Thursday, November 8, 2012

சாகசக் கதைகள்நான் ஆர்?
என் உள்ளம் ஆர்?
ஞானங்கள் ஆர்?
என்னை ஆர் அறிவார்?”

மாணிக்கவாசகர் கேட்கும் இந்த ஆத்ம விசாரக் கேள்விகளில் ஒரு சாகசக் கதைக்குரிய கரு இருப்பதைக் கண்டு அதிசயித்தேன்.

முன்பும் எத்தனையோ முறை படித்திருந்த இவ்வரி (திருவாசகம்: திருக்கோத்தும்பி) இம்முறை புதிய காட்சிகளை மனத்திரையில் பிரதிபலித்துக் காட்டிற்று.

மனத்திரை என்று சொன்னது சரிதான். இவ்வரி நியாபகமூட்டியவை திரைக் காட்சிகள்தான்.

’நான் யார்?’ என்னும் கேள்வியே பல ஞானிகளின் வாழ்வை திசைப்படுத்திய ஆதார கேள்வியாக இருந்துள்ளது. இனியும் இருக்கும்.

சூஃபிகளும் யோகிகளும் சித்தர்களும் கேட்டுக்கொண்ட இக்கேள்வி தாவோயிச பூமியிலிருந்து வந்த ஜாக்கி ச்சான் நடித்த ஒரு படத்தின் தலைப்பாக இருந்தது நியாபகம் வந்தது “Who am I?”

இப்படிச் சொல்வதால் இது ஓர் ஆன்மிகப் படம் என்று நான் சொல்வதாக நினைக்க வேண்டாம். இது சிறுவர்கள் பார்த்துச் சிரித்து ரசிக்கக் கூடிய சராசரியான ஆக்‌ஷன் படம்தான். தான் யார் என்பதையே மறந்து விட்ட ஒருவன் தன்னுடைய அடையாளத்தைத் தேடி அலைகிறான் என்னும் அம்சமே இதில் என்னைக் கவர்ந்தது. அந்த அம்சம் நிச்சயமாக ஆன்மிகத்தின் பாற்பட்டதுதான்.

தான் யார் என்பதை அறியாத நிலையில் ஒருவனிடம் இருக்கும் ஆற்றல்களும் திறமைகளும் வெறும் சாபக்கேடாகவே அமையும் என்பது இதில் உணர்த்தப்படும் உண்மை.

தான் யார் என்பதை அறியாதவன் பல்வேறு மனிதர்களின் கைப்பாவையாக வாழ வேண்டிய நிலை உண்டாகிறது. நல்லோர் யார் தீயோர் யார் என்பதே அவனுக்கு விளங்காத நிலையில் குழம்பி அல்லாடுகிறான். எல்லாத் திசைகளிலும் அலமந்து திரிகிறான். தன் இருத்தலே அர்த்தமற்ற ஒன்றாக, அபத்தமாகப் படுகிறது அவனுக்கு.

அவன் யார் என்னும் கேள்விக்குப் பலரும் தரும் விடைகள் அவனுக்குத் திருப்தியாக இல்லை. அவனின் உள்மனம் அவற்றைப் பொய் என்று நிராகரிக்கின்றது. அவனைத் தங்கள் வேலைக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தோதுவான அடையாளங்களையே அவர்கள் அவனுக்குத் தருகிறார்கள்.

தான் யார் என்பதைச் சரியாக அறிந்த ஒரு நபரை அவன் தேடுகிறான். அவர், தான் யார் என்பதைச் சரியாக அறிந்த ஒருவராக இருப்பது மட்டும் போதாது. அதை மறைக்காமல் மாற்றாமல் அவனிடம் சரியாகச் சொல்பவராகவும் இருக்க வேண்டும். தான் யார் என்று அறிவதற்கான தேடல் இப்போது தனக்குத் தன்னை அறிவித்துக் கொடுக்கும் ஒரு நபரைத் தேடும் தேடலாக மாறிவிடுகிறது. ஆனால் தன்னை அறிவதற்கு, ’தன்னை’ அறிந்த ஒருவரைத் தேடுவது அவசியமாகிறது. நான் ஒரு திரைப்படத்தின் கதையைப் பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இது ஓர் ஆன்மிக விளக்கமாக உங்களுக்குக் கேட்கவில்லையா? (பல ஆண்டுகளுக்கு முன்) படம் பார்க்கும் போது இந்த ஆன்மிக இழையே என் மனதில் மின்னிக் கொண்டிருந்தது.

ஆன்மிகம் என்றவுடன் போலிச் சாமியார்களின் நியாபகம் வந்து தொலைக்கும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பொது மக்களின் கவனம் முழுக்க அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகள் மீதே திருப்பப் படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதையை ஒத்த விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கொண்ட கதையாக அந்நிகழ்வுகள் அரசியல் பத்திரிகைகளில் எழுதப்படுகின்றன. துப்பாக்கி, பெண்கள், போதைப் பொருள், பணம் என்று நாட்-நாட்-செவன் கதையில் வரும் அத்தனை அம்சங்களும் இவர்களின் ’ஆன்மிக’(?) வாழ்வில் இடம் பெறுகின்றன. மொத்தத்தில் இவர்களின் வாழ்க்கை வரலாறுகளுக்கு ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பெயர் ஒன்றையே சூட்டலாம்: TRUE LIES!

’நான் யார்?’ என்னும் ஆத்ம விசாரத்துடன் வரும் சாதகர்களுக்கு இவர்கள் தரும் அடையாளங்கள் அவர்களின் தேடலில் நிறைவைத் தர முடியுமா? தங்கள் வியாபாரத்திற்குத் தோதான ஓர் அடையாளத்தையே சாதகர்களுக்கு அவர்கள் வழங்குவார்கள்.

உண்மையான தேடல் உள்ளவனாக இருக்கும் பட்சத்தில் வெளியே இருந்து வழங்கப் படும் எந்த அடையாளமும் ஒருவனைத் திருப்திப் படுத்தாது! அது பேருண்மையாகவே இருந்தாலும் சரியே. தான் யார் என்ற விழிப்பை ஒருவன் தன்னுள் இருந்தே அடைய வேண்டும்! “சுவேதகேது! நீயே அது” என்று சொல்லப்பட்ட போதனை இருக்கிறதே, அதுவுமே கூட சுவேதகேது தன்னுள்ளில் தானே அடையாத வரை அவனுக்குத் திருப்தியை வழங்கியிருக்காது என்பது திண்ணம்.

கல்லூரி மாணவன் ஒருவனின் சேட்டை ஒன்று நியாபகம் வருகிறது. தன் இரு மேலிமைகளின் மீது அவன் கறுப்பு வெள்ளைச் சாந்துகள் கொண்டு கண் விழித்திருப்பது போல் தீட்டிக் கொள்கிறான். பிறகு ஜாலியாகக் கண்களை மூடி வகுப்பில் தூங்குகிறான். பேராசிரியருக்கு அவன் வைத்த கண் வாங்காமல் தன் உரையை உள்வாங்கிக் கொண்டிருப்பதாகப் படுகிறது. அவன் மீது அவருக்குப் பெரிய வாஞ்சையே உண்டாகிவிடுகிறது! ஆகா, இந்த மாணவன் உதாரணமானவன்! என்று புளகம் அடைகிறார்.

போலி குருமார்கள் செய்வது இதைத்தான். அதாவது உங்கள் இமைகள் மீது கண்ணின் படத்தை வரைந்து விடுகிறார்கள். நீங்கள் வாழ்நாளெல்லாம் அஞ்ஞானத்தில் உறங்கிக் கொண்டே இருங்கள். ஆனால் மக்களுக்கு நீங்கள் விழிப்படைந்த ஒரு மகானாகக் காட்சி தருவீர்கள்!

உண்மையான ஆன்மிக குரு இப்படி உங்களுக்கு ஓர் அரிதாரத்தை வழங்க மாட்டார். போதிதர்மரைப் போல், அவர் உங்கள் அகக்கண்ணின் இமைகளையே பிய்த்து எறிந்து விடுவார்! நீங்கள் இனி அஞ்ஞான உறக்கத்தில் விழவே முடியாத ஒரு விழிப்பை உங்களில் அவர் தூண்டி விடுவார்.

சரியான குருவைத் தேடுவது தான் யார் என்பதை அறிவதற்கு மிகவும் அவசியம் ஆகும்.

தேடல் யாரிடம் உருவாகும்? தான் யார் என்பதை அறியாதவர் மிகப் பலர். ஆனால் அவர்கள் யாவரிலுமே தன்னைத் தேடுதல் என்பது உருவாகுவது இல்லை. ஏனெனில் தான் யார் என்பது தனக்குத் தெரியாது என்பதே அவர்களுக்குத் தெரியாது! எனவே அவர்கள் தங்களின் திறமைகளை எல்லாம் பல விஷயங்களில் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பார்கள். அரசியல்வாதிகள், கலைஞர்கள், சமூக சேவகர்கள், இத்தியாதி இத்தியாதிகள்.

தான் யார் என்பதைத் தான் அறியவில்லை என்பதை அறிய வரும்போதுதான் ஒருவனுக்கு அகத் தேடல் ஆரம்பம் ஆகிறது.

அப்படியான தன் நிலையை அறிந்தவன் தன்னை அறியும் வரை தன் திறமைகளை வெளி விஷயங்களில் வீணடிப்பதில் திருப்தியுடன் இருக்க முடியாது.வெளியுலகில் அவன் செய்யும் அனைத்துக் காரியங்களும் உள்முகத் திசையில் அவன் நகர்வதன் கண்ணாடிப் பிம்பமாகவே இருக்க நாடுவான். அப்படி இருந்தால்தான் வெளிக் காரியங்களில் அவனுக்குத் திருப்தி உண்டாகும்.

சாதகன் தன்னுடைய ஆற்றல் முழுவதையும் தன்னை அறிவதில்தான் குவிக்க வேண்டியுள்ளது. தன் சுயத்தை அறியும்வரை அவனுக்கு அமைதி இல்லை.

No comments:

Post a Comment