாபாக் என்றே நம் பள்ளிகளில் சொல்லித் தந்தார்கள். அதன் சரியான உச்சரிப்பு ஜல்லியன்வாலாபாக் என்பதாம். (அதானே, குருவிய சுடுறாப்ல அப்பாவி மக்கள சுட்டுருக்கானுவ, அதுல என்ன ஜாலி வேண்டிக்கிடக்கு?)

’மர்கி தெ சாத்’ என்று சாரு எழுதியிருந்ததில் முதலில் படித்த போது அது ஏதோ இந்திப் படத்தின் பெயர் என்றே நினைத்தேன். ஆனால் அது Marquis de Sade என்னும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் பெயர். (மற்றவரைச் சித்ரவதை செய்வதில் இன்பம் காணும் தன்மையான Sadism என்னும் சொல் இவரின் பெயரால்தான் வழங்கப்படுகிறது. சரியான உச்சரிப்பில் அதை சாதிசம் என்றுதான் கூற வேண்டும் போலும். நம் ஊரில் சாதியிசம் இருக்கிறது. இரண்டும் ஒன்றுதான்!) “குமரிப் பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க ஒரே வழி சித்ரவதைதான். வேறு வழி எதுவும் இருப்பதாக நான் அறியேன்” என்கிறார் சாத். எம்.ஜி.ஆர் என்ன சொல்கிறார்?

இதே போல் இன்னும் எத்தனையோ லத்தீன் அமெரிக்கப் பெயர்கள். பாப்லோ நெரூடா என்று சொல்லிவந்த பெயர் நெரூதா என்பதறிந்தேன். புக்கோவ்ஸ்கி என்று நான் உச்சரித்து வந்த Bukowsky ‘ப்யூகோவ்ஸ்கி’. Gabriel Garcia Marquez – காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸ்; 2010-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற Mario Vargas Llosa – மரியோ பர்காஸ் யோஸா; டான் குய்க்ஸாட் என்றும் டான் குய்ஷே என்றும் சொல்லி வந்த Don Quixote – தோன் கெஹோத்தே; Carlos Fuentes – கார்லோஸ் ஃபுவெந்தஸ்; Julio Cortazar – ஹுலியோ கொர்த்தஸார்; கொரில்லா யுத்தம் என்று நம் செய்திகள் குறிப்பிடுவது கெரில்லா யுத்தமாம்; Marta Lynch – மார்த்தா லிஞ்ச்.

Jean என்பதை சாதாரணமாக எப்படி உச்சரிப்போம்? ஜீன் என்றுதானே? ஆனால் Jean Paul Sartre என்னும் பெயர் ழீன் பால் சாத்தராம். இதே போல் ழான் ஜெனே, ழார் பத்தாய், ழார் பெரக் என்னும் பெயர்களையும் சாரு குறிப்பிடுகிறார். இப்படி எழுதிக் கொள்கிறோமா இல்லை அந்த மொழிகளிலும் ழ இருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனெனில் உலகத்திலேயே தமிழில் மட்டும்தான் இந்தச் சிறப்பெழுத்தான ழகரம் இருக்கிறது என்று கிட்டத்தட்ட எல்லாத் தமிழாசிரியர்களும் சத்தியம் செய்து சொல்கிறார்கள்.

இன்னொரு மொழியில் நான் இந்த ழகரத்தைக் கண்டது முதலில் ருஷ்ய மொழியில்தான். ருஷ்யப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர் வ்ளாதிமிர் இல்யீச் லெனின் அவர்களின் மனைவியின் பெயரில் அந்த ழகரம் மிக அழகாய் மின்னிற்று. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடிப்படைத் தொண்டராக இருந்து தன் அழகாலும் லெனினின் மனதைக் கொள்ளை கொண்டு அவரின் மனைவி ஆனவர் நதேழ்தா கன்ஸ்டான்டிவ்னா குரூப்ஸ்கயா.

இதை எழுதும்போது இப்படித் தோன்றுகிறது. ஒவ்வொருவருக்கும் தம் வாழ்வில் இதயம் உருகி உச்சரித்துப் புளகித்த ஒரு பெயராவது இருக்கும். இறைவனின் பெயருக்கு அடுத்தபடியாக பெரும்பாலும் ஒருவர் அதிகமாக உச்சரிக்கும் பெயர் அவரின் soul-mate-ன் பெயராகத்தான் இருக்கும். விதிவிலக்குகள் இருக்கலாம், நபியின் பெயர், குருவின் பெயர், நண்பரின் பெயர், தலீவரின் பெயர், நடிகரின் பெயர் என்று. நதெழ்தா என்ற தன் காதற் கிழத்தியின் – அதாவது மனைவியின் பெயரைச் சொல்லிச் சொல்லி உள்ளம் உருகியிருப்பார் அல்லவா?

‘திருமணத்திற்குப் பின் நான் உன் விரல்களால் ஆனவள் ஆகிவிட்டேன்’ என்று ஒரு பெண் தன் நாட்குறிப்பில் எழுதி வைப்பதாக தபூ சங்கரின் கவிதையொன்றில் வரும். அதே போல் தன் நாயகன் தன் பெயரின் சகல பரிமாணங்களையும் கண்டடைபவனாக இருக்க வேண்டும் என்னும் ஆசை இருக்கும்.

இதைச் சொல்லும் போது பெயர் வருணனை ஒன்று நியாபகம் வருகிறது. Lolita என்னும் அப்பெயர் கலை உலகில் பிரபலமான ஒன்று. ருஷ்ய எழுத்தாளர் வ்ளாதிமிர் நபகோவ் ஆங்கிலத்தில் எழுதிப் பின் தானே ருஷ்ய மொழியாக்கம் செய்த நாவலின் பெயர் அது. பின்னர் அது ஸ்டேன்லி க்யூப்ரிக்கால் திரைப்படமாக எடுக்கப்பட்டது. லோலிடா என்பது அக்கதையில் வரும் பன்னிரு வயதுப் பெண்ணின் பெயர். கண்ணகி கோவலனை மணந்த வயது. ஆனால் லோலிடாவைத் தன் காதலியாக்க முயன்று மயக்கிக் களியாடுபவன் அவளின் தாயின் இரண்டாம் கணவனான ஹம்பர்ட். அவனுடைய வாக்குமூலமாக எழுதப்பட்டுள்ளது இந்நாவல். முதல் அத்தியாயத்தின் ஆரம்ப வரிகள்: ”Lolita, light of my life, fire of my loins. My sin, my soul. Lo-lee-ta: the tip  of  the tongue taking a trip of three steps down the palate to tap, at three, on the teeth. Lo. Lee. Ta.”   

Back to the matter. ஏகப்பட்ட லத்தீன் அமெரிக்கப் பெயர்களின் உச்சரிப்பை அறிமுகம் செய்கிறார் சாரு நிவேதிதா. அவருக்கு எஸ்பஞோல் மொழி தெரியும் என்பதால் அவற்றை நாம் வரித்துக் கொள்ள தயக்கம் ஏற்படுவதில்லை. (சரியாத்தாங்க சொல்லுவாரு… இதுல இன்னா டவுட்டு ஒங்களுக்கு?)

“தாய்நாடுகள் பல” என்னும் கட்டுரையில் ஒரு பத்தியைப் பாருங்கள்:
“எனக்குப் பல தாய் நாடுகள் உண்டு. முதலில் ஃப்ரான்ஸ். அடுத்து, சுவிஸ்.
அதிலும் குறிப்பாக நீட்ஷே வாழ்ந்த சில்ஸ் மரியா. பிறகு அர்ஜென்டினா [இதை வேறொரு இடத்தில் அர்ஹெந்தினா என்று எழுதியிருக்கிறாரே?] (சே கெபாரா, போர்ஹேஸ், மரதோனா, புவனோஸ் அய்ரஸ்), ப்ரஸீல் (பீலே, ரியோ தி ஹைனரோ), சீலே (டாக்டர் அலெந்தே, பாப்லோ நெரூதா), கொலம்பியா (மார்க்கேஸ்), மெக்ஸிகோ, உருகுவாய், பராகுவாய், கூபா, நிகாராகுவா, எல் சால்வதோர் என்று ஏராளமான தாய் நாடுகள். இந்தப் பட்டியலில் விசேஷமான ஒரு நாடு பெரூ.” (நூல்: ’எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது’)

இந்தப் பத்தியைப் படித்தபோது எனக்கு ஒரு ஆங்கிலத் திரைப்படம் நியாபகம் வந்தது. Elizabeth Gilbert என்னும் பெண்ணின் தன்னினைவுப் பதிவுகளாக 2006-ல் வெளிவந்த “EAT PRAY LOVE” என்னும் நூல் அதே தலைப்பில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. லிஸ் கில்பர்ட்டாக ஜூலியா ராபர்ட்ஸ் நடித்திருந்தார். அமெரிக்கப் பெண்ணான அவர் உண்பதில் மனநிறைவைத் தேடி இத்தாலி நாட்டிற்குச் செல்கிறார். அங்கே அவளின் நண்பன் ஒருவன் இத்தாலி மொழிச் சொற்களை அவளுக்குக் கற்றுத்தருகிறான். அதில் ஒரு சொல் ATTRAVERSIAMO. ’அத்ராவெர்ஸியாமோ’ என்று உச்சரிக்க வேண்டும். இதைக் கேட்டதும் அவள் சொல்வாள்: ‘அழகான வார்த்தை. இத்தாலிய மொழியின் அழகுகள் எல்லாம் இதில் இருக்கின்றன. திறக்கும் அ, உருளும் ர, இனிய ச!”

இதெல்லாம் சரி. சாரு நிவேதிதா இக்கால அரபி இலக்கியம் பற்றியும் அவ்வப்போது எழுதி வருகிறார். அவருக்கு அரபி மொழி தெரியாது. அவற்றை அவர் ஆங்கில வழியாகவே அறிந்து எழுதுகிறார். ஆங்கில வழியே வேறு ஒரு மொழியின் சொற்களை வாசிப்பதில் உள்ள குழப்பங்களை மேலே பேசினோம். எனவே மொழி அறிந்தவர்களிடம் சரிபார்த்துக் கொண்டு எழுத வேண்டும் என்னும் பொறுப்புணர்வாவது எழுத்தாளருக்கு இருக்க வேண்டும் என்பது என் கருத்து என்றும் சொன்னேன். எஸ்பஞோலைச் சரியாக எழுதும் சாரு அரபியைத் தப்பும் தவறுமாக எழுதி வைக்கிறார்.

‘பாலையைக் கடக்கும் நிழல்கள்’ என்று ஒரு கட்டுரை (நூல்: கனவுகளின் மொழிபெயர்ப்பாளன்). மொரோக்கோவில் வாழும் பேராசிரியை. ஃபாத்திமா மெர்னெஸ்ஸி பற்றி அறிமுகம் செய்கிறது. அதில் ஒரு அரபிப் பழமொழியை இப்படி எழுதுகிறார்: “குலூனா ஃபில் ஹொவா சொவா” இதற்கு ‘நாம் எலோரும் ஒரே காற்றைத்தான் சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று அவர் தரும் அர்த்தத்தை வைத்துத்தான் ஓஹோ அது ‘குல்லுனா ஃபில் ஹவா சவா’ (காற்றில் நாம் அனைவரும் சமம் என்பது நேரடிப் பொருள்) என்பதாக நான் அறிய முடிந்தது.

மொராக்கோ நாட்டு அரபி எழுத்தாளரான முஹம்மது ஷுக்ரி பற்றி ஒரு கட்டுரை: ’விளிம்பிலிருந்து ஒரு குரல்’ (நூல்: ‘வரம்பு மீறிய பிரதிகள்’) அவரின் அல்-கூப்ஸ் அல்-ஹஃபி என்னும் நூலை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. அல்-கூப்ஸ் என்று போடப்பட்டிருப்பது என்ன என்று நோக்கினால் ரொட்டி என்று பொருள் என்கிறார் சாரு. ரொட்டி கொஞ்சம் நீண்டு விட்டது. அது அல்-குப்ஸ் என்பதாக இருக்கவேண்டும்.

மொராக்கோ பற்றிய ஒரு குறிப்பில் இப்படி எழுதுகிறார்: “மொராக்கோ மக்களின் பேச்சு மொழி பெர்பர் எனப்படும் மக்ரபி மொழி. (மக்ரீப் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது மக்ரபி. மக்ரீப் என்றால் மாலைப் பொழுது. மொராக்கோ மற்றும் அல்ஜீரியாவின் வடக்குப் பகுதிகள் சூரியன் அஸ்தமனமாகும் பகுதி என்ற பொருளில் மக்ரீப் பகுதி என்று அழைக்கப்படுகின்றன.)” சாரு வாசித்த ஆங்கிலப் பிரதியில் maghrib / magrib என்று இருந்திருக்க வேண்டும். மக்ரிப் என்பதை அவர் மக்ரீப் என்று எழுதிவிட்டார். முஸ்லிம்களின் ஐவேளை தொழுகயில் அந்தித் தொழுகை மக்ரிப் என்னும் பெயரால்தான் சுட்டப்படுகிறது. முஸ்லிம் நண்பர் யாரிடமாவது அவர் இதைக் கேட்டிருக்கலாம்.

மொராக்கோ புரட்சியாளர் ஒருவரின் பெயரை அப்துல் காறிம் அல் கட்டாபி என்று எழுதியுள்ளார். கட்டாபி என்பது கதாஃபி என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அப்துல் காறிம் என்பது திண்ணமாகப் பிழையே. பிரதியில் Abdul Karim என்றிருந்திருக்க வேண்டும். அப்துல் கறீம் என்று இங்கே சீறாவுக்கு உரை எழுதிய முதிய பேராசிரியர் ஒருவர் இருந்ததை சாரு அறியாமல் இருக்கலாம். சூஃபி மகான் அப்துல் கறீம் ஜீலியை அறியாமல் இருக்கலாம். எழுத்தாளர் கரீம் கனியை அறியாமல் இருக்கலாம். ஹிந்துஸ்தானி இசையில் அப்துல் கறீம் கான் என்று ஒரு ஜாம்பவான் இருந்தாரே, தெரியாதா?

இவையெல்லாம் சின்ன சின்ன பெயர்கள். போகட்டும் என்று விட்டுவிடலாம். முஸ்லிம்கள் அதிகமாக ஓதும் குர்ஆன் அத்தியாயங்களில் ஒன்றான ’சூறா யாசீன்’-இன் முதல் வசனத்தையாவது ஒரு ரெஃபரென்ஸ் செய்த பின் எழுதக்கூடாதா? “அவர் ஓத ஆரம்பித்தார்: யாசீன் ஒவ்வால் குரான் அல் ஹக்கீம்...” என்றா எழுதுவது? “யாசீன்; வல்-குர்ஆனில் ஹகீம்” என்பது இரண்டு திருவசனங்கள். அரபியில் வ+அல் என்பது வல் என்று வந்துள்ளது. ஒவ்வாலும் இல்லை வவ்வாலும் இல்லை.

உச்சரிப்பைப் பற்றிய நச்சரிப்பை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

அத்ராவெர்ஸியாமோ. கடந்து செல்வோம் வாருங்கள்!

3 comments:

  1. சிறப்பானதொரு கட்டுரை

    ReplyDelete
  2. Carrefour என்று ஒரு அங்காடி உள்ளது, அதை நான் கேரிஃபோர் என்று சொன்னதை கேட்டு ஒரு பிரெஞ்ச் கற்று கொண்டிருக்கும் சீன நண்பருக்கு கோவம் வந்து விட்டது, எனக்கு சொல்லி கொடுத்தார், “கேஃபூ”ன்னு தான் சொல்லணுமாம்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு சார் சாரு எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்

    ReplyDelete